ரஜினி அரசியல்: 51- கிரேட்டஸ்ட் லிஸனர்

By கா.சு.வேலாயுதன்

இதில் மற்றவர்கள் எப்படியோ? ரஜினியைப் பொறுத்தவரை ஆதி முதலே தன் குடும்பத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள், கட்டுப்பெட்டியாக வளர்த்தியவர் என்பதை 2000 ஆம் ஆண்டில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஒரு ஆன்மிகப் பெரியவருடன் பேசியதில் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

‘இங்கே உலகெங்கிலும் இருந்து வரும் ஆன்மிகப் பெரியவர்களுக்கு தனித்தனியாக குடில்கள் உண்டு. அப்படி ஒரு வீடு ரஜினி குடும்பத்துக்கும் இருக்கிறது. அதில் ரஜினி எப்போதாவது வந்து தங்குவார். அடிக்கடி அந்த வீட்டில் அவர் மனைவியும் இரு மகள்களும் வந்து தங்குவது வழக்கம். ரஜினியுடன் வரும்போதம் சரி, அவர் இல்லாமல் வரும் போதம் சரி, அவர்கள் மூவருமே ஒரு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசுவார்கள். வெளியே செல்லமாட்டார்கள். ஆசிரமத்தில் பல ஏக்கர் பரப்பளவையும் சுற்றி வரும்போது ஒரு சாதாரண வீட்டுப் பிள்ளைகள் போலவே நடந்து கொள்வார்கள். இது எல்லாம் ரஜினிக்குள் உருவாக்கியிருக்கும் அற்புதம். அதற்கும் மேலாக ரஜினியும் அவர்கள் மீது ரொம்ப பாசமாக இருப்பார்.!’எனச் சொன்னார் அவர்.

அந்த ஆன்மிகப்பெரியவர் சொன்னது எந்த அளவுக்கு சரியானது?

அதன் ஆதாரசுருதியாய் ஒலிக்கும் லதா ரஜினிகாந்த் 2011 ஆம் ஆண்டில் பிரபல வார இதழுக்கு கொடுத்த ஒரு பேட்டியின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

‘நன்றாகப் படிக்கிறானே என்று அவரிடம் (ரஜினியிடம்) ஒரு வார்த்தை கூட கேட்காமல் திடீரென்று இங்கிலீஷ் மீடியத்திற்கு அவரை மாற்றி விட்டார்கள். ஒரு நிமிஷத்தில் எல்லாப் பாடங்களும் இங்கிலீஷ் ஆக மாறி விட்டது. ரஜினி ரொம்பவும் அப்செட் ஆகி விட்டார். திடீரென்று ரேங்க் குறைந்தது அவர் மனதை பாதித்தது. யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் வருத்தத்தோடு தவித்திருக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு பிராமின் ஃபேமிலி இருந்தது. அவர்கள் இவர் மீது மிகுந்த அன்பு காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கூட அவரால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மாறாக இந்த மாதிரியான சின்ன வயசுத் தாக்கங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கையே அவரை காப்பாற்றியிருக்கிறதாக சொல்லியிருக்கிறார்.

‘நான் நல்லவனாக வளர வேண்டும். கடவுள் அருளால் ஏதாவது சாதிக்க வேண்டும்!’ என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி நின்றிருக்கிறது. சின்ன வயதில் தினமும் நெற்றி நிறைய விபூதி அடித்துக்கொள்வார் அவர். அது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சின்ன வயதில் ராமகிருஷ்ண மடத்துக்கு தினமும் போவார். அங்கு தண்ணீர் பிடித்து வைப்பது. தரையைப் பெருக்குவது போன்ற பணிகளைச் செய்வார். ரஜினியை கவனித்து வந்த குருஜிக்கு இவர் மீது பாசம். தான் மாணவர்களிடையே சொற்பொழிவாற்றும் போது எல்லாம் ரஜினியையும் அன்புடன் அழைத்து உட்கார வைத்துக்கொள்வார். அப்போதும் சரி, இப்போதும் சரி ‘ரஜினி ஈஸ் கிரேட்டஸ்ட் லிஸனர்’. நீங்கள் ஒன்று அவரிடம் பேசினால் ரொம்ப பொறுமையாக, கவனமாகக் கேட்பார்!’

ரஜினி குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது தர முடியுமா?

‘உண்மையில் ஒரு போட்டோ கூட இல்லை. காரணம் அவரை யாரும் போட்டோ எடுக்கவில்லை. ஒரு சமயம் குடும்பமாக அமர்ந்து என் ஆல்பம், குழந்தைகளின் போட்டோக்களை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர், ‘என்னுடைய குழந்தைப் பருவ போட்டோதான் ஒன்று கூட இல்லை!’ என்று லேசாகப் புன்னகைத்தார். எனக்கும் குழந்தைகளுக்கும் மனசு கஷ்டமாகி விட்டது. தன் போட்டோ இல்லை என்று சொன்னதும் அவருடைய கரங்களை ஆதரவோடு கெட்டியாகப் பற்றிக் கொண்டேன். வீட்டில் அவர் ஜில்லு என்றுதான் அழைப்பார். மறு விநாடி. அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. ‘பிலீவ் மீ! சின்ன வயசில் கறுப்பா இருந்தாலும், துறுதுறுவென நன்றாகவே இருப்பேன்!’என்றார் உடனே!’

அவர் குழந்தைப் பருவம் சரி. பிற்பாடு புகழ் உச்சிக்குப் போன பிறகு தன் குழந்தைகளோடு அவரால் நேரம் செலவிட முடிந்ததா?

‘முடியாமல்தான் போனது. ஐஸ்வர்யா பிறந்த சமயம். அப்போது இவர் ரொம்ப பிஸி. இரவு பகலென்று பாராமல் உழைத்துக்கொண்டு இருந்த சமயம் அது. பிற்பாடு எல்லாமே ஒரு கன்ட்ரோலுக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடிந்தது’

ஐஸ்வர்யா பிறந்த சமயம் நீங்கள் நீங்கள் மெட்டர்னிட்டிக்குப் போனபோது ரஜினி துடித்துப் போனாராமே?

‘அது ஒரு வியப்பான விஷயம். ஐஸ்வர்யா பிறந்தது ஜனவரி 1-ம் தேதி. தன் ‘பர்த்டே’யை உலகமே கொண்டாடுகிறது என்று தமாஷாக அவள் சொல்வாள். நியாயமாக ஜனவரி 26-ம் தேதிதான் அவள் பிறக்க வேண்டிய, டியூ டேட்! ஒண்ணாம் தேதி காலையில் என் வயிற்றில் திடீரென்று குழந்தையின் மூவ்மென்ட் இல்லை. சில நிமிஷங்களில் சரியாகி விட்டது. அப்போது என் உதவிக்கு என் அம்மா கூடவே இருந்தார். காலையில் எனக்காக ஏதோ முக்கியமாகக் கடைக்குப் போக வேண்டி இருந்தது அம்மாவுக்கு. அப்பவே ‘ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றியே, அப்புறம் போறேனே!’என்றார். நான், ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என்று அம்மாவை வற்புறுத்திக் கடைக்கு அனுப்பி விட்டேன். இவரோ ஷூட்டிங் போயாகி விட்டது. திரும்ப இரவாகும்.

வீட்டில் தன்னந்தனியாக நான். திடீரென்று மறுபடியும் வயிற்றை ஏதோ பண்ணியது. வீட்டில் இரண்டு கார்களையும் அம்மாவும், அவருமாக எடுத்துச்சென்று விட்டார்கள். சட்டென்று என்னைக் கலவரம் சூழ்ந்து கொண்டது. அம்மாவை மடத்தனமாக அனுப்பி விட்டோமே என்று என் மீதே கோபம் வர கண்கள் கலங்கிப் போய் பூஜை அறைக்குள் சுவாமி படங்களுக்கு முன் உட்கார்ந்து ‘கடவுளே, என்னைக் காப்பாற்று!’ என்று பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தேன். திடீரென்று க்ரீச்சென்று கார் வந்து நிற்கும் சத்தம். மெல்லத் திரும்பிப் பார்த்தால் வாசலில் அவர்.

‘ஜில்லு என்ன ஆச்சு?ன்னு பதறியபடி ஓடி வர்றார். நான் விஷயத்தை மென்னு விழுங்கிச் சொல்றேன். அப்படியே என்னை அணைத்து தாங்கியவாறு அழைத்து சென்று காருக்குள் உட்கார வைத்தார். கார் வெலிங்டன் நர்சிங் ஹோமை நோக்கிப் போகுது. அவர் தோளில் என் தலையைச் சாய்த்திருந்தேன். ‘நீங்க எப்படி திடீர்’னு கேட்கிறேன். காரை வேகமா ஓட்டிகிட்டே, ‘ஷூட்டிங் இன்னைய்க்கு இல்லை. போரடித்தது. சரி வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போடுவோம்னு நினைச்சேன். ஒடனே வந்துட்டேன்’ங்கிறார். நர்சிங் ஹோம் போன கையோடு லேபர் ரூமுக்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து என்னை அழைத்துக்கொண்டு ஓடினார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்வர்யா பிறந்தாள். நேரே குழந்தையை எடுத்துக்கொண்டு போய் அவர் கையில் கொடுக்கச் சொன்னேன். அத்தனை நேரமும் பதற்றத்துடன், யாரோடும் பேசாமல் வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார் என்றும், அந்த நேரத்தில் ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை என்றும் அப்புறமா தெரிஞ்சுகிட்டேன். டென்ஷனாக இருந்தால் நிச்சயம் சிகரெட் பிடிப்பீர்கள். எப்படி மூன்று மணி நேரம் சிகரெட் பிடிக்காமல் இருந்தீங்கன்னு கேட்டேன். சாதாரண டென்ஷனுக்குத்தான் சிகரெட் பிடிக்கத்தோணும். இது அதை எல்லாம் தாண்டிப் போய்விட்ட மகா டென்ஷன்’னார் சாவகாசமாக’.

இரண்டு குழந்தைகளுக்கு பிறகு சிலரைப் போல ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தம் இருக்கிறதா?

இல்லை. இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்வதும் நாட்டுக்கு செய்யும் சேவை என்பார் அவர். சிசேரியன் வேறு. மனைவியின் வயிற்றில் கத்தி. தையல், இதுவெல்லாம் தாங்க முடியவில்லை. இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையா என்று ரொம்ப அப்செட் ஆவார். எங்கள் ரெண்டு பேருக்குமே பெண் குழந்தைகள் அதிகமாகப் பிடிக்கும். ஆண் குழந்தை இல்லையே என்று ஒரு முறை கூட நினைத்தது இல்லை. ஒரு முறை அவரிடம், ‘உங்கள் பெரிய அக்காவும் திருமணமாகிப் போன பிறகு உங்கள் வீட்டில் எல்லோருமே ஆண்கள்தான். இப்போது அப்படியே உல்டா ஆகி விட்டது. இப்ப நம்ம வீட்டில் பெண்கள்தான் மெஜாரிட்டின்னு தமாஷ் பண்ணுவேன். எனக்கு அவரே ஒரு குழந்தை மாதிரிதான். இரண்டு பெண் குழந்தைகள் பேச்சு வரும்போது, ‘உங்களுக்குத்தான் இரண்டு பெண் குழந்தைகள். எனக்கு உங்களையும் சேர்த்து மூன்று குழந்தைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள்னு. உடனே தலை உயர்த்தி வாய்விட்டு சிரிப்பார்’

- பேசித் தெளிவோம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

23 hours ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்