அடல் பிகாரி வாஜ்பாய் - நெஞ்சம் நிறைய ஏராளமான கனவுகளை சுமந்த மனிதநேயக் கவிஞன். அரசியல் - அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட துறை. ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு கணக்காயர் - எந்த அளவுக்கு துறை சார்ந்த ஆர்வம் அறிவு ஆற்றல் பெற்று விளங்குவார்களோ அதுபோன்று, இந்தியாவில் அரசியலை ஒரு 'துறை'யாக அணுகிய ஒப்பற்ற தலைவர். அவருக்கு, தனது நீண்ட அரசியல் பயணத்தின் நிறைவுக் கட்டத்தில் பிரதமர் பதவி வாய்த்தது. தனது அனுபவம் முழுவதையும் நாட்டு நிர்வாகத்தில் காட்டி வளர்ச்சித் திட்டங்களை தீவிர முனைப்புடன் முன்னெடுத்தார்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சம வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் தீவிர அக்கறை கொண்டிருந்த வாஜ்பாய், 2002 ஆகஸ்ட் 15 அன்று, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள். தீரம்மிக்க முப்படைகளின் வீரர்கள், கடும் உழைப்பை நல்கும் விவசாயிகள், நமது விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், இந்தியாவில் மகளிர் அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லும் சகோதரிகள் தாய்மார்கள்.. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
அன்புக் குழந்தைகளே.. நீங்கள்தாம் நம் நாட்டின் எதிர்காலம். உங்களுக்கு எனது அன்பும் ஆசிகளும். உலகில் தொலைப்புள்ளிகளில் வாழும் இந்தியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவில் இருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால் எப்போதும் எங்களின் நெஞ்சங்களுக்கு அருகிலேயே இருக்கிறீர்கள். சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக, ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த பெண் விளையாட்டு வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இதே போன்ற வெற்றியை இந்திய விளையாட்டு வீரர்கள் ஈட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
சகோதரிகளே.. சகோதரர்களே.. நாம் சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு நமது அஞ்சலி. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிற பெரும் தலைவர்களுக்குத் தலை வணங்குகிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு தம் இன்னுயிர் ஈந்த படைவீரர்கள், துணை ராணுவ வீரர்கள், காவல்துறையினருக்கு வணக்கம் செலுத்துகிறோம். டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து உயிரிழந்த தியாகிகளுக்கு நமது வணக்கங்கள். பயங்கரவாதம் தீராத ரணமாக இருக்கிறது. இது மனித குலத்துக்கே எதிரி. நமது அண்டை நாடு, பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக சர்வதேச அரங்குகளில் பேசுகிறது; ஆனால் நமது மண்டலத்தில் அது இரட்டை வேடம் போடுகிறது. (அடுத்தடுத்து) போர்களில் தோல்வியுற்றதால், காஷ்மீரைப் பிடிக்க, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. மீண்டும் உறுதியாய்ச் சொல்கிறோம் - ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. என்றும் இப்படியே இருக்கும்.
» செங்கோட்டை முழக்கங்கள் 55 - ‘பசியும் ஜனநாயகமும் ஒன்றாக செல்ல இயலாது’ | 2001
» செங்கோட்டை முழக்கங்கள் 54 - ‘இளைஞர்களின் நூற்றாண்டு’ | 2000
அமர்நாத் யாத்திரிகர்களைக் கொடூரமாகக் கொன்றதும், கலூசாக், காசிம் நகர் பகுதிகளில் அப்பாவிப் பெண்களை, குழந்தைகளைக் கொலை செய்ததும், 'விடுதலை இயக்க' போராட்டம் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. நம்மைப் பொருத்த வரை, காஷ்மீர் ஒரு நிலப்பகுதி மட்டுமல்ல; நமது சமய சார்பின்மைக் கொள்கையின் அடையாளம். இந்தியா எப்போதும் சமய சார்பற்ற நாடாகவே இருந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் - ஒரு வாழும் உதாரணம். இதுதான் - கஷ்மீரியத்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி பயங்கரவாதத்தை நாம் முறியடித்தே தீருவோம். இதில் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தானுடன் நல்லுறவு கொள்ளவே விரும்புகிறோம். லாகூர் பயணம் மற்றும் ஆக்ரா உச்சி மாநாடு இதனை எடுத்துக் காட்டும். எல்லா பிரச்சினைகளையும் அமைதியாக பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்கவே இந்தியா விரும்புகிறது. இந்த திசையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனாலும் இதற்கு சுமுகமான சூழலை ஏற்படுத்துதல் அவசியம்.
இன்றும் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் தொடர்கிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள தேர்தலை, போலியானது என்போர், ஜனநாயகம் பற்றிப் பேசக் கூடாது. அவர்கள் முதலில் தங்களுடைய கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கட்டும். ஜம்மு காஷ்மீரில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைத் தூண்டிவிடும் முயற்சிகள் நடைபெறுகிற போது, அமைதிப் பேச்சு வார்த்தைக்கான சூழல் எப்படி நிலவும்? இது பிரச்சினையைத் தீர்க்காது; தீவிரமாக்கும்.
சகோதரிகளே சகோதரர்களே.. உலகின் பிற பகுதிகளோடு தெற்கு ஆசியாவை ஒப்பிடும் போது நான் மனம் வருந்துகிறேன். இரண்டாம் உலகப் போரில் பெரும் சேதத்தை சந்தித்த ஜப்பான், இன்று உலகின் முன்னணி நாடாக நிமிர்ந்து நிற்கிற போது, பழைய பகைமைகளை மறந்து ஐரோப்பா முழுவதும் ஒன்றாக இணைந்து செயல்படும் போது, நாம் ஏன் சச்சரவான பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது? நம்மால் முடியும்; செய்வோம்.
நாம் ஏன் இணைந்து வறுமைக்கு எதிராகப் போரிடக் கூடாது? இது ஒரு சவால். வெளியில் இருந்து யாரும் வந்து நமக்காக இதனை செய்யப் போவதில்லை. பயங்கரவாதத்தின் பிடியில் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஒரு நல்ல நிலையான திருப்பம் ஏற்பட்டு அங்கே அமைதியும் ஜனநாயகமும் வந்து சேர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் முழுவதும் சுதந்திரமாக நியாயமாக நடைபெறும். இதுகுறித்து யாருக்கும் எந்த ஐயமும் வேண்டாம்.
வரும் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பெரும் எண்ணிக்கையில் பங்கு கொண்டு, எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் போலி பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் யாரும் இடையூறு செய்ய அனுமதிக்க மாட்டோம். அச்ச உணர்வை ஏற்படுத்த முனையும் சக்திகளை முறியடிப்போம். ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் வன்முறையில் ரத்தம் சிந்தி துன்பத்தை அனுபவித்து விட்டார்கள். (இப்போது) அவர்கள் தங்களது குழந்தைகளுக்கான (நல்ல) எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள எனது அன்பான சகோதர சகோதரிகளே, நாம் இணைந்து காயங்களுக்கு மருந்து போடுகிற தருணம் இது. நாம் இணைந்து மகிழ்ச்சியான ஜம்மு காஷ்மீரை உருவாக்குவோம். எந்த மாநிலத்தில் உள்ள எந்தக் குடிமகனும் தான் தனியாக ஆதரவற்று இருப்பதாக உணரத் தேவையில்லை. இந்த நாடு மொத்தமும் உங்களுடன் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு உருவாகும் நற்சூழலில், ஜம்மு காஷ்மீர் பண்டிதர்கள் உள்ளிட்ட விரட்டப்பட்ட மக்கள் மிகுந்த மரியாதையுடன் தமது இல்லங்களுக்குத் திரும்ப இயலும் என்று நம்புகிறேன்.
ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அது, சரி செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதி கூறுகிறேன். இதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேசுவோம். மாநிலத்துக்கு, கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் பேசுவோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதிக்கான விருப்பம் அதிகரித்து வருகிறது. விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கான வேட்கை தீவிரம் அடைந்துள்ளது. துப்பாக்கி, வாழ்க்கையைப் பறிக்குமே தவிர, வாழ்க்கையை வளமாக்காது என்கிற உண்மையை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். நாகலாந்தில் நிரந்தர அமைதிக்கான நமது முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றன. பிற வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள எல்லாரையும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைக்கிறோம்.
சகோதரிகளே சகோதரர்களே, வெளியில் இருந்து வரும் பிரச்சினைகளோடு, இயற்கையின் சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நாட்டின் பல பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களை, வெள்ளத்தின் சீற்றம் பாதித்துள்ளது. வளர்ந்த கதிர்கள் முறிகின்றன; விவசாயிகள் கவலையில் உள்ளார்கள். இவர்களின் கவலையில் நாமும் பங்கு கொள்கிறோம். வறட்சியைத் திறம்படக் கையாள, அரசு எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. நமது கிடங்குகளில் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிகின்றன. (ஆகவே) யாரும் பசியால் உயிரிழக்க விட மாட்டோம்.
அந்த்யோதயா அன்ன யோஜனா (உணவு வழங்கும் திட்டம்) மேலும் நீட்டிக்கப்பட்டு, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு (உடனடி) நிவாரணம் வழங்கப்படுகிறது. ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டிலான கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நிவாரணப் பணிகள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. 'வேலைக்கு உணவு' (food-for-work) திட்ட செயல்பாடுகளுக்காக மாநிலங்களுக்கு ரூபாய் 5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கிறது. இவையெல்லாம் தற்காலிக நடவடிக்கைகளே. வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க திறன்பட்ட நீண்ட கால திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது.
ஒவ்வொரு (மழை) நீர்த்துளியையும் சேமிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர்மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். விரைவில் நாம் பிரதம மந்திரி கிராம தண்ணீர் இயக்கம் (P.M. Grameen Jal Samvardhan) என்கிற புதிய முயற்சியில் இறங்க இருக்கிறோம். விரைவில் மூன்று புதிய திட்டங்களைத் தொடங்கப் போகிறோம். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ஒரு லட்சம் கைப்பம்புகள் நிறுவப்படும். கிராமப் பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் தொடக்கப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்து தரப்படும். ஒரு லட்சம் பாரம்பரிய நீர் நிலைகள் புனரமைப்பு செய்யப்படும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்களின் நம்பிக்கை, நேசம், ஆதரவுடன் ஐந்தாவது முறையாக செங்கோட்டைக் கொத்தளத்தில் உங்கள் முன் நிற்கிறேன். இன்று, நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. 'கூட்டணி ஆட்சி' சோதனை வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். (People want the experiment of coalition governance to succeed.)(ஆசிரியர் குறிப்பு: Government - அரசு; Governance - ஆட்சி)
ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன் வேர்கள் ஒவ்வொரு நகரத்தையும் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்து உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு, மக்களவைக்கு 13 பொதுத் தேர்தல் நடந்துள்ளன. அரசுகள், மீண்டுள்ளன; மாறி உள்ளன. ஆனால் ஒருபோதும் வன்முறை இல்லை; (யாரும்) ரத்தம் சிந்தவில்லை. தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர எனது அரசு உறுதி பூண்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சக்திகள் (criminal elements) அதிகார மையத்துக்கு அருகே வருவதைத் தடுப்பதில் உறுதியாய் உள்ளோம்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, இன்று இந்தியா - உயரமாய், தற்சார்பு கொண்டதாய், தன்னம்பிக்கை நிறைந்ததாய் உலக அரங்கில் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. சர்வதேசத் தளங்களில் நமது பெருமை தொடர்ந்து மேன்மேலும் உயர்ந்தபடி இருக்கிறது. நமது சாதனைகளை நாம் மிகைப்படுத்திப் பார்த்தல் கூடாது. சில துறைகளில் நமது வளர்ச்சி மிக மெதுவானது. இப்போது சாதித்ததை விட இன்னும் ஏராளமாக நம்மால் சாதித்திருக்க முடியும். (ஏன் இல்லை என்று) நேர்மையுடன் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், நமது சரிவுகளைப் பற்றியும் தேவைக்கு அதிகமாகப் பேசி வருகிறோம். இது ஏமாற்றத்துக்கு வழி வகுக்கிறது. இந்த தேசத்தின் சக்தி விரயம் ஆகிறது.
நமது விவசாயிகள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவுப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோம். (ஆனால்) கடந்த ஆண்டு ரூபாய் 6,400 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்தோம். நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைப் பற்றி பெருமைப்படுவோம். இவர்கள் இந்திய செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல; பிறநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு அனுப்புகின்றனர்.
கணினி துறையில் உள்ள தொழில் அதிபர்களைப் பற்றி நாம் பெருமைப்படலாம். மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியா ரூபாய் 40 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் என்று எப்போதாவது யாரேனும் கற்பனையாவது செய்து இருப்பார்களா? ஆனால் இது நிகழ்ந்துள்ளது! இந்த சாதனைகளுக்குப் பின்னால், இந்தியர்களின் திறமை, கடின உழைப்பு, விடாமுயற்சி உள்ளது. குறிப்பாக இந்த பெருமை நம் நாட்டு இளைஞர்களையே சேரும். இதற்காக, வாருங்கள் - நமது இளைய தலைமுறையைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்.
சகோதரிகளே சகோதரர்களே... நம்முடையது - பல கட்சி அமைப்பு முறை. இந்த அமைப்பில் அதிகாரத்துக்கான போட்டி இயல்பானது. ஆனாலும், 'தேசம் முதலில்' என்கிற கோட்பாட்டுக்குள் இந்தப் போட்டி அடங்கி இருத்தல் வேண்டும். நமது அரசியல் நடத்தையில் 'லட்சுமண ரேகை' (வரையறை / கட்டுப்பாடு) வகுத்துக் கொள்ள வேண்டும். தற்காலிக ஆதாயங்களுக்காக இந்தக் கோடுதனை (யாரும்) தாண்டக்கூடாது.
தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமை இருக்கிறது. (இதேபோன்று) சமூக, பொருளாதார வளர்ச்சி தொடர்பான தீவிர பிரச்சினைகளிலும் கருத்தொற்றுமையை நம்மால் ஏன் ஏற்படுத்த இயலாது? (there is consensus among political parties on issues of national security. Then, why cant we create a similar consensus on certain pressing issues of social and political development?) நம்மால் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியும். கருத்தொற்றுமை (கட்டாயம்) ஏற்பட வேண்டும். உதாரணத்துக்கு, விசை உற்பத்தியில் உள்ள பிரச்சினைகள். பல மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. விசைத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு கருத்து ஒற்றுமை ஏற்படுத்த எல்லா அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகளின் மனநிலையை மாற்றினால் மட்டும் போதாது. பொதுமக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். பரவலாய் நடக்கும் மின்சாரத் திருட்டு மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் 25,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? விவசாயிகளுக்கு, தரமான மின்சாரம் தேவைப்படுகிறது. தடங்கல் அற்ற மின்சாரம் கிடைக்குமானால் கூடுதல் கட்டணம் தரவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வெட்டுகளோ தடைகளோ தடங்கல்களோ இருக்கவே கூடாது.
அன்பார்ந்த நாட்டு மக்களே, கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை பற்றி அறிவீர்கள். பற்றாக்குறை பொருளாதாரம், இப்போது உபரிப் பொருளாதாரம் ஆக மாறி இருக்கிறது. இன்று, ரேஷன் கடைகளின் முன்பாக நீண்ட வரிசை இல்லை. தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்புக்காக நீண்ட காத்திருப்பு இல்லை. மண்ணெண்ணெய் வரிசை மிகவும் குறுகிப் போனது. மழை நாட்களில் காய்கறிகளின் விலை அதிகமாகி இருக்கலாம். ஆனாலும் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்துள்ளோம்.
டெலிகாம் மற்றும் இணைய சேவை மேலும் மேலும் அதிக மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான விலையும் குறைந்து கொண்டே வருகிறது. வேகமான வறுமை ஒழிப்பே பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய இலக்கு. இந்தத் திசையில் நாம் விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. இன்று ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனங்களைக் காணமுடிகிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 60 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இவற்றில் 35 லட்சம் வீடுகள் - கிராம பகுதிகளில்... இவற்றில் 80 சதவீதம் வறிய குடும்பங்களுக்காக! (மக்கள் நலனில்) அக்கறை கொண்ட அரசும் சமூகமும் உள்ள இந்தியாவைக் கனவு காண்கிறேன். (I dream of an India in which the Government and the Society are sensitive.)
இதை நோக்கியே நமது கொள்கைகளும் நமது திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.
சகோதர சகோதரிகளே.. விரைந்த கட்டுமான வளர்ச்சி இன்றைய முக்கிய தேவை. இது நிகழும் என்பதை உறுதி செய்வதில் தீவிரமாய் உள்ளோம். நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூபாய் 55,000 கோடி செலவிடப்படும். முன்பு, ஷேர் சா சூரி செயல்படுத்திய Grand Trunk Road திட்டத்துக்குப் பிறகு இதுவே இந்தியாவின் மிகப் பெரிய கனவுத் திட்டம்.
இதேபோன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரூபாய் 60 ஆயிரம் கோடியில், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மூலம் இந்தியாவில் எல்லா கிராமங்களும் சாலைகளால் இணைக்கப் படும். இந்த இரண்டு திட்டங்களும் பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும்.
அன்பார்ந்த நாட்டு மக்களே, வறுமை மற்றும் வேலையின்மை என்கிற சாபங்களில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே நமது லட்சியம். 2020 வாக்கில் இந்தியாவை வளர்ந்த தேசமாக ஆக்க முயற்சிக்கிறோம். நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களை கொண்ட இந்த தேசம், ஒரு பொது வைராக்கியத்துடன் செயல்பட்டால், அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இருக்க முடியாது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், ஜிடிபி (GDP)யின் ஆண்டு வளர்ச்சியை 8 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளது. சமூக பொருளாதார வளர்ச்சிக்காக பல புதிய, முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவை இன்று தனியே அறிவிக்கப் படும்.
சகோதரிகளே சகோதரர்களே .. தேசப் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளில் எவ்வாறு உணர்ச்சிகரமாக ஒன்று படுவீர்களோ அதேபோன்று தேச முன்னேற்றம் தொடர்பான விஷயங்களிலும் உணர்ச்சிகரமாக ஒன்றுபட வேண்டுகிறேன். வாருங்கள் - வளர்ச்சியை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவோம். இதற்கு, நாம் ஒவ்வொருவரும், சாதியம் மற்றும் மதவாதத்தை விட்டு, மேலே வர வேண்டும். நம்மைப் பிரிக்கும் எல்லாவற்றையும் விட்டு விலகி வர வேண்டும்.
குஜராத்தில் நடைபெற்ற கொடூரமான மதக்கலவரம் - துரதிருஷ்டவசமான உதாரணம். ஒரு நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. எவ்வளவு தீவிரமான கொந்தளிப்பான சூழ்நிலையிலும் நாம், அமைதி சமூக நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டைப் பராமரிக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகத்துக்கு பாதுகாப்பு மற்றும் சம வாய்ப்பு நல்குதல் அரசாங்கத்தின், சமூகத்தின் பொறுப்பாகும்.
அன்பான நாட்டு மக்களே, வாருங்கள் - ஒரு தேசமாக நாம் முன்னோக்கிப் பார்ப்போம். எதிர்காலம் பற்றி சிந்திப்போம். (யாரோ) ஒருவர் மிகச் சரியாகச் சொன்னார்:"Beeti Tahi Bisar De, Aage Ki Sudh le."கடந்த காலத்தில் நிகழ்ந்ததை மறந்து விடு; எதிர்காலத்தை முன்னோக்கிப் பார். கடந்த கால சச்சரவுகளில் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்க வேண்டாம். நமக்கான ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.
பொது வாழ்வில் தூய்மை, நெறிமுறைகளை நாம் பின்பற்றினால் மட்டுமே, நமது எல்லா திட்டங்களும் வெற்றி பெறும்; வளர்ச்சிக்கான நமது எல்லா கனவுகளும் நிறைவேறும். எந்த நிலையிலும் ஊழலுடன் (ஊழல் சக்திகளுடன்) சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தங்களிடம் இருந்து மிக உயர்ந்த நெறிமுறைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசியலில், நிர்வாகத்தில் உள்ளவர்கள் தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது போலவே, நம் மக்களும் தமது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு செயலுக்கும் அரசாங்கத்தை சார்ந்து இருக்கிற மனநிலை மாற வேண்டும். (The mindset of depending on the Government for every work has to change.) சமூகப் பணி ஆற்ற வருமாறு எல்லா தன்னார்வ அமைப்புகளையும் குடிமக்களையும் அழைக்கிறேன். தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை அனுபவிப்பதை உறுதி செய்தல் - நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதன் மூலம் நாம் அவர்களுக்கு 'உதவி' செய்யவில்லை. (இது நமது கடமை, பொறுப்பு) அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவருக்கு ( SC/ST) இட ஒதுக்கீட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கு எனது அரசு நீட்டித்துள்ளது. அரசுப் பணியில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த இட ஒதுக்கீடு ஒரு சலுகை அல்ல; சமூக சமத்துவத்துக்கான ஒரு சாதனம்.
எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்த 55-வது சுதந்திர தினம் நமக்கு வேறு ஒரு செய்தியையும் தருகிறது. அந்தச் செய்தி - இந்தியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்குகிற நமது கனவை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடுமையாகப் பணியாற்ற வேண்டும். வானத்தின் எல்லையில்லா உயரம் நமது இலக்காக இருக்கட்டும். நமது பாதங்கள் வலுவாக பூமியில் பாவட்டும். நம் மனதில் தளராத வைராக்கியம் நிரம்பி இருக்கட்டும். நமது கரங்கள் ஒன்றாய் இணைந்து இருக்கட்டும். நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவதே நமது தீர்மானமாக இருக்கட்டும். நாம் இதைச் செய்தால் நமது வெற்றி உறுதி. வாருங்கள் - நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாய் உறுதியுடன் ஜெய்ஹிந்த் என்கிற நமது வெற்றி முழக்கத்தை எழுப்புவோம். என்னுடன் இணைந்து மூன்று முறை கூறுங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடருவோம்...)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 55 - ‘பசியும் ஜனநாயகமும் ஒன்றாக செல்ல இயலாது’ | 2001
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 hours ago
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
29 days ago