ரஜினி அரசியல்: 50 - குடும்பம், வாரிசு, பாசம்

By கா.சு.வேலாயுதன்

'பாபா' படம் ரிலீஸின்போது இந்த குறிப்பிட்ட ரஜினி ரசிகர்கள் ரஜினியுடன், லதா ரஜினியின் படத்தையும் வைத்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி விட்டார்கள். அதில், ‘வாழ்வில் பாதி நீ; வழி நடத்த வா நீ!’ என்ற வாசகங்களும், ‘எம் தலைவன் மெளனம் கலைய சக்தி (ல)தா!’ என பஞ்ச் வசனங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை மன்றத் தலைமை கொடுக்க மறுத்து விட்டதாம். அதற்கு முடிவு கட்டத்தான் லதா தலைமையில் அணி திரளப்போவதாக கோபம் காட்டியது இக்குழு.

அத்துடன், ‘தலைவா ரசிகர்களை மதிக்கத் தெரியாத உணர்வுகளை உணரத்தெரியாத, அறிவிக்கப்படாத கோவை மாவட்டத் தலைமை மன்றத்தில் நுழைந்துள்ள ஆதிக்கக் குழுவை நீக்கு!’ என மறுபடி போஸ்டர்கள் அச்சடித்து நகரெங்கும் ஒட்ட பரபரப்பாகியது. இதை இன்னொரு கோஷ்டி ரசிகர் மன்றத்தினர் இரவோடு இரவாக கிளம்பி இந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதன் தொடர்ச்சியாக உளவுத் துறையினர் ரஜினி மன்ற கோஷ்டி தகராறுகளை கவனித்து அரசுக்கு அனுப்பவும் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்துதான் கோவை கொடீசியாவில் நடந்த சுவாமி சச்சிதானந்தா மகராஜ் ஜெயந்தி விழாவுக்கு ரஜினி வரும்போது லதாவுக்கும் வரவேற்பு போஸ்டர் அச்சடித்து ஒட்டி ரசிகர்கள் ஜமாய்த்ததும், லதாவை ஓட்டலில் சந்தித்துப் பேசியதும், ஆழியாறுக்கு மகள்களுடன் அவர் வந்தபோது ரசிகர்களில் ஒரு பிரிவினர் அங்கே அவரைச் சந்தித்து சர்ச்சை கிளப்பியதும் நடந்தது.

இதையெல்லாம் இந்த இடத்தில் எதற்கு சொல்ல வேண்டும்? ஒரு ஜனநாயக நாட்டில், ஏதாவது ஒரு துறையில் பிரபல்யப்பட்ட ஒருவன், பொதுவாழ்க்கைக்கு வர முற்பட்டாலோ, அல்லது அவன் அதற்கு அவன் மீது மிக்க ஈடுபாடு உள்ளவர்களால் வேண்டி விரும்பி அழைக்கப்பட்டாலோ, அதில் வாரிசு அரசியல் என்பதும் உள்நுழைந்து விடுகிறது. இது ஒன்றும் பொதுவுடமை தேசமன்று. இங்கே எல்லாமே வர்த்தக மயமான முதலாளித்துவ தேசம். இந்த அமைப்பு முறையில் இதுதான் இப்படித்தான் நடக்கும் என்பது சமூக விஞ்ஞானம். அதில் இந்த வாரிசு அரசியலும் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இந்தியத் திருநாட்டின் அரசியல் அங்கிங்கெணாதபடி நிரூபித்தே வந்துள்ளது.

முடியாட்சி ஒழித்து குடியாட்சி வந்த காலத்திலேயே, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற நிலை ஏற்பட்டது. உள்கட்சியானாலும், பரந்துபட்ட பெரிய நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கம் ஆனாலும், மாநில, மாவட்ட, வட்ட, பஞ்சாயத்து நடைமுறைகளானாலும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின் அடிநாதம். ஆனால் முடியாட்சி எச்சத்தின் மிச்சம்.

இங்கே தனி மனித புராணங்களும், அவர் தம் வாரிசுகளுமே கட்சி அரங்கிலும், அதிகார அரங்கிலும் கோலோச்ச வழி ஏற்படுத்தி வருகிறது. அதுதான் அன்றைக்கும், இன்றைக்கும் அரசியல் என்றாகி வருகிறது. 1928 காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு இருந்தார். இளைஞர்களுக்கு வழிவிடுவதாக கூறிய மோதிலால் அடுத்த நிலையில் இருந்த சர்தார் வல்லபாய் படேலை தவிர்த்து தன் மகன் ஜவஹர்லால் நேருவுக்கே அந்த வாய்ப்பை அளித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்த போது 1959-ல் அவருடைய மகள் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்தனர். அதில் ஜனநாயகமும் அப்போது இருந்தது. அதனால், நேருவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகள் இந்திராவுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார்.

ஆனால், 1966-ல் சாஸ்திரி இறந்தபோது இந்திரா காந்தியை அப்பதவியில் இருத்தினர். இந்திரா இருந்தபோதே சஞ்சய் காந்தியை வாரிசு அரசியலில் வளர்த்தெடுத்தார். சஞ்சய் விபத்தில் அகால மரணம் தழுவ, விமான ஃபைலட்டாக இருந்த ராஜீவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தார் இந்திரா. இவர் மறைவுக்குப் பிறகு ராஜீவ் பிரதமரானார். அவருக்குப் பிறகு சில காரணங்களால் சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்கள் பிரதமராகா விட்டாலும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் காங்கிரஸ் கட்சியும், அதன் ஆட்சியும் இருந்தது.

இந்திய அரசியலில் இந்த வாரிசு அரசியலை கடுமையாகச் சாடினார் கருணாநிதி. பின்னாளில் அவர் மகன்கள் அழகிரி, மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி; மருமகன் முரசொலி மாறன், அவர் பிள்ளை தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வாரிசு அரசியல் வானில் பளீரிட்டனர். தற்போது அவர்களின் பிள்ளைகள் உதயநிதி, துரை தயாநிதி பெயரெல்லாம் வாரிசுகளாக கொடி கட்டிக் கொண்டிருக்கிறது.

வாரிசு அரசியலை துளி கூட கோடி காட்டாமல் வாழ்ந்த எம்ஜிஆர் வெள்ளிச் செங்கோலை ஜெயலலிதாவுக்கு கொடுத்தாலும், எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் அவர் மனைவி வி.என்.ஜானகி முதல்வராகி அதிர்ச்சியூட்டினார். ஜெயலலிதாவுக்கு குடும்பம், குழந்தைகள் இல்லை என்றாலும் கூட அவரின் உடன்பிறவா சகோதரியின் வாரிசுகள், உறவுகள் ஒன்றுக்கொன்று அரண்மனையைப் பிடிக்க வாரிசு சண்டையிட்டுக் கொள்வதை காண முடிந்தது. வாரிசு முறை இல்லாமல் அரசியல் என்பதை தீர்க்கமாக உணர்ந்தவர் போல் செயல்பட்டார் விஜயகாந்த். தான் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே தன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன் மேடைகளில் வலம் வந்தார். அவர்களுக்கே கட்சிப் பதவிகள் அளித்தார். அவர்களே கட்சியை, கட்சிப் பொறுப்புகளை தீர்மானித்தனர்.

தேமுதிக கட்சி ஆரம்பிக்கும் முன்னரே ஒரு சந்திப்பில் விஜயகாந்திடம் நிருபர்கள், ‘நீங்க கட்சி ஆரம்பிக்கிற முன்னாடியே மனைவியோட வர்றீங்களே. இது வாரிசு அரசியல் இல்லியா?’ எனக் கேட்டனர். அதற்கு அவர் இடக்காக சொன்ன பதில், ‘நான் எம் பொண்டாட்டிய கூட்டிட்டுத்தானே வர்றேன். ஒங்களுக்கென்ன?’. அதற்கு பிறகு எந்த நிருபர்கள் சந்திப்பிலும் இந்த வாரிசு அரசியல் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதை நான் அறிந்ததேயில்லை.

அரசியலில் மட்டுமா? சினிமாவில்.. கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பாக்கியராஜ், சிவகுமார், கஸ்தூரி ராஜா, பாரதிராஜா, டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர், இளையராஜா என எத்தனை திரை அரசுகளின் வாரிசுகள் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்? இது மட்டுமா? வங்கியில், ஆசிரியப்பணியில், ரயில்வே பணியில் என வாரிசுகள் கோலோச்சாத இடம் எது? ஒரு குடும்பத்தில் ஒரு மருத்துவர் உருவாகி விட்டால் பிறகு அந்தக் குடும்பத்தில் தொடர் மருத்துவர்கள்தான். ஒரு குடும்பத்தில் வங்கி மேலாளர் ஒருவர் உருவாகி விட்டால் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தில் தொடர் வங்கி மேலாளர்கள்தான். யாரும், எதற்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை விடுவதில்லை.

இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ரஜினியின் மனைவி லதாவின் பெயரால், அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் பேரவை ஒன்றை உருவாக்கியதில் பெரிய ஆச்சர்யமில்லை. இன்றைக்கும் பத்திரிகை, மீடியா ஒரு பிரபல்யத்தை, விவிஐபியை பேட்டி எடுக்கச் செல்லும்போது அந்த விவிஐபிக்களுக்கு முன்னரே அக்குடும்ப உறுப்பினர்களை சந்தித்து விடுகிறார்கள். அதில் சிலர் லைட்ஸ் ஆன் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறார்கள். இதற்கு ஓர் உதாரணம் சமீபத்தில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தொடர் பெண்கள் பத்திரிகை ஒன்றில் கலக்கியதைச் சொல்லலாம்.

வாரிசுகள் இங்கே தானாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அதற்கான சூழலும் இங்கே இயல்பாக இருக்கிறது. அதுதான் ரஜினியின் மனைவி லதாவுக்கும் ரசிகர்கள் மூலம் அந்த காலகட்டத்தில் வாய்த்தது. தன் கணவருக்கு இருக்கும் செல்வாக்கு, அவர் மீது அதீத பற்று வைத்துள்ளவர்களுக்கு ஏற்படும் மனச்சஞ்சலத்தை ஓர் ஆறுதலுக்காகவாவது காது கொடுத்துக் கேட்காவிட்டால் என்ன ஆவது? அதுதான் அவருக்கும் அந்தக் காலகட்டத்தில் அவர் பெயரில் பேரவை உருவாக்க சில ரசிகர்களைத் துணிய வைத்தது.

இதுவெல்லாம் அரசியலில் சகஜம் என்பதை விட இதுவெல்லாம் இல்லாமல் அரசியல் இல்லை. இதுபோன்ற செயல்களில் மூழ்கி முத்தெடுக்காதவர்கள் சமகால வர்த்தக உலகு அரசியலுக்கு லாயக்கு இல்லை என்பது போலத்தான் நகர்கிறது உலகு.

- பேசித் தெளிவோம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்