இந்தியப் பிரிவினையின் தாக்கம் | ஆக.15 - சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு

By மிது கார்த்தி

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகின்றன. பிரிட்டிஷ் இந்தியா என்கிற காலனி நாடு, 1947இல் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. அந்தப் ‘பிரிவினை’ எனும் துன்பம் முக்கிய நிகழ்வாக வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

இந்தியச் சுதந்திர வேட்கை 1940களின் தொடக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்தபோதே, முஸ்லிம்களுக்கு எனத் தனி நாடு கோரிக்கை முகமது அலி ஜின்னா தலைமையில் வலுப்பெறத் தொடங்கியது. சுதந்திரம் தொடர்பாக 1946இல் பிரிட்டன் அனுப்பிய அமைச்சரவை தூதுக் குழுவின் பேச்சுவார்த்தையிலிருந்து ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் விலகியது. இதையடுத்து 1946 ஆகஸ்ட் 16 -18 வரையிலான காலத்தில் நிகழ்ந்த படு கொலைகள்,வரலாற்றில் ‘கல்கத்தா பெருங்கொலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சம்பவத்தில் சுமார் 4,000 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக் கணக்கானோர் படுகாய மடைந்தனர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

இதேபோல 1947 ஜனவரியிலும் வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. 1947 ஜூன் 2இல் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன், ‘பிரிவினைத் திட்ட’த்தை இந்தியத் தலைவர்களிடம் முன்வைத்தார். நேரு, ஜின்னா, பல்தேவ் சிங் ஆகியோர் வானொலியில் பிரிவினைத் திட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கினர். இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் என்கிற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது.

இந்தப் பிரிவினையில் மிகப் பெரிய இடப்பெயர்வு நடந்தது. ஆங்கிலேய அதிகாரி ராட்க்ளிஃப் வரைந்த மத அடிப்படையிலான பிரிவினை எல்லைக் கோடு, பஞ்சாபில் பல தலைமுறைகளாகச் சேர்ந்து வாழ்ந்துவந்த இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள், சீக்கியர்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர்.

போர், பஞ்சம் இல்லாத நேரத்தில் நடைபெற்ற உலகின் மிகப் பெரிய மக்கள் இடப்பெயர்வு இது. இந்தப் பிரிவினையால் 1-2 கோடி மக்கள் இடம்பெயர நேரிட்டது. இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் அகதிகள் ஆனார்கள். நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டனர். அப்போது மூண்ட கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் 5 - 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு நாடு சுதந்திரமடைந்தபோது, பிரிவினையால் இன்னொரு புதிய நாடு மட்டும் உருவாகவில்லை. பிரிவினையின் பெயரால் நிகழ்ந்த வன்முறை உருவாக்கிய கொடூர நினைவுகள் வடுக்களாக மக்கள் மனதில் நிலைத்துவிட்டன.

இந்தப் பிரிவினையின் நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் வண்ணம் பிரிவினைக்கான நினைவு அருங்காட்சியகம் ஒன்று பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 2016இல் திறக்கப்பட்டது. பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆகஸ்ட் 14 அன்றும் ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு நாள்’ அனுசரிக்கப்படும் என்று 2021இல் மத்திய அரசு அறிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE