கோகுல்ராஜ் கொலை வழக்கு முதல் அதிமுக வழக்குகள் வரை: உயர் நீதிமன்ற முக்கியத் தீர்ப்புகள் 2023

By செய்திப்பிரிவு

# கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட எட்டுப் பேருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

கோகுல்ராஜ், யுவராஜ்

# அந்நியச் செலாவணி வழக்கில் அமலாக்கப் பிரிவினர் விதித்த ரூ.28 கோடி அபராதத்தை எதிர்த்துத் தாக்கல் செய்த டிடிவி தினகரனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

# கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையைப் பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

# உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி

# புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

# சிசு பாலினத் தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மட்டுமே கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்டு தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்யத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

# 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

# தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவு களை அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

# வேட்பு மனுவில் சொத்து மதிப்பை மறைத்ததால் தேனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் 2019 தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

# மணமான குடும்பத் தலைவர் வாரிசுகள் இல்லா மல் உயிரிழந்தால் இந்து வாரிசுரிமைக்குப் பொருந்தும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

# மருத்துவ மேற் படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கு 50% இடஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

# உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் அல்லது தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியது.

# உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

# சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஐந்து கூடுதல் நீதிபதிகளுக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார். இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது.

# தெலங்கானாவைச் சேர்ந்த தேவராஜு நாகார்ஜுன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா ஓய்வு பெற்றதையடுத்து புதிய பொறுப்புத் தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

# சந்தன மரக் கடத்தல் தொடர்பாக தமிழகக் காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992இல் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட காவல், வருவாய், வனத் துறை ஊழியர்களுக்கு 2011இல் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

# அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் செல்லும் என்று உயர்நீதி மன்றம் அறிவித்தது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன.

# அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

# அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

# சிறுபான்மைக் கல்வி நிறுவனங் களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

# தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

# அதிமுக ஆட்சிக் காலத்தில் (1991-96) சுடுகாட்டுக் கூரை வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

# சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றிய ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ். சௌந்தர், சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

# சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்தது.

# அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

# மனைவியின் பிரசவக் காலத்தில் தந்தைக்கு விடுமுறை வழங்க தனிச் சட்டம் உருவாக்குவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்தது.

# கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மத நல்லிணக்கம் உருவாகும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்தது.

# குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE