செங்கோட்டை முழக்கங்கள் 58 - ‘நீர்வள மேலாண்மையின் சவால்களை உணர வேண்டும்’ | 2004

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பிரதமர்களைத் தந்த அரசியல் கட்சி காங்கிரஸ். நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ்.. வரிசையில் ஆறாவது நபராக இணைந்தார் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங். மேற்சொன்ன அறுவரில் மூவர் - 'மக்கள் தலைவர்' என்கிற அடைமொழிக்குள் அடங்காமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த குணநலன்களைக் கொண்ட திறமையான தலைமை நிர்வாகிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பொருளாதார நிபுணரைத் தனது அரசில் நிதி அமைச்சராக நியமித்தார் நரசிம்ம ராவ். இந்த இருவரின் கூட்டணி, இந்தியப் பொருளாதாரத்தில் கொண்டு வந்த அதிரடி சீர்திருத்த மாற்றங்கள் மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டன. அந்த வகையில் டாக்டர் மன்மோகன் சிங், பிரதமர் பொறுப்புக்கு மிகப் பொருத்தமானவராக விளங்கினார். பேச்சில் மென்மை - அவரது தனி அடையாளம். 2004 ஆகஸ்ட் 15 அன்று, தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய முதல் செங்கோட்டை உரை இதோ:

அன்பார்ந்த நாட்டு மக்களே, சகோதரிகளே சகோதரர்களே அன்பார்ந்த குழந்தைகளே.. இந்த சுதந்திரதின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த நாளில் மூவண்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறோம். உயரே நீலவானில் நமது கொடி பறப்பதைக் கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறோம். அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்ற, மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையின் கீழ் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து போராடிய அனைவரையும் இன்று நாம் நினைவு கூர்கிறோம்; மரியாதை செலுத்துகிறோம். துணிச்சல் மிக்க உறுதி கொண்ட நமது வீரர்கள், பாதுகாப்பு படையினருக்கு நன்றி செலுத்துகிறோம். விவசாயிகள் தொழிலாளர்கள் ஆசிரியர்கள் தொழில்முறை நிபுணர்கள் விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நமது நேசத்துக்குரிய பாரதத்தின் கட்டமைப்பில் ஏதோ ஒரு வகையில் பங்களித்து வருகிறோம். நாம் கட்டமைக்க விரும்பும் பாரதம் எது..? மனிதாபிமானம் கொண்ட நேர்மையான பாரதம்; தனது குடிமக்கள் அனைவரையும் சமமாக பாவிக்கிற பாரதம்; வளமையான பாரதம்; அமைதியான பாரதம்; ஒவ்வொரு குடிமகனும் படித்தவராய் ஆரோக்கியம் கொண்டவராய் வாழும் பாரதம்; ஒவ்வொருவரும் தான் தேடும் வேலையைப் பெற்று, நம் எல்லோரின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உழைப்பைத் தருகிற பாரதம். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

உங்கள் முன் நான் நிற்கும் இந்தத் தருணத்தில், 1948ம் ஆண்டு சுதந்திர நாளன்று நமது முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையில் சில சொற்களை நினைவு படுத்திப்பார்க்கிறேன். அந்த சமயம் நான் ஓர் இளவயது மாணவனாக இருந்தேன். நமது கனவுகளுக்கான பாதையைத் திறந்து விடும் புதிய இந்தியாவின் விடியலாக அதைப் பார்த்தேன். பண்டித நேரு கூறினார்: ' நாம் எல்லோரும் இந்தியாவைப் பற்றி பேசுகிறோம்; இந்தியாவிடம் இருந்து பலவற்றை எதிர்பார்க்கிறோம். பதிலுக்கு நாம் என்ன வழங்கப் போகிறோம்..?' இந்தக் கேள்வியை எழுப்பி விட்டு நேரு கூறினார்: 'அன்புடன் சேவை மனப்பான்மையுடன் ஆக்கபூர்வ பணியாக நாம் எதைத் தருகிறோமோ அதையே நிறைவாக இந்தியா நமக்குத் தரும். நாம் எப்படியோ, அப்படியே இந்தியாவும் இருக்கும். நமது சிந்தனைகளும் செயல்களுமே இந்தியாவை வடிவமைக்கும்.'

நண்பர்களே.. நீங்கள் வயல்வெளிகளில் தொழிற்சாலைகளில் பள்ளிகளில் கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் கடைகளில் ஆய்வுக்கூடங்களில்... எங்கு பணிபுரிந்தாலும், பண்டித நேருவின் இந்த சொற்களை எப்போது நினைவில் கொள்ளுங்கள். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இந்த நாடு இருக்கும். நாம் நம்மை எவ்வாறு மாற்றிக் கொள்கிறோமோ, நமது நாடும் அவ்வாறே மாறும்.

சகோதர சகோதரிகளே.. ஒவ்வொரு செங்கல் ஆகத்தான் கட்டிடம் எழுகிறது. பல ஆயிரம் செங்கற்கள் சேர்ந்து ஒரு கட்டிடம் உருவாகிறது. இப்படித்தான், பல லட்சம் மக்களின் ஒன்றுபட்ட உழைப்பே தேசத்தை வடிவமைக்கிறது. தேச நிர்மாணம் என்கிற என்கிற தொடர்வினை - படைப்பாற்றல் மற்றும் சாதனைக்கான உத்வேகத்தால் ஆனது. நமது தாய் நாட்டின் மீது நாம் கொண்ட பாசத்தால் பிணைக்கப்பட்டு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவது தேவை ஆகிறது. இந்த நேசம், நாம் இந்தியர் என்று அடையாளத்தில் இருந்து உதிக்கிறது. நமது மதம் மண்டலம் மொழி சாதி கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்; இந்தியா - நமது தேசம்.

நமது பலம் - வேற்றுமையில் ஒற்றுமை. மதச்சார்பின்மை, சமூக நீதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோட்பாடுகளே இந்த தேசத்தை வரையறுக்கிறது. இன்று, இந்த நாளில், இந்த நாட்டின் சேவைக்கு, குறிப்பாக வாய்ப்புகள் கிடைக்கப்படாத அந்த துரதிஷ்டசாலிகளுக்கு சேவை செய்ய நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்கிறோம். இந்த சுதந்திர தினம் பருவகாலத்தின் மத்தியில் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கே கூடுகிற போது, செங்கோட்டையில் மூவண்ணக் கொடி ஏற்றப்படும் போது, மேலே அண்ணார்ந்து மேகங்களைப் பார்த்து 'மழை வருமோ..?' என்று யோசிக்கிறோம். இந்த ஆண்டும் ஆர்வத்துடன் வானத்தைப் பார்க்கிறோம்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள ஆந்திரா சென்றேன். தாள முடியாத கடன் சுமையால் தம் வாழ்வை நீத்த குடும்பத் தலைவர்களின் உறவுகளின் கரம் பிடித்து ஆறுதல் சொல்லப் போனேன். பல மைல் தூரத்துக்கு எங்கும் தண்ணீரே தென்படவில்லை. வெள்ளத்தால் வாழ்விடத்தை விட்டு வெளியேறிய மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள அசாம், பிஹார் சென்றேன். முடிவின்றி பல மைல் தூரத்துக்குத் தண்ணீரை மட்டுமே பார்க்க முடிந்தது. நமது கிராம மக்களை, தொடர்ந்து இன்னல் தருகிற இரண்டு அடிப்படை பிரச்சினைகளாக வறட்சியும் வெள்ளமும் இருந்து வருகின்றன. இந்த நிரந்தர பிரச்சினைகளைக் கையாள ஒன்றுபட்ட செயல்பாடு தேவை. இதற்காக நமது அரசு ஏற்கனவே சில முயற்சிகளை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இன்னமும் பல முயற்சிகளை எடுக்க இருக்கிறோம்.

உள்ளூரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து மக்களை வெளிக்கொண்டு வர வேண்டும். தண்ணீர் சேமிப்பு மற்றும் வேளாண்மை தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நமது மக்களை தயார்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், ஒவ்வொரு ஆற்று படுகையின் பிரச்சினைகளையும் தீர்க்கும் விதத்தில் நீர்ப்பாசன முறையில் முதலீடுகளை அதிகரிக்க உறுதி கொண்டுள்ளோம்.

தண்ணீர் - ஓர் இயற்கை வளம். நமது நாட்டின் நீர் வளம், நமது தேவைகள், கொள்கைகள் மற்றும் தண்ணீர் பயன்பாட்டு வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைந்த பார்வை வேண்டும். குறைந்த அளவே உள்ள நீர்வளத்தை சமமாகப் பங்கிட்டுப் பயன்படுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக நமது புனித ஆறுகளின் தண்ணீர் நமது நாகரிகத்தை வளர்த்து வருகிறது. நமது நாட்டின் ஊரே சென்று நம்மை இணைக்கும் கயிறு இது. இந்தத் தண்ணீர் நம்மைப் பிரிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. நீர்வள மேலாண்மையின் சவால்கள் குறித்த ஒட்டுமொத்த தேசிய பார்வையைக் கொள்ளுமாறு உங்களையும் எல்லா அரசியல் தலைவர்களையும் வேண்டுகிறேன்.

தண்ணீர் பிரச்சினையை கையாளுதல் மிக முக்கியமானது. அதனால், கிராம இந்தியாவுக்கு புதிய ஒப்பந்தம் (New Deal for Rural India) என்கிற திட்டத்தில் இதனை சேர்த்து உள்ளோம். கிராமப் பகுதிகளில் கடன் வழங்குதல் குறித்தும் சில முயற்சிகள் எடுத்துள்ளோம். இந்த புதிய திட்டத்தில், நீர்ப்பாசன முதலீடு, கடன் வழங்கல், சுகாதார உதவி, மின்சாரம் கிடைக்கச் செய்தல், தொடக்கக் கல்வி, கிராமப்புற சாலைகள், விவசாய கட்டுமானங்களை நவீனப்படுத்துதல் ஆகியன அடங்கும்.

வறண்ட நில சாகுபடி, பயிர் மாற்று சாகுபடி, நுண் பாசனம், கால்நடைகளின் தரம் ஆகியவற்றில் இன்னும் கூடுதலாக நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கிராமத் தொடர்பு வசதிகளை மேம்படுத்தி மேலும் தகவல்கள் கிடைக்க வழி செய்தால் விவசாய சமூகம் மேலும் வளம் பெறும். தனியார் நிறுவனங்கள் மற்றும் சமுதாயப் பங்களிப்பின் மூலம் அரசின் முயற்சிகளுக்கு வலுவூட்ட முடியும்.

நண்பர்களே.. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி, 'வறுமையை ஒழிப்போம்' என்று குரல் கொடுத்தார். ஓரளவுக்கு வறுமை நிலையைக் குறைத்துள்ளோம். இன்னமும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. நமது பொருளாதாரத்தை தாராளமயம் ஆக்கிய போது நவீனமயம் ஆக்கிய போது தனியார் நிறுவனங்கள் வளர அனுமதிக்கிறபோது, வறுமை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்; பட்டியல் சாதியினர் பழங்குடியினர் இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரம் பெறும் வகையில் இருத்தல் வேண்டும். பழங்குடியினர் பகுதிகளை முன்னேற்றும் திட்டங்கள், அவர்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பு அளிப்பவையாக இருத்தல் வேண்டும்.

மகளிருக்கு அதிகாரம் வழங்குதல் முன்னுரிமை பெறும். இதற்கு பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குதல் முக்கியமாகும். நமது குழந்தைகளே நமது எதிர்காலம். நாம் கொள்கைகளை வடிவமைக்கிற போது எதிர்கால சந்ததியின் நலன்களை மனதில் கொள்ள வேண்டும். நமது குழந்தைகளின் முறையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு ஏற்ற சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். இவர்களின் கல்வி சுகாதாரம் மற்றும் சத்தான உணவில் முதலீடு செய்யும். ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான தேசமாகும்.

வேலைக்கான தேவை இருக்கும் அளவுக்கு புதிய வேலைகள் தோன்றுவதில்லை. இந்தக் குறைபாட்டை அரசு நிவர்த்தி செய்யும். அதிக வேலை வாய்ப்பு கொண்ட சிறு குறுந்தொழில்கள் வேளாண் தொழில்கள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை இந்த அரசு ஊக்குவிக்கும். கிராமப் பகுதிகளில் முக்கியமாக நீண்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டியது மிக அவசரத் தேவையாகும். இந்தச் சவாலைக் கையாள உணவுக்கு வேலை திட்டம் மிக முக்கியமானதாய் இருக்கும். கட்டுமானத்துறையில் புதிய முதலீடுகள் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

விரைந்த வளர்ச்சிக்கான நமது அணுகுமுறை, வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதாக இருக்கும். மேலும் விரைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் - சமூக நீதி சமூக நல்லிணக்கம் கிராமப்புற வளர்ச்சி மண்டல சமநில (regional balance) மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறைக்கு முக்கியத்துவம் தருவதாய் இருக்கும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. தேசிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் மூலம் நான், அதிக கவனம் செலுத்த வேண்டிய ஏழு முன்னுரிமைத் துறைகளை அடையாளம் கண்டுள்ளேன். இவை: விவசாயம் தண்ணீர் சுகாதாரம் வேலை வாய்ப்பு நகர புத்தாக்கம் மற்றும் கட்டுமானம். மேலும் விரைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மேலும் சமமான சமூக பொருளாதார முன்னேற்றம் காண நாம் கடந்து செல்ல வேண்டிய முன்னேற்றப் பாலத்தின் ஏழு தூண்களாக இந்த ஏழு துறைகள் இருக்கின்றன.

விவசாயம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதே பெரும்பாலான குடிமக்களின் அக்கறையாக இருக்கிறது. நமது நாட்டின் முன்னேற்றத்தில், மின்சாரம் சாலைகள் ரயில்வே துறைமுகங்கள் மற்றும் விமான நிலையக் கட்டுமானங்களில் நாம் என்ன செய்கிறோம் என்பதே மிகவும் முக்கியமாகும்.

நமது அரசின் திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகள், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய முதல் உரையில், சமீபத்தில் நிதி அமைச்சர் ஆற்றிய பட்ஜெட் உரையில் விரிவாகச் சொல்லப் பட்டுள்ளன. இன்று நான் புதிதாகத் தருகிற உறுதிமொழி ஏதும் இல்லை; ஏற்கனவே தந்த உறுதிமொழிகளைக் காப்பாற்ற இருக்கிறேன்.

ஏற்கனவே குறிப்பிட்ட கொள்கைகளை திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சவால்தான் என் முன் உள்ள, இந்த அரசின் எல்லா நிலைகளிலும் உள்ள உண்மையான சவால் ஆகும். (The real challenge for me and for the government at all levels is the challenge of implementation of our stated policies and programmes.) நமது மக்களின் நலனுக்கான முன்னேற்றத்துக்கான திறன் வாய்ந்த அமைப்பாகத்திகழ, மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி சுகாதாரம் சாலைகள் ரயில்வே உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அரசாங்கம் துடிப்புடன் இயங்க வேண்டும்.

ஆனாலும் எதிர்பார்த்த பலன்களை அரசாங்கம் தர வேண்டும் எனில், அரசாங்கத்தின் (அரசுத் துறைகளின்) செயல்பாடுகளை சீர்திருத்த வேண்டும். அரசுப் பணியாளர்கள் மேலும் பொறுப்பு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்; அரசாங்கத்தில் மேலும் வெளிப்படைத் தன்மை வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் திறன் வாய்ந்ததாய் இருத்தல் வேண்டும். தமக்கு மேலும் உரிய முறையில் பதில் சொல்கிற அரசாங்கம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொது விவகாரங்களில் திறமை தூய்மை குறித்த அக்கறை பொதுமக்களிடம் தெரிகிறது.

அன்பார்ந்த குடிமக்களே, பொது வாழ்வில் நெறிமுறைகள் (நேர்மை) - பொதுமக்களை அவ்வப்போது விவாதிக்க வைக்கிறது. இதனை, சாசனத்தின்படி சட்டங்களின்படி நிர்வாக ரீதியாகக் கையாள முயன்று வருகிறோம். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நடத்தை விதிமுறைகள், பொது வாழ்வில் எல்லா தனிநபர்களுக்கும் நன்னெறி விதிமுறைகள், எல்லா நிலைகளிலும் அரசாங்க நடைமுறைகளில் நெறிமுறைகளை ஒத்த கருத்துடன் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தப் புனிதமான தருணத்தில், நமது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களை காப்பாற்றும் வகையில், ஒருமித்த கருத்துடன் நடத்தை விதிகளை உருவாக்க இன்று நாம் தீர்மானம் கொள்வோம்.

நமது கட்சிகளுக்கு உள்ளே நாம் பார்க்க வேண்டும்; நமக்குள்ளேயே நாம் பார்க்க வேண்டும்; கேட்டுக் கொள்ள வேண்டும் - பொது வாழ்வில் விழுமியங்கள் தேய்ந்து போக அடிப்படைக் காரணம் என்ன? நமது பொது நிறுவனங்களை நமது அரசியல் கட்சிகளை வெவ்வேறு நிலைகளில் நமது அரசாங்கத்தை எவ்வாறு சீர்திருத்தப் போகிறோம்? சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பொருளாதார சீர்திருத்தங்களை நாம் தொடங்கிய போது, அரசு நிர்வாகத்தின் பிடியிலிருந்து தனியார் நிறுவனங்களை விடுவித்தோம். தனியார் நிறுவனங்கள், தனிநபர் முயற்சிகளுக்கான இடத்தை தொடர்ந்து அகலப் படுத்துவோம். (We will widen the space available for private enterprise and individual initiative.)

நம்மைப் போன்ற, வளர்ந்து வரும் நாட்டில், அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைத் தள்ளிவிட முடியாது. அரசாங்கதுக்குப் புத்துயிர் ஊட்டுவதே இன்று பொருளாதார சீர்திருத்தத்தின் சவாலாக இருக்கிறது. அப்போதுதான் அரசாங்கம் ஆற்ற வேண்டிய நேர்மறைக் கடமையை ஆற்ற முடியும்.

அரசாங்கம் என்பது என்ன..? மக்கள் பிரதிநிதிகளும் குடிமைப் பணியாளர்களும் கொண்டது அரசாங்கம். (What is government? Government comprises people's representatives and civil servants) ஆகவே அரசாங்கத்தில் சீர்திருத்தம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசில் வேலை செய்வோரின் பணியை சீர்திருத்துவதே ஆகும். அன்பார்ந்த குடிமக்களே.. இந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக, இத்தகைய சீர்திருத்தத்துக்கு ஆதரவாக உங்களிடம் இருக்கும் சக்தியை நீங்கள் ஒன்று திரட்ட வேண்டும். ஜனநாயக அமைப்புகள் மேலும் பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பஞ்சாயத்துகள் நகர அமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளோம். அதிகாரப் பகிர்வுக்கான கீழ்மட்ட ஜனநாயக அமைப்புகளை, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்டமைக்க வேண்டும். இவர்களுக்கு தேவையான நிதி, நிர்வாக அதிகாரங்களைத் தருவதால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இன்று நாம் பஞ்சாயத்து ராஜ் மூலம் அதிகாரப் பகிர்வு கொண்ட அரசாங்கத்தைத் திறமையாகப் பயன்படுத்தினால் (மட்டுமே) தொடக்கக் கல்வி பொது சுகாதாரம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்கும் சேவையை சிறப்பாகச் செய்யும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை நம்மால் எடுக்க முடியும்.

அரசாங்கத்தை பஞ்சாயத்து நிறுவனங்களை சீர்திருத்த வேண்டும் என்று நாம் பேசுகிற போது ராஜீவ் காந்தி நம் நினைவுக்கு வருகிறார். இவ்விரு துறைகளிலும் அவர்தான் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டார். மேலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அப்போதுதான் புதிதாய்த் தோன்றிய எலக்ட்ரானிக் மற்றும் கணினி புரட்சி யை தேசத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். நமது நாட்டு இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உற்சாகமாகப் பங்கேற்று இந்தியாவை தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் சக்தியாக ('IT super power') உயர்த்தி இருக்கிறார்கள். இது ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு நாம் செய்யும் அஞ்சலி.

தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது என்பது மனநிறைவைத் தருவதாய் உள்ளது. சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்த நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தில் தேவையான முதலீடுகளை செய்து இணைய வசதியை மேம்படுத்துவோம்.

அதிகாரம் மற்றும் சொத்துக்கான முக்கிய அடையாளமாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். 21-ஆம் நூற்றாண்டில் தனக்கான தனி இடத்தை இந்த நாடு பெறவேண்டும் எனில், நம்முடைய முன்னேற்ற நடவடிக்கைகள் அனைத்திலும் அறிவியல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது அவசியம் ஆகும். அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துதல் உண்மையில் ஒரு மிகப்பெரிய தேசிய இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.

உயர்கல்வி என்பது, அரசு நிர்வாகத்தின் அல்லது ஏதோ ஒரு தத்துவத்தின் சிறைக் கைதியாக இருக்க முடியாது. தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் அறிவு நேர்மையின் அடிப்படையில் அது முன்னேற வேண்டும். நமது எல்லா கல்வி நடவடிக்கைகளிலும் நிபுணத்துவத்துக்கான தேடல் மற்றும் சமூக சமத்துவத்துக்கான அக்கறை இருந்தாக வேண்டும். அடித்தட்டு மக்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் கல்வியின் முக்கியத்துவத்தை, வெகு நாட்களுக்கு முன்பே வணக்கத்துக்குரிய டாக்டர் அம்பேத்கர் அங்கீகரித்துப் பேசினார்: வாழ்வியல் ஆதாயங்களைத் துறக்கலாம்; ஆனால் மிக உயர்ந்த நிலைக் கல்வியின் பலன்களை முழுமையாகப் பெறுகிற நம்முடைய உரிமை மற்றும் வாய்ப்புகளைத் துறந்து விட முடியாது.' ("We may forego material benefits but we cannot forego our right and opportunities to reap the benefit of the highest education to the fullest extent.")

அன்பார்ந்த நாட்டு மக்களே.. நமது நாடு மிகப் பெரியது; இங்குள்ள பல மாநிலங்கள், அளவில் உலகின் பல நாடுகளை விடப் பெரியவை. வளர்ச்சியின் பயன்கள் இந்த நாட்டின் எல்லா மூலைகளையும் சென்றடைய, மத்திய அரசும் மாநிலங்களும் கூட்டுறவுக் கூட்டாட்சி உணர்வோடு செயல்பட வேண்டும். நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் மாநிலங்களுக்கு உதவுதல் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனாலும் வளர்ச்சி சமூகநீதி மற்றும் மக்கள் நலனை மேம்படுத்த மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் ஏராளமாய்ச் செய்யலாம். தங்களால் இயன்ற அளவுக்கு வளங்களைப் பெருக்கலாம். இதே போன்று முக்கியமானது - அரசாங்கத்தின் தரம் மற்றும் திறனில் அக்கறை செலுத்துவது.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் துன்பத்தைப் போலவே, பின்னடைந்த மண்டலங்களின் மெதுவான வளர்ச்சி விகிதமும் என்னைக் கவலையுறச் செய்கிறது. குறைந்த முன்னேற்றம் கண்டுள்ள மண்டலங்களில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்போம். அங்குள்ள வளர்ச்சிப் பாதைகளை வலுப்படுத்த உதவுவோம். ஜம்மு காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றத்துக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்துவோம். இங்கு, முன்னேற்ற நடவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இந்த மண்டலங்களில் உள்ள இளைஞர்கள் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்காலத்தை அணுகுவார்கள். புதிய முதலீடுகளை ஊக்குவித்து ரயில் மற்றும் சாலைத் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த மண்டலங்கள் பயன் பெறும்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகள் நமது நாட்டின் மிக அழகிய மண்டலங்களாகும். முன்னேற்றத்துக்கும் சுற்றுலாவுக்கும் ஏற்ற சூழலை இங்கே ஏற்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த மண்டலங்கள் இன்னும் அதிக வளம் பெறும். அமைதி, சமூக அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியன பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியம் ஆகும். மக்கள் இத்தகைய அமைதி, ஸ்திரத்தன்மையை விரும்புகிறார்கள். அப்போதுதான் அவர்களால் பாதுகாப்பான இயல்பான வாழ்க்கை நடத்தி, இயல்பாக வேலை செய்து, வாழ்க்கையை நல்லபடியாக அனுபவிக்க முடியும்.

இயல்பு வாய்க்கையை பாதிக்கும் முயற்சிக்கும் அனைத்து தேசவிரோத சமூக விரோத சக்திகளையும் நாம் எதிர்த்துப் போரிட வேண்டும். அவர்கள் பயங்கரவாதிகளாக, மதவாதிகளாக, மற்ற பிற - பிரிவினை சக்திகளாக இருக்கலாம். பயங்கரவாதம் - நமது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்; நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை எதிர்க்க வேண்டும். எந்த சமுதாயத்திலும் வன்முறை, வளமைக்கும் வளர்ச்சிக்கும் உதவியதே இல்லை. இந்த தீமையை நாம் வைராக்கியத்துடன் எதிர்த்துப் போரிடுவோம். இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த ஐயமும் வேண்டாம். ஆனாலும் வன்முறைப் பாதையைக் கைவிட்டு வரும் எந்தக் குழுவோடும் பேசுவதற்கு நாம் விருப்பமாகவே உள்ளோம்.

நண்பர்களே இன்று, நமது நாட்டை விடுதலைக்கு இட்டுச் சென்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டிருந்த அதே தன்னம்பிக்கையை, புதிய சந்தைகளை புதிய வாய்ப்புகளை எதிர் கொள்வதில் நீங்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். (I want each of you to show the same degree of self-confidence that our freedom fighters showed, when they led our country to freedom, in your encounters with new markets and new opportunities.) நாம் நன்கு திறந்த சமுதாயமாக இருந்து வருகிறோம். உலகத்துக்கு நாம் திறந்த நிலையில் இருக்கிறபோதும், இந்த நாட்டின் மக்களாக நமது சுய அடையாளத்தை நாம் இழந்து விடவில்லை. காந்திஜி நமக்கு சொன்ன போதனையை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன் - "நமது நாடு வலுவான அடித்தளத்தில் எழுப்பப்பட்ட வீடு போன்றது; நமது ஜன்னல்கள் அகலத் திறந்து இருக்கட்டும்; எல்லா திசைகளில் இருந்தும் காற்று சுதந்திரமாக வீசட்டும்."

காந்திஜி சொன்னார் - "எல்லா திசைகளில் இருந்தும் எனது வீட்டுக்குள் காற்று வீசட்டும். ஆனால் அது, தரையில் இருந்து எனது கால்களை அகற்ற அனுமதிக்க மாட்டேன்." பல நூற்றாண்டுகளாக, கலாச்சார பொருளாதார ரீதியாக இதுதான் நமது உலகை நோக்கிய நமது அணுகுமுறை ஆகும். சுயசார்பு கொண்ட நவீனப் பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க விரும்புகிறபோதும் இந்த அணுகுமுறையைத்தான் நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்.

முன்னேற்றத்தை நோக்கிய இத்தகைய அணுகுமுறையே இன்று நமது மக்களின் எல்லாக் கவலைகளையும் போக்கும். நமது பொருளாதாரத்தை வலுவாக்கி அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தை வளர்ப்பதன் மூலமே உலக நாடுகள் மத்தியில் நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியும். ஜனநாயகத்திலும் முன்னேற்றத்திலும் நாம் கொண்டுள்ள உறுதி காரணமாகவே அண்டை நாடுகளுடன் மற்றும் உலகம் முழுதிலும் அமைதியுடன் வாழ விரும்புகிறோம்.

நாம் எப்போதுமே ஆசியாவில், இந்தியப் பெருங் கடல் மண்டலத்தில், நமது அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிற மக்களாகவே இருந்து வருகிறோம். பல நூற்றாண்டுகளாக, உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகளை வர்த்தகர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். நமது அறிவார்ந்த மக்கள், நமது தத்துவங்களை சுமந்தபடி சந்தைகளைத் தேடி கடல் தாண்டி பயணித்து வருகிறார்கள். இன்றும் கூட அண்டை நாட்டார் உடன் அமைதியுடன் வளமாக வாழவே விரும்புகிறோம்.

நமது படைகள், பாதுகாப்பு வீரர்களுக்கு... உங்களின் நல்வாழ்வுக்கு எங்களின் தளராத ஆதரவு, பாதுகாப்பு படைகளை நவீனப் படுத்துதலுக்கு நான் உறுதி கூறுகிறேன்.
நமது ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இவர்கள் பாராட்டத்தக்க பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; உள்நாட்டிலும், சக இந்தியர்களின் உயிர்களை, உடைமைகளைப் பாதுகாப்பதில், மீட்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு நாம் அழைக்கும் போதெல்லாம் தயாராக வந்து உதவி புரிகிறார்கள்.

பாதுகாப்பில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், வளர்ச்சிக்கான தேவைகளிலும் கவனம் செலுத்துகிறோம். நமது அண்டை நாடுகள் எல்லாருமே நம்மைப் போலவே வளரும் நாடுகள்தாம். அவர்களுக்கும் தங்கள் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். நாம் பொது எல்லைகளால் மட்டும் அல்ல; பொது இலக்கினாலும் கட்டுப்பட்டவர்கள். அண்டை நாடுகளில் அமைதி, வளமைக்கு உத்தரவாதம் - நமது முன்னுரிமைகளில் ஒன்று. நமது எல்லா அண்டை நாடுகளோடும் இன்னமும் நெருங்கிய அரசியல் பொருளாதார கலாச்சார உறவுகளைக் கட்டமைப்பதற்கு இந்த அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கும்.

பாகிஸ்தானுடன் நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பயனுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நாம் எப்போதுமே சாதகமாக இருந்துள்ளோம். பாகிஸ்தானுடன் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையை நேர்மையாக உறுதியாக முன்னெடுப்பதே நமது விருப்பம். நாம் எழுப்ப விரும்பும் சமாதானம், பரஸ்பர விசுவாசம் மற்றும் நம்பிக்கை என்கிற இரண்டு தூண்களின் மீது எழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எல்லை தாண்டி பயங்கரவாதம் மற்றும் வன்முறை, நமது முயற்சியை மேலும் கடினமானதாய் மேலும் சிக்கல் நிறைந்ததாய்ச் செய்து விடுகிறது.

சீன உறவைப் பொருத்த மட்டில், 1998-ல் ராஜீவ் காந்தியின் சீன விஜயத்தில் தொடங்கிய நேர்மறைப் போக்கு, பின்னர் இருநாட்டு உறவுகளின் போக்கில் ஒரு வலுவான அடித்தளம் அமைத்து இருக்கிறது. இந்த உறவை வலுவாக்க, விரிவுபடுத்த நாம் உறுதி பூண்டுள்ளோம். அரசியல் தொலைநோக்கு மற்றும் யதார்த்த அணுகுமுறையுடன் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம்.

எல்லா பெரிய சிறிய நாடுகளோடும் நட்புறவை நாம் மதிக்கிறோம். எல்லா நாடுகளோடும் இன்னும் நெருங்கிய பொருளாதார உறவுகளுக்கு முயற்சிக்கிறோம். நூறு கோடிக்கும் மேலான மக்கள் கொண்ட ஜனநாயக நாடாக, உலக நடப்புகளில் நேர்மறையாய்ப் பங்களித்து நியாயமான சர்வதேச ஒழுங்குமுறையைக் கட்டமைக்க முக்கிய பங்கு வகிப்போம்.

இந்திய மக்கள் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பைத் தந்து வருகிறார்கள். பிற நாடுகளில் இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் நேர்மறைப் பங்களிப்பை நாம் பெரிதும் மதிக்கிறோம். தாங்கள் வாழும் இடங்களில் இந்திய வம்சாவளியினர் நமது கலாச்சார தூதுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் மூதாதையர் நாடான இந்தியாவுக்கு அவர்கள் செலுத்தும் பங்களிப்பைப் போலவே (தற்போது) தாங்கள் வாழும் நாட்டுக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும் பெரிதும் மதிக்கிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது 'மூளை வங்கி' (Brain Bank) ஆவர். தம்மைச் சுற்றியுள்ள சூழல் இணக்கமாக இருந்தால், எந்த அளவுக்கு இந்தியர்கள் துடிப்பாக செயல்படுவார்கள் என்பதை இவர்கள் காண்பிக்கின்றனர். தேவைப்படுகிற கட்டுமானங்களை வழங்கினால், தனிநபர் முயற்சிக்கு சரியான வெகுமதி வழங்கப்பட்டால், உலகின் மிகச் சிறந்தவர்களைப் போன்று இந்தியரும் இருப்போம். (If the required infrastructure is provided and individual initiative is rewarded we Indians can be as good as the best in the world.)

உள்நாட்டில், தரத்தை அங்கீகரிக்கிற, கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றலுக்கு வெகுமதி வழங்குகிற சூழலை உருவாக்குதல் - நமது அரசின் முன் உள்ள சவால். (At home, this is the challenge for our government - to create the environment in which merit is recognized, hard work and creativity are rewarded.)

எனது அன்பான நாட்டு மக்களே சகோதர சகோதரிகளே.. உங்களின் தேவைகளை ஆசைகளை நிறைவேற்ற அரசில் உள்ள நாங்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ளன. இந்தப் பொறுப்பை நாங்கள் எங்கள் மீது ஏற்றுக் கொண்டுள்ளோம். அரசில் உங்கள் பிரதிநிதிகள் ஆக இருக்கிற நாங்கள் உங்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம். இதுதான் ஜனநாயகத்தின் சாராம்சம். மிகுந்த பணிவுடன் இந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு உள்ளேன்.

ஆனாலும் அரசுகளின் அதிகாரத்தை விட மக்களின் அதிகாரம், வரம்பின்றிப் பெரியது. (The power of the people, however, is infinitely greater than the power of governments.) இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் (மட்டுமே) நமது நாட்டை உண்மையிலேயே மகத்தானதாய் உருவாக்க முடியும். ஆனாலும், நான் ஏற்கனவே சொன்னது போல, அரசாங்கம் எவ்வளவு செய்ய முடியும் என்பதற்கு வரம்பு இருக்கிறது. இதற்கான தீர்வு நம் ஒவ்வொருவரிடம் நமது குடும்பங்களிடம் நமது சமுதாயங்களிடம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து ஒரே சமுதாயமாக ஒன்றாக உழைத்தால், அரசின் தலையீட்டை எதிர்பார்க்காமல், நம்மால் நிறைய செய்ய முடியும். நம்மிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சமூக சேவை மற்றும் தேசிய உணர்வை மீட்டெடுக்க வேண்டும்.

உலக சரித்திரத்தில் நமது தேசிய இயக்கம் (சுதந்திரப் போராட்டம்) தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில், சாமானியர்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்து, வன்முறை அற்ற வழிகளில் விடுதலை பெற்றோம். மென்மையாக பேசக்கூடிய பலவீனமான ஒரு மனிதர் - மகாத்மா. வலிமை பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துக் காட்டிய மகாத்மாவால் இளைஞர்கள் கவரப்பட்டனர்.

நமது இளைஞர்கள் மகாத்மா காந்தியின் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும் - நாம் அனைவரும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் மன உறுதியுடன் இருந்தால் அதைச் செய்வதற்கு நமக்கு சக்தி இருக்கிறது. கொள்கை உணர்வு, சுய தியாகம், ஒழுங்கு, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒற்றுமை போன்ற சுதந்திரப் போராட்ட குணங்களை மீட்டெடுக்க நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். இந்தச் சவாலை எதிர்கொள்ள இந்த மகத்தான தேசத்தின் மக்களுக்கு விருப்பம் வைராக்கியம் வளங்கள் உள்ளது என்று நம்புகிறேன். இத்தகைய எதிர்காலம் அமைய நம் அனைவரின் அறிவு அனுபவம் மற்றும் தெளிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும், இந்தியாவின் காலம் தோன்றும்.

இது நிச்சயம் நமக்கு எட்டக்கூடிய சாத்தியம் என்ற நம்புகிறேன். இந்தக் கனவு நிறைவேற்ற தன்னிடம் உள்ள எல்லா சக்திகளையும் கொண்டு இந்த அரசு செயல்படும்; இதன் மூலம் பழமை வாய்ந்த இந்த பாரத தேசம் மீண்டும், அறிவுக்கு படைப்பாற்றலுக்குமான சக்தி வாய்ந்த மையமாக உருவெடுக்கும். இந்த புனிதமான தேசப் பணியை நிறைவேற்ற எனது அரசு சார்பில் உறுதி கொள்கிறேன். அன்பார்ந்த குழந்தைகளே.. என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள், ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடரும்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 57 - ‘இளைய இந்தியாவின் இதயத் துடிப்பைக் கேட்போம்’| 2003

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்