திண்ணை: குறிஞ்சிவேலனுக்கு தாகூர் விருது

By செய்திப்பிரிவு

மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான குறிஞ்சிவேலனுக்கு இந்த ஆண்டுக்கான
தாகூர் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 10,001 ரூபாய் ரொக்கத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் உள்ளடக்கியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள மொழியின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை குறிஞ்சிவேலன் மொழியாக்கம் செய்துள்ளார். ஐயப்பப் பணிக்கர், தகழி சிவசங்கரப் பிள்ளை, எஸ்.கே.பொற்றேக்காடு, மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஆனந்த், சேது, டி.டி.ராமகிருஷ்ணன், கிரேஸி, சி.எஸ்.சந்திரிகா முதலானவர்களின் படைப்புகளை இவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். கொச்சியில் இயங்கி வரும் புக்கர் மீடியா குரூப் இந்த விருதை வழங்குகிறது. இந்த விருதுத் தொகையை வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளார் குறிஞ்சிவேலன்.

வைகைச் செல்வன் வானொலி உரை

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மதுரை வானொலி நிலையத்தின் (பண்பலை 103.3 MHz, மத்திய அலைவரிசை 1269 Khz) ‘இன்று சொல்வோம் நன்று சொல்வோம்’ என்கிற தலைப்பில் நாள்தோறும் காலை 6.55 உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியை நற்றிணை பதிப்பகம் வழங்குகிறது.

எஸ்.ஆர்.வி. பள்ளி விருதுகள்

திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி ஆண்டுதோறும் பல பிரிவுகளில் வழங்கிவரும் ‘அறிஞர் போற்றுதும்’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது பேராசிரியர் வீ.அரசு, ஓவியர் மணியம் செல்வம் ஆகியோருக்கும் தமிழ் இலக்கிய விருது எழுத்தாளர் சு.வேணுகோபால், மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஷைலஜா, கண்ணையன் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சமூக நோக்கு விருது திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமாருக்கும், படைப்பூக்க விருது எழுத்தாளர்கள் கே.என்.செந்தில், ஜா.தீபா, சம்சுதீன் ஹீரா ஆகியோருக்கும், சிறார் இலக்கிய விருது
ஆதி வள்ளியப்பனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாடர்ன் டைம்ஸ்’ திரையிடல்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் மாதம் இருமுறை திரையிடல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்படவுள்ளது. முதல் திரைப்படமாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ இன்று (11.08.24) காலை 11 மணிக்குத் திரையிடப்படவுள்ளது. நிகழ்ச்சியுடன் கலந்துரையாடலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் மழை

தற்போது நடைபெற்றுவரும் ஈரோடு புத்தகக் காட்சியில் கடந்த வாரம் எதிர்பாராமல் பெய்த மழையால் புத்தகங்கள் சேதமாகின. சில்ரன் ஃபார் புக்ஸ், யாவரும் உள்ளிட்ட சில பதிப்பகங்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் புத்தகக் காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன் உடனடியாக வந்து மீட்புப் பணிக்கு உதவியுள்ளார். நூல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய இழப்பீட்டுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவும் தயாராக உள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE