சீடரை தேடி வந்த குருநாதர்! - ஜி.என்.பி. பற்றி நெகிழ்கிறார் இசைக் கலைஞர் ஸ்ரீனிவாச ராகவன்

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

தனது தனித்தன்மையுடன் கூடிய குரல் வளத்தாலும் அநாயசமாக உதிர்க்கும் 'பிருகா'க்கள், ஸ்வரக் கோர்வைகளாலும் கர்னாடக இசை உலகில் ஜி.என்.பி. பாணி என்ற புதிய பாணியையே ஏற்படுத்திய இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம். ஒரு சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். 1940-ம் ஆண்டில் வெளியான ‘சகுந்தலை' திரைப்படத்தில் சகுந்தலையாக நடித்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஜோடியாக துஷ்யந்தனாக நடித்தார். அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியும் ஜி.என்.பி.யும் பாடிய 'பிரேமையில் யாவும் மறந்தேனே..' பாடல் அந்தக் கால இளைஞர்களை சொக்கவைத்தது.

அதே ஆண்டில் ஜி.என்.பி. பாடிய ‘வாசு தேவயனி...’ என்ற கல்யாணி ராகத்தில் அமைந்த தியாகராஜர் கீர்த்தனையின் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்து, அந்தக் காலத்திலேயே அவருக்கு ராயல்டிதொகையாக 10 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.அப்படியானால், எவ்வளவு லட்சம் ரூபாய்களுக்கு இசைத்தட்டுகள் விற்பனையாகி இருக்கும். 1940-களின் லட்சங்கள் இன்று எத்தனை கோடிகளுக்கு சமம். அந்த அளவுக்கு கேட்போரை மயக்கும் வசீகர குரலுக்கு சொந்தக்காரரான ஜி.என்.பி.யின் சீடர்களில் முக்கியமானவர் ஏ.ஸ்ரீனிவாச ராகவன்.

1930-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாச ராகவனும் ஜி.என்.பி. பாணியை பின்பற்றி சங்கீத உலகில் வெற்றிகரமான பாடகராக விளங்கி, ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர். தற்போது சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் 94 வயதாகும் ஸ்ரீனிவாச ராகவனை ‘இந்து தமிழ் திசை’-க்காக சந்தித்து பேசினோம். தனது குருநாதர் ஜி.என்.பி. பற்றியும் தனது அனுபவங்கள் குறித்தும் அவர் கூறிய சுவாரசியமான தகவல்கள் வாசகர்களுக்காக இங்கே..

‘‘நான் திருக்கோவிலூரில் பிறந்தேன். என் தந்தை ஆராவமுதாச்சாரியார் மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத பண்டிட்டாக இருந்தார். எனக்கு அவர்தான் இசை ஆர்வத்தை ஏற்படுத்தினார். ரேடியோவில் பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டு சங்கீத ஞானத்தை வளர்த்துக்கொண்டேன். எனக்கு 9 வயதாக இருக்கும்போது மாவட்ட பள்ளிகளுக்கிடையே நடந்த சங்கீதப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கினேன். அப்போது நான் முறையாக சங்கீதம் கற்கவில்லை.

1945-ம் வருடம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ‘இன்டர்மீடியட்’ படித்தேன். அங்குகணிதம், இயற்பியலுடன் சங்கீதமும் எனக்குபாடமாக இருந்தது. அங்கு தமிழிசை பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறையதமிழ் பாடல்கள் கற்றுக் கொண்டேன். 1947-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நடத்திய தமிழிசை பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். அந்தப் போட்டிக்கு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, ஜி.என்.பி., நாகராஜராவ் போன்றஜாம்பவான்கள் நடுவர்களாக இருந்தனர். இதில் எனக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது. அப்போது எனக்கு 17 வயதுதான்!

ஜி.என்.பாலசுப்பிரமணியம்

நான் நன்றாகப் பாடியதைப் பார்த்துஜி.என்.பி., தனது பிரதம சீடரான டி.ஆர். பாலசுப்பிரமணியம் மூலம் எனக்கு விருப்பம் இருந்தால் தன்னிடம் சங்கீதம் கற்க சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜி.என்.பி.யிடம் சீடனாகச் சேர்ந்து சங்கீதம் கற்றுக் கொண்டேன். பொதுவாக, குருவை சீடர்கள் தேடிப்போவார்கள். ஆனால், இந்த சீடனைத் தேடி என் குருநாதர் வந்து என்னை சேர்த்துக் கொண்டார் என்பது என் அதிர்ஷ்டம். அவரது கச்சேரிகளை அடிக்கடி கேட்டு கச்சேரி செய்வதில் தேர்ச்சி பெற்றேன்.

1946-ல் திருச்சி வானொலி நிலையத்தில் ‘ஆடிஷன்’ மூலம் வானொலியில் பாட தேர்வு செய்யப்பட்டு, பிறகு ‘ஏ கிரேடு ஆர்ட்டிஸ்ட்’ ஆனேன். 1949-ல் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். படித்தேன். சென்னை வானொலியில் என் கச்சேரிகள் ஒலிபரப்பானது. அவற்றைக் கேட்டு ‘தி இந்து’வில் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றிய ‘ஆரபி’ என்ற பெயரில் இசை விமர்சனம் எழுதும் எம்.கிருஷ்ணமூர்த்தி என்பவர், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்.அதற்கு அருமையான விமர்சனமும் எழுதினார். அந்த விமர்சனம் ‘தி இந்து’வில் 14-12-1958 அன்று வெளியானது. இந்த விமர்சனத்தைப் பார்த்து எனக்கு நிறைய கச்சேரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த வகையில் நான் மேலும் பிரபலமாவதற்கு ‘தி இந்து’ உதவியது.

டெல்லி, பெங்களூரு, மைசூரு, மும்பை, கேரளா மட்டுமின்றி, இலங்கை தலைநகர் கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காவில் வாஷிங்டன். பிட்ஸ்பர்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் கச்சேரி செய்திருக்கிறேன். முக்கியமாக, ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ராஷ்டிரபதி பவனில் 2 மணி நேரம் கச்சேரி செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இதெல்லாம் நான் தெய்வமாக மதிக்கும் என் குருநாதர் ஜி.என்.பி.யால் எனக்குக் கிடைத்த பெருமை.

ஜி.என்.பி.யின் உயர்ந்த குணத்தைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். தான் கற்ற வித்தையை குறைவில்லாமல் தன் சீடர்களுக்கு வாரி வழங்கினார். மிகவும் தாராள மனம் கொண்டவர். கச்சேரிகள் மூலம்ஜி.என்.பி.க்கு புகழும் பொருளும் குவிந்தது. கச்சேரிகளில் தனக்கு கிடைக்கும் சன்மானத்தை பக்கவாத்தியக்காரர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுப்பார். அதில் ஒரு பங்கைத்தான் அவரும் எடுத்துக் கொள்வார். 1960-களில் மயிலாப்பூர் கபாலி தியேட்டர் எதிரே ஜி.என்.பி. குடியிருந்தார். அப்போது ஒருநாள் தம்புரா ஒன்றை அவர் தனது கையால் எனக்கு வழங்கி ஆசிர்வதித்தார். அப்போதில் இருந்து எனக்கு ஏறுமுகம்தான்.

அக்காலத்தில் கலைஞர்களிடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், பொறாமைஇல்லை. ஜி.என்.பி.க்கும் ‘சங்கீத கலாநிதி’முசிறி சுப்பிரமணிய ஐயருக்கும் சங்கீதரீதியாக ஆரோக்கியமான போட்டி உண்டு. நான்ஜி.என்.பி.யின் சீடர் என்று தெரிந்தும் 1960-களில் மியூசிக் அகாடமியில் சீசன் கச்சேரியில் பாட, அப்போது ‘சதஸ்’சின் தலைவராக இருந்த முசிறி சுப்பிரமணிய ஐயர் வாய்ப்பளித்தார். அதில் சிறந்த ஜூனியர் வித்வானாக வெற்றிபெற்ற எனக்கு அவர் மகிழ்வுடன் பரிசும் வழங்கி கவுரவித்தார். அது ஒரு பொற்காலம்!’’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE