இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற நாள் முதல் அரசின் கவனம், அரசின் அக்கறை பல புதிய புதிய பாதைகளில் பயணித்தது. அசுத்தம் இல்லாத தூய்மை இந்தியா - கண்ணெதிரில் பரிணமித்தது. 'சுத்தம் செய்யும்' பணி, வீடுகளோடு தெருக்களோடு முடிந்து விடக் கூடியதா..? அரசின் சேவையில் பொது நிர்வாகத்தில் 'சுத்தம்' செய்ய வேண்டியது நிறைய உள்ளதே..!
ஊழலுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கை - ஆழமானது; அகலமானது. ஊழலற்ற இந்தியா - சாத்தியம் என்று மோடி நம்பினார். இதனை நிறைவேற்றும் வகையில் அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊழலைக் களைவதில் அவருக்கு இருந்த உண்மையான அக்கறை, அவரது உரைகளில் நன்கு வெளிப்பட்டது. அவ்வகையில் ஒன்று - 2015 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர தின உரை. அதன் முழு விவரம் இதோ:
எனது அன்பார்ந்த 125 கோடி இந்திய மக்களே, இந்தப் புனித விடுதலை நாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். இந்த ஆகஸ்ட் 15 காலை, மற்ற காலை வேளைகளைப் போன்றது அல்ல. உலகின் மிகப் பெரும் ஜனநாயகத்தின் விடுதலைத் திருவிழாவின் விடியல் இது. இது 125 கோடி இந்திய குடிமக்களின் கனவுகளின் விடியலாகும். இந்தப் புனிதத் தருணத்தில், இந்த நாட்டின் பெருமைக்காகப் போராடிய, இடையறாது முயற்சித்த, தமது இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை மகத்தான நபர்களுக்கும் பலப்பல வணக்கங்கள். அவர்கள் தங்களது இளமைக் காலத்தை சிறையில் செலவிட்டார்கள்; பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். ஆனாலும் இந்தியாவை விடுதலை பெற செய்யும் கனவை விட்டு விடவில்லை; உறுதியாக நின்றார்கள்.
சமீபத்தில் இந்தியாவின் மகத்தான இளைஞர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூகப் பணியாளர்கள், இந்தியத் தாயின் புதல்வர்கள் புதல்விகள், நாட்டின் குடிமக்கள், பல பெரிய காரியங்களை சாதித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து உள்ளார்கள். எண்ணில் அடங்காத இவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ நல்வாழ்த்துகள். இந்தியாவின் அகன்ற பன்முகத்தன்மை எப்போதும் பேசப்படுகிறது; இதேபோன்று மேலும் பல நல்ல குண நலன்கள் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவில் பன்முகத்தன்மை ஏராளமாய் உள்ளது. இந்தியா - ஓர் அகன்ற தேசம். இந்திய மக்களிடம் எளிமை இருக்கிறது. இந்தியாவில் எல்லா பாகங்களிலும் ஒற்றுமை இருக்கிறது. இதுதான் நமது வலிமை; நமது தேசத்தின் வலிமை. தொடர்ந்து நூற்றாண்டுகளாக நம்முடைய வலிமையை நாம் தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.
» செங்கோட்டை முழக்கங்கள் 68 - ‘புதிய காற்று... புதிய வேகம்’ | 2014
» செங்கோட்டை முழக்கங்கள் 67 - ‘ஜனநாயக சக்திகள் வலுப்பெற்றுள்ளன’ | 2013
ஒவ்வொரு யுகத்திலும் இந்த வலிமையைப் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது எதிர்காலக் கனவுகளை நிறைவேற்ற ஏதுவாக அவை வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன. இதைக் கொண்டு தான் நம்முடைய பழமை வாய்ந்த மரபுகள் மற்றும் எப்போதும் புதிதாய் உள்ள உறுதிகள் மூலம் இந்த நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது. நமது ஒற்றுமை, எளிமை, சகோதரத்துவம் ஒருமைப்பாடு ஆகியன நமது ஆகப் பெரும் வலிமையாகும். இந்த வலிமை மீது களங்கம் சுமத்தக் கூடாது; இது பாதிப்பு அடையக் கூடாது.
நமது நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்பட்டால், நமது கனவுகள் சிதைந்து போகும். ஆகையால், சாதியம் அல்லது மத அடிப்படைவாதம் என்கிற விஷயத்தை எந்த வடிவத்திலும் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம்; சாதியம், மத அடிப்படைவாதம் ஆகிய விஷத்தை வளர்ச்சி என்கிற அமுதம் கொண்டு தான் சரி செய்ய வேண்டும்; வளர்ச்சி என்கிற அமுதத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்; இதன் மூலம் தான் ஒரு புதிய விழிப்புணர்வைக் கொண்டு வர முடியும்.
அன்பான சகோதர சகோதரிகளே, நமது நாடு முன்னேறி வருகிறது காரணம் 'Team India' - இந்தியா என்கிற ஓர் அணி. இது 125 கோடி மக்களைக் கொண்ட பெரிய அணி. 125 கோடி மக்கள், ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவார்கள், தேசத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வார்கள்; பாதுகாப்பார்கள் என்று உலகம் ஒருபோதும் எண்ணி இருக்காது. இன்று நாம் என்ன செய்தாலும், எந்த உயரங்களுக்கு முயற்சித்தாலும் அதற்கு, இந்திய அணியே காரணமாகும். இதற்காக இந்த அணிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மக்களின் பங்களிப்பே ஜனநாயகத்தின் ஆகப் பெரும் வலிமையாகும். 125 கோடி இந்தியர்களின் பங்களிப்பின் மூலம் இந்த நாட்டை நிர்வகித்தால், ஒவ்வொரு தருணத்திலும் (ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும்) 125 கோடி அடிகள் முன்னேறுகிறது. அதனால்தான் ஒரே அணியாக இந்திய மக்களின் பங்களிப்பை நாம் ஊக்குவிக்கிறோம்.
எலக்ட்ரானிக் இணையதளம் mygov.in மூலம், நாட்டு மக்களின் பல லட்சம் கடிதங்கள் மூலம், 'மனதின் குரல்' மூலம், குடிமக்களுடன் உரையாடுவதன் மூலம் நாள்தோறும் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இந்த அரசின் ஒவ்வொரு செயல்பாட்டின் மீதும் நாட்டின் வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்தும் எண்ணற்ற ஆலோசனைகள் பெற்று வருகிறோம்; இதுதான் இந்த அணியின் உண்மையான வலிமை.
எனது அன்பான சக குடிமக்களே, இந்திய அணிக்கு மக்கள் தந்துள்ள பொறுப்பு ஒன்றே ஒன்றுதான் - நமக்கு எல்லா திட்டங்களும் எல்லா அமைப்பு முறைகளும் நாட்டின் ஏழைகளுக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும். வறுமைக்கு எதிரான போரில் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; இந்த கடினமான முயற்சியில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்; யாரும் ஏழ்மை இருக்க விரும்புவதில்லை; வறுமையை விரட்டவே விரும்புகிறார்கள். ஆகவே நமது வளமைகள், நமது திட்டங்கள், நமது செயல்பாடுகள் ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு உதவும் வகையில் இருப்பதே அர்த்தம் உள்ளதாகும்.
சகோதர சகோதரிகளே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று எனது சில கருத்துக்களை உங்களிடம் தெரிவித்தேன். அது சமயம் நான் புதிதாக இருந்தேன். அரசில் நான் என்னவெல்லாம் பார்த்தேனோ அதையெல்லாம் திறந்த மனதுடன் 125 கோடி மக்கள் முன் வெளிப்படுத்தினேன். ஓராண்டுக்குப் பிறகு இன்று, அதே செங்கோட்டை கொத்தளத்தில் மூவண்ணக் கொடியின் கீழ் நின்று கொண்டு நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன் - 125 கோடி மக்களைக் கொண்ட நமது 'டீம் இந்தியா' - புதிய நம்பிக்கை, புதிய சக்தி மற்றும் சிறந்த கடின உழைப்பின் மூலம் நமது கனவுகளை நினைவாக்க உறுதி பூண்டுள்ளது. நம்பிக்கை தரும் சூழல் தோன்றி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா அறிவித்தேன். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழைகளின் நலனுக்காக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகும், கடந்த ஆகஸ்ட் 15 வரை நமது மக்களில் 40 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. வங்கிக் கதவுகள் ஏழைகளுக்குத் திறந்ததாக இல்லை. நாங்கள் தீர்மானித்தோம் - இந்தக் கறையை நீக்க வேண்டும், உலகம் முழுதும் பேசப்படும் எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளம் இட வேண்டும். ஏழையிலும் ஏழையாய் இருப்பவரைப் பிரதான பொருளாதார நீரோட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும். இது ஒரு தொடக்கம் மட்டுமே. தீர்மானமற்ற கால அளவுகளைக் கொண்ட பழைய பணி கலாச்சாரமாக இல்லாமல், அடுத்த ஆண்டு ஜனவரி 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுவதற்கு முன்பாக இப்பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.
நாட்டு மக்களே, குறிப்பிட்ட கால அளவுக்குள் நமது இலக்கை எட்டி விட்டோம் என்று என்னால் இன்று பெருமையுடன் கூற முடியும். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 17 கோடி மக்கள் வங்கி கணக்கைத் தொடங்கியுள்ளனர். ஏழைகளுக்கு வாய்ப்புகளை விரிவாக்கும் வகையில், ஜீரோ இருப்புடன் இக்கணக்குகளைத் தொடங்கலாம் என்று சொன்னோம். இதன் பொருட்டு வங்கிக்கு ஆகும் செயல்பாட்டுச் செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னோம். வங்கிகள் இருப்பது எதற்காக? (யாருக்காக?). இவை ஏழைகளுக்காக இருக்க வேண்டும்; அதனால்தான் ஜீரோ இருப்புடன் கணக்கு தொடங்க முடிவெடுத்தோம்.
நமது நாட்டின் செல்வந்தர்களைப் பார்த்து உள்ளோம்; ஆனால் இந்த முறை ஏழைகளையும் அவர்களின் சொத்துகளையும் பார்க்கிறோம். ஏழை மக்களின் அகன்ற இதயத்துக்கு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து வணக்கம் செலுத்துகிறேன். ஏனென்றால், ஜீரோ இருப்புடன் கணக்கு தொடங்கலாம் என்று அறிவித்து இருந்தாலும், இந்த ஏழை மக்கள் 20,000 கோடி ரூபாயை வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக செலுத்தி உள்ளனர். நமது ஏழை மக்களின் தாராளம் காரணமாகவே இது சாத்தியம் ஆயிற்று. இந்த ஏழை மக்களின் எழுச்சி உணர்வின் காரணமாக 'டீம் இந்தியா' முன்னேறிச் செல்லும் என்கிற எனது உறுதி மெய்யாகி இருக்கிறது.
சகோதரர்களே சகோதரிகளே, நமது நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் வங்கி கட்டிடம் எழுப்பப்பட்டால் அல்லது ஒரு வங்கிக் கிளை தொடங்கப்பட்டால், அது பேசப்படுகிறது; மக்கள் மகிழ்கிறார்கள்; சிறந்த வளர்ச்சியைக் குறிப்பதாக புகழப்படுகிறது. இது ஏனெனில் கடந்த 60 ஆண்டுகளில், இந்த அளவுகோல்களைக் கொண்டுதான் நமது நாட்டின் வளர்ச்சி கணக்கிடப்பட்டது. எங்கேனும் வங்கிக் கிளை திறக்கப்பட்டால், நிறைய பாராட்டுகள் எழுகின்றன; அரசாங்கத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, வங்கிக் கிளை தொடங்குவது ஒன்றும் சவாலான காரியம் அல்ல. அரசுக் கருவூலத்தின் மூலம் இதனை எளிதாக செய்து விடலாம்; ஆனால் 17 கோடி மக்களை வங்கிக்கு அழைத்து வருவது மிகக் கடினமான காரியம்.
இதற்கு, ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்; எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதன் பொருட்டு, டீம் இந்தியாவில் முக்கிய பங்காற்றும் பல்வேறு வங்கிகள் அதன் ஊழியர்களுக்கு எனது பாராட்டுகள். ஏழைகள் எளிதில் வங்கிகளை அணுக வழி செய்த வங்கிகளைப் பாராட்டுகிறேன்; இது வரும் நாட்களில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்.
உலகப் பொருளாதார சிந்தனைகளில் ஒன்று - எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதாரம். தன்னளவில் நேர்மறை விளைவுகளை உண்டாக்கி விடாது; வறுமையின் அழுத்தத்தை அமைப்பு முறை சுமக்கத் தயாராக வேண்டும். இந்த சிந்தனைக்கு நான் உடன்படவில்லை. இந்தியா போன்ற நாட்டில், வளர்ச்சியின் பிரமிட் (pyramid) பார்த்தால், அதன் அடித்தளம் மிக அகன்று இருக்கிறது. இது வலுவாக இருந்தால் பிரமிட் வலுவாக இருக்கும். நலிந்தவர்கள், சுரண்டப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரே நமது நாட்டு வளர்ச்சி பிரமிடின் அடித்தளமாய் இருக்கிறார்கள். இந்த அடித்தளத்தை நாம் வலுவாக்க வேண்டும்; எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் மூலம் இவர்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்; அப்போதுதான் இந்த பிரமிடு அசைக்க முடியாததாய் உறுதியுடன் நிற்கும்.
எந்த நெருக்கடியிலும் இது உறுதியாக இருக்கும். இந்த வளர்ச்சிப் பிரமிடு, பொருளாதார வலிமையை அடித்தளமாகக் கொண்டு இருந்தால், இந்த மக்களின் வாங்கும் சக்தியை அது பெருமளவு அதிகரிக்கும். சமுதாயத்தில் ஏழையிலும் ஏழைகளின் வாங்கும் சக்தி அதிகரித்தால், அந்தப் பொருளாதாரம் வளம் பெறுவதை முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. அது நாட்டை விரைந்து வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும்; ஆகவே இதற்கு உத்வேகம் தர வேண்டும் என்று விரும்புகிறோம்.
சமூகப் பாதுகாப்புக்கும் ஏழைகளின் நல்வாழ்வுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்; எனவேதான், பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகியன தொடங்கப்பட்டு உள்ளன. நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு சமூகக் காப்பீடு இல்லை. ஏழைகள் மட்டுமல்ல; கீழ் நடுத்தர வர்க்கத்துக்கும் கூட காப்பீட்டின் பயன்கள் சென்று சேரவில்லை. ஆகவே நாம் ஒரு திட்டம் இயற்றினோம் - ஒரு மாதத்துக்கு ஒரு ரூபாய் மட்டும் அதாவது ஆண்டுக்கு ரூபாய் 12 மட்டும் செலுத்துங்கள்; பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்கிற காப்பீட்டு திட்டத்தின் பலன்களைப் பெறுங்கள்.
ஒரு குடும்பத்துக்கு ஏதும் பேரிடர் நேரிட்டால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் ஒரு நாளைக்கு, ஒரு ரூபாய்க்கும் கீழே, 90 பைசாவுக்கு பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா தொடங்கினோம். அதாவது ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு, ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஓராண்டுக்கு ரூபாய் 330 மட்டுமே கொண்டு இரண்டு லட்ச ரூபாய்க்கு காப்பீடு! இதைத்தான் நாம் செய்துள்ளோம்.
சகோதரர்களே சகோதரிகளே கடந்த காலத்திலும் பல திட்டங்கள் இயற்றப்பட்டன. திட்டங்களை இயற்றாத அரசுகளே இல்லை. ஒவ்வொரு அரசும் இதைச் செய்கிறது. அறிவிப்புகள் வெளியிடாத அரசுகள் இல்லை. இதையும் ஒவ்வொரு அரசும் செய்கிறது. தொடக்க விழாவில் விளக்குகளை ஏற்றாத, ரிப்பன்களை வெட்டாத அரசுகள் இல்லை. ஒவ்வொரு அரசும் இதைச் செய்கிறது. ஆனால் குறிப்பிட வேண்டியது - சொன்னபடி நடக்கிறோமா என்பதுதான். ஒரு புதிய பணிகலாச்சாரத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, 40 ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகள் பழமையான பல திட்டங்கள் நம் நாட்டில் உள்ளன; ஆனால் இவை ஐந்து கோடி, ஆறு கோடி அல்லது ஏழு கோடி மக்களை மட்டுமே சென்று சேர்ந்தது. இந்த திட்டம் இப்போது நூறு நாட்களை மட்டுமே நிறைவு செய்துள்ளது. வெறும் நூறு நாட்கள்! இந்த நூறு நாட்களில் 10 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். 10 கோடி மக்கள்! 10 கோடி மக்கள் என்றால் 10 கோடி குடும்பங்கள். அதாவது, நமது நாட்டில் உள்ள 30 - 35 கோடி குடும்பங்களில், பத்து கோடி குடும்பங்கள் நூறு நாட்களுக்குள்ளாக இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளன.
சகோதரர்களே சகோதரிகளே, கடந்த ஓராண்டில் டீம் இந்தியாவின் இந்த அரசின் தனித்துவம், 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியாவின் மிகப்பெரும் வலிமை மகப்பேறு சாதனை - குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் காரியங்களைச் செய்து முடிப்பதுதான். கடந்த ஆண்டு இந்த செங்கோட்டையில் இருந்து கழிப்பறை வசதிகள் குறித்துப் பேசினேன். தூய்மையை குறித்தும் பேசினேன். சில மணி நேரத்துக்கு இந்த நாட்டுக்கு, இவர் என்ன பிரதமர் என்று சற்றே வினோதமாக இருந்தது. ஆனால் இன்று நாடு முழுதும் மேற்கொண்ட எல்லா ஆய்வுகளிலும், ஒவ்வொரு நபரையும் தொட்ட ஒரு பணியாக மிக முக்கியமாக குறிப்பிடப்படுவது - தூய்மை இயக்கம்.
சகோதரர்களே சகோதரிகளே, சமுதாயத்தின் பல பிரிவு மக்களையும் எழுப்பி வெவ்வேறு நபர்களின் பெயர்களைச் சொல்லி தூய்மை பிரச்சாரத்தை ஊக்குவித்தோம். அப்படி ஒரு காலம் இருந்தது; இப்போது, டீம் இந்தியாவை நான் பாராட்டுகிறேன். பிரபலங்கள், தூதரக அதிகாரிகள், சமூகப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், யாரையும் குறை சொல்லாமல் எந்தக் குறைபாட்டையும் பெரிது படுத்தாமல் சாமானிய மக்களைப் பயிற்றுவிப்பதில் பெரும் பொறுப்பு எடுத்து செயல்பட்டார்கள். இவர்களின் இந்தச் செயலுக்காக மனதின் ஆழத்திலிருந்து இவர்கள் அனைவரையும் இன்று நான் வாழ்த்துகிறேன்.
ஓர் அம்சத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் - யாரிடம் இருந்து இந்த தூய்மை இயக்கம், மிகப் பெரும் வலிமை பெற்றது? யார் இதன் மாபெரும் தூதுவர்? இதை நீங்கள் கவனிக்காமல் போய் இருக்கலாம்; ஆனால், உங்கள் குடும்பத்தில் என்ன நிகழ்ந்தது என்று நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தியாவின் பல கோடி குடும்பங்களில் ஐந்து வயது, பத்து வயது, பதினைந்து வயதுக் குழந்தைகள் டீம் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றி இந்த இயக்கத்தின் தூதுவர்களாக மாறினர்.
தமது பெற்றோர் வீட்டுக்குள் குப்பை போடுவதை, ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதை இவர்கள் தடுத்தனர். யாருடைய தந்தையேனும் குட்கா புகைக்கும் வழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியில் துப்புவதாக இருந்தால், இந்தியாவில் சுத்தமாக வைத்திருங்கள் என்று அவரது மகன் கூறுவான். இத்தகைய சிறுவர்களின் பங்களிப்பால் தான் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது.
நமது நாட்டு எதிர்காலத்துக்கு முன்பாக, நமது குழந்தைகளின் முன்பாக தலை வணங்குகிறேன்; அவர்களை வாழ்த்துகிறேன். கற்றறிந்த மக்கள் கூட இன்னமும் புரிந்து கொள்ளாத உண்மையை அப்பாவிக் குழந்தைகள் புரிந்து வைத்துள்ளனர். இந்த அளவு விழிப்புணர்வு கொண்ட குழந்தைகளைக் கொண்ட நாடு, தூய்மையில் உறுதி கொண்ட நாடு, நிச்சயம் தூய்மை பெறும். குப்பைகளுக்கு அசுத்தங்களுக்கு எதிரான மனநிலை இனி அதிகரிக்கவே செய்யும்.
2019 இல் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறோம். அந்த நாளில் அவருக்கு நமது மரியாதை கலந்த அஞ்சலியாக தூய்மையான இந்தியாவை வழங்க வேண்டும். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளில் இதைவிட மிகச் சிறந்த அஞ்சலி இருக்க முடியாது. இந்தப் பணி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. இதை முன்னோக்கி செலுத்த வேண்டும்; நிறுத்தி விடக் கூடாது. (போதும் என்று) நிறைவு அடைந்து விடக் கூடாது. ஒரு சோதனைக்காக இத்தகைய ஒரு திட்டத்தை இங்கிருந்து அறிவித்தேன்; டீம் இந்தியாவால் இதனைச் செய்ய முடியுமா இல்லையா என்று கணக்கிட நினைத்தேன். யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் இதனை அறிவித்தேன்.
மாவட்டங்களில் இருந்து கிராமங்களில் இருந்து தகவல் எதுவும் பெறாமலேயே இது அறிவிக்கப் பட்டது. என் மனதில் பட்டது; ஆகஸ்ட் 15-க்குள் நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்குத் தனியே கழிப்பறைகள் கட்டப்படும் என்று அறிவித்து விட்டேன். பிறகு இந்தப் பணியைத் தொடங்கிய போது, டீம் இந்தியா தனது பொறுப்புகளைக் கண்டறிந்த போதுதான் உணர்ந்தோம் - 2 லட்சத்து 62 ஆயிரம் பள்ளிகளில் 4.25 லட்சத்துக்கு மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட வேண்டி இருந்தன. இந்தப்பணி மிகவும் கடினமாக இருந்தது; எந்த ஒரு அரசும் இந்த காலக் கெடுவை நீட்டிக்கலாமா என்றுதான் யோசிக்கும். ஆனால் டீம் இந்தியாவின் உறுதி, நிலையாக இருந்தது; யாரும் நீட்டிப்பு கோரவே இல்லை. இன்று ஆகஸ்ட் 15 நாளில் டீம் இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துகிறேன். தேசத்தின் மூவண்ணக் கொடியின் பெருமையை மனதில் கொண்டு, இந்த கனவு நிறைவேற்றுவதில் டீம் இந்தியா முழுதாக ஈடுபட்டது.
இத்தனை கழிப்பறைகள் கட்டும் இலக்கை, டீம் இந்தியா அநேகமாக நிறைவு செய்து விட்டது. இந்தச் சாதனை நிறைவேற்றுவதில் முழுமையாக ஈடுபட்ட எல்லா மாநில அரசுகள், மாவட்ட அரசு அலுவலர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், கல்வி நிறுவனப் பொறுப்பாளர்கள் ஆகியோரை வாழ்த்துகிறேன். இது வெறுமனே 4.25 லட்சம் கழிப்பறைகள் கட்டுகிற பணி மட்டுமே அல்ல; எதுவும் நடைபெறாது, நம்பிக்கை இல்லை, சாத்தியமில்லை என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் நாடு முழுதும் சூழ்ந்து இருந்தபோது, ஒரே சமயத்தில் எங்கும் தன்னம்பிக்கையை உருவாக்கிய விஷயம் இது.
இப்போது டீம் இந்தியா, சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம், பின்வாங்க மாட்டோம், நமது வெற்றிக்கு நாம் உறுதி பூண்டுள்ளோம் என்பதை வெளிக்காட்டி உள்ளது. இந்தத் தன்னம்பிக்கையில் தான் இந்த நாடு, மென்மேலும் புதிய தீர்மானங்களோடு முன்னேறுகிறது. நாம் எங்கும் நின்றுவிட முடியாது; தொடர்ந்து முன்னேறி நகர்ந்து கொண்டே இருத்தல் வேண்டும். ஆகையால் சகோதரர்களே சகோதரிகளே, இந்த நாட்டு தொழிலாளர்களுக்காக ஒரு திட்டம் தயாரித்துள்ளோம்; அதன் பெயர் 'ஷ்ரமேவ ஜெயதே' (Shrameva Jayate)
ஏழைத் தொழிலாளரை நோக்கிய நமது அணுகுமுறை நன்றாக இல்லை. கோர்ட்- பேண்ட்- டை அல்லது குர்த்தா ஜாக்கெட் அணிந்த ஒரு நபரை சந்திக்கும் போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துகிறோம். ஆனால் ஒரு ஆட்டோ டிரைவர், ரிக்க்ஷா இழுப்பவர், செய்தித்தாள் விற்பவர் அல்லது பால்காரர் யாரேனும் நம்மிடம் வந்தால் இவர்களை நாம் அணுகும் முறை மோசமாக இருக்கிறது. 125 கோடி மக்களின் இந்தக் குறை, மனவுறுதியால் மாற வேண்டும். நாம் நன்றாக தோன்றுவதற்கு நமக்காக நன்றாக உழைக்கிற இவர்களைக் காட்டிலும் நமக்கு நல்லது விரும்புவோர்/ நல்லது செய்வோர் யாருமில்லை. இவர்கள் பெருமை கண்ணியம் பெருமிதத்தைக் காப்பாற்றுவது நமது தேசியக் கடமையாக, நமது தேசிய குணமாக, நம் ஒவ்வொருவரின் இயல்பாக இருக்க வேண்டும்.
சமீபத்தில், சில திட்டங்களின் கீழ்வரும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினோம். இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை அவர்கள் பெறுவார்கள். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை இதுவரை யாரும் கவனித்ததே இல்லை. இதேபோன்று அரசு கருவூலங்களுக்கு நிதி சேர்வதில் நமது நாட்டின் கடும் உழைப்பாளிகள் தமது ஊதியத்தின் ஒரு பகுதியை செலுத்தி உள்ளார்கள். மெல்ல மெல்ல இந்தத் தொகை ரூ.27,000 கோடி அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால் இவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாறுகிற போது, ஏற்கனவே இவர் செலுத்திய தொகை குறித்த தகவல்கள் பராமரிக்கப்படுவது இல்லை. இந்தத் தொகை சிறியதாக இருப்பதால் சுமார் ரூ.200 செலவு செய்து பழைய இடத்துக்குச் சென்று கோருவது இல்லை. இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளோம்.
இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு சிறப்பு அடையாள எண் வழங்குகிறோம்; இவர்கள், ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்துக்கு ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு மாற்றலாகிச் சென்றாலும் இந்த சிறப்பு அடையாள எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளலாம்; செலுத்திய தொகையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்; யாரும் இவர்களிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூடத் தவறாக எடுத்துச் செல்ல முடியாது. அதாவது ஏழைத் தொழிலாளர்களுக்கு 27,000 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்தி இருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் ஒரு சட்டம் இயற்றி நீதிமன்றங்களை எப்போதும் பிசியாக வைத்திருப்பது நமது நாட்டில் ஒரு நாகரிகம் ஆகி விட்டது. ஒரு சட்டம் மற்றொரு சட்டத்துடன் முரண்படலாம்; இங்கே எப்போதும் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. நல்ல அரசு முறைக்கு இது சரியல்ல; சட்டங்கள் வெளிப்படையாக சரியானதாக காலத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமுதாயம் வளர்ச்சி பெறும். நமது தொழிலாளி நலங்களுக்காக வெவ்வேறு வகையில் 44 சட்டங்கள் உள்ளன; தமது நலனுக்காகத் தொழிலாளர்கள் எங்கே செல்வார்கள்? இங்கே நாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்த 44 சட்டங்களையும் இப்போது நான்கு சட்டங்களுக்குள் (codes) கொண்டு வந்துள்ளோம். இப்போது ஏழையிலும் ஏழை, எழுத்தறிவில்லா தொழிலாளர்களும் தமது நலன்களை அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை நாம் மிகவும் வலியுறுத்துகிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, நம் நாட்டில் ஊழல் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஒரு நோயாளி மற்றவர்களுக்கு ஆரோக்கியம் குறித்து குறிப்புகள் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். அவர் தன்னைப் பற்றிக் கூட அதிகம் கவனம் செலுத்துவதில்லை; ஆனால் இதைச் செய், இவ்வாறு நடந்து கொள் நீ நலமாக இருப்பாய் என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை இயல்பாக வைத்திருப்பார். ஊழல் பிரச்சினையிலும் இப்படித்தான். ஊழலில் ஈடுபட்டவரும் அறிவுரை வழங்குகிறார். ஊழலால் பாதிக்கப் பட்டவரும் அறிவுரை வழங்குகிறார். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் அறிவுரை வழங்கிக் கொள்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சகோதரர்களே சகோதரிகளே, இந்த அறிவிப்பை இதற்கு முன் நான் செய்ததில்லை, ஆனால் இப்போது சொல்ல விரும்புகிறேன். எனது சக நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன், டீம் இந்தியாவின் 125 கோடி மக்களுக்கு சொல்கிறேன் - இந்த நாடு ஊழலற்ற நாடாக மாற முடியும். அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். இந்தப் பணி, உயர் மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஊழல் என்பது கரையான் போன்றது; பரவிக் கொண்டே இருக்கும். தொடக்கத்தில் அது வெளியே தெரியாது, ஆனால் அது வீடெங்கும் பரவி துணிகளை அரிக்கத் தொடங்குகிற போது தான், அதை கண்டுபிடிக்கிறோம். அழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பூச்சிக்கொல்லி மருந்தை உட்செலுத்த வேண்டி வருகிறது. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு கரையான்களை அழிக்கிறோம்.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஊழலை ஒழிக்க எண்ணற்ற பல்வேறு வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்ய முடியும். சமையல் எரிவாயு மீது ரூ.15,000 கோடி மதிப்பிலான மானியத்தைக் குறைக்க முடியும் என்று சொன்னால் அதனைப் பாராட்டி பல நூறு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இவ்வளவு பெரிய மானியத் தொகையைக் குறைக்கும் துணிச்சல் இவருக்கு இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். இவனால் (என்னால்) கடுமையான முடிவுகளை எடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கடின முடிவுகளை எடுக்காவிட்டால் அன்பான நண்பர்களே இங்கே எதுவுமே நிகழாது. சில சமயங்களில் விரக்தியில் மூழ்குவதை மக்கள் விரும்புகிறார்கள். யாரிடமேனும் விரக்தியாய்ப் பேசா விட்டால் இவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.
சிலருக்கு ஏதேனும் நோய் இருக்கிறது ஆனால் அதைப் பற்றி அவர்கள் சொல்ல மாட்டார்கள். அது குறித்து யாரேனும் பேசினாலும் விரும்ப மாட்டார்கள். வேறு சிலர் இருக்கிறார்கள், தம்மை நேரில் வந்து பார்த்து தனது நோய் குறித்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்; அவர்களிடம் மணிக்கணக்கில் தனது நோய் குறித்துப் பேசுவார்கள். சிலர் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை விரும்புவார்கள் எதிர்மறை சிந்தனைகளை பரப்புவார்கள் இதிலேயே மகிழ்ச்சி கொள்வார்கள். இவர்களிடம் எந்தத் திட்டங்களும் இல்லை; செயல்பாடுகளும் இல்லை. ஆனாலும் இவர்களுக்காகவும் 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியா நேரத்தைச் செலவிடுகிறது; இது எவ்வாறு நேர்கிறது? எரிவாயு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் கணக்குக்கு மாற்றல் செய்ய ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளோம்.
ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் பயன்களைக் கொண்டு, எரிவாயு மானியத்தை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்துகிறோம். இதன் விளைவாக, இடைத்தரகர்கள் மற்றும் கறுப்பு சந்தைக்காரர்கள் மறைந்து போனார்கள். உண்மையான பயனாளிகள் மட்டுமே பயன்பெற்றனர். யாருடைய பயன்தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை; யாருடைய பாராட்டையும் பெறுவதற்காக (வெற்று) அறிவிப்பும் செய்யவில்லை. அமைப்பு முறையை மேம்படுத்தி இருக்கிறோம்; இன்று 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் - இதன் விளைவாக, எரிவாயு சிலிண்டர் மூலம் ஆண்டுதோறும் ரூ.15,000 கோடி சுருட்டப்பட்டதைத் தடுத்துள்ளோம்.
அன்பான சகோதரர்களே சகோதரிகளே, எவ்வாறு பணி செய்யப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். நாங்கள் இதைச் செய்துள்ளோம். இந்தியா போன்ற நாட்டில் 15 ஆயிரம் கோடி என்பது சாதாரண தொகை அல்ல. ஒரு திறந்த வெப்சைட் தொடங்கியுள்ளோம், சிலிண்டர் வழங்குவதற்கான பலகை அங்கே உள்ளது, இதன் பிறகும் யாருக்கேனும் புகார் இருந்தால் நடுஇரவில் கூட அவரால் சிலிண்டர் பெற முடியும். ஏழைகளையும் இந்த நாட்டையும் கொள்ளை அடிப்போரை நாம் அனுமதிக்க முடியாது. சொல்லுங்கள் - இது ஊழலுக்கு எதிரான போர் இல்லையா?
அன்பான சகோதரர்களே சகோதரிகளே, நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் எரிவாயுக்கான மானியம் ஏன் பெற வேண்டும்? நீங்கள் நொறுக்குத் தீனிக்காகச் செலவிடும் சிறிய தொகையான 500 - 700 ரூபாய் தொகை மானியம் ஏன் தேவை? இதைப் பற்றிய செய்தியை இப்போதுதான் தரத் தொடங்கியுள்ளேன். இதற்காக இதுவரை எந்த பிரச்சாரத்தையும் தொடங்கவில்லை. ஏனெனில் டீம் இந்தியாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் செய்தி பரவுகிற போது தானாகவே நல்ல விளைவுகள் தோன்றும். ஆனாலும் இன்று நான் பெருமையுடன் சொல்கிறேன் - எரிவாயு சிலிண்டர் மானியத்தைத் துறந்து விடுங்கள் என்று நான் சொன்ன நாளிலிருந்து இன்று வரை 20 லட்சம் நுகர்வோர் மானியத்தைத் துறந்துள்ளனர்.
இது சிறிய தொகை அல்ல. ஒரு கோயிலில் பிரசாதம் வேண்டி வரிசையில் நின்றாலும் கூட நமது இளைய சகோதரனுக்கும் பிரசாதம் வேண்டும் என்று நினைப்போம். இது நமது இயல்பிலேயே உள்ளது. மானியத்தைத் துறந்த 20 லட்சம் மக்களும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் சாமானிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஒரு ஆசிரியர் ஓய்வூதியதாரராக இருப்பார். ஆனாலும் ஏழைகளுக்கு இந்த மானியம் போய் சேரட்டும் என்று இந்தச் சலுகையை விட்டு தந்து இருப்பார். அன்பான சகோதர சகோதரிகளே, இந்த 20 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் புகை மண்டிய ஏழைக் குடும்பங்களின் சமையல் அறையைச் சென்று அடையும் போது அந்த சமையலறையில் இருக்கும் தாய்மார்கள் எந்த அளவு மகிழ்ச்சி கொள்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமையல் அறை புகை காரணமாக அழும் சிறிய குழந்தைகளுக்கு கிடைக்கும் நிவாரணம் மகிழ்ச்சி குறித்து எண்ணிப்பாருங்கள். எப்போதெல்லாம் நமது முயற்சிகள் சரியான திசையில் உள்ளனவோ அப்போதெல்லாம் நமக்கு நல்ல விளைவுகள் கிடைக்கின்றன.
அன்பான சகோதரர்களே சகோதரிகளே நிலக்கரி குறித்து நான் பேசினால் அரசியல் அறிஞர்கள் நிபுணர்கள் சிலர் என்னை அரசியல் கோணத்தில் எடை போடுவார்கள். இது அரசியல் செய்வதற்கான இடம் அல்ல. ஆகவே இது விஷயத்தில் எல்லா அரசியல் அறிஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன் - நான் எழுப்ப இருக்கும் நிலக்கரி பிரச்சினையை தயவு செய்து அரசியல் கோணத்தில் எடை போடாதீர்கள். இது நமது தேசம் தீர்மானிக்க வேண்டிய தேவையாகும். நிலக்கரி சுரங்கப் பணிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது நமது நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்தப் புள்ளி விவரத்தை நமது தேர்தல் பரப்புரையிலும் கூடச் சொன்னோம்.
இந்த அளவு இழப்பு ஏற்பட்டிருக்க முடியாது என்று கூட சில சமயம் நினைத்தோம். ஆனாலும் இதை சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு தான் முடிவு செய்தோம் - நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், வேறு எந்த இயற்கை மினரலாக இருந்தாலும் எல்லாமே இனி ஏலம் விடப்படும். இதோ.. அது செயல்முறைக்கு வருகிறது. இதுதான் 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியாவின் மன உறுதி. மிகக்குறுகிய காலத்தில் நிலக்கரி ஏலம் விடப்பட்டது; தேசத்தின் கருவூலத்துக்கு வியாழக்கிழமை மூன்று லட்சம் கோடி ரூபாய் வருவாய் தொடர்ந்து கிட்டும்.
சகோதரர்களே சகோதரிகளே, ஊழல் வேரறுக்கப்பட்டதா இல்லையா என்பதை நீங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இடைத் தரகர்கள் வெளியேற்றப்பட்டார்களா இல்லையா? இந்தியாவில் சொத்துகளைத் திருட முயற்சித்தவர்களுக்கு கதவுகள் மூடப்பட்டதா இல்லையா? இது குறித்து நான் எந்த உரையும் நிகழ்த்தவில்லை. செய்துகாட்டினேன். அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் இதுவே தான் நடந்தது. இப்போது எஃப்.எம். ரேடியோவுக்கான ஏலம் நடந்து கொண்டு இருக்கிறது. என் மீது மிகுந்த அழுத்தம் தரப்பட்டது. எஃப்.எம். ரேடியோ சாமானிய மக்களால் நிர்வகிக்கப்படுகிறது, அதில் பெரிய அளவுக்கு லாபம் இல்லை, எஃப்.எம். ரேடியோவை கூட ஏன் ஏலத்தில் விடுகிறீர்கள் என்று கேட்டார்கள்.
இதை செய்வதில் இருந்து நான் பின்வாங்குவதற்கு எல்லாம் முயற்சிகளும் செய்தார்கள். ஆனாலும் நான் சொன்னேன் - 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியா வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்கிறது. இப்போதைக்கு 80 - 85 மாநகரங்களில் ரேடியோ எஃப்எம்க்கு ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்றைக்கு முதல் நாள் நான் விசாரித்த போது ஏலத்தொகை, ஆயிரம் கோடியைத் தாண்டி இருந்தது. இந்தத் தொகை ஏழை மக்களின் நலனுக்கு பயன் படுத்தப் படும்.
சகோதரர்களே சகோதரிகளே, எது மாதிரியான தலைமையின்கீழ் இந்த நாடு செயல்பட்டு வந்தது! எவ்வாறு இது கொள்ளை அடிக்கப்பட்டது! நம் நாட்டு அரசியல் மீது என்ன பாதிப்பை இது ஏற்படுத்தியது! எது மாதிரியான செயல்பாடு இந்த நாட்டில் தொடர்ந்து இருந்து வந்தது? கடற்கரைக்கு அருகில் இருந்த எரிசக்தி நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வழங்கப்படவில்லை. அது பக்கத்து பகுதிகளில் இருந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுப்பப் பட்டது; பதிலுக்கு இந்த சுரங்கங்களில் இருந்து நிலக்கரி கடற்கரைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. உற்பத்திப் பொருள், அது உற்பத்தி செய்யப்படும் இடங்களில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கு பதிலாக வேறு ஒரு இடத்துக்கு அதை ஏன் அனுப்ப வேண்டும் என்பது சிறிய குழந்தைக்கும் கூடப் புரியும்.
சகோதரர்களே சகோதரிகளே, இந்த முடிவை நாம் மாற்றினோம். அருகில் உள்ள தொழிற்சாலைகள் தான் முதலில் பயன்பெற வேண்டும். இந்த சிறிய முடிவின் காரணமாகவே இடைத்தரகர்கள் தங்களின் கடைகளை மூட வேண்டியது ஆயிற்று; அரசுக் கருவூலத்துக்கு ரூபாய் 1,100 கோடி கிடைத்தது. அன்பார்ந்த குடிமக்களே இனி ஒவ்வோர் ஆண்டும் இது நிகழும்.
ஊழல், நமது அமைப்பு முறையில் ஓர் அங்கம் ஆகி விட்டது. இது நமது அமைப்பில் இருந்து நீக்கப்படும் வரை, அன்பான சகோதர சகோதரிகளே, பல தாக்குதல்களை பல தடைகளை நான் எதிர்கொள்ள வேண்டி வரும்; ஆனாலும் உங்களின் ஆசிகளுடன் ஊழலற்ற இந்தியா என்கிற கனவை நான் நிறைவேற்றியே தீருவேன். மூவண்ணக் கொடி பறக்கும் இந்த செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து, 125 கோடி மக்களின் கனவுகளைப் புரிந்து கொண்டு இதனைக் கூறுகிறேன். எனக்கு வாக்களித்து மத்தியில் எங்களது அரசை நீங்கள் அமர்த்தி 15 மாதங்கள் ஆகின்றன. இந்த அரசுக்கு எதிராக ஒரு ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஏற்கனவே சொன்னது போல, ஊழல் - கரையான் போன்றது.
டெல்லியில் ஊழலற்ற அரசு இருந்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முற்றிலுமாகத் தீர்ந்து விடாது. இப்போது, மிகச் சிறிய இடங்களிலும் (இந்த) பிரச்சினை இருக்கிறது; இதனால் ஏழை மக்கள் தொல்லை தொல்லைக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழல் என்கிற தீமையை நாம் முழுவதுமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை ஒழிப்பதற்கு ஒவ்வொருவரையும் உள்ளே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இந்தத் தீமையை நம்மால் முழுமையாக அகற்ற முடியும்.
சகோதரர்களே சகோதரிகளே, மிகக் குறுகிய காலத்தில் கருப்பு பணத்துக்கு எதிராக அடுத்தடுத்து பல முக்கியமான நடவடிக்கைகளை நாம் எடுத்து இருக்கிறோம்.
இந்த அரசு பொறுப்பேற்ற உடனேயே, உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்தோம். மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த காரியத்தைச் செய்தோம். இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு அதன் பணியைச் செய்கிறது. நான் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கு கொண்டேன். கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர இந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாக கருப்புப் பணத்துக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது.
ஜி 20 நாடுகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க அவரவர் நாடுகளுக்கு கருப்பு பணத்தைத் திருப்பி அனுப்பத் தீர்மானிக்கப் பட்டது. அமெரிக்காவுடன் சேர்ந்து FATCA சட்டத்தை நிறைவேற்றினோம். இந்தியாவின் கருப்புப் பணம் குறித்து அந்தந்த நேரத்தின் தகவல்களை பரிமாறிக் கொள்ள உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. கருப்புப் பணத்தை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
சகோதரர்களே சகோதரிகளே, இதற்காக ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றி உள்ளோம். இதை நிறைவேற்றிய பிறகு சிலர் தொடர்ந்து எங்களை அழைத்து மிகக் கடுமையான சட்டத்தை இயற்றி இருக்கிறீர்கள் என்று புகார் கூறுகிறார்கள். இது கருப்புச் சட்டம், பூதாகரமான சட்டம்; அதிகாரங்கள் அதிகாரிகள் எங்களை அச்சுறுத்துவார்கள் என்கிறார்கள். அன்பார்ந்த சக குடிமக்களே, நோய் தீவிரமாக இருந்தால், ஊசி தேவைப்படும். ஊசியின் பக்க விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் எச்சரிப்பார்கள். இதேபோன்று ஊழல் நோயும் தீவிரமானது; இதற்கு மருந்து வேண்டும் எனில், அதன் பக்க விளைவுகளை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். நாம் நிறைவேற்றியுள்ள சட்டம் சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை அறிவேன். இதனை, தொல்லை தருவதாக அவர்கள் பார்க்கிறார்கள். இந்த சட்ட விதியை தளர்த்த வேண்டும், நீர்க்கச் செய்ய வேண்டும் என்று பல செய்திகளை எனக்கு அனுப்புகிறார்கள்.
125 கோடி நாட்டு மக்களைக் கொண்ட டீம் இந்தியாவுக்கு இன்று சொல்லிக் கொள்கிறேன் - பக்க விளைவுகளை நாம் சுமக்கும் போதே நாம் கருப்புப் பணத்துக்கு எதிராக முன்னேறுகிறோம். இதுவரையில் செய்து விட்டோம். கருப்பு பணத்தை மீண்டும் கொண்டு வருவது மிக நீண்ட செய்கை என்பது உண்மை. ஆனால் இப்போது யாரும் கருப்புப் பணத்தை நாட்டுக்கு வெளியே அனுப்பத் துணியமாட்டார்கள். யாரும் நம்பினாலும் நம்பா விட்டாலும், இந்த அளவு நாம் சாதித்து விட்டோம். இது மட்டுமல்ல கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிப்பதற்கு கருணைக் காலக்கெடு தந்துள்ளோம். இதுவரை ரூபாய் 6,500 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நமது கருவூலத்துக்குத் தொடர் வருமானம் தரும். இது இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவும். நண்பர்களே, நாங்கள் தந்த உறுதிமொழியை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவோம் என்று உங்கள் அனைவருக்கும் நான் உறுதி கூறுகிறேன்.
சகோதரர்களே சகோதரிகளே, எனது அரசு பொறுப்பு ஏற்பதற்கு முந்தைய ஓராண்டு முழுதும், மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) 800 வழக்குகளை மட்டுமே பதிவு செய்து இருந்தது. இன்னமும் நாம் அதிகாரத்துக்கு புதியவர்கள் தாம். ஆனாலும் நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்த பத்து மாதங்களில் மட்டும் ஏற்கனவே 1,800 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். அரசுப் பணியாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தப் புள்ளி விவரங்களை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். ஊழலுக்கு எதிரான போரில் நமது ஆற்றலை இது வெளிக் காட்டுகிறது.
2005 இல் PMLA என்கிற சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் நமது நாட்டில் வடிவமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் இந்த சட்டத்தின்கீழ் பத்தாயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளது. நீங்கள் வியந்து போவீர்கள் - மொத்தம் பெறப்பட்ட பத்தாயிரம் கோடி ரூபாயில் கடந்த 9 மாதங்களில் மட்டும் நாம் பெற்றது - ரூ.4,500 கோடி ரூபாயாகும். இதுதான் ஊழலுக்கு எதிரான நமது உறுதியான நிலைப்பாட்டுக்கு உதாரணம்.. ஆனால் இது குறித்து நாம் தொலைக்காட்சிகளில் பேசுவதில்லை.
உண்மையில் நாம் களத்தில் இறங்கி இருக்கிறோம்; பயன்களைப் பெற்றிருக்கிறோம். அமைப்பு முறையை மாற்ற நாம் முயற்சித்து வருகிறோம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம், நேரடியாக ஜன்தன் கணக்கில் சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதில் இடைத்தரகர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இந்த நடவடிக்கைகளால் நமது நாடு ஊழலற்ற ஒன்றாக மாறும் இலக்கை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.
எனது விவசாய சகோதர சகோதரிகளே, கடந்த ஆண்டு மழைப் பொழிவில் பற்றாக்குறை நிலவியது. தேவைக்கும் குறைவாகவே பெய்தது. இது நமது விவசாயிகளையும் நமது பொருளாதாரத்தையும் பாதித்தது. ஆனாலும் விலைவாசி ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம். நாம் வருவதற்கு முன்பாக பணவீக்க விகிதம், இரட்டை இலக்கத்தில் இருந்தது. நாம் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, குறைந்த மழைப் பொழிவின் காரணமாக விவசாயிகள் துன்பத்தில் இருந்த போதும், பணவீக்க விகிதத்தை இரட்டை இலக்கத்தில் இருந்து, 3 - 4 சதவீதம் அளவுக்குக் கீழே கொண்டு வந்துள்ளோம். இதனை மேலும் கீழே கொண்டு வருவோம். ஏனெனில் நமது இலக்கு ஏழையிலும் ஏழைக்கு முழு சாப்பாடு வழங்குவதே நமது கனவு. ஆனாலும் வேளாண் துறையில் சில அதிரடி மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
விளைச்சல் நிலங்கள் குறுகி வருகின்றன; குடும்பங்களுக்குள் அது பிரிக்கப்பட்டு மேலும் சிறியதாய் ஆகின்றன. நமது வேளாண் நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். நமது விவசாயிகளுக்கு தண்ணீர் மின்சாரம் தேவை; இவற்றை கிடைக்க செய்வதற்காகப் பணி செய்து வருகிறோம். பிரதம மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்துக்கு ரூ.50,000 கோடி வழங்கியுள்ளோம். வேளாண் நிலங்களை தண்ணீர் எவ்வாறு சென்று சேரும்? தண்ணீரை சேமிக்க வேண்டும். வேளாண் துறையில் ஓர் இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். அதன் மந்திரம் - தண்ணீர் சேமிப்போம், சக்தியை சேமிப்போம், உரங்களை சேமிப்போம். (Save Water, Save Energy, Save Fertilizers) ஒவ்வொரு தண்ணீர்த் துளிக்கும் கூடுதல் பயிர் (per drop more crop) என்பதே நமது எச்சரிக்கை வாசகம். ஒவ்வொரு துளி தண்ணீரும் கூடுதல் பயிருக்குப் பங்களித்து வெற்றிகரமான வேளாண்மைக்கு வழிவகுக்கும். இதனை நோக்கத்தை மேம்படுத்தும் திசையில் நிதியை செலவு செய்கிறோம்.
சமீபத்தில் புயல் மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட போது இழப்பீட்டுத் தொகையை மிகக் கணிசமாக உயர்த்தினோம். கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவு உயர்வைக் கண்டதில்லை. இது மட்டுமல்ல, முன்பெல்லாம் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் குறைந்தது 50 சதவீதம் இழப்பு இருந்தால் மட்டுமே இழப்பீட்டுக்கான உரிமை கிடைக்கும். இப்போது நாம் இதை 30 சதவீதமாகக் குறைத்துள்ளோம். இந்த அளவுக்கு விவசாயிகளுக்கு உதவுகிற நடவடிக்கை இதற்கு முன் 60 ஆண்டுகளில் எடுக்கப் பட்டதில்லை. விவசாயிகளுக்கு யூரியா வேண்டும். மீண்டும் ஒருமுறை ஊழலை எவ்வாறு எதிர்க்கலாம் என்று கூறுகிறேன்.
வேம்பு கோட்டிங் (neem coating) என்பது மோடியின் சிந்தனை அல்ல; உண்மையில் இது விஞ்ஞானிகளால் கூறப்பட்டது; இந்த யுக்தி எனது அரசாங்கம் மட்டுமல்ல முந்தைய அரசின் முன்பும் வைக்கப்பட்டது. நமது நாட்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட யூரியா, விவசாயிகளின் பெயரால் ஒதுக்கப் படுகிறது. ஆனால் இதில் 15% - 20% யூரியா, ரசாயனத் தொழிற்சாலைகளுக்குக் கச்சாப் பொருளாக திசை திருப்பப்படுகிறது. விவசாயிகளுக்கான இந்த யூரியா, இடைத்தரகர்கள் மூலம் கசிந்து போகிறது. நூறு சதவீதம் யூரியா, நீம் கோட்டிங் செய்யப்பட்டாலன்றி, இந்தக் கசிவைத் தடுக்க முடியாது. இதனால் அரசுக்கு செலவு அதிகமானாலும் கூட, 100 சதவீதம் நீம் கோட்டிங் யூரியாவை நாம் சாதித்துக் காட்டினோம். இதன் விளைவாக யூரியாவை விவசாயத்துக்கு அல்லாது வேறு நோக்கத்துக்குப் பயன்படுத்த முடியாது. இப்போது எந்த ரசாயன தொழிற்சாலையும் யூரியாவைக் கசிய விடும் வேலையில் ஈடுபட முடியாது. ('Neem coating' is not the brain child of Modi, rather it is an idea propounded by scientists. In our country, urea worth millions and billions of rupees is allocated in the names of farmers, but 15%, 20%, 25% of this urea is diverted to the chemical factories as raw material. Allocated in the names of farmers, this urea is pilfered through the middlemen. This pilferage of urea can not be stopped unless we go for cent percent 'Neem Coating' of urea. Therefore, irrespective of the burden caused to the exchequer, we have accomplished the task of doing 100% 'neem coating' of urea. As a result of this, now urea can not be used for any purpose other than farming. Now, no chemical factory can indulge in any kind of pilferage of urea.) இனி விவசாயிகளுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு யூரியா கிடைக்கும். இப்போது யூரியா, வேம்பு பூசப் பட்டு உள்ளதால், 10 சதவீதம் யூரியா பயன்படுத்தினாலும் போதும், நிலத்துக்குத் தேவைப்படும் சத்துக்கான பலன் கிடைத்து விடும். நம் நாட்டின் விவசாயிகளுக்கு யூரியா மூலம் புதிய ஆதாயம் கிடைக்கும். யாரேனும் உங்கள் உங்கள் யூரியாவில் வேம்பு பூசப்படவில்லை என்று சொன்னால், அது அரசு அங்கீகாரம் பெற்றது இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். யாரேனும் மஞ்சள் பவுடர் தந்தால் அதை தொட்டுக் கூட பார்க்காதீர்கள்.
சகோதரர்களே சகோதரிகளே, நாட்டின் கிழக்குப் பகுதி வளர்ச்சி பெறாமல் இந்தியா வளர இயலாது. நாட்டின் மேற்குப் பகுதி மட்டும் வளர்ச்சி பெற்று, இந்தியா வளர்ச்சி பெற்றதாகக் கூற முடியாது. கிழக்கு உத்தரப்பிரதேசம் வளம் பெறும் போது, பிஹார் வலுபெறும் போது, மேற்கு வங்கம், அசாம். ஒடிசா, வடகிழக்கு மண்டலங்கள் வளர்ச்சிப் பாதையில் நகரும் போது தான் இந்தியா முன்னேறும். நாட்டின் இந்தப் பகுதிகள் வலுப்பெற வேண்டும். அடிப்படை கட்டுமானம், ரயில் வசதி, டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் கிழக்கு இந்தியாவின் மீது நாம் கவனம் செலுத்துகிறோம். இந்த சிறப்பு கவனத்தின் விளைவாக இந்த மண்டலத்தில் குழாய் வழி எரிவாயு அமைக்கும் பணிக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சமையலறையில் கூட தண்ணீர்க் குழாய் இல்லாத மண்டலத்தில், எரிவாயுவைக் குழாய் மூலம் சப்ளை செய்ய முயற்சிக்கிறோம். கிழக்கு இந்தியாவில் நான்கு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிகள் கடும் துயரத்தில் இருந்தார்கள். நாம் புதிய யூரியா கொள்கை கொண்டு வந்தோம்; எரிவாயு சப்ளை கொள்கை வடிவமைத்தோம். இதன் விளைவாக கோரக்பூர், பரானி, டால்செர், சிந்தாரி பகுதிகளில் ரசாயனத் தொழிற்சாலைகள் மறுவாழ்வு பெற்றன. இவ்வாறாக விவசாயிகளுக்கு உரமும் இளைஞர்களுக்கு வேலையும் வழங்குகிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, ராணுவ வீரர்களின் நலனுக்காக ஓர் அரசுத் துறை இருக்கிறது. ராணுவ வீரர்களைப் போலவே நமது நாட்டுக்கு, விவசாயிகளும் மிக முக்கியமானவர்கள். (அவர்களுக்காக) 60 ஆண்டுகளில் நாம் என்ன செய்துள்ளோம்! பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்துகிறோம். விவசாயம் மேம்பட வேண்டும்; வளம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், இதற்கான அமைச்சகத்தை வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) இன்று பெயர் இட்டுள்ளோம்.
சகோதரர்களே சகோதரிகளே, விவசாய வளர்ச்சியைப் போன்றே விவசாயிகளின் நலனும் முக்கியமானதாகும். கிராமத்து வாழ்க்கை முறைக்கு, விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்துக்கு வேளாண் வளர்ச்சி பற்றி பேசுவது மட்டுமே முழுமை ஆகாது. விவசாயிகளின் நலனையும் அதனுடன் இணைத்தால் மட்டுமே அது முழுமை அடையும். சகோதரர்களே சகோதரிகளே, இதுவரை வேளாண் அமைச்சகம் என்று அறியப்பட்ட துறை இனி, விவசாயி நலன் துறை (Ministry of farmer welfare) என்று அறியப்படும். இனிவரும் நாட்களில், வேளாண்மைத் திட்டங்கள் போலவே வேளாண் பெருமக்களின் நலன்களுக்கும் திட்டங்கள் வடிவமைக்கப்படும்; விவசாயிகளின் வாழ்க்கையில் ஏற்படும் தனிப்பட்ட பிரசினைகள், அவர்கள் கடக்க வேண்டிய தடைகள் உள்ளிட்ட பிரசினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு நிரந்தர அமைப்பு முறையை நிறுவி விவசாயிகளுக்கு உதவ அரசு முயற்சி எடுக்கும்.
சகோதரர்களே சகோதரிகளே, வரும் நாட்களில் நான் ஒரு முக்கிய பிரச்சினையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டன; ஆனால் இன்னமும் சுமார் 18,500 கிராமங்களுக்கு மின்இணைப்பு சென்று சேரவில்லை. 18,500 கிராமங்களுக்கு இன்னமும் சுதந்திரத்தின் ஒளி சென்று சேரவில்லை; சுதந்திரத்தின் வெளிச்சம் மறுக்கப் பட்டுள்ளது. இன்னமும் நாம் பழைய முறைகளையே பின்பற்றிக் கொண்டிருந்தால் இந்த 18,500 கிராமங்களுக்கும் மின்சாரம் சென்று சேர இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம். இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்க இந்த நாடு தயாராக இல்லை.
அரசு அலுவலர்களை அழைத்தேன்; இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்று விசாரித்தேன். 2019-க்குள் முடிக்கலாம் என்று சிலர் உறுதி கூறினார்கள். இன்னும் சிலர் 2022-ல் முடிக்கலாம் என்றார்கள். அடர்ந்த காடுகள், பனி சூழ்ந்த குன்றுகள், சில பகுதிகளை சென்று சேர்வதில் இருந்த சிக்கல் காரணமாக (கெடு விதிக்க) தயங்கினார்கள். ஆனால் இப்போது 1.25 கோடி மக்களைப் போன்ற டீம் இந்தியா உறுதி பூண்டுள்ளது - இந்த 18,500 கிராமங்களிலும் அடுத்த 1,000 நாட்களில் மின் இணைப்பு வழங்கும் இலக்கை சாதித்துக் காட்டுவோம்.
இந்தச் சவாலை ஏற்று நிறைவேற்ற வருமாறு மாநிலங்களை வேண்டுகிறேன். எல்லா மாநிலங்களிலும் இந்தப் பின்னடைவு இல்லை; ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இதற்காக கூடுதலாக உழைக்க வேண்டும். அரசியல் விமர்சனங்கள் எழலாம்; இதனைத் தவிர்க்க வேண்டி இந்த மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம். 1.25 கோடி மக்களைக் கொண்ட டீம் இந்தியா சார்பாக செங்கோட்டையில் இருந்து உறுதி ஏற்கிறோம் - மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் இந்த 18,500 கிராமங்களில் அடுத்த 1,000 நாட்களில் மின் இணைப்பு வழங்கப் பட்டு விடும்.
மற்றொரு கவலை தரும் பிரச்சினையும் எடுத்துள்ளேன். நிலக்கரி பாக்கெட் மற்றும் பிறதாதுக்கள் கொண்ட சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பாருங்கள். நமது நாட்டின் செல்வத்துக்காக வியர்வை சிந்துகிறார்கள் ஆனால் இவர்கள் வாழும் மண்டலம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஆகவே இந்த மண்டலத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டம் வகுத்துள்ளோம். பழங்குடியினர் பகுதிகளில் இருக்கும் இந்த மண்டலங்களில் ஆண்டுதோறும் 6000 கோடி ரூபாய் நலத்திட்டங்களில் செலவிடப்படும். நிலக்கரி எங்கே கிடைக்கிறது? பழங்குடியினர் பகுதிகளில் கிடைக்கிறது. இவ்விடங்களில் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.
சகோதரரே சகோதரிகளே, 21-ம் நூற்றாண்டில் நமது நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல இளைஞர் சக்தி முக்கியம். உலக நாடுகளுக்கு மேலாக நாம் வளர்ச்சி பெற வேண்டுமெனில் நமது இளைஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்; அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். எவ்வாறு நமது இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக, புதிய உற்பத்தியாளராக, புதிய ஸ்டார்ட் - அப் நெட்வொர்க் முனைவோராக நாடு முழுதும் நிறுவச் செய்யலாம்? வரும் நாட்களில் ஸ்டார்ட்- அப் முயற்சிகள் மேற்கொள்ளப்படாத வட்டாரமோ மாவட்டமோ இருத்தல் கூடாது.
ஸ்டார்ட் - அப் முயற்சியில் உலகின் முதல் இடத்தை அடைய நாம் கனவு காணக் கூடாதா? இப்போது நாம் முதல் நிலையில் இல்லை. சகோதரர்களே சகோதரிகளே, ஸ்டார்ட் அப் முயற்சிக்கு வலிமை தர வேண்டும். ஆகவே வரும் நாட்களில், நாட்டின் எதிர்காலத்தை வளமையாக்க, ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா முயற்சிகள் உள்ளன. சகோதர சகோதரிகளே, நம்ம நாட்டில் வங்கி அதிகாரிகள் பெரும்பணி ஆற்றி உள்ளார்கள்; நீங்களும் நற்பணி ஆற்றும் போது என்னுடைய எதிர்பார்ப்புகள் ஏராளமாய் அதிகரிக்கும்.
வங்கி நண்பர்களே, எனது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன; தவறாக எண்ண வேண்டாம் - நான் உங்களை நம்புகிறேன்; இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது ஊழியர்கள் நல்ல பங்களிப்பு தருகிறார்கள்; எதிர்காலத்தில் மேலும் தமது முயற்சிகளை தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இன்று நாள் உங்களுக்கு ஒரு பணியைத் தர இருக்கிறேன். நம் நாட்டில் 1.25 லட்சம் வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிக் கிளைகள் அனைத்துக்கும் ஒரு பணி தருகிறேன். இந்த ஆண்டு, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்காரின் 125- வது பிறந்த நாள் ஆண்டாகும். மொத்தம் 1.25 லட்சம் வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த திட்டத்துக்கு ஸ்டார்ட்- அப் திட்டம் என்று பெயர் வைத்துள்ளேன். இதன் கீழ் மேலும் பல திட்டங்கள் வடிவமைக்கப்படும். வரும் நாட்களில் இந்த திட்டத்தின் கீழ், உங்கள் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு க் கடன் வழங்க நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு நிதி உதவி செய்யுங்கள். 1.25 லட்சம் தலித் தொழில் முனைவோர் உருவாக உதவுங்கள். இந்த நாட்டின் பழங்குடியினர் பகுதிகளில் பழங்குடி தொழில் முனைவோர் உருவாகட்டும். இதை நாம் செய்ய முடியும். ஸ்டார்ட் - அப் திட்டத்துக்கு ஒரு புதிய பரிமாணம் தருவோம். இரண்டாவதாக இந்த 1.25 லட்சம் கிளைகளின் மூலம் மகளிர் தொழில் முனைவோர் உருவாக நிதி உதவி செய்து மேம்படுத்தலாம். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே புதிய தொழில் முனைவோரின் நெட்வொர்க் தோன்றிவிடும்; பதிலுக்கு இவர்கள் ஒவ்வொருவரும் ஒன்று இரண்டு நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்தியாவின் பொருளாதார வாழ்க்கையை மேலும் நல்லதாய் மாற்றி விடுவார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே, நாட்டுக்கு முதலீடுகள் வரும்போது மேலும் பல உற்பத்தி பணிகளை, மேலும் அதிக ஏற்றுமதியை எதிர்பார்க்கலாம்; இத்தகைய முதலீட்டாளர்களுக்கு அரசின் நிதித்துறை மேலும் பல புதிய திட்டங்களை வழங்கலாம். இதற்கென்று தனி முக்கியத்துவம் இருக்கிறது. இது தொடர வேண்டும். இன்று எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. நமது நாட்டு உற்பத்தித் துறையில் வரும் முதலீடுகளுக்கு, புதிய அளவுகோல்களின் மீது உதவி நல்க வேண்டும். இவற்றில் ஒரு அளவுகோலாக, மிக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப பொருளாதார உதவிக்குத் தகுதி உடையதாய்க் கொள்ளலாம்.
புதிய தொழில் அலகுக்கான புதிய திட்டங்களை வகுத்து அரசு அதனை வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவியுடன் இணைக்கும். நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முக்கியத்துவம் தருவோம். ஸ்கில் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றும் திசையில் நாம் நீண்ட தூரம் வந்துள்ளோம். சகோதர சகோதரிகளே ஊழல் மலிந்த மற்றொரு துறை - வேலைவாய்ப்பு. ஏழைகளும் ஏழை தனது மகனுடைய வேலைக்கு முயற்சிக்கிறார். ஒரு ஏழை மகன் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் போதே, அது ரயில்வே வேலை, ஆசிரியர், கடைநிலை ஊழியர், ஓட்டுனர் என்று எந்த வேலைக்காக இருந்தாலும், அந்த வேலைக்கு பரிந்துரைப்பதற்காக யாரை அணுகலாம் என்று சிந்திக்க தொடங்கி விடுகிறான்.
அவரது விதவை தாய் கூட இது குறித்து யோசித்து கவலைப்படுகிறார். ஏன் இப்படி? ஏனென்றால் நமது நாட்டில் பெரும்பாலும் நீதியும் அநீதியும் தகுதியின் அடிப்படையில் அல்ல நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே முடிவு செய்யப் படுகிறது. இறுதியில் அந்த நபர் நேர்முகத் தேர்வில் தோற்று விட்டார் என்று சொல்லப்படும். வெறுமனே இரண்டு நிமிடங்கள் ஒருவரை நேர்முகத் தேர்வு செய்து விட்டு அவள் திறமை உள்ளவரா என்று கணக்கிடும் திறன் பெற்ற ஒரு உளவியல் நிபுணரே நான் இதுவரை கண்டதில்லை.
சகோதரர்களே சகோதரிகளே, ஒரு சாதாரண வேலை தேடிச் செல்லும் குறைந்த கல்வி பெற்ற ஓர் ஏழைத் தாயின் மகனுக்கு நேர்முகத் தேர்வு அவசியம் தானா என்று, பல நாட்களாக நான் சிந்தித்துப் பார்த்து வருகிறேன். நேர்முகத் தேர்வு இல்லாமல் அவருக்கு வேலை கிடைக்காதா? மதிப்பெண்கள் மட்டும் கொண்டு, 500 பேருக்கு வேலை என்றால் மதிப்பெண் அடிப்படையில் முதல் 500 பேருக்கு வேலை. ஒருவேளை உடற்தகுதி தேவைப்பட்டால் அதற்கேற்ப இந்த முறை (சற்றே) மாறும். உயர்நிலைப் பணிகளுக்கு மட்டுமே ஆளுகை மற்றும் அனுபவம் முக்கியமாய் இருக்கும். ஆனால் ரயில்வேயில் இளநிலை பணிக்காக கூட நாகாலாந்தில் இருந்து மிசோரத்தில் இருந்து மும்பைக்கு தேர்வர்கள் வருவதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது.
இந்த பிரச்சினையை நான் தீர்க்க நினைக்கிறேன். இயன்றவரை விரைவில் இளநிலை பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யுமாறு எனது அரசின் சக நண்பர்கள் மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பணிகள் (மதிப்பெண்) தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதனால் நமது ஏழை மக்களை வதைக்கும் ஊழலை அகற்றும்; பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த இலக்கை நோக்கி பணியாற்றுமாறு வேண்டுகிறேன். நாட்டு மக்களே நல்ல அமைதியான உறக்கத்தை அனுபவியுங்கள். நமது எல்லைகளில் உள்ள நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் தியாகத்தால் நமது 125 கோடி மக்களும் நிம்மதியாய் உறங்க முடிகிறது. ராணுவ படை வீரர்களின் முக்கியத்துவத்தை எந்த நாடும் குறைத்து மதிப்பிட முடியாது. 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியாவுக்கு, ஒவ்வொரு ராணுவ வீரரும் இந்த நாட்டின் வலிமை இந்த நாட்டின் சொத்து இந்த நாட்டின் சக்தி. பல அரசுகள் வந்து போய் உள்ளன.
One Rank One Pension சம ஓய்வூதியப் பிரச்சினை ஒவ்வோர் அரசின் முன்னும் வந்து கொண்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒவ்வொருவரும் பரிசீலித்து இருக்கிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. நான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகும் இதுவரை என்னால் இதனைச் செய்ய முடியவில்லை. இன்று மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஊழியர்களுக்கு உறுதி அளிக்கிறேன்; ஒரு தனி நபராக அல்ல 125 கோடி மக்கள் கொண்ட டீம் இந்தியா சார்பாகக் கூறுகிறேன். இதனை செங்கோட்டை தளத்தில் மூவண்ணக் கொடியின் கீழே இருந்து கூறுகிறேன். பாதுகாப்பு ஊழியர்களுக்கு கூறிக் கொள்கிறேன் - சம ஓய்வூதிய திட்டத்தை கொள்கை அளவில் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனாலும் இந்த அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சு வார்த்தை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு வளர்ச்சியை கணக்கில் கொண்டு அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில் கடந்த 20, 25 ஆண்டுகளாக சுழன்று வரும் பிரச்சினைக்கு முடிவு காண விரும்புகிறோம். நல்லெண்ண அடிப்படையில் நடந்து வரும் பேச்சுவார்த்தை நல்ல நேர்மறை விளைவுகளைக் கொண்டு வரும். ஆகவே மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் - சம ஓய்வூதிய திட்டத்தை கொள்கை அளவில் நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம். முதல்ல இக்கட்டான சூழலில் இதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வருகிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, 2022 இல் சுதந்திர இந்தியா 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 2022 ஆகஸ்ட் 15 அன்று 75 ஆவது ஆண்டு சுதந்திர நாளை கொண்டாடி விட்டு சோம்பேறியாய் உட்கார்ந்து விட முடியாது. இந்த ஆகஸ்ட் 15 அன்றே, 2022 ஆகஸ்ட் 15-க்கு தீர்மானம் ஏற்றுக் கொள்வோம் - இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் ஒவ்வொன்றும் தீர்மானிக்க வேண்டும் - ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பிரச்சினைகளையும் நாம் தீர்த்து வைக்க முடியும். 2022 ஆகஸ்ட் 15ல், 75 ஆவது சுதந்திர தினத்துக்கான தீர்மானத்தை இன்றே 125 கோடி மக்களும் எடுத்துக் கொள்வோம். நமது நாட்டின் நலனுக்காக நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக இதை நாம் செய்வோம் என்று ஒவ்வொரு குடிமகனும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
நமது 125 கோடி மக்களும் ஒன்றாக முன்னேற தீர்மானித்துக் கொண்டால், 2022 ஆகஸ்ட் 15 அன்று 1.25 கோடி தீர்மானாங்கள் நிறைவேறி இருக்கும்; 6 லட்சம் கிராமங்களின் கனவு நிறைவேறி இருக்கும். ஒவ்வொரு மாநகரமும் நகரமும் உள்ளாட்சி அமைப்பும் இந்த தீர்மானத்தை ஏற்று செயல் புரிய வேண்டும். 2022 ஆகஸ்ட் 15 தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாத துறையே இல்லை என்று இருக்க வேண்டும். இதற்கான எழுச்சி தோற்றுவிக்கப்பட வேண்டும்.
சகோதரர்களே சகோதரிகளே, விடுதலைக்கான இயக்கம் நீண்ட ஆண்டுகள் நடைபெற்றது. முதலில் விடுதலைக்கான முழக்கம் காற்றில் மட்டுமே இருந்தது. 1910இல், 1920இல், 1930இல் என்று மீண்டும் மீண்டும் யாரேனும் சிலர் விடுதலைக் கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தனர். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் விடுதலை கிடைத்தது. தன்னம்பிக்கை கொண்ட அபாரமான வளம் மிக்க இந்தியாவைக் கட்டமைக்க, நமது நாட்டை நாம் திறன் வாய்ந்ததாய் வளமையானதாய் ஆரோக்கியமானதாய் இருத்தல் வேண்டும். நல்ல பண்பட்ட இந்தியா என்கிற கனவை நினைவாக்க தன்னம்பிக்கை கொண்ட மகத்தான இந்தியாவை உருவாக்க வேண்டும். 2022 இல் தங்குவதற்கு கூரை இல்லாத நிலை நீங்க வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரமும், மின்சாரம் வழங்கும் பணியில் நாம் வெற்றி பெற வேண்டும்.
நமது விவசாயிகள் திறன் மிக்கவராய் நமது தொழிலாளர்கள் மன நிறைவு பெற்றவராய் நமது பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாய் சுயசார்பு மிக்கவராய், நமது மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாய் ஏழைகள் வளம் மிக்கவராய் இருத்தல் வேண்டும். நமது சமுதாயத்தில் யாரும் பின்தங்கிய நிலையில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் சம உரிமை அனுபவிக்க வேண்டும், இந்திய சமுதாயம் முழுதும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். இந்தக் கனவுடன் மீண்டும் ஒரு முறை 125 கோடி மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 75 ஆவது ஆண்டு சுதந்திர நாளில் திட்டமிட்டபடி முன்னேறி நடப்போம். முழு வலிமையுடன் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் - வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம் ! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 68 - ‘புதிய காற்று... புதிய வேகம்’ | 2014
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago