செங்கோட்டை முழக்கங்கள் 48 - ‘நம்பிக்கையுடன் வாருங்கள்!’ | 1994

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஒற்றுமை, ஒருமைப்பாடு, வறுமை ஒழிப்பு, அயல்நாடுகளுடன் நட்புறவு... சுதந்திர தின உரையில் எப்போதும் இடம் பெறுகிற சங்கதிகள். இவற்றோடு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சார்க் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு மீதான சிந்தனைகளையும் பிரதமர் நரசிம்மராவ் வெளிப்படுத்துகிறார்.

1994 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரசிம்ம ராவ் ஆற்றிய உரையின் சுருக்க வடிவம் (abridged version) மட்டுமே PIB-யில் கிடைக்கிறது. இந்த ஓராண்டுக்கு மட்டும் இப்படி. பிற தளங்களில் முழு உரையும் காட்சியாகவும் காணமுடிகிறது. ஆனால் மத்திய தகவல் துறை வெளியீடான 'selective speeches of Narasimha Rao' தொகுப்பிலும் இந்த உரை (நான் பார்த்தவரை) இடம் பெறவில்லை. எனவே பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் - இதோ:

இந்தியா நீட்டும் நட்புக் கரத்தை ஏற்றுக் கொண்டு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு வேண்டு கோள் விடுத்தார். ஜம்மு காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் - (பாகிஸ்தானை குறிப்பிட்டு) உங்களோடு நீங்கள் இல்லாமல் உங்களை மீறியும்! (Jammu Kashmir would remain an integral part of India - "with you (Pakistan), without you, in spite of you."

இந்த அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து மூன்று ஆண்டுகளாக இந்தியா பொதுவாக அமைதியாக பதற்றமின்றி இருக்கிறது. பஞ்சாபில் அமைதி திரும்பியது மட்டுமல்ல; நெல் உற்பத்தியில், பல்வேறு (பொருளாதார) துறைகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தரும் ஊக்குவிப்பால், இயல்பு நிலை முழுமையாகத் திரும்பவில்லை. பாகிஸ்தான் ஈடுபாடு குறித்து நட்பு நாடுகளுக்கு இந்தியா சாட்சியங்களை அளித்து வருகிறது. ஆனால் இப்போது பாகிஸ்தானே வெளிப்படையாக ஒப்புக்கொண்டதால் இதற்கு இனிமேல் தேவை இருக்காது. அண்டை நாடுகள் எல்லாரோடும் இந்தியாவுக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் சட்டமன்ற சபாநாயகர் துணைவேந்தர் ஊடக அலுவலர்கள் எல்லாப் பிரிவினரையும் பலியாக்கி இருக்கிற பயங்கரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.

இந்த மாநிலத்தில் அமைதி கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பாடுபடும் பாதுகாப்புப் படையினரைப் பாராட்டுகிறேன். நீண்ட கடல் மற்றும் அகன்ற எல்லைகளைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமே இல்லை.
பாதுகாப்பு படையினருக்கு அனைத்து நவீன சாதனங்களும் வழங்கப்படும்; இவர்களுக்கு நல்ல பணிவாழ்வு கிடைப்பதை நடப்பு ஊதிய ஆணையம் (current Pay Commission) கவனத்தில் கொள்ளும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க, சிறு நகரங்களில் வறுமையை நீக்க இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. பொருளாதார காரணங்களுக்காக ஏராளமான சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பணிக்குச் செல்ல வேண்டி உள்ளது. இவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கு தேவையானதைச் செய்வோம். பாய் முடைதல் மற்றும் பிற தொழில்களில் (சுமார்) 20 லட்சம் குழந்தைகள் வேலை செய்கின்றனர். அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்த 20 லட்சம் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப் படும்.

நாட்டில் உள்ள 300 சிறிய நகரங்களின் மேம்பாட்டுக்கு திட்டம் செயல் படுத்தப்படும். இந்த நோக்கத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இன்று, தூர்தர்ஷனில் 11 சேனல்கள் (மொழிகள்) தொடங்குகிறோம். சில மாதங்களில் இது 13 ஆக உயரும். கடந்த ஆண்டு மூன்று திட்டங்களை அறிவித்து இருந்தேன். முதலாவதாக, மஹிளா சம்ரிதி யோஜனா திட்டம். (Mahila Samridhi Yojana) நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் 13 லட்சம் பெண்கள் (வங்கி) கணக்கு தொடங்க முன் வந்துள்ளனர். இவற்றில் 2 லட்சம் கணக்குகள் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தொடங்கப் பட்டுள்ளன. ஆனாலும் சில மாநிலங்களில் இது சரியாக செயல்படவில்லை. பெண்களுக்கான திட்டம் நன்கு செயல்படுவதை உறுதி செய்யுமாறு அந்த மாநிலங்களின் முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பு வழங்கும் இரண்டாவது திட்டம் மனநிறைவு தரும் வகையில் வளர்ந்து வருகிறது. இதுவரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்தல் குறைந்துள்ளது.

மூன்றாவது திட்டத்தின் கீழ், பெருநகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 32,000-க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சம் நபர்களைச் சென்று சேர இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சிறுபான்மையினரின் நலனுக்கான விரைவு நடவடிக்கைப் படை (Rapid Action Force) இரு மடங்கு வலுவாக்கப்பட்டது. இது வெகு திறம்பட செயலாற்று வருகிறது. சிறுபான்மை மக்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப் பட்டது. முன்னர் அறிவிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனம், அனைத்து சட்ட மற்றும் நிர்வாக பிரச்சினைகளைத் தாண்டி, 500 கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட முதல் கொண்டு நிறுவப்படும் பணி நடந்து வருகிறது. (Natl Minorities Devlopmnt and Fin Corpn is being set up)

நாம், வேகமாக மாறிவரும் உலகத்தில் வாழ்கிறோம். நம் நாடும், இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நகர்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும் இந்த நாட்டின் குறிப்பிட்ட சில அடிப்படை உரிமைகள் மற்றும் கோட்பாடுகள் என்றைக்கும் மாறாது. இந்த நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதில், காந்திஜியிடம் இருந்து நாம் கற்ற அகிம்சைப் பாடங்கள், ஏழைகளின் வறுமை ஒழிப்புக்கு காந்திஜி கூறிய பணிகள்... இவற்றில் நமது மனவுறுதி தொடரும்.

அன்னிய செலாவணி கையிருப்பு 1991 இல் ரூ.3000 கோடி இருந்தது; இந்த ஆண்டு ரூபாய் 51,000 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது சாதாரண சாதனை அல்ல. நமது நாட்டின் கடன் மீதான நம்பகத்தன்மை (திருப்பிச் செலுத்தும் வலிமை) நிச்சயமாக உயர்ந்துள்ளது. சர்வதேச நிதியத்தின் கடனை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முழுமையாக திருப்பிச் செலுத்தி விட்டோம். இதுபோன்று இந்திரா காந்தியின் காலத்தில் தான் ஒரு முறை நிகழ்ந்துள்ளது. பிற நாட்டவர், இந்திய அரசின் நிலைத்தன்மை குறித்து நம்பிக்கை கொண்டுள்ளனர்; இந்தியாவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். இதனால் நம் நாட்டில் கூடுதல் வேலை வாய்ப்பு, கூடுதல் லாபம் விளையும்.

மகாராஷ்டிராவில் 8,000 கோடி ரூபாயில் 'தாபோல்' (Dabhol) மின் திட்டத்துக்கு அரசு சமீபத்தில் ஒப்புதல் தந்துள்ளது. இது போன்ற முதலீடுகள் காரணமாக, இந்த அரசு கல்வி சுகாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக செலவு செய்ய முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற மிகப்பெரும் முதலீடுகளால் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்கிற அச்சம் தேவையில்லை. இந்தத் திட்டங்களில் சுமார் 80 சதவீதம் (இருநாட்டு) கூட்டு முயற்சியாகும். அதாவது இவை நமக்கு சொந்தமான நிறுவனங்கள்; இதன் முதலீடுகள் இந்தியாவிலேயே தங்கி இருக்கும். சார்க் நாடுகள் இடையே இன்னும் அதிகமாய் ஒத்துழைப்பு வேண்டுகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நமது விவசாயிகள் வியக்கத்தக்க வகையில் சாதனை புரிந்துள்ளனர். இந்த காலத்தில் பருவமழைகளும் நன்றாக இருந்தன. தற்போது அரசிடம் 3.25 கோடி டன் உணவுப் பொருள் கையிருப்பில் உள்ளது. இதற்கான சேமிப்பு கிடங்குகள் இல்லை. ஆகவே இவற்றை குறைந்த விலையில் மாடர்ன் ஃபுட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வழங்கி குறைந்த விலை ரொட்டி (bread) தயாரிக்க திட்டமிட்டு வருகிறோம். இவற்றின் ஒரு பகுதி, நலிந்த பிரிவு மாணவர்கள் தங்கிப் பிடிக்கும் விடுதிகளுக்கும், ஒருங்கிணைந்த சிறுவர் வளர்ச்சி சேவை மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும் - சப்ளை செய்யப்படும்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை வணங்குகிறேன். மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தேசிய அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று ஆச்சார்ய வினோபா பாவே மற்றும் ரஃபி அகமது கித்வாய் ஆகியோரின் நூற்றாண்டு விழாவையும் இந்த நாடு கொண்டாடும். விடுதலை இயக்க தலைவர்களை பெருமைப்படுத்துவதில் பாரபட்ச அரசியல் இருக்காது. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் நினைவுக் கமிட்டியின் செயல்பாடுகள், அந்த மகத்தான தேசபக்தரைப் போற்றும் வகையில், விரிவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நூறாவது வயதை எட்ட இருக்கிறார். அன்னாரின் பிறந்த நாளும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 47 - ‘வளர்ச்சி தொடரட்டும்!’ | 1993

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்