ஆசிரியர்களை கொண்டாடிய ஆசான்..! - காலத்தால் மறக்க முடியாத கலாம்

By எஸ்.முஹம்மது ராஃபி

வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்து விட்டார் அந்த மாணவர். அந்த வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த கணித ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர், அந்த மாணவரை மற்ற மாணவர்களின் முன்னிலையில் பிரம்பால் விளாசி தள்ளி விட்டார். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, காலை பிரார்த்தனை கூட்டத்தில் யாரை பிரம்பால் விளாசினாரோ அதே மாணவரை அழைத்து கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்ததற்காக பாராட்டினார் ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்.

பிரம்பால் அடி வாங்கிய அந்த மாணவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இந்த சம்பவம் நடந்தது கலாம் ராமேசுவரம் அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்தபோது..! இதை பல மேடைகளில் மாணவர்கள் முன் நினைவு கூர்ந்தார் கலாம்.

தனது மாணவப் பருவத்தில் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றி தான் எழுதிய நூல்களிலும், மாணவர்கள் மத்தியிலும், பல்வேறு மேடைகளிலும் கூறியுள்ளார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் கலாமின் அறிவியல் ஆசிரியராக இருந்த சிவசுப்பிரமணிய ஐயர்.

அவர் பள்ளியில் பறவைகள் குறித்தும், அவை எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு மட்டுமின்றி பள்ளியின் அருகில் இருந்த கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரடியாக காட்டினார். இது கலாமின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தானும் விமானியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும், பின்னாளில் ஆசிரியர் அறிவுரைப்படியே இயற்பியல் பட்டப்படிப்பு படித்ததாகவும், அதன்பிறகு ஏரோநாட்டிகல் பொறியியல் படித்ததாகவும் கலாம் நினைவு கூர்ந்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் உருவாகிறது என்பது கலாமின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

ஐந்தாம் வகுப்பு வரை ராமேசுவரத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றார். அங்கு கலாமுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியர் ஐயாதுரை சாலமன். அவரிடமிருந்து விண்வெளி, பிரபஞ்சம் சார்ந்த கல்வியை மட்டுமின்றி, வாழ்க்கையை தாம் விரும்பியபடி எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதையும் கலாம் கற்றதாக கூறியுள்ளார்.

தனது வழிகாட்டி விஞ்ஞானி விக்ரம் சாராபாயுடன் கலாம்.

அர்ப்பணிப்புதான் ஆசிரியர் களின் அடையாளம். அதேபோல, ஒரு ஆசிரியர் கடைசிவரை ஆசிரி யராகவே இருப்பார். விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு ஆசிரியர் வித்தாகப் புதைந்து கிடக்கிறார் என அடிக்கடி தனது உரைகளின்போது மாணவர்களுக்கு மேற்கோள் காட்டுவார். இதை தனது கடைசி காலம் வரை கடைப்பிடித்தார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளநிலை இயற்பியல் படிப்பில் சேர்ந்த கலாமுக்கு விண்வெளி இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர் லடிஷ்லாஸ் சின்னத் துரை. கல்லூரிப் படிப்பை முடித்து 60 ஆண்டுகளாக தமிழகம் வரும்போதெல்லாம் தனது பேராசிரியர் சின்னத் துரையை பார்க்கும் வழக்கம் கொண்டிருந்தார். தனது மரணத்துக்கு 9 நாட்களுக்கு முன்புகூட திண்டுக்கல்லுக்கு வந்து ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்தார்.

சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் கலாம் ஏரோ நாட்டிகல் மாணவராக பயிலும்போது, அதன் இயக்குநராக இருந்த பேராசிரியர் ஸ்ரீ னிவாசன். அவரே பொறியியல் வடிவமைப்பு ஆசிரியரும் கூட. கலாமுக்கு தாழ்வாகப் பறக்கும் சிறியவகை போர் விமானத்தை வடிவமைக்கும் பணி கொடுக்கப்பட்டது. கலாம் வடிவமைப்பை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் ஏற்கவில்லை.

இதனால் அவகாசம் தரும்படி கலாம் கேட்டார், ஆனால் கலாம் கேட்டதை விட குறைந்த அவகாசத்தையே ஆசிரியர் ஸ்ரீ னிவாசன் கொடுத்தார். அன்று இரவு முழுவதும் வரைபலகை முன்பு அமர்ந்து தனது வடிவமைப்பை கலாம் நிறைவு செய்தார். மறுநாள் காலை வகுப்பறையில் கலாமின் வடிவமைப்பை பார்த்து ஆசிரியர் ஸ்ரீ னிவாசன் வெகுவாக பாராட்டினார்.

எம்.ஐ.டியில் பொறியியல் படிப்பு முடித்த உடன் பிரிவு உபச்சார நிகழ்வின் போது கலாம் உள்ளிட்ட மாணவர்கள் ஆசிரியர் களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆயத்த மானார்கள். கலாமை தனது அருகே நிற்க வைத்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எதிர்காலத்தில் இந்த ஆசிரியருக்கு நீங்கள் பெரும்புகழ் சேர்ப்பீர்கள் என்றார்.

அவரது ஆசிர்வாதம் அப்படியே பலித் தது என்றால் மிகையல்ல. ஒருமுறை மாணவர் ஒருவர் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது கலாமிடம் தங்கள் இத யத்தில் ஆறாத ரணம் ஏதாவது உண்டா? எனக் கேட்டார்.

அதற்கு கலாம், ஆறாத ரணம் என்று எதுவும் இல்லை. ஆனால், ஆழ மான ஏக்கம் ஒன்று உண்டு. நான் பாரத ரத்னா விருது பெற்றபோது, எனது பெற்றோர், எனது பெருமைக்குரிய ஆசிரியர் கள், எனது வழிகாட்டி மாபெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் இதை பார்ப்பதற்கு இல்லையே என்ற ஏக்கம் உண்டு என்றார்.

நீங்கள் என்னவாக நினைவு கொள்ளப் பட வேண்டும் என கலாமிடம் கேட்டபோது, நான் ஆசிரியராக நினைவு கொள்ளப்பட வேண்டும் என்றவர், மாணவர்கள் மத்தியில் ஆசிரியராகவே மறைந்தார், ஆசிரியர்களை கொண்டாடிய ஆசான் அப்துல் கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE