செங்கோட்டை முழக்கங்கள் 67 - ‘ஜனநாயக சக்திகள் வலுப்பெற்றுள்ளன’ | 2013

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங், 2013 ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: எனது அன்பார்ந்த சக குடிமக்களே, சகோதர சகோதரிகளே அன்பான குழந்தைகளே,

இந்த சுதந்திர தினத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த நாள் நிச்சயமாக நமக்கு மகிழ்ச்சியான நாள். ஆனால் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நமது உத்தராகண்ட் சகோதர சகோதரிகள் இயற்கைப் பேரழிவை சந்தித்ததை எண்ணி நமது இதயத்தில் வலியை உணர்கிறோம். உயிர் மற்றும் சொத்துகளை இழந்த குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நெருக்கடியான காலத்தில் உங்களுக்கு ஆதரவாக நாடு மொத்தமும் நிற்கிறது என்று உத்தராகண்ட் மக்களுக்கு உறுதி கூறுகிறேன். நமது வீடுகள் சேதம் அடைந்து போனவருக்கு மறுவாழ்வு தர, சேதமடைந்த கட்டுமானங்களை மீண்டும் எழுப்ப இந்த அரசு தன்னிடம் உள்ள எல்லா வளங்களையும் கொண்டு பணியாற்றி வருகிறது.

இந்தக் கடினமான சூழ்நிலையில், சாமானிய மக்களோடு சேர்ந்து நமது ராணுவம், துணை ராணுவம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் எண்ணற்ற பணியாளர்கள் அலுவலர்கள், பேரிடரில் சிக்கிக் கொண்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறப்பாகப் பணியாற்றினார்கள். பிற உயிர்களை காப்பதில் தம் உயிரைத் தியாகம் செய்த விமானப்படை ITBP மற்றும் பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்கள், அலுவலர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

நேற்று ஒரு விபத்தில் ஐ.என்.எஸ். சிந்து ரக்க்ஷக் நீர்மூழ்கி கப்பலை இழந்து விட்டதில் ஆழ்ந்த வலியை உணர்கிறோம். துணிச்சல் மிக்க 18 மாலுமிகள் உயிர் இழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. இந்த விபத்து மிகவும் கவலை தருகிறது ஏனெனில் சமீபத்தில் தான் நமது கடற்படை, முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் அதன் முதல் விமானம் தாங்கி ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகிய இரண்டு பெரும் வெற்றிகளை சாதித்து இருந்தது. நாம் இழந்துவிட்ட துணிச்சல் மிக்க நெஞ்சங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அதேபோன்று கடற்படையில் வெற்றிகளுக்கு பாராட்டுகிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, மகாத்மா காந்தியின் தலைமையில் 1947-ல் சுதந்திரம் பெற்றோம். இதன் பிறகான நமது பயணத்தை பார்க்கையில், நம் நாடு ஒவ்வொரு பத்தாண்டிலும் பெரிய மாற்றங்களை சந்தித்து வருவதைத் தெரிந்து கொள்ள முடியும்.

1950-ல் தொடங்கிய பத்தாண்டில், ஜவஹர்லால் நேருவின் தலைமையில், ஒரு ஜனநாயகக் குடியரசாக இந்தியா தனது முதல் அடி எடுத்து வைத்தது. அணுசக்தி ஆணையம் திட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தினோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் தேச நிர்மாண நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன. முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது; நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கான முதல் ஐந்தாண்டுத் திட்டம் வடிவமைப்பதற்கான தொடக்கம் செய்யப் பட்டது.

1960-களில் பண்டித ஜவஹர்லால் நேரு, புதிய தொழிற்சாலைகளை நிறுவினார், புதிய பாசன திட்டங்களை நிறைவேற்றினார், புதிய பல்கலைக் கழகங்களைத் திறந்து வைத்தார். தேசக்கட்டுமானத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தி, பழமையான இந்த நாட்டை நவீன தேசமாக மாற்றும் பணியைத் தொடங்கினார்.

1970-களில் இந்திரா காந்தி, ஒரு தேசமாக நமது நம்பிக்கையை உயர்த்தி வைத்தார். இந்த கால கட்டத்தில், விண்வெளியில் நமது முதல் செயற்கைக் கோளை ஏவினோம். பசுமைப் புரட்சி முதன் முறையாக உணவுப் பொருட்களில் நாம் தன்னிறைவு பெறச் செய்தது.

அடுத்த பத்தாண்டில் ராஜீவ் காந்தி, தொழில்நுட்ப பொருளாதார நவீனத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிற்பாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் பெற்ற வளர்ச்சிக்கான அடிக்கல் அப்போதுதான் இடப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது; இதுவே பிறகு, இந்த அமைப்புகள் வலுப்பெற அதிகாரம் பெற நமது சாசனத்தில் திருத்தங்களாக விளைந்தது.

1991-ம் ஆண்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை, நரசிம்மராவ் தலைமையின் கீழ் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த சீர்திருத்தங்களை அரவணைத்துக் கொண்டோம். அந்த சமயத்தில் இந்த சீர்திருத்தங்களை பல அரசியல் கட்சிகள் எதிர்த்தன. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் தேச நலனை கருத்தில் கொண்டவை. ஆகவே அதன் பிறகு வந்த அரசுகளாலும் இவை தொடர்ந்து பின்பற்றப்பட்டன. அப்போது இருந்து சீர்திருத்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.

கடந்த பத்தாண்டும் நமது நாட்டின் சரித்திரத்தில் முக்கிய மாற்றங்களை கண்டுள்ளதாக நம்புகிறேன். வேறு எந்தப் பத்தாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தப் பத்தாண்டில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து இருக்கிறது. ஜனநாயக சக்திகள் வலுபெற்றுள்ளன; முதன்முறையாக நமது சமுதாயத்தின் பல பிரிவுகள் வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் கலந்துள்ளன. சாமானிய மக்களுக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கும் புதிய உரிமைகள் கிடைத்துள்ளன.

சகோதரர்களே சகோதரிகளே, முதல் யுபிஏ அரசாங்கம் 2004ம் ஆண்டு மே மாதம் அதிகாரத்துக்கு வந்தது. அப்போது இருந்து முன்னேற்றமடைந்த நவீன இந்தியாவை கட்டமைக்க உண்மையாக நேர்மையாக உழைத்து வருகிறோம். ஒரு வளமான இந்தியா.. நூற்றாண்டு கால வறுமை, பசி, நோய்களை ஒழித்துவிட்ட இந்தியா.. அறியாமை மற்றும் மூடநம்பிக்கை இருளை அகற்றிவிட்ட, கல்வி ஒளி பெற்ற இந்தியாவைக் காண்கிறோம். அங்கே சமூக சமத்துவம் இருக்கும், எல்லா குடிமக்களும் சமபொருளாதார வாய்ப்பு பெறுவார்கள்.

அங்கே சமுதாயத்தின் எந்த பிரிவுக்கு எதிராகவும் அநீதி, சுரண்டல் இருக்காது. தேச நிர்மாணம் என்னும் புனித பணியில் பங்கேற்கும் திறன் வழங்கும் வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெறும் இந்தியாவைக் கனவு காண்கிறோம்.

சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் உரக்கத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்று பாடுபடுகிறோம். உலகம் முழுதும் மரியாதையுடன் கவுரவத்துடன் பார்க்கக் கூடிய தேசத்தைக் கட்டமைக்கப் பாடுபடுகிறோம். இந்தக் கனவுகளை நிறைவேற்ற பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். இது மிகவும் நீளமான பயணம், இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

சகோதரர்களே சகோதரிகளே, உணவு பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சமீபத்தில் ஓர் அவசர சட்டம் பிறப்பித்தோம். இப்போது உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தின் முன் இருக்கிறது. விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். நமது கிராம மக்கள் தொகையில் 75 சதவீதம், நகர மக்கள் தொகையில் பாதி, இந்தச் சட்டத்தால் பயனடைவார்கள். இந்த சட்டத்தின் கீழ் சுமார் 81 கோடி இந்தியர்கள், ஒரு கிலோ அரிசி ரூ. 3, ஒரு கிலோ கோதுமை ரூ 2, தானியங்கள் கிலோ ரூ.1 விலையில் பெற உரிமை உடையவர்களாவார்கள். உலகத்திலேயே இத்தகைய முயற்சியில் இது தான் மிகப் பெரியது.

நமது விவசாயிகளின் கடினமான உழைப்பால்தான் இந்தச் சட்டத்தை நம்மால் நிறைவேற்ற முடிகிறது. 2011-12 இல் நமது உணவுப் பொருள் உற்பத்தி 25.9 கோடி டன் என்கிற சாதனை அளவை எட்டியுள்ளது. விரைவான விவசாய வளர்ச்சி இல்லாமல், நமது கிராமங்களை வளமையாக்கும் இலக்கை சாதிக்க முடியாது. உற்பத்தியைப் பெருக்க, தமது விளைபொருளுக்கு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் வெவ்வேறு பயிர்களின் ஆதரவு விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அரிசி மற்றும் கோதுமைக்கான ஆதரவு விலைகள் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. முன்னர் உணவுப் பொருட்களில் பற்றாக்குறை கண்ட பல மாநிலங்கள் இப்போது தமக்குத் தேவையானதை விடவும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன.

11-வது திட்டத்தில் சராசரி விவசாய வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதம். இது, 9-வது 10-வது திட்ட அளவுகளை விட அதிகம். இப்போது நமது கிராமப்புற பகுதிகளில் விரிவடைந்த பொருளாதார வளமையின் அறிகுறிகளைத் தெளிவாகப் பார்க்கிறோம். 2004 -11 கால கட்டத்தில், கிராமப்புறத் தனிநபர் நுகர்வு முன்பை விட நான்கு மடங்கு வேகமாக அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் கிராமப்புற ஊதியமும் வெகு வேகமாக உயர்ந்தது. கிராமப் பகுதிகளில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பல கோடி மக்களுக்கு வேலை வழங்குகிறது.

வறுமையை கணக்கிடுதல் கடினமான பணி. எது வறுமையைக் குறிக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் நாம் எந்த விளக்கத்தைக் கடைப்பிடித்தாலும், 2004-க்குப் பிறகு வறுமை குறைப்பின் வேகம் அதிகரித்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. நீண்ட காலமாக பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் கருதப்பட்ட மாநிலங்கள், இவற்றில் சில பீமாரு என்று அழைக்கப்பட்டன, தற்போது வேகமாக முன்னறி கொண்டு இருக்கின்றன.

நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பை நல்குவதற்காக கல்வி உரிமைச் சட்டம் இயற்றி உள்ளோம். இன்று அனேகமாக எல்லா குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது. கல்லூரிக்குச் செல்லும் இளைய ஆண்கள் பெண்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது.

ஏழைக் குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவைச் சேர்ந்தோர் கல்வி வாய்ப்புகளைப் பெற புதிய நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். இன்று மத்திய அரசு 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.

உயர் கல்வித்துறையில் பல புதிய நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, புதிய ஐஐடி 8, புதிய ஐஐஎம் 7, புதிய மத்திய பல்கலைக் கழகங்கள் 16, புதிய என்ஐடி 10 தொடங்கப்பட்டுள்ளன. அறிவியல் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த புதிய நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்துக்கு மாணவர்களை ஈர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு திரும்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஆனாலும் நமது கல்வி அமைப்பு முறையை சீர்திருத்த இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் இன்னமும் குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் மற்றும் பிற அத்தியாவசிய கட்டமைப்புகள் இல்லை. கல்வித் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். இதனை சாதிப்பதற்கு ஆசிரியர்களின் பயிற்சிக்கு முக்கியத்துவம் தருவது அவசியம்.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 11 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து அது இரண்டுக்கும் இந்த திட்டம் மிகவும் பயன்தருவதாய் உள்ளது. ஆனாலும் இதன் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிஹாரில் நிகழ்ந்த துயர சம்பவம் நாட்டில் வேறு எங்கும் திரும்ப நிகழக் கூடாது.

2005 இல் தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கினோம். இந்த திட்டம் நல்ல விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. மகப்பேறு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகிய இரண்டுமே வெகுவாகக் குறைந்து உள்ளன. வெகு அதிக விகிதத்தில் குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கிறார்கள். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதமும் வெகுவாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எங்கும் போலியோ கண்டறியப்படவில்லை. பல லட்சம் மக்களுக்கு இயலாமையை தோற்றுவித்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஏழை சகோதர சகோதரிகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா தற்போது 3.5 கோடி குடும்பங்களை சேர்ந்துள்ளது.

நகரப் பகுதிகளிலும் சுகாதார இயக்கத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்தப் பகுதிகளில் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கு இது உதவும். பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் சட்டத்தை வலுப்படுத்தி இருக்கிறோம்.

சாலைகள், ரயில்வே, மின்சாரம், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் தொலைத் தொடர்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உட்கட்டமைப்புத் துறையிலும் கடந்த 9 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறோம். பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் பயணத்தை எளிதாக்க, சுமார் 37,000 கி.மீ. நீளத்துக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாற்பதுக்கு மேற்பட்ட விமான நிலையங்கள் கட்டப்பட்டன அல்லது தரம் உயர்த்தப்பட்டன. 2004-ல் 7 சதவீத மக்களிடம் மட்டுமே தொலைபேசி இணைப்பு இருந்தது. இன்று, 73 சதவீதம் பேர் இந்த வசதியை அனுபவிக்கிறார்கள். கிராமப்புறங்களில் இது 2 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின் தயாரிப்புத் திறன் கூடியதிலும் சாதனை படைத்துள்ளோம்.

சகோதரர்களே சகோதரிகளே, கடந்த ஆண்டு நமது வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் என்று குறைந்து போனதாய் சமீப மாதங்களில் பேசப்படுகிறது. இது உண்மைதான். இந்த நிலைமையை சீராக்க முயன்று வருகிறோம். நமது நாடு மட்டும் இந்தப் பொருளாதார இன்னல்களை எதிர்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு உலக பொருளாதாரம் மொத்தத்துக்குமே கடினமாக இருந்தது. பெரிய ஐரோப்பிய நாடுகளும் மந்தநிலையை சந்தித்து வருகின்றன. உலகம் முழுதிலும், ஏற்றுமதி சந்தையில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் எல்லாமே தொய்வு அடைந்து உள்ளன.

இந்தியாவில் இந்த மெதுவான வளர்ச்சியின் காலம் நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறேன். கடந்த 9 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி வேகம் இதுவரை எந்த பத்தாண்டிலும் இருந்தது இல்லை.

சகோதரர்களே சகோதரிகளே, முன்பு எப்போதையும் விட இப்போது நாடுகள் ஒன்றோடுடொன்று ஒருங்கிணைந்து உள்ளன. இந்த நிலைமையை இந்தியாவுக்கு முழுவதும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நமது வெளியுறவுக் கொள்கை முயல்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் உலகின் முக்கிய சக்திகளுடன் நமது உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 ஆசியன் நாடுகள் தொடர்பான நமது கிழக்கு நோக்கிய கொள்கை, பொருளாதாரத்தில் நல்ல பயன் தந்துள்ளது. நமது அண்டை நாடுகளோடும் நல்ல உறவுக்கு பாடுபட்டு வருகிறோம். பாகிஸ்தானுடன் நமது உறவு மேம்பட, அவர்களின் எல்லையை, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லையை இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதை அவர்கள் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

தேசப்பாதுகாப்பிலும் கணிசமான மேம்பாடு கண்டிருக்கிறோம். 2012 மற்றும் இந்த ஆண்டிலும் கவலை அளிக்கும் மதவாத சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும் கடந்த 9 ஆண்டு காலம் மத ஒற்றுமைக்கு நல்லதாகவே அமைந்தது. பயங்கரவாதம் மற்றும் நக்சல் வன்முறை குறைந்துள்ளது. ஆனாலும் தேச பாதுகாப்புக்கு தொடர் கண்காணிப்பு அவசியமாகும். அவ்வப்போது நிகழும் மெர்சல் தாக்குதல்களைத் தடுப்பதில் நாம் வெற்றி பெறவில்லை. மே 25 அன்று சட்டீஸ்கரில் நிகழ்ந்த நக்சல் வன்முறை, நமது ஜனநாயகத்தின் மீது நடந்த முன்னணி தாக்குதலாகும். சமீபத்தில் பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுப்பாட்டு கோடுக்கு அருகே நமது வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடவாமல் தடுக்க எல்லா நடவடிக்கைகளும் எடுப்போம்.

சகோதரர்களே சகோதரிகளே, அரசாங்கம் பதில் தருவதாக வெளிப்படையானதாக நேர்மையானதாக செயல்பட அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டை மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். தகவல் உரிமைச் சட்டம் மூலம் அரசு செயல்பாடுகள் பற்றி முன்எப்போதும் விட இப்போது சாமானியனுக்கு அதிக தகவல் கிடைக்கிறது. எல்லா நிலைகளிலும் இந்தச் சட்டம் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகள் மற்றும் ஊழலை இந்த சட்டம் அடிக்கடி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. அரசு செயல்பாடுகளில் மேம்பாட்டுக்கு இச்சட்டம் வழிகோலும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநிலங்களவை முன் உள்ளது. நமது அரசியல் அமைப்பு முறையைத் தூய்மையாக்க இந்த சட்டம் மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

சகோதரர்களே சகோதரிகளே, கடந்த 10 ஆண்டில் நாம் நீண்ட தூரம் பயணித்துள்ளோம். ஆனால் இன்னமும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. நாம் தொடங்கியுள்ள இந்த மாற்றத்தின் நடவடிக்கைகள் வரும் காலங்களிலும் தொடரும்.

நான் முன்பே சொன்னது போல, விரைந்த பொருளாதார வளர்ச்சி நமது நாட்டுக்கு மிக முக்கியம். இது இல்லாமல், வறுமை ஒழிப்பு, நல்ல தரமான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் வழங்குதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய இலக்குகளை அடைவது சாத்தியமில்லை. கடந்த 9 ஆண்டுகளில் நாம் எட்டியுள்ள சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் நமது திறனை வெளிக்காட்டுகிறது. ஆனாலும், தற்போது பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இந்த நிலைமையை சீராக்க கடுமையாக உழைத்து வருகிறோம்.

தொழில் தொடங்க அனுமதி அளித்தல், வணிகம் மற்றும் தொழில்துறைக்கான இணக்க சூழலை ஏற்படுத்துதல், முதலீடுகளை அதிகரித்தல் ஆகியவற்றை விரைவுபடுத்த, பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் உதவ சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான தடைகளை நீக்குவதற்கு முதலீட்டுக்கான அமைச்சரவைக் குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

போதுமான அளவு நிலக்கரி சப்ளை இல்லாதது, மின் உற்பத்தியை அதிகரிக்கும் நமது முயற்சிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாகும். இது பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் எண்ணற்ற புதிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பணிகளைத் தொடங்க இருக்கிறோம். புதிய துறைமுகங்கள் 2, புதிய விமான நிலையங்கள் 8, புதிய தொழில்துறை முனையங்கள் மற்றும் ரயில்வே திட்டங்கள் இதில் அடங்கும்.

அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, பல துறைகளில் முதலீட்டு வரையறையை சமீபத்தில் அதிகரித்துள்ளோம் மற்றும் நடைமுறைகளை எளிதாக்கியுள்ளோம். வரும் மாதங்களில், முதலீடுகளை அதிகரிக்கும் நமது முயற்சியின் பலன்களைக் காணலாம். நமது வளர்ச்சி வேகம் பெறும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கட்டமைப்புத் துறை மேம்படும்.

சகோதரர்களே சகோதரிகளே, உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதனை செயல்படுத்துதல் நமது முன்னுரிமைகளில் ஒன்றாகும். ஏற்கனவே மாநிலங்களுடன் சேர்ந்து இந்தத் திசையில் பணியாற்றத்தொடங்கி விட்டோம். பொது நுகர்வு திட்டத்தில் கணினி மையம் விரைவுபடுத்தப்படும்.

மதிய உணவு திட்டம் சீர்திருத்தப்படும். நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாய் இருந்தால் மட்டும் போதாது; அது சுகாதார முறையில் சமைக்கப்படவும் வேண்டும். இதனை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுப்போம்.

திறன் வளர்ச்சியில், நாம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை தொடக்கத்தில் சாதிக்க முடியவில்லை. ஆனால் இப்போது வேகம் பிடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தேசிய திறன் வளர்ப்பு அத்தாரிட்டி நிறுவியுள்ளோம். புதிய திறன்பெற்றவர்களுக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம். இந்தத் திட்டத்தால் அடுத்த 12 மாதங்களில் சுமார் பத்து லட்சம் இளைய ஆண்கள் பெண்கள் பயன் பெறுவார்கள்.

சிறுபான்மை மக்களுக்கான multi sectoral வளர்ச்சித் திட்டம் சமீபத்தில் சீர்திருத்தப் பட்டுள்ளது. இதனை திறம்பட நடைமுறைப் படுத்துவோம்.

சில நாட்களுக்கு முன்பு, சிறிய வனப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால், தாம் சேகரிக்கும் சிறிய வனப்பொருட்களுக்கு நமது பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும். இந்தத் திட்டத்தை நாம் விரைந்து செயல்படுத்துவோம்.

நமது பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கல்வி மற்றும் சுகாதார நிலை குறித்து துல்லியமான தகவல் சேகரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை, இவர்களின் நலனுக்கான திட்டங்களை இன்னும் சிறப்பாக வடிவமைக்க உதவும்.

முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நமது நாட்டின் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆதார் திட்டம் ஒரு நல்ல உதாரணம். இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 50 கோடி மக்கள் தமது அடையாளத்தை நிரூபிக்க வழி பிறக்கும். இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் வசதியைக் கொண்டு வரும். பல கோடி மக்கள் முதன் முறையாக வங்கி சேவைகளைப் பெறவும் இது வழி வகுக்கும்.

சகோதரர்களே சகோதரிகளே, நவீன முன்னேறிய சமயசார்பற்ற நாட்டில், குறுகிய பிரிவினைக் கொள்கைகளுக்கு இடமில்லை. இத்தகைய தத்துவங்கள் நமது சமுதாயத்தைப் பிரிக்கின்றன, நமது ஜனநாயகத்தை பலவீனம் ஆக்குகின்றன. இவை வளராமல் தடுக்க வேண்டும். சகிப்புத் தன்மையை மேம்படுத்தி, நம்மிடம் இருந்து மாறுபட்ட பிறசிந்தனைகளையும் மதிக்கக் கற்றுத் தருகிற நமது நாட்டின் மரபுகளை வலுப்படுத்த வேண்டும். இந்த திசையில் உழைக்குமாறு எல்லா அரசியல் கட்சிகள், சமுதாயத்தின் எல்லா பிரிவுகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, சில நிமிடங்களுக்கு முன்னர் சொன்னேன் - சுதந்திரத்துக்கு பிறகு ஒவ்வொரு பத்தாண்டும் நமது நாடு பெரிய மாற்றங்களைக் கண்டு வருகிறது. வரும் பத்தாண்டுகளில் நாம் என்னென்ன மாற்றங்களை காண விரும்புகிறோம் என்பதை இன்று சிந்திக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகள் போலவே அதே வளர்ச்சியை எதிர்காலத்தில் நம்மால் சாதிக்க முடிந்தால், வறுமை, பசி, நோய், அறியாமை இல்லாத இந்தியாவைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. நம் இந்தியா வளம் பெற்று இருக்கும்; எந்த மதம் சாதி மண்டலம் மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எல்லா குடிமக்களும் சம பங்குதாரராக இருப்பார்கள். இதற்கு, அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு கொண்ட சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இத்தகைய இந்தியாவை கட்டமைக்க நாம் அனைவரும் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். அன்பான குழந்தைகளே என்னுடன் சேர்ந்து மூன்று முறை கூறுங்கள்: ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 66 - ‘தொடர்ந்து முன்னேறுவோம்’ | 2012

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்