தங்கம் நழுவி வெள்ளியாய் முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஒரு வாழ்த்து குறிப்புடன் தொடங்கலாமே. செப்.14 அன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு, பொதுப் பயன், தொலைநோக்கு கொண்ட பொது அறிவுக் கேள்விகளால் சிறந்து விளங்குகிறது. பொது அறிவுப் பகுதியைப் பொருத்த மட்டில்,ஆணையம் சரியான திசையில் பயணிக்கிறது. அதேசமயம், மொழிப் பிரிவு (வழக்கம் போல) நம்மை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டது.

முதலில், பொது அறிவு. உலக நடப்பு தொடங்கி உள்ளூர் தொழில்கள் வரை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக விசாலமான பார்வையுடன் பொது அறிவு வினாக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த அளவுக்கு ‘விரிந்து' இருப்பதால், பல இளைஞர்களுக்கு தேர்வு கடினமாக இருந்திருக்கக் கூடும். ‘இனி இப்படித்தான் இருக்கும்' என்று உணர்ந்து அதற்கேற்ப, பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை இளைஞர்களுக்கு இத்தேர்வு புரிய வைத்துள்ளது. இதுதான் குரூப் 2 தேர்வின் மிக நல்ல அம்சம்.

கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களில் பெரும்பாலும் எளிதான வினாக்களாகவே இருந்தன. அதேநேரம், பள்ளிப் பாடத் திட்டத்துக்குள் அடங்காத வினாக்கள் சற்று அதிகமாகவே இருந்தன.

‘ராமோசிஸ், குகா, சந்தல்ஸ், கிட்டூர் கிளர்ச்சிகள் நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவை?' ‘ரூபாயின் பிரச்சினை என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தவர் யார்? ‘நியூ லாம்ப்ஸ்ஃபார் ஓல்ட்’ என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர்எழுதியவர் யார்? இவ்வகை வினாக்களால் தேர்வின் தரம் மிக நிச்சயமாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் பாரம்பரியத் தொழில்கள், நவீன சிறு தொழில்களை விட, அதிக வேலைவாய்ப்பு வழங்குகின்றன; பாரம்பரிய சிறு தொழில்களில் தொழிலாளருக்குத் தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும், நவீன சிறுதொழில்களில் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது. முதல் வாக்கியம் சரியா.. அதன் சரியான விளக்கமாக இரண்டாவது வாக்கியம் அமைந்துள்ளதா..? இளம் தேர்வர்களை சிந்திக்கத் தூண்டும் அருமையான கேள்வி. சபாஷ்!

11-வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம், மத்திய தகவல் தலைமை ஆணையர் மறு நியமனம், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள், செயற்கை மழை மேக விதைப்பு உள்ளிட்ட கேள்விகள் எதிர்பாரா வகை என்றாலும், இவை தேவைதான்.

வறுமை பற்றிய ஆய்வு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வரி வருவாய், வரி அல்லாத வருவாய், வெவ்வேறு சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள், அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள அரசின் கடமைகள், இந்தியப் பழங்குடியினரின் வாழ்க்கை முறை, டிஜிட்டல் நுண்ணறிவுத் தளம், கிழக்குக் கடற்கரையில் புயலால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகள், ஜவுளி மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சில்ப் விருதுகள், தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி... எங்கெல்லாம் எப்படி எல்லாம் கேள்விகள் முளைக்கின்றன! இளம் தேர்வர்களின் தேடுதல் இன்னமும் பரவலாகும்; இன்னும் தீவிரமாகும். குரூப் 2 தேர்வு இதற்கு வழி கோலி இருக்கிறது.

இந்தியாவை, ‘மனித குலத்தின் அருங்காட்சியகம்' என்று அழைத்தவர் யார்? தமிழ்நாடு மாநிலத்துக்கான அனைத்துப் புவியியல் தரவுகளும் எந்த ஒரே இடத்தில் உள்ளது? புரிந்துணர்வுப் பணியகத்துடன் ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் கையெழுத்திட்ட ஆண்டு எது? தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது? இப்படி பல கேள்விகள், ஒரு வகையில் நம்மை திகைப்புக்கு உள்ளாக்குகின்றன. பொது அறிவுப் பகுதியில், ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்பதில் இரண்டு எதனை குறிக்கிறது? என்று ஒரு கேள்வி. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நகைப்புக்கு உரியதாய் இருக்கிறது.

இந்தக் கேள்வி ரசிக்கும்படி இருந்தது - ‘ஒரு ரோஜா நிறப் பூ, பச்சை ஒளி பட்டு ஒளிர்கிறது. அப்போது அதன் இதழ்கள், இதில் எந்த நிறத்தில் தோன்றும்?' - பச்சை, வெளிர் சிவப்பு, கருப்பு, சிவப்பு. வினாத்தாளில் உள்ளபடி அப்படியே ஒரு கேள்வி:

கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னமே சுனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார். அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னதாகவே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்துக்கு 40 நிமிடம் கால தாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன..? ஏதாவது புரிகிறதா..? இந்தக் கேள்வி, தமிழில் தாறுமாறாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் (ஓரளவுக்கு) சரியாக உள்ளது. அதன்படி, இந்தக் கேள்வி இப்படி இருந்திருக்க வேண்டும்:

ஒரு கூட்டத்துக்கு ஒருவர் 8.50 மணிக்கு, 20 நிமிடம் முன்னதாக சென்று விட்டார். வேறொருவர், அந்தக் கூட்டத்துக்கு 40 நிமிடம் தாமதமாக வந்தார். அவரை விட 30 நிமிடம் முன்னதாகவே இவர் வந்து விட்டார். எனில் கூட்டம் துவங்க, குறித்த நேரம் என்ன..? இவர் சென்று சேர்ந்த நேரம் 8:30. வேறொருவர், 40 நிமிடம் தாமதமாக வந்தார். அவரை விட 30 நிமிடம் முன்னதாகவே இவர் வந்து விட்டார். அதாவது இவர் 10 நிமிடம் தான் தாமதமாக வந்தார். எனில், கூட்டம் 8.20க்கு தொடங்கியது.

கேள்வியை, தேர்வர்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டாமா..? பொது அறிவுப் பகுதியில்மிகப் பெரிய சறுக்கல் இது. ஆணையம் இன்னமும் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். மற்றபடி, பெரும்பாலான கேள்விகள் மிகவும் சிறப்பாக நல்ல தரத்தில், இளம் தேர்வர்களை மேலும் விரிவாக ஆழமாக வாசிக்க வைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளன. சந்தேகம் இல்லை.

ஆனால், ‘பொதுத் தமிழ்' பிரிவில் மிகப் பெரும் ஏமாற்றம். அரசு நிர்வாகத்துக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில், கணினித் தமிழ், அறிவியல் தமிழ், நிர்வாகத் தமிழ், நீதிமன்றத் தமிழ் ஆகியவை இடம்பெறவில்லை. மாறாக, இவருக்கு இந்த பட்டப் பெயரைத் தந்தவர் யார் போன்ற அரதப் பழசான வினாக்கள். இவற்றிலிருந்து நாம் எப்போது வெளிவரப் போகிறோம்? உலகில் வேறு எங்கும், பணியாளர் தேர்வில் இல்லாத புது வகை கேள்விகள் இவை! ஆணையம் உணர்ந்து இருக்கிறதா?

ஆங்காங்கே ஓரிரு கேள்விகளில் சற்றே ‘அரசியல்' தென்பட்டாலும், பெரிதாகக் குற்றம் சாட்டுகிறார் போல் இல்லை. பெரும்பாலும் நடுநிலையுடன் பொதுவான கேள்விகளே இடம்பெற்றுள்ளன. ஆணையம் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளது. பாராட்டுகள். மொத்தத்தில், அபாரமான தேர்வாக அமைந்து இருக்க வேண்டியது; சில சிறிய தவறுகள் காரணமாக, தங்கத்தை இழந்து வெள்ளியுடன் சமாதானம் அடைய வேண்டியது ஆகிவிட்டது. அடுத்த முறை ஆணையம் இன்னும் சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்