எல்லாப் பிரச்சினைகளையும் ஏதோவொரு விஷயம் புகுந்து, மறக்கடித்துவிடும் அல்லது மறைத்துவிடும் என்பார்கள். இப்போது புகுந்து புறப்பட்டு சகலத்தையும் மறக்கடித்து டாப்கியரில் எகிறியடித்துக் கொண்டிருக்கிறது அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் இருசக்கர வாகனத்தை வழங்குகிறது தமிழக அரசு.
முதலில் ஒரு விஷயம்... இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒருவீட்டில் இரண்டு சைக்கிள்கள் இருந்தாலே பெரியவிஷயமாகப் பார்க்கப்பட்டது. பிறகு அப்பா டூவீலர் வாங்கினார். மூத்த பையன் சைக்கிளை எடுத்துக் கொண்டார். அதையடுத்து வந்த காலகட்டங்களில், அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு வரை, இருசக்கர வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்றானது.
இதேகட்டத்தில், விற்பனைப் பிரதிநிதிகள் எனும் வேலை அதிகரித்ததும் அப்போதுதான். தனியார் கூரியர் நிறுவனங்கள் ஒருபக்கமும் அமேசான் முதலான இணையதளங்களில் பொருட்களை வாங்கி, அதனை டெலிவரி செய்வது இன்னொரு பக்கமும் என அதுவும் வளர்ந்துவிட்டது.
போதாக்குறைக்கு, சென்னை தாம்பரத்தைத் தாண்டிய புறநகர் பகுதிகள், அம்பத்தூரைக் கடந்த புறநகர்ப் பகுதிகள், ஓஎம் ஆர் சாலையைக் கடந்த ஊர்கள் என நகரங்களைச் சுற்றி, புதிய புதிய நகரங்களை உருவாக்கி வசிக்கத் தொடங்கிவிட்டார்கள். மேலும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு ஒரு வண்டி, சென்னைக்குள் ரயிலை விட்டு இறங்கியதும் அங்கிருந்து ஆபீஸ் செல்வதற்கு ஒரு வண்டி என வைத்திருப்பவர்களும் பெருகிவிட்டார்கள்.
சென்னை மட்டுமில்லை. கோவை, சேலம், திருச்சி, மதுரை என ஊருக்கு வெளியே வசிக்கத் தொடங்கி, ஊருக்குள் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டவர்களுக்கு இருசக்கர வாகனங்கள்தான் ஆபத்பாந்தவன்!
இந்தநிலையில், அம்மா இருசக்கர வாகன மானியம் என்று பெண்களுக்காக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அறிவிப்பு வந்த நாளிலிருந்தே, அந்தந்த ஏரியா அதிமுக பிரதிநிதிகளும் கவுன்சிலர்களும் பரபரப்பாகிவிட்டார்கள்.
'நாங்க இருக்கோம்.. வாங்கித் தரோம்' என்று மீடியேட்டர்கள் ஆகிவிட்டார்கள். நம் மக்களும், ஆர்.டி..ஓ. அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களின் நிலை அறிந்து, கரைவேட்டிக் காரர்களை வரிசைகட்டிப் பார்க்கிறார்கள்.
இங்கே இன்னொரு விஷயம்...
தமிழகத்தில், 'போக்குவரத்து' அதிகம் கொண்ட துறை... ஆர்.டி.ஓ... அலுவலகங்கள்தான் என்பது, சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்குக் கூட தெரிந்த சங்கதிதான்!
ஏற்கெனவே, இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. போதாக்குறைக்கு, வங்கிகள் அனைத்தும் கூவிக்கூவி காருக்கான லோன்கள் தருகின்றன. விளைவு... ஒரு சிக்னலில் வண்டிகள் நிற்கும்போது பார்த்தால்... இருசக்கர வாகனங்களை விட கார்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் டூவீலர்கள் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு எகிறிக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் 2004 - 2005-ல் 3,60,716 மோட்டார் பைக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2005-2006ல், 44,69,85 , 2006- 2007ல், 5,78,061 என வளர்ந்து, 2010 - 2011ல் 8,97,025 வரை பெருகி கடந்த 2016 - 2017ல் 10,74,046 மோட்டார் பைக்குகள் விற்பனையாகி, பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
2004-2005ல், 90,360 என்றிருந்த ஸ்கூட்டர் விற்பனை, 2010-2011ல் 1,12,252 என விரிவடைந்து, கடந்த 2016- 2017ல், 3,75,415 என ஸ்கூட்டர் விற்பனை எகிறியிருக்கின்றன. அதேபோல, 2004- 2005ல், மொபட் வண்டி, 1,07226 என்றிருந்த விற்பனை, 2011 - 2012ல், 2,66818 என வளர்ந்து, கடந்த 2016-2017ம் வருடத்தில், 137206 என்று கொஞ்சம் குறைந்து மொபட்டில் இருந்து ஸ்கூட்டர்களுக்கு மாறியவர்கள் அதிகரித்தார்கள்.
கிட்டத்தட்ட, மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 2.40 கோடி என்கிறது புள்ளிவிவரம். இதில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே 83 சதவிகிதம். இப்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்கள், மூன்றரை கோடியைத் தொட்டிருக்கும் என்றும் அதில் வழக்கம்போல், 83 முதல் 85 சதவிகிதம் வரை, இருசக்கர வாகனங்கள் என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் சாலை வசதிகள் மிக மோசம் என்கின்றன ஆய்வுகள். மேலும் நகரங்களில், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதற்குள், டிராபிக் ஜாம் எனத் திக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன, சென்னை முதலான பெருநகரங்கள்.
ஒருபக்கம் வாகனப் பெருக்கம், இன்னொரு விதத்தில் பழுதடைந்த சாலைகள், இவற்றுக்கு நடுவே ரேஸிங் வீரர்களின் சாகசங்கள், ஆங்காங்கே டிராபிக்கை ஏற்படுத்துகிற, இஷ்டத்துக்கு நிறுத்துகிற ஷேர் ஆட்டோக்கள் என மூச்சுவிட முடியாமல், முக்கிக் கொண்டிருக்கின்றன வாகனங்கள். இவற்றில், புகை மண்டலங்கள், மாசு , சுற்றுப்புறச் சூழல் பாதித்தல் என்பதையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை அரசு!
யாருக்கெல்லாம் மானியம் என்று அரசு அறிவித்திருக்கிறதோ... 50 சதவிகிதம் என்று சொல்லியிருக்கிறதோ... அவர்கள் நேரடியாகவே சென்று வாங்கிக் கொள்ளலாம். 50,000 வரை உள்ள வண்டிக்கு லைஃப் டேக்ஸ், ரிஜிஸ்டிரேஷன், இன்சூரன்ஸ் என்று எல்லாம் சேர்த்து, 9,000 முதல் 10,000 வரை வருகிறது. வண்டியின் நிறுவனத்திடம் பேசி, இன்னும் கொஞ்சம் சலுகை தரச் சொல்லி, வரிகளிலும் ஆர்.டி.ஓ. பதிவுகளிலும் இலவசம் என்று சொன்னாலே.. இஷ்டப்படுவோர் வாங்கிக் கொள்வார்கள். தவிர, தரகுக்காரர்களிடம் இருந்து மக்கள் தப்பிப்பார்கள்.
'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்பது போல் பாசாங்கு காட்டி, அதிருப்தியில் இருக்கிற கட்சியினர், தாவாமல் இருக்க அதிமுக அரசு , கட்சி உறுப்பினர்களை குஷிப்படுத்தும் விதமாகவே இது இருக்கும் என்கிறார்கள் ஆர்வலர்கள்.
எல்லாம் இருக்கட்டும்... ஆக மொத்தம்... டிராபிக்கில் இன்னும் இன்னும் சிக்கித் திணறப்போகின்றன தமிழக நகரங்கள் என்பதில் மாற்றமே இல்லை.
திட்டத்தின் 'ரூட்'டை மாற்றினால்தான் உண்டு!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago