செங்கோட்டை முழக்கங்கள் 62 - ‘நல்ல அரசை வழங்குவது ஒரு சவால்!’ | 2008

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஒரு பொருளாதார நிபுணர் பிரதமர் பொறுப்பில் இருந்தால், நாடு நிச்சயம் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும். ஒரு முழு நேர அரசியல்வாதியாக இல்லாமல், நாட்டின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றுவதில் சில சிக்கல்களும் உண்டு; பல சாதகங்களும் உண்டு.

அரசியல் சச்சரங்களுக்குள் பெரிதாக சிக்கிக் கொள்ளாமல் தனது கடமையில் மட்டும் தீவிர ஈடுபாடு கொண்டு அயராது பணியாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், ஐந்தாவது முறையாக, 2008 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - இதோ: எனது அன்பார்ந்த நாட்டு மக்களே சகோதரர்களை சகோதரிகளே எனது அன்பான குழந்தைகளே, இந்த சுதந்திர தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

ஒவ்வோர் இந்தியருக்கும் இது ஒரு புனிதமான நாள். அந்நிய ஆட்சியிடம் இருந்து விடுதலை பெற வேண்டி மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் போராடித் தியாகம் செய்த அனைவரையும் இன்று நினைவு கூர்கிறோம். சுதந்திரமான நவீன இந்தியாவை கட்டமைக்க கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் பாடுபட்ட அனைவரையும் இன்று நினைவு கூர்கிறோம். நமது விவசாயிகளை நமது தொழிலாளர்களை நமது ஆசிரியர்களை நினைவு கூர்கிறோம். பனிமலைகளில், பாலைவனங்களில், காடுகளில், கடற்கரைகளில், பெரும் கடல்களில் நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களை நாம் நினைவு கூர்கிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, நான்காண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் இங்கே உங்கள் முன் நின்று, புதிய இந்தியா குறித்த நமது அரசின் புதிய (தொலைநோக்கு) பார்வை குறித்துப் பேசினேன். நியாயமான மனிதாபிமான எல்லா குடிமக்களையும் சமமாக பாவிக்கும் இந்தியாவை கட்டமைப்பதே நமது ஆசை என்று கூறினேன். வளமான இந்தியா, அமைதியில் வாழும் இந்தியா, தனது திறனுக்கு ஏற்ற வேலையை ஒவ்வொருவரும் பெற்று, தனது ஒளிமயமான எதிர்காலத்துக்காக உழைக்கும் இந்தியா.. வேற்றுமையில் ஒற்றுமையை காணும் இந்தியா... இத்தகைய இந்தியாவை கட்டமைப்பதே நமது உண்மையான முயற்சியாகும்.

சகோதரர்களே சகோதரிகளே, நான்காண்டுகளுக்கு முன்பு இங்கு நின்று நான் சொன்னேன் - நான் (புதிதாக) மேற்கொள்ள உறுதிமொழி ஏதும் இல்லை; ஆனால் நான் நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழி உண்டு. தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை நிறைவேற்றுவது, நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழி. கிராமப்புற இந்தியாவுக்கு ஒரு புதிய செயல் திட்டம் தருதல் நமது உறுதிமொழி; எல்லாரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை பொருளாதாரத்தை ஆக்குதல் நமது உறுதிமொழி; உலக நாடுகள் இடையே இந்தியாவுக்கான இடத்தைப் பெற்றுத் தருதல் நாம் நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழி.

இந்த உறுதிமொழிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றவே உண்மையாக முயற்சிக்கிறோம். கிராமப்புற இந்தியாவுக்கு புதிய கவனிப்பு அளித்துள்ளோம். 'ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா' தேசிய விவசாயிகள் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயத்தில் ரூ.25,000 கோடி முதலீடு செய்கிறோம். கடன் தொல்லையால் துன்பப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ரூ.71,000 கோடி அளவிலான வங்கிக் கடன்களை ரத்து செய்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண்துறைக்கான வங்கிக் கடன்தொகையை ரூ.81,000 கோடியில் இருந்து ரூ.2,25,000 கோடியாக உயர்த்தி உள்ளோம். வேளாண் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளோம். விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் விதமாக, உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை, கோதுமைக்கு 50 சதவீதம் நெல்லுக்கு 30 சதவீதம் என்று, செங்குத்தாக உயர்த்தி உள்ளோம்.

நெல் கோதுமை மற்றும் தானியங்களின் உற்பத்தியை விரிவுபடுத்த தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பாசனம், நீர்நிலை மேம்பாடு, மழையை நம்பி உள்ள பகுதிகளின் முன்னேற்றம், வெள்ளை மேலாண்மை ஆகியவை சிறப்பு கவனம் பெற்றுள்ளன. கிராமப்புற பகுதிகளில் முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் கடல் சுமையை குறைத்தல் போன்ற நம்பர் முயற்சிகளால் வேளாண் பொருளாதாரம் சுமுக நிலைக்கு வந்துள்ளது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக 1998 - 2004 இல் இருந்து, விவசாயத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது; இந்தப் பகுதியில் மறுவாழ்வு தெரிகிறது. 2007-08 இல், உணவுப் பொருட்கள், பருத்தி மற்றும் சர்க்கரை உற்பத்தியில் சாதனை அளவை எட்டியுள்ளோம். நமது பண்ணைகள் மீண்டும் பசுமையாக உள்ளன. நமது கிடங்குகள் மீண்டும் நிரம்பி வருகின்றன. நமது விவசாயிகள் மீண்டும், தமது எதிர்காலம் மற்றும் நல்வாழ்வு குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர்.

சகோதரர்களே சகோதரிகளே, நான் எனது வாழ்க்கையில் முதல் பத்து ஆண்டுகளை ஒரு கிராமத்தில் கழித்தேன். அங்கே மின்சாரம் இல்லை, குடிநீர் வசதி இல்லை, மருத்துவர் இல்லை, சாலைகள் இல்லை, தொலைபேசிகள் இல்லை. பள்ளிக்கு பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்தது. இரவில் மண்ணெண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் படிக்க வேண்டி இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு கிராமப் பகுதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பல குடிமக்கள் இன்னமும் எனது குழந்தைப் பருவத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையே வாழ்கிறார்கள்.

இதனால்தான் நமது அரசு பதவி ஏற்ற போது, கிராமப்புறத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்த 'பாரத் நிர்மாண்' தொடங்கினோம். கிராமப்புற இந்தியாவை முன்னேறியதாக மாற்றி அமைக்க நமது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இந்த ஆண்டு நான்கு ஆண்டுகளில் நாம் மிக முக்கிய பல முயற்சிகளை முன்னெடுத்து உள்ளோம். நமது முயற்சியின் விளைவாக புதிய வளமான இந்தியா நிர்மாணிக்கப்படும் என்று நம்புகிறேன்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் 'ஏழு சூத்திரங்கள்' குறித்துப் பேசினேன். நமது அரசின் ஏழு முன்னுரிமைகள் - விவசாயம், தண்ணீர், கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு நகர புத்தாக்கம் மற்றும் கட்டுமானம்.

ஒவ்வொரு துறையிலும் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். விவசாயம் முன்னேற்றம் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வுக்கான முன்முயற்சிகள் குறித்து ஏற்கனவே பேசி உள்ளேன்.

முன்னேற்றத்தில் இரண்டாவது முக்கிய பகுதி - உட்கட்டமைப்பு மேம்பாடு. ரயில்வேயில் ஒரு புதிய செயலூக்கம் தெரிகிறது. புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. புதிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் மாநகரங்களில் வாழ்கின்றனர். ஜவஹர்லால் நேரு தேசிய நகர இயக்கம், நகர வளர்ச்சி மற்றும் நமது மாநகரங்களை நல்லினப்படுத்துதலில் நிதியை செலவிடுகிறது. தேசிய ஊரக சுகாதார இயக்கம், கிராமப் பகுதிகளில் பொது சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளை விஸ்தரித்து வருகிறது.

ஓர் ஆசிரியராய் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய நான், உனது நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது என்பதைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன். தொடக்கக் கல்வியில், இடைநிலைக் கல்வியில் மற்றும் உயர்நிலைக் கல்வியில் என்று எல்லா நிலைகளிலும் கல்விக்கான பொது முதலீடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் உயர்கல்வி வரையில் மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கி உள்ளோம்; அனைவருக்கும் கல்வி இயக்கத்தை வலுப்படுத்தி உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் ஒரு பள்ளி என்கிற வகையில் 6,000 புதிய உயர்தர மாதிரி பள்ளிகள் நிறுவ இருக்கிறோம். பின்தங்கிய மாவட்டங்களில் 373 புதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. 30 புதிய பல்கலைக்கழகங்கள், 8 புதிய ஐஐடி, 7 புதிய ஐஐஎம், 20 புதிய ஐஐஐடி, 5 புதிய இந்திய விஞ்ஞான நிறுவனம், 2 புதிய திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள், 10 என்.ஐ.டி, மற்றும் 1000 புதிய பாலிடெக்னிக்குகள் தொடங்க இருக்கிறோம்.

பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தை நான் 'தேசிய கல்வி திட்டம்' National Education Plan என்றே அழைக்கிறேன். நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் எல்லா சிறுபான்மை சமூக குழந்தைகளுக்கும் நவீன கல்வி கிடைக்க வேண்டும். நமது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு புதிய நிதி உதவி திட்டங்களை நமது அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகத்துக் குழந்தைகளின் மெட்ரிக் படிப்புக்கு முந்தைய வெற்றிப் படிப்புக்குப் பிந்தைய கல்விக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை குடும்பங்களில் இருந்து வரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்பு நிதி உதவியும் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்விக்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் தேசிய தகுதி நிலை நிதி உதவி அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் மேற்பார்வையின் கீழ் புதிய திறன்மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது இளைய ஆண்கள், பெண்கள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்காக திறன்மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படும்.
நமது முஸ்லிம் சமுதாய மக்கள், சமூக பொருளாதார கல்வி அதிகாரம் மீதான நீதிபதி சச்சார் குழு பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை நாம் உண்மையாய் செயல்படுத்துவோம் என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் படித்த நன்கு உணவு உண்டு சுகாதாரமான ஆதாயமான வேலை வாய்ப்புகளை பெறுகிற ஒருவராய் இருந்தாலே இந்தியா நல்ல மாற்றம் பெறும். நவீன அறிவின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரினரையும் சென்று சேர்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட நவீன இந்தியாவைக் காண விரும்புகிறேன். இந்த ஆண்டு, இந்திய விண்கலம் சந்திரயான், நிலவுக்கு அனுப்பப்படும் என்று நம்புகிறேன். நமது விண்வெளி திட்ட வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

சகோதரர்களே சகோதரிகளே, வேலைவாய்ப்பு நழுவுதல் நமது சிறப்பு முன்னுரிமையாகும். விவசாயம், தொழில்துறை, கட்டமைப்பு மேம்பாடு, திருமண வாய்ப்பாடு தொடர்பான நமது கொள்கைகள் எல்லாமே வேலை வாய்ப்புகளைப் பெருக்கும். நமது நேசத்திற்குரிய முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி சொன்னார்கள்: 'வறுமையை ஒழிப்போம்'. நமது தலைவர் சோனியா காந்தி ஒரு முழக்கத்தை தந்துள்ளார்: வேலைவாய்ப்புகளை பெருக்குவோம். வறுமைக்கு எதிராகப் போரிட, வேலை வாய்ப்புகளை உருவாக்க நமது அரசு சிறப்பு முயற்சிகள் எடுத்து வருகிறது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - நமது அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முன்னெடுப்பாகும். இன்று நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் வந்துள்ளது. நம்மிடையே மிகவும் தேவைகள் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறைந்தபட்ச வாழ்வாதார ஆதரவு தருகிறது. மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, விவசாயத்தில் உற்பத்தியில் உட்கட்டமைப்பில் மேலும் அதிக முதலீடு நமக்குத் தேவைப்படுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்மயமாக்கலில் புதிய அலை தேவைப்படுகிறது. தொழில் வளர்ச்சி சில கிராமத்து மக்களிடையே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இருந்தால், நியாயமான இழப்பீடு மற்றும் முறையான மறுவாழ்வை நாம் உறுதி செய்வோம். புதிய மறுவாழ்வு மற்றும் மறுஏற்பாடு கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நாடாளுமன்ற அனுமதியை நாடுவோம்.

அமைப்பு சாராத்துறைத் தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு வழங்க ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' திட்டம் தொடங்கி உள்ளோம். இதன்படி, கிராமப்புற பகுதிகளில் உள்ள சொந்த நிலம் இல்லாத ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் காப்பீடு பெறுவார். அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க ஒரு திட்டம் தொடங்கி உள்ளோம். 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடிமக்கள், இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப் பட்டு உள்ளனர்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீடு விகிதம் கூர்மையாக அதிகரித்து உள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்ததில் இது பங்களித்து உள்ளது. வரலாற்றில் முதன் முறையாக, நான்கு ஆண்டுகளாக ஏறத்தாழ 9 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளோம். உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.

ஆனாலும் பல புதிய சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். பணவீக்க சவால் உள்ளது. சமீபத்து விலைவாசி உயர்வால் நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த ஆண்டு நாம் காணும் பணவீக்கம், வெளிக் காரணிகளால் ஏற்பட்டது. உலகம் முழுதும், உலகச் சந்தைகளில், உணவு எரிபொருள் மற்றும் பிறபொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது. பல வளரும் நாடுகளில் பணவீக்க விகிதம் இந்தியாவைக் காட்டிலும் இரு மடங்கு உள்ளது. பல நாடுகளில் இருக்கும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்து இல்லை என்பதை உறுதி செய்வதில் நமது அரசு கடுமையாகப் பணியாற்றுகிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வின் பாதிப்பில் இருந்து சமூதாயத்தின் நலிந்த பிரிவினரைக் காப்பாற்ற சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். மண்ணெண்ணெய் மற்றும் உரங்களின் விலையை நமது அரசு உயர்த்தவில்லை. பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் கோதுமை விலை உயர்த்தப்படவில்லை.

விலைவாசியை நியாயமான கட்டுக்குள் வைத்திருக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சாமானியனுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய பொது விநியோக முறையை வலுப்படுத்த மேம்படுத்த எல்லா முதல்வர்களையும் நான் கேட்டுள்ளேன். பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க, நாட்டு பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. ஆனாலும் இந்த முயற்சி எடுக்கும் போதே, நமது வளர்ச்சியைப் பாதிக்கும் எதையும் நாம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, இன்று நமது அரசின் சாதனைகள் பற்றிப் பேசும் போது, இன்னொரு உறுதிமொழியும் தர விரும்புகிறேன். நாம் நிறைய செய்துள்ளோம்; இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்பதையும் உணர்கிறேன். உணவில் சத்துக் குறைபாடு பிரச்சினை நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சுகாதார வசதி மற்றும் கல்வி வழங்குகிற நமது முயற்சிகள் தொடரும். பெண்களுக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கி அவர்களை சம தகுதிநிலை வழங்குகிற முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு உழைப்பதைத் தொடர்வோம் என்று உறுதி கூறுகிறேன். எல்லாத் துறைகளிலும் நமது நாட்டை மகத்தான உயரங்களுக்குக் கொண்டு செல்ல நாம் கடுமையாக உழைப்போம்.

சகோதரர்களே சகோதரிகளே, நமது எரிசக்தி பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வுகளை காண நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை நாம் பிரயோகிக்க வேண்டும். நமது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு ஒரு வரையறைக்குள் உள்ளது. மாற்று எரிசக்தி வழிகளை நாம் காண வேண்டும். சூரிய மின்சக்தி காற்றாலை சக்தி உயிரி எரிவாயு மற்றும் எரிவாயுக்கான பிற வழிகளை மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வழிகளை நமது விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

வறுமையை ஒழிக்க, எல்லாருக்கும் வேலை வாய்ப்பு வழங்க, நமது பொருளாதாரம் குறைந்த பட்சம் 7 சதவீதம் வளர்ச்சி காண வேண்டும். நீடித்த வளர்ச்சிக்கும் நம்ம விவசாயம் மற்றும் தொழில்துறையின் முன்னேற்றத்துக்கும், எரிசக்தி குறிப்பாக மின்சாரம் அடிப்படைத் தேவையாகும். உலகம் முழுதும், எரிவாயுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சவாலை எதிர்கொள்வதில் அணுசக்தியின் முக்கியத்துவம் மேன்மேலும் உணரப்பட்டு வருகிறது. இது தூய்மையான சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க சக்தியின் மூலாதாரமாகும்.

இந்தியாவின் அணுசக்தி விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். மிகுந்த இன்னல்களுக்கு இடையிலும் இவர்கள், அணு சக்தித் திறனை வலுப்படுத்தி உள்ளனர். ஆனால் சில தடைகள்/ தடங்கல்கள், நமது அணுசக்தி திட்டத்தை எதிர்மறையாக பாதித்துள்ளன. யுரேனியம் உற்பத்தி போதுமானதாக இல்லை. பிற உற்பத்தியாளர்களோடு நமது யுரேனிய வளங்களின் தரம் ஒப்பிடும்படியாக இல்லை. அணுசக்திப் பொருட்கள், அணுசக்தி சாதனங்கள், அணுசக்தி தொழில்நுட்பம் ஆகியவற்றின் வணிகத்தில் இந்தியா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

வளர்ந்த நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அணுசக்தி ஒப்பந்தம், அணு சக்தியில் இந்தியாவின் தனிமையை முடிவுக்குக் கொண்டு வரும். இது அணுசக்தி பொருட்கள், சாதனங்களில் இரட்டைப் பயன் தரும் உயர்தொழில்நுட்ப வணிகத்தில் புதிய வாய்ப்புகளை, நாட்டின் தொழில் மயமாக்கலை விரைவுபடுத்த புதிய பாதைகளைத் திறந்து விடும். நமது விவசாயிகள் கைவினைஞர்கள் வணிகர்கள் மற்றும் நமது தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றும் மின்சக்தியை வழங்கும் திறன் கொண்டவர்கள் ஆவோம்.

சகோதரர்களே சகோதரிகளே, நல்ல அரசை வழங்குவதே நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னேன். வெளிப்படையான திறன்மிக்க மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் அரசை உருவாக்க நாம் பல நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். தகவல் உரிமைச் சட்டம் ஒரு மிக முக்கியமான முன்னேற்றம். அரசாங்கத்தை சீர்படுத்தும் நவீனப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து உள்ளோம். நமது குடிமக்கள் அனைவரும் அரசின் துறைகளுடன் தொடர்பு கொள்வதை தேசிய e-governance திட்டம் எளிமைப்படுத்தும்.

ஆறாவது ஊதிய ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்யும் பணியை நிறைவு செய்துவிட்டோம். அரசு பணியாளர்களின் ஊதிய பலன்களை உயர்த்துவதில் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அப்பாலும் வெகு அதிகம் சென்றுள்ளோம். இதனைச் செய்யும் போது, நமது ஆயுதப்படையினர், துணை ராணுவத்தினர் மற்றும் குடிமைப்பணிகளில் வெவ்வேறு நிலைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் நலன் மற்றும் நல்வாழ்வில் சிறப்பு அக்கறை எடுத்துள்ளோம். நமது அரசாங்கத்தை மேலும் திறன் உள்ளதாக மாற்றுவதற்கு மற்றும் ஓர் அடி எடுத்து வைத்துள்ளோம்.

அரசின் எல்லா நிலைகளிலும் மேலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நமது பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் பொதுச்சேவைகளை நாம் மேம்படுத்த வேண்டும். அரசின் சீர்திருத்தத்தில் அதிகார பரவலில் பஞ்சாயத்து அமைப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும். அரசுச் செயல்பாடுகளை மேம்படுத்த, மத்திய அரசின் முன்னெடுப்புகளில் உதவ, தம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே... பயங்கரவாதம், தீவிரவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதம், நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப் பெரிய சவாலாகத் தோன்றி இருக்கிறது. பெங்களூர், அகமதாபாத், ஜெய்பூர் மற்றும் நாட்டின் பிறபகுதிகளில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைக் கண்டிக்க வார்த்தைகளே இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் மற்றும் வருத்தத்தில் நான் பங்கு கொள்கிறேன். இந்தக் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்.

மிகக் கடினமான சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையை அர்ப்பணிப்பு உணர்வுடன் கையாளும் பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவு அமைப்புகளை நான் பாராட்டுகிறேன். பயங்கரவாத பிரச்சினையை கையாள்வதற்கு, உளவு அமைப்புகள் மற்றும் காவல் படையினரை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். உளவு அமைப்புகள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வோம்; பயங்கரவாத சவாலை முறியடிப்பதில் அவருக்கு தேவையானதை வழங்குவதில் சாத்தியமாகும் எல்லா நடவடிக்கைளும் எடுப்போம். என்னென்ன வளங்கள் வசதிகள் தேவைப்படுமோ அவை (குறைவின்றி) வழங்கப்படும். மனித சக்தி எவ்வளவு தேவைப்படுகிறதோ வழங்கப்படும். பயங்கரவாத சவாலை எதிர்கொள்வதில் நாம் உறுதியாக உள்ளோம். நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்க எங்களோடு ஒத்துழைக்குமாறு மாநில அரசுகள், எல்லா அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமய சமுதாய தலைவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, இந்தச் சவால்களை நாம் முறியடிப்போம் என்று நான் நம்புகிறேன். ஆனால் இதற்கு கடின உழைப்பும் பொதுநோக்கத்துக்கான ஒற்றுமையும் தேவை. சச்சரவு அல்ல; கருத்தொற்றுமை அரசியல் தேவை. சமூகங்களுக்கு இடையே உரசல் அல்ல; உரையாடல் தேவை. பிரிவு பெற்றுள்ள தேசத்தால் மதவாத தீவிரவாத பயங்கரவாத சவாலை வெற்றி கொள்ள முடியாது. சுற்றுப்புற, சூழலியல் ஏற்படுத்தும் அழிவின் சவாலை பிளவுபட்ட சமுதாயத்தால் எதிர்த்து வெற்றி காண முடியாது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மை மக்களின் பொருளாதார நவீன மயம் மற்றும் சமுதாய மேம்பாட்டு சவாலை, பிளவுபட்ட மக்களால் எதிர்கொண்டு வெல்ல முடியாது.

சகோதரர்களே சகோதரிகளே, வளர்ச்சியில் மண்டல சமமின்மை பிரச்சினை குறித்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன் என்பதைப் பல தருணங்களில் கூறியிருக்கிறேன். நாட்டின் சில பகுதிகள் பிறபகுதியை விட மிகவும் நன்றாக செயல்படுகின்றன. சில மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. இந்தப் போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாக குறைவாக வளர்ந்த மாநிலங்களும் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.

வடகிழக்கு மண்டலத்தில் வளர்ச்சிக்கு நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் மொத்த முதலீட்டை அதிகரிக்க பல்வேறு முனைப்புகளை அரசு எடுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க, வேலைவாய்ப்புகளைப் பெருக்க, கல்வி மற்றும் உட்கட்டமைப்பில் முதலீடு செய்கிறோம்.

நாட்டின் வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கு இணையாக வளர வேண்டும் எனில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மண்டலங்களுக்கு அமைதி தேவைப்படுகிறது. இந்த மாநிலங்களில் சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்னெடுப்புகள் மேலும், முன்னே கொண்டு செல்லப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்து நிகழ்வுகள் நமக்குக் கவலை தருகின்றன. இந்த நெருக்கடியான காலத்தில் பிளவு அரசியல் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. ஜம்மு காஷ்மீரின் நீண்ட கால நலனை மனதில் கொண்டு, மாநிலத்தின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்று சேருமாறு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முறையிடுகிறேன்.

ஸ்ரீஅமர்நாத் புனிதத் தலம், எல்லா இந்தியர்களும் முன்னேறி நடை போட ஊக்கப் படுத்துகிறது. நமது சமயசார்பற்ற மரபுக்கு இந்தத் தலம் ஒளி வீசும் உதாரணம் - பல ஆண்டுகளாக, இந்து யாத்ரிகர்களை முஸ்லிம் சகோதரர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள். இந்தப் புனித இடம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக யாத்திரிகளுக்கு இன்னும் மேலான வசதிகள் செய்து தரும் பிரச்சினை, அமைதி மற்றும் இணக்கமான சூழ்நிலையிலேயே தீர்க்கப்பட முடியும். மதரீதியாக மக்களைப் பிரிவு படுத்துதல் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்; நமது நாட்டின் ஒற்றுமை மட்டும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும். மாநிலத்தில் அமைதி கொண்டு வர ஒத்துழைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மக்களை வேண்டிக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் மட்டுமே எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட முடியும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

சகோதரர்களே சகோதரிகளே, நமது தொன்மையான இமயமலை மண்டலம் சுற்றுச்சூழல் அபாயத்தில் உள்ளது. இமயத்தின் பனிக்கட்டிகள் குறைந்து போனால், நமது புனித நதிகளில் நீர்வரத்து குறைந்து போகும். பருவநிலை மாற்றம் பலவழிகளில் நமது பொருளாதாரத்தில் தடைகளை உண்டாக்கும். நமது கடற்கரையோரப் பகுதிகளில் சில, மூழ்கிப் போக நேரிடலாம். நமது பருவமழைக் காலம் மாறிப் போகலாம். எத்தகைய அச்சுறுத்தலுக்கு நீண்ட காலத் தீர்வு தேவை. இத்தகைய பிரச்சினைகளைக் கையாள திறமையான கொள்கைகளை வடிவமைக்க அரசுக்கு, தேசிய கருத்தொற்றுமை தேவை.

பருவநிலை மாற்றத்தின் மீது தேசிய செயல் திட்டம் ஒன்றை நமது அரசு கொண்டு வருகிறது. நமது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும், நமது இயற்கை வளங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும், நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து கார்பன் வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருத்தல் உள்ளிட்டவற்றை இந்த திட்டம் நமக்குக் காட்டுகிறது.

எனது சக குடிமக்களே.. தெற்கு ஆசியாவில் அமைதியான நிலையான வளமான அண்டை நாடுகளைக் கொண்டிருப்பதே நமது இலக்காகும். நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நமது நாட்டிலும் நமது மண்டலத்திலும் சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முயல்கிறோம். இந்தக் கோட்பாடுகளின் மீது தான் நமது வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது.

நமது அண்டை நாடுகளுக்கு நல்லதையே விரும்புகிறோம். நமது அண்டை நாடுகளில் குறிப்பாக பூட்டான், நேபாளம், பாகிஸ்தானில் ஜனநாயக சக்திகள் வலுப்பெறுவதை வரவேற்கிறோம். சமீபத்தில் காபூல் நகரில் நமது தூதரகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, இந்த மண்டலத்தில் நீண்ட கவுரவமான அமைதியைக் கொண்டு வருவதில், பாகிஸ்தானுடன் இயல்பான உறவை மேற்கொள்வதில் நாம் எடுத்து வரும் முயற்சிகளின் மீது நிழலைப்படர விட்டு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனது கவலையை, ஏமாற்றத்தை பாகிஸ்தான் அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளேன்.

பயங்கரவாத பிரச்சினையை சரி செய்யாவிட்டால், நம் இருநாட்டு மக்களும் அமைதியாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்கிற நமது நல்ல விருப்பங்கள் தோற்றுப்போகும். நாம் மேற்கொள்ள விரும்பும் அமைதி முன்னெடுப்புகளைத் தொடர முடியாமல் போகும். பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்போரும், இந்திய பாகிஸ்தான் மக்களிடையே நல்லுறவுக்கு உலகின், இந்த மண்டலத்தின் அமைதிக்கு எதிரிகளாவர். இவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் நாம், வல்லரசுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தி இருக்கிறோம். நமது தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, இந்த திசையில் நமது முயற்சிகளைத் தொடர்வோம். உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இன்று இந்தியா பார்க்கப்படுகிறது. உலகம் முழுதும் இந்தியவம்சாவளியினர் பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர்; அவர்களது திறமை உலகம் முழுதும் அங்கீகரிக்கப் படுகிறது. இவர்களின் சாதனைகள் நமக்கு ஊக்கம் தருகின்றன. உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனக்கான இடத்தைப் பெற வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. இது நமக்கு நல் வாய்ப்புக்கான நேரம்.

உலக நாடுகள் மத்தியில் நமக்கு உரித்தான இடத்தை மீண்டும் பெறுவதில் விரைந்து முன்னேறி வருகிறோம். ஆனால் இந்த இலக்கை எட்ட, உள்நாட்டில் நாம் நிறைய செய்தாக வேண்டும். நான் குறிப்பிட்ட எல்லா சவால்களையும் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள், வெவ்வேறு சமூகங்கள், பணக்காரர் ஏழை உள்ளிட்ட சமுதாயத்தின் எல்லாப் பிரிவுகளுக்கு இடையிலும் மேலும் மகத்தான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

நமது இயற்கை மற்றும் நிதி வளங்களை மேலும் சாமர்த்தியமாய் நிர்வகிக்க வேண்டும். நமது எதிர்கால தலைமுறைக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேர்தலுக்குமாக (மட்டுமே) சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. நமது குழந்தைகளின், பேரக்குழந்தைகளின், அவர்களது பேரக்குழந்தைகளின், எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு தேசமாக சேர்ந்து உழைப்பதற்கு, நம் மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக உறுதியுடன் உழைப்பதற்கு நாம் தீர்மானித்துக் கொண்டால், நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. ஒன்றாய் சேர்ந்து நிற்க, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுவாக்க, நாம் கனவு காணும் புதிய இந்தியாவை கட்டமைப்பதில் வைராக்கியத்துடன் உறுதியாய் நிற்க இன்று நாம் அனைவரும் தீர்மானமாய் உறுதி கொள்வோம்.

எனது அன்பான குழந்தைகளே, என்னுடன் இணைந்து கூறுங்கள்: ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 61 - ‘அனைவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ | 2007

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

44 mins ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்