இதோ அந்தப் பாடல்.....
நான் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு
என் நாடு என்னைப் போலவே மிக சிறியது
எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது
வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள் பறப்பதில்லை
எங்கள் வானம் கனவு கண்டுகொண்டிருக்கிறது அந்த நாட்களைக் கேட்டு
எங்களது குழந்தைப் பருவத்தை திருப்பித் தாருங்கள்
என்ற வலி நிறைந்த வரிகளுடான பாடலை அவள் தொடருவாள். அந்தப் பாடலின் வரிகள் அவளை தடுமாறச் செய்து ஒரு கட்டத்தில் கண்ணீரில் நிறுத்துகிறது.
அந்த நிகழ்ச்சியின் பெண் நடுவர் ஒருவர் ஓடிச் சென்று ஏன் அழுகிறாய்? தொடர்ந்து பாடு என்று அவளுடன் சேர்ந்து அந்தப் பாடலை பாடி முடிப்பார்.
பாடல் முடிந்தவுடன் நீ ஏன் அழுதாய் என்று அந்த நடுவர் கேட்க, அதற்கு அவள் சிரிப்புடன், கைகளால் கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் சிரியாவைச் சேர்ந்தவள் என்று கூறுவாள்.
சுற்றியுள்ள அனைவரும் அவளை உற்சாகப்படுத்துவார்கள். சிரியாவைச் சேர்ந்த ஏழு வயதான க்ஹினா என்ற சிறுமிதான் அந்தப் பாடலை பாடியவர். அந்த வீடியோ காட்சி மிக பிரபலமானது.
க்ஹினா - படம்: எம்பிசி த வாய்ஸ் கிட்ஸ்
க்ஹினா மட்டுமல்ல சிரியாவைச் சேர்ந்த குழந்தைகள் பலரும் நாள்தோறும் அவர்களது மண்ணில் நடைபெறும் அவலங்களை நமக்குக் கொண்டுவர மரணத்தின் வாயிலில் நின்று கொண்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரினால் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகிறது என்பதை சற்று பின்நோக்கி பார்க்க வேண்டியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர், சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக துருக்கிக்கு தப்பிச் செல்ல முயன்ற அய்லான் என்ற சிறுவன் துருக்கி கடற்கரையில் இறந்து கிடந்தான். அக்காட்சி உலகையே கலங்கச் செய்தது.
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வான்வழித் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட ஓம்ரான் பலத்த காயத்துடன் நாற்காலியில் குழப்பம் அடைந்த நிலையில் அமர்ந்திருந்தான். அந்தத் தருணத்தில் அவன் ஏதும் பேசவில்லை. அவனுக்காக நாம் இணையத்தில் பேசினோம்.
பானா அலபெட் என்ற சிரிய சிறுமி ஊஞ்சல் ஆடுவதில்லை. மரணக் கயிற்றில்தான் ஆடிக்கொண்டிருக்கிறாள் ஒவ்வொரு நாளும் சிரிய போரில் அவள் எப்படி உயிர் பிழைக்கிறாள். என்பதை தனது ட்விட்டர் > @AlabedBana பக்கத்தில் பதிவிட்டு வருகிறாள். ஒரு சில நாள் அவளைக் காணவில்லை; ஒரு வேளை வெடிகுண்டுக்கு பானா பலியாகிவிட்டாளா என அவளை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
பின் சில நாள் கழித்து பானா அலபெட் தான் உயிருடன் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டாள். சிரியாவின் நிலைமை குறித்து இன்றும் தொடர்ந்து பதிவிட்டு உலக நாடுகளிடையே கொண்டிருக்கிறாள் பானா...
ஓம்ரான், அய்லான், பானா அலபெட்
தொடர்ந்து சிரியாவின் நிலையை அந்நாட்டுக் குழந்தைகள் இன்றும் நமக்கு கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் என்ன நடக்கிறது?
உண்மையைக் கூற வேண்டும் என்றால் மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ள நாடு (சிரியா) தனது சொந்த நாட்டு மக்களை குண்டுகளாலும், வான்வழித் தாக்குதலும் கொன்று குவித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்துக்காக நான்கு பக்கங்களிலும் சிரியா சூறையாடப்பட்டு வருகிறது.
சுமார் 30 வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அஸாத். எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது என்று வெளிப்படையாகவே 1990ல் அறிவித்தார். அவ்வப்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் மக்களின் ஆதரவு பெற்றவராகத்தான் ஹஃபெஸ் விளங்கினார்.
இதனால் 1991 வருட தேர்தலில் 99.98 சதவிகித வாக்களித்து இவரை நான்காம் முறையாக நாட்டுத் தலைவராக்கினார்கள் சிரியா மக்கள்.
இவரது இரண்டு மகன்களில் ஒருவனான பஸ்ஸெல் அல் அஸத் என்பவர்தான் அந்த நாட்டின் அடுத்த அதிபர் என்று மக்கள் நினைத்திருக்க, கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். பின் அவரது சகோதரர் பஷர் அல் அசாத் சிரியாவின் அதிபரானார்.
இவருக்கெதிராகத்தான் சிரிய கிளர்ச்சி படைகளும், ஐஎஸ் இயக்கமும், போர்த் தொடுத்து வருகின்றன.
இந்த சண்டையில் ஒருபக்கம் குர்திஷ் இனத்தவரும் உள்ளனர்.
பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் சிரியாவில் ஷியா முஸ்லிமான பஷார் அல் ஆசாத் ஆட்சி செய்வதை எதிர்த் தரப்பு விரும்பவில்லை என்பதும் சிரிய உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம் ஆகும்.
சிரிய அரசின் செயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர், ஐஎஸ் இயக்கத்தில் இணைந்ததன் காரணமாக சிரியாவில் ஐஎஸ் இயக்கம் நன்கு கால் ஊன்ற வழி செய்தது.
சிரியாவில் நடக்கும் உள் நாட்டு போரால், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொள்ள இரான், ரஷ்யா, சீனா சிரிய அரசின் நண்பர்களாக உள்ளனர்.
பஷார் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா சிரியாவின் உள் நாட்டுப் போரில் தலையிடுகிறது என்றால் அமெரிக்கா அமைதியாக இருக்குமா என்ன? வழக்கம் போல ஐஎஸ் இயக்கத்தை அழிக்கிறோம் என்று சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆதரவு அளித்து வருகிறது. பிறகென்ன சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் தினமும் ரத்த ஆறு ஓடுகிறது.
சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு ஐ நா தனது தூதுவர்களை அனுப்பி முடிந்தளவு சமரசம் செய்ய முயற்சித்தது. இதற்கு சிரிய அரசு சற்றும் செவி சாய்க்கவில்லை. விளைவு அமைதி தூதுவன் மௌனத் தூதுவன் ஆகிவிட்டான்.
மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. தொடர் சண்டையால் தெருக்களில் அங்காங்கே கேட்பாரற்ற நிலையில் பிணங்கள் கிடக்கின்றன (குழந்தைகள் உட்பட).
போரில் குடும்பத்தையும், நண்பர்களையும் இழந்த சிரிய குழந்தைகள் கையில் பொம்மை, கால்பந்துடன் தெரு ஓரங்களில் சுற்றித் திரிகிறார்கள்.
இதில் கொடுமையான செய்தி என்னவென்றால் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் போரினால் உள்நாட்டிலே அகதிகளாக இருக்கும் நிலைக்கு சிரிய மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வான்வழித் தாக்குதலால் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர், சிறுமிகளை மீட்டுச் செல்லும் மீட்புப்படையினர்.
உள்நாட்டுப் போரில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ (கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) தனது அடையாளத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறது.
மனிதர்கள் குண்டுகளால் கொல்லப்படும் இடத்தில் விவசாயம் உயிரற்றுக் கிடப்பதால் சிரியாவின் உணவுக் கலாச்சாரம் வரலாற்றில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது.
சிரியாவில் நடைபெறும் உள் நாட்டுப் போரில் கடந்த ஆறு வருடங்களில் 5 லட்ச மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
30 லட்சத்துக்கு அதிகமானவர்கள் துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, இராக் போன்ற அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். பல சிரிய குழந்தைகள் துருக்கியில் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் பத்து லட்சத்துக்கு அதிகமான மக்கள் குடிநீர் இல்லாமல் தவிந்து வருவதாக யூனிஃசெப் அமைப்பின் சிரிய பிரதிநிதிகள் கூறியுள்ளனர். அது மட்டுமில்லாது போர் தீவிரவமாக நடைபெறும் பகுதிகளில் மக்கள் உணவு தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்துள்ளது ஏராளமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது கிளர்ச்சியாளர்களிடம் கடைசி பகுதியாக உள்ள கவுடாவில் சிரியா - ரஷ்ய கூட்டுப் படைகள் இறுது யுத்தத்தை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் மீறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி தோழமை மனித உரிமை அமைப்பின் இயக்குனர் தேவநேயன் கூறியதாவது,
"சிரியாவை பொறுத்தவரை அங்கு அடிப்படையில் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனுடன் அங்கு இருப்பவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான உத்தரவாதமும் மறுக்கப்படுகிறது.
இதுதான் சிரியா மக்களின் இன்றைய நிலை. அதுவும் சமீப காலங்களில் கொடூரமான முறையில் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
குறிப்பாக சிரியாவில் மருத்துவமனைகள், வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள் போன்றவைதான் அதிகமாக தாக்கப்பட்டுள்ளன. பெண்களும், குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர்.
நவீன காலகட்டத்தைப் பொறுத்தவரை போருக்கென்று சில அறநெறிகள் உண்டு. அந்த அறநெறிகள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் மீறப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரைவிட கொடூரமான முறையில் சிரியாவில் அறநெறிகள் மீறப்பட்டிருக்கிறது.
தோழமை மனித உரிமை அமைப்பின் இயக்குனர் தேவநேயன்
அறநெறிகள் மீறப்பட்டிருக்கிறது என்றால், எந்த மத அடிப்படைவாதமும் மனிதர்களைக் கொல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் சிரியாவில் போரை நடத்துவது மதத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான். இதனால் இவர்கள் மத வெறியர்களா? என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவதாக சிரியாவில் நடக்கும் இந்தக் கொடுமைக்கு துணை போகும் பன்னாட்டு அரசையும் (அமெரிக்கா, ரஷ்யா) கண்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
உலக அமைதி, மனித உரிமை பாதுகாப்பு இவற்றுக்கு தலைமையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் சிரியா விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை என்றுதான் கூற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளும் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. பாதிக்கப்படுபவர்களுக்கு இல்லை.
ஐநாவினுடைய சாசனமே பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிலிருந்து மனித உரிமை பேச வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த ஐநா தவறிவிட்டது.
மூன்றாவது, மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் கூட போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு கிடைக்கவில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட சூழ்நிலையில்தான் சிரிய மக்கள் உள்ளனர். ஆனால் உலக நாடுகள் இதனை கவனிக்கத் தவறியிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை மனித உரிமைக்கான சாசனம் அத்தனையும் சிரிய உள்நாட்டுப் போரில் உலக நாடுகள் தரையில் போட்டு மிதித்து விட்டன.
இறுதியாக மனித உரிமைக்கான சட்டங்கள், திட்டங்கள் இருப்பதை விட மனித உரிமைக்கான கலாச்சரத்தை வளர்க்க வேண்டும் அப்போதுதான் மனித உரிமைக்கான பாதுகாப்பு கிடைக்கும் என்பதே மனித உரிமை நாளில் நான் எதிர்பார்ப்பது. இது சிரியாவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொறுந்தும்" என்று கூறினார்.
நம் கண்முன்னே சிரியா அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் மௌனம் உடையும்வரை சிரியாவில் இந்த அவலம் தொடர்கதையாக இருக்கக் போகிறது.
சிரியா தன் வரலாற்றை அழித்துக் கொண்டே பிற நாடுகளுக்கு வரலாறாக மாறப் போகிறது. மனிதம் தழைக்கட்டும் மற்றுமொரு சிரியா இனி உருவாகாமல் இருக்கட்டும்.
கட்டுரை: இந்து குணசேகர்
தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago