செங்கோட்டை முழக்கங்கள் 51 -  ‘தூய்மையான குடிநீர் - எல்லாருக்கும்!’ |  1997

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1997 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்க வடிவம் (abridged version) மட்டுமே PIB தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அவரது பேச்சு, பிற தளங்களில் கிடைக்கிறது. ஆனாலும் அரசின் அதிகாரபூர்வ தளத்தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். பிரதமர் குஜ்ரால் பேச்சின் சுருக்க வடிவம்: இந்திய சுதந்திரத்தின் பொன்விழா தருணம் இது. அமைதி, வளம், தலைமை மற்றும் சமூக நீதி யுகத்தைக் கொண்டுவர அனைவரும் இணைந்து கடுமையாகப் பணியாற்ற அழைக்கிறேன். நமது விடுதலையை சாத்தியமாக்கிய லட்சக்கணக்கான ஆண் பெண் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது தொன்மையான பாரம்பரியத்துடன் இந்த நாடு முன்னேறுகிறது. நமது மிகப் பெரிய சாதனை - ஜனநாயகக் குடியரசு. 50 கோடி வாக்காளர்கள், பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுக்கிறார்கள். நமது தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை - தியாகம் தேசப்பற்று மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையால் விளைந்தது.

இந்தப் பொன்விழா ஆண்டில், ஓர் அறிவார்ந்த நபராகத் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு தலித், நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றி உள்ளோம்.

நாடு வளர்ச்சி பெற வேண்டும் எனில், பெண்கள் சம அதிகாரம் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் - அவசரத் தேவை. பெண் குழந்தைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, மகப்பேறு சமயத்தில் குழந்தையின் பாலினம் காணும் சோதனைக்கு சட்டபூர்வத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்கும் மசோதா ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் சென்றால் மட்டுமே நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.

பொது வாழ்வில் நிலவும் ஊழலுக்கு எதிராகப் போராட மக்களை அழைக்கிறேன். வெளியில் இருந்து வரும் தாக்குதலை சமாளிக்க நமது பாதுகாப்புப் படைகள் நல்ல திறன் பெற்றுள்ளன. ஆனால், பொது வாழ்வை அரிக்கும் ஊழல் என்கிற புற்றுநோயை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சத்தியாகிரக இயக்கம் தொடங்க வேண்டும். என்ன ஆனாலும் லஞ்சம் தருவதில்லை என்று மக்கள் தமக்குத் தாமே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளும் தமக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் குற்றமயம் ஆவதைத் தடுக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் பாடுபட வேண்டும். அரசியல் வாழ்க்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கு நான் உறுதி பூணுகிறேன். கொள்முதல் ஒப்பந்தங்களை முடிவு செய்ய, எல்லாத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, அப்பழுக்கற்ற நேர்மையாளர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் தகவல் உரிமை மசோதா தாக்கல் செய்யப்படும். இதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை பற்றிய எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு உரிமை கிடைக்கும். அமைச்சர் யாரும் ஊழலில் ஈடுபட்டதாகத் எனது கவனத்துக்கு யாரும் கொண்டு வந்தால், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்.

காலத்துக்கு ஒவ்வாத தேவையற்ற சட்டங்களை மீள்பார்வை செய்ய (to review), சீர்திருத்தங்களை அறிவுறுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அடுத்த தொடரில் லோக்பால் (மசோதா) நிறைவேற்றப்படும். அரசாங்கத்தில் வீண் செலவுகள் தவிர்க்கப்படும். இந்தியா ஒரு வலுவான பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. ஐக்கிய முன்னணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ், பொருளாதாரத் தேக்கங்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மூடுகிற நிலையில் இருந்த பத்து நிறுவனங்கள் புனர்வாழ்வு பெற்றன.

கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகள்தாம் இந்த நாட்டின் வலிமை. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துவோம். விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் அடுத்த தொடரில் அறிமுகப்படுத்தப்படும். வறண்ட வேளாண்மைக்கு (dry farming) முன்னுரிமை தரப்படும். வேளாண் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்தறிவு இன்மையே வறுமை, மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் வேலையின்மைக்கான அடிப்படைக் காரணம். கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற எழுத்தறிவு மிக்க மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. தேசிய மக்கள் தொகைக் கொள்கை விரைவில் அறிவிக்கப் படும். இல்லாமை, அறியாமையை அகற்ற இந்த அரசு பாடுபடும்.

காற்றிலும் ஆற்றிலும் அதிகரித்து வரும் மாசு, கவலை தருகிறது. மாசுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். ஆறுகளைத் தூய்மைப் படுத்த வேண்டும். எல்லாருக்கும் தூய குடிநீர் வழங்கிட ஒன்பதாவது ஐந்து ஆண்டுத் திட்டத்தில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உருவாக்குதல் தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்த இந்த அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. மேலும், பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த நாட்டின் சமூக வாழ்க்கையில் ஓர் இடம் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆக்கப்படும். மேலும் அகவிலைப்படி குறியீட்டுடன் இணைக்கப்படும். இந்த தேசம் காட்டும் நன்றியின் அடையாளமாக இதனை விடுதலைப் போராட்ட தியாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெளியுறவைப் பொறுத்தவரை, எல்லைகளை மதிக்க வேண்டும்; ஒருவரின் உள்நாட்டுப் பிரச்சினையில் மற்றவர் தலையிடக் கூடாது. நட்புறவு வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு, தேசப்பாதுகாப்பு, இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்தியா பாகிஸ்தான் உறவில் சில நேர்மறை முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செயலாளர் மட்டத்தில் சந்திப்பு விரைவில் நடக்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு உள்ளது. காரணம் அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் - பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளனர். நாகலாந்து மாநிலமும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. பயங்கரவாத எதிர்ப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். ஆயுதங்களைத் துறந்து சரணடையும் இளைஞர்களைப் பிரதான நீரோட்டத்துக்கு வரவேற்கிறோம்.

சார்க் அமைப்பின் மூலம் மண்டல ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவுடன் உறவு கணிசமாக மேம்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் நல்ல நட்புறவு நிலவுகிறது. அங்கிருந்து கணிசமான முதலீடுகள் வந்து கொண்டு உள்ளன. இந்திய அமெரிக்க உறவு பழமையானது; இது மேலும் வலுப்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் தம்மிடம் உள்ள அணு ஆயுதங்களை (வல்லரசுகள்) அழித்தால் ஒழிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம். நமது பாதுகாப்புப் படையின் தயார் நிலைக்கு, வளங்கள் - ஒரு தடையாக இருக்காது; பாதுகாப்புப் படையினருக்கு நவீன ஆயுதங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 50 - ‘நதிநீர் பங்கீடு... பேச்சுவார்த்தையே நல்லது’ | 1996

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE