கட்சியற்ற, அரசியலற்ற ஒரு அரசியலை ரஜினி ரசிகர்கள் நிகழ்த்தியதன் உச்சகட்டம்தான் அந்தக் காலகட்டத்தில் லதா ரஜினிகாந்த் வாரிசு அரசியல் சர்ச்சைக்குள்ளான சம்பவங்கள். அதன் வெளிப்பாடுகளும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எந்த இடத்திலும் துல்லியப்படுத்தாது இருந்த நிலையில்தான் 2004 ஜனவரியில் மக்களவைத் தேர்தலுக்கான சூடு கிளம்பியது.
அந்த சூடு தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்குள் எழும்பும் முன்னரே முதலில் புறப்பட்டது ரஜினி ரசிகர்களிடமிருந்துதான். 'பாபா' படத்தை ஓட விடாமல் பாமகவினர் செய்த ரகளைகளின் போது, ‘அவர்களுக்கு தேர்தல் வரும் போது பாடம் புகட்டுவோம்!’என்று சொல்லியிருந்தாரல்லவா ரஜினி. அந்த ‘பஞ்ச்’ வசனம்தான் இந்த காலகட்ட தேர்தல் அரசியலுக்கு முன்னோடியாக இருந்தது. அதன் தீவிரம் எடுத்த எடுப்பில் தமிழகமெங்கும் போஸ்டர்கள் வடிவில் புறப்பட்டது. அதில் கோவை ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கைதும் செய்யப்பட்டனர்.
‘இந்தப் படை எங்கள் வெற்றிக்காக அல்ல; பாமகவின் தோல்விக்காக!’ என்பதே என்பதே அவர்கள் போஸ்டரின் உச்சகட்ட கோஷமாக இருந்தது. கோவையில் பாமகவிற்கு பெரிய வாக்குவங்கியும் கிடையாது; தொண்டர்கள் பலமும் கிடையாது. ஆனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று பாமகவிற்கு எதிர் பிரச்சாரம் செய்வதாக அதில் அறிவித்திருந்தனர்.
அதில் இரண்டு போஸ்டர்களில், ‘கலைஞரே நியாயமா? அரசியல் சூதாடியுடன் கூட்டு. சூதாடிக்கு ஆறு சீட்டு. படையப்பாவின் படை ரெடி!’ என வாசகங்கள் தெறித்தன. மூன்றாவது போஸ்டரில், ‘தலைவா! அறிக்கை விடு. அழித்து விடுகிறோம் பாமகவை’ என்றது வாக்கியங்கள். இந்த கடைசி போஸ்டரில், ‘பாமக என்ற பெயரை ரஜினிகாந்த் காலால் உதைத்து தள்ளுவது போல் வடிவமைத்திருந்தார்கள்.
இந்த போஸ்டர்கள் நகரில் கடைவிரித்தவுடனே போலீஸாருக்கு என்ன தோன்றியதோ. உடனே கண்ணுக்கு தென்பட்டவற்றையெல்லாம் கிழித்தெறிய ஆரம்பித்தனர். கூடவே போஸ்டர் ஒட்டிய இரண்டு பேரை பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு போய் தங்கள் பாஷையில் பூஜையையும் ஆரம்பித்து விட்டனர். தவிர, போஸ்டரை அச்சடித்து ஒட்டச் சொன்னதாக சவுந்திரபாண்டியன், அபு, முபாரக் ஆகிய மூன்று ரஜினி ரசிகர்களை கைதும் செய்தது போலீஸ். அவர்கள் மீது தமிழ்நாடு முன்னெச்சரிக்கை தடுப்புச் சட்டம் 1959-ன்படி மக்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாக செயல்பட்டதாக வழக்கும் பதிவும் செய்தனர். இதையொட்டி அங்கிருந்த ரஜினி ரசிகர்களிடம் கோபாவேசம் புறப்பட்டது.
‘எங்கள் தலைவரை மட்டுமல்ல. நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கூட முதுகில் குத்திய கட்சி பாமக. அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் ராமதாஸுக்கு பாடம் புகட்ட ரஜினி ரசிகர்களான நாங்கள் புறப்பட்டால் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதுதானே இந்த போலீஸ்? அதை விட்டுவிட்டு தடைபோடுகிறார்களே. இது எந்த வகையில் நியாயம்!’ என்ற கண்டனக் குரல்கள் கிளம்பின. இது சம்பந்தமாக அப்போதைய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான உலகநாதன் பொங்கினார்:
‘இந்த போஸ்டர்களை நாங்கள் ஒட்டவில்லை. அது பற்றி எங்களுக்கு தெரியவும் தெரியாது. (கோவையில் அப்போதே இரண்டு கோஷ்டிகளாக ரசிகர் மன்றங்கள் இயங்கி வந்தன) நாங்களே முந்திக் கொண்டு இது சம்பந்தமாக அறிக்கை விடலாமென்று இருந்தோம். பாமக போட்டியிடும் இடத்திற்கு எங்கள் தலைமையில் ரசிகர்களை திரட்டிச் செல்வது, அங்கெல்லாம் பாமகவினருக்கு தொந்தரவு கொடுப்பது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் போலீஸ் இந்த போஸ்டர்களுக்கு தடை போட்டிருக்கிறது. அந்த போஸ்டர்களில் அப்படியொன்றும் வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் எதுவும் இல்லை. அப்படியிருக்க, அதற்கு ஏன் தடை போட வேண்டும்? கிழித்தெறிய வேண்டும்? வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்த ஒரு ரசிகரும் சும்மாயிருக்கமாட்டான். முன்வைத்த காலை பின்வைக்கவும் மாட்டான். பாமக இங்கே ஓட்டளவில் ஜீரோ. ஆனால் பாண்டிச்சேரியில் ஆட்சிக் கனவு காண்கிறார்கள். அதனால் நிச்சயம் அங்கே நாங்கள் திரண்டு செல்வோம். இங்கிருந்து எங்கள் அணி சார்பாக மட்டும் 25 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அங்கே தலைவர் ரஜினியின் கொடியை நாட்டி, பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். யார் தடுத்தாலும், கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் ஓய மாட்டோம்!’
போஸ்டர் ஒட்டியது தொடர்பாகக் கைதாகி ஜாமீனில் வந்திருந்தார் ரஜினி ரசிகர் அபு. அவர், ‘எத்தனையோ போஸ்டர்களை தலைவருக்காக ஒட்டியிருக்கேன். இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. எத்தனையோ பகுதிகளில் எத்தனையோ ஊர்களில் ரசிகர்கள் இப்போது போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். ஆனா இங்கே மட்டும்தான் இப்படி எப்.ஐ.ஆர் போட்டு எங்களை கைதும் செய்திருக்கிறார்கள். போலீஸிற்கு இதில் என்ன உள்நோக்கம்னு எங்களுக்குப் புரியவில்லை. அதைப் பற்றி போலீஸில் கேட்டதுக்கு ‘ஆமாய்யா, நீங்க இங்கே போஸ்டர் ஒட்டுவீங்க. அவங்க பதிலுக்கு இன்னொரு போஸ்டர் ஒட்டுவாங்க. அது உச்சகட்டத்துக்கு போகும். ஆளாளுக்கு வெட்டிகிட்டு சாவீங்க. எங்க தலையை உருட்டுவீங்க. அதுவரைக்கும் எங்க கை பூ பறிச்சுட்டு இருக்கும் இல்லியா?’ன்னு பதில் வருது. எங்களைப் பொறுத்தவரை நாங்க எங்க கருத்தை சொல்றோம். சொல்வோம். இந்த பாமக விஷயத்தில் எங்கள் அகில இந்தியத் தலைமையே தடுத்தாலும் நிறுத்த மாட்டோம். 'பாபா' படத்தை பாடாய்படுத்தியவர்களுக்கு பாடம் கற்பித்தே தீருவோம்!’ என ஆத்திரப்பட்டார்.
மற்ற மாவட்டங்களில் போலீஸ் இது விஷயமாய் கண்டுகொள்ளாமல் இருக்க, கோவை போலீஸ் மட்டும் ஏன் இப்படியொரு கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்?
‘கோவை ஒரு சென்சிடிவ் நகரம். ஏற்கெனவே நடந்த மதக்கொலைகள், கலவரங்கள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் எல்லாமே ஏதாவது ஒரு போஸ்டர், நோட்டீஸ், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவர் எழுத்துகள் விவகாரம் மூலமே நடந்துள்ளன. எனவேதான் எந்த ஒரு போஸ்டர் ஒட்டுவதானாலும் காவல்துறை முன் அனுமதி வாங்கிவிட்டே ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள் முன் அனுமதி வாங்கவில்லை. தவிரி இவர்கள் இந்த போஸ்டரை ஒட்டிய இடங்கள் சென்சிடிவ்விலும், சென்சிடிவ்வான பகுதியான கோட்டை மேடுகள் பகுதிகள். எனவேதான் இதை முறையாக மேலிடத்திற்கு தெரியப்படுத்தி, அங்கே அனுமதி வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது!’ என்றனர் போலீஸார்.
இந்த நேரத்தில் பாமகவை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்ய பதினெட்டு பேர் கொண்ட கமிட்டி ரஜினி ரசிகர் மன்ற தரப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் வடமாவட்டங்களைச் சேர்ந்த பனிரெண்டு பேரும், தென்மாவட்டங்களை சேர்ந்த ஆறுபேரும் இடம் பெற்றிருந்தனர்.
மன்ற அளவில் ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த கமிட்டி உறுப்பினர்கள் பதினெட்டு பேரும் இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு ஓட்டலில் கூடி பேசியிருந்தார்கள். பாமக போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அதை தோற்கடிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அதில் வடிவமைக்கப்பட்டன. அதில் ஒரு திட்டத்தின் முதல் அஸ்திரம்தான் இந்த தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் அஸ்திரம்.
அதற்கு அடுத்த குறியாக இரண்டு லட்சம் நோட்டீஸ்களை தயாரித்திருந்தார்கள். ‘அரசியலில் இருந்து அப்புறப்படுத்த(?!) ஆயத்தப்பணிகள்’ என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களுக்கு இருபத்தைந்து கட்டளையிடும் இந்த நோட்டீஸ்கள் சிவகாசியில் அச்சிடப்பட்டு ரசிகர் மன்றங்களுக்கு விநியோகமும் செய்யப்பட்டன. இந்த நோட்டீஸ்கள் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வீடு, வீடாக அந்தந்த ரசிகர் மன்றங்கள் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நோட்டீஸ்களில் இந்த தேர்தலில் ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்; எதை செய்யக்கூடாது; எவ்வாறு வியூகம் அமைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நோட்டீஸ்களில் நேரடியாக ராமதாஸ் என்ற முழுப்பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக ‘ராஸ்’ என்று குறியீட்டு பெயர் இருந்தது. தவிர அதில் பாமக என்ற பெயரும் இல்லை. ‘ராஸின் ஆதரவாளர்களை தோற்கடியுங்கள்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ‘ராஸ் ஆதரவாளர்கள் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் வேலை செய்ய வேண்டும்’ என்ற கட்டளையோடு தொடங்கும் அந்த நோட்டீஸில் காணப்பட்ட முக்கிய வாசகங்கள் இதுதான்:
‘உழைத்துக் களைத்தவன் உணவருந்தப் போகும் போது கையைப் பிடித்துக் கொண்ட வலியை ராஸ் உணரவேண்டும். 'பாபா' படத்திற்கு இடையூறு செய்து ஆனந்தக் களிப்பாடிய ராஸ் முகத்தில் கரிபூசும் நேரம் இதுதான். நம் பலத்தை நிரூபணம் செய்யும் காலகட்டம் இது. இது ஒரு சுயபரிட்சார்த்தப் பணி. ராஸின் சுயரூபத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுங்கள். அரசியல் நம்பகத்தன்மை கிஞ்சித்தும் இல்லாத ராஸின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும். பழைய மரம்வெட்டிச் சம்பவங்கள், சாதிப் பார்வைகளை தெளிவாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இதற்காக ரஜினி ரசிகனுக்கும் ஒரு கிராமம் இலக்கு. அதேவேளையில் தனிமனித விமர்சனம் கூடாது..’என்று ஆர்ப்பாட்டமாய் சென்ற நோட்டீஸ் வசனங்கள், இறுதியில் ‘ உன் பணிகள் குறித்து பதினெட்டு பேர் கமிட்டியிடம் எந்த இரவிலும் பேசலாம். உதவிகள் உன்னை வந்து சேரும்!’ என்ற பின்குறிப்பும் இடம் பெற்றிருந்தன.
இந்த கமிட்டியில் இடம் பெற்றிருந்த 18 பேர் யார், யார் என்பதை ரஜினி ரசிகர் மன்றங்கள் மட்டும் ரகசியமாய் பாதுகாத்துக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. என்றாலும் பதினெட்டு பேர் கமிட்டியைப் பற்றி அப்போது நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்றிரண்டு நிர்வாகிகள் அகப்பட்டார்கள். அதில் நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரத்த தான கழகத்தலைவரும் ஒருவர் என்பதை அறியமுடிந்தது. அவர்தான் இந்த இரண்டு லட்சம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தவர் என்பதும் தெரிய வந்தது.
அவரிடம் பேசியதில், ‘வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆக வேண்டும்? ரஜினியை எதிர்த்தவர்கள் அதன் பலனை அனுபவிச்சே தீரணும். ரஜினி ஒரு நடிகர். பொது நிகழ்ச்சிக்கு வரும்போது பாருங்க. மொட்டைத் தலை, தாடி, மீசையோட இயல்பா வர்றார். ஆனால் ராமதாஸ் ஓர் அரசியல்வாதி. தலைக்கும் மீசைக்கும் டை அடிக்காமல் அவர் வெளியே வர்றதில்லை. அப்ப யார் நடிக்கிறாங்க? ரஜினி நடிக்கிறதை பற்றி தனிமனித விமர்சனம் செய்ய ராமதாஸ் யார்? ரஜினி ரசிகர்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கம் வரை எங்கள் நடவடிக்கை தொடரும். ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை இது இரண்டாம் சுதந்திரப் போராட்டம்!’ என உணர்ச்சிகரமாக பதில் வந்தது.
- பேசித் தெளிவோம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago