இந்தியப் பிரதமர்களில் நரேந்திர மோடி – ஒரு தனி ரகம். அடுத்தடுத்து ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு; அவற்றை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிப்பு; அதற்கொப்ப ஒரு திடமான செயல்திட்டம்; அதற்கென்று தனியே ஒரு செயற்படை (வொர்க் ஃபோர்ஸ்) அனைத்திலும் மேலாய், திட்டத்தின் பயன்கள் நேரடியாய் பயனாளிகளைச் சென்றைடைவதை உறுதி செய்யும் செயல்முறை. இதுகான் பிரதமர் மோடியின் தனித்துவ பாணி. இதுதான் வெற்றிக்கான அவரது தனித் தந்திரம்.
நாட்டில் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாமல் செய்து, சின்னஞ்சிறு கிராமங்களிலும் சுகாதாரமான பாதுகாப்பான கழிப்பிடங்களைக் கட்டி முடித்து நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த சமூக அவமானத்தை முற்றிலுமாக நீக்கிய சாதனை, மேற்சொன்ன செயல்முறைக்கு ஒரு தலை சிறந்த உதாரணம். கடைக்கோடி கிராமத்துக்கும் மின்சார வசதி, எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி, கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 200 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டமை, பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளுக்கு இலவசமாக ஏற்றுமதி செய்தமை, 2020 தொடக்கத்தில் கரோனா பெருந்தொற்று ஆரம்ப நிலையில் இருந்து இந்த அத்தியாயம் எழுதப்படும் ஏப்ரல் 29 வரை, 80 கோடி மக்களுக்குப் பொது விநியோக முறையில் அரிசி / கோதுமை வழங்கி உலகின் ஆகப் பெரிய உணவுப் பாதுகாப்பு திட்டம் என்கிற சாதனை முயற்சி இப்படி இன்னும் பல உண்டு. நீட்டி விளக்கிச் சொன்னால், இக்கட்டுரைத் தொடரின் ‘நோக்கம்’ வேறாகி விடும். நிறுத்திக் கொள்வோம்.
அபாரமான செயல்திறனில் உலக வல்லரசுகளை வியக்க வைத்த, நெருக்கடி நேரத்தில் ஓடிச்சென்று உதவியதில் உலகத் தலைவர்களின் உள்ளம் கவர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐயத்துக்கிடமின்றி, மிகவும் செல்வாக்கு மிக்க அரசுத் தலைவராக சர்வதேச அரங்கில் உயர்ந்து நிற்கிறார். 2023 ஆகஸ்ட் 15 அன்று, பத்தாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடிமேற்றி வைத்துப் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை நாட்டு நலனை முன்னிறுத்திச் செய்த பல்வேறு சாதனைகளைப் பட்டியல் இடுகிறது. உரையின் முழு வடிவம் இதோ:
அன்பார்ந்த 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக, அதே போன்று மக்கள் தொகை அடிப்படையிலும் முதல் இடத்தில் நாம் இருப்பதாக நம்பப்படுகிறது. அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
» செங்கோட்டை முழக்கங்கள் 76 - ‘இந்த வேகம்... இவரின் அடையாளம்’ | 2022
» செங்கோட்டை முழக்கங்கள் 75 -‘தடுத்ததும் நாம்! தந்ததும் நாம்!’ | 2021
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, ஒத்துழையாமை / சட்டமறுப்பு / சத்தியாகிரக இயக்கம் ஆகியவற்றில் நமது 'பூஜ்யபாபு' என போற்றப்படும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தியடிகள், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற மாவீரர்கள் மற்றும் அவர்களின் தலைமுறையினர் நாட்டின் சுதந்திரத்துக்குப் பங்களிக்காதவர் யாரும் இல்லை. நமது சுதந்திரப் போராட்டத்தின் போது பங்களித்த மற்றும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த அனைவருக்கும் இன்று நான் மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். எங்களுக்கு ஒரு சுதந்திர தேசத்தை வழங்கியதில் அவர்களின் தியாகத்துக்குத் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன்.
ஆகஸ்ட் 15-ம் நாளான இன்று, ஆன்மீக வாழ்க்கையின் மாபெரும் புரட்சியாளரும் முன்னோடியுமான ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த நாளாகும். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 150-வது பிறந்த நாளும் இதுதான். இந்த ஆண்டு நமது தேசம், புகழ்பெற்ற பெண் போராளி ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாளை மிகவும் உற்சாகமாகக் கொண்டாட இருக்கிறது. ஆன்மீகத்தில் திளைத்த மீராபாய் அவர்களின் 525-வது ஆண்டு நிறைவையும் நாடு நினைவுகூர இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசின் 75-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட உள்ளது. புதிய உத்வேகங்கள், புதிய மனஉணர்வு, புதிய தீர்மானங்கள் ஆகியவற்றுடன், ஏராளமான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் இந்த நாளைவிட, தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பதற்கு வேறொரு பெரிய நாள் இருக்க முடியாது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இந்த முறை இயற்கைப் பேரழிவு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அனைத்துப் பிரச்சினைகளையும் விரைவில் தீர்த்து வைக்கும் என்று உறுதியளிக்கிறேன். அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, கடந்த சில வாரங்களில், குறிப்பாக வடகிழக்கில் உள்ள மணிப்பூரிலும், இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. பலர் உயிர் இழந்துள்ளனர். தாய்மார்கள் மற்றும் மகள்களின் கண்ணியம் காக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த சில நாட்களாக, அமைதி குறித்த தொடர்ச்சியான செய்திகளை நாங்கள் கேட்டு வருகிறோம். முழு தேசமும் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக உள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த சில நாட்களாக அமைதியைக் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்த அமைதியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது தீர்வுக்கான பாதை. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, வரலாற்றில், அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் செல்லும் தருணங்கள் உள்ளன. அவற்றின் தாக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும். சில நேரங்களில், இந்த நிகழ்வுகள் தொடக்கத்தில் சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றலாம், ஆனால் அவை பல சிக்கல்களுக்கான வேர்களை உருவாக்குகின்றன. 1000 - 1200 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டது. ஒரு சிறிய ராஜ்யமும் அதன் மன்னரும் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வு, இந்தியாவை ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் அப்போது அறிந்திருக்க முடியாது. நாம் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டோம், யார் வந்தாலும், நம்மைக் கொள்ளையடித்து, நம்மை ஆட்சி செய்தார்கள். அந்த ஆயிரம் ஆண்டு காலம் எவ்வளவு மோசமான காலகட்டமாக இருந்திருக்க வேண்டும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, ஒரு நிகழ்வு சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அதன் விளைவுகள் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். இன்று, நான் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், இத்தகைய காலக்கட்டத்தில், நாடு முழுவதம் உள்ள துணிச்சலான இந்தியாவின் ஆன்மாக்கள் சுதந்திரச் சுடரை, தொடர்ந்து கொண்டு செல்கின்றன, தியாக பாரம்பரியத்தை நிலை நிறுத்துகின்றன. சங்கிலிகளை உடைக்கவும், தளைகளைத் தகர்க்கவும் பாரத தாய் எழுந்து நின்றாள். சுதந்திரம் அடைவதற்கான தியாகங்களுக்கு மகளிர் சக்தி, இளையோர் சக்தி, கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுதந்திரக் கனவுக்காக வாழ்ந்த, சுவாசித்த, போராடிய ஒவ்வொரு இந்தியரும் ஒரு வலிமையான சக்தியாகத் தயாராக இருந்தனர். தமது இளமைப் பருவத்தை சிறைகளில் கழித்த எண்ணற்ற மகான்கள், அடிமைச் சங்கிலிகளை உடைக்கவும், நாட்டின் விடுதலைக்காகவும் அயராது பாடுபட்டனர்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, தியாகம் மற்றும் தவத்தின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய அந்தப் பரவலான உணர்வு, பொதுமக்களின் இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது. இதனால் நிறைவாக 1947 இல், நாடு சுதந்திரம் பெற்றது. அடிமைப்பட்டுக் கிடந்த ஆயிரம் ஆண்டு காலத்தில் வளர்த்து வந்த கனவு நிறைவேறியது. நண்பர்களே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைப் பற்றி, ஒரு காரணத்தோடே பேசுகிறேன். ஏற்கனவே, நாம் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தைப் போல், நம் நாட்டின் முன் இன்றைய காலத்தில் மற்றொரு வாய்ப்பைக் காண்கிறேன். இளமையான காலத்தில் நாம் வாழ்கிறோம் அல்லது 'அமிர்த காலத்தின்' முதல் ஆண்டில் பாரத அன்னையின் மடியில் தவழ்கிறோம் என்பது நல்வாய்ப்பாகும். எனது அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நாம் மேற்கொள்ளும் செயல்கள், நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நாம் செய்யும் தியாகங்கள், இந்த சகாப்தத்தில் நாம் மேற்கொள்ளும் தவம் ஆகியவை நமது பாரம்பரியத்தை வரையறுக்கும் என்ற எனது வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆரோக்கியம்; ஒன்றன்பின் ஒன்றாக நாம் முடிவுகளை எடுப்போம். அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான நாட்டின் பொற்கால வரலாறு அதிலிருந்து வெளிவரவிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுகள், அடுத்த 1,000 ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. அடிமை மனப்பான்மையில் இருந்து மீண்டு, ஐந்து உறுதிமொழிகளுக்கு அர்பணித்துக் கொண்டுள்ள நாடு, இன்று புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. புதிய தீர்மானங்களை நிறைவேற்ற முழு மனதுடன் நாடு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சக்தியின் மையமாக இருந்த, ஆனால் சாம்பல் குவியலுக்கு அடியில் புதையுண்டு இருந்த எனது பாரதத்தாய், 140 கோடி மக்களின் முயற்சியாலும், விழிப்புணர்வாலும், ஆற்றலாலும் மீண்டும் விழித்து எழுகிறாள். கடந்த 9 - 10 ஆண்டுகளில் இந்தியா மீது, இந்தியாவின் ஆற்றல் மீது, உலகம் முழுதும் ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய ஈர்ப்பு தோன்றியுள்ளது என்பதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். இந்தியாவில் இருந்து வெளிப்படும் இந்த ஒளிக்கற்றையில் உலகம் தனக்கான ஒரு தீப்பொறியைக் காண முடியும். உலகம் முழுதிலும் ஒரு புதிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.
நம் மூதாதையரிடம் இருந்து சில விஷயங்களைப் பெற்றிருப்பதாலும், தற்போதைய சகாப்தம் மேலும் சில அம்சங்களை உருவாக்கி உள்ளதாலும் நாம் அந்நல்வாய்ப்பு பெற்றவர்கள் ஆகிறோம். இன்று நம்மிடம் மக்கள்தொகை உள்ளது; ஜனநாயகம் உள்ளது; பன்முகத்தன்மை உள்ளது. மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். உலகெங்கிலும் நாடுகள் வயதான கட்டமைப்பைக் கண்டு வரும் நிலையில், இந்தியா தனது இளமையான கட்டமைபபுடன் சுறுசுறுப்பாக நகர்ந்து வருகிறது. இது மிகவும் பெருமைக்குரிய காலமாகும். ஏனெனில் இந்தியா இன்று, 30 வயதுக்கு உட்பட்ட மக்கள் தொகையை அதிகமாய் கொண்டுள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை, கோடிக்கணக்கான கைகளை, கோடிக்கணக்கான மூளைகளை, கோடிக்கணக்கான கனவுகளை, கோடிக்கணக்கான தீர்மானங்களைக் கொண்டுள்ளது! எனவே, எனது சகோதர சகோதரிகளே, எனது குடும்ப உறுப்பினர்களே, நாம் விரும்பிய நல்விளைவுகளை அடைந்தே தீருவோம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் நிலையை மாற்றுகின்றன. இந்த ஆற்றல் நாட்டின் நிலையை மாற்றுகிறது. 1,000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கும், வரவிருக்கும் 1,000 ஆண்டு மகத்தான எதிர்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் உள்ளோம். இந்தப் பாதையின் நடுவே இருக்கிறோம். இடையில் நிறுத்தவும் முடியாது, தயங்கவும் முடியாது. அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, ஒரு காலத்தில் இழந்த பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொண்டு, இழந்த செழிப்பை மீண்டும் பெறுவோம், நாம் என்ன செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், எந்த முடிவை மேற்கொண்டாலும், அது அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நமது திசையைத் தீர்மானிக்கும்; இந்தியாவின் தலைவிதியை எழுதும் என்று மீண்டும் நம்புவோம் என்பதை எனது நாட்டின் இளைஞர்களுக்கு, எனது நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்போது நமது இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது. நாம் இதனை இழக்கப் போவதில்லை. நமது இளைஞர் சக்தி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நமது இளைஞர் சக்தியில் அபாரமான வல்லமை மற்றும் திறன்கள் உள்ளன. நமது கொள்கைகளும் வழிகளும், ஏதுவான சூழலை நல்கும்.
இன்று நமது இளைஞர்கள் உலகின் முதல் மூன்று ஸ்டார்ட் - அப் பொருளாதார அமைப்புகளில் இந்தியாவை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவின் இந்த சக்தியைக் கண்டு உலக இளைஞர்கள் வியந்து போயுள்ளனர். இன்று உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, வரவிருக்கும் சகாப்தத்தில் தொழில்நுட்பம் செல்வாக்கு செலுத்த உள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் அமைகிறது. இதில் நாம் ஒரு புதிய, முக்கியமான பாத்திரம் ஏற்க இருக்கிறோம்.
நண்பர்களே, அண்மையில், ஜி-20 உச்சி மாநாட்டுக்காக ‘பாலி’ சென்றிருந்தேன். அங்கு நமது டிஜிட்டல் இந்தியாவின் நுணுக்கங்கள் மற்றும் வெற்றியைப் பற்றி அறிந்துகொள்ள உலகின் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த நாடுகளின் பிரதமர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்தியாவின் இந்த வியத்தகு சாதனை டெல்லி, மும்பை, சென்னை இளைஞர்களின் முயற்சிகளோடு நின்று விடவில்லை, 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களின் இளைஞர்களாமே என்று நான் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நமது திறமையைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். இன்று எமது இளைஞர்கள் சிறிய இடங்களில் இருந்து கூட, நாட்டின் புதிய ஆற்றலைக் காண்கிறார்கள் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன். அதனால்தான் சொல்கிறேன், நமது சிறிய நகரங்கள் அளவிலும் மக்கள்தொகையிலும் சிறியதாய் இருக்கலாம், ஆனால் அவை வெளிப்படுத்திய நம்பிக்கை மற்றும் விருப்பங்கள், முயற்சி மற்றும் தாக்கம் எதுவும் சிறியதாக இல்லை. பயன்பாடுகளை உருவாக்க, தீர்வுகளை வழங்க, தொழில்நுட்ப சாதனங்களை வடிவமைக்க, அவர்கள் புதுமையான யோசனைகள் கொண்டுள்ளனர்.
நமது விளையாட்டு உலகம் எப்படி வளர்ந்துள்ளது பாருங்கள். குடிசைப் பகுதிகளில் இருந்து வந்த குழந்தைகள் இன்று விளையாட்டு உலகில் வல்லமையைக் காண்பிக்கிறார்கள். இப்போது பாருங்கள், சிறிய கிராமங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த, நமது மகன்கள், மகள்கள் உலக அரங்கில் அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார்கள். நம் நாட்டில் 100 பள்ளிகளில் சிறார்கள், செயற்கைக்கோள்களை உருவாக்குகிறார்கள். அவற்றை ஒரு நாள் விண்ணில் ஏவவும் விரும்புகிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குகின்றன. இன்று, ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் லட்சக்கணக்கான குழந்தைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாதையைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கின்றன.
இன்று, வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. நீங்கள் விரும்பும் அளவுக்கு, இந்த நாடு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை எனது நாட்டின் இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். வானமே எல்லை. செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து, எனது நாட்டின் அன்னையர், சகோதரிகள், மகள்களுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது அன்னையர் மற்றும் சகோதரிகளின் சிறப்புத் திறமை மற்றும் போட்டித் தன்மையால், நமது நாடு இன்று சிறப்பான நிலையை எட்டியுள்ளது. இன்று நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. எனவே எனது விவசாய சகோதர சகோதரிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். இன்று என் நாட்டுத் தொழிலாளர்களுக்கும், சகோதரத்துவம் கொண்ட பல கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன். இன்று, நவீனத்தை நோக்கி நகரும் நாடு, உலகத்துக்கு நிகரான சக்தியுடன் காணப்படுகிறது. நம் நாட்டுத் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களின் அயராத முயற்சிகளை செங்கோட்டையில் இருந்து பாராட்ட சரியான தருணம் இது. அவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
எனது குடும்ப உறுப்பினர்களையும், எனது நாட்டின் 140 கோடி மக்களையும், தொழிலாளர்கள், சாலையோரத்து வியாபாரிகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் விற்பவர்களையும் நான் மதிக்கிறேன். எனது நாட்டை முன்னோக்கி நகர்த்துவதிலும், இந்தியாவை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதிலும் தொழில் வல்லுநர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், பல்கலைக்கழகங்கள், குருகுலங்கள் என அனைவரும் பாரத தாயின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க தங்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனர்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, தேசிய உணர்வு என்பது கவலைகளில் இருந்து நம்மை விடுவிக்கும் சொல்லாகும். இன்று, இந்த தேசிய உணர்வு, இந்தியாவின் மிகப் பெரிய வலிமையே இந்த தேசத்தின் நம்பிக்கைதான் என்பதை நிரூபித்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரின் மீதான நம்பிக்கை, அரசின் மீது ஒவ்வொரு நபரின் நம்பிக்கை, தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் நம்பிக்கை மற்றும் இந்தியா மீதான உலகின் நம்பிக்கை… இந்த நம்பிக்கை, எங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கானது. இந்த நம்பிக்கைக்குக் காரணம், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னெடுத்துச் செல்லும் உறுதியான நடவடிக்கைகளேயாகும்.
சகோதர சகோதரிகளே, அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இந்தியாவின் திறன்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உச்சங்களைக் கடக்கப் போகின்றன என்பது உறுதி. மேலும் திறன்கள் மற்றும் புதிய வலிமைகள் மீதான இந்தப் புதிய நம்பிக்கை வளர்க்கப்பட வேண்டும். இன்று, ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு நம் நாட்டுக்குக் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற பல்வேறு ஜி-20 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், சாமானிய மக்களின் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளது. இந்த நிகழ்வுகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் வியப்புடன் கவனித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியா மீதான ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஆவல் அதிகரித்து வருகிறது. அதேபோல, இந்தியாவின் ஏற்றுமதியும் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகெங்கும் உள்ள வல்லுநர்கள், இந்த அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியா இப்போது நிற்காது என்று கூறுகிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவைப் பாராட்டாத எந்தத் தரவரிசை நிறுவனமும் உலகில் இல்லை.
கரோனா காலத்துக்குப் பிறகு உலகம் புதிய முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கியது போலவே, கரோனாவுக்குப் பிறகு ஒரு புதிய உலக ஒழுங்கு, ஒரு புதிய பூகோள-அரசியல் சமன்பாடு வேகமாக முன்னேறி வருவதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. புவிசார் - அரசியல் சமன்பாடுகள், வரையறைகள் மாறி வருகின்றன. அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, மாறிவரும் உலகை வடிவமைப்பதில் 140 கோடி சக குடிமக்களின் திறன்களை உலகம் காண்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம். நீங்கள் ஒரு திருப்புமுனையில் நிற்கிறீர்கள்.
கரோனா காலத்தில், இந்திய நாட்டை முன்னோக்கி நகர்த்திய விதத்தில் நமது திறன்களை உலகம் பார்த்தது. உலகின் விநியோகத் தொடர்கள் சீர்குலைந்தபோதும், பெரிய பொருளாதாரங்கள் மீது அழுத்தம் ஏற்பட்டபோதும் கூட, உலகின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினோம். அது மனிதனை மையமாகக் கொண்டதாகவும், மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண முடியும். மனித உணர்வுகளை விட்டுவிட்டு உலக நலனை நம்மால் மேற்கொள்ள முடியாது என்பதை கரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது; உணர வைத்துள்ளது.
இன்று இந்தியா வளரும் நாடுகளின் குரலாக மாறி வருகிறது. இந்தியாவின் வளமும், பாரம்பரியமும் இன்று உலகத்துக்கான வாய்ப்புகளாக மாறி வருகின்றன. நண்பர்களே, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகத் தொடரில் இந்தியாவின் பங்களிப்போடு தனக்கான இடத்தையும் இந்தியா பெற்றிருப்பதன் மூலம், இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் நிலைத்தன்மைக்கான உத்தரவாதத்தைக் கொண்டு வந்துள்ளது என்று நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இப்போது நம் மனதிலோ, 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ, உலக மனதிலோ “இருந்தால்”, “ஆனால்” என்பதெல்லாம் இல்லை. முழு நம்பிக்கை உள்ளது.
அன்பார்ந்த நாட்டுமக்களே, இப்போது பந்து நமது களத்தில் உள்ளது; இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது; இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. இந்தியாவில் உள்ள எனது மக்களை நான் பாராட்டுகிறேன், ஏனெனில் எனது நாட்டு மக்கள், பிரச்சினைகளின் வேர்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டுள்ளனர். எனவே 30 ஆண்டு அனுபவத்துக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல, ஒரு நிலையான, வலுவான அரசு தேவை என்று எனது நாட்டு மக்கள் முடிவு செய்தனர்; முழுப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு தேவை. எனவே, நாட்டு மக்கள் ஒரு வலுவான, நிலையான அரசை அமைத்தனர். முப்பது ஆண்டுகளாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் நிர்பந்தங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்காக காலத்தின் ஒவ்வொரு கணத்தையும், மக்கள் பணத்தின் ஒவ்வொரு காசையும் செலவிடும் ஓர் அரசு இன்று நாட்டில் உள்ளது; எனது அரசு மற்றும் நாட்டு மக்களின் பெருமை ஓர் அம்சத்தில் இணைந்துள்ளது. நமது ஒவ்வொரு முடிவும், நமது ஒவ்வொரு திசையும் ஒரே அளவுகோலுடன் இணைந்துள்ளது. அது - 'தேசம் முதலில்'. இந்த நோக்கம், நீண்டகாலப் பயன்கள், நேர்மறையான முடிவுகளைத் தரும். நாட்டில் பெரிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நீங்கள் ஒரு வலுவான அரசை அமைத்தீர்கள். அதனால்தான் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் வந்தது என்று நான் சொல்ல விரும்புகிறேன். சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் ஊட்டிய அரசை நீங்கள் அமைத்தீர்கள்.
மோடி ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த போது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அரசின் ஒரு பகுதியாக செயல்படும் எனது அதிகார அமைப்பும் மக்களும் அவர்களின் கோடிக்கணக்கான கைகளும் கால்களும் 'மாற்றத்துக்காக செயல்பட்டன'. அவர்கள் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றினர், பொதுமக்கள் இணைந்தபோது, மாற்றத்தை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. அதனால்தான் 'சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்' என்ற இந்த காலக்கட்டம் இப்போது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகளின் அடித்தளத்தை வலுப்படுத்தப் போகும் அந்த சக்திகளை நாட்டுக்குள் நாம் ஊக்குவித்து வருகிறோம்.
உலகுக்கு இளைஞர் சக்தி, இளைஞர் திறன்கள் தேவை. திறன் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளோம். இது இந்தியாவின் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகின் தேவைகளையும் நிறைவு செய்யும். ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கினோம். அந்த அமைச்சகத்தின் அமைப்பை ஆராய்ந்தால், இந்த அரசின் மனதையும் மூளையையும் நீங்கள் மிகவும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர் சென்றடைவதை உறுதி செய்ய ஜல் சக்தி அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உணர்திறன் அமைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நம் நாடு கரோனாவை தைரியமாக எதிர்கொண்ட பிறகு, உலகம் முழுமையான சுகாதார பராமரிப்பைத் தேடுகிறது; இது காலத்தின் தேவையாகும்.
நாங்கள் ஆயுஷ் தனி அமைச்சகத்தை உருவாக்கினோம், இன்று யோகா மற்றும் ஆயுஷ், உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மீதான நமது அர்ப்பணிப்பு காரணமாக, உலகம் நம்மை உற்று நோக்குகிறது. நம்முடைய இந்தத் திறனை நாமே குறைத்து மதிப்பிட்டால், உலகம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? ஆனால் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டபோது, உலகமும் அதன் மதிப்பைப் புரிந்துகொண்டது. மீன்வளத்தையும், நமது பெரிய கடற்கரைகளையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. கோடிக்கணக்கான மீனவ சகோதர, சகோதரிகளின் நலனை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர், அதனால்தான் சமூகத்தின் அந்தப் பிரிவினருக்கும் பின்தங்கிய சமூகத்துக்கும் ஆதரவளிக்கும் வகையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகியவற்றுக்கு ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்.
நாட்டில் அரசுப் பொருளாதாரத்தின் சில பகுதிகள் உள்ளன. ஆனால் சமூகப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி கூட்டுறவு இயக்கமாகும். கூட்டுறவு அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஏழைகளிலும் ஏழைகளின் குறைகளுக்கு செவி சாய்க்கப் படுகிறது. அவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப் படுகின்றன. அவர்களும் ஒரு சிறிய அலகின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் பங்களிக்க முடிகிறது. ஒத்துழைப்பின் மூலம் செழிப்பான பாதையை நாம் பின்பற்றினோம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, கடந்த 2014-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நாம், இன்று 140 கோடி நாட்டு மக்களின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்து, உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தை எட்டியுள்ளோம். நாடு ஊழலின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டிருந்த நேரத்தில், நல்ல நிர்வாகத்தை நாடு மேற்கொண்டது. கசிவுகளைத் தடுத்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியது. ஏழைகளின் நலனுக்காக மேலும் மேலும் பணத்தை செலவிட முயற்சி செய்தோம். இன்று, நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாடு பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும்போது, அது கருவூலத்தை மட்டும் நிரப்பாது; அது குடிமக்கள் மற்றும் தேசத்தின் திறனை உருவாக்குகிறது. பணத்தை நேர்மையாகத் தனது குடிமக்களின் நலனுக்காக செலவிட உறுதிமொழி எடுக்கும் ஓர் அரசு இருந்தால், எந்த நல்விளைவையும் எட்ட முடியும்.
நமது மூவண்ணக் கொடி சாட்சியாக நிற்கும் இந்த செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து எனது நாட்டு மக்களுக்கு 10 ஆண்டுக் கணக்கை அளிக்கிறேன். நீங்கள் கேட்கும் புள்ளிவிவரங்கள் மாற்றத்தின் அழுத்தமான கதையைச் சொல்கின்றன. மேலும் இது எவ்வாறு அடையப்பட்டது, இத்தகைய மாற்றத்தை எளிதாக்குவதற்கான எங்கள் திறன் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். 10 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசிடம் இருந்து, 30 லட்சம் கோடி ரூபாய், மாநிலங்களுக்குச் சென்றது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த அளவு 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து 70,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், இன்று அது 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பு, ஏழைகளின் வீடுகளைக் கட்ட 90,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்று இது 4 மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகளுக்காக வீடுகள் கட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்செலவிடப்படுகிறது.
முதலில் ஏழைகளுக்கு மலிவான யூரியா கிடைக்க வேண்டும். சில உலகளாவிய சந்தைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகளை, 300 ரூபாய்க்கு நம் விவசாயிகளுக்கு வழங்குகிறோம், எனவே நமது விவசாயிகளுக்கு யூரியாவுக்கு அரசு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட முத்ரா திட்டம், நம் நாட்டின் இளைஞர்களுக்கு சுயதொழில், வணிகம், தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சுமார் எட்டு கோடி பேர் புதிய தொழில் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர். முத்ரா திட்டத்தின் மூலம் 8 முதல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் எட்டப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடியின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டு அவை மூடப்படுவதை தடுத்து அவற்றுக்கு வலுசேர்க்கப்பட்டது. நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் "ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்" திட்டத்தின் கீழ், இந்தியாவின் கருவூலத்தில் இருந்து 70,000 கோடி ரூபாய் அவர்களை சென்றடைந்து உள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இத்தொகை கிடைத்துள்ளது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் தாம். நான் அதிக நேரம் எடுக்க விரும்பவில்லை. முன்பை விட பல்வேறு பிரிவுகளில் பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துள்ளதால் நாட்டின் வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
என் அன்புக்கு உரியவர்களே, இது மட்டும் போதாது; இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக எனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 13.5 கோடி ஏழை சகோதர சகோதரிகள் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டு புதிய நடுத்தர வர்க்கத்துக்குள் நுழைந்துள்ளனர் . வாழ்க்கையில் இதை விடப் பெரிய மனநிறைவு இருக்க முடியாது. அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, வீட்டுவசதித் திட்டங்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கியமை; இன்னும் பல திட்டங்கள், 13.5 கோடி மக்களை வறுமையின் இன்னல்களில் இருந்து மீட்க உதவியுள்ளன.
வரும் நாட்களில், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். சுமார் 13 - 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கும் விஸ்வகர்மா யோஜனா மூலம் நெசவாளர்கள், தச்சர்கள், பொற்கொல்லர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
பிரதமரின் கிசான் சம்மன் நிதி (விவசாயிகள் கவுரவ நிதி) மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 2.5 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளோம். ஜல் ஜீவன் இயக்கத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவு துள்ளோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்கிறோம். ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழைகளின் சுமையை நாங்கள் குறைத்துள்ளோம். அவர்களுக்கு மருத்துவம், சிகிச்சை மற்றும் தரமான மருத்துவமனை பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். கரோனா நெருக்கடியின் போது இலவசத் தடுப்பூசிகள் வழங்க 40,000 கோடி ரூபாய் செலவு செய்ததை நாடு அறியும். கால்நடைகளைக் காப்பாற்றும் தடுப்பூசிக்காக சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
அன்பார்ந்த குடிமக்களே, என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே, ஜன் அவுஷதி எனப்படும் மக்கள் மருந்தக மையங்கள் நமது நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் புதிய வலிமையை அளித்துள்ளன. கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவருக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை மருந்து வாங்குவது இயல்பு. சந்தையில் ரூ.100 மதிப்புள்ள மருந்துகளை வெறும் ரூ.10, ரூ.15, ரூ.20-க்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் வழங்குகிறோம். இன்று, நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தக மையங்கள் மூலம், இந்த வகையான நோய்களுக்கு மருந்துகளை வாங்கும் இந்த மக்களால் சுமார் ரூ.20 கோடி சேமிக்கப் பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்று அதன் வெற்றியைப் பார்க்கும்போது, விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சமூகத்தின் அந்தப் பிரிவினரை நாம் தொடப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதே நேரத்தில், தற்போது நாடு முழுவதும் 10,000-ஆக உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை வரும் நாட்களில் 25,000-ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நாட்டில் வறுமை குறையும்போது, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரின் அதிகாரம் பன்மடங்கு அதிகரிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் நாடு, முதல் மூன்று உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று மோடியாகிய நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் உறுதியளிக்கிறேன்; நிச்சயமாக இருக்கும். இன்று வறுமையில் இருந்து மீண்ட 13.5 கோடி மக்கள் ஒருவகையில் நடுத்தர வர்க்கத்தினராக மாறியுள்ளனர். ஏழைகளின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினரின் வியாபாரம் செய்யும் சக்தியும் அதிகரிக்கிறது. கிராமங்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது, நகரம் மற்றும் நகரத்தின் நிதி அமைப்பு வேகமாக இயங்குகிறது. நமது பொருளாதார சுழற்சி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அதை வலுப்படுத்துவதன் மூலம் முன்னேற விரும்புகிறோம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நகரங்களில் வாழும் நலிவடைந்த பிரிவினர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் சொந்த வீடு வாங்க கனவு காண்கின்றனர். நகரங்களில், வாடகை வீடு, அல்லது குடிசைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பயன் தரும் ஒரு புதிய திட்டத்தை வரும் ஆண்டுகளில் கொண்டு வர இருக்கிறோம். சொந்த வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வட்டியில் நிவாரணம் மற்றும் வங்கிகளில் கடன் வழங்கி, லட்சக்கணக்கில் சேமிக்க உதவுவோம். நடுத்தரக் குடும்பத்துக்கான வருமான வரி வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டால், மாத ஊதியம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனளிக்கும். 2014-க்கு முன்பு இணையத் தரவு மிக விலை உயர்ந்ததாக இருந்தது. இப்போது உலகின் மலிவான இன்டர்நெட் டேட்டா நம்மிடம் உள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் பணமும் சேமிக்கப் படுகிறது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, கரோனாவின் மோசமான பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை; இந்த யுத்தம் மீண்டும் ஒரு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைக்கிறது. உலகெங்கிலும் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கிறோம். ஆனால், நாம் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த உலகமே பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, நாம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். இதில் நாம் நிறைவடைய முடியாது. நமது விஷயங்கள் உலகத்தை விட சிறந்தவை என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது. எனது நாட்டு மக்கள் மீதான பணவீக்கத்தின் சுமையைக் குறைக்க இந்த திசையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து எடுப்போம். எனது முயற்சி தொடரும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இன்று நாடு பல்வேறு திறன்களுடன் முன்னேறி வருகிறது. நாடு நவீனத்தை நோக்கி நகர்வதற்குப் பாடுபட்டு வருகிறது. இன்று நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது; இன்று நாடு பசுமை ஹைட்ரஜனில் செயல்படுகிறது; விண்வெளித் துறையில் நாட்டின் திறன் அதிகரித்து வருகிறது. ஆழ்கடல் திட்டத்திலும் நாடு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. நாட்டில் ரயில்வே துறை நவீனப்பட்டு வருகிறது. வந்தே பாரத் புல்லட் ரயில் இன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இன்று நாட்டில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. குவாண்டம் கம்ப்யூட்டரை நாமும் விரும்புவதால் இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இணையம் கடைசி மைலையும் எட்டுகிறது. ஒருபுறம் நேனோ யூரியா, நேனோ டிஏபி ஆகியவை உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் இயற்கை விவசாயத்தையும் வலியுறுத்தி வருகிறோம். செமிகண்டக்டர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இன்று உழவர் உற்பத்தியாளர் சங்க செயலி உருவாக்கப் பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான, அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க நாம் பணியாற்றும் அதே வேளையில், பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூவண்ணக் கொடியை பெருமையுடன் ஏற்றுவதற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகிறோம். இந்த வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறோம். இன்று, பழைய சிந்தனையை, பழைய நோக்கத்தை விட்டுவிட்டு, இந்த எதிர்கால இலக்குகளை அடையும் நோக்கில் இந்தியா முன்னேறி வருகிறது. எங்கள் அரசால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள், எங்கள் ஆட்சியிலேயே தொடங்கி வைக்கப்படுகிறது என்று கூறிக் கொள்கிறேன். இதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதையும் கடந்து, பல திட்டங்களைத் தொடங்கி வைக்க, அடிக்கல் நாட்ட வாய்ப்பு கிடைத்திருப்பதை நான் பெரும் பேறாக உணர்கிறேன்.
லட்சிய மனப்பான்மை, பெரிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது பணிக் கலாச்சாரம், அனைவருக்கும் மகிழ்ச்சி (சர்வஜன் ஹிதாயா), அனைவருக்கும் ஆரோக்கியம் (சர்வஜன் சுகாயா) என்ற தாரக மந்திரத்தில் நம் பணிகளின் பாணி அப்படி இருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு தீர்மானம எடுப்பதைக் காட்டிலும் அதில் எவ்வாறு சாதிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் 75 ஆயிரம் அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) உருவாக்க முடிவு செய்திருந்தோம். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) அமைக்க முடிவு செய்திருந்தோம். அதன்படி சுமார் 50-55 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால் இன்று சுமார் 75,000 அமிர்த நீர்நிலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இது ஒரு மிகப்பெரிய பணி. மனிதவளம் மற்றும் நீர் சக்தியின் இந்த வலிமை இந்தியாவின் சுற்றுச்சூழல் வளத்தைப் பாதுகாக்கவும் பயனுள்ளதாக இருக்கும். 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குதல், மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டுதல் என அனைத்து இலக்குகளும் முழுவீச்சில் நிறைவேற்றப்படும்.
இந்தியா ஒரு முடிவை எடுத்து விட்டால், அதை நிறைவேற்றுகிறது. இதைத்தான் எங்கள் செயல் வடிவம் எடுத்துக் காட்டுகிறது. 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தி, உலகுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. 200 கோடி என்ற எண்ணிக்கை அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனது நாட்டின் அங்கன்வாடி ஊழியர்கள், எங்கள் ஆஷா பணியாளர்கள் மற்றும் எங்கள் சுகாதார ஊழியர்கள் இதை சாத்தியம் ஆக்கியுள்ளனர். இதுதான் நம் நாட்டின் பலம். நாங்கள் 5-ஜி அறிமுகப்படுத்தினோம். உலகிலேயே அதிவேகமாக 5-ஜி-யை அறிமுகப்படுத்திய நாடு நமது நாடு. நாங்கள் 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அடைந்துள்ளோம். இப்போது 6-ஜி-க்கும் தயாராகி வருகிறோம்.
நாம் ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நாம் நிர்ணயித்த இலக்கை எட்டி அதனைக் கடந்து விட்டோம். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் நிர்ணயித்த இலக்கு 2021-22ம் ஆண்டில் நிறைவடைந்தது. பெட்ரோலுடன் எத்தனால் 20 சதவீதம் கலப்பது பற்றிப் பேசினோம், அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடித்துள்ளோம். 500 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கும் இது பொருந்தும், இது குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு 500 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது.
25 ஆண்டுகளாக நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்த ஒன்றை நிறைவேற்ற வேண்டும், நமது நாட்டுக்கு ஒரு புதிய நாடாளுமன்றம் தேவை; இப்போது அது தயாராக உள்ளது. புதிய நாடாளுமன்றம் அமைய வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்ததில்லை. அன்பான சகோதர, சகோதரிகளே, புதிய நாடாளுமன்றம் முன்கூட்டியே தயாராக இருப்பதை உறுதி செய்தவர் மோடி. இது உழைக்கும் அரசு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டும் அரசு, இது ஒரு புதிய இந்தியா, இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா, இது தனது தீர்மானங்களை நனவாக்கக் கடுமையாக உழைக்கும் இந்தியா. எனவே இந்த இந்தியா தடுக்க முடியாதது, இந்த இந்தியா ஓய்வில்லாதது, இந்த இந்தியா சோர்வடையாதது, இந்த இந்தியா விட்டுக் கொடுக்காதது.
அதனால்தான், அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, பொருளாதார வலிமையால் நமது தொழிலாளர் படைக்கு புதிய பலம் கிடைத்துள்ளது, நமது எல்லைகள் முன்பை விட மிகவும் பாதுகாப்பானதாய் மாறியுள்ளன; நம் வீரர்கள் எல்லைகளில் கவனத்துடன் செயல்படுகின்றனர். இந்த சுதந்திர தின நன்னாளில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கும், நமது உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான சீருடைப் படையினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் ஒரு ராணுவத் தீர்ப்பாயத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதிகாரமளிக்கப்பட வேண்டும், இளமையாக இருக்க வேண்டும், போருக்கு ஆயத்தமாகவும், தயாராகவும் இருக்க வேண்டும், அதனால்தான் நமது ஆயுதப் படைகளுக்குள் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, அங்குமிங்கும் குண்டுவெடிப்புகள் நடப்பதாக தினமும் கேள்விப்பட்டு வந்தோம். எல்லா இடங்களிலும், சந்தேகத்துக்குரிய பைகளைத் தொட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கும் பலகைகள் இருந்தன, மேலும் அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டன. இன்று, தேசம் ஒரு பாதுகாப்பு உணர்வை அனுபவித்து வருகிறது, தேசம் பாதுகாக்கப் படும்போது, முன்னேற்றம் குறித்த புதிய கனவுகளை நனவாக்க உதவும் அமைதி நிலவுகிறது. தொடர் குண்டுவெடிப்புகளின் சகாப்தம் இப்போது கடந்த காலமாகி விட்டது. அதன் விளைவாக அப்பாவிகள் இறந்தது இப்போது வரலாற்றின் ஒரு பகுதி விட்டது. நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளிலும், பெரும் மாற்றம் ஏற்பட்டு, பெரிய மாற்றத்துக்கு உகந்த சூழல் உருவாகி உள்ளது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, ‘2047-ல், வளர்ச்சி பெற்ற இந்தியா’ என்ற கனவுடன் நாம் முன்னேறும்போது, அது வெறும் கனவு மட்டுமல்ல, 1.4 பில்லியன் குடிமக்களின் தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற, கடின உழைப்பு அவசியம். நமது தேசியப் பண்பு மிக முக்கியமான சக்தியாகும். முன்னேறிய நாடுகள், சவால்களை வென்ற நாடுகள், அனைத்தும் ஒரு முக்கியமான ஊக்கியைக் கொண்டுள்ளன - அவற்றின் தேசியத் தன்மை. நாமும் நமது தேசியத் தன்மையை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நமது தேசம், நமது தேசியத் தன்மை, ஆற்றல்மிக்க, துடிப்புமிக்க, கடின உழைப்பாளியாக, வீரம் செறிந்து சிறந்ததாக இருத்தல், நமது கூட்டுப் பொறுப்பு ஆகும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு, நமது தேசிய குணத்தின் உச்சமாக இருக்க வேண்டிய ஒரே ஒரு மந்திரத்தை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த செய்தியுடன் நாம் முன்னேற வேண்டும், இந்தியாவின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பேச்சையும் செயலையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கணமும், நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வதற்கான எனது முயற்சிகளைத் தொடர்வேன். இந்தியாவின் ஒற்றுமை நமக்கு வலிமை தருகிறது.
வடக்கு அல்லது தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு, கிராமம் அல்லது நகரம், ஆண் அல்லது பெண் என நாம் அனைவரும் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை உணர்வுடன் நம் நாட்டின் வலிமைக்குப் பங்களிக்கிறோம். நான் கவனிக்கும் இரண்டாவது முக்கியமான அம்சம் என்னவென்றால், 2047-க்குள் நமது நாட்டை வளர்ந்த இந்தியாவாகப் பார்க்க விரும்பினால், 'உன்னத இந்தியா' என்ற தாரக மந்திரத்தின்படி நாம் வாழ வேண்டும். இப்போது நமது தயாரிப்பைப் பற்றிப் பேசுகையில், நான் 2014 இல் சொன்னேன், "குறைவு இல்லை – விளைவு இல்லை (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்)". உலகின் எந்த மேஜையிலும் "மேட் இன் இந்தியா" தயாரிப்பு இருந்தால், இதை விட சிறந்தது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை உலகுக்கு இருக்க வேண்டும். இதுவே இறுதியானதாக இருக்கும். நமது உற்பத்தி, நமது சேவைகள், நமது சொற்கள், நமது நிறுவனங்கள், நமது முடிவெடுக்கும் செயல்முறைகள் என அனைத்தும் உன்னதமாக இருக்கும். அப்போதுதான் மேன்மையின் சாராம்சத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மூன்றாவது அம்சம் என்னவென்றால், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் கூடுதல் சக்தி, நாட்டை மேலும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இன்று, உலகில் எந்த நாட்டிலேனும் சிவில் விமானப் போக்குவரத்தில் அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகள் உள்ளனர் என்றால், அது நம் நாடு என்று இந்தியா பெருமையுடன் கூறலாம். சந்திரயானின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, நிலவுப் பயணமாக இருந்தாலும் சரி, நம் பெண் விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர்.
இன்று இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உருவாக்கும் நோக்கத்துடன், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். நமது மகளிர் சக்தியின் திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். ஜி-20 அமைப்பில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற விஷயத்தை நான் முன்வைத்தபோது, ஒட்டுமொத்த ஜி-20 குழுவும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதேபோல, பன்முகத்தன்மை நிறைந்த நாடு இந்தியா. சமச்சீரற்ற வளர்ச்சிக்கு நாம் பலியாகி இருக்கிறோம். நம் நாட்டின் சில பகுதிகள் அந்நியப்படுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இப்போது நாம் சமச்சீரான வளர்ச்சிக்கான மண்டல விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; மண்டல விருப்பங்கள் தொடர்பான உணர்வுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்.
நமது பாரதத்தின் எந்தவொரு பகுதி வளர்ச்சியற்று இருந்தாலும் நமது உடல் முழுமையாக வளர்ச்சி அடைந்ததாகக் கருத முடியாது. நமது உடலின் எந்தவொரு பகுதியும் பலவீனமாக இருந்தால், நாம் ஆரோக்கியமாக கருதப்பட மாட்டோம். அதுபோல, நம் பாரதத்தின் எந்தவொரு பகுதியும், அல்லது சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் பலவீனமாக இருந்தால், பாரதத் தாயை ஆரோக்கியமானவராக, திறமையானவராக நாம் கருத முடியாது. அதனால்தான் மண்டல விருப்பங்களை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும், அதனால்தான், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மண்டலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு மண்டலமும்மும் அதன் திறனை அடைவதற்கான வாய்ப்பு பெறுவதை உறுதி செய்வதற்கான திசையில் முன்னேற விரும்புகிறோம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இந்தியா- ஜனநாயகத்தின் தாய். இந்தியா, பன்முகத்தன்மையின் முன்மாதிரி. பல மொழிகள், பல பேச்சுவழக்குகள், பல்வேறு உடைகள் உள்ளன. எல்லாவற்றின் அடிப்படையிலும் நாம் முன்னேற வேண்டும். அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, ஒற்றுமை பற்றிப் பேசும்போது… மணிப்பூரில் ஒரு சம்பவம் நடக்கும்போது, அதன் வலி மகாராஷ்டிராவில் உணரப்படுகிறது; அசாமில் வெள்ளம் புகுந்தால், கேரளா அமைதியற்றதாக மாறும். இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் விரும்பத்தகாத ஏதாவது நடந்தால், வலியை நாம் உணர்கிறோம். என் நாட்டின் மகள்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நமது சமூகப் பொறுப்பு ஆகும். இது நமது குடும்பப் பொறுப்பும், ஒரு நாடு என்ற முறையில் நம் அனைவரின் பொறுப்பும் ஆகும். குரு கிராந்த் சாஹிப்பின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும்போது, முழு நாடும் பெருமிதம் கொள்கிறது. உலகின் எந்த நாட்டிலும், கொரோனா காலத்தில், என் சீக்கிய சகோதரர் ஒருவர், லங்கார் (உணக்கூடம்) அமைத்து, பசித்தவர்களுக்கு உணவளிக்கும் போது, உலகமே கைதட்டினால், இந்தியா பெருமை கொள்கிறது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, சமீபத்தில் ஒரு நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு மூத்த அமைச்சர் - "உங்கள் நாட்டு மகள்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களைப் படிக்கிறார்களா?" என என்னிடம் கேட்டார். அதற்கு நான், இன்று எங்கள் நாட்டில் ஆண் குழந்தைகளை விட அதிகமான மகள்கள் (பெண் பிள்ளைகள்) ஸ்டெம் (STEM) அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் பயின்று அவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர் என்று அவரிடம் சொன்னேன். அதில் என் மகள்கள் அதிக பங்கு வகிக்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டின் இந்தத் திறன் இன்று உலகுக்குத் தெரிகிறது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஈடுபட்டுள்ளனர், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் ஒரு கிராமத்துக்குச் சென்றால், வங்கித் தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் சகோதரிகளைக் காணலாம். இப்போது கிராமங்களில் 2 கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு. இப்போது அதற்கான புதிய விருப்பங்கள் உள்ளன, அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். நம் கிராமங்களில் உள்ள பெண்களின் திறனை என்னால் பார்க்க முடிகிறது, அதனால்தான் நான் ஒரு புதிய திட்டத்தைப் பற்றி யோசிக்கிறேன். இதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு நமது விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு திறன் பயிற்சி அளித்து ட்ரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பயிற்சி அளிப்போம். இதுபோன்ற ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு, ட்ரோன்களை வழங்கும். நமது விவசாயப் பணிகளுக்கு ட்ரோன் சேவைகள் கிடைக்கச் செய்வோம். முதற்கட்டமாக, 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குவோம், இது வலுவான ட்ரோன் பயிற்சி இயக்கத்தை செயல்படுத்தும் கனவை நனவாக்கும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இன்று நாடு நவீனத்தை நோக்கி முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலை, ரயில்வே, வான்வழி, ஹைவேஸ், தகவல் வழிகள், நீர் வழிகள் என நாடு முன்னேறாத துறைகளே இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் கடலோரப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். பர்வத் மாலா, பாரத் மாலா போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமூகத்தின் இந்தப் பிரிவினருக்கு வலிமை சேர்த்துள்ளோம். நமது வளமான கிழக்கு இந்தியாவை எரிவாயு குழாய்கள் மூலம் பிரதானப்படுத்தும் பணியை உறுதி செய்துள்ளோம்.
மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுகாதார உட்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். மருத்துவர்களாக நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நமது குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (இளநிலை மருத்துவம்) இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளோம். தாய்மொழியில் கல்வி வழங்க பரிந்துரைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். நீதிமன்றம் செல்வோர், தீர்ப்பைக் கேட்கவும், அவரவர் தாய்மொழியில் செயல்பாட்டுப் பங்கைப் பெறவும் வழிவகை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இன்றைய காலகட்டத்தில் தாய்மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே,இன்று நம் நாட்டின் எல்லை கிராமங்களுக்கு, துடிப்பான எல்லை கிராமம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் எல்லை கிராமங்கள் இதுவரை நாட்டின் கடைசி கிராமமாக கருதப்பட்டன. நாங்கள் முழு சிந்தனையை, செயல்முறையை மாற்றியுள்ளோம். இது நாட்டின் கடைசி கிராமம் அல்ல. எல்லையில் இருக்கும் கிராமங்கள்தான் என் நாட்டின் முதல் கிராமம். சூரியன் கிழக்கில் உதிக்கும் போது, இந்தப் பக்கத்தில் உள்ள கிராமம் சூரிய ஒளியின் முதல் ஒளியைப் பெறுகிறது. சூரியன் மறையும் போது, கடைசிக் கதிர்களின் பலனை மறுபுறம் உள்ள கிராமம் அறுவடை செய்கிறது. இது எனது முன்னணி கிராமம், இன்று இந்த நிகழ்ச்சியில் எனது சிறப்பு விருந்தினர்கள் – இந்த, முதல் கிராமங்கள், எல்லை கிராமங்களில் இருந்து வந்தவர்கள். இந்த முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வந்துள்ள 600 தலைவர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் முதன்முறையாக இவ்வளவு தூரம் பயணித்து புதிய உறுதியுடனும், ஆற்றலுடனும், வீரியத்துடனும், உறுதிப்பாட்டுடனும் இணைந்துள்ளனர்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, சமச்சீரான வளர்ச்சியை மீட்டெடுக்க, முன்னேற விரும்பும் மாவட்டம் மற்றும் முன்னேற விரும்பும் தொகுதியைக் கற்பனை செய்தோம், அதன் சாதகமான முடிவுகளை இன்று காணலாம். இன்று, மாநிலங்களின் இயல்பான அளவுகோல்களுடன், ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இந்த முன்னேற விரும்பும் மாவட்டங்கள் சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளன. எதிர்வரும் காலங்களில், முன்னேற விரும்பும் மாவட்டங்களும், முன்னேற விரும்பும் தொகுதிகளும் நிச்சயமாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் தன்மையைப் பற்றிப் பேசும்போது, முதலில் இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டேன்; இரண்டாவதாக, இந்தியா சிறந்து விளங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன், மூன்றாவதாக, பெண்கள் மேம்பாடு பற்றிப் பேசினேன்.
இன்று, நான் இன்னும் ஓர் அம்சத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நான்காவதாக - மண்டல விருப்பங்கள். ஐந்தாவது முக்கியமான அம்சம் - இந்தியாவின் தேசியத் தன்மை. நாம் இந்த திசையில் முன்னேறி வருகிறோம். நமது தேசியத் தன்மை உலகத்தின் மேம்பாடு குறித்து சிந்திக்க வேண்டும். உலக நலனுக்காகத் தனது பங்கை ஆற்றக்கூடிய அளவுக்கு நாட்டை வலுவானதாக மாற்ற வேண்டும். கொரோனா போன்ற உலகளாவிய நெருக்கடியைக் கையாண்ட பிறகு, உலகுக்கு உதவும் நாடாக நாம் எழுந்து நின்ற பிறகு, அதன் விளைவாக, நம் நாடு இப்போது உலகின் நண்பன் என்ற வடிவம் பெற்றுள்ளது.
உலகின் அசைக்க முடியாத நட்பு நாடாக இந்தியா இன்று தனது அடையாளத்தை நிலை நிறுத்தி உள்ளது. உலகளாவிய நலனைப் பற்றிப் பேசும்போது, அந்த எண்ணத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்தியாவின் அடிப்படை சிந்தனை ஆகும். ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சியில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மதிப்புக்குரிய பல பிரதிநிதிகள் நம்மிடையே கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவின் பார்வை என்ன, உலகளாவிய நலன் என்ற கருத்தை நாம் எவ்வாறு முன்னெடுக்கிறோம்? இப்படி நாம் சிந்திக்கும்போது, நாம் என்ன சொல்கிறோம்? இந்தப் பார்வையை நாம் உலகுக்கு வழங்கியுள்ளோம், உலகமும் இந்தப் பார்வையுடன் நம்மோடு இணைகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்பு" என்று கூறினோம். இது நம்மிடம் இருந்து வந்த குறிப்பிடத்தக்க அறிக்கை, இன்று உலகம் இதனை ஏற்றுக் கொள்கிறது. கரோனாவுக்குப் பிறகு, நமது அணுகுமுறை "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" என்று இருக்க வேண்டும் என்று உலகுக்குச் சொன்னோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் நோய்வாய்ப்பட்ட காலங்களில் சமமாக கவனிக்கப்பட்டால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
‘ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருத்தை ஜி 20 மாநாட்டில் முன்வைத்து, அந்த திசையில் செயல்பட்டு வருகிறோம். உலகம் பருவநிலை நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் வழி காட்டியுள்ளோம்; சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை - மிஷன் லைஃப் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளோம். நாம் உலகத்துடன் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை உருவாக்கியுள்ளோம், பல நாடுகள் இப்போது சர்வதேச சூரிய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளோம், மேலும் புலி இனத்தைக் காப்பாற்ற, ‘பெரிய பூனை கூட்டணி’ அமைப்பதை முன்னெடுத்துள்ளோம்.
இயற்கைப் பேரழிவுகளால், புவி வெப்பமயமாதலால் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதத்துக்கு, நீண்டகால ஏற்பாடுகள் தேவை. எனவே, ஒரு தீர்வாக, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை (சி.டி.ஆர்.ஐ) அறிமுகப்படுத்தி உள்ளோம். உலகம் தற்போது கடல்களில் மோதல்களைக் கண்டு வரும் நிலையில், உலகளாவிய கடல்சார் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய "சாகர் பிளாட்பார்ம்" என்ற கருத்தை உலகுக்கு வழங்கியுள்ளோம். பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி, உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ) உலகளாவிய மையத்தை இந்தியாவில் நிறுவ நாங்கள் பணியாற்றி வருகிறோம். யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம், உலகளாவிய நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்காகப் பணியாற்றியுள்ளோம். இன்று, உலகளாவிய நலனுக்காக இந்தியா ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இதன் அடித்தளத்தைக் கட்டியெழுப்புதல் நமது கூட்டுப் பொறுப்பு ஆகும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, எங்களிடம் பல கனவுகள், தெளிவான தீர்மானங்கள் மற்றும் திட்டவட்டமான கொள்கைகள் உள்ளன. நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இருப்பினும், நாம் சில உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றின் தீர்வுகளை நோக்கிச் செயல்பட வேண்டும். எனவே, என் அன்பான குடும்ப உறுப்பினர்களே, உங்கள் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற நான் இன்று செங்கோட்டைக்கு வந்துள்ளேன், ஏனென்றால் சமீப ஆண்டுகளில், நான் நாட்டின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன் தேவைகளை மதிப்பீடு செய்துள்ளேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், இந்த அம்சங்களைத் தீவிரமாக அணுக வேண்டும் என்று கூறுகிறேன். 2047 இல் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் 'அமிர்த காலம்' போது, மூவண்ணக் கொடி, ‘வளர்ந்த இந்தியா’ கொடியாக இருக்க வேண்டும். ஒரு கணம் கூட நாம் ஓயக் கூடாது; பின்வாங்கக் கூடாது. இதற்கு, விழிப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவை அவசியமான பலம். இந்த வலிமைக்கு நாம் முடிந்தவரை ஊட்டச்சத்து வழங்க வேண்டும்.
ஒரு குடிமகனாகவும், ஒரு குடும்பமாகவும் நிறுவனங்கள் மூலம் அதை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில், இந்தியாவின் திறனுக்குப் பஞ்சமில்லை. ஒரு காலத்தில் 'தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்த நாடு, அதே ஆற்றலுடன் ஏன் மீண்டும் எழுச்சி பெறக் கூடாது? நண்பர்களே, எனதருமை குடும்ப உறுப்பினர்களே, 2047 ஆம் ஆண்டில், நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, எனது நாடு வளர்ந்த இந்தியாவாக மாறும் என்று நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். நம் நாட்டின் வலிமை, நமக்குக் கிடைக்கும் வளங்கள் மற்றும் குறிப்பாக 30 வயதிக்கு உட்பட்ட இளைஞர்களின் சக்தியின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். மேலும், அன்னையர் மற்றும் சகோதரிகளின் வலிமையின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் சில தீய சக்திகள் சமூகத்துக்குள் ஊடுருவி நமது சமூக அமைப்பின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டன.
சில நேரங்களில் நாம் இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறோம். கண்களை மூடும் நேரம் இதுவல்ல. கனவுகள் நிறைவேற வேண்டுமானால், தீர்மானங்கள் நிறைவேற வேண்டுமானால், காளையின் கொம்புகளைப் பிடித்து மூன்று தீமைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் ஊழல் தான். ஒரு கரையான் போல, அது நாட்டின் அனைத்து அமைப்புகளையும், நாட்டின் அனைத்து திறன்களையும் முற்றிலுமாக அரித்துவிட்டது. ஊழலில் இருந்து விடுதலை.. ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடுவது காலத்தின் தேவை. நாட்டுமக்களே, என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே, இது மோடியின் அர்ப்பணிப்பு; ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என்பது எனது தனிப்பட்ட உறுதிப்பாடு. இரண்டாவதாக, வாரிசு அரசியல் நம் நாட்டை அழித்துவிட்டது. இந்த வாரிசு முறை, நாட்டை ஆட்டிப் படைத்து நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்தது.
மூன்றாவது தீமை – வஞ்சகத் தன்மை. இந்த வஞ்சகத்தன்மை நாட்டின் உண்மையான சிந்தனையை, நமது இணக்கமான தேசியத் தன்மையை கறைப்படுத்தி விட்டது. இந்த மக்கள், எல்லாவற்றையும் அழித்தனர். எனவே, அன்பார்ந்த நாட்டுமக்களே, அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இந்த மூன்று தீமைகளுக்கும் எதிராக நாம் நமது முழு வலிமையுடன் போராட வேண்டும். ஊழல், உறவுச்சார்பு, வஞ்சகத்தன்மை - எமது நாட்டு மக்களின் விருப்பங்களை நசுக்கியுள்ள இந்த சவால்கள் செழித்து வளர்ந்துள்ளன . இந்தத் தீமைகள் நம் நாட்டில் சிலரிடம் உள்ள அனைத்துத் திறன்களையும் கொள்ளையடிக்கின்றன. இவை எமது மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை கேள்விக்குறி ஆக்கிய அம்சங்களாகும்.
ஏழையாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும், பிற்படுத்தப் பட்டவராக இருந்தாலும், பாஸ்மண்டா சமூகமாக இருந்தாலும்,, பழங்குடியின சகோதர சகோதரியாக இருந்தாலும், நம் அன்னையராக இருந்தாலும், சகோதரிகளாக இருந்தாலும், நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காக இந்த மூன்று தீமைகளில் இருந்தும் விடுபட வேண்டும். ஊழலுக்கு எதிரான வெறுப்புச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அழுக்கு நமக்கு பிடிக்காது. பொது வாழ்க்கையில் ஊழலை விடப் பெரிய அசுத்தம் இருக்க முடியாது.
நமது தூய்மை இயக்கத்துக்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்து, ஊழலை சுத்தப்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழலை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் களத்தில் என்னவெல்லாம் சாதிக்கப்பட்டது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆபத்தான புள்ளிவிவரங்களைக் கேட்டால், மோடி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். கிட்டத்தட்ட பத்து கோடி மக்கள் பெற்று வந்த அநியாயமான ஆதாயத்தை நான் தடுத்து நிறுத்தினேன். இந்த மக்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டதாக உங்களில் சிலர் கூறலாம்; இல்லை, யார் அந்த 10 கோடி மக்கள்? இந்த 10 கோடி மக்களும் பிறக்க கூட இல்லை. இன்னும் பலர் தங்களை கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என்று தவறான அடையாளத்துடன் பலன்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய பெண்கள் வயதாகும்போது பெரும்பாலும் செயலற்றவர்களாகி, அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளை, தொடர்ந்து ஏமாற்றிப் பெறுகிறார்கள். பல பத்தாண்டுகளாக நடந்து வரும் இதுபோன்ற 100 மில்லியன் பினாமி நடவடிக்கைகளை நம்மால் தடுக்க முடிந்தது. நாம் பறிமுதல் செய்துள்ள ஊழல்வாதிகளின் சொத்து முன்பை விட 20 மடங்கு அதிகம்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தைக் கொள்ளையடித்து விட்டு இவர்கள் தலைமறைவானார்கள். 20 மடங்கு அதிகமான சொத்துகளைப் பறிமுதல் செய்தோம், எனவே என் மீது மக்களுக்கு வெறுப்பு மிகவும் இயல்பானது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நான் தீவிரப்படுத்த வேண்டும். நமது தவறான அரசு முறையால், கேமராவின் கண்ணில் ஏதாவது நடந்தாலும், அது பின்னர் சிக்கிக் கொள்ளும். முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், இப்போது மேலும் பல குற்றப் பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். பிணை பெறுவது எளிதல்ல. ஊழலுக்கு எதிராக நாம் தீவிரமாகவும் நேர்மையாகவும் போராடுவதால், இத்தகைய உறுதியான அமைப்பை உருவாக்கி, முன்னேறி வருகிறோம்.
இன்று, உறவுச்சார்பு மற்றும் வஞ்சகத்தன்மை ஆகியவை நாட்டுக்கு பெரும் பாதகத்தைக் கொண்டு வந்துள்ளன. ஒரு ஜனநாயகத்தில் இது எப்படி சாத்தியமாகும்? ஓர் அரசியல் கட்சி, வலியுறுத்திச் சொல்கிறேன், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, நமது நாட்டின் ஜனநாயகத்தில் இவ்வளவு சிதைவைக் கொண்டு வந்தது. இது ஒருபோதும் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. அது என்ன நோய்? ‘குடும்ப அரசியல்’. அவர்களின் மந்திரம் என்ன? குடும்பத்தின், குடும்பத்தால், குடும்பத்துக்கான கட்சி. அவர்களின் தாரக மந்திரம் என்னவென்றால், தங்களின் கட்சி, ஒரு குடும்பத்துக்கே சொந்தமானது. பாரபட்சம் – ஒருதலைப் படச அணுகுமுறை – நமது திறமைகளுக்கு எதிரிகள். இக்கட்சிகள் திறமைகளை மறுப்பதோடு, அவர்களின் திறமையை ஏற்க மறுக்கின்றன. எனவே, இந்நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு நாம் சுயநலவாதத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆரோக்கியம்! ஒவ்வொருவரும் உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள். எனவே, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது மிகவும் முக்கியம். ‘திருப்திப் படுத்துதல்’ (அப்பீஸ்மெண்ட்) சமூக நீதிக்கு மிகப் பெரிய தீங்கு விளைவித்துள்ளது. சமூகநீதியை அழித்தது அப்பீஸ்மெண்ட் சிந்தனை, அப்பீஸ்மெண்ட் அரசியல். திருப்திப்படுத்தும் அரசின் திட்டங்கள் உண்மையில் சமூகநீதியைக் கொன்று விட்டன. அதனால்தான் திருப்திப்படுத்துதலும் ஊழலும் வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகள் என்று உணர்கிறோம். நாடு வளர்ச்சியை விரும்பினால், 2047-ம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற நாடு விரும்பினால், எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ஊழலை சகித்துக் கொள்ள மறுப்பது அவசியம். இந்த மனநிலையுடன் நாம் முன்னோக்கி நடக்க வேண்டும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, நம் அனைவருக்கும் மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. நீங்கள் எப்படி வாழ்ந்தீர்களோ அப்படியே அடுத்த தலைமுறையை வாழ வைப்பது குற்றம். எதிர்கால சந்ததியினருக்கு வளமான, சமச்சீரான தேசத்தை வழங்குவது நமது பொறுப்பு. நமது எதிர்கால சந்ததியினர் சின்னச் சின்ன விசயங்களுக்காகப் போராடாமல் இருக்க, சமூகநீதியில் ஒன்றியிருக்கும் ஒரு நாட்டை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும். இது நம் அனைவரின் கடமை, ஒவ்வொரு குடிமகனின் கடமை, இந்த சகாப்தம், அமிர்த காலம் என்பது கடமைக் காலம் - கடமையின் சகாப்தம். நமது பொறுப்புகளில் நாம் பின்வாங்க முடியாது; மகாத்மா காந்தி கனவு கண்ட இந்தியாவையும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவாக இருந்த இந்தியாவையும், நமது துணிச்சலான தியாகிகளின் கனவாக இருந்த இந்தியாவையும், தாய் நாட்டுக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த நமது துணிச்சலான பெண்கள் விரும்பிய நாட்டை நாம் கட்டமைக்க வேண்டும்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, 2014-ல் நான் வந்தபோது, மாற்றத்துக்கான உறுதிமொழியுடன் வந்தேன். 2014-ல் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். என் குடும்பத்தின் 140 கோடி உறுப்பினர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர், அந்த நம்பிக்கையை நிறைவேற்ற நான் அனைத்து முயற்சிகளையும் செய்தேன். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற வாக்குறுதி, நம்பிக்கையாக மாறியது, ஏனெனில் நான் மாற்றத்தை உறுதியளித்தேன். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றின் மூலம், இந்த வாக்குறுதியை நான் நம்பிக்கையாக மாற்றியுள்ளேன். நான் அயராது உழைத்துள்ளேன், நாட்டுக்காக உழைத்துள்ளேன், பெருமையுடன் பணியாற்றியுள்ளேன், "தேசம் முதலில்" என்ற உணர்வோடு இதைச் செய்துள்ளேன்.
எனது செயல்பாட்டின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் நீங்கள் என்னை மீண்டும் ஆசீர்வதித்தீர்கள், மாற்றத்துக்கான வாக்குறுதி என்னை இங்கே கொண்டு வந்தது. அடுத்த 5 ஆண்டுகள் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகள் 2047 ஆம் ஆண்டின் கனவை நனவாக்குவதற்கான பொன்னான தருணங்கள். அடுத்த முறை, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இதே செங்கோட்டையில் இருந்து, நாட்டின் சாதனைகள், உங்கள் திறன்கள், நீங்கள் அடைந்த முன்னேற்றம், இன்னும் அதிக தன்னம்பிக்கையுடன் அடைந்த வெற்றிகளை உங்களுக்கு வழங்குவேன்.
எனதருமை அன்பர்களே, நான் உங்களிடமிருந்து வருகிறேன், உங்களுடனே இருக்கிறேன், நான் உங்களுக்காக வாழ்கிறேன். நான் ஒரு கனவு கண்டால், அது உங்களுக்காக. நான் வியர்த்தால், அது உங்களுக்காக. இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததால் அல்ல, நீங்கள் என் குடும்பம் என்பதால். உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக, உங்கள் எந்த துக்கத்திற்கும் என்னால் சாட்சி சொல்ல முடியாது, உங்கள் கனவுகள் சிதைந்து போவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்கள் தீர்மானங்களை நிறைவேற்றவும், ஒரு தோழனாக உங்களுடன் நிற்கவும், உங்களுக்கு சேவை செய்யவும், உங்களுடன் இணைந்திருக்கவும், உங்களுடன் வாழவும், உங்களுக்காகப் போராடவும் நான் இங்கே இருக்கிறேன். நான் உறுதியுடன் இந்த பயணத்தைத் தொடங்கிய ஒரு நபர். சுதந்திரத்துக்காக நம் முன்னோர்கள் மேற்கொண்ட போராட்டங்களும் அவர்கள் கண்ட கனவுகளும் இன்று நம்முடன் உள்ளன என்று நான் நம்புகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் போது தியாகம் செய்தவர்களின் ஆசிர்வாதம் நம்முடன் உள்ளது. நமது நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது, இந்த வாய்ப்பு எங்களுக்கு பெரும் ஆற்றலையும் வலிமையையும் அளித்துள்ளது.
என் அன்புக்குரியவர்களே, இன்று, 'அமிர்த காலத்தின்’ முதல் ஆண்டில், இந்த அமிர்த காலத்தில் நான் உங்களுடன் உரையாடும்போது, நான் உங்களுக்கு முழு நம்பிக்கையுடன் சொல்ல விரும்புகிறேன் – காலச் சக்கரம் சுழன்று கொண்டு இருக்கும்போது, அமிர்த காலத்தின் எப்போதும் சுழலும் சுழற்சி, எல்லோருடைய கனவுகளும் என் கனவுகள்தான். எல்லாக் கனவுகளையும் வளர்த்து, சீராக நகர்த்தி, தைரியமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள், சரியான கொள்கைகளுடன், ஒரு புதிய வழியை உருவாக்குதல், சரியான வேகத்தை அமைத்தல், ஒரு புதிய பாதை, சவால்களை உறுதியான தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள், உலகில் நம் தேசத்தின் பெயரை உயர்த்துங்கள்.
அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களே, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், புனிதமான சுதந்திர தின விழாவில் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த அமிர்த காலம் நம் அனைவருக்கும் கடமை நேரம். இந்த அமிர்த காலம் பாரத தாய்க்கு நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டிய காலம். சுதந்திரப் போரின் போது, 1947 க்கு முன்னர் பிறந்த தலைமுறையினருக்கு நாட்டுக்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டுக்காக உயிர் துறக்க எந்த வாய்ப்பையும் அவர்கள் விடவில்லை.
இன்று, நாட்டுக்காக உயிர் துறக்க நமக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாட்டிற்காக வாழ இதை விட பெரிய வாய்ப்பு இருக்க முடியாது! நாம் ஒவ்வொரு கணமும் நாட்டுக்காக வாழ வேண்டும், இந்தத் தீர்மானத்தின் மூலம், 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தை இந்த 'அமிர்த காலத்தில்' உருவாக்க வேண்டும். 140 கோடி நாட்டு மக்களின் தீர்மானம் நிறைவேற வேண்டும், 2047-ல் மூவண்ணக் கொடி ஏற்றப்படும்போது, வளர்ந்த இந்தியாவை உலகமே பாராட்டும். இந்த நம்பிக்கையுடன், இந்த உறுதியுடன், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். என் மனமார்ந்த வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! மிகவும் நன்றி!
(நிறைவுற்றது)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 76 - ‘இந்த வேகம்... இவரின் அடையாளம்’ | 2022
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago