“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.
“வீட்லதான் சார்”
“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”
“இதோ வர்றேன் சார்.”
‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
“ஏங்க பையன் யாரு? என்னாச்சு?”
“தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்”
“108-க்கு போன் பண்ணியாச்சா?”
“அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல”
‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்'
இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார்.
“ஹலோ சிவா. இன்னும் வரலையா?”
“சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்.”
“முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். கேன்சல் பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன்”
“சார் ஒரு நிமிஷம்” என்று பரிதாபமாக சொன்னவனை கண்டுக்காமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.
மருத்துவமனையில் பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான். வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும் மருத்துவமனைக்கு போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த வார்டு பாய் மாணிக்கத்திடம் சிவாவை கைகாட்டி, “சார். காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்.” என்றார்.
மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு.”
“மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியை செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல.”
“அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க.”
“இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க...ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக இல்ல... அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago