செங்கோட்டை முழக்கங்கள் 70 - ‘புதிய அணுகுமுறை... புதிய வேகம்!’ | 2016

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பலர். பல்வேறு துறைகளிலும் நிலையான நீடித்த வளர்ச்சியில் பொதுவாக இந்தியப் பிரதமர்கள் எல்லாருமே தீவிர ஈடுபாடு காட்டியுள்ளார்கள். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முன்னேற்றத்தில் முன்பு இல்லாத அளவுக்கு வேகம் காட்டினார். அதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சட்டங்களை மாற்றினார்; நீக்கினார்.

அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்தினார். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை நாட்டின் பல்துறை வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தினார். அவரது செயல் வேகத்தின் காரணமாகவே நரேந்திர மோடி, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும் பிரதமராக விளங்குகிறார். ஆனாலும் இலக்கு நோக்கிய தனது பயணத்தின் வேகத்தைக் குறைக்காமல் விரைகிற பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆகஸ்ட் 15 அன்று டில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரை இதோ:

அன்பார்ந்த குடிமக்களே, விடுதலைத் திருவிழா எனும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இந்தச் செங்கோட்டைத் தளத்தில் இருந்து, 125 கோடி குடிமக்களுக்கும் உலகம் முழுதும் வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் ஏராளமான நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடுதலைத் திருவிழா, 70 ஆண்டு சுதந்திரம், புதிய உறுதி புதிய வேகம் புதிய சக்தியுடன் இந்த தேசத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் தீர்மானத்துக்கான திருவிழா. லட்சக்கணக்கான நமது முன்னோர்களின் தியாகம், துறவு, தவத்தின் விளைவாக சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கிறோம். தூக்குக் கயிறை முத்தமிட்ட இளைஞர்கள் நினைவுக்கு வருகிறார்கள். நமது தேசத்தின் விடுதலைக்காக ஓய்வின்றிப் போராடிய மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், பண்டித நேரு உள்ளிட்ட எண்ணற்ற மாமனிதர்களை நினைவு கூர்கிறோம். இவர்கள் நடத்திய போராட்டங்களால் தான் இன்று நாம் சுதந்திர குடி மக்களாய் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நல்வாய்ப்பு பெற்றுள்ளோம்.

இந்தியா ஒரு தொன்மையான தேசம். பல்லாயிரம் ஆண்டு வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. வேதம் முதல் விவேகானந்தர் வரை, உபநிஷத்துகள் முதல் செயற்கைக்கோள் வரை, சுதர்சன் சக்ரதாரி மோகன் முதல் சக்ரதாரி மோகன் வரை, மகாபாரத பீமன் முதல் பீமாராவ் வரை நீண்ட வரலாற்றுப் பயணம் மற்றும் பாரம்பரியம் கொண்டுள்ளோம். நமது நிலம் வரலாற்று உயர்வு தாழ்வுகளைக் கண்டுள்ளது; நமது தலைமுறைகள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்; மனித குலத்துக்கு மகத்தான வழங்குவதற்காக தவம் செய்துள்ளனர். அடிமைத்தனத்துக்கு முடிவு கட்டி விடுதலை பெற்று, இந்த 70 ஆண்டு காலப் பயணத்தில் நமது தேசத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளோம். சர்தார் வல்லப பாய் பட்டேல் இந்த தேசத்தை ஒன்றிணைத்தார். இப்போது, இதனை மேலும் சிறந்ததாய் ஆக்குவது, நம் அனைவரின் பொறுப்பாகும். 'ஒரு பாரதம் - மகத்தான பாரதம்' என்கிற கனவை நிஜமாக்க நாம் அனைவரும் ஓய்வுவின்றிப் பணியாற்ற வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, விடுதலையை நாம் செலவின்றி இலவசமாய் பெற்று விடவில்லை. எண்ணற்ற கொடுமைகள்; ஆனாலும் தளராத உறுதி கொண்டிருந்தோம். விடுதலைப் போரில் ஒவ்வோர் இந்தியரும் ஒரு வீரராய் இருந்தார். ஒவ்வொருவரும் சுதந்திர இந்தியாவைக் கனவு கண்டார். அவர்கள் எல்லாருக்குமே தியாகம் செய்யும் நல்வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம்; அவர்கள் அனைவருக்கும் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாது போய் இருக்கலாம்; ஆனால் ஒவ்வோர் இந்தியருக்கும் மனஉறுதி இருந்தது. மகாத்மாவின் தலைமையின்கீழ் அனைத்தையும் தியாகம் செய்த கணக்கற்ற புரட்சியாளர்களுடன் அவர்கள் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள்.

இந்த இயக்கங்கள் அனைத்தும் நாம் சுதந்திரம் பெறப் பங்காற்றின. இப்போது நாம் இந்த விடுதலையை 'உண்மையான' விடுதலையாக மாற்ற வேண்டும். இதுதான் இன்று 125 கோடி இந்தியர்களின் தீர்மானம். தியாகம் இல்லாமல் சுதந்திரம் பெறவில்லை. அதேபோல, உண்மையான விடுதலையும்.. தியாகம் செய்யாமல், மனித முயற்சி இல்லாமல், ஒழுங்கும் அர்ப்பணிப்பும் இல்லாமல் அடைய முடியாது. எனவே 125 கோடி இந்தியர்களின் இந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல, மிக உறுதியான வகையில், தெளிவான பொறுப்புகளோடு நாம் முன் செல்ல வேண்டும்.

பஞ்சாயத்தோ நாடாளுமன்றமோ, கிராமத்தலைவரோ, பிரதமரோ நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் நிறைவாக முழுவதுமாக பொறுப்புகளை சுமக்க வேண்டி இருக்கும். அப்போதுதான் நமது கனவான உண்மையான விடுதலையை விரைவில் நாம் காண முடியும். இப்போதெல்லாம் நமது நாட்டில் நிறைய பிரச்சினைகள் எழுகின்றன என்பது உண்மை. ஆனால், பிரச்சினைகள் இருப்பது போலவே அவற்றைத் தீர்க்கும் திறனும் நமக்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நமது முழுத் திறனுடன் முன்சென்றால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் வழிகளை நாம் காண்போம். ஆகவே சகோதரர்களே சகோதரிகளே, நமக்கு லட்சக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என்றால், இவற்றைத் தீர்க்கும் திறன் கொண்ட 125 கோடி மூளைகள் உள்ளன.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, ஒரு காலத்தில் அரசு அவதூறுகளால் சூழப்பட்டு இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. தற்போது, அரசு மீது அவதூறு கூறப்படுவது இல்லை. மேலும் அரசிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்புகளால் அரசு சூழப்பட்டு இருந்தால் அது, நம்பிக்கையைக் குறிக்கிறது. இதுவே எதிர்பார்ப்புகளை இன்னுமும் அதிகரிக்கிறது. எதிர்பார்ப்புகள் - நல்ல அரசுக்கு வேகம் தருகிறது; செயல் புரியத் தூண்டுகிறது. இதனால் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது. எனது சகோதரர்களே சகோதரிகளே, இன்று செங்கோட்டையில் இருந்து உங்களுடன் நான் உரையாடும்போது, நல்ல அரசு முறையின் பயணம் குறித்து, அரசு செய்துள்ள செய்து வருகிற செய்ய இருக்கிற பணிகள் குறித்து உரையாடுதல் இயற்கையானதே. அரசின் செயல்பாடுகள், இதுவரை ஆற்றியுள்ள பணிகள் குறித்து விரிவாக என்னால் எடுத்துக் கூற முடியும்.

இரண்டு ஆண்டு காலத்தில், எண்ணற்ற காரியங்களை முன்னெடுத்து ஏராளமான பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. இவற்றைப் பற்றி நான் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் இந்த செங்கோட்டை தளத்திலிருந்து உங்களிடம் ஒரு வாரம் பேச வேண்டும். ஆகவே நான் இந்த அரசின் பணி கலாச்சாரம் குறித்து பேச விரும்புகிறேன். சில சமயங்களில் நாம் என்ன செய்தோம் என்பதை சொல்வது எளிது. ஆனால் பணி கலாச்சாரம் பற்றி ஆழமாக எடுத்துச் சொன்னால் அன்றி ஒரு சாமானியனால் அதனை எளிதாகப் புரிந்து கொள்ள, அடையாளம் காண முடியாது. எனது அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே எனது நாட்டு மக்களே, நான் கொள்கைகளைப் பற்றி மட்டுமே பேச விரும்பவில்லை; அரசின் நோக்கங்கள் முடிவுகள் குறித்தும் பேச விரும்புகிறேன்.

அன்பான சகோதரர்களே சகோதரிகளே, இது வெறுமனே இயக்குவது மட்டுமல்ல; மாற்றத்துக்கான தீர்மானம், ஒட்டுமொத்த அணுகுமுறை பற்றியது ஆகும். ஜனநாயகம், மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் ஆதரவு ஆகிய மூன்றின் சங்கமமாகும். இது அறிவுக் கூர்மை மற்றும் கருத்தொற்றுமை பற்றியது. முன்னேற்றத்தின் வேகம் மற்றும் நிறைவேற்றம் பற்றியது. ஆகவே நாட்டு மக்களே, நல்ல அரசு முறை குறித்து நான் பேசும்போது, இந்த நாட்டு சாமானியனின் வாழ்க்கையில் நல்மாற்றம் என்றே அதற்குப் பொருள். நல்ல அரசு என்றால் சாமானியனின் உணர்வைப் புரிந்து கொண்ட, செயல்படுகிற, அர்ப்பணிப்பு உள்ள அரசு என்று பொருள். அப்போதுதான் நல்ல அரசுக்கு வலியுறுத்தல் கிடைக்கும். அதன் ஆழத்தில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்; அதற்கு தேவையான முக்கிய ஆற்றலை அது அங்கிருந்தே பெற வேண்டும். பெரிய மருத்துவமனைக்கு போக நீண்ட நேரம் பார்த்து இருக்க வேண்டிய நாட்களை நினைவு கூரலாம்.

மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவார்கள், இரண்டு மூன்று நாட்கள் காத்திருப்பார்கள், அதன் பிறகு தான் என்ன பரிசோதனைகள் செய்யலாம் என்றே முடிவெடுக்கப்படும். இந்த முறையை இப்போது மாற்றி உள்ளோம். ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்; மருத்துவரின் நேரமும் ஆன்லைனில் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு நோயாளிக்கான சிகிச்சை தொடங்குகிறது. இது மட்டுமல்ல நோயாளி பற்றிய அத்தனை விவரங்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இதையே நாடெங்கும் மருத்துவ சிகிச்சையில் ஒரு கலாச்சாரமாக வளர்க்க விரும்புகிறோம். இன்று இந்த முறை நாட்டில் 40 பெரிய மருத்துவமனைகளில் உள்ளன. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படையாகும்.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, அரசு (மக்களுக்கு) கடப்பாடு கொண்டதாய் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சாமானியர்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படாமலேயே இருக்கும். மாற்றம் எப்படி வருகிறது? புதிய தொழில்நுட்பம் இருக்கிறது. ஒரு காலத்தில், ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் தேவையான ரயில்வே டிக்கெட்... ஒரு நிமிடத்துக்கு 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கும். அதைப் பார்த்தவர்கள் அறிவார்கள் - இணையத்தில் சுழன்று கொண்டே இருக்கும்.. எப்போது இணையம் பணிபுரியும் என்று தெரியாது. ஆனால் இப்போது.. மனநிறையுடன் சொல்கிறேன், ஒரு நிமிடத்துக்கு 15,000 டிக்கெட்டுகள் வரை கிடைக்கும். பொறுப்புள்ள அரசாங்கம், பொதுமக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நமது நாட்டில் நடுத்தர, உயர்நடுத்தர மக்கள் - சில சமயங்களில், காவல்துறையை விடவும், வருமானவரித்துறை அலுவலர்களால் அதிகம் தொல்லைக்கு உள்ளானார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்; நான் முயற்சிக்கிறேன்; நிச்சயம் இதனை மாற்றுவேன்.

ஒரு காலம் இருந்தது - நேர்மையானவர்கள் சாமானியர்கள், வருமான வரி செலுத்தும் போது எச்சரிக்கையாய் இரண்டு ரூபாய் கூடுதலாக செலுத்துவார்கள். தாம் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டோம் என்று கருதுவார்கள். ஆனால், அரசு கருவூலத்துக்குக் கூடுதலாக செலுத்தி விட்டால், அந்தத் தொகையைத் திரும்பப் பெற அங்கும் இங்கும் ஓட வேண்டும். அவருக்கு உரிமையான தொகையை அரசிடம் இருந்து பெற சில மாதங்களாகும். இன்று நாம் ஆன்லைன் ரீஃபண்ட் முறையை கொண்டு வந்துள்ளோம். இப்போது, ஒன்று/ இரண்டு/ மூன்று வாரங்களில் ரீஃபண்ட் கிடைத்து விடுகிறது. தொலைக்காட்சியில் இன்று நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் உணர்வீர்கள் - ரீஃபண்ட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை; ஆனாலும் தனது வங்கிக் கணக்கில் ரீபண்ட் தொகை வந்து விடுகிறது. இந்தப் பொறுப்புணர்வு நாம் எடுத்த முயற்சிகளால் விளைந்தது.

நல்ல அரசுக்கு மிக முக்கியமாக வலியுறுத்தப்படுவது - வெளிப்படைத்தன்மை. உங்களுக்குத் தெரியும் - என்று நமது சமூகத்தில் உலகளாவிய உறவுகள் என்பது சாதாரணமாகி விட்டது. ஒரு நடுத்தர நபருக்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. ஒரு காலம் இருந்தது - பாஸ்போர்ட் கேட்டு 40 லட்சம் 50 லட்சம் விண்ணப்பங்கள் வரும். இன்று தோராயமாக 2 கோடி மக்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கிறார்கள். சகோதரர்களே சகோதரிகளே, இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க முன்பெல்லாம், பரிந்துரை ஏதும் இல்லை என்றால், 4 - 6 மாதங்களாகும். இந்த நிலைமையை மாற்றினோம். இன்று பெருமையுடன் சொல்கிறேன் - நேர்மையான விவரங்கள் தரும் குடிமக்கள் ஓரிரு வாரங்களில் பாஸ்போர்ட் பெறுகிறார்கள். இதில் தாமதம் இல்லை; பரிந்துரை தேவையில்லை; வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று.. என்னால் சொல்ல முடியும்.. 2015-16ல் மட்டும் 1.75 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப் பட்டுள்ளன.

சுயராஜ்ய அரசாங்கத்தில் திறமை இருக்க வேண்டும். முன்பெல்லாம், ஒரு நிறுவனம் நமது நாட்டில் தொழிற்சாலை அமைப்பது என்றால் அல்லது வணிகம் நடத்த வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். பதிவு செய்வதற்கு மட்டுமே ஆறு மாதங்களாகும். சகோதரர்களே சகோதரிகளே, திறமை கொண்டு வந்து விட்டால், பிறகு அதே அரசு, அதே சட்டங்கள், அதே அலுவலர்கள், 24 மணி நேரத்துக்குள் அந்த பதிவு பணியை முடித்து விடலாம். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற ஜூலையில் மட்டும் 900 பதிவுகள் செய்யப் பட்டுள்ளன.

சகோதரர்களே சகோதரிகளே, ஸ்வராஜ்யம் என்றால் திறன் வாய்ந்த அரசு அவசியமாகும். கடந்த ஆண்டு செங்கோட்டைத் தளத்தில் இருந்து நான் கூறியபடி, நல்ல அரசை நோக்கிய நமது முயற்சியாக, பிரிவு 'C', 'D' பணிகளுக்கு நேர்முகத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் நேரடியாகப் பணி பெறலாம். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் பணியமத்தப்பட வேண்டிய 9,000 பதவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இளைஞர்கள் இனியும் நேர்முகத்தேர்வுக்காக பணம் செலவழிக்க வேண்டியது இல்லை. பரிந்துரைகள் தேவையில்லை. ஊழலுக்கான இடைத் தரகர்களுக்ளின் பாதைகள் மூடப்பட்டு விட்டன. இந்த செயல் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.

சகோதரர்களே சகோதரிகளே, ஒரு காலம் இருந்தது - அரசாங்கம் ஒரு திட்டம் அறிவித்து செயல்படுத்தப்படும் என்று சொன்னாலே மக்கள் திருப்தி அடைந்தார்கள். உறுதியாக ஏதோ நடைபெறும் என்று நம்பினார்கள். பிறகு மக்களே திட்டங்கள் கேட்டார்கள். இன்று, 70 ஆண்டுகளில், மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. அறிவிப்புகளால், திட்டங்களை பார்ப்பதால், நிதி ஒதுக்கீடு செய்வதால் அதனை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. களத்தில் பணி செய்யப்பட்டு முடிந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். பழைய வேகத்திலேயே இருந்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நமது பணியை விரைவுபடுத்த வேண்டும். வேகத்தைக் கூட்ட வேண்டும். பிறகு தான் நாம் ஏதோ செய்தோம் என்று கூறிக் கொள்ள முடியும். இது மிகப்பெரும் பணி. அடல் பிஹாரி வாஜ்பாய், இப்பணியை மேற்கொண்டார். தொடர்ந்து வந்த அரசுகளும் இதனை செய்தது. முன்னதாக ஒரு நாளில் 70 - 75 கி.மீ. கிராமத்து சாலைப்பணி முடிக்கப்பட்டது. இப்போது இதனை ஒரு நாளைக்கு 100 கி.மீ., என்று உயர்த்தி இருக்கிறோம். வரும் நாட்களில் இந்த வேகம் சாமானியனின் ஆசைகளை நிறைவேற்றும்.

ஆற்றல் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது நாம் முக்கியத்துவம் தருகிறோம். ஒரு காலம் இருந்தது - சுதந்திரத்துக்குப் பல ஆண்டுகள் பிறகு, காற்றாலை மின்சாரம் மீது பணியாற்றத் தொடங்கினோம். கடந்த ஓராண்டுக்குள் இதனை 40 சதவீதம் அதிகரித்து உள்ளோம். இதுதான் வேகத்தின் அளவு. உலகம் முழுதும் சூரிய ஆற்றலின் மீது கவனம் செலுத்துகிறது. இதனை நாம் ஏறத்தாழ 116 சதவீதம் - 118 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். இது மிகக் கணிசமான உயர்வு மட்டுமல்ல; முன்னோக்கிய மிகப்பெரிய தாவலுமாகும். இன்னமும் பெரிய அளவில் விரிவுபடுத்த விரும்புகிறோம். நமது அரசை நிறுவுவதற்கு முன்பே, மின் தயாரிப்பு இருந்தது. ஆனால் மின்சக்தியை உருவாக்க, டிரான்ஸ்மிஷன் வசதிகள் டிரான்ஸ்மிஷன் கட்டுமானம் தேவை.

நாம் அரசு பதவி ஏற்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு 30,000 - 35,000 கி.மீ., ட்ரான்ஸ்மிஷன் வயர்கள் பொருத்தப்பட்டன. இன்று, நான் மனநிறைவுடன் கூறுகிறேன், இதனை 50,000 கி. மீ.ஆக உயர்த்தி உள்ளோம். ஆகவே வேகத்தைக் கூட்டி உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரயில்வேத் தடங்களை எடுத்துக் கொண்டால், 10 ஆண்டுகளில் 1,500 கி.மீ., என்கிற அளவில் இருந்தது. நிறுவப்பட்ட வழித்தடமென்றால் ரயில்கள் செல்வதற்கான திறன்கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாம் 3,500 கி.மீ., தடம் அமைத்துள்ளோம். இந்த வேகத்தை இன்னும் கூட்ட இருக்கிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, இப்போது நாம் அரசுத் திட்டங்களை ஆதார் அட்டையுடன் இணைத்து வருகிறோம். 'நேரடிப் பயன்மாற்றம்' மூலமாக, கசிவுகளைத் தடுக்க முடியும். ஆகவே இதில் கவனம் செலுத்துகிறோம். முந்தைய அரசு நான்கு கோடி மக்களை, அரசுத் திட்டம் - ஆதார் அட்டையில் இணைத்தது. இன்று நான் மனநிறைவுடன் சொல்ல முடியும் - நான்கு கோடி மக்கள் இருந்த இடத்தில் - 70 கோடி மக்களின் ஆதார் அட்டை, அரசுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவையும் இணைக்கப்பட்டு விடும்.

இன்று, நடுத்தர மக்களுக்கு சாமானியர்களுக்கு, கார் வைத்திருப்பது ஒரு பெருமையாக இருக்கிறது. ஒரு காலத்தில், வீட்டில் கேஸ் அடுப்பு இருப்பதே சமூக அந்தஸ்தாகக் கருதப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளில் 14 கோடி காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதேசமயம் கடந்த 60 வாரங்களில் மட்டும் 4 கோடி இணைப்புகள் வழங்கியுள்ளோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் - 60 வருடங்களில் 14 கோடி; 60 வாரங்களில் 4 கோடி! இதுதான், சாமானிய மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் சாத்தியமாகும் மாற்றத்தின் வேகம். வழக்கொழிந்து போன சட்டங்களை நீக்கும் பணியையும் தொடங்கி விட்டோம். தேவையற்ற சட்டங்கள் ஏற்படுத்தும் சுமை, அரசு நீதித்துறை மற்றும் பொதுமக்களின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருக்கிறது. இத்தகைய 1,700 சட்டங்களை அடையாளம் கண்டுள்ளோம். இவற்றில் 1,175 சட்டங்களை ஏற்கனவே நாடாளுமன்றம் மூலம் நீக்கி விட்டோம். மற்றுமுள்ள இதுபோன்ற சட்டங்களையும் நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சகோதரர்களே சகோதரிகளே, மக்களிடம் ஒருபோக்கு நிலவுகிறது - சில பணிகளைச் செய்ய முடியும்; சில பணிகளைச் செய்ய முடியாது; சில பணிகளை இப்போது செய்ய முடியாது; சில பணிகளை எப்போதுமே செய்ய முடியாது. மக்களின் மனதில் ஒருவித எதிர்மறை சிந்தனை நிலவுகிறது. இப்போது இந்த மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது; அரசின் செயல்பாட்டில் ஒரு புதிய ஆற்றல் தென்படுகிறது. ஒரு காரியம் நிறைவேற்றப்படும் போது, அது புத்தாக்கத்தை எழுப்புகிறது; இது நமது வைராக்கியம் கூர்மையாகிறது; இதனால் நாம் எதிர்பார்க்கும் நல்விளைவு வெகு தூரத்தில் இருந்து அருகே வந்து விடுகிறது.

சகோதரர்களே சகோதரிகளே, பிரதம மந்திரி ‘ஜன் தன் யோஜனா’ தொடங்கப் பட்ட போது, அது அநேகமாக சாத்தியமற்ற காரியமாக இருந்தது. இதனை நான் அரசியல் சாதனையாகப் பெருமை பேச மாட்டேன்; இது உண்மையில் நமது நாட்டின் 125 கோடி மக்களின் சாதனை. இவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். நமது நாட்டின் கிராமங்களில் பெண்களின் கவுரவம் குறித்து நடைபெற்று வரும் நிகழ்வுகள், இன்று ஒரு பிரச்சினையாகி உள்ளது. பொதுவெளிக் கழிப்பிடம் கூடாது; கிராமங்களில் கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும். செங்கோட்டைத் தளத்தில் இருந்து உரையாடும் முதல் வாய்ப்பு பெற்றபோதே, இது குறித்த எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இன்று நான் கூற முடியும் - குறுகிய காலத்திலேயே நமது கிராமங்களில் இரண்டு கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது 70,000க்கு மேற்பட்ட கிராமங்கள் பொதுக் கழிப்பிடங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. சாமானிய மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர பணியாற்றி வருகிறோம்.

செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து முன்னர் நான் அறிவித்தேன் - மின்வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்வசதி தருவோம். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு செய்யப் போகிறோம் ஆனாலும் அவர்கள் இன்னமும் மின் வசதியை காணவில்லை. இவர்கள் இன்னமும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் முயற்சி மேற்கொண்டோம். ஆயிரம் நாட்களில் பாதி பணிதான் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன் - மொத்தம் 18,000 கிராமங்களில், இதுவரை 10,000 கிராமங்களுக்கு மின் வசதி தரப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் பலவற்றில் இன்று முதன்முறையாக சுதந்திர தின விழாவை தொலைக்காட்சிகளில் பார்க்கிறார்கள். இந்த கிராமங்களுக்கு இன்று இங்கே இருந்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, தலைநகர் தில்லியில் இருந்து 3 மணி நேரப் பயணத்தில் உள்ளது ஹாத்ராஸ் மண்டலத்தின் நாக்லா ஃபடேலா கிராமம். இங்கிருந்து அங்கு செல்ல மூன்று மணி நேரம்தான் ஆகும். ஆனால் அங்கே மின்வசதி சென்று சேர 70 ஆண்டுகள் ஆயிற்று. ஆம். எழுபது ஆண்டுகள்! ஆகவேதான் சகோதர சகோதரிகளே, நாம் பின்பற்ற வேண்டிய பணிக் கலாச்சாரத்தை அறிமுகம் செய்கிறேன்.

சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அறிவியலும் ஆய்வாளர்களும் நமக்கு எல்இடி பல்புகள் உருவாக்கித் தந்தனர். இந்தியாவில் இதன் விலை ரூ. 350. யார் வாங்குவார்கள்? அரசாங்கம் என்ன நினைக்கும்? ' நமது வேலை முடிந்து விட்டது. சிலர் அதை பயன்படுத்தி கொள்வார்கள். ' அரசின் அணுகுமுறை இப்படி இருக்கக் கூடாது. எல்இடி பல்புகள் சாமானியன் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமானால், அது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் எனில் அது நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனில், இந்த திசையில் அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தேவைப்படாத இடங்களில் குறிப்பிடுவதும் வேண்டும் போது ஒதுங்கிச் செல்வதும் அரசாங்கத்தின் இயற்கை ஆகி விட்டது. இந்த நிலையை இந்த பணி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கிறோம். ஆகவே 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த பல்புகள் இப்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காரணம் அரசின் குறுக்கீடு. ஒரு கையில் 350 ரூபாய் மறு கையில் 50 ரூபாய். இந்தப் பணம் எல்லாம் முன்னே எங்கே போய்க் கொண்டிருந்தது என்று நான் கேட்க விரும்பவில்லை. இன்று வரை 13 கோடி பல்புகள் விநியோகிக்கப் பட்டுள்ளன.

நமது நாட்டு அரசியல் ஜனரஞ்சகம் (populist) ஆகிவிட்டது; பொருளாதாரக் கொள்கைகள் 'பாபுலிஸ்ட்' ஆகிவிட்டது. அரசுக் கருவூலத்தில் இருந்து ஒவ்வொரு பல்புக்கும் ரூ.300 மானியம் வழங்கப்பட்டிருந்தால், மக்களுக்கு 500 கோடி ரூபாய் கொடுத்ததாய் பிரதமர் பாராட்டப்பட்டு இருப்பார். ஆனால் 50 ரூபாய்க்கு பல்புகள் வழங்கி மக்களுக்கு 500 கோடி ரூபாய் மிச்சம் ஆவதை உறுதி செய்தோம். ஏற்கனவே 13 கோடி பல்புகள் விநியோகித்து உள்ளோம். 77 கோடி பல்புகள் விநியோகிக்க உறுதி கொண்டு உள்ளோம். தமது வீடுகளில் எல்இடி பல்புகளை பயன்படுத்துமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஓர் ஆண்டுக்கு ரூபாய் 200/ 300/ 500 சேமிப்பாகும்; நமது ஆற்றலை, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். 77 கோடி பல்புகள் என்கிற இலக்கை நாம் எட்டும் போது, 20,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிப்போம். அதாவது 1,25,000 ரூபாய் வரை சேமிப்போம். சகோதரர்களே சகோதரிகளே, நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு எல்இடி பல்பு பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு 1,25,000 கோடி ரூபாய் சேமிப்பாகும். 20,000 மெகாவாட் மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் பூவி வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போரிட முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் சாமானியரும் பங்களிக்கலாம். சகோதரர்களே சகோதரிகளே, இயலாததை இயலச் செய்யும் திசை நோக்கி நாம் பணி புரிகிறோம்.

ஆற்றல் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு நாம் உலகின் பிற நாடுகளையே சார்ந்து இருக்கிறோம். இதற்காக நாம் அவர்களோடு நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளோம். இதனால் இந்தப் பொருட்களை நீண்ட காலத்துக்கு நிலையான விலையில் பெற முடியும். 2024 வரை எரிவாயு வாங்குவதற்கு கத்தார் நாட்டுடன் உடன்படிக்கை செய்துள்ளோம். ஆனால் நமது பொருளாதாரத்துக்கு அந்த விலை மிக அதிகம். நமது வெளியுறவுக் கொள்கை, உறவுகள் அடிப்படையில் அதை குறைப்பதற்கு பேசினோம். சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கினோம். இந்தியக் கருவூலத்துக்கு 2,000 கோடி ரூபாய் மிச்சப் படுத்தினோம். இந்த 2,000 கோடி ரூபாய் அவர்களுக்குச் சேர வேண்டிய பணம். அவர்களோடு நாம் வைத்திருக்கும் கொள்கைகள் உறவு காரணமாக இதை சாத்தியமாக்கினோம். எல்லா அரசுகளின் போதும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சபர் துறைமுகத்துக்காக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மத்திய ஆசியாவுடன் மிக முக்கிய இணைப்பு இது. சாத்தியமற்றது சாத்தியமாக்கிய மனநிறைவு இன்று எனக்கு இருக்கிறது. சபர் துறைமுகம் கட்டுமானத்துக்காக ஈரான் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா கூட்டாக சேர்ந்து செயல்படும் போது சாத்தியமற்ற காரியம் சாத்தியம் ஆகிறது.

எனது சகோதர சகோதரிகளே, சாமானியனை பாதிக்கிற பணவீக்கம் குறித்துப் பேச விரும்புகிறேன். முந்தைய அரசின் காலத்தில் பணவீக்கம் 10 சதவீதத்தை கடந்து இருந்தது என்பது உண்மைதான். நம்முடைய தொடர் முயற்சிகளால் இதனை 6 சதவீதத்துக்குக் கீழ் கொண்டு வந்தோம். இது மட்டுமல்ல; பணவீக்க விகிதம் 4 சதவீதம் என்கிற அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளோம். இந்த அளவு 2 சதவீதம் வரை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பணவீக்கம் - வளர்ச்சி இடையே சமநிலை குறித்த பேச்சுகளைப் பின் தள்ளுவோம்; மேற்கொண்டு முன்னேறப் பணியாற்றுவோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு கடும் வறட்சியைக் கண்டது. இதன் விளைவாக காய்கறி விலை உயர்ந்தது.

சந்தை நிலவரம் மந்தமானதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் வறட்சி காரணமாக பருப்பு உற்பத்தி குறைந்து போனதும் கவலை தந்தது. ஆனால் சகோதர சகோதரிகளே, முன்பை போல பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து இருந்தால், நமது நாட்டு ஏழை மக்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் இன்று எனக்குத் தெரியவில்லை. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம். மக்கள் இந்த அரசிடம் ஏராளமாக எதிர்பார்ப்புகள் வைத்துள்ளார்கள். அன்பார்ந்த நாட்டு மக்களே உங்களுடைய எதிர்பார்ப்புகள் இயல்பானவை; இவற்றை நிறைவேற்றுவதில் எதையும் நான் விட்டு வைக்க மாட்டேன். என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். ஏழை மனிதனுக்கான உணவின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பேன்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, குரு கோவிந்த் சிங் -ன் 350 ஆவது பிறந்தநாளை இந்த நாடு கொண்டாட இருக்கிறது. சீக்கிய குருமார்களின் பாரம்பரிய தியாக வரலாற்றை இந்த நாடு எப்படி மறக்க முடியும்? குரு கோவிந்த சிங்-ன் 350 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் போது இன்று, நமது விவசாயிகளை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களின் கைகளைவிடவும் யாருடைய கைகள் சுத்தமானவை? இவர்களில் இதயங்களை விடவும் யாருடைய இதயங்கள் புனிதமானவை? இவர்களின் நோக்கங்களை விட யாருடைய நோக்கங்கள் மேலானவை? விவசாயிகளுக்கு எனது நன்றிகள். இரண்டு ஆண்டுகளுக்கு வறட்சி நிலவிய போதும், தொடர்ந்து நமது களஞ்சியங்களை நிரப்பி வருகிறார்கள். இதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். வறட்சி நிலை மாறி விட்டது. இந்த முறை நல்ல பருவ மழை பார்த்து வருகிறோம். சில இடங்களில் கனமழை சில பிரச்சினைகளை கூட ஏற்படுத்தி இருக்கிறது.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலங்களுக்கு இந்திய அரசு துணையாய் இருக்கிறது. இன்று நான் விவசாயிகளுக்கு மிகவும் குறிப்பாக நன்றி கூறுகிறேன். ஏனென்றால், நாம் பருப்பு வகை பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம்; நமது விவசாயிகள் பிற பயிர்களுக்கு மாறி இருக்கிறார்கள்; சாமானியருக்கு பருப்பு வகைகள் தேவையாய் இருக்கிறது; இந்த முறை நமது விவசாயிகள் ஒன்றரை மடங்கு அதிகமாக விதைத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனென்றால், பருப்பு வகைகளுக்கான நெருக்கடி பிரச்சினைக்கு த் தீர்வு காண முன்வந்துள்ளார்கள். பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, அதற்கு மேல் ஊக்கத் தொகையும் அறிவித்துள்ளோம். பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கான வழிகளை ஒழுங்கு படுத்தியுள்ளோம்; பருப்பு வகைகளைப் பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கம் தருகிறோம். இது நமக்கு மிகப்பெரிய வகையில் நன்மை செய்யும்.

சகோதர சகோதரிகளே, பணிக் கலாச்சாரம் குறித்து நான் பேசும் போது, ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன் - எந்தப் பிரச்சினையையும் நான் தனித்துப் பார்ப்பதில்லை; ஒட்டுமொத்தமாகவே பார்க்கிறேன். இவற்றை ஒருங்கிணைந்து பார்ப்போம்; ஒருங்கிணைந்த வகையில் விவசாயத்தைப் பாருங்கள்; கடும் உழைப்புடன் இந்தப் பணிக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம்; மொத்தமாய் இந்தச் சங்கிலி மகத்தான விளைவுகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கு முதலாய் நாம், மண் நலம் மீது, நிலத்தின் மீது, மண் ஆரோக்கிய அட்டை, மேக்ரோ ஊட்டச்சத்து, மைக்ரோ ஊட்டச்சத்து ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினோம்.

'உங்கள் மண்ணில் ஓர் 'இடைவெளி' இருக்கிறது'; 'நல்ல பண்புகள் இருக்கின்றன'; 'உங்கள் மண் இந்தப் பயிருக்கு மிக நல்லது'; 'இந்தப் பயிருக்கு இது ஏற்றதல்ல' என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் புரிய வைத்தோம். இதன்படி திட்டமிட்ட மக்கள் சொல்கிறார்கள் - 'எங்களது செலவு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது; உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாய் தெரிகிறது'. தற்போதைக்கு இந்த எண்ணிக்கை குறைவு; ஆனால் எதிர்காலத்தில் இது தொடரும்போது இந்தக் கருத்துரு இன்னும் வேகம் பெறும். விவசாயிகளிடம் நிலம் இருக்கிறது; தண்ணீர் மட்டும் கிடைக்குமானால், நம் நாட்டு விவசாயி மண்ணில் இருந்து தங்கம் விளைவிப்பார். (மண்ணைப் பொன்னாக்குவார்)

நமது விவசாயிகளுக்கு இந்த சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் தண்ணீர் மேலாண்மை நீர்ப்பாசனம் தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு துளி தண்ணீரும் எவ்வாறு விவசாயத்துக்குப் பயன்படுத்தப் படலாம்; தண்ணீரின் முக்கியத்துவத்தை எவ்வாறு அதிகரிப்பது; ஒரு துளி நீரில் கூடுதலாக எவ்வளவு பயிர் பெறலாம்; மைக்ரோ நீர்ப் பாசனம்.. ஆகியவற்றை வலியுறுத்துகிறோம். 90 சதவீதத்துக்கு மேலான நீர்ப்பாசன திட்டங்கள் முடிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை முதலில் முடிக்கும் பொறுப்பை ஏற்று உள்ளோம். நீர்ப்பாசனத்தின் பயன், பல லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குக் கிடைக்கச் செய்யும் திசையில் உழைக்கிறோம்.

சோலார் பம்புகளை நோக்கி மிகப்பெரிய அளவில் முன்னேறுகிறோம். இதனால் விவசாயிகளுக்கு உள்ளீட்டுச் செலவு (input cost) குறையும். ஏனெனில், அவர்களுக்குத் தண்ணீர் வேண்டும்; தண்ணீருக்கு மின்சாரம் வேண்டும்; மின்சாரம், செலவு மிக்கது. சோலார் பம்புகள் காரணமாக, விவசாயிகளுக்கு உள்ளீட்டுச் செலவு குறையும். தொடர் செலவுகள் குறையும்; வீட்டில் சொந்தமாய் சோலார் பம்புகள் வைத்திருப்பதால், சொந்தமாய் மின்சாரம், சொந்தமாய் சூரியன், சொந்தமாய் நிலம், சொந்தமாய் களஞ்சியம் இருக்கும். விவசாயி மகிழ்ச்சியாய் இருப்பார். இதுவரை வெற்றிகரமாய் 77,000 சோலார் பம்புகள் விநியோகித்துள்ளோம்.

சகோதரர்களே சகோதரிகளே, நம் நாட்டு விவசாயிகளைப் பாராட்ட விரும்புகிறேன். மண், தண்ணீர், சோலார் பம்புகளுடன் நல்ல தரமான விதைகளும் தேவை. இந்தியாவின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற, உற்பத்தியை பெருக்கும் திறன் கொண்ட 131 புதிய விதைகளை நம் நாட்டு விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தக்க வைத்துக் கொள்ளும் மதிப்புகளும் உயர்த்தப் படுகின்றன. இந்த விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன். நமது விவசாயிகளுக்கு யூரியா மற்றும் உரங்கள் தேவைப்படுகின்றன. முன்பொரு காலம் இருந்தது - உரங்களைப் பெறுவதற்குக் கருப்புச் சந்தை; உரங்களுக்காகக் கூடும் விவசாயிகள் மீது போலீஸ் லத்தி சார்ஜ்.. என்கிற வழக்கம் இருந்தது. உரம் இல்லாமையால் தம் கண்ணெதிரே பயிர்கள் பாதிக்கப்படுவதை விவசாயிகள் வேதனையுடன் பார்த்தனர். சகோதரர்களே சகோதரிகளே, உரப்பற்றாக்குறை என்பது கடந்த காலக் கதையாக, வரலாறு ஆகி விட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயரிய அளவு உரம் உற்பத்தி செய்துள்ளோம். இது, நமது விவசாயிகளுக்கு சரியான நேரத்துக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

இதேபோன்று, 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' உருவாக்கினோம். இது ஒரு காப்பீட்டுத் திட்டம். விவசாயிகளின் நிலத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு; வேளாண் பயிருக்கு மிகக் குறைந்த காப்பீட்டு ப்ரீமியம்; அதுவும் உத்தரவாதத்துடன் காப்பீடு கொண்டது இந்தத் திட்டம். 15 லட்சம் டன் உணவுப்பொருட்களை பாதுகாக்கும் புதிய கிடங்குகள் கட்டியுள்ளோம். மதிப்புக் கூட்டலை நோக்கி நகர்ந்தால் தான் நமது விவசாயிகள் உண்மையில் பயன் பெறுவார்கள். ஆகவே முதன்முதலாக, உணவுப் பதனிடுதலுக்கு முக்கியத்துவம் தருகிறோம். வேளாண்மை சார் தொழில்களுக்குத் துணை புரியும் வகையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறோம். இதன் விளைவாக சகோதர சகோதரிகளே, 2022 வாக்கில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நமது கனவு நிறைவேறும் என்று நம்புகிறேன். நமது நடவடிக்கைகள் இதை சாத்தியமாக்கும், மெய்யாக்கும். இதற்காக ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே நமது நாட்டில் 'ட்ரெண்ட்' என்றாலே, ஈர்ப்பு இருக்கிறது. நமது நாட்டு அரசுகள் பிறரைக் கவர்வதற்காக நிறைய செய்துள்ளன. ஜனரஞ்சகாமானதைச் செய்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்கள். தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தும் ட்ரெண்டு அரசுகளுக்கு இருக்கின்றன. சகோதரர்களே சகோதரிகளே, இந்தப் போக்கிலிருந்து நான் விலகி இருக்க இயன்றவரை முயற்சிக்கிறேன். இவ்வாறு செய்யும் போது, 'முழு மாற்றம்', 'வெளிப்படையான மாற்றம்', 'சீர்திருத்தம் செயல்பாடு மாற்றம்' (Reform Perform Transform') என்று பலவற்றை முயற்சிக்கிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, இந்துஸ்தானத்தின் தோற்றத்தை (மேலும் சிறந்ததாய்) மாற்றி அமைக்க மிக அதிக அளவில் உறுதி கொண்டுள்ளோம். கட்சியின் அடையாளத்தை விடவும் இந்த நாட்டின் அடையாளம் முக்கியமானது. ஏனெனில் இந்த நாடு உயர்ந்தால் அது, வரும் தலைமுறைகளுக்கு, பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தரும். துல்லியமாக இந்த காரணத்துக்காகவே நாம் கட்சி அடையாளத்துக்கு அல்ல நாட்டின் அடையாளத்துக்கு முக்கியத்துவம் தருகிறோம். இப்போதெல்லாம் ரயில்வே செயல்பாடுகளில் நிறைய இடம் இருக்கிறது. ரயில்களில் பயோ டாய்லெட்டுகள் இருக்க வேண்டும் என்று பேசும்போதே, புல்லட் ரயில் பற்றியும் பேசுகிறோம்.

விவசாயிகளுக்கான 'மண் ஆரோக்கிய அட்டை' பற்றிப் பேசும் போதே, செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேற விரும்புகிறோம். 'ஸ்டாண்ட் அப் இந்தியா' குறித்துப் பேசும் போதே 'ஸ்டார்ட் அப் இந்தியா' நோக்கி நடவடிக்கை எடுக்கிறோம். அடையாளக் குறியீட்டை விடவும் உள்ளீட்டை அதிகம் வலியுறுத்துகிறோம். தனித்தனியான வளர்ச்சியை விட ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருகிறோம். உரிமையாளர் (entitlement) என்பதை விட உரிமை (empowerment) என்பதற்கே அதிக கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் ஒரு நாட்டின் empowerment என்பது புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களின் மூலம் அரசுக்கு அடையாளம் தருகிறது. பழைய திட்டங்கள் தாமாகவே சரிந்து விடுகின்றன. அதே சமயம் அரசு (எனும் நிறுவனம்) ஒரு தொடர்ச்சி.

முந்தைய அரசுகள் ஏதேனும் பணி ஆற்றியிருந்தால் அது தேச நலனுக்கானது என்றால் அதில் உள்ள குறைகளை நீக்கி அடுத்த அரசு இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும். அது உங்களுடைய அரசின் பணி; இது என்னுடைய அரசாங்கம்; எனவே இந்த பணியை செய்ய மாட்டேன் என்று கூறுவது ஆணவம்; ஜனநாயகத்துக்குப் பொருந்தி வராது. அதனால்தான் மெத்தப் பணிவுடன் முந்தைய அரசுகளீன் திட்டங்களுக்கும் அதே முக்கியத்துவம் தருகிறோம். இதுதான் நமது பணிக் கலாச்சாரத்தின் அடையாளம். நமது தேசம் ஒரு தொடர்ச்சியான இடைவெளி இல்லாத அமைப்பு முறை; இந்த முறையைத் தக்க வைக்க விரும்புகிறோம். அதனால் தான் நாம் ஒரு திட்டம் வைத்துள்ளோம் - 'பிரகதி'. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் நானே அமர்ந்து எல்லா திட்டங்களையும் மறு ஆய்வு செய்கிறேன். அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள் - முந்தைய அரசுகள் தொடங்கிய ரூபாய் ஏழரை லட்சம் கோடிக்கான 119 திட்டங்கள் தேங்கி இருந்தன. இவை எல்லாவற்றையும் மீண்டும் செயல்படுத்தினேன். ஏற்கனவே நிறைய நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே இவை எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும். இப்போது இவையெல்லாம் முடியும் தருவாயில் உள்ளன.

திட்டங்களை கண்காணிக்க ஒரு குழு அமைத்துள்ளோம். இந்த திட்டங்கள் எல்லாம் எப்போது தொடங்கப்பட்டன என்று பார்க்கச் சொன்னோம். இவற்றில் சில திட்டங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர், வேறு சில 15இல் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்டவை. திட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இவை எல்லாம் தெரியும். முந்தைய அரசுகளால் தொடங்கப் பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 270 திட்டங்களை அடையாளம் கண்டோம். சில கோடி ரூபாய் இதன் மீது செலவிடப் பட்டுள்ளது. இவையெல்லாம் வீணாய் போய் இருந்தது. இவ்வாறு நின்று போன திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் தொடங்கினோம். சகோதரர்களே சகோதரிகளே, முன்பெல்லாம் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க இரண்டு ஆண்டுகள் வரை ஆயிற்று. ஒரு ரயில் செல்கிறது. இரு பக்கமும் சாலைகளும் போடப்பட்டுள்ளன; ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும். ஆனால் இதற்கான ஒப்புதலுக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. இந்த ஒப்புதல் நடைமுறையை நாம் விரைவு படுத்தி உள்ளோம். ஒப்புதலுக்கான காலத்தை 3 - 4 மாதமாக, அதிகபட்சம் ஆறு மாதமாகக் குறைத்துள்ளோம்.

சகோதரர்களே சகோதரிகளே, நாம் எவ்வளவுதான் வேகமாகப் பணியாற்றினாலும் எத்தனை திட்டங்களை நாம் தொடங்கினாலும் ஒரு அரசின் நல்ல நிர்வாகம் என்பது கடைசி மனிதனைச் சென்று சேர வைப்பதாகும்; திட்டத்தின் பயன் சென்று அடைவதாகும். இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சகோதரர்களே சகோதரிகளே, கொள்கைகள் தெளிவாக இருக்கும் போது, நோக்கங்கள் தெளிவாக இருக்கும் போது, இந்த முடிவுகளின் பின்னால் உள்ள உணர்வுகளும் தனித்தே இருக்கும்; இத்தகைய முடிவுகளைத் தயக்கமின்றி எடுக்கலாம். ஆகவே சரியான முடிவுகள் மற்றும் சரியான நோக்கங்கள் காரணமாக நமது அரசாங்கம் தயக்கமின்றி முடிவுகள் எடுக்கின்றது; கடைசி மனிதனைச் சென்று சேர்வதை வலியுறுத்துகிறது.

உத்திர பிரதேசத்தின் செய்தித்தாள்களைப் பார்த்தால்.. ஒவ்வோர் ஆண்டும் கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவை இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் இதைச் செய்வதில்லை; அரசும் இதைச் செய்வதில்லை; இதனால் கரும்பு விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது. ஆகவே இது குறித்து திட்டங்கள் தயாரித்தோம். கடைசி மனிதனுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முயற்சித்தோம்; விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்வதை உறுதி செய்தோம். சகோதரர்களே சகோதரிகளே, நிலுவையில் இருந்த பல்லாயிரம் கோடி ரூபாயில் தற்போது அநேகமாக 99.5 சதவீத தொகை வழங்கப்பட்டுவிட்டது என்பதில் மனநிறைவு அடைகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக இது நடந்துள்ளது. மன ஆறுதலுடன் கூறுகிறேன் - சந்தைக்குக் கரும்பு கொண்டு வந்த விவசாயிகளில் 95 சதவீதம் பேர், கரும்புக்கான பணம் பெற்றுள்ளனர். வரும் நாட்களில் மீதமுள்ள 5 சதவீதம் பேரும் பணம் பெறுவார்கள்.

சகோதரர்களே சகோதரிகளே, ஏழைக் குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்க ஓர் இயக்கம் தொடங்கியுள்ளோம். செயல் துடிப்பு மிக்க இயக்கம் 'உஜ்வாலா' திட்டம் தொடங்கியுள்ளோம். இதனால் அடுப்புப் புகையிலிருந்து ஏழைத் தாய்களை விடுவித்துள்ளோம். மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு காஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். பணிகள் நடந்து வருகின்றன; ஏற்கனவே சுமார் 50 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதுவும் 100 நாட்களில் செய்துள்ளோம். அப்படியானால் குறிப்பிட்ட இலக்கை மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே அடைவது சாத்தியம் என்று நீங்கள் யூகிக்கலாம். இந்த இயக்கத்தில் Last Mile Delivery அதாவது கடை கோடிக்கும் சென்று சேர்வதை வலியுறுத்துகிறோம்.

அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், வாட்ஸ் அப், குறுந்தகவல், மின்னஞ்சல் காரணமாக அஞ்சல் என்பது தொடர்ந்து காலத்துக்கு ஒவ்வாததாய் மாறி வருகிறது. நம் நாடு, அஞ்சல் அலுவலகங்களின் சங்கிலியாக அறியப்படுகிறது; இந்த அஞ்சல் அலுவலகங்களை நாம் மறுநிர்மாணம் செய்துள்ளோம். அஞ்சல் அலுவலகங்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுடன் இணைந்து உள்ளன. சாமானிய மனிதனின் உணர்வுடன் பாசத்துடன் இணைந்துள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாக அஞ்சல்காரர் இருக்கிறார். எல்லாருடைய அன்பையும் பெற்ற சாமானிய மக்களுக்காக எப்போதும் கவலைப்படுகிற அஞ்சல்காரரின் நலன்களை நாம் பாதுகாக்கவே இல்லை. அஞ்சல் அலுவலகத்தை 'பேமண்ட்' வங்கியாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த பேமெண்ட் வங்கிகளை அமைப்பதன் மூலம் நாட்டின் கிராமங்களில் வங்கி நெட்வொர்க் அமைக்கப்படுகிறது. ஜன்தன் கணக்கின் பயன்களை மக்கள் பெறுவார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், சாமானியருக்கான நிதி ஆதார் மூலமாக அவரவர் வங்கி கணக்கில் மாற்றல் செய்யப் படுகிறது. இதனால் ஊழல் வழக்குகள் குறைகின்றன. அஞ்சல் அலுவலகத்தை பேமெண்ட் வங்கியாக மாற்றுவதன் மூலம் ஒவ்வொருவருக்கும் பயன் கிடைக்கும்.

சகோதரர்களே சகோதரிகளே, நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் வெறுமனே இழப்பு ஈட்டவே நிறுவப்படுகின்றன. அல்லது நோய்வாய்ப்பட்ட அலகுகளில் இருந்து நிலையாய் நிதானமாய் முதலீட்டை திரும்பப் பெறுவதற்காக இருக்கின்றன. கடந்த காலத்தில் இதுதான் வழக்கமாக இருந்தது. நாம் புதிய பணிக்கலாச்சாரத்தைக் கொண்டு வரப்பாடுபட்டோம். இன்று நான் மனநிறையுடன் குறிப்பிடுகிறேன் - கடந்த ஆண்டில், பாதகமாக அறியப்பட்ட ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றுவதில் வெற்றி அடைந்து உள்ளோம். உலகில் உள்ள எல்லா டெலிகாம் நிறுவனங்களும் வருவாய் ஈட்டும் அலகுகளாக இருக்கும் போது, பிஎஸ்என்எல் மட்டும் மிகப் பெரும் இழப்பைத் தரும் நிறுவனமாக இருந்தது.

முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஆபரேஷனல் லாபம் கொண்டு வந்தது. இந்திய கப்பல் நிறுவனம், லாபம் ஈட்டும் என்று யாரும் நம்பவில்லை. இப்பொழுது லாபம் சம்பாதிக்கிறது. முன்பெல்லாம் ஒரு மின்விசை தொழிற்சாலை ஒரு வாரம் எப்படி நீடிக்கும் .. அதற்குத் தேவையான நிலக்கரி கிடைக்குமோ கிடைக்காதோ என்று அச்சப்பட்டது உண்டு. நிலக்கரி இல்லாமல் இவரை தொழிற்சாலைகள் மூடப்பட்டதாயும் செய்திகள் வந்தன. இப்போது, இந்த தொழிற்சாலைக்கு தேவையான நிலக்கரி இருப்பு இருக்கிறது. இதை இன்னும் பல மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.சகோதரர்களே சகோதரிகளே நாம் சாதித்து இருக்கிறோம்.

அடிக்கடி நமது நாட்டில், ஊழல் பற்றிப் பெரிதாக பேசப் படுவதைப் பார்க்கிறோம். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை எவ்வாறு ஊழல் பாதிக்கிறது, எவ்வளவு பெரிய தொகை வீணாகிறது என்று நானே கவனித்து இருக்கிறேன். அரசுக் கொள்கைகளோடு ஆதார் எண், ஆதார் அட்டையை இணைத்துள்ளோம். அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, முன்னர் ஒரு செயல் முறை இருந்தது - கைம்பெண் ஓய்வூதியம், உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மை மக்களுக்காக கருவூலத்தில் இருந்து பணம் தரப்படும். பயனாளிகளின் பட்டியல் வரும். பிறக்காத குழந்தைகள் எல்லாம் கூட இந்தப் பட்டியலில் இருந்தார்கள்; திட்டத்தின் கீழ் பயன்பெற்றார்கள்!

இடை நபர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்தார்கள்; ஆனாலும் யாரும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஆதார் அமைப்பின் கீழ், இத்தகைய இடை நபர்கள் எல்லாரும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்; நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப் பட்டது. பல லட்சம் போலிப் பயனாளிகள் இருந்ததும் பல நூறு கோடி ரூபாய் அவர்களுக்கு சென்றதும் கண்டறியப்பட்டது. இது இப்போது தடுக்கப்பட்டு விட்டது. ஏராளமான பணத்தை நாம் சேமித்து இருக்கிறோம். பட்டியலில் இருந்து விடுபட்ட நபர்களைக் கண்டறிய முடிவு செய்துள்ளோம். தமது உரிமைகளுக்காக போராடும் மக்களில் வங்கிக் கணக்குகளில் செலுத்த இருக்கிறோம். கடைக்கோடியில் உள்ள மனிதனுக்கும் கிடைக்கும் வகையில் அந்த திசையில் பணிபுரிகிறோம்.

நிலக்கரி ஊழல் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இன்று நிலக்கரி ஏலத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இதனுடன் எந்தக் களங்கமும் இல்லை. வரும் காலத்தில், நிலக்கரி வெட்டி எடுக்கும் மாநிலங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் ஈட்டுவார்கள். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த காலம் இருந்தது. இதனை நாம் ஆன்லைனில் ஏலம் விட்டோம். நாட்டுக் கருவூலத்தை நிரப்பியது; ஆரோக்கியமான போட்டியைக் கொண்டு வந்தது; தேசத்துக்கும் நன்மை விளைவித்தது.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, உலகம் முழுவதும் இப்போது உலகப் பொருளாதார சகாப்தத்தைக் கடந்து வருகிறது. இன்று ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது; ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக மொத்த உலகமும் ஏதோ ஒரு வகையில் உள்ளுக்குள்ளே தொடர்புடையதாக இருக்கிறது. நமது நாட்டில் நாம் எவ்வளவு முன்னேறினாலும், உலகப் பொருளாதாரம் உலகக் களத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத் தரத்தோடு பொருந்தி வர வேண்டும். இன்றும் பொருத்தமாய் இருக்க வேண்டும்; பங்களிக்க வேண்டும்; நேரம் வரும்போது உலகப் பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டும். ஆகவே நாம் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய தினத்துக்கு ஏற்றவாறு உலக தர நிலைக்கு உகந்ததாய் இருக்க வேண்டும்.

சமீபத்தில் உலக வங்கி ஐஎம்எப் உலகப் பொருளாதார அமைப்பு மற்றும் இது போன்ற அமைப்புகள் எவ்வாறு இந்திய வளர்ச்சியை பாராட்டி இருக்கின்றன என்பதைப் பார்த்து இருப்பீர்கள். அணுகு முறையில் மாற்றம், அமைப்பு முறையில் முன்னேற்றம், அடுத்தடுத்து சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான நமது முடிவுகளை உலகம் விடாது பார்க்கிறது. 'வணிகம் செய்வதில் எளிமை' தரத்தில் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். வெளிநாட்டு முதலீட்டைப் பொருத்தமட்டில் உலகத்தில் இன்று நமது நாடுதான் மிக விருப்பமான தெரிவாக இருக்கிறது. வளர்ச்சி விகிதம் மற்றும் ஜிடிபி யில் நாம் உலகின் பெரிய பொருளாதரங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறோம்.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, ஐ.நா.,சபையைச் சேர்ந்த ஓர் அமைப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவைக் குறித்து என்ன கணக்கீடு வெளியிட்டுள்ளது தெரியுமா? உலகப் பொருளாதாரத்தில் தற்போது உள்ள பத்தாவது இடத்திலிருந்து இந்தியா, இன்னும் இரண்டு ஆண்டுகளில், மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று அது கணக்கிட்டுள்ளது. சகோதர சகோதரிகளே, தளவாட ஆதரவு (logistics support) உட்கட்டமைப்பு.. இவையெல்லாம் உலகத் தரங்களில் உலகின் செல்வந்த நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது.

சகோதரர்களே சகோதரிகளே, இந்தியாவில் தளவாட ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு பற்றி அலசிய போது, முன்னர் இருந்த நிலையைக் காட்டிலும் இந்தியா, 19 படிகள் உயர்ந்துள்ளது; மேலும் விரைவாக முன்னேறி வருகிறது என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது. சகோதரர்களே சகோதரிகளே, நமது நாட்டில் மற்றும் உலகத் தளத்தில் செயல் திறன் மிக்க பொருளாதாரத்தில் நாம் உயர்ந்து வருகிற விதம், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டம், இதை நோக்கிய அதிகாரமிக்க அடுத்த படிநிலை. இதற்காக எல்லாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

சகோதரர்களே சகோதரிகளே, இதே இடத்தில் இருந்து நான் ஓர் இயக்கம் குறித்து பேசி இருந்தேன் - 'Beti Bachao - Beti Padhao'. (பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்) எந்த வேலையும் நாம் துண்டு துண்டாக செய்வதில்லை. ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்டுள்ளோம். Beti Bachao.... திட்டத்துக்குகு சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை. ஒவ்வொரு பெற்றோருக்கும் விழிப்புணர்வு தேவை. புதல்விகளை கவுரவிக்க வேண்டும்; அவர்களைப் பாதுகாக்க வேண்டும்; அரசுத் திட்டங்களின் பயன்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். 'சுகன்யா சம்ரிதி யோஜனா' கீழ், பல லட்சம் குடும்பங்களைக் கொண்டு வந்துள்ளோம். உதவிகள் வளரும்போது அவர்களுக்கு இந்தத் திட்டம் பயன்களை உறுதி செய்கிறது. பெண்கள் பயன் பெறும் காப்பீட்டு திட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவம் தருகிறோம். இதன் பயன்களை அவர்கள் அறுவடை செய்ய இருக்கிறார்கள்.

இந்திர தனுஷ் டிக்காகரன் யோஜனா இருக்கிறது. இரண்டு அம்சங்கள் - பொருளாதார உரிமை, ஆரோக்கியத்துக்கான உரிமை - நமது அன்னையர், சகோதரிகளுக்கு உறுதி செய்யப்பட்டால், அவர்களைக் கற்பித்தால், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தாலும், உறுதியாய், ஒரு பெண்மணி உடல் ரீதியாய் வலுவாகவும் பொருளாதார சுதந்திரம் கொண்டவராயும் இருந்தால், ஏழ்மையிலும் ஏழ்மையில் இருக்கும் குடும்பத்தை வறுமையில் இருந்து வெளிக்கொண்டுவரும் சக்தி அப்பெண்ணுக்கு இருக்கிறது. ஆகவே, வறுமைக்கு எதிரான போரில், மகளிர் அதிகாரம் மகளிர் சுகாதாரம் மகளிர் பொருளாதார வளமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

ஆகவே சகோதரர்களே சகோதரிகளே, 'முத்ரா யோஜனா' - மூன்றரை கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் முத்ரா யோஜனாவின் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதன் கீழ் வங்கியை அணுகிய மக்களில் பெரும்பாலோர் முதன்முறையாக வங்கிக்கு வந்தவர்கள். அதிலும், வந்தவர்களில் 80 சதவீதம் பேர், எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிலும், முத்ரா வங்கியில் கடன் பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பது பரிசீலனைக்கு உரியது.

சகோதரர்களே சகோதரிகளே, நமது வளர்ச்சி சரித்திரத்தில் பங்கு பங்கு கொண்ட அன்னையருக்கு சகோதரிகளுக்கு குழந்தை பிறப்புக்குப் பிறகான விடுமுறை வழங்க முடிவெடுத்து உள்ளோம். முன்னர் இந்த விடுமுறை, குறைவாக இருந்தது. இப்போது இதனை 26 வாரங்களாக உயர்த்தி உள்ளோம். இதனால் புதிய அன்னைகள் மழலைகளை நன்கு கவனித்துக் கொள்ள முடியும். நமது நெசவாளர்கள் மற்றும் ஜவுளித் துறையில் நூல் இழைக்கும் பணி செய்வோர், ரூ.100 பெறுவார்கள். இதனை நாம் ரூ.190ஆக உயர்த்தி உள்ளோம்.

நூல் தயாரிக்கும் அன்னையர், சகோதரிகளின் கரத்தை வலுப்படுத்தி உள்ளோம். பட்டு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நமது அன்னையர் சகோதரிகள் மற்றும் நெசவாளர்கள் தான் தயாரிக்கும் ஒவ்வொரு மீட்டருக்கும் ரூ.50 கூடுதலாகப் பெறுவார்கள். இந்த ரூ.50 மனிதருக்கோ இடைத்தரகர்களுக்கோ விற்பனையாளருக்கோ போகக்கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். பதிலுக்கு இந்த ரூ.50, ஆதார் வழியாக யார் தயாரித்தாரோ அந்த நெசவாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செல்லும். இது நெசவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும். இந்த நோக்கத்துடன் நாம் திட்டங்களை தொடங்கினோம்; இதன் விளைவு நன்கு தெரிகிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, ரயில்வே மற்றும் அஞ்சல் அலுவலகங்களை மணலில் நினைக்கும் போதே இந்தியாவின் ஒற்றுமையை நம்மால் காண முடிகிறது. இந்தியாவை இணைக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகிற போது நமது அமைப்பு மாறும்; அது நம்முடைய ஒற்றுமையை செயல்படுத்தும். இதேபோல, விவசாயிகளுக்காக புதிய சந்தை 'இ-நாம்' (e-NAM) தொடங்கியுள்ளோம். இன்று, ஆன்லைன் மூலம் தமது விளை பொருட்களை விவசாயிகள் நாட்டின் எந்த சந்தையிலும் விற்க முடியும். தனது நிலத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சந்தையில் தான் தனது விளைபொருளை விற்றாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தனது கடின உழைப்புக்கு ஈடு செய்யாத குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. 'இ-நாம்' மூலம், நாடு முழுவதும் ஒரே சீரான சந்தை நெட்வொர்க் உருவாகிறது.

ஜிஎஸ்டி மூலம் விரைவில் ஒரே சீரான வரி விதிப்பு முறை (uniform taxation system), இந்தியாவை இணைக்கும். முன்னர், கூடுதல் விசையுடன் ஒரு மண்டலம் இருந்தது; ஆனால் அதைப் பெறுவார் யாரும் இல்லை. மற்றொரு மண்டலத்தில் மின்சாரத்துக்கு மிகக் கடுமையான தேவை இருந்தது; ஆனாலும் இருளில் மூழ்கி தொழிற்சாலையை மூடி வைக்க வேண்டி இருந்தது. இந்தக் காட்சியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர, ' ஒரு நாடு ஒரு க்ரிட் (கிடங்கு) ஒரு விலை' மூலம் பெரும் வெற்றி பெற்றோம். முன்னர் இது, கோடையில் ஒரு யூனிட்டுக்கு ரூ 10 என்று இருந்தது; சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானா சென்று இருந்தேன். முன்னர் இருந்த பத்து ரூபாய்க்கு பதிலாக இப்போது ஒரு யூனிட் ஒரு ரூபாய் பத்து காசுக்கு கிடைப்பதைப் பார்த்தேன். இது முழு தேசத்தையும் இணைக்கும் 'ஒரு விலை' அமைப்பு முறையின் விளைவாகும்.

நமது நாட்டில் தொழிலாளி, ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பணி இடத்தை மாற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் EPF வைப்பினில் கட்டப்பட்ட பணம் மாற்றப்படுவது இல்லை. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் - நான் அரசில் பொறுப்பு ஏற்ற போது, தொழிலாளர்களுக்கு உரித்தான 27,000 கோடி ரூபாய் EPF வசம் இருந்தது. இது தொடர்பான நடைமுறை தெரியாததால் தொழிலாளர்கள் தமது தொகையைக் கோர முடியவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் பொதுவான கணக்கு எண் universal account number வழங்கினோம். இதனால் தனது புது பணியிடத்துக்கு தனது கணக்கை எளிதில் மாற்ற முடிந்தது. இப்போது ஒரு தொழிலாளி பணி ஓய்வுக்கு பிறகு, தனதூ தொகையைப் பெறுவார்; இனியும் இது அரசுக் கருவூலத்தில் தூங்கிக் கிடக்காது. பாரத்-மாலா, சேது-பாரதம், பாரத்-நெட் உள்ளிட்ட பல முயற்சிகளை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இவற்றின் மூலம், பொருளாதார வளர்ச்சியின் வழியே நாடு முழுதையும் இணைக்கப் பணியாற்றுகிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, பல்வேறு காரணங்களுக்காக இது மிக முக்கியமான ஆண்டு ஆகும். மகான் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யாஜியின் 1000வது பிறந்த நாளை தேசம் கொண்டாடுகிறது. மகாத்மா காந்தியின் குரு ஸ்ரீமத் ராஜ்சந்திர ஜியின் 150வது பிறந்தநாளை நாடு கொண்டாடுகிறது. குரு கோவிந்த் சிங் ஜி யின் 350வது பிறந்தநாளை நாடு கொண்டாடுகிறது. பண்டிதர் தீன் தயாள் உபாத்யாயா ஜியின் நூற்றாண்டை நாடு கொண்டாடுகிறது. இன்று ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யாஜியை நினைவு கூரும் போது, நாட்டுக்கு அவர் விடுத்த செய்தியை அடிக்கோடிட்டுக் கூற விரும்புகிறேன். யாருக்கும் சாதி அல்லது வர்க்கம் பார்க்காமல் இறைவனின் பக்தர்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறுவார். வயது அல்லது சாதி உட்பட எந்தப் பாகுபாடும் இன்றி, யாரையும் சிறுமைப் படுத்தாமல், அனைவருக்கும் மரியாதை தர வேண்டும் என்று கூறினார். மகாத்மா காந்தி அம்பேத்கர் ராமானுஜர் இறைவன் புத்தர் நமது வேதங்கள் மற்றும் நமது ஆன்மீக குருமார்கள் அத்தனை பேரும் வலியுறுத்திச் சொன்னது - 'சமூக ஒற்றுமை'.

ஒரு சமுதாயம் பிளவுண்டால் அரசாட்சி தடுமாறுகிறது ; உயர்வும் தாழ்வுமாக தீண்டுவோர் தீண்டாதோர் என்று பிரிவு படுகிறது. பிறகு, சகோதரர்களே சகோதரிகளே அந்த சமுதாயம் நிலைத்து நிற்க முடியாது. நூற்றாண்டுகளாக சமூகத் தீமைகள் உள்ளன; இந்தச் சமூக தீமைகள் நீடித்தால், கடுமையான தீவிர சிகிச்சை தேவை. மேம்போக்கான அணுகுமுறை சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்காது; இது 125 கோடி மக்களின் பொறுப்பு ஆகும். அரசும் சமூகமும் இணைந்து இந்த சமூகம் முரண்பாடுகளைக் களைய வேண்டும். சகோதரர்களே சகோதரிகளே, நாம் அனைவரும் சேர்ந்து சமூக தீமைகளை எதிர்க்க வேண்டும். நமது சொந்தப் போக்கில் சமூகத் தீமைகளுக்கு மேலாக எழ வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தத் தீமைகளுக்கு மேல் எழ வேண்டும். அப்போதுதான் ஒரு வலிமையான இந்தியாவைக் கட்டமைக்க முடியும். நமது சமூகத்துக்கு வலிமை சேர்க்காமல் இந்தியாவை வலுவாக்க முடியாது.

பொருளாதார வளர்ச்சி மட்டுமே வலுவான இந்தியாவுக்கு உத்தரவாதம் தராது. வலுவான இந்தியாவுக்கான உத்தரவாதம், வலுவான சமுதாயத்தில் இருக்கிறது. வலுவான சமுதாயம் என்பது சமூக நீதியின் மீது கட்டப் படுகிறது. சமூக நீதியின் மீது தான் வலுவான சமுதாயம் எழுகிறது. ஆகவே சமூக நீதியை வலியுறுத்துவது நமது கடமையாகும். தலித்துகள் நலிந்த பிரிவினர் சுரண்டப்படுவோர் மறுக்கப்படுவோர் ஆதிவாசி சகோதரர்கள் கிராம மக்கள் நகர மக்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் சிறியவர்கள் பெரியவர்கள்... 125 கோடி மக்களும் சேர்ந்ததுதான் இந்தக் குடும்பம். நாம் அனைவரும் சேர்ந்து நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; இந்த திசையில் நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, இன்று இந்தியா இளைஞர்களின் நாடு என்கிற உண்மையை உலகம் முழுதும் ஒப்புக் கொள்கிறது. 35 வயதுக்குள்ளாக சுமார் 80 கோடி மக்கள் அதாவது மக்கள் தொகையில் 65 சதவீதம் இளைஞர் சக்தி கொண்ட ஒரு தேசத்தால் என்னதான் சாதிக்க முடியாது? ஆகவே சகோதரர்களே சகோதரிகளே, இளைஞர்கள் வாய்ப்பும் வேலையும் பெறுவது இந்த நேரத்தின் தேவையாகும். இன்று நாம் பண்டிதர் தீன் தயாள் உப்பாத்தியாயாவின் நூற்றாண்டை நோக்கிச் செல்கிறோம். பண்டிதர் தீன் தயாள் உபாத்யாயா, கடைசிக் குடிமகனின் நல்வாழ்வுக்காகப் பேசினார். மகாத்மா காந்தியின் பார்வையும் இதுதான். பண்டிதர் தீன் தயாள் உபாத்யாயா, 'அந்த்யோதயா' தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு இருந்தார். ஏழைகளின் நலிவுற்றவர்களின் நல்வாழ்வு தான் பண்டிகர் தீன் தயாள் உபாத்ஜியா யின் அரசியல் தத்துவத்தின் மையக் கருவாக இருந்தது. ஒவ்வோர் இளைஞரும் கல்வி பெற வேண்டும்; திறன் கொண்டவராய் இருத்தல் வேண்டும்; தனது கனவுகளை மெய்யாக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்று அவர் சொல்லுவார்.

பண்டிட் தீன் தயாள்ஜி யின் கனவுகளை மெய்யாக்க, நாட்டின் 80 கோடி இளைஞர்களின் ஆசைகளை நம்பிக்கைகளை நிறைவேற்ற, பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். நமது நாட்டில் சாலை வசதிகள் மேம்பட்டு வருகின்றன; மிக அதிக எண்ணிக்கையில் நாட்டில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாக இந்தியா, உருவாகி வருகிறது; புதிதாக 50-க்கு மேற்பட்ட மொபைல்போன் தொழிற்சாலைகள் அமைக்கப் படுகின்றன; இவை எல்லாம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன. கதவு வைத்த கழிப்பறைகள் இரண்டு கோடி கட்டப்பட்டுள்ளன என்றால், அது யாருக்கேனும் வேலை வாய்ப்பு வழங்கி இருக்கிறது; சிமெண்ட் வாங்கப் பட்டுள்ளது; இரும்பு வாங்கப் பட்டுள்ளது; மர வேலை யாரோ செய்து தந்திருக்கிறார். இந்தப் பணி விரிவடைகிற போது புதிய வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன. இந்த திசையில் செல்ல இன்று நாம் வலியுறுத்துகிறோம்.

இதேபோன்று, திறன் வளர்ப்பு என்பதை ஓர் இயக்கமாக நாம் முன்னெடுக்கிறோம்; இதனால், கோடிக்கணக்கான இளைஞர்கள் திறன் பெறுவார்கள். ஒரு சட்டம்.. மிகச் சிறியதுதான், மாற்றி அமைத்துள்ளோம். அதுதான் - 'மாதிரி கடை மற்றும் நிறுவன சட்டம்' (Model Shop and Establishment Act'. மாநிலங்களுக்கு ஓர் அறிவுறுத்தல் கேள்வி எழுப்பி உள்ளோம் - 'பெரிய வணிக வளாகங்கள் (big malls) 365 நாட்களும் இரவு 12 மணி வரையிலும் திறந்திருக்க அனுமதிக்கப் படுகின்றன; ஆனால் ஒரு கிராமத்தில் சிறிய கடைக்காரர் இரவில் கடையை மூடி விட வேண்டும்! என்ன காரணம்?' ஓர் ஏழையும் தனது கடையை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வாய்ப்பு தரப்பட வேண்டும். நமது சகோதரிகள் ஏன் இரவு நேரத்தில் பணிபுரிய வாய்ப்பு பெறக் கூடாது? நமது சகோதரிகள் இரவு நேரத்திலும் பணிபுரிகிறாற் போல் சட்டம் அமைத்துள்ளோம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை நிறைவேற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சகோதரர்களே சகோதரிகளே இந்தத் திசையில் நாம் பணியாற்றுகிறோம். இதனைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, பணிகளை தாமதப்படுத்துவதில் இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை. எவ்வாறு தாமதப்படுத்துவது என்பதல்ல; எவ்வாறு போராடுவது என்பதே நாம் அறிவோம். ஆகவே பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்காத வரை, நல்லது எதுவும் நிகழாது. இன்று நாம் நாட்டின் விடுதலையைக் கொண்டாடுகிற போது, நமது ராணுவ வீரர்கள் யாரோ ஒருவர், நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காகவே சாகத் துணிந்த ஒருவர், எல்லையில் இருந்து கொண்டு குண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்; யாரோ ஒருவர் பங்கர் (bunker) மீது அமர்ந்து கொண்டிருக்கிறார்; வேறு யாரோ ஒருவர் ரக்க்ஷா பந்தன் அன்று தனது சகோதரியை சந்திக்கும் அதிர்ஷ்டம் இல்லாது இருக்கிறார்.

நமது ராணுவப் படையில் எத்தனை வீரர்கள் பணி புரிகிறார்கள்..? சுதந்திரத்தில் இருந்து இன்று வரை 33,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவர்களை நாம் எவ்வாறு மறக்க முடியும்? இவர்களால் தான் நாம் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடிகிறது. 'ஒரு தகுதிநிலை ஓர் ஓய்வூதியம்' One Rank One Pension கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நாம் கோரிக்கைகளை நிலுவையில் வைப்பதில்லை; நிறைவேற்றுகிறோம். நாம் உறுதி அளித்தபடி, ஒரு தகுதிநிலை ஓர் ஓய்வூதியம் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம். ஒவ்வோர் இந்திய வீரரின் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்துள்ளோம். இந்தப் பணியை நாம் செய்துள்ளோம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும் (declassify) என்பது ஒவ்வோர் இந்தியரின் உணர்வுமாக இருந்தது. இன்று, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தலை வணங்கிச் சொல்கிறேன் - இந்த கோப்புகளை வெளியிட முடிவு எடுத்துள்ளோம். இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சாத்தியமற்ற பணி ஆகும். நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களை வரவழைத்து இந்தக் கோப்புகளைக் காண்பித்தோம்; இதனை declassify செய்யும் பணி தொடரும். இது தொடர்பாக பிற நாடுகளில் உள்ள கோப்புகளையும் declassify செய்யுமாறும் இந்தியாவுக்கு வழங்குமாறும் வேண்டுகோள் வைத்துள்ளோம். ஏனெனில் இந்தியா சரித்திரத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி அறிந்து கொள்ள இந்தியர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த திசையில் நாம் பணியாற்றி உள்ளோம்.

வங்கதேசம் - பிரிவினை ஏற்பட்டதில் இருந்து எல்லைப் பிரச்சினை ஒன்று நிலவி வருகிறது. வங்கதேசம் உருவானதில் இருந்தே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. பல பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். சகோதரர்களே சகோதரிகளே, எல்லாருமாக சேர்ந்து இந்திய வங்கதேச எல்லை பிரச்சினைக்குத் தீர்வு கண்டோம். (இதற்கு ஏற்ப) நமது சாசனத்தையும் திருத்தி விட்டோம்.

சகோதரர்களே சகோதரிகளே, ஒரு நடுத்தர வர்க்க நபர் சொந்தமாய் வீடு கட்ட வேண்டும் அல்லது ஒரு ஃபிளாட் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார். 'பில்டர்கள்' அவருக்கு மிக அழகாக அச்சிடப்பட்ட புத்தகத்தைக் காட்டுகிறார்கள்; உதவுவார் இல்லாத இந்த மனிதர் அதில் மயங்கி சிக்கிக் கொள்கிறார். இவருக்கு தொழில்நுட்ப அறிவு இல்லை; தவணைகளை செலுத்துகிறார்; ஆனால் உறுதி அளித்தபடி சொன்ன நேரத்துக்கு அவருக்கு வீடு கிடைக்கவில்லை. ஒரு நடுத்தரக் குடும்ப நபர், வாழ்நாளில் ஒரு வீடு கட்டுகிறார்; தனது பணம் முழுதையும் இதில் முதலீடு செய்கிறார். சகோதரர்களே சகோதரிகளே, 'ரியல் எஸ்டேட் மசோதா' நிறைவேற்றியதன் மூலம் ஒரு கட்டுப்பாடு (chec வைத்துள்ளோம். இதனால் சொந்தமாய் வீடு வேண்டும் என்கிற நடுத்தர வர்க்கத்தின் விருப்பத்தில் இனி பிரச்சினை வராது. இதற்காக நாம் பணியாற்றி உள்ளோம்.

சகோதரர்களே சகோதரிகளே, நான் ஏற்கனவே சொன்னேன் - இது, மகாத்மா காந்தியின் குருவான ஸ்ரீமத் ராஜ் சந்திர ஜி யின் 150வது ஆண்டு ஆகும். காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் தங்கி இருந்தபோது ஸ்ரீமத் ராஜ் சந்திரஜியுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். ஒரு கடிதத்தில் ஸ்ரீமத் ராஜ் சந்திர ஜி, வன்முறை மற்றும் அகிம்சை குறித்து விவாதித்து இருந்தார். அந்தக் கடிதத்தில் ராஜ் சந்திரஜி எழுதுகிறார் - 'வன்முறை வந்த போது தான் அதே நேரத்தில் அஹிம்சையும் பிறந்தது. இரண்டிலும் முக்கியமான அம்சம் என்னவென்றால், மனித குல நன்மைக்காக எதற்கு முன்னுரிமை தருகிறோம், எதை நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான்'.

சகோதரர்களே சகோதரிகளே, வன்முறை / அகிம்சை குறித்த விவாதம் நமது நாட்டில் உள்ளார்ந்து இருக்கிறது. மனிதநேயம் நமது ரத்தத்திலேயே உள்ளது. மாபெரும் மகத்தான கலாச்சாரத்தின் மக்கள் நாம். இந்த தேசம் பன்முகத்தன்மை வண்ணங்கள் மற்றும் அழகால் நிறைந்தது. எல்லா கனவுகளும் எல்லா வண்ணங்களும் எல்லா மணங்களும் கூடிய அழகான பூங்கொத்து - நம் தாய் இந்தியா. சகோதரர்களே சகோதரிகளே, வேற்றுமையில் ஒற்றுமை நமது மிகப்பெரும் வலிமை. இந்த ஒற்றுமை மந்திரம் நமது வேர்களோடு இணைந்திருக்கிறது.

சகோதரர்களே சகோதரிகளே, நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கொண்ட நூற்றுக் கணக்கான வட்டார வழக்குகள் கொண்ட, எண்ணற்ற உடைகள், கணக்கற்ற வாழ்க்கை முறைகள் கொண்டு இருந்தாலும் இந்த நாடு ஒற்றுமையாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நமது கலாச்சார பாரம்பரியம். எவ்வாறு பிறரை மதிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்; நமக்கு விருந்தோம்பல் தெரியும்: எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தெரியும்; ஒரு மகத்தான மரபை நாம் சுமந்து வருகிறோம். இதனால் தான் நமது நாட்டில் வன்முறை, அராஜகத்துக்கு இடமில்லை.

இந்தியாவின் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் எனில் இந்தியாவின் கனவுகள் நிறைவேற வேண்டும் எனில், வன்முறை பாதை நமக்கு வெற்றி கொண்டு வராது. சமீப காலமாக, காட்டுப் பகுதிகளில் மாவோயிசம் என்கிற பெயரில், எல்லையில் பயங்கரவாதம் என்கிற போர்வையில், மலைப்பகுதிகளில் பயங்கரவாதம் என்கிற வடிவில் அப்பாவிகளைக் கொல்லும் ஆட்டம் நிகழ்ந்து வருகிறது. 40 ஆண்டுகள் கடந்து விட்டன; இந்த மண் ரத்தக் கறையுடன் வளர்கிறது; ஆனாலும் பயங்கரவாதப் பாதையில் உள்ள இந்த நபர்கள் சாதித்தது எதுவும் இல்லை. இந்த இளைஞர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் - இந்த நாடு வன்முறையை சகித்துக் கொள்ளாது; பயங்கரவாதத்துடன் சமரசம் செய்து கொள்ளாது.

பயங்கரவாதத்துக்குத் தலை பணியாது. மாவோயிசத்துக்கு பலி ஆகாது. இன்னமும் நேரம் இருக்கிறது; பிரதான நீரோட்டத்துக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன். உங்கள் பெற்றோர்களின் கனவுகளைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பெற்றோர்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளை பிரதிபலியுங்கள். பிரதான நீரோட்டத்துக்குத் திரும்ப வாருங்கள். அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள். வன்முறைப் பாதை யாருக்கும் நன்மை பயக்காது.

சகோதரர்களே சகோதரிகளே, நாம் வெளியுறவுக் கொள்கை பற்றிப் பேசுகிறோம். இதற்குள் விரிவாகச் செல்ல விரும்பவில்லை. மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து இருந்தோம். நமது செய்தி தெளிவாக இருந்தது - நாம், அண்டை நாடுகள், அனைவரும் பொதுவான பிரச்சினை பொதுவான சவால் கொண்டுள்ளோம் - வறுமை. நாம் அனைவரும் சேர்ந்து வருமைக்கு எதிராகப் போராடுவோம். நமக்குள் சண்டை இட்டுக் கொள்வதன் மூலம் நாம் தகர்ந்து போகிறோம்; ஆனால் வறுமைக்கு எதிராகப் போரிட்டால் நாம் வளத்தை நோக்கி நடை போடுவோம்.

ஆகவே வறுமைக்கு எதிரான இந்த போரில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடுகள் அனைத்தையும் அழைக்கிறேன். நமது மக்களுக்கு வறுமையில் இருந்து விடுதலையைக் காட்டிலும் பெரிய விடுதலை இருக்க முடியாது. வறுமையில் இருந்து விடுதலையை காட்டிலும் அதிக சுதந்திரத்தை வேறு எதுவும் தந்துவிட முடியாது. அண்டை நாடுகளில் ஒரு குடிமகன் வறுமையில் இருந்து விடுபடும் போது, அவர் அண்டை நாட்டு ஏழை என்பதல்ல, அவர் ஏழ்மையில் இருந்து விடுபட்டார் என்பதில் மகிழ்ச்சி கொள்வோம்.

சகோதரர்களே சகோதரிகளே, மனிதநேயத்தில் இருந்து எழுச்சி பெற்ற மக்கள் எவ்வகை? பயங்கரவாதத்துக்கு உதவும் மக்கள் எவ்வகை? இந்த உலகத்துக்கு நான் இரண்டு காட்சிகளை முன்வைக்கிறேன், உலகத்துக்குச் சொல்கிறேன்; மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சொல்கிறேன் - இந்த தாக்குதலை எண்ணிப் பாருங்கள், பெஷாவர் பகுதியில் ஒரு பள்ளியில் அப்பாவிக் குழந்தைகளை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதை எண்ணிப் பாருங்கள். இந்த தாக்குதல் பெஷாவரில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவம். இரத்தக் குளியலில் அப்பாவிக் குழந்தைகள் பலியானார்கள்; கல்விக் கோயிலில் எங்கும் ரத்தம் சிதறிக் கிடந்தது; அப்பாவி குழந்தைகள் கொல்லப் பட்டனர். இந்துஸ்தானமும் நாடாளுமன்றமும் கண்ணீர் சிந்தின.

ஒவ்வோர் இந்தியப் பள்ளியிலும் கண்ணீர். பெஷாவர் குழந்தைகளின் மரணம் ஏற்படுத்திய கடும் மனஉளைச்சலை ஒவ்வோர் இந்தியக் குழந்தையும் உணார்ந்தது. இவர்களின் கண்ணீரை அடக்க முடியவில்லை. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் உங்கள் இதயத்திலும் வலியை ஏற்படுத்தியது. இதுதான் நமது பண்பட்ட மனிதநேய கலாச்சாரத்தின் உந்துதல். இதுதான் நமது மனித நேயம். ஆனால் சுற்றிப் பார்த்தால், பயங்கரவாதத்தைப் பெரிதாய் சித்தரிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த வாழ்க்கை எந்த அளவு பயங்கரவாதத்தால் உந்தப்பட்டு இருக்கிறது..? இந்த அரசுகள் எந்த அளவுக்கு பயங்கரவாதத்தால் உந்தப் பட்டுள்ளன..? இந்த இரண்டு வேற்றுமைகளையும் சரியாக இந்த உலகம் புரிந்து கொள்ளும். எனக்கு இது போதும். இன்று இந்த செங்கோட்டைத் தளத்திலிருந்து சிலரை நான் குறிப்பாக கவுரவிக்க, அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக, பலுசிஸ்தான் மக்கள், கில்ஜித் மக்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்.. எவ்வாறு இதயபூர்வமாக எனக்கு நன்றி செலுத்தினார்கள்.. என் மீது எவ்வளவு நல்லுணர்வு கொண்டிருந்தார்கள்.. மிக தொலைவில் அந்தப் பக்கம் வாழும் மக்கள், நான் பார்த்திராத அந்த நிலப்பகுதி, நான் சந்தித்து இராத அந்த மக்கள்.. ஆனால் அங்கு வாழும் மக்கள் இந்திய பிரதமரை அங்கீகரிக்கிறார்கள்; அவரை கௌரவிக்கிறார்கள். இது என் நாட்டின் 125 கோடி மக்களுக்கான மரியாதை. இந்தப் பெருமையை உணர்ந்ததால் பலுசிஸ்தான், கில்ஜித், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இதயபூர்வமாக நன்றி கூறுகிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, இன்று நாம் 70 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும்போது, இந்த நாட்டுக்காக விடுதலை வீரர்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. இவர்களுக்கு வழங்கப்படும் கௌரவத் தொகையை, இவர்களின் குடும்பத்தார் பெறும் ஊதியத் தொகையை 20% அதிகரிக்க இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. முன்னர் 25,000 ரூபாய் பெற்று வந்த விடுதலை வீரர்கள் இனி ரூபாய் 30,000 பெறுவார்கள். நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் தீரம் மற்றும் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக எனது சிறிய முயற்சி இது.

சகோதரர்களே சகோதரிகளே, நமது நாட்டின் விடுதலை சரிதத்தைப் பற்றிப் பேசும் போது... சிலரைப் பற்றி மிக ஏராளமாகப் பேசுகிறோம்; சிலரைப் பற்றி மிகையாகப் பேசுகிறோம்; ஆனால் விடுதலைப் போராட்டத்தில் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர் செய்த பங்களிப்பு, ஒப்புவமை இல்லாதது. அவர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள். பிர்ஸா முண்டா என்கிற பெயரைக் கேள்விப் படுகிறோம். 1857இல் இருந்து நாம் விடுதலை பெறும் வரை, விடுதலைக்காகப் போராடாத தியாகம் செய்யாத பழங்குடிகள் இல்லாத பழங்குடியினர் பெருவாரியாக உள்ள மாவட்டமே இல்லை. விடுதலை என்பது என்ன, அடிமைத்தனத்துக்கு எதிரான போர் என்பது என்ன என்பதைத் தமது தியாகங்களின் மூலம் இவர்கள் நிரூபித்து உள்ளனர்.

சகோதரர்களே சகோதரிகளே, பணவீக்கம் மீதான விவாதத்துக்கு மத்தியில், ஓர் உண்மையை நாம் உணர்கிறோம் - ஓர் ஏழைக் குடும்பத்தில் ஒருவர் நோயுற்றாலும் அந்தக் குடும்பத்தின் மொத்தப் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புதல்விகளின் திருமணம் தடைப்படுகிறது; குழந்தைகளின் கல்வி நின்று போகிறது; சில சமயங்களில் இரவு உணவும் கிடைக்காமல் போகிறது. சுகாதார மருத்துவ வசதி விலை உயர்ந்ததாகி விட்டது. அதனால்தான், செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் சுகாதார மருத்துவ வசதிக்காக ஒரு முக்கியமான திட்டத்தை அறிவிக்கிறேன். இந்தத் திட்டத்தின் கீழ், வரும் நாட்களில், இத்தகைய வறியய குடும்பங்கள் மருத்துவ வசதி பெற வேண்டும் எனில், ஓராண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும். எனவே எனது ஏழைச் சகோதரர்களுக்கு மருத்துவ வசதி மறுக்கப் படாது; அவர்களின் கனவுகள் குலைந்து போகாது.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, நமது விடுதலைக்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மகத்தான மனிதர்களிடம் இருந்து பெறுகிற உத்வேகத்தின் மூலம், புது வைராக்கியம் புது சக்தி புது ஆர்வம் பெற்று நாம் முன் செல்வோம். நாட்டுக்காக மரணிக்கும் வாய்ப்பை நாம் பெறவில்லை; ஆனால் நாட்டுக்காக வாழ்கிற நல்வாய்ப்பு பெற்றுள்ளோம். நமது வாழ்வை தேசத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும். தேசத்துக்காக நாம் பயனுள்ள எதையேனும் சாதித்தாக வேண்டும். நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். மற்றவர்களும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற உத்வேகம் தருபவராய் நாம் இருக்க வேண்டும்.

ஒரு சமுதாயம் ஒரு கனவு ஒரு தீர்மானம் ஒரு திசை ஒரு சேருமிடம் (இலக்கு) என்பதைக் கட்டமைக்க நாம் பாடுபட்டு முன்னேற வேண்டும். இந்தப் புனிதமான உணர்வுடன் இந்த நாட்டின் மகத்தான மனிதர்கள் முன், வான் - தரை - நீரில் நமது பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைத்துக் கடமையாற்றும் வீரர்களின் முன்பு, நமக்காகத் தமது இன்னுயிர் ஈந்த 33,000 தியாகிகளின் முன் தலை வணங்குகிறேன். நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய கனவுக்கு என்னை நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன். இன்று செங்கோட்டைத் தளத்தில் இருந்து உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் - முழு பலத்துடன் சொல்லுங்கள் - பாரத் மாதா கி ஜே! இந்தக் குரல் உலகின் எல்லா மொழியிலும் ஒலிக்கட்டும் - பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 69 - ‘உண்மையாகுமா ஊழலற்ற தேசம்?’ | 2015

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்