ராமேசுவரம் கலாம் நினைவகம்: 7 ஆண்டுகள்... 1.35 கோடி பார்வையாளர்கள்!

By செய்திப்பிரிவு

ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு 7 ஆண்டுகளில் 1.35 கோடி பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவி காலத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர் களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதே இடத்தில், அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை 27.07.2017-ல் பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.இந்நிலையில் கலாம் தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு 26.07.2024 அன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.

தினமும் சராசரியாக 7,000 பார்வையாளர்கள் நினைவிடத்தை பார்வையிடுகின்றனர். இதுவரையிலும் 7 ஆண்டுகளில் 1 கோடியே 35 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

# அப்துல் கலாம் நினைவிடக் கட்டிடத்தின் குவிமாடம் ராஷ்டிரபதி பவனை பிரதிபலிக்கும் வகையிலும், பிரதான கதவு இந்தியா கேட் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிறக் கற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்தும், சிவப்புநிறக் கற்கள் ஆக்ராவிலிருந்தும் தருவிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன.

# நினைவிடத்துக்கு வெளியே உள்ள தோட்டம் ‘முகல்' கார்டன் எனப்படும் ‘அம்ரித் உத்யன்' தோட்டத்தை ஒத்திருக்கிறது. இங்குள்ள மரங்கள், செடிகள் தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினை விடத்தின் பின்பகுதியில் கலாமின் 7 அடி உயர வெண்கலச் சிலையும், 45 அடி உயரத்தில் அக்னி-II ஏவுகணையின் மாதிரி யும் நிறுவப்பட்டுள்ளன.

# பொக்ரான் அணு ஆயுத சோதனை உட்பட கலாமின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் நினைவிடத்தின் உள்ளே 4 அரங்குகளை கொண்டது.

இதில் பிரார்த்தனைக் கூடம், கலாமின் மாணவப் பருவம், இஸ்ரோ, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE