அடல் பிகாரி வாஜ்பாய் - சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். நல்ல கவிஞர். நல்ல பேச்சாளர். மென்மையான உள்ளம் கொண்ட மனிதாபிமான அரசியல் தலைவர். பாகிஸ்தானுடன் நல்ல உறவு ஏற்பட வேண்டும் என்று உண்மையாகவே முயற்சிகள் எடுத்தார். லாகூர் உடன்படிக்கையும் கையெழுத்தானது. ஆனாலும் பாகிஸ்தானில் இருந்த சில சுயநல சக்திகள், அமைதியை விரும்பவில்லை. வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போனது. இதில் வாஜ்பாய்க்கு மிகுந்த வருத்தம் தான். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு போர் புரிந்து கொண்டே இருக்கப் போகிறோம்? வாஜ்பாய் எழுப்பிய இந்த கேள்வியில் படிந்துள்ள ஆற்றாமை புரிகிறதா...?
2001 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆற்றிய சுதந்திர தின உரை இதோ: அனைவருக்கும் எனது வாழ்த்துகள். 54-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். விடுதலைப் போரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட, மகாத்மா காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பெரியோர்கள் அனைவரையும் நினைவு கூர்கிறேன். புதிய நூற்றாண்டிலும் அவர்கள் நம்மை வழி நடத்துவார்கள். இந்தத் தருணத்தில், உலகின் எல்லா மூலைகளிலும் இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். 120 கோடி மக்களைக் கொண்ட, 5,000 ஆண்டுக்கு முந்தைய நாகரிகத்தைக் கொண்ட இந்த தேசம், வரலாற்றின், முன்மாதிரி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.
அன்பு நண்பர்களே, பொக்ரான் அணு சோதனைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நாம் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இன்று, இந்த இன்னல்கள் வடிந்து வருகின்றன. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த இன்னல்களை நாம் ஏற்றுக் கொண்டோம்; வெற்றிகரமாக எதிர்கொண்டோம். இன்று, உலகின் முக்கிய நாடுகளுடன் நமது உறவு, வலுவாய் ஆழமாய் வலுவாய் வளர்ந்துள்ளது. இந்த நாடுகளுடன் தொடர்ந்து பாதுகாப்புப் பேச்சுகளிலும் ஈடுபட்டு வருகிறோம். உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது. சகோதரிகளேசகோதரர்களே, நாம் எப்போதுமே உலக அமைதிக்காக வலுவாகக் குரல் கொடுத்து வருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக, அமைதி மந்திரத்தை நாம் உச்சரித்து வருகிறோம் - Prithvih shanthi, Antariksha shanthi, Vanaspatayah shanthi.. பூமியின் மீது, விண்வெளியில், எல்லாத் தாவர உயிரினங்களுக்கும் அமைதி! (Peace on earth, in outer space, and also peace for all the flora and fauna!)
இயல்பாகவே நாம் நமது அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவு கொள்ளவே விரும்புகிறோம். பாகிஸ்தானுடன் உறவு மேம்பட நாம் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டோம் என்பதை மொத்த உலகமும் அறியும். பண்டிதர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே நமது முயற்சிகள் தொடர்கின்றன. பல ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் கையெழுத்து ஆயின. ஆனாலும், இவற்றால் நீடித்த அமைதி ஏற்படவில்லை. நானும் ஒரு புதிய தொடக்கத்துக்கு முயற்சித்தேன். அமைதிக்காக லாகூர் சென்று வந்தேன். லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பிறகும், கார்கில் பகுதியில் பாகிஸ்தான், ராணுவ ஊடுருவல் நடத்தியது. தமது துணிச்சலால் தீரத்தால் நமது வீரர்கள் அவர்களை எல்லைக்கு அப்பால் விரட்டி அடித்தனர். இந்தப் போரில் உயிர் நீத்த வீரர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலி. இவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
» செங்கோட்டை முழக்கங்கள் 54 - ‘இளைஞர்களின் நூற்றாண்டு’ | 2000
» செங்கோட்டை முழக்கங்கள் 53 - ‘உலகம் நம்பும் நமது நேர்மை!’ | 1999
கார்கில் சண்டை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் .. இருந்தும், பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷ்ரபை பேச்சுக்கு அழைத்தோம். ஆக்ராவில் நமது விருந்தினரிடம் சொன்னேன் - ' 50 ஆண்டுகளாக நாம் சண்டை யிடுகிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்கள்? இது பாகிஸ்தானுக்கோ இந்தியாவுக்கோ (எந்த விதத்திலும்) உதவவில்லை. இந்த சச்சரவின் மூலம், இரு நாடுகளும், நம்மிடம் இருக்கும் குறைந்த வளங்களை போருக்கு, போர் தயாரிப்புக்கு செலவிடுகின்றன. இந்த வளங்களை நமது நாடுகளின் முன்னேற்றத்திற்கு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு செலவிட்டிருக்கலாம்." மேலும் சொன்னேன் - "போரிடத்தான் வேண்டும் என்றால், நாம் ஏன், வறுமை, வேலையின்மை, நோய்கள், வளர்ச்சியின்மைக்கு எதிராகப் போரிடக் கூடாது?" (Despite Kargil and cross-border terrorism, we invited Pakistan's President General Purvez Musharraf for talks. I told my guest in Agra: "We have been fighting for 50 years. For how many years more, you intend to fight? This has helped neither Pakistan nor India. Because of the hostile relations, both our countries are spending a lot of their limited resources on wars and for preparing for wars, whereas we ought to be spending these scarce resources on the development of our two countries and to improve the lives of our peoples."
I had also told him: "If we have to fight, why don't we wage a war against poverty, against unemployment, against disease and against under-development?"
பாகிஸ்தான் மக்கள், இந்தியாவுடன் அமைதிக்காக ஏங்குகிறார்கள். வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் பரஸ்பர நலன் வழங்கும் பிறதுறைகளில் நாம் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நேரடித் தொடர்புகளை ஊக்குவிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, நமது உறவுகளை மேம்படுத்துவதில் அதிபர் முஷரபுக்கு ஆர்வம் இல்லாமல் போனது. காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை அம்சத்துடன் அவர் இங்கே வந்தார். இந்த நிபந்தனையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் இரண்டையும் மறந்துவிட்டு, ஆக்ராவில் இருந்து புதிய பயணம் தொடங்கலாம் என்று அவர் விரும்பினார். இதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை 'ஜிகாத்', 'விடுதலை இயக்கம் என்றே விளித்தார். இந்த வாதத்தை ஏற்றுக் கொள்கிற பேச்சுக்கே இடமில்லை.
எதிர்பார்த்தாது போலவே ஆக்ரா சந்திப்புக்குப் பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. அமர்நாத், கிஸ்ட்வர், தோடா, ஜம்மு, (நேற்று) காசியாபாத் அருகே... (பல பகுதிகளில்) அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது என்ன மாதிரியான ஜிகாத்? இது என்ன மாதிரி விடுதலை இயக்கம்? இந்த விடுதலை இயக்கம் யாருக்காக..? ("What kind of jehad is this? What kind of freedom struggle is this? And, for whom is this freedom struggle?")
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜிகாதி அமைப்புகளின் நடவடிக்கைகள் புனிதம் அற்றவை. இஸ்லாத்தின், மனித இனத்தின் (அடிப்படை) கோட்பாடுகளுக்கு எதிரானவை. போர் மூலம் பெற முடியாத காஷ்மீரை, ஜிஹாத் பயங்கரவாதம் மூலம் பெற்று விடலாம் என்று யாரும் வீணான கற்பனையில் மூழ்கிட வேண்டாம். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையைப் பொருத்தவரை, இந்தியா தொடர்ந்து இந்த முயற்சியை முன்னெடுக்கும். அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை நசுக்குவதில் சற்றும் தயக்கம் காட்ட மாட்டோம்.
ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு சொல்கிறேன் - உங்கள் வலியை உங்கள் துன்பத்தை நாங்கள் உணர்கிறோம். இவற்றை நீக்குவதற்கு எங்களால் ஆன அத்தனை முயற்சிகளும் எடுத்து வருகிறோம். இயல்புகளை திரும்புவதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, வளர்ச்சியின் பயன்களை மக்கள் பெறச் செய்வோம். இந்த மாநிலத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்தன. சில நாட்களில், ஜம்மு காஷ்மீர் மக்கள் புதிய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை நாம் உறுதி செய்வோம்.
இந்தத் தருணத்தில் மாபெரும் கவிஞர் ஷாயர்-இ- கஷ்மீர் மெஜுர் எழுதிய கவிதையில் இருந்து இரண்டு வரிகளை நினைவு கூர்கிறேன்: " காஷ்மீரிகளின் நிலமும் ஜாதியும் ஒன்றுதான். உங்களுக்குள் இடைவெளி ஏற்படுத்தும் எதையும் தேவையற்று உருவாக்காதீர்கள். முஸ்லிம் - பால் என்றால், இந்து - சர்க்கரை. இந்தப் பாலை இந்த சக்கரையுடன் கலவுங்கள்."
இந்த சூஃபி தத்துவம் - இந்தியாவின் ஆன்மீக மரபுடன் காஷ்மிரி அம்சத்தை சேர்க்கிறது. கஷ்மீரியத் - 'சர்வ தர்ம சம்பாவா'க்கு (மதச்சார்பின்மைக்கு) நல்ல உதாரணம். இருநாடு தத்துவத்தை இது மறுதலிக்கிறது. உண்மையில், இந்த கஷ்மீரியத் குறித்து நாம் பெருமைப் படுகிறோம்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிலைமை நம்மை வருத்தப்பட வைக்கிறது. வன்முறை, பிரச்சினையால் சிக்கல் தீராது; மேலும் சிக்கல் ஆகும். இது வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்குத் தடைகளை உருவாக்குகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சகோதரி சகோதரர்களுக்கு உறுதி கூறுகிறேன் - இந்த மண்டலத்தில் தொடங்கியுள்ள ஒட்டுமொத்த அமைதி நடவடிக்கை, எதிர்பார்த்த நற்பயங்களைத் தரும்.
இந்தியா ஒரு மிக அகன்ற தேசம். பல மதங்கள் பல மொழிகள் கொண்டது. பல, சிறு சிறு வேறுபாடுகள் கொண்டது. இந்த வேறுபாடுகள் நமது பலவீனம் அல்ல; அதுதான் நமது பலம். இது, நமது கலாச்சார வலிமையைக் காட்டுகிறது. இந்தப் பாகுபாடுகளை இந்திய ஒற்றுமை எனும் கயிறு இணைக்கிறது.
சகோதரிகளே சகோதரர்களே, உலகில் வேகமாக வளரும் 10 பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. அதன் அளவின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரம். தகவல் தொழில்நுட்பம், ஏவுகோள் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் உலகின் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
மிக முக்கிய பொறுப்புகளில் இந்தியாவின் இளைய தலைமுறை இருப்பதைப் பார்க்கிற போது, இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எனது நம்பிக்கை வலுப்பெறுகிறது. முன் எப்போதும் இருந்ததை விட சிறந்த இடமாக இந்தியா இவர்கள் மாற்றி வருகிறார்கள். நாளைய பெருமைமிகு வலிமையான இந்தியாவின் சிற்பிகள் இவர்கள். நாம் இந்தியர்கள் என்பதில் இப்போது உண்மையாகவே பெருமை கொள்ளலாம். உலகில் இந்தியர்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
கடந்த 50 ஆண்டுகளில் நமது நாட்டின் மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. ஆனாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறோம். 1990-ளில் இது, 36 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாய் சரிந்துள்ளது. நாம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக வறுமை ஒழிப்பு நடந்ததாகக் கூறவில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து வறுமை வெளியேறிக் கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கல்வியறிவு எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து இருக்கிறது. வரும் பத்தாண்டுகளில் இந்தியா ஏறத்தாழ முழுதும் கல்வியறிவு பெற்ற நாடாக மாறிவிடும் என்று நம்புகிறேன். இந்திய பொருளாதாரம் தற்போது மந்தகதியில் இருக்கிறது என்பது உண்மை. இது தற்காலிகமானதே. இந்தியாவில் மட்டுமல்ல; இது உலகளாவிய போக்கு. இது குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனெனில், இந்தியா பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள் வலுவாகவே உள்ளன.
விலைவாசி நிலையாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு, முன் எப்போதும் விட மிக அதிகமாக இருக்கிறது. உணவு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. நல்ல பருவ மழையால், சிறந்த விளைச்சல் கண்டுள்ளோம். இதனால் பொருளாதாரத்தில் பிரகாசமான அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று காலை, கருமேகங்கள் இருக்குமோ, மழை பெய்யுமோ என்று ஐயம் இருந்தது. ஆனால் மேகங்கள் கலைந்துள்ளன; சூரியன் வெளிவந்து உள்ளது.
எதிர்காலம் நோக்கி நகரலாம். விவசாயம், தொழிற்துறை, கட்டுமானத் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க முயற்சி எடுத்துள்ளோம். இந்த திசையில் மேலும் சில நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இதன் மூலம் பொருளாதார மந்தகதி முடிவுக்கு வரும்.
கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்கள் நமது மன உறுதியை சோதிக்கின்றன. ஒடிசாவில் கடும் புயல் வெள்ளம். குஜராத்தில் பெரும் பூகம்பம். நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம்; சில பகுதிகளில் வறட்சி. அனைவரின் ஒத்துழைப்போடும், மறுவாழ்வு அளிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைந்து வந்து நமக்கு உதவிய அயல் நாடுகளுக்கு நமது நன்றி. மொத்த மனித குலமும் ஒன்று; உடலில் ஓர் அங்கத்தில் வலி என்றால் உடல் முழுவதும் அதை உணர்கிறது என்பதே இதன் பொருள். இந்த நெருக்கடிகளை உறுதியாய் எதிர்கொண்டோம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். இயற்கை சீற்றங்களைத் திறமையாய் சமாளிக்க, நிரந்தரமான நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்படும்.
எனது அன்பான விவசாய சகோதரர்களே.. நீங்கள் தான் நாட்டுக்கு உணவு அளிப்பவர்கள். உங்களின் கடின உழைப்பால் இந்தியாவை, உணவு பொருட்களில் தன்னிறைவு பெறச் செய்துள்ளீர்கள் என்பது மட்டுமல்ல; உபரியாகவும் உற்பத்தி செய்துள்ளீர்கள். உணவு பொருள் பற்றாக்குறை என்பது கடந்த கால நிகழ்வு ஆகிவிட்டது. முன்பெல்லாம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தோம். இப்போது ஏற்றுமதி செய்கிறோம். இன்று, அரசு கிடங்குகளில் 60 மில்லியன் டன் உணவுப் பொருள் இருப்பு உள்ளது. சேமிப்புத் திறனைப் பெருக்கி வருகிறோம்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை நான் அறிவேன். இவற்றை நீக்க, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். தம்முடைய பயிருக்கு விவசாயிகள் நியாயமான லாபகரமான விலை பெறுவதை உறுதி செய்வதே நமது குறிக்கோள். இதுவரை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, விவசாயக் கடன் அட்டை வழங்கப் பட்டு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தத்தால், குறைந்த விலையில் விவசாயப் பொருட்கள் இறக்குமதியாகும் என்று சிலர் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். இது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது தேவைக்கு ஏற்ப இறக்குமதி தீர்வையைக் கூட்டவோ குறைக்கவோ ஆற்றல் கொண்டுள்ளோம். உண்மையில் இது போன்று பலமுறை செய்தும் உள்ளோம்.
உலக வர்த்தகத்தில் புதிய நடைமுறை தொடங்கியுள்ளது. இது, இந்திய விவசாயத்துக்கும் பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கும் பல சவால்களை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலம் இந்தச் சவால்களை நாம் எதிர் கொள்வோம். உலக சந்தையில் நிலவும் போட்டிகளை இன்னும் தீவிரமாய் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றதாக நமது பொருளாதாரத்தைத் தயார் செய்யுமாறு விவசாயிகள் தொழிலாளர்கள் மேலாளர்கள் வர்த்தகர்கள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு, வேளாண்துறையும் தொழில்துறையும், தர மேம்பாட்டில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நண்பர்களே.. இந்த ஆண்டு, புதிய பொருளாதாரக் கொள்கையின் பத்தாவது ஆண்டு ஆகும். இந்தக் கொள்கை நமது பொருளாதாரத்துக்குப் பல ஆதாயங்களைக் கொண்டு வந்துள்ளது. அதே சமயம் பல புதிய பிரச்சினைகளும் முளைத்துள்ளன.
சில சமீபத்து நிகழ்வுகள், நமது நிதி மற்றும் மூலதனச் சந்தையில் உள்ள பலவீனங்களை எடுத்துக் காட்டுகின்றன. மக்களை இது கவலையுற செய்துள்ளது. இந்த பலவீனங்களை நீக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல நடவடிக்கைகளை எடுப்போம். சிறு முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் பங்குச்சந்தைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். எப்படியேனும் லாபம் சம்பாதிப்பது - தொழில் வெற்றிக்கான அளவுகோலாக இருக்க முடியாது. கார்ப்பரேட்டு நெறிமுறை, தாராளமயமாக்கலின் வெற்றிக்கு மிக முக்கிய தேவை.
சகோதர சகோதரிகளே, சமீபத்தில் ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊழலைக் கண்டு கொள்ளாமல், ஊழல் நடவடிக்கைகள் பெருக அனுமதிக்க முடியாது. ஊழல்வாதி தன்னுடைய செயல்களுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் ஊழல்வாதிகள், சட்டத்தின் நீண்ட கரங்களில் இருந்து தப்பிக்க விடமாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். நேற்றுதான் மக்களவையில் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது. பிரதமரையும் இதற்குள் கொண்டு வந்துள்ளோம். இது விஷயத்தில் அரசு பாகுபாடு காட்டாது. ஒருவர் எவ்வளவு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தாலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அரசு தயங்காது. பல வழக்குகளில் நாம் ஏற்கனவே கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
அதேசமயம் யாருக்கு எதிராகவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு கூறுவதை இயன்றவரை நிறுத்திக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் மிகப் பெரும்பாலோர் நேர்வழியில் சம்பாதித்தே தமது வாழ்க்கையை நடத்துகின்றனர் .
அன்பார்ந்த குடிமக்களே.. பொருளாதார தாராளமயமாக்கல் இந்தியாவுக்கு நன்மை புரிந்துள்ளது என்பதில் ஐயமில்லை. அதேசமயம் தாராளமயமாக்கலின் நற்பயன்கள் ஏழைகளை கிராமவாசிகளை சென்று சேரவில்லை என்பதும் உண்மை. சமமின்மை அதிகரித்து உள்ளது. ஆகவே தீவிர ஆலோசனைக்குப் பிறகு, நமது பொருளாதாரக் கொள்கையை ஏழைகளுக்கு, கிராமங்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றதாக மாற்ற தீர்மானித்துள்ளோம். மண்டல சமமின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள உள்ளோம்.
புதிய பொருளாதாரக் கொள்கை, சமூக நீதியை மேம்படுத்துவதாய் இருப்பதை உறுதி செய்வோம். தலித், ஆதிவாசி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு இதன் பயன்கள் கிடைக்கச் செய்வோம். இதை நோக்கி கடந்த மூன்று ஆண்டுகளில் பல முக்கிய திட்டங்களை தொடங்கியுள்ளோம். இந்தத் திசையில் மேலும் பல புதிய முயற்சிகளுக்கு உத்தேசித்துள்ளோம். கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் புதிய திட்டத்தை ரூபாய் 10,000 கோடியில் மத்திய அரசு தொடங்க உள்ளது. இந்தத் திட்டம் சம்பூர்ண கிராம வேலை வாய்ப்பு திட்டம் (Sampoorna Grameen Rozgar Yojana) என்று அழைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் நீடித்த சொத்துகளை உருவாக்கும் பணிக்கு பஞ்சாயத்துகளால் வேலை பெறும் நபர்களுக்கு ஊதியம், ரொக்கமாகவும் உணவுப் பொருட்களாகவும் வழங்கப்படும். (Under this scheme, those who take employment from Panchayats to build durable rural assets will be paid wages in cash and in foodgrains.) இதற்காக ஒவ்வோர் ஆண்டும் மாநில அரசுகளுக்கு ரூபாய் 5,000 கோடி பெறுமானம் உள்ள 50 லட்சம் டன் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டங்கள் அனைத்தும் இந்த திட்டத்துடன் இணைக்கப்படும். ஏறத்தாழ 100 கோடி, வேலை நாட்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நமது பொருளாதாரத்தில் ஒரு வினோத புதிர் தென்படுகிறது. அநேகமாக நமது மக்களின் சேமிப்பு எல்லாம் வங்கிகளுக்கே வருகிறது. (ஆனால்) இந்த நிதியை வங்கிகள் முழுவதுமாக வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்த முடியவில்லை. (Nearly all yhe savings of our people are deposited in banks. The banks are unable to use these funds fully for developmental projects.) மறுபுறம், அமைப்புசாரா தொழில்களுக்குப் போதுமான கடன் வசதி கிடைப்பதில்லை. நமது பொருளாதாரத்தில் 3 இல் 2 பங்கு இத்துறையே வகிக்கிறது. இத்துறை, பெரிய தொழில் நிறுவனங்களை விட, சிறப்பாகவே கடனைத் திருப்பி செலுத்துகிறது. (Unorganised sector does not get adequate bank credit. This sector constitutes two-thirds of our economy. The loan repayment record of this sector is indeed better than that of big industries.) அமைப்புசாரா வர்த்தகம், தொழில்களுக்கு (நிதி) வளங்கள் கிடைக்க செய்ய நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம்.
(அதிகார) பரவலாக்கல் இல்லாமல், விரைவான முன்னேற்றமோ பொதுமக்களின் பங்களிப்போ சாத்தியமே இல்லை. எனவேதான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கும் இரண்டு முக்கிய அரசமைப்பு சட்டதிருத்தங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் போதுமான அளவுக்கு பஞ்சாயத்துகளுக்கு, நிதி நிர்வாக அதிகாரங்களை இன்னமும் வழங்க முடியாமல் இருக்கிறோம்.
இந்த முக்கியமான குறிக்கோளை அடைவதற்கு, தேசிய விவாதம் (national debate) ஒன்றை விரைவில் அரசு தொடங்க இருக்கிறது. பஞ்சாயத்து அமைப்புகளில் இருக்கும் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமக்கான முன்னுரிமைகளை, தமக்கான சொந்த திட்டங்களைப் பஞ்சாயத்து அமைப்புகள் தாமாக நிர்ணயித்துத்து, அந்தந்த கிராமவாசிகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த நோக்கத்துக்காக புதிய வழிமுறைகளை வடிவமைப்போம். கிராம வளர்ச்சித் திட்டங்களுக்கு வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களில் இருந்து பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்கள் கடன் பெற வழிவகுக்கப்படும்.
ஜனநாயகம், பசி - இரண்டும் இணைந்து செல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவே தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்க இருக்கிறோம். இதன் வழியே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மகப்பேறுத் தாய்மார்கள் மற்றும் இளம் பெண்களுக்கு, மாநில விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும். பெரும் எண்ணிக்கையில் ஏழைகளுக்கு (இலவச) உணவு வழங்கும் செயலில் ஈடுபடும் சமய, சமூக, கல்வி நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
நண்பர்களே.. இந்தியா வேகமாக நகர மயம் ஆகிக்கொண்டு வருகிறது. இதன் விளைவாக நகர்ப்புற ஏழைகளுக்கு தங்கள் சக்திக்கு உட்பட்ட வீடு கிடைப்பதில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆகவே பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பிற நலிந்த பிரிவினர் நலன் புரிகிற Ambedkar - Valmiki Malin Basti Awas Yojana என்கிற திட்டம் தொடங்க அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக நகர வளர்ச்சி அமைச்சகம் ஆண்டுதோறும் சுமார் 1,000 கோடி ரூபாய் வழங்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் HUDCO நிறுவனம் கடன் தொகையாக ரூபாய் 2,000 கோடி வழங்கும்.
பாதுகாப்பு படைகளில் உள்ள வீரர்களின் குடும்பங்களுக்கான சுமார் 3 லட்சம் வீடுகளுக்குப் பற்றாக்குறை உள்ளது. இப்போதைய நிலவரப்படி இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட 30 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இந்த 30 லட்சம் வீடுகளை அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கத் தீர்மானித்துள்ளோம்.
கடந்த ஆண்டு சுதந்திரதின உரையில் பிரதம மந்திரி கிராம சதக் திட்டம் பற்றிக் குறிப்பிட்டேன். தற்போது இது அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூபாய் 5,000 கோடி வழங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் ரூபாய் 60 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
2007 இல் பத்தாவது ஐந்தாண்டு திட்டம் நிறைவு பெறும் முன்பாக, 500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்கள் குடிசைகள் அனைத்துக்கும் நல்ல சாலை வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதை இலக்காய்க் கொண்டுள்ளோம். ரூபாய் 55 ஆயிரம் கோடியில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் - சுதந்திர இந்தியாவின் கனவுத் திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தின் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவோம். மேற்சொன்ன இரண்டு, முக்கியமான சாலைத் திட்டங்களும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்; பொருளாதாரத்துக்கு பெரிய ஊக்கம் அளிக்கும்.
நமது குறிக்கோள் - தொலைவில் இருந்து விடுதலை. (Our objective is Freedom from Distance) ஆகவே இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களையும் சாலைகளால் மட்டுமல்ல; நல்ல தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை மூலமாகவும் இணைப்பதில் முனைப்புடன் உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பணியை மேலும் விரைவு படுத்துவோம்.
சிறு தொழில்கள், குடிசை தொழில்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. கதர் கிராமத் தொழில் ஆணையம் மட்டுமே, அதன் பல்வேறு கிளைகளின் மூலம், 60 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு நல்குகிறது. இந்த ஆணையத்தை மேலும் வலுவாக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். அந்நிய சந்தைகளில் கதர் கிராமத் தொழில் பொருட்களைப் பிரபலப்படுத்த தீவிரமான முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறோம்.
சுற்றுலாத் துறை - வேலை வாய்ப்புகளை உருவாக்க, அந்நிய செலாவணி ஈட்ட முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இன்று உலகில் மிக வேகமாக வளரும் துறை இதுதான். இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய சுற்றுலாக் கொள்கை வடிவமைக்கப்படும்.
நண்பர்களே, நீதி பரிபாலன அமைப்பில், நீண்ட கால தாமதம் மற்றும் பல குறைபாடுகளால் ஏழை மக்கள் விரக்தியில் உள்ளனர். மலை போல் குவிந்துள்ள நீண்ட நாள் நிலுவை வழக்குகளைக் குறைப்பதற்காக 1,700 விரைவு நீதிமன்றங்களை அரசு அமைத்துள்ளது. விரைவில் நாம், ஏழைகளின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் அனைத்து சட்டங்கள், விதிமுறைகளையும் ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். ஏழை மக்களை அரசு முகமைகளின் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழக்கங்களை நடவடிக்கைகளை மீள்ஆய்வு (review) செய்வோம்.
அனைவருக்கும் சுகாதாரம் என்கிற குறிக்கோளில் அரசு உறுதியாக இருக்கிறது. போலியோ தடுப்பு இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்ற திட்டங்களை தொழுநோய், காசநோய், மலேரியா, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகவும் தொடங்கத் தீர்மானித்துள்ளோம். சமீப ஆண்டுகளில், ஆயுர்வேதம் மற்றும் பிற இந்திய மருத்துவ முறைகளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். பொதுவான பல நோய்களுக்கு நல்ல நிவாரணம் தருவதாகப் பல நூற்றாண்டுகளாக நிரூபித்து வரும் மூலிகைபப் பொருட்கள் மற்றும் மரபு மருந்துகளை உள்ளடக்கிய 'குறைந்த விலை மருந்துப் பை' (அனைவருக்கும்) கிடைக்கச் செய்ய ஆலோசித்து வருகிறோம். ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவத்தால் உலகமே ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் இதன் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நமது விவசாயிகளை, மருந்துப் பொருள் உற்பத்தியாளர்களை அழைக்கிறேன்.
இந்த ஆண்டை நாம், மகளிர் அதிகார ஆண்டாக அனுசரிக்கிறோம். ஆகவே தாய்மார்களின், சகோதரிகளின் நலனை அடிப்படையாய்க் கொண்ட திட்டங்களை நிறைவேற்ற மிகுந்த ஊக்கம் தருவோம். அமைதியான முறையில் சமூகப் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எனது பாராட்டுகள். வாழ்த்துகள். வங்கிகள் வழங்கும் சிறு கடனைக் கொண்டு கிராம மற்றும் நகர வறுமையை நீக்குவதில் மகள் சுய உதவிக் குழுக்கள், தெற்காசிய மண்டலத்தில், இந்தியாவில், வெற்றி கண்டுள்ளன. ஆகவே, 2004 இறுதிக்குள், நாட்டில் உள்ள 14 லட்சம் வசிப்பிடங்களிலும் சுய உதவிக் குழு தொடங்க அரசு தீர்மானித்துள்ளது. மகளிர் அதிகாரம் தொடர்பாக மற்றொரு முக்கிய முடிவும் எடுத்துள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் எல்லா நாட்டுடைமை வங்கிகளும், நிகர வங்கிக் கடனில் (net bank credit) 5 சதவிகிதத் தொகையை மகளிர் நிறுவனங்களுக்கு வழங்கும். இதன் மூலம் மகளிர் நடத்தும் வியாபாரங்களுக்கு ரூபாய் 17 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
இந்த புதிய முயற்சிகளை தொடங்கும் போது, ஓர் உண்மையை நாம் நன்கு அறிந்து இருக்கிறோம். நடைமுறையில் அரசு திட்டங்களைத் தயாரித்துத் தரும். ஆனால் இவற்றைத் திறம்பட குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தும் பணியில் நமது அமைப்பு முறை திருப்திகரமாக செயல்படுவதில்லை. ஆகவே வரும் ஆண்டை, 'செயல்படுத்துதல் ஆண்டு' 'Year of implementation'ஆக அனுசரிக்க அரசு முடிவெடுத்து உள்ளது. இதனை நோக்கி, வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க Rapid Action Force விரைவு நடவடிக்கைப் படை அமைக்க இருக்கிறோம்.
குழந்தைகள் நமது நாட்டின் மதிப்பு மிக்க சொத்து. 10 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகளுக்கான சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக நான், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மேலும் அதிக முதலீடு தேவை என்று வாதாடினேன். ஆனாலும் அரசுத் துறைகள் மட்டுமே இதனைச் சாதிக்க முடியாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தனது முழுத் திறனையும் வளர்த்துக் கொள்வதை உறுதி செய்ய முன்வருமாறு எல்லா தன்னார்வ அமைப்புகள், வணிக அமைப்புகள் மற்றும் சாமானிய மக்களை அன்புடன் வேண்டுகிறேன். அடுத்த மாதம், குழந்தைகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த முக்கியமான தளத்தில் இந்தியா, குழந்தைகள் நலனில் தனக்குள்ள தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்தும்.
நண்பர்களே.. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. முன்னேறும் ஜனநாயகம் இருக்கிறது. நமது கரங்களில் நமது சிந்தனையில் நமக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை - ஒரு வளம். பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதே என்னுடைய, எனது அரசினுடைய குறிக்கோள். நம்பிக்கை சிதைந்து விடக் கூடாது. பரஸ்பர நம்பிக்கையைக் கட்டமைப்பதில் யாரும் குறுக்கிடக் கூடாது.
பரஸ்பர நம்பிக்கை ஒத்துழைப்பு, உடன் இருப்பு (co-existence) தரும் வலிமையின் மீதே இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும். வாருங்கள். ஒற்றுமையான வலுவான வளமான (பிறர் மீது) அக்கறை கொண்ட இந்தியாவை உருவாக்குவோம். ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடருவோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 54 - ‘இளைஞர்களின் நூற்றாண்டு’ | 2000
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
14 hours ago
வலைஞர் பக்கம்
16 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago