ரஜினி அரசியல்: 24- ஆன்மிக குருவின் மரணம்

By கா.சு.வேலாயுதன்

ரஜினியின் மீது காழ்ப்பு கொண்டவர்கள், எதிர்நிலையாளர்கள், 'இனி ரஜினி அவ்வளவுதான். அவர் படம் ஓடாது!' என்றெல்லாம் கூட பரவலாகப் பேசத் தொடங்கினர். படம் பலத்த நஷ்டம் என்பதை மீடியாக்கள் மூலம் பேட்டிகளும் அளித்தனர் சிலர். இதை அறிந்த ரஜினி தன்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று சொல்லி 'பாபா' படத்தின் மூலம் நஷ்டமடைந்தவர்களை நேரடியாக அழைத்துப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

இப்படி அனைவருக்கும் பல கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டது. உலக சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும், தயாரிப்பாளரும் செய்திராத காரியத்தை ரஜினி செய்திருக்கிறார். மிகவும் தாராள மனதுடன் அவர் நடந்து கொண்டிருக்கிறார். நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று இந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர்கள் புகழாரமும் சூட்டினர். 27.09.2002 தேதியன்று இந்த விஷயத்தை பத்திரிகை நிருபர்களை சந்தித்து பகிர்ந்து கொண்டனர் 'பாபா' பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள்.

''திரை உலகில் உள்ள அனைவருக்கும் முன்னோடியாக ரஜினிகாந்த் தாராள மனதுடன் நடந்து கொண்டிருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் எங்களை அழைத்தார். 'பாபா' படம் வாங்கியவர்கள் ஒரு பைசா கூட நஷ்டம் அடையக்கூடாது. யார், யாருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ, அதன்படி எல்லா பணத்தையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். 'பாபா' படம் விற்ற பணம் அப்படியேதான் இருக்கிறது. அதில் இருந்து நான் ஒரு பைசா கூட தொடவில்லை. முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்பட்டால்தான் எனக்குத் தூக்கம் வரும் என்று சொன்னவர் அப்படியே செய்தார். அவர் சொன்னபடி 110 தியேட்டர் உரிமையாளர்கள், 10 விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் திருப்பிக் கொடுத்தும் விட்டார். உப்பிட்ட தமிழ் மண்ணை ரஜினி மறக்க மாட்டார்'' என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

'பாபா' படம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலாகியது. இங்கே இப்போது பீக்கில் உள்ள இளம் நடிகர்கள் படங்கள் ரூ.20 கோடி வசூலித்தால் அது மாபெரும் வெற்றிப் படமாக கருதப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் வேடிக்கையான இன்னொரு அரசியல் விஷயம் நடந்தது. அதாவது ரஜினியின் மறைமுக பின்புலத்துடன்தான் 1996-ல் உருவானது தமாகா கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அக்கட்சி 'பாபா' படம் ரிலீஸான (14.08.2002) அன்று மாலைதான் தன் தாய்க்கட்சியான காங்கிரஸுடன் இணைந்தது. மதுரை ரிங்ரோடு, பாண்டி கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இதற்கான இணைப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டார். ஆறாண்டுகளாக (1996-2002) தனித்து செயல்பட்டு வந்த அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அதில் இணைந்தனர்.

தன்னால் தன் கண்முன்னே அதீத சக்தி அரசியல் ததும்ப எழுச்சியுடன் எழுந்து பீடு நடைபோட்டு நகர்ந்து காணாமல் போன அண்ணாமலை 'சைக்கிள்', 'கை'யுடன் இணைவது குறித்து கூட ரஜினிகாந்த் ஒற்றை அரசியல் வார்த்தை உதிர்க்கவில்லை. மீடியாக்கள் கூட அதையும் இதையும் தொடர்புபடுத்தி எழுதவில்லை.

இது 'பாபா' படம் வெளியான நாளன்று நடந்த வேடிக்கையான அரசியல் நிகழ்வு என்றால் அதே நாளில் வேதனையான ஒரு சம்பவமும் நடந்தது. அதுதான் ரஜினியின் ஆன்மிக குருவான சுவாமி சச்சிதானந்த மகராஜ் மரணம். (ரஜினி தன் 'பாபா' பட வெளியீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து ஒருவரை வரவழைத்தார். நன்றாக இருந்தவர் செத்துப்போனார். அவர் நம் தமிழர்தான் என்று ராமதாஸ் மரக்காணம் அருகே பேட்டியில் சொல்லியிருந்தாரே! அது இவரை குறிப்பிட்டுத்தான்)

நடிகர் ரஜினிகாந்தின் குருவும் 'பாபா' படம் வெளியாக முக்கிய காரணமாகவும் இருந்தவர்தான் சச்சிதானந்த மகராஜ். கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தனது 35 வயதிலேயே அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் விர்ஜினியாவில் மிகப் பெரிய ஆசிரமத்தை அமைத்துள்ளார். இந்த ஆஸ்ரமத்துக்கு ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக சென்று வருகிறார். தனது குருவாகவும் சச்சிதானந்த சுவாமிகளை ரஜினி ஏற்றுக் கொண்டிருந்தார்.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த ரஜினியை 'பாபா' படம் எடுக்கச் சொன்னதே சச்சிதானந்த சுவாமிகள்தான் என்பது ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தின் பேச்சாக அப்போது இருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் 'பாபா' படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் அமெரிக்காவில் இருந்து சுவாமிஜி சென்னைக்கு அழைக்கப்பட்டார். அவரின் கையாலேயே 'பாபா' படம் 2002, ஆகஸ்ட், 14-ம் தேதி பூஜை போடப்பட்டு சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதன் பின்னரே அடுத்த நாள் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் படம் வெளியானது.

14-ம் தேதி பூஜை நடத்தி முடித்தபோதே சச்சிதானந்த சுவாமிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சையும் தரப்பட்டது. இதற்கடுத்த நாள் சச்சிதானந்த சுவாமிகளுக்கு திடீரென மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணச் செய்தி அறிந்தவுடன் உடனே தனது மனைவி லதாவுடன் மருத்துவமனை சென்று மரியாதை செலுத்தினர் ரஜினி. 'நான் எங்கு இறந்தாலும் என் உடலை விர்ஜீனியாவில் உள்ள லோட்டஸ் ஆஸ்ரமத்துக் கொண்டு சென்றுவிட வேண்டும்!' என்று ஏற்கெனவே சொல்லியிருந்த சச்சிதானந்த மகராஜ், தனக்காக அங்குள்ள ஆசிரமத்தில் ஒரு சமாதியை தயார் நிலையில் வைத்திருந்தார். அங்கேயே தன் உடலுடன் சில பொருட்களையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என அவர் சொல்லியிருந்ததால் அவரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சுவாமிகளின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் நடைபெற்றது.

இதற்காக அவரது உடல் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது. அதற்காக ரஜினியும் அமெரிக்கா சென்றார். 'பாபா' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை இந்த சுவாமிகளின் பேரனுக்குத்தான் ரஜினி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இந்த சச்சிதானந்த மகராஜ் 'பாபா' படத்தை சென்னையில் பூஜை போட்டு ரிலீஸ் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடந்த உலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர்தான் ரஜினியை 'பாபா' படம் எடுக்க தூண்டியவர் என்பதை அறிந்து நிருபர்கள் மொய்த்துக் கொண்டனர்.

அப்போது மிகவும் ஜாலியாக பேட்டியும் கொடுத்தார். 'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்பது பழமொழி. தற்போது ஆவதும், 'பென்' (pen)னாலே, அழிவதும் 'பென்' (pen)னாலே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலையங்கங்கள் மூலம் நாட்டின் தலையெழுத்தையே எழுதுபவர்கள் பத்திரிகையாளர்கள்தான். அதில் நல்ல விஷயங்களை எழுதினால் நாட்டில் நல்லது நடக்கும். கெட்ட விஷயங்களை எழுதினால் கெட்டதுதான் நடக்கும். நல்லது நடப்பது குறைந்துவிட்டது. அதனால்தான் தேவையில்லாமல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள்தான் நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை எழுத வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்தவர், நிருபர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் நின்று நிதானித்து பதில்களை சொல்ல ஆரம்பித்தார்.

ரஜினி படங்களில் நடிப்பது குறைந்து வருவது ஏன்?

''இப்போது கூட படத்தில் நடிப்பது பற்றி ரஜினி முடிவு செய்யாமல் இருந்தார். அமெரிக்காவிற்கு வந்து மூன்று வாரங்கள் என்னுடன் தங்கியிருந்த போது ''நல்ல கதையுள்ள படங்களின் வரவு குறைந்து விட்டது. நீயும் படத்தில் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. நல்ல கதையுள்ள, மக்களுக்கு பயனுள்ள படம் பண்ணு என்று சொன்னேன். அப்புறம்தான் பாபா படத்தை எடுக்க ஆரம்பித்தார்'' என்று சச்சிதானந்த மகராஜ் தெரிவித்தார்.

- பேசித் தெளிவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

15 hours ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்