ரஜினி அரசியல்: 30 - விசுவாமித்திரரின் நாடி ஜோதிடம்

By கா.சு.வேலாயுதன்

'ரஜினிகாந்த் முதல்வர் ஆவார். அவர் ஆக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு ஓடிப்போனாலும் அவரை இழுத்து வந்து முதல்வர் நாற்காலியில் மக்கள் உட்கார வைப்பார்கள்!' 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே இப்படியொரு குண்டை தூக்கிப்போட்டார் ஒரு நாடி ஜோதிடர்.

கோவை பீளமேடு, பெரிய மாரியம்மன் கோயில் அருகே ஒரு சின்ன சந்து. அதனுள்ளே நாடி ஜோதிடர் சுப்பிரமணியத்தின் வீடு. 'வாங்க எஜமானரே. உட்காருங்க எஜமானரே!' இப்படித்தான் வரவேற்கிறார். வார்த்தைக்கு வார்த்தை 'எஜமானரே!' என்றே விளித்தார்.

சுப்பிரமணியத்தின் நெற்றியில் நீளமான குங்குமக்கீற்று. 'பாபா' படத்துக்கு அர்த்தம் கொடுத்ததாக சொல்லப்படும் இந்த ஜோதிடர், 'ரஜினி; பாபா' என்று நான் கேள்வியை கேட்டதுமே காத தூரம் ஓடுபவராக இருந்தார்.

'எம்ஜிஆருக்கு. என்டிஆருக்கு, ராஜிவ்காந்திக்கு, எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு, சோனியா காந்திக்கெல்லாம் நாடி பார்த்து பலா பலன் சொல்லியிருக்கேன். அதையெல்லாம் விட்டுவிட்டு, 'ரஜினி, ரஜினி'ன்னு சொல்லி என்னை பயமுறுத்தறீங்களே!' என்று வேறு அழமாட்டாத குறையாக கெஞ்சினார்.

'ஏன் சாமி, இப்படி ரஜினி பற்றிப் பேசினாலே இப்படி வெலவெலக்கறீங்க? அவரைப் பற்றி சொல்லக்கூடாத ஒன்றை பத்திரிகை பேட்டியில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டீர்களாமே உண்மையா?' எனக் கேட்டோம்.

'அப்படியெல்லாம் எதுவுமே இல்லீங்க எஜமான். ரஜினி ஓர் அபூர்வமான மனிதர். அவர் நடிகர் என்பதையும் தாண்டி ஆன்மிக வழியில் போகிறவர். நான் ரஜினியை சந்தித்தது, பேசியது போன்ற சில விஷயங்கள் எப்படியோ பத்திரிகைகளில் கசிஞ்சிருச்சு. அது அவருக்கு பிடிக்காதது. அவருக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது. பேசக்கூடாது. இல்லீங்களா? அது தர்மமும் இல்லீங்க இல்லீங்களா எஜமான்?'

நாடி ஜோதிடம் என்பது என்ன?

நீ இப்படித்தான் வாழணும். இதற்குத்தான் வந்திருக்கிறாய். நீ இங்கே பிறக்கும்போது என்ன வரம் வாங்கீட்டு வந்திருக்கிறாய்ன்னு ஒவ்வொரு மனிதனோட லைஃபையும் அந்தக் கால ரிஷிகள் சூத்திரம் போல (ஓலைச்சுவடிகளில்) தெளிவா சொல்லியிருக்காங்க. அதை்தான் நாடிங்கிறோம். அதை படித்துத்தான் அதை நாங்கள் சொல்கிறோம்.

நீங்க சொல்லக்கூடிய ஓலைச்சுவடி ஜோதிடத்தை நிறைய பேர் சொல்றாங்களே. அதில் உங்களுடையதில் மட்டும் அப்படியென்ன ஸ்பெஷாலிட்டி?

என்கிட்ட இருக்கிறது விசுவாமித்திரர் நாடின்னு பேரு. இதுல பல விஷயம் இருக்கு. அந்த மாமுனி தன் கடைசி காலத்துல எழுதிய பிரம்மரிஷி நாடிதான் நான் வச்சிருக்கிறது. இதைப் படிச்சுத்தான் பல விஐபிங்களைப் பத்தி சொல்லியிருக்கேன்.

ரஜினியைப் பற்றி உங்க நாடி என்ன சொல்லுது?

அதை நான் எப்பவே வெளிப்படுத்தி விட்டேன். ரஜினிகாந்த் முதல்வர் ஆவார். அவர் ஆகமாட்டேன்னு பிடிவாதம் புடிச்சு ஓடிப்போனாலும் அவரை முதல்வர் நாற்காலியில இழுத்துட்டு வந்து மக்கள் உட்கார்த்தி வைப்பாங்க. அப்படி அவர் முதல்வரா ஆகும்போது தற்போதைய முதல்வர் ஜெயலலிதா டெல்லி அரியணையில் இருப்பார்னு இருக்கு. அப்படிப் பார்த்தா ஜெயலலிதாம்மா டெல்லியில் பிரதமரா அமர்ந்தாலும் ஆச்சர்யப்படக்கூடாது!.

இது கொஞ்சம் டூ மச்சாகத் தெரியலையா?

எது டூ மச்? என்.டி.ராமராவ் விஜயா-வாஹினியில நடிகைகளோட நடிச்சுக்கிட்டிருந்தார். நான் போய், 'ஐயா நீங்கள் முதல்வரா ஆவீர்கள்!'னு சொன்னேன். அவரோ திகைத்துப் போய் நம்ப மறுத்துட்டார். நானும் விட்டுட்டேன். அப்புறம் அவர் சி.எம். ஆகி கோயமுத்தூர் வர்றார். அவர் வந்தவுடன் பார்க்க ஆசைப்பட்டது என்னைத்தான். அதேபோல் எம்ஜிஆருக்கு நாடி பார்த்து சொன்னேன். அப்போ அவர் மிக நன்றாகவே இருந்தார். அப்ப, 'உங்கள் கையும் காலும் வராமல் போகும். வாயோ பேச முடியாமல் ஆகும்'னு ஓலையில் படிச்சு சொன்னேன். உடனே அங்கிருந்த பாவலர் முத்துசாமி, 'கொடுக்கிற கை இது; இந்தக் கையா வராமல் போகும்? யாரைப் பார்த்து என்ன பேச்சுப் பேசறே'ன்னு சத்தம் போட்டு வெளியே அனுப்பிச்சுட்டார்.

அப்புறம் எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாமப் போச்சு. அப்ப என்னை ஆளாளுக்கு வந்து கூப்பிட்டாங்க. அவர் பங்களாவுக்கு போறேன். பார்த்தா அங்கே உலகம் பூரா இருந்து வந்த மாந்தீரிக சமாச்சாரங்கள், தாயத்து, எந்திரங்கள்தான் நிரம்பிக் கிடந்தது. அப்புறம் எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளீன் ஆஸ்பத்திரி போகும்போது கூட நான் கொடுத்த எந்திரம்தான் கூடப்போச்சு!

தமிழ்நாட்டு முதல்வரா ரஜினி வருவார்னு சொல்றீங்களே! அப்படி உங்க நாடியில எந்த மாதிரி வாசகங்கள் வந்தன?

'அடுத்ததாக செந்தமிழ்நாட்டை ஆளுவோன், ஆன்மிகத்திலே ஒழுகுவோன்; பல மொழி அறியும் நடிகன் ஒருவன்' அப்பிடின்னு நாடியில வருது. இப்ப நாடி போட்டாலும் அதுதான் வரும். பலமொழி அறிந்தவன் என்றால் ரெண்டு பேருதான் இருக்காங்க. யாரு? கமல்ஹாசன், ரஜினிகாந்த். 'அறிவாள்'னு இருந்தால் பொம்பளையச் சொல்லலாம். ஆனா இது, 'பலமொழி அறிவான்'னு இருப்பதாலேயே இவங்களை யூகம் செய்ய முடிகிறது.

அடுத்த வரி, 'மக்களின் இல்லத்தை தன் மனையாகக் கொள்ளுவான்'னு வருது. 'இல்'னா வீடுன்னு அர்த்தம். தவிர, 'உள்ளம்' என்றொரு அர்த்தமும் உண்டு. கமல்ஹாசனை வீடா உள்ளத்தில் நினைக்கிறவங்க அநேகமாக கொஞ்ச பேர்தான். தவிர கமல்ஹாசன், 'கடவுள் இல்லை'னு சொல்றவர். அதனால அடுத்த முதல்வர் ரஜினிதான்னு சொல்ல வேண்டியிருக்கு.

ரஜினிகாந்துக்குள் கெட்ட தேவதைகள் குடிகொண்டு விட்டன என்று ஒரு சாமியார் சொன்னாரே. அதைப் பற்றி உங்க நாடி என்ன சொல்லுது?

நல்லது கெட்டது எதுவுமே அவருக்கு பொருந்தாது. தண்ணீருக்கு சுவையுண்டா? சர்க்கரை போட்டா இனிக்கும். புளியைப் போட்டா புளிக்கும். ஆனா தண்ணியில்லாம வாழ முடியாது. இல்லீங்களா எஜமான். அது மாதிரி சுத்தமான தண்ணீர் அவர். சில பேருக்கு செய்வினை, பில்லி சூன்யம் செய்த பலிக்காது. கெட்ட ஆவிகளும் அண்டாது. அப்படிப்பட்ட தனி ரகம் ரஜினி.

எல்லாம் சரி. வார்த்தைக்கு வார்த்தை எஜமான், எஜமான்னு சொல்றீங்களே! நீங்க எஜமான் படத்தின் ரஜினி ரசிகரோ?

ஐயய்யோ! அப்படியெல்லாம் இல்லீங்கோ. கோயமுத்தூர், காங்கயம், வெள்ளக்கோயில் பகுதி கவுண்டர்கள்ல எஜமான் பரம்பரைன்னு ஒரு பிரிவு இருக்குங்க. அவங்களை எல்லாரும் எஜமான், எஜமான்னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. பேசுவாங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. அதையே எல்லோரையும் கூப்பிட பயன்படுத்தறேன். அவ்வளவுதான்.

அப்போது நான் இந்த நாடி ஜோதிடர் சுப்பிரமணியத்தை பேட்டி கண்டபோது அதற்கு முன்பே வேறு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்பேட்டியில், 'ரஜினி முதல்வர் ஆவார்!' என்றும் குறிப்பிட்டிருந்ததோடு, 'பாபா' படத்திலும் சில காட்சிகளுக்கு தான்தான் ஐடியா சொன்னதாகவும் பேசியிருந்தார். அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி.

'அம்மா இருக்கும்போது இன்னொருவரை முதல்வர் என்று எப்படி சொல்லலாம்!' என்று அதை பார்த்து அதிமுக விஐபிக்கள் போயஸ் கார்டனுக்கு இவரை கொண்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

கார்டனில் என்ன நடந்ததோ? அதற்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கவே மறுத்து வந்தார். அதே சமயம் ரஜினி தரப்பிலும் கூட நாடி ஜோதிடர் கண்டிக்கப்பட்டதாக கேள்வி. அந்த சமயத்தில்தான் எனக்கு இந்த ஜோதிடரை பேட்டி எடுக்கும் பணி என் அலுவலகத்தில் தரப்பட்டது. அதற்காக நான் இவரை சென்று சந்தித்தேன். பேட்டி கொடுக்கவே மறுத்தார். 'எஜமானரே, ஏற்கெனவே நான் பேட்டி கொடுத்து பல சிக்கலில் சிக்கிக் கொண்டேன் விட்டு விடுங்களேன்!' என்றும் கேட்டுக் கொண்டார். என்றாலும் நான் விடாப்பிடியாக அவரை 'கன்வின்ஸ்' செய்தேன்.

அதில் 'ரஜினியை முதல்வர் ஆவார் என்பதை போடும்போது, அம்மா பிரதமர் ஆவார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் சிக்கல் வந்து விடும்' என்றும் சொன்னார். அந்தப் பேட்டிக் கட்டுரையின் சுவாரஸ்யம் கருதி அவர் சொன்ன விஷயத்தையும் சேர்த்தே எழுதினேன்.

வேடிக்கை என்னவென்றால், பேட்டி கொடுக்கும்போது எண்ணி நாலே வருஷத்தில் ரஜினி முதல்வர் என்றும், அம்மா பிரதமர் என்றும் சொன்னார். ஆனால் இன்றைக்கு அவர் பேட்டி கொடுத்து பதினாறு வருடங்கள் ஆகி விட்டன. பிரதமர் ஆகாமலே ஜெயலலிதா இறந்து விட்டார். ரஜினியோ இப்போதுதான் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்.

- பேசித் தெளிவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

17 hours ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்