மக்கள் நீதி மய்யம் செல்லும் பாதை எத்தகையது? கமலின் அரசியல் பயணம் குறித்து ஓர் அலசல்

By பால்நிலவன்

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்தவண்ணம் உள்ளன.

இதுவரை கமல்மீது எந்தவித முடிவும் எடுக்கமுடியாத நிலையில்தான் மக்கள் உள்ளனர். ஆனால் துணிந்தவர்களுக்கு துக்கமில்லையென ஒரு புதிய பாதையை தொடங்குபவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

அந்த வகையில்தான் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரில் எழுதிக்கொண்டே வந்தார். நேரடியாக பேட்டிகளும் தந்தார். மேடைகளில் தோன்றி துணிச்சலாக அரசின் நிர்வாகத்தை விமர்சனம் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமல் கூறியது சர்ச்சைக்குள்ளானது. விரும்பியோ விரும்பாமலோ அவர் கொளுத்திப்போட்ட சர்ச்சை ட்ரெண்டாகி வலைதளங்களில் பற்றிக்கொண்டதும் உண்டு.

கமலின் சமூக அக்கறை

வார இதழ்களிலும் சமூகம் சார்ந்து அரசியல் நிலைகள் சார்ந்து, வாசிப்புகள் சார்ந்து தனது புரிதல்கள் எவ்வாறு உள்ளன, மாற்றங்களை எப்படி செய்ய முடியும் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும் விதமாக கேள்வி பதில்கள், தொடர் கட்டுரைகள் என எழுதினார்.

''ஊதுகிற சங்கை ஊதுவோம்... காதிருப்பவர்கள் கேட்கக் கடவது'' என்றுதான் சமீபகாலங்களில் அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்து வந்துள்ளன. தமிழக அரசின் நிர்வாகத்தை தொடர்ந்து அவர் விமர்சிப்பதும் அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பதும் பதிலுக்கு கமல் ஒன்று சொல்வதுமென கடந்த சில மாதங்களாகவே மாலை நேர செய்திகளின் தலைப்புச் செய்தியானார் கமல்.

சென்னை மழை வெள்ளத்தின்போது கருத்துசொல்லத் தொடங்கிய பின்னர், அவ்வப்போது தூவானமாக தூவப்பட்ட அவரது கருத்துக்கள் கடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி ஆரம்பித்த அவரது கருத்து அடைமழை இன்றுவரை நிற்கவில்லை.

இனி விடாது கருப்பு என்கிற ரீதியில் அனிதா மரணம், ஆர்கே நகர் தேர்தல் எதைப் பற்றியும் மக்கள் உணர்வதை துணிச்சலாக சொல்லத் தொடங்கினார்.

அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பது சிலர் அல்ல பலர் என்ற நிலைதான் இருந்துவந்தது. ஆனால் இதுவரையில் இல்லையென்றாலும் இனியாவது கமலுடன் நாமும் கைசேர்க்கலாமா என சிலர் தற்போது முன்வருவதைப் பார்க்கமுடிகிறது.

ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேச்சு

நியூயார்க் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்ற சென்ற அங்கேயாவது புரியற மாதிரி பேசுவாரா என்று கேட்டவர்கள்தான் அதிகம். ஆனால் அங்கே தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய கமல், ''கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.'' என்று பேசியபோது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். ''அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு'' என்று கூறியபோது அவரது அரசியல் பயணம் உறுதியானது.

''திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது'' என்ற அவருடைய பேச்சு அவரது சமுகப் பார்வை, புரிதல்கள் மீதான நம்பிக்கைக்கு அவரே பாதை அமைத்துத் தருவதை பார்க்கமுடிந்தது.

வெறுமனே பேச்சாக மட்டுமில்லாமல் அங்கு சில விஞ்ஞானிகளையும் சந்தித்தார் கமல். தமிழகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரம் தாங்களே தயாரித்துக்கொள்வதற்கான முன்னேறிவரும் விஞ்ஞான சாத்தியங்களை அறிய விஞ்ஞானிகளிடம் அவர் கலந்துரையாடினார்.

காகிதப் பூவா? விதையா?

நேற்றுமுன்தினம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் தற்போது புதிய கட்சிகள் தொடங்கப்படுவது குறித்து குறிப்பிடும்போது, ''காகிதப் பூ மணக்காது'' என குறிப்பிட்டிருந்தார். இதை கமலைப் பற்றி கூறுவதாக நினைத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குக் கமல் உடனே சொன்ன பதில் சற்று அவரைத் திரும்பிப் பார்க்கும்விதமாகத்தான் இருந்தது. ''என்னைப் பற்றி அவர் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், நான் காகிதப் பூ அல்ல; விதை. முளைத்து, பூவாகி, மணப்பேன். எனது கட்சியின் கொள்கைகளுக்கு உடன்படும் பட்சத்தில், பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்.

எவ்வகையான கேள்விகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல், கோபப்படாமல் சிரித்துக்கொண்டே பதில்சொல்லும் பாங்கு நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்... நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்கிற அவரது சலியாத உற்சாகத்தைப் பார்க்கமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ''தசாவதாரம்'' திரைப்படத்தில் 10 அவதாரங்களைப் பார்த்த நமக்கு இந்த புதிய அவதாரம் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்றாக அவரது 11வது அவதாரம்தான் இது தள்ளிவிட வாய்ப்பு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

இனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார். ''இனி நான் திரை நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு'' என அவர் பேசும் வார்த்தைகளில் வழக்கம்போல அவரது பாணியிலான உருவகங்கள் இருக்கலாம். ஆனால் அதன் நோக்கத்தின் வீரியம் எத்தகையது என்பதை குறைத்துமதிப்பிட முடியாது.

அவரது மய்யம் இணைய தளம் இப்படி சொல்கிறது, ''70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே!

தமிழக சினிமா தலைவர்கள்

ஆனால் கமலின் அரசியல் ஈடுபாட்டை உற்றுக் கவனித்து வரும் சிலர், சார் சினிமாக்காரங்களுக்கு வார்த்தைகளுக்காக சார் பஞ்சம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தராத நம்பிக்கை வார்த்தைகளா? ஆனால் அவர்களது அரசியல் நிர்வாகிகள் பிற்காலத்தில் எடுத்த அவதாரங்கள் என்ன?

தமிழகம் கண்ட காட்சிகள் என்ன? மிகப்பெரிய இயக்கப் பின்புலம் உள்ள அவர்களே தங்கள் அமைப்புகளில் தூய்மையை நேர்மையை கடைபிடிக்க இயலாத நிலையை தமிழகம் காணநேர்ந்தது என்பதுதானே உண்மை. திராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்தது என பலரும் பேசி துணிந்தபிறகு கமல் வந்துள்ளார்.ஆனால் இந்தக் கமல் எம்மாத்திரம்? என்றும், அப்பேற்பட்ட நடிகர்திலகம் சிவாஜியையே நம் மக்கள் தோற்கடிக்கத்தானே செய்தார்கள். அவ்வளவு ஏன் பின்னர் வந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் எனப் பலரும் அரசியலுக்கு வந்து கண்டது என்ன?'' என்று கேட்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எந்தவிதிமுறைகளும் கிடையாது. அதேநேரத்தில் நமது இன்றைய தமிழ் சினிமா 'நாயக வழிபாட்டை' கோரும் ஒரு ஊடகம் என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாவில் நாம் காணும் வசனங்களும் சாகசங்களும் உண்மையில்லை. மிகப்பெரிய போராளிகளும் சிந்தனையாளர்களும் தலைவர்களும் நிறைந்த இன்றைய தமிழகத்தில் நல்ல சிந்தனையுள்ள தலைவர்களுக்கா பஞ்சம் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

திரைக்கதைப் புனைவு மிளிரும் இரண்டரை மணிநேரத்தில் உலகை புரட்டும் சினிமா போலி நம்பிக்கையை ஊட்டி வளர்க்கவே பயன்படும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

புதிய கட்சி செல்லும் பாதை?

எந்த மாதிரியான விருட்சமாக இது வளரவேண்டுமென மண் தீர்மானிக்கப்போகும் இந்த விதை சிறிய விதைதான். எந்தமாதிரியான அரசியல் முன்னெடுப்பு இது என மக்கள் தீர்மானிக்கப்போகும் இந்தக் கட்சி புதிய கட்சிதான். கமலின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அவதாரம் விஸ்வரூபம் எடுக்குமா? அல்லது புஸ்வானமாகிப்போகுமா என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கமலின் கட்சி முன்னெடுப்புச் செயல்களில் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைப் பார்க்கமுடிகிறது. நானே செய்வேன். நானே சாதிக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. தமிழகம் மாற வேண்டும் என்று சிந்திக்கும் இளைஞர்களோடு அவர் கைகோர்க்க விரும்புகிறார்.

தான் கற்றுகொள்ளவேண்டிய அனுபவப் பாடங்களுக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என பலரையும் சந்தித்துப் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையிலேயே தனது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அனுபவப் பாடம்

இந்த சந்திப்பு இன்னும் விரிவடைய வேண்டும். தமிழகத்தின் அப்பழுக்கற்ற பல நல்ல அரசியல் சிந்தனையாளர்களையும் ஆலோசகர்களாக இடம்பெறச் செய்து அவர்களது அனுபவ பாடங்களையும் இவர் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் தளம் வலுவான அஸ்திவாரத்தில் எழுப்பப்படக்கூடியதாக அமையும்.

தற்போது, கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகளாக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் , பத்திரிகையாளர் ராஜநாராயணன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஆர்.ஆர். சிவராமன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்பலரும் நாம் அறிந்தவரை தங்கள் கருத்துக்களை துணிச்சலாக பேசக்கூடியவர்கள்.

இவர்களது பங்களிப்பு சிறந்த முறையில் அவர்களது அனுபவம் கைகொடுக்கும்வகையிலேயே கட்சிக்கான நிர்வாகிகள் வட்டம் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவர்கள் உருவாக்கப்போகிற கட்சிக் கட்டமைப்பும் அதன் இளம்தலைமுறையின் உண்மையான ஆர்வமும் எதிர்வரும் நாட்களும் அரசியலுமே தீர்மானிக்கப்போகிறது புதிய கட்சி செல்லும் பாதையை. 'மக்கள் நீதி மய்யம்' கடந்து செல்லவேண்டிய அரசியல் பாதை அகலமானது ஆழமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும்கூட.

அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு களம் இறங்கியுள்ள கமல் ஆர்வத்தைக் காணும்போது ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'' எனும் பாரதி பாடலே நினைவுக்கு வருகிறது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்