உலகை உலுக்கி அதிர்ச்சியில் உறைய வைத்த கரானா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டுவர முடியாமல் உலக நாடுகள் மூச்சடைத்து நின்றன. ஒரு நாடு மட்டும் சற்றும் மனம்தளராமல் நம்பிக்கையுடன் நெருக்கடியை எதிர் கொண்டது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம்; நிவாரண உதவித் திட்டங்கள் மறுபுறம். இடையே, நீண்டகாலப் பொருளாதாரத்துக்கான தீர்க்கமான செயல்பாடுகள். ஒரு நாட்டின் தலைமை தீர்க்கமாய் முடிவெடுத்து உறுதியாய் செயல்பட்டால், எந்த நெருக்கடியையும் சமாளித்து வெற்றி காணும் ஆற்றல் மக்களுக்குத் தானாக வந்து சேர்ந்து விடும். இதற்கு மிக சமீபத்திய உதாரணமாய் உயர்ந்து நிற்கிறது இந்தியா.
கோடானகோடி மக்கள் அச்சத்தில் திகைத்து நின்னர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு, உலகுக்கு ஏற்ற நல்லவழி காட்டினார். உடனடிச் செயல்பாடுகள் முதல் நீண்ட காலத்திட்டங்கள் வரை எதிலும் சுணக்கம் ஏற்படாமல் அரசும் நாடும் தொடர்ந்து இயல்பாகச் செயல்படுதலே அந்த வழி. பெருந்தொற்றின் பாதிப்புகள், நாட்டின் எதிர்காலத்தை அரித்து விடாமல் பார்த்துக் கொண்டதில் பிரதமர் மோடி முழுவெற்றி பெற்றார்.
இத்தனைக்கும் இடையில், 2021 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை இதோ: அன்பார்ந்த நாட்டு மக்களே! 75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் ‘அமிர்த மஹோத்சவம்’ முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இந்தியா மீது, ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகள். விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் (அமிர்தப் பெருவிழா) புனிதத் திருநாளான இன்று, நாட்டின் பாதுகாப்புக்காக இரவும் பகலும் தம்மையே தியாகம் செய்யும் வீரர்களை, மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நாடு சிரம் தாழ்த்தி வணங்குகிறது.
விடுதலைப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிய மகாத்மா காந்தி, சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் பிஸ்மில், அஸ்ஃபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள்; ஜான்சி ராணி லட்சுமிபாய், ராணி சென்னம்மா, அசாமில் மாதங்கினி ஹஸ்ராவின் வீரம், நாட்டின் முதல் பிரதமர் பண்டிதர் நேரு, ஒருங்கிணைந்த நாடாக தேசத்தை ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேல், வருங்கால இந்தியாவுக்கான பாதையைக் காட்டி, நிர்ணயித்த பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவரையும் நாடு நினைவு கூர்கிறது. இவர்களைப் போன்ற தலைசிறந்த ஆளுமைகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது.
» செங்கோட்டை முழக்கங்கள் 74 - ‘உலகத்துக்காக உழைப்போம்!’ | 2020
» செங்கோட்டை முழக்கங்கள் 73 - ‘இந்த முறை இன்னும் வேகம்!’ | 2019
இந்தியா மகத்தான மனிதர்களால் நிரம்பிய நாடு. இந்த தேசத்தைக் கட்டமைத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னெடுத்துச் சென்ற எண்ணற்ற மக்கள் இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தவர்கள். வரலாற்றில் அதிகம் பேசப்படாத இந்த எண்ணிலடங்கா மக்களை நான் வணங்குகிறேன். பல நூற்றாண்டுகளாக இந்தியா, தாய்நாடு, கலாச்சாரம், விடுதலைக்காப் போராடியுள்ளது. அடிமைத்தனம் தந்த வலியை, விடுதலைக்கான ஏக்கத்தை பல நூற்றாண்டு காலம் விடாது தக்க வைத்து இருந்தது. வெற்றி மற்றும் தோல்விகளுக்கு இடையே மனதில் பொறிக்கப்பட்டிருந்த விடுதலையின் வேட்கை சிறிதும் குறையவில்லை. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட மரியாதைக்குரிய தலைவர்களை, போராளிகளை இத்தருணத்தில் வணங்குகிறோம்.
நமது மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், தடுப்பூசிக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், கரோனா பெருந்தொற்று நாட்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய நாட்டு மக்கள்.. அனவருக்கும் நமது பாராட்டுகள். இன்று, நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சோகமான செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் மக்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் அவர்களோடு உள்ளன. இன்று, இளம் தடகள வீரர்களும் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த விளையாட்டு வீரர்களும் நம்மிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.
ஒரு சிலர் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள். நமது விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், பலத்த கரவொலியுடன் வணக்கத்துடன் அவர்களுக்கு நாம் அனைவரும் மரியாதை செய்வோம். மாபெரும் சாதனைகளால் இவர்கள், நமது இதயங்களை வென்றதோடு, இந்திய இளைஞர்களுக்கு, வரும் தலைமுறையினருக்கு, உத்வேகம் அளித்துள்ளார்கள். அன்பார்ந்த நாட்டு மக்களே, இன்று நாம் சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில், நமது இதயங்களில் பிரிவினை ஏற்படுத்திய காயத்தை மறந்துவிட முடியாது. அது, கடந்த நூற்றாண்டின் பேரழிவுகளில் ஒன்று. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மக்களை வெகு விரைவில் மறந்து விட்டோம். நேற்றுதான் அவர்களது நினைவாக ஓர் உணர்ச்சிபூர்வமான முடிவை இந்தியா எடுத்துள்ளது.
பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவாக இனி, ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்’ என்று அனுசரிப்போம். மனிதாபிமானமற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட, சித்திரவதைப்பட்டவர்களுக்கு, கண்ணியமான இறுதிச் சடங்குகள் கூட நடக்கவில்லை. அவர்கள் எப்போதும் வாழ்ந்து, நமது நினைவுகளில் நீங்காமல் இருக்க வேண்டும். 75-வது சுதந்திர தினத்தன்று, பிரிவினை கொடுமைகள் தினத்தை அனுசரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவு, அம்மக்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, உலகிலேயே மனிதநேயம், வளர்ச்சிப் பாதையில் பயணித்து வந்த நாட்டுக்கு, கரோனா காலம் மாபெரும் சவாலாக அமைந்தது. இந்தியர்கள் இந்தப் போரை, விடாமுயற்சியால் பொறுமையால் வென்றார்கள். நம் எதிரே ஏராளமான சவால்கள் இருந்தன. ஒவ்வொரு துறையிலும் நாட்டு மக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நமது தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் சக்தியால், நம் நாடு தடுப்பூசிக்காக எவரையும், எந்த நாட்டையும் சார்ந்து இருக்கவில்லை. தடுப்பூசி இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். போலியோ தடுப்பு மருந்து கிடைப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?
பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகை சூழ்ந்திருந்த போது, தடுப்பூசி கண்டுபிடித்தல், மிகக் கடினமான காரியமாக இருந்தது. இந்தியாவுக்குத் தடுப்பூசி கிடைக்குமா... கிடைக்காமல் போகுமா... ஒருவேளை கிடைத்தாலும் மிகவும் வேண்டிய நேரத்தில் கிடைக்குமா.. எதையுமே அப்போது நிச்சயமாய் சொல்லக் கூடிய நிலை இல்லை. ஆனால் இன்று, உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டம் இந்தியாவில்தான் நடைபெற்று வருகிறது என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். 54 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கோ-வின் மற்றும் மின்னணு சான்றிதழ்கள் போன்ற இணையதள முறைகள் இன்று உலகை வெகுவாகக் கவர்ந்துள்ளன..
பெருந்தொற்றின் போது தொடர்ந்து பல மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கி ஏழை வீடுகளில் அடுப்பெரிய வழி செய்தோம். இது, உலக நாடுகளுக்கு வியப்பைத் தந்ததுடன், பேச்சுவார்த்தைக்கான பொருளாகவும் மாறியது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை; உலகின் பிற நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிக மக்களைப் பாதுகாக்க முடிந்தது என்பதும் உண்மை. ஆனால் இது பெருமைப்படக் கூடிய ஒன்று அல்ல. இந்த வெற்றியில் நாம் மெத்தனமாய் இருந்து விடக்கூடாது. சவால்களே இல்லை என்று சொன்னால் அது, வளர்ச்சிப் பாதையில் நம்மைத் தடுக்கிற சிந்தனையாகத்தான் இருக்கும்.
உலகின் செல்வமிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது அமைப்பு முறைகள் போதுமானதாய் இல்லை, பணக்கார நாடுகளில் உள்ளவை நம்மிடையே இல்லை. மேலும், உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் அதிகம். நமது வாழ்க்கை முறையும் வேறுபட்டது. நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும், பலரை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. ஏராளமான குழந்தைகள் ஆதரவின்றி உள்ளனர். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வலி, என்றைக்கும் இருக்கும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரும். அப்போது, அந்த நாடு தன்னைப் புதிதாக மறுவரையறை செய்து கொள்ளும்; புதிய உறுதிகளுடன் தன்னை முன்செலுத்தும். அந்தத் தருணம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று வந்துள்ளது. 75-ஆவது சுதந்திர தினத்தை, கொண்டாட்டத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. புதிய தீர்மானங்களின் மீது களப்பணி செய்து, புதிய உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும். இங்கே தொடங்கி அடுத்த 25 ஆண்டுப் பயணம், சுதந்திரத்தின் நூற்றாண்டுத் தருணம் வரை, ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிற அமிர்த காலத்தை குறிக்கும். இந்த அமிர்த காலகட்டத்தில் நமது தீர்மானங்களின் நிறைவேற்றம், நம்மை இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டுக்குப் பெருமையுடன் கொண்டு செல்லும்.
இந்தியாவின், இந்திய மக்களின் வளத்தில் புதிய உச்சத்தை எட்டுவதே ‘அமிர்த காலத்தின்’ இலக்காகும். கிராமங்கள் - நகரங்கள் இடையே வேறுபாடு இல்லாத வசதிகளை உருவாக்குதலே ‘அமிர்த காலத்தின்’ இலக்காகும். நாட்டு மக்களின் வாழ்வில் தேவையின்றி அரசு தலையிடாமல் இருக்கும் இந்தியாவைக் கட்டமைப்பதே ‘அமிர்த காலத்தின்’ இலக்காகும். இதுதான் உலகின் ஆகச் சிறந்த நவீன உள்கட்டமைப்பு என்கிற வகையில் இந்தியாவை உருவாக்குவதே ‘அமிர்த காலத்தின்’ இலக்காகும். யாரை விடவும் நாம் குறைந்தவராய் இருக்கக் கூடாது. இதுவே நாட்டு மக்களின் உறுதியாகும். கடின உழைப்பு, துணிச்சல் இல்லாத உறுதி நிறைவடையாது. ஆகவே கடின உழைப்பு, துணிச்சலுடன் நாம் தீர்மானித்தவற்றை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கனவுகள், தீர்மானங்கள் - நமது எல்லைகளுக்கு அப்பாலும் வளமான பாதுகாப்பான உலகத்துக்கு, திறன்வாய்ந்த பங்களிப்பாக இருக்கும்.
‘அமிர்த காலம்’ - 25 ஆண்டுகளுக்கு ஆனது. நமது இலக்குகளை எட்ட நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே தொடங்க வேண்டும். ஒரு நொடியையும் இழந்து விடக் கூடாது. இதுதான் சரியான நேரம். நமது நாடும் மாற வேண்டும்; குடி மக்களாக, நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறிவரும் காலத்துக்குப் பொருந்துகிறது போல நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். ‘அனைவரோடும், அனைவரின் உயர்வும், அனைவருக்குமான முன்னேற்றம்’ என்ற தாரக மந்திரத்துடன் நாம் தொடங்கியுள்ளோம். ‘அனைவரோடும், அனைவரின் உயர்வும், அனைவருக்குமான முன்னேற்றம்’ ஆகியவற்றுடன் ‘அனைவரின் பிரயாசை (முயற்சி)’ என்பதும் நமது இலக்குகளை அடைய மிகவும் அவசியம் என்று செங்கோட்டையிலிருந்து இன்று வேண்டிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உஜ்வாலா முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் வரை அவற்றின் முக்கியத்துவத்தை அறிவர்.
இன்று அரசுத் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன; நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வருகின்றன. முன்பைவிட மிக வேகமாக நாம் வளர்ச்சி அடைந்து வருகிறோம். இத்துடன் அது நின்றுவிடாது. ‘இதற்கு மேல் எதுவும் இல்லை’ என்கிற (தேக்க) நிலையை நாம் எட்ட வேண்டும். அனைத்து கிராமங்களும் சாலை வசதி பெற வேண்டும், அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும், அனைத்துப் பயனாளிகளும் ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற வேண்டும், தகுதி வாய்ந்த அனைவரும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாக சமையல் எரிவாயு இணைப்பு பெறவேண்டும். தகுதிவாய்ந்த ஒவ்வொரு நபரையும் அரசின் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் வீட்டு வசதி திட்டங்களோடு இணைக்க வேண்டும். 100 சதவீதம் நிறைவேற்றுவோம் என்கிற மனநிலையோடு முன்செல்ல வேண்டும். இதுவரை, தெருக்களில் வண்டிகளில் நடைபாதைகளில் பொருட்களை விற்போர் குறித்து யாரும் சிந்தனை முயற்சி செலுத்தியது இல்லை. இதுபோன்ற சக பணியாளர்கள் எல்லாரும், ‘எஸ்.வி.ஏ. நிதித் திட்டம் வழியே வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
நூறு சதவீதம், அத்தனை வீடுகளுக்கும் மின்சார இணைப்பு; நூறு சதவீதம், அத்தனை வீடுகளுக்கும் கழிவறை; இதுபோல, திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்கிற இலக்கை நாம் முன்செலுத்த வேண்டும். அதற்காக, நிறைவேற்றுவதற்கான காலத்தை நீண்டதாக மாற்றிக் கொள்ளக் கூடாது. ஒரு சில ஆண்டுகளிலேயே நமது உறுதித் தன்மையை நாம் மெய்யாக்க வேண்டும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்’ (ஹர் கர் ஜல்) இயக்கத்தில் நாடு வேகத்துடன் செயல்படுகிறது. ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே நான்கரை கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வரத் தொடங்கி விட்டது. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதங்களைப் பெறுவதே உண்மையான மூலதனம். இந்த இலக்கை நூறு சதவீதம் சாதிப்பதில் ஆகச் சிறந்த ஆதாயம் உள்ளது. அரசுத் திட்டங்களின் பயன்கள், யாருக்கும் கிடைக்காமல் விடுபட்டுப் போகாது. கடைக்கோடி நபரையும் சென்றடைவதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டால் மட்டுமே, பாகுபாடும் ஊழலும் இல்லாமற் போகும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, ஒவ்வோர் ஏழைக்கும் ஊட்டச்சத்து உணவை வழங்குவதும் இந்த அரசின் முன்னுரிமையாகும் ஏழைப் பெண்கள், ஏழைக் குழந்தைகளின் தடைகளாக உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை ஏழைகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். ரேஷன் கடைகளில் உள்ள அரிசி, சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அரிசி ஆகட்டும், வெவ்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அரிசி வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, நாட்டில் உள்ள ஒவ்வோர் குடிமகனுக்கும் சிறந்த சுகாதார வசதி வழங்கும் இயக்கமும் விரைந்து செயல்படுகிறது. இதற்காக மருத்துவக் கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு வழிமுறைகளுக்கும் சமஅளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேவேளையில் நாட்டில் மருத்துவ இடங்களுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ‘அவுஷதி’ (மருந்து) திட்டத்தின் வாயிலாக மலிவு விலையில் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. இதுவரை 75,000-க்கு மேற்பட்ட மருத்துவ மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. வட்டார அளவில் கூட மருத்துவமனைகளில், ஆய்வகங்களில் பிரத்தியேகமாக நவீன உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது. வெகுவிரைவில், நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளும் ஆக்சிஜன் நிலையங்கள் (ஆக்சிஜன் ப்ளாண்ட்ஸ்) கொண்டிருக்கும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, 21-ஆம் நூற்றாண்டில் புதிய உயரத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்ல, நமது திறமைகளை முழு அளவில் பயன்படுத்துதல் அவசியம், முக்கியம் ஆகும். இதற்காக, பின்தங்கிய பிரிவுகள் மற்றும் துறைகளுக்கு நாம் கைகொடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதோடு, தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர், மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில், மருத்துவக் கல்வித் துறையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டதன் வாயிலாக, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலைத் தாங்களே வகுத்துக் கொள்ளும் உரிமை, மாநிலங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, சமூகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் எந்த நபரோ பிரிவோ விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்கிறோம். இதேபோல, நாட்டின் எந்த பகுதியையும் எந்த இடத்தையும் பின்தங்க விடக் கூடாது. வளர்ச்சி என்பது எல்லாப் பக்கங்களிலும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காகக் கடந்த ஏழு ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட முயற்சிகளை இப்போது விரைவுபடுத்துகிறோம். கிழக்கு இந்தியா, வட கிழக்கு, ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட ஒட்டுமொத்த இமாலயப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், மலைவாழ் இடங்கள்.. இந்த மண்டலங்கள், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் அடித்தளமாக மாற இருக்கின்றன.
வடகிழக்கில் இன்று கனெக்டிவிட்டிக்கான புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இதயங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் இணைப்பாகும். வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களையும் ரயில் சேவையால் இணைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். கிழக்கு நோக்கி கொள்கையின் கீழ், வடகிழக்கு, வங்கதேசம், மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவும் இணைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், உன்னத பாரதத்துக்கான உற்சாகமும், வட கிழக்கில் அமைதியும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. வடகிழக்கில் சுற்றுலா, சாகச விளையாட்டு, இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அமிர்த காலத்தின் சில பத்தாண்டுகளுக்குள் இதனை நாம் நிறைவு செய்ய வேண்டும். எல்லாருடைய திறன்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதே ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம். ஜம்மு காஷ்மீர் உட்பட எங்கும், வளர்ச்சியின் சமநிலை கண்ணெதிரே தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறைக்கான ஆணையம் நிறுவப்பட்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. லடாக் பகுதியும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கிறது. நவீன உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன. மறுபுறத்தில், சிந்து மத்திய பல்கலைக்கழகம் உயர் கல்வியின் மையமாக லடாக்கை மாற்றி வருகிறது. 21-ஆம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டில், நீலப் பொருளாதாரம் நோக்கிய முயற்சிகளை இந்தியா மேலும் விரைவுபடுத்தும். மீன் வளர்ப்புடன், கடல் பாசி வளர்ப்பில் உள்ள கணக்கற்ற வாய்ப்புகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடலின் எல்லையற்ற வளங்களை ஆராயும் நோக்கத்தின் விளைவாகவே ‘ஆழ் கடல் இயக்கம்’ ஆகும். கடலில் ஒளிந்துள்ள தாது வளங்கள், கடல் நீரில் உள்ள அனல் எரிசக்தி ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உயரங்களை வழங்கும்.
நாட்டில், பின் தங்கியுள்ள மாவட்டங்களின் ஆசைகளை நாம் தட்டி எழுப்பியுள்ளோம். இவ்வகையான 110 மாட்டங்களில், கல்வி சுகாதாரம் ஊட்டச்சத்து சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மாவட்டங்கள், பழங்குடிப் பகுதிகளில் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு இடையே வளர்ச்சிக்கான ஆரோக்கியமான போட்டியை உருவாக்கியுள்ளோம். இந்தியாவின் இதர மாவட்டங்களுக்கு இணையாக இந்த மாவட்டங்களும் பயணிக்கும் வகையில் வலுவான போட்டி நடைபெற்று வருகிறது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, உலகப் பொருளாதாரத்தில், முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து வெகுவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, கூட்டுறவை வலியுறுத்துகிறது. கூட்டுறவு, நமது பாரம்பரியம் மற்றும் மதிப்புகளுடன் இசைந்து போகிறது. கூட்டுறவில், மக்களின் ஒட்டுமொத்த சக்தி, பொருளாதாரத்தின் உந்து சக்தியாக மாறுகிறது. இது நாட்டின் அடித்தட்டுப் பொருளாதாரத்துக்கு முக்கியமாகும். கூட்டுறவு என்பது வெறுமனே சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்ட நெட்வொர்க் மட்டுமல்ல; கூட்டுறவு என்பது கூட்டு வளர்ச்சிக்கான உணர்வு, கலாச்சாரம் மற்றும் மனநிலையாகும். அதற்கு அதிகாரம் அளிக்க, தனி அமைச்சகத்தை உருவாக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். மாநிலங்களில் கூட்டுறவுத் துறைக்கு அதிகாரம் கிடைக்கவே இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த நாட்டுமக்களே, இந்தப் பத்தாண்டில், கிராமங்களில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க நாம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். இன்று, நமது கிராமங்கள் வேகமாக மாறி வருவதைப் பார்க்கிறோம். நமது அரசு, கடந்த சில ஆண்டுகளில், கிராமங்களுக்கு மின்சாரம், சாலைகள் வழங்கியுள்ளது. தற்போது, இந்த கிராமங்கள், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் இணையவசதி மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்முனைவோர்கள், கிராமங்களிலும் உருவாகின்றனர். கிராமங்களில், 8 கோடிக்கு மேற்பட்ட சகோதரிகள், சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து, உயர்ந்த தயாரிப்புகளை வடிவமைக்கின்றனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அரசு இப்போது மின்னணு வர்த்தகத் தளத்தையும் உருவாக்குகிறது. இதன் மூலம், இப்பொருட்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப் பெரிய சந்தை கிடைக்கும். உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாடு முன்னேறுகிறது. டிஜிட்டல் தளம், சுயஉதவிக் குழு பெண்களின் தயாரிப்புகளை, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும். இதன் மூலம் அவர்களின் எல்லை விரிவடையும்.
கரோனா காலத்தில் நம் நாடு, தொழில்நுட்பத்தின் சக்தியை, நமது விஞ்ஞானிகளின் கடப்பாடு மற்றும் திறன்களைக் கண்டது. நமது விஞ்ஞானிகள், சாதுர்யமாய், யுக்திசார் திட்டமிடலுடன் பணியாற்றுகின்றனர். நமது விஞ்ஞானிகளின் திறன்களையும் ஆலோசனைகளையும் வேளாண்துறையுடன் ஒன்றிணைக்கும் நேரம் வந்து விட்டது. இனியும், காத்திருக்க இயலாது. இந்த வலிமையை நாம் அதிகரிக்க வேண்டும். இது நம் நாட்டுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பதோடு, பழம், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். முக்கியமானது. இவ்வாறாக நாம் உலக அரங்கில் வலுவான நிலைக்குச் செல்வோம்.
இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு இடையே, வேளாண்துறையில் உள்ள முக்கிய சவால்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பால், கிராம மக்களுக்கிடையே நிலத்தின் அளவு குறைகிறது; குடும்பச் சண்டை, பிரிவினைகளால் நிலங்கள் குறுகும் சவால்களும் உள்ளன. அபாயகரமாக, விவசாயம் நடைபெறும் நிலம் சுருங்கிவிட்டது. 80 சதவீததுக்கு மேற்பட்ட விவசாயிகள், 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ளனர். 100-க்கு 80 சதவீத விவசாயிகள், இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருப்பதால், அவர்கள் சிறு விவசாயிகள் பிரிவில் உள்ளனர். துரதிருஷ்டமாக, இப்பிரிவினர் கடந்தாண்டுக் கொள்கைகளின் பயன்களை பெறமுடியாமல் போனது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இப்போது, இந்தச் சிறு விவசாயிகளை மனதில் கொண்டு, வேளாண் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; இவர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
மேம்பட்ட பயிர்க் காப்பீடு திட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் முக்கிய முடிவு; விவசாயக் கடன் அட்டை மூலம் வங்கிக் கடன் அளிக்கும் முறை; சூரிய மின்சக்தி திட்டங்களை விவசாயத்துக்குக் கொண்டு செல்லுதல், விவசாய சங்கங்களை ஏற்படுத்துதல் போன்ற முயற்சிகள் சிறு விவசாயிகளின் சக்தியை அதிகரிக்கும். வரும் காலங்களில், வட்டார அளவில், கிடங்கு வசதியை ஏற்படுத்தும் இயக்கமும் தொடங்கப்படும்.
சிறு விவசாயிகளின், சிறு செலவுகளை மனதில் கொண்டு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேற்பட்ட தொகை, 10 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. சிறு விவசாயி - நமது தீர்வு, மந்திரம். சிறு விவசாயி - நாட்டின் கவுரவம். இது, நமது கனவு. வரும் ஆண்டுகளில், நாட்டின் சிறு விவசாயிகளின் கூட்டு சக்தியை அதிகரிக்க வேண்டும். புதிய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் 70-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தற்போது, கிசான் ரயில் இயக்கப்படுகிறது. கிசான் ரயில், சிறு விவசாயிகளுக்கு நவீன வசதி அளித்து அவர்களின் தயாரிப்புகளைக் குறைந்த செலவில் தொலைதூர இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. கமலம், லிச்சி, மிளகாய், கருப்பு அரிசி, மஞ்சள் போன்றவை பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று, இந்திய மண்ணில் விளையும் பொருட்களின் மனம், உலகின் பல பகுதிகளில் வீசுவதால், நாடு மகிழ்ச்சி அடைகிறது. இன்று, இந்திய நிலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் சுவைக்கு , உலக மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, கிராமங்களின் திறனை ஊக்குவிக்கும் நடவடிக்கைளில் ஓர் உதாரணமாக ‘ஸ்வமித்வா’ திட்டம் உள்ளது. கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு என்ன மதிப்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். நில உரிமையாளராக இருந்தாலும் நிலத்தின் மீது அவர்கள் எந்த வங்கிக் கடனும் பெறுவதில்லை. ஏனென்றால், பல ஆண்டுகாலமாகத் தமது நிலத்துக்கு அவர்களிடம் ஆவணமே இல்லை. இந்த நிலையை மாற்ற ஸ்வமித்வா திட்டம் முயற்சிக்கிறது. இன்று ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு நிலமும் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்படுகிறது. கிராம நிலங்களின் சொத்து ஆவணங்கள், தரவுகள்
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் மூலம், கிராமங்களில் நிலம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வருவது மட்டுமல்ல; கிராம மக்கள் வங்கிகளில் இருந்து எளிதாகக் கடன் பெறும் முறையும் ஏற்பட்டுள்ளது. கிராம ஏழை மக்களின் நிலங்கள், பிரச்சினைகளாக இருப்பதைவிட, வளர்ச்சியின் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்த திசையில்தான் நாடு இன்று செல்கிறது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தியாவின் எதிர்காலம் பற்றி சுவாமி விவேகானந்தர் பேசும் போதும், பாரதத் தாயின் மகத்துவத்தை தன் கண்முன் கண்டபோது அவர் சொல்வதுண்டு. இயன்றவரை, கடந்த காலத்தைப் பாருங்கள். அங்கே, எப்போதும் புதிதாய் இருக்கும் ஊற்றுநீரைப் பருகிப் பின் முன்னோக்கிப் பார்க்கவும். தொடர்ந்து முன்னேறி, இந்தியாவை சிறப்பாக, ஒளிமயமாக மாற்றுங்கள் என்றும் அவர் கூறுவார். இந்த 75-வது சுதந்திர தினத்தில், தேசத்தின் ஆற்றலில் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்லுதல் நமது கடமையாகும். புதிய தலைமுறைக் கட்டமைப்புக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். உலகத் தரத்திலான தயாரிப்புக்கு, நவீன புத்தாக்கத்துக்கு, புதுயுகத் தொழில்நுட்பத்துக்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, நவீன உலகில் வளர்ச்சியின் அடித்தளம், நவீன உட்கட்டமைப்பில் உள்ளது. இது நடுத்தர மக்களின் தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றுகிறது. வலுவற்ற கட்டமைப்பு, வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது; இதனால் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் துயரப் படுகிறது. அன்பார்ந்த நாட்டு மக்களே, தேவை உணர்ந்து நம் நாடு, நிலம் கடல் வானம் என ஒவ்வொரு துறையிலும் அசாதாரண வேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. புதிய நீர்வழிப் போக்குவரத்து உருவாக்குதலில், புதிய இடங்களை, கடலில் தரையிறங்கும் விமானங்கள் மூலம் இணைப்பதில், விரைவான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே, வேகமாக நவீன அவதாரத்துக்கு மாறி வருகிறது. சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தை கொண்டாட நாடு தீர்மானித்துள்ளது. இந்த அமிர்த மகோத்சவத்தை 75 வாரங்கள் கொண்டாடத் தீர்மானித்துள்ளோம் என்பதை அறிவீர்கள். இது கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கியது; 2023 ஆகஸ்ட் 15 வரை தொடரும். புதிய உற்சாகத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த வகையில் நாடு, முக்கிய முடிவு எடுத்துள்ளது.
சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தின் 75 வாரங்களில், 75 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் கட்டும் வேகம், நாட்டின் தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் உடான் திட்டம் - இதற்கு முன் இல்லாதது. சிறந்த வகை விமான கனெக்டிவிடி, எப்படி மக்களின் கனவுகளுக்கு சிறகு அளிக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
அன்பார்ந்த நாட்டுமக்களே, நவீன உட்கட்டமைப்புடன், கட்டுமானத்தை எழுப்புவதில் முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. வெகு விரைவில், ‘கதி சக்தி’ என்ற தேசிய மாஸ்டர் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்றும் மாபெரும் திட்டமாக இருக்கும். ரூ. 100 லட்சம் கோடிக்கு மேற்பட்ட இந்த திட்டம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கும்.
‘கதி சக்தி, திட்டம், நமது நாட்டுக்கு தேசிய உட்கட்டமைப்புக்கான மாஸ்டர் திட்டமாக இருக்கும். இது, முழுமையான உட்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும். நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒருங்கிணைந்த, முழுமையான வழிமுறையை ஏற்படுத்தும். நமது போக்குவரத்து முறையில் ஒருங்கிணைப்பு இல்லை. கதி சக்தி திட்டம் அனைத்துக் குறைபாடுகளையும், தடைகளையும் அகற்றும். இது சாதாரண மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும். தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கும். கதி சக்தி திட்டம், நமது உள்நாட்டு உற்பத்தியாளர்கள், உலகளாவிய போட்டியைச் சந்திப்பதில் முக்கியமானதாய் இருக்கும். எதிர்காலத்தில் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்தப் பத்தாண்டில், வேகத்தினால் வரும் சக்தி, இந்தியாவில் நல்மாற்றத்துக்கான அடிப்படையாக இருக்கும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்போது, தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இந்தியா தனது முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தின் கடல் பரிசோதனையை சில நாட்களுக்கு முன் தொடங்கியதைக் கண்டீர்கள். இன்று, இந்தியா தனது போர் விமானம், நீர்மூழ்கிக்கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், விண்வெளியில் இந்தியக் கொடியை நாட்டும். இதுவும், உள்நாட்டுத் தயாரிப்பில், நமது ஆழ்ந்த திறன்களுக்கு உதாரணமாக இருக்கிறது.
கரோனா காரணமாக எழுந்த புதிய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, மேக் இன் இந்தியா இயக்கத்தை ஒருங்கிணைக்க, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் அறிவித்தோம். எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்புத் துறை, ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நல்மாற்றம் பெற்ற துறைக்கு உதாரணமாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு பில்லியன் டாலர் அளவுக்கு செல்போன்களை இறக்குமதி செய்தோம். ஆனால், இப்போது இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. 3 பில்லியன் டாலர் அளவுக்கு நாம் செல்போன்களை ஏற்றுமதியும் செய்கிறோம்.
இன்று, நமது உற்பத்தித்துறை வேகம் எடுத்து வருகிறது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம், உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் உலகளாவிய போட்டியில் நாம் நிலைத்திருக்க முடியும். முடிந்தால், ஒருபடி முன்னேறி, உலகச் சந்தைக்குத் தயாராகத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். இதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். நாட்டின் தயாரிப்பாளர்களுக்கு நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன் - நீங்கள் உலக சந்தையில் விற்கும் பொருள் உங்கள் நிறுவனத் தயாரிப்பு மட்டுமல்ல; அது நமது நாட்டின் அடையாளம். இந்தியாவின் கவுரவம், நம் நாட்டு மக்களின் நம்பிக்கை. மறந்து விட வேண்டாம்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது தயாரிப்பாளர்களுக்குச் சொல்கிறேன் - உங்களின் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவின் தூதர். யாரோ ஒருவர், உங்கள் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்தும் போது, ‘இது இந்தியாவில் தயாரிக்கப் பட்டது’ என்று பெருமையுடன் கூற வேண்டும். இந்த மனநிலையே தேவை. நீங்கள் அனைவரும் உலக சந்தையை வெல்ல ஆசைப்பட வேண்டும். இந்தக் கனவு, நனவாக, அரசு உங்களுக்கு ஆதரவாக உள்ளது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இன்று நாட்டின் பல பகுதிகளிலும், இரண்டாம், மூன்றாம் நிலை மாநகரங்களில் கூட புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிறுவப்படுகின்றன. அவர்களும் தங்கள் தயாரிப்புகளை மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சந்தைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அரசு துணையாய் இருக்கும். நிதியுதவி அளித்தல், ரொக்கத் தள்ளுபடி, விதிமுறைகளை எளிமைப்படுத்துதல் என்று பல வகைகளில் அரசு இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இக்கட்டான கரோனா காலத்தில், புதிதாக பல ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதைப் பார்க்கிறோம். அவை வெற்றியுடன் முன்னேறுகின்றன. கடந்தகால ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எல்லாம் இன்று பிரபல நிறுவனங்களாக மாறியுள்ளன. அவர்களின் சந்தை மதிப்பு பல்லாயிரம் கோடியை எட்டி விட்டது.
அவர்கள் நாட்டில் இன்று, புதிய வகை சொத்து உருவாக்குபவராய் உள்ளனர். தனிச்சிறப்பான யுக்திகளால், அவர்கள் சொந்தக் காலில் நிற்கின்றனர்; உலகை வெல்லும் கனவோடு முன்னேறுகின்றனர். இந்த பத்தாண்டில், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை, உலகின் சிறந்ததாக மாற்றுவதை நோக்கி நாம் அயராது உழைக்க வேண்டும். அன்பார்ந்த நாட்டு மக்களே, பெரிய அளவிலான மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள, அரசியல் துணிவு தேவை. தற்போது, இந்தியாவில் அரசியல் துணிவுக்குப் பற்றாக்குறை இல்லை என்பதை உலகம் கண்டு வருகிறது. சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, நல்ல சாதுர்யமான அரசுமுறை தேவை. அரசுமுறையில் இந்தியா, புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உலகமே சாட்சியாய் உள்ளது.
இந்த ‘அமிர்த கால‘ யுகத்தில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சேவை வசதிகள் அனைத்தும், கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த சேவைகள் கடைசி நபர் வரை தடையின்றி, தயக்கமின்றி சிரமமின்றி சென்றடைதல் அவசியம். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, அரசின் தேவையற்ற தலையீடுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் தலையிடும் அரசாங்க நடைமுறைகள் முடிவுக்கு வர வேண்டும்.
முன்பு, அரசாங்கமே ஓட்டுனர் இருக்கையில் இருந்தது. அந்த காலகட்டத்தில், அதுவே மக்களின் கோரிக்கையாக இருந்திருக்கலாம். காலம் மாறிவிட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், அவசியமற்ற சட்டப் பின்னல்கள், நடைமுறைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் முயற்சிகள் நாட்டில் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இதுவரை நாட்டின் பழமையான சட்டங்கள் நூற்றுகக்கணக்கில் நீக்கப் பட்டுள்ளன. தற்போது, கரோனா பெருந்தொற்று காலத்திலும், 15,000-க்கு மேற்பட்ட விதிமுறைகளை அரசு ஒழித்துள்ளது. அரசாங்கத்தில் நடைபெற வேண்டிய சிறிய வேலைகளுக்குக் கூட, பல்வேறு சிரமங்களை, காகிதவேலைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதுவரை அத்தகைய நிலைமைதான் இருந்தது. நாங்கள், 15,000 நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம்.
சற்று நினைத்துப் பாருங்கள் … உங்களுக்கு ஓர் உதாரணம் கூற விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு சட்டம் 200 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது, 200 ஆண்டுகள் என்றால், 1857-க்கு முன்பிருந்தே இருந்து வந்தது. இந்த சட்டத்தின்படி, இந்த நாட்டு மக்கள் யாருக்கும் வரைபடம் தயாரிக்க உரிமை இல்லை. 1857 முதல் இது நடைமுறையில் இருந்தது. நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு வரைபடத்தைத் தயாரிக்க விரும்பினால், அதற்கு நீங்கள் அரசாங்க அனுமதி பெற வேண்டும், ஒரு புத்தகத்தில் ஒரு வரைபடத்தை அச்சிட விரும்பினாலும், அதற்கும் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டியிருந்தது; ஒரு வரைபடம் காணாமல் போனால், அதற்குப் பொறுப்பானவரைக் கைது செய்யும் நிலையும் இருந்தது. இப்போது, அனைத்து செல்போன்களிலும் வரைபட செயலி உள்ளது. செயற்கைக் கோள்கள் அவ்வளவு வலிமை வாய்ந்தவை! இதுபோன்ற சட்ட சுமைகளைச் சுமந்துகொண்டு நாட்டை எவ்வாறு நாம் முன்னேற்ற முடியும்? இதுபோன்ற நடைமுறைச் சுமைகளில் இருந்து விடுதலை பெறுவது மிக முக்கியம். வரைபடம் தயாரிப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ-க்கள் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி விட்டோம்.
அன்பார்ந்த நாட்டுமக்களே, அவசியமற்ற சட்டங்களின் பிடியில் இருந்து விடுதலை, வாழ்க்கையை எளிதாக்கும், தொழில் தொடங்குவதை எளிதாக்கும். நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தற்போது இந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றன. ஏராளமான தொழிலாளர் சட்டங்கள், தற்போது 4 சட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளன. வரி தொடர்பான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு, முகஅறிமுகமற்றதாய் மாற்றப்பட்டுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான், இதுபோன்ற சீர்திருத்தங்கள், அரசாங்க அளவில் மட்டுமின்றி, கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வரை சென்றடையும்.
தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்வது குறித்து, மத்திய – மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளும், ஓர் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டு மக்களுக்குச் சுமையாகவும், தடையாகவும் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். 70 - 75 ஆண்டுகளாகக் குவிந்து கிடப்பனவற்றை, ஒரு நாளிலோ, ஒரே ஆண்டிலோ ஒழித்துவிட முடியாது. ஆனால், நாம் ஒரு குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கினால், நம்மால் அதனை செய்து முடிக்க முடியும்.
அன்பார்ந்த நாட்டுமக்களே, இதனை மனதிற்கொண்டு தான் அரசு, கர்மயோகி இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது; அரசு நிர்வாகத்தில் மக்கள்-சார்ந்த அணுகுமுறையை அதிகரித்து, அவர்களின் திறமையை மேம்படுத்த, ’திறன் உருவாக்க ஆணையம்’ ஏற்படுத்தியுள்ளோம். அன்பார்ந்த நாட்டுமக்களே, நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ள, திறமையும், தகுதியும் உடைய இளைஞர்களை தயார்படுத்துவதில் நமது கல்வி, கல்விமுறை, கல்விப் பாரம்பரியம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
21-ம் நூற்றாண்டில் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக, நாட்டில் தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக நமது குழந்தைகள், தற்போது திறமைக் குறைவு அல்லது மொழிப் பிரச்சினை காரணமாக கல்வியை நிறுத்துவதில்லை. துரதிருஷ்டவசமாக, நம் நாட்டில் மொழிப் பிரச்சினையில் பெரும் பிளவு காணப்படுகிறது. நாட்டிலுள்ள அபரிமிதமான செயல்திறனை, மொழி என்ற கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளோம். தாய்மொழியில் கற்றால், உறுதியான திறமைகளை அடையாளம் காண முடியும். வட்டார மொழிகளைக் கற்றறிந்த மக்களிடையே தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாய்மொழியில் கல்வி பயின்று, வல்லுநர்களாக வரக்கூடிய ஏழைக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில், வறுமையை எதிர்த்துப் போரிடுவதற்கு மொழி ஒரு பெரும் சாதனமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை, வறுமைக்கு எதிரான போரில் சிறந்த கருவியாகத் திகழும். வறுமைக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு, கல்வி, பெருமிதம் மற்றும் வட்டார மொழியின் முக்கியத்துவமே அடிப்படை. நாடு இதனை விளையாட்டு மைதானத்தில் கண்டது. மொழி எந்த வகையிலும் தடையாக இருக்காது என்பதையும், இதன் காரணமாக இளைஞர்கள் சிறப்பாக விளையாடி, சாதிப்பதையும் நாம் பார்க்கிறோம். தற்போது வாழ்க்கையின் பிற துறைகளிலும் இதே நிலைமையைக் காண முடிகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விளையாட்டு, கூடுதல் பாடத் திட்டமாக அல்லாமல், பிரதான கல்வி முறையின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வலுவான ஒரு வழியாகவும் விளையாட்டு திகழ்கிறது. வாழ்க்கையில் முழுநிறைவு அடைவதற்கு, விளையாட்டையும் வாழ்க்கையில் ஓர் அம்சமாகக் கொள்வது மிக முக்கியம். விளையாட்டை கல்வியின் பிரதான முறைகளில் ஒன்றாகக் கருதாத காலம் இருந்தது. விளையாட்டுகளில் நேரம் செலவிடுவது, வாழ்க்கையை வீணாக்கும் என்று பெற்றோர் கருதினர். தற்போது, கட்டுடல் மற்றும் விளையாட்டு குறித்து புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இதனை நம்மால் காண முடிந்தது. இந்த மாற்றம், பெரிய திருப்புமுனை ஆகும். எனவே, விளையாட்டில் திறமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வல்லமையைப் புகுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும்.
கல்வி, விளையாட்டு, பொதுத்தேர்வு முடிவுகள், ஒலிம்பிக் போன்றவற்றில், இதுவரை இல்லாத வகையில் நம் புதல்விகள் சிறந்து விளங்குவது, நாட்டுக்குப் பெருமை அளிக்கிறது. தற்போது நம் புதல்விகள், அவர்களுக்கான இடங்களைப் பிடிக்கத் தொடங்கி விட்டனர். அனைத்துப் பணிகளிலும் பெண்கள் சமபங்குதாரர்களாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சாலைகள் முதல் பணியிடங்கள் வரை அனைத்து இடங்களும் பாதுகாப்பானதாகப் பெண்கள் உணர்வதை உறுதி செய்ய வேண்டும். தாம் மரியாதையாக நடத்தப்படுகிறோம் என்று பெண்கள் உணர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, அரசாங்கம், நிர்வாகம், காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை தங்களது கடமையை நூறு சதவீதம் நிறைவேற்ற வேண்டும். 75-வது சுதந்திரதின உறுதியாக, நாம் இந்த உறுதியை ஏற்க வேண்டும்.
நாட்டு மக்களுடன் நான் இன்று ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நமது பெண் குழந்தைகள் சைனிக் பள்ளிகளில் படிக்க விரும்புகிறார்கள் என்று லட்சக்கணக்கில் தகவல்கள் எனத் தகவல் வந்தது. அந்தப் பள்ளிகளின் கதவுகள், அவர்களுக்கும் திறந்து விடப்பட உள்ளது. ஒரு முன்னோடித் திட்டமாக, மிசோரம் மாநில சைனிக் பள்ளியில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே, பெண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சைனிக் பள்ளிகளை சிறுமிகளுக்காகத் திறந்துவிட அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இனி, நாட்டிலுள்ள அனைத்து சைனிக் பள்ளிகளிலும் நம் புதல்விகள் படிக்கலாம்.
தேசப்பாதுகாப்பைப் போன்றே, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா தற்போது வலுவான குரல் கொடுத்து வருகிறது, உயிரிப் பன்முகத்தன்மை, நிலச்சமன்பாடு, பருவநிலை மாற்றம், கழிவு மறுசுழற்சி, இயற்கை விவசாயம், உயிரி எரிவாயு, எரிசக்தி பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி மாற்றம் என்று எல்லாவற்றுக்காகவும் இந்தியா வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள், தற்போது பயனளிக்கத் தொடங்கி உள்ளன. வனப்பரப்பு, தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, புலிகள் மற்றும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
இந்த வெற்றிகளின் இடையே, ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை இந்தியா, எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இல்லை. இந்தியா, தற்போது எரிசக்தி இறக்குமதிக்காக, ஆண்டுக்கு 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சுயசார்பு - இந்தியாவை உருவாக்க, இந்தியா எரிசக்தியில் தன்னிறைவு பெறுவது காலத்தின் கட்டாயம். எனவே, நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக, எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெறுவதற்கு இந்தியா உறுதியேற்க வேண்டும், இதற்கான நமது செயல்திட்டம் மிகத் தெளிவானது. இது, எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக அமைய வேண்டும். 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, இந்தியா முயற்சித்து வருகிறது. மின்னணு வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை 100 சதவீதம் மின்சாரமயம் ஆக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்கவும், இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சிகள் தவிர, சுற்றுப் பொருளாதார இயக்கத்தையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. நமது வாகனக் கழிவுக் கொள்கை, இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஜி-20 நாடுகளிலேயே, பருவநிலை மாற்ற இலக்குகளை அடைய வேகமாகச் செயல் புரியும் நாடாக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது. இந்த பத்தாண்டுக்குள்ளாக, அதாவது 2030-ம் ஆண்டுக்குள்ளாக 450 கிகா வாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில்,100 கிகா வாட் உற்பத்தி இலக்கை, திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே இந்தியா எட்டியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள், உலகில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சூரியசக்தி கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பது, இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
பருவநிலையைப் பொருத்தவரை இந்தியாவில் தற்போது பசுமை ஹைட்ரஜைன் துறை முக்கியத்துவம் பெற்று வருகிறது. பசுமை ஹைட்ரஜன் இலக்கை எட்டுவதற்கு, தேசிய ஹைட்ரஜன் இயக்கம் ஒன்றை, இந்த மூவண்ணங்களின் சாட்சியாக இன்று அறிவிக்கிறேன். பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதுடன், ‘அமிர்த காலத்தில்‘ ஏற்றுமதி செய்யவும் பாடுபடுவோம். இது, எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதோடு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பசுமை எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்தவும் புதிய உத்வேகத்தை அளிக்கும். பசுமை வளர்ச்சி முதல் பசுமை வேலைவாய்ப்பு வரை, தற்போது ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
அன்பார்ந்த நாட்டு மக்களே 21-ம் நூற்றாண்டு இந்தியா பெரிய இலக்குகளை நிரணயித்துக் கொண்டு, அவற்றை அடையும் திறனையும் பெற்றுள்ளது. இன்றைய இந்தியா பல நூற்றாண்டுகளாக, பல பத்தாண்டுகளாக பற்றி எரிந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறது. சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு, வரி வலையிலிருந்து நாட்டை மீட்கும் முறையான ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது, நமது ராணுவ நண்பர்களுக்கு ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் தொடர்பான முடிவு.
ராமர் கோயில் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு… இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் நடந்ததை நாம் கண்டோம். திரிபுராவில் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ப்ரூ-ரீங் உடன்பாடு, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து, சுதந்திரத்துக்குப் பின்னர் முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் வட்டார, மாவட்டத் தேர்தல்கள் நடத்தியது என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திடமான உறுதி இந்தியாவுக்கு உள்ளது. இந்தக் கரோனா காலத்திலும், சாதனை அளவாக வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. துல்லிய தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி நாட்டின் எதிரிகளுக்குப் புதிய இந்தியாவின் ஆற்றலை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா மாறிவருகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவால் மாற முடியும். இந்தியாவால் மிகக் கடினமான முடிவுகளை எடுக்க முடியும். மேலும் கடுமையான முடிவுகளை எடுக்க அது தயங்காது; இத்துடன் நின்றுவிடாது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக உறவுகளின் இயல்பு மாறிவிட்டது. கரோனாவுக்குப் பின்னர் புதிய உலக அமைப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் இந்தியாவின் முயற்சிகளை உலகம் கண்டு, பாராட்டியுள்ளது. இன்று உலகம் இந்தியாவை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. இந்தப் பார்வையில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று தீவிரவாதம், மற்றொன்று ஆதிக்கவாதம். இந்தியா இவ்விரண்டு சவால்களையும் எதிர்த்துப் போராடி வருகிறது. கட்டுப்பாட்டுடன், உரிய முறையில் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தனது கடப்பாடுகளை இந்தியா முறையாக நிறைவேற்ற வேண்டுமெனில், பாதுகாப்புத் தயார்நிலை வலுவாக இருக்க வேண்டும். .
கைவினைத் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை வழங்க நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். பாதுகாப்புத் துறையில் நாடு தன்னிறைவை அடைவதற்கு இந்திய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நமது படைகளின் கரத்தை வலுப்படுத்த நாடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இன்று நாட்டின் சிறந்த சிந்தனையாளரான ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள்ஆகும். அவரது 150-வது பிறந்த நாள் 2022-ல் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கனவு கண்டவர் அரவிந்தர். நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானவர்களாக இருக்க வேண்டும் என அவர் கூறுவது வழக்கம். நாம் நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். நமக்கு நாமே மறுவிழிப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஶ்ரீ அரவிந்தரின் இந்தக் கூற்று நமக்கு நமது கடமைகளை நினைவூட்டுகின்றன.
குடிமகன் என்ற வகையிலும், சமுதாயம் என்ற வகையிலும் நாட்டுக்கு என்ன கொடுத்தோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். உரிமைகளுக்கு நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவை தேவைப்பட்டன. ஆனால் இப்போது, நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் முடிவுகளை நனவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம் நாடு தண்ணீர் சேமிப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. தண்ணீர் சேமிப்பை நமது கடமையாகக் கொள்ள வேண்டும். நாடு டிஜிட்டல் பரிவர்த்தனையை வலியுறுத்தி வருகிறது. ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைவாக வைத்துக் கொள்வது அவசியமாகும். உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுக்கும் இயக்கத்தை நாடு முன்னெடுத்துள்ளது. எனவே, முடிந்தவரை உள்ளூர்ப் பொருட்களையே வாங்க வேண்டியது நமது கடமையாகும். பிளாஸ்டிக் இல்லா இந்தியா எனும் குரலுக்கு வலு சேர்க்க, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அறவே கைவிடுவது நமது கடமையாகும். ஆறுகளில் குப்பைகளை வீசாமல் இருப்பதும், கடற்கரைகளைத் தூய்மையாக வைத்திருப்பதும் நமது கடமையாகும். தூய்மை இந்தியா இயக்கத்தை புதிய மட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று, 75-வது ஆண்டு சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழாவை நாடு கொண்டாடும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, நமது தீர்மானங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுதல் நம் அனைவரின் கடமையாகும். விடுதலைப் போராட்டத்தை நமது நினைவில் கொண்டு, மிகச்சிறிய அளவு பங்களிப்பாக இருந்தாலும், இந்த அமிர்த விழாவை ஏராளமான இந்தியர்களின் தூய்மையான முயற்சியாக மாற்றி, நாடு முழுவதையும் வரும் ஆண்டுகளிலும் ஊக்குவிக்க முன்வரவேண்டும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, நான் ஆருடம் கூறுபவன் அல்ல. நான் செயலை நம்புகிறவன். நாட்டின் இளைஞர்களிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. நம் நாட்டின் சகோதரிகள், பெண்மக்கள், விவசாயிகள், வல்லுநர்கள் ஆகியோரை நான் நம்புகிறேன். ‘நம்மால் முடியும்’ என்கிற தலைமுறை, கற்பனை செய்யக் கூடிய எந்த இலக்கையும் சாதித்துக் காட்டும். 2047 இல் நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, அன்று பிரதமராக யார் இருந்தாலும், இன்று நமது உறுதிமொழிகளாக நான் என்னவெல்லாம் சொல்கிறேனோ அவற்றையெல்லாம் நிறைவேற்றப்பட சாதனைகளாக அவர் தமது உரையில் குறிப்பிடுவார். இதை இன்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். வெற்றியின் மீது எனக்குள்ள உறுதியான நம்பிக்கை இது.
சாதனைகளை நிறைவேற்றியதை இந்த நாடு பெருமையுடன் பாடும். இன்றைய இளைஞர்கள் இந்தப் பெருமையை நாடு எவ்வாறு அடைந்தது என்பதை அப்போது காண்பார்கள். 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் ஆசைகள், கனவுகள் நிறைவேற்வதை எந்தத் தடையும் தடுத்து நிறுத்த முடியாது. நமது உயிர்ப்பே நமது வலிமை; நமது ஒற்றுமையே நமது வலிமை. ’நாடு முதலில் – எப்போதும் நாடுதான் முதலில்’ என்கிற உணர்வுதான் நமது உயிர்ப்பு சக்தியாகும். நம்மிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட கனவுகளுக்கான, தீர்மானங்களுக்கான, முயற்சிகளுக்கான நேரம் இது. மேலும் வெற்றி நோக்கி முன்னேறவும் இதுவே சரியான நேரம்.
எனவே, மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்- இதுதான் நேரம், இதுதான் நேரம்- சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்! இதுதான் நேரம்- சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்! எண்ணற்ற கரங்களின் சக்தி, எண்ணற்ற கரங்களின் சக்தி, எங்கும் தேசபக்தி! எண்ணற்ற கரங்களின் சக்தி, எங்கு நோக்கினும் தேசபக்தி… வாருங்கள், எழுங்கள், மூவண்ணக்கொடி ஏற்றுங்கள்! வாருங்கள்,எழுங்கள், மூவண்ணக்கொடி ஏற்றுங்கள்! இந்தியாவின் விதியை மாற்றுங்கள், இந்தியாவின் விதியை மாற்றுங்கள், இதுதான் நேரம், சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!
எதுவும் இல்லை… உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. உங்களால் சாதிக்க இயலாதது எதுவுமே இல்லை. நீங்கள் எழுங்கள்…. நீங்கள் எழுங்கள், தொடங்குங்கள், உங்கள் திறமைகளை அங்கீகரியுங்கள், உங்கள் திறமைகளை அங்கீகரியுங்கள், உங்கள் கடமைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் கடமைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள்! இதுதான் நேரம்- சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!
நாடு சுதந்திரத்தின் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, நாட்டு மக்களின் இலக்குகள் எட்டப்பட்டு இருக்க வேண்டும். இதுவே எனது ஆசை ஆகும். நல்வாழ்த்துகளுடன் மீண்டும் ஒருமுறை, நாட்டு மக்கள் அனைவரையும் இந்த 75-வது சுதந்திர தினத்தில் வாழ்த்துகிறேன்! உங்கள் கைகளை உயர்த்தி உரத்த குரலில் கூறுங்கள்- ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்! அன்னை இந்தியா நீடு வாழ்க! அன்னை இந்தியா நீடு வாழ்க!
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 74 - ‘உலகத்துக்காக உழைப்போம்!’ | 2020
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago