திண்ணை: கனடாவின் செக்காவ் மறைவு

By செய்திப்பிரிவு

கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ சென்ற வாரம் காலமாகிவிட்டார். உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஆலிஸ், சிறுகதைகளுக்காக நோபல் பெற்ற முதல் எழுத்தாளர். ‘டான்ஸ் ஆஃப் தி ஹேப்பி ஷேட்ஸ்’ (Dance of the Happy Shades) என்கிற தனது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே கவனம்பெற்றவர் ஆலிஸ். “நான் ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதைதான் எனக்கு முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகரைத் திசை திருப்புகிறது. கதையின் மையத்திலிருந்து அவருடைய கவனம் வேறெங்கோ போய்விடுகிறது. வாசகரைக் கதையை ரசிக்கவைப்பதுதான் என் முதல் நோக்கம். அதற்கு இடைஞ்சலாக வரும் வசனங்களை, அவை எவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தாலும், நான் வெட்டிவிடுவேன்” என ஆலிஸ் மன்றோ, தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இவரது கதைகளின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். தமிழில் இவர், புதுமைப்பித்தன் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய எழுத்தாளர். ஆலிஸ் ‘தி பெக்கர் மெய்ட்: ஸ்டோரீஸ் ஆஃப் ஃப்ளோ அண்ட் ரோஸ்’ (The Beggar Maid: Stories of Flo and Rose) நூலுக்காக புக்கர் பரிசைப் பெற்றுள்ளார். இவர் ‘கனடாவின் செக்காவ்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பெண்கள் ஆளும் உலகம்: யுனெஸ்கோ அங்கீகாரம்

1905 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தைச் சேந்த எழுத்தாளர் பேகம் ருக்கையாவின் ‘சுல்தானா’ஸ் ட்ரீம்ஸ்’ கதையை யுனெஸ்கோஅமைப்பு ‘மெமரி ஆஃப் தி வேர்ல்டு’புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 1905இல் வெளிவந்த இந்தக் கதை பெண்களால் ஆளப்படும் ஒரு உலகைச் சித்தரிக்கிறது. அங்கு ஆண்களுக்கு அதிகாரம் இல்லை. பறக்கும் கார்கள்,ஆளில்லா விவசாயம் எனப் புதிய அறிவியல்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகைப் பெண்கள், தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். பெண் பலவீனமானவள். ஆண் புத்திசாலி, பலசாலி என்கிற கற்பிதத்தை இந்த நாவல் தன் அபரிதமான கற்பனையால் கிண்டல் செய்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE