செங்கோட்டை முழக்கங்கள் 47 - ‘வளர்ச்சி தொடரட்டும்!’ | 1993

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

சுதந்திர இந்தியாவின் மிகவும் சிக்கலான பதட்டம் நிறைந்த ஆண்டாக - 1993 அமைந்தது. பொருளாதார வளர்ச்சியில் தீவிர அக்கறை காட்டிய பிரதமர் நரசிம்மராவ், அதைத் தவிர்த்து பிற பிரச்சினைகளில் கவனம் திரும்புவதை வெளிப்படையாகவே வெறுத்தார். எப்படியும் இந்தியாவின் பொருளாதார நிலைமையை உச்சத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு துறையாக பார்த்துப் பார்த்து அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதில் முனைப்புடன் ஈடுபட்டார். அதே சமயம், மிக மோசமான கலவர நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனாலும் மனம் கலங்காமல் தொடர்ந்து பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமே முழு சக்தியையும் பயன்படுத்தினார்.

1993 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்ற வைத்து பிரதமர் நரசிம்மராவ் ஆற்றிய மிக நீ..ண்ட உரை - அவரின் அரசியல் ஞானம், பொருளாதார அறிவு, நாட்டின் வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறையின் வெளிப்பாடாக ஒரு கொள்கை பிரகடனமாகவே இருந்தது. இதோ அந்த உரை: இந்த 46-வது சுதந்திர நாளில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அறிவீர்கள் - சில நாட்களுக்கு முன்னர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன்விழா கொண்டாடினோம். நமது சுதந்திர போராட்டத்தில் இந்த இயக்கம் மிக வலுவான ஒன்று. இதிலிருந்து ஐந்தாண்டுகளில் நாம் சுதந்திரம் பெற்றோம். நம்ம விடுதலைக்காக மாபெரும் தியாகங்கள் செய்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். பலர் என்று நம்மிடையே இல்லை. இவர்கள் அனைவருக்கும் என்னுடைய இந்த நாட்டினுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இவர்களை என்றும் மறக்காது. இந்திய வரலாற்றில் இவர்களது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

இன்று, ஆகஸ்ட் 15, தொழில்நுட்பத்துறையில் நாம் ஒரு புதிய தொடக்கத்தில் இருக்கிறோம். இதுவரை தூர்தர்ஷனுக்கு இரண்டு சேனல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று முதல் ஆறு சேனல்கள் இருக்கும். இது சாதாரண சாதனை அல்ல. அதிகபட்சம் ஓரிரு சேனல்கள் கூட்டலாம். ஆனால் நமது விஞ்ஞானிகள் விண்வெளியில் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். நமது விஞ்ஞானிகள் வடிவமைத்த இன்சாட் 2B செயற்கைக்கோள் விண்ணில் நிறுத்தப்பட்டுள்ளது; மிகத்துல்லியமாக செயல் புரிகிறது. இதன் விளைவாக இன்று முதல் உங்களுக்கு ஆறு சேனல்கள் கிடைத்துள்ளன. படிப்படியாக தூர்தர்ஷன் மேலும் பல சேனல்கள் உங்களுக்குக் கிடைக்கும். இந்த செயற்கைக்கோள் - அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நமது சுய சார்பின் எடுத்துக்காட்டு.

இது தொடர்பாக நமது உறுதியின் வெளிப்பாடாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இத்தகைய செயற்கைக்கோளை விண்ணில் அனுப்ப கிரையோஜானிக் இன்ஜின் என்கிற இன்ஜின் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்ததை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த இன்ஜினை வாங்குவதில் நமக்கு எந்த இன்னலும் இல்லை. ஆனால் தொழில்நுட்ப மாற்றலில் பிரச்சினை இருந்தது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. இதற்குள் இப்போது போக வேண்டிய அவசியம் இல்லை. இந்தத்தொழில் நுட்பத்தை நாம் ரஷ்யாவிடம் இருந்து பெற வேண்டும். ஆனால் இதில் ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்? நமது திட்டத்தைக் கைவிடலாமா? முடியாது. நாம் முடிவு செய்தோம்; நமது விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கிறோம். அதன் பிறகு இது போன்ற செயற்கைக்கோள்களை வடிவமைப்பதில் தயாரிப்பதில் விண்ணுக்கு அனுப்புவதில் எந்த இன்னலும் இருக்காது. விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கேட்டார்கள். அதுவரை இந்த இன்ஜின்களை வெளியில் இருந்து வாங்குவோம், இடைவெளி இல்லாமல் நமது செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடர்வோம்.

இந்த நாள் நமக்கு மறக்க முடியாத ஒரு நாள். இந்த நாளில் நிலைமையை நாம் கணக்கில் எடுக்கிறோம்; கடந்த காலத்தில் வாழ்கிறோம்; எதிர்காலம் பற்றி சிந்திக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அரசின் இந்திய மக்களின் சாதனைகளை மீள்பார்வை செய்வோம். நீங்கள் எதுவும் அறிய மாட்டீர்கள் என்பதல்ல. கடந்த அரசு நம்மிடம் தந்ததில் இருந்து இப்போது பொருளாதாரம் எவ்வாறு (வளர்ந்து) இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சி தன்னளவில் ஓர் அதிசயம். இதற்கு, நமது பொருளாதார அடித்தளம் நன்றாக இருக்கிறது; அடிப்படை கட்டுமானம் வலுவாக இருக்கிறது என்று பொருள்.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் திசை தவறிப் பயணித்ததால் சற்று பிசகிப் போனது. இதன் பிறகு இதனைச் சரி செய்தோம். வெகு விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். இதைப் பற்றி பெருமைப்படத் தேவையில்லை. கடந்த 40 ஆண்டுகளில் நமது தலைவர்கள் இட்ட பொருளாதார அமைப்பு முறையின் அடித்தளம் இன்றைக்கும் மிக வலுவாக இருக்கிறது. இந்த அடித்தளத்தை நாம் பலவீனம் ஆக்காமல் இருக்க வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இந்த அமைப்பு முறை சுமுகமாக திறம்பட செயல்படுவதை உறுதி செய்யும்.

பண வீக்கம் பற்றி படித்திருப்பீர்கள். இரண்டு ஆண்டுகளில் இது 17 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்து இருக்கிறது. இதற்கு என்ன பொருள்? பிற நாடுகளில் நிலவுகிற விலைவாசி ஏற்றத்தாழ்வுகள் நமது நாட்டில் இல்லை; இனியும் இருக்காது. விலைவாசி கட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதுவும் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். எப்போதும் நம் கையை மீறிப் போகாது. இன்னும் ஓராண்டில் குறிப்பிட்ட அளவுக்குள் விலைவாசி ஏறும் அல்லது இறங்கும்; அதை மீறிப் போகாது. இது நமது பொருளாதார அமைப்பு முறையின் வலிமைக்கான அடையாளம்.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வைப்பு நிதியாக (டெபாசிட்) நாம் எவ்வளவு பணம் பெற்றோம்? இதற்கான தேவை என்ன என்று நீங்கள் கேட்கலாம். நமக்கு அன்னிய செலாவணி தேவைப்படுகிறது. மண்ணெண்ணெய், உரங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இந்த அரசு பதவிக்கு வந்தபோது வந்தபோது அன்னிய செலாவணி இருப்பு சுமார் 2,000 கோடியில் இருந்து 2,400 வரை இருந்தது. ஒரு வாரத்தில் தீர்ந்து போகும் நிலையில் இருந்தது. இன்று நமம்மிடம் 21,000 கோடி ரூபாய் அதாவது 7 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி இருப்பு உள்ளது என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் எதையும் எங்கிருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தாலும் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இன்று நமது அன்னிய செலாவணி இருப்பு நன்றாக இருக்கிறது, மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து முன்னேற நமக்கு நம்பிக்கை பிறக்கிறது.

பொருளாதார முன்னேற்றம் மனநிறைவு தருவதாக இருக்கிறது. எவ்வளவு ஏற்றுமதி செய்கிறோம் எவ்வளவு இறக்குமதி செய்கிறோம் என்பதைக் குறிக்கும் வணிக இருப்பு (trade balance) மிக முக்கியம். வெளியிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் போது நமது அன்னிய செலாவணி கரைந்து போகிறது. அதிகமாய் ஏற்றுமதி செய்யும் போது இரண்டும் சமமாகிறது. முதன்முறையாக சுதந்திர இந்திய வரலாற்றில் வணிகக் கணக்கில் சமநிலையை சாதித்துள்ளோம். முன்பெல்லாம் குறைவாக ஏற்றுமதி செய்து ஏராளமாக இறக்குமதி செய்தோம். இதனால் சமமின்மை (imbalance) ஏற்பட்டது. இப்போது நாம் படிப்படியாக சமநிலைக்கு வருகிறோம். முதன்முறையாக மிகுந்த மன நிறைவு தருகிற மிகுந்த பாதுகாப்பான பொருளாதார சூழலில் இருக்கிறோம். எனவே நமது அன்னிய செலாவணி தொகையை நாம் தொட வேண்டி இருக்காது. ஏற்றுமதி மூலம் நமக்கு கிடைக்கும் பணத்தை வைத்து இறக்குமதி செய்வோம். வணிகத்தில் சமநிலையை உருவாக்குவோம்.

நாம் கொண்டுவரும் திட்டங்கள் பெரும்பாலும் ஏழைகளுக்கானவை. இந்த அரசின் திட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கானது என்று பொறுப்பின்றிக் கூறுகிறார்கள். இது முழுக்கவும் தவறு. ‘ஜவகர் ரோஜ்கர் யோஜனா’ அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் எல்லா திட்டங்களுமே ஏழைகளுக்குத் தான் என்று உறுதி கூறுகிறேன். கிராம வளர்ச்சி திட்டங்களில் நமது முதலீடு அபாரமாக உயர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைப் பார்த்தால், கிராம மக்கள், ஏழைகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் கிராம வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், இன்ன பிற திட்டங்களைப் பார்க்க முடியும். இவையெல்லாம் செல்வந்தர்களுக்கானது என்று யாரும் சொல்ல முடியாது.

தொழில் மயமாக்க நம்மிடம் வளங்கள் இல்லை. இது ஏழை நாடு. நமக்கு முந்திய அரசுகள் நம்மை மேலும் ஏழையாக்கி விட்டன. இன்று நமது தேவை எல்லாம் - முதலீடு. இது நடைபெறவில்லை என்றால் தொழிற்துறை வளராது. தொழிற்துறை வளரவில்லை என்றால் வேலையின்மையே மிஞ்சும். வேலையின்மை இருந்தால் பசி பட்டினி அமைதியின்மை இருக்கும்; நாடு சிதறுண்டு போகும். ஆகவே மிக முக்கியமானது - நமது பொருளாதார நிலை மேம்பட வேண்டும். இதற்கு மாபெரும் தொழில்மயமாக்கல் திட்டத்தை நான் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சுமார் எட்டு மாதங்களுக்கு தொழில்மயமாக்கல் திட்டம் நன்கு செயல்பட்டது. ஆனால் டிசம்பர் 6-க்கு பிறகு பம்பாய் வெடிகுண்டு சம்பவத்துக்கு பிறகு இதில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. வேகம் குறைந்து போனது. இது நிகழும். ஏனென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிற போது நாட்டில் அமைதி குறைகிற போது, வெளியில் இருந்து மக்கள் ஏன் இங்கே வரப் போகிறார்கள்? நம்முடைய மக்களாகவே இருந்தாலும் அவர்கள் ஏன் இங்கே முதலீடு செய்யப் போகிறார்கள்? எனவே நிச்சயமாக ஒரு தயக்கத்தைப் பார்க்க முடிந்தது. மிக நல்ல எட்டு மாத வெற்றிக்குப் பிறகு, ஆர்வம் குறைந்து போனது. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது நமது தொழில்மயமாக்கல் திட்டம் நன்கு முன்னேறி வருகிறது. இன்று நமது நாட்டில் சிறிய பெரிய திட்டங்களில் முதலீடு செய்ய 10,000 விருப்பங்கள் வந்துள்ளன. இவை விரைவில் நிறுவப்பட இருக்கின்றன.

தொழில்மயமாக்கலுக்கு அழுத்தம் தருகிற போதே எந்த வகையிலும் நமது தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தொழிலாளர்களுக்காக, சுமார் 20,000 கோடி ரூபாயில் தனியே நிதியம் உருவாக்கி இருக்கிறோம். இந்த பணத்தைக் கொண்டு தொழிலாளர்களுக்கு உதவுவோம். அவர்கள் வேலை இன்றி இடம்பெயர விடமாட்டோம் .. வேறு பணியில் சேர்ந்து அதற்கு தேவையான பயிற்சி பெற இந்த நிதியத்தில் இருந்து உதவுவோம். இவர்களின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தப்படும்.

இனி.. விவசாயத்துக்கு வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விவசாய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளோம். இது நமக்கு மிகப் பெரிய பெருமை. இந்த அளவுக்கு உற்பத்தியை நாம் அதிகரித்துள்ளோம். உங்கள் சார்பாக, இந்திய அரசாங்கம் சார்பாக, ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக, நமது விவசாயிகளை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அவர்தான் நமக்கு உணவு அளிப்பவர்; அவரேதான் இன்று நமது ஏற்றுமதியாளர். முதன்முறையாக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்த ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் இருக்கும். இதற்கு நாம் முழு ஆதரவு அளிப்போம்.

புதிய வேளாண் கொள்கையில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இத்துறையில் இன்னும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. நீர்ப்பாசனத்திலும் நாம் அதிக முதலீடு செய்ய உள்ளோம். அதிக முதலீடு என்றால், அதிக உற்பத்தி. உள்நாட்டு தேவைகளுக்கும், ஏற்றுமதி செய்யவும் திறன் படைத்த வேளாண் உற்பத்தி கொண்ட ஓரிரு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இப்போது இந்தியா வேளாண்துறையில் தன்னிறைவு பெற்று கூடுதலாகவும் உற்பத்தி செய்கிறது. ஆகையால் இந்த போட்டிக்குள் நாம் நுழைவோம். நமது விவசாயிகள் உச்சபட்ச பலன்களைப் பெறச் செய்வோம். விவசாயிகளுக்கு நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம். கடந்த காலத்திலும் இது செய்யப் பட்டது. நாம் விவசாயிகளுக்கு ஆதரவு விலை (அதிகரித்து) தருவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். உதாரணத்துக்கு, கோதுமையின் ஆதரவு விலை ஒரு குவின்டாலுக்கு ரூ.55, பருப்பு வகைகளுக்கு ரூ.100, நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.310 முதல் 350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு விலையில் இந்த அளவு ஏற்றத்தை விவசாயிகள் நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா? ஆதரவு விலையில் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அதிகரிப்பது கூட மிகக் கடினமாக இருந்த காலம் உண்டு. தற்போது அதிக கொள்முதல் விலை தருகிறோம். ஏனென்றால் விவசாயிகளுக்கு செலவு அதிகரித்து இருக்கிறது. இது தானம் அல்ல; கடமையும் அல்ல. உண்மையில் விவசாயிகள் தாம் நமக்கு உதவுகிறார்கள்; நாம் அவர்களுக்கு ஒத்துழைக்கிறோம்; ஆதரவளிக்கிறோம். ஆகவே நியாயமான விலையை நாம் நிர்ணயிக்க வேண்டும்; இந்த விலையைத் தருவதற்கு நாம் தயங்கக் கூடாது. ஒருவேளை இந்த உணவு பொருட்களை எல்லாம் நாம் இறக்குமதி செய்வதாக இருந்தால் நமக்கு அது எத்தனை பெரிய சுமையாக இருக்கும் என்பதை உணர வேண்டும். நம் விவசாயிகள் நமக்காக எவ்வளவு அன்னிய செலாவணியை மிச்சப்படுத்துகிறார்கள்! நான் மீண்டும் ஒருமுறை விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண் துறையில் இன்னொரு திட்டமும் இருக்கிறது - பயிர் காப்பீடு. இந்த திட்டம் முன்னரே இருந்தது. ஆனால் அதில் சில குறைபாடுகள் இருந்தன. அடுத்த ஆண்டு ஒரு 'பைலட்' திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளோம். இது - எல்லா விவசாயிகள், எல்லா பயிர்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பைலட் திட்டம் கொண்டு வருவோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது, புயல் பெருமழை வறட்சிக் காலத்தில், தமது பயிர் என்ன ஆகுமோ என்று விவசாயிகள் கவலைப்பட வேண்டி இருக்காது. இந்த, பயிர்க்காப்பீடு திட்டம் நன்கு செயல்பட்டால், பல்வேறு பிரச்சினைகள் குறித்த விவசாயிகளின் கவலைகள் நீங்கும்.

உரம் தொடர்பாகவும் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் உதவி இருக்கிறோம். ஒரு டன்னுக்கு ரூ.1,000 உதவி (தொகை) வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு, உள்நாட்டு உரங்களை விட வெளிநாடுகளில் குறைவான விலையில் கிடைக்கும் DAP உரம் - விரைவில் இறக்குமதி செய்தோம். இதன் விலையில் ஒரு டன்னுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,500 வரை வேறுபாடு இருக்கிறது. ஆகையால் ஒரு ஆண்டு முழுமைக்கும் எல்லாப் பயிர்களுக்கும் தேவையான உரங்களை இறக்குமதி செய்துள்ளோம். இந்த ஆண்டு முழுவதும் உரம் கிடைப்பதில் விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று உறுதி கூறுகிறேன். அவர்கள் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அது நமது நாட்டிலேயே கிடைக்கிறது. சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏதுவாக இல்லை; இவற்றின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆகவே இந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏதுவாகப் பல வசதிகள் செய்து தந்துள்ளோம். தற்போது இவையும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

கிராம வளர்ச்சி பற்றி சிலவற்றை நான் சொல்ல விரும்புகிறேன். கிராம முன்னேற்றத்துக்காக ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்தத் தொகை, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பயன் தரும் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது நகரங்கள் வழியே செல்லாது; நேரடியாக கிராமத்து மக்களை சென்று சேரும். கிராமத்து கைவினைஞர்களுக்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தேன். நமது கிராமங்களில் கைவினைஞர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்கள் மிகவும் பழையதாக இருக்கின்றன. இவை 100 முதல் 200 ஆண்டுகள் பழையதாய் இருக்கலாம். காலத்தால் மிகவும் பின்தங்கிய கருவிகளைக் கொண்டே இவர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் உள்ள அத்தனை கைவினைஞர்களுக்கும் புதிய கருவிகள் வழங்குவோம்; இதற்கான மாபெரும் திட்டத்தை மேற்கொள்வோம் என்று அறிவித்திருந்தோம். கடந்த ஆண்டு 62 மாவட்டங்களை எடுத்துக் கொண்டோம்; இந்த ஆண்டு மேலும் 100 மாவட்டங்களை எடுத்துக் கொள்வோம். (தற்போதைய) ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

இது மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது. இந்தத் திட்டத்தினால் ஒரு லட்சத்துக்கும் அல்லது ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். இது உற்பத்தித் திறனை அதிகரித்து இருக்கிறது. இதனால் நமது வீடுகளை விட்டு மாநகரங்களுக்குச் சென்ற சிலர் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பி உள்ளனர். ஏனென்றால் இப்போது மாநகரங்களில் கிடைக்கும் வருமானத்தை கிராமங்களில் வீட்டிலிருந்தே ஈட்டுகிறார்கள். எனவே அவர்கள் ஏன் தம்முடைய கிராமங்களை விட்டு, தமது வீடுகளை விட்டுச் செல்ல வேண்டும்? வெளியில் அதிகம் தெரியாமலே அமைதியாக இது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு கைவிளைஞருக்கும் தரப்படுகிற புதிய கருவிகள் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விளக்குகிறோம். இந்த திட்டத்தை பாதி வழியில் விட்டுவிட மாட்டோம். இந்தத் திட்டக் காலம் முழுதும் இது செயல் படுத்தப்படும். ஒரு வகையில் இது கைவினைஞர்களின் வாழ்க்கையில் புரட்சியைக் கொண்டு வரும்.

குடிதண்ணீர் 'சப்ளை'க்காக மாபெரும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநேகமாக எல்லா வருவாய் கிராமங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய குடிசைகள் இருக்கின்றன. இவற்றையும் நாம் உள்ளடக்க வேண்டும். ஏனென்றால் ஒரு கிராமத்தில் 3-4 குடிசைகள் அல்லது 10 குடும்பங்கள் மட்டுமே உள்ள இடத்திலும் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கெல்லாம் மிகக் குறைந்த மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதால் தண்ணீர் தேவை இருக்காது என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தேவை. ஆகவே இவர்கள் எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டம் இது கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அடுத்து வருகிறது மிக முக்கிய இணைப்பு - பஞ்சாயத்து ராஜ். நான்காண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு பல தடைகளைத் தாண்டி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். மாநில அரசுகளும், தங்களது சட்டசபைகளில் இதனை நிறைவேற்றி இருக்கிறார்கள். இப்போது இது சட்டம் ஆகியுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் நாடு முழுதும் பஞ்சாயத்து ராஜ் எனும் புதிய கட்டமைப்பு இருக்கும். மக்களின் சக்தி (அதிகாரம்) வெளிப்படும். (இதுவரை) அடக்கி வைக்கப்பட்ட இந்த அதிகாரம் வெளிவரும்; இந்த மக்கள் கவர்ச்சிகரமான வளர்ச்சித் திட்டங்களை இவர்கள் செயல்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள். ஒரு புதிய உற்சாகத்தை, மாபெரும் வளர்ச்சித் திட்டத்தை இந்தியா காணும்.

பெண்களுக்கு, எனது சகோதரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் - புதிய பஞ்சாயத்து அமைகிற போது, அதில் பெண்கள் 30 சதவீதம் இருப்பார்கள். இந்த பெரிய பொறுப்புக்கு நீங்கள் தயாராக வேண்டும். இதுவரை பஞ்சாயத்துகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பெண்கள் இருந்துள்ளனர். அவர்களும் தீவிரமாக செயல்பட முடியவில்லை. ஆனால் இனி பஞ்சாயத்துகளில் பெண்கள் மிக தீவிரமாக செயல்பட முடியும். தங்களுக்கு வழங்கப்படும் பணியை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பட்டியல் இனமக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு இருக்கிறது. மக்கள் தொகையில் இவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு இருக்கும்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்காக ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தேன். வெறுமனே ஆணையம் அல்ல; சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கத் தீர்மானித்து உள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன். இதற்கான மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முன்பு பரிசீலனையில் இருக்கிறது. ஒரு நாட்களுக்கு முன்பே அது நிறைவேற்றப்பட்டிருக்கும். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேற்றப்பட முடியவில்லை. அடுத்த சில நாட்களில் இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். துப்புரவுத்தொழிலாளர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் முன்னேற்றம் மிக முக்கியமானது. இதில் நாம் எந்த முயற்சியையும் விட்டு விட மாட்டோம்.

சில நகரங்கள், மாநகரங்களில் நடைமுறையில் உள்ள, தலையில் மனிதக் கழிவுகளை சுமந்து செல்லும் மனிதாபிமானமற்ற வழக்கத்தை முற்றிலுமாக நீக்குவதில் நாம் தீர்மானமாக உள்ளோம். இதற்காக ரூபாய் 111 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளோம். இவர்களுக்கு மாற்று வேலை தருவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். ஆணையம் அமைக்கப்பட்ட உடன், இந்த பிரச்சினைகளை அவர்கள் கவனிப்பார்கள்; இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள். இந்த சகோதர சகோதரிகளுக்கு உறுதி கூறுகிறேன் - ஆணையம் என்ன பரிந்துரைத்தாலும் அதற்கு இந்த அரசாங்கத்தின் முழு ஆதரவு இருக்கும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் (National Backward Class Financial Development Corporation) அமைக்கப்படுவது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது மிக நல்ல பணி செய்துள்ளது. இது (நிறுவனம்) 25,000 பேருக்கு கடன் வழங்கி உள்ளது; ஓராண்டு காலத்துக்குள் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்துள்ளது. இதே வழியில், மேலும் ஆயிரக் கணக்கானோர் பயன் பெறுவார்கள்.

நம் நெசவாளர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - முதன்முறையாக, அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் காத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு முன்னர், கிராம வளர்ச்சியை ஓர் அங்கமாகக் திட்டம் இருந்தது இல்லை. முதன் முறையாக, தற்போது கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வரும் திட்டங்கள், நெசவாளர்களை உள்ளடக்கி உள்ளன. இவர்களுக்கு கடன், பணிக் கருவிகள், வணிக மூலதனம் வழங்கப்படும். இதற்காக, ரூ. 525 கோடி, நெசவாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய திட்டத்தின் மூலம் அவர்கள் புது வாழ்வுக்கு நம்பிக்கை கொள்ளலாம். இந்த தருணத்தில் நெசவாளர்களை வாழ்த்துகிறேன். இந்த வசதிகளை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சில மாநிலங்களை வறட்சியும் சில மாநிலங்களில் வெள்ளமும் இருந்தது. உண்மையில் ஒரே மாநிலத்திலேயே சில பகுதிகளில் வறட்சி, சில பகுதிகளில் வெள்ளம்! இயன்றவரை நானும் சில மாநிலங்களுக்குச் சென்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற அளவுக்கு நிவாரணம் வழங்குவதில் காலத்தே உதவி இருக்கிறோம்.

வெள்ளத்தைப் பொருத்த வரை, இது மீண்டும் மீண்டும் (தொடர்ந்து) நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் வருகிறது; நிவாரணம் வழங்குகிறோம்; அடுத்த வெள்ளம் வரை மறந்து விடுகிறோம். இது சரியில்லை. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஒரு நிரந்தரத் தீர்வு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினையின் எல்லா அம்சங்களையும் ஆராய்வோம். இதை அவசரத்தில் செய்ய முடியாது; சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து நாம் தொடங்கியாக வேண்டும். பிகாரில் இருந்தோ உத்தரப் பிரதேசத்தில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்தோ நடவடிக்கையை தொடங்குவோம் என்று உறுதி கூறுகிறேன். இந்தப் பணியை நாம் நிறைவேற்றியாக வேண்டும். இல்லையேல் வெள்ளம் என்னும் சாபம் நமது நாட்டை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்.

சகோதரர்களே.. சில புதிய திட்டங்களைப் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். பல திட்டங்கள் நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன; பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறது; செயல்படுத்த வேண்டி இருக்கிறது.

முதல் திட்டம் - நமது சகோதரிகளுக்கு; குறிப்பாக நமது கிராமப்புற சகோதரிகளுக்கானது. பெண்களின் தற்போதைய நிலை, யாரும் அறியாததல்ல. பெண்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றால், 'தலை நிமிர்ந்து' நடப்பார்கள் என்று சிலர் கருதுகிறோம். பெண்களின் தன்னிறைவு - சமுதாயத்தில் மிக முக்கிய பகுதி; இதனை மகளிர் அதிகாரம் என்கிறோம். மகளிருக்கு அதிகாரம் தரும் திட்டங்களை நான் முன்னெடுக்க வேண்டும். இது மிகப் பெரிய காரியம்; இதனை நிறைவேற்ற நீண்டகாலம் ஆகலாம். இந்த திட்டம் குறித்து நிறைய சிந்தித்துள்ளோம். இந்த நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் வங்கியில், அஞ்சலகத்தில் அல்லது வேறு எங்கேனும் தனக்கென்று ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும்; தானும் ஒரு 'கணக்குதாரர்' என்கிற நிலையை அடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டம்.

பிறரைப் போலவே, தனது கணக்கை நிர்வகிக்கிற சுதந்திரம் இவருக்கு(ம்) வேண்டும். 100 ரூபாயோ, 50 ரூபாயோ, 30 ரூபாய் கூட இருக்கட்டும்.. தனது கணக்கில் பணம் செலுத்த அல்லது பணம் எடுக்க திறமை வேண்டும். எனவே 1000 கோடி ரூபாயில் இந்த திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது. தனக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தில் ஒரு பெண்மணி 300 ரூபாயுடன் கணக்கு தொடங்கினால், அரசு ரூ.75 தரும்; ஆண்டு நினைவில் அவர் ரூ.375 பெறுவார். இந்தப் பணம் மொத்தமும் அவருக்கே உரித்தானது. அவரிடமிருந்து நாம் எதுவும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உண்மையில் நாம் ரூ.75 தரப் போகிறோம். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பெறும் தன்னம்பிக்கை, விலை மதிப்பு அற்றதாய் இருக்கும். இந்த தன்னம்பிக்கைக்கு யாரும் விலை வைக்க முடியாது. இவர்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பெரும் பொறுப்புகளை ஏற்க இருக்கிறார்கள். அதனால், 'கணக்கு' என்றால் என்ன என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று கிராம சமூகத்தில் எத்தனை பெண்களுக்கு தனியே வங்கிக் கணக்கு இருக்கிறது? மிகச் சிலர் இருக்கலாம்.

கோடிக் கணக்கான கணக்குகள் தொடங்கப்படும் போது, மகளிர் உலகத்தில் அது பெரும் புரட்சியை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எனது வைராக்கியத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறேன்.

கிராமங்களில் தன்னார்வ அமைப்புகள் மகளிர் குழுக்கள் (மஹிளா மண்டலி) உள்ளன. இவர்களை வேண்டுகிறேன் - பெரும் தொகையில் அரசு செயல்படுத்த இருக்கும் இந்த திட்டம் முறையாக செயல்பட பெண்களுக்கு உதவுங்கள். ஓராண்டுக்கு இந்த அமைப்புகள் பெண்களுக்கு உதவலாம். அதன் பிறகு பெண்கள் தாமாகவே கற்றுக் கொண்டு இருப்பார்கள்; இது தொடர்பாக உதவி கேட்டு வர மாட்டார்கள். இந்தத் திட்டத்தை நாம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் இது ஒரு புதிய (ஆரோக்கியமான) மனப்போக்கை ஊக்குவிக்கிறது.

இரண்டாவதாக, வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு திட்டம். மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. இயன்றவரை அதிக எண்ணிக்கையில் பணி வாய்ப்பு வழங்குவதையே நமது திட்டம் சார்ந்து இருக்கிறது. கிராமப்புறங்களில் மக்கள் விளைச்சல் காலத்தில் வேலை பெறுகிறார்கள்; ஆனால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 90 - 100 நாட்கள், மந்திமக் காலம் (lean period) இந்த சமயத்தில் அதிக வேளாண் பணி இருக்காது. மக்கள் வேலை இன்றி சோம்பிக் கிடப்பார்கள். என்னால் உறுதியாய் சொல்ல முடியாவிட்டாலும், வேலை செய்ய யாரேனும் முன்வந்தால், அவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த திட்டத்தை நாம் நாடு முழுவதும் செயல்படுத்த இருக்கிறோம். ஏற்கனவே சில ஆண்டுகளாக ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் பிற திட்டங்கள் உள்ளன. இப்போதைய திட்டத்தின் கருப்பொருள் என்னவென்றால் வேலை இல்லாதவர்க்கு உறுதியாய் வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டு அறிவித்தபடி பின் தங்கிய நிலையில் இருக்கும் 1,700 வட்டங்களில் இது செயல் படுத்தப் படும்.

மூன்றாவதாக, இடைநிலை படிப்பு முடித்த இளைஞர்கள் (semi educated youth) வேலை பெறும் திட்டம். மெட்ரிகுலேஷன் (SSLC) தேறிய அல்லது தேறாத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. காரணம் அவர்களின் கல்வித் தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது; இதுவும் அன்றி, வேலை வாய்ப்புகளே இல்லை. இவர்களுக்காக ஒரு திட்டம் யோசித்துள்ளோம். இதன்படி இவர்கள் சொந்தமாக சிறிய தொழில் தொடங்கலாம். சிறிய கடை முதலான தொழில் நடத்த, பெரிதாய் பட்டம் எதுவும் தேவையில்லை. இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடங்கினால் அரசாங்கம் அவர்களுக்கு ஒரு லட்சம் நிதி உதவி செய்யும். இந்த ஒரு லட்சத்தில் 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும். நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் மீதம் உள்ள மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் இவ்வகையில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க உள்ளோம். இந்த மூன்று திட்டங்களை இன்று அறிவிக்கிறோம். இது திட்டங்களை மீதமுள்ள இந்த ஆட்சிக் காலத்திலேயே செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

இனி நாம் களத்தில் நிலவும் அரசியல் சூழல் பற்றிப் பார்ப்போம். பஞ்சாபைப் பொருத்த வரையில் முழு அமைதி நிலவுகிறது. இதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். நீங்களும் அறிவீர்கள். இந்த நாட்டில் மிகவும் அமைதியான மாநிலம் எது என்று சிலர் கேட்கிறார்கள். விடை- பஞ்சாப். கடந்த 12 ஆண்டுகளாக ரத்தம் சிந்திய அதே பஞ்சாப் தான். இதற்கான பெருமை பஞ்சாப் மக்கள், பஞ்சாப் அரசு இதனை சாதித்து இருக்கின்றனர்.இதனை சாத்தியம் ஆக்கிய ராணுவம் மற்றும் காவல் துறையும் இதில் பெருமை கொள்ளலாம். இவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். பஞ்சாப் நமது தானியக் களஞ்சியம். இங்கே ஏதும் தொல்லை ஏற்பட்டால் அது நாடு முழுதையும் பாதிக்கும். ஆனால் துணிச்சல் மிக்க பஞ்சாப் மக்கள் இந்த அதிசயத்தை சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். பஞ்சாப் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தஅந்த நாட்களில் கூட, உற்பத்தியில் அதுவே முதலிடத்தில் இருந்தது; இரண்டாவது இடத்துக்குக் கூட இறங்கவில்லை. இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இவர்கள் எல்லாரையும் வாழ்த்துகிறேன். பஞ்சாப் இப்போது தொழில் புரட்சிக்குத் தயாராய் இருக்கிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 2-3 ஆண்டுக் காலத்தில், இங்கே பசுமைப் புரட்சியுடன் தொழிற் புரட்சியும் இருக்கும்.

காஷ்மீரில் நிலைமை இன்னமும் மேம்படவில்லை. மிகக் குறைந்த அளவில் மேம்பட்டுள்ளது; இன்னமும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. காஷ்மீரில் தூண்டுதல் பணம் மற்றும் ஆயுதங்கள், பாகிஸ்தானில் இருந்து, பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் வருகிறது. காஷ்மீரில் பிரச்சினை உள்ளே இருந்து அல்ல; எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறது. காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கிறார்கள். இதை நான் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால் இவர்கள் குண்டுகளை எதிர் நோக்க நேர்கிற போது, இயல்பாகவே தமது உயிர் குறித்து அச்சம் கொள்கிறார்கள். மக்கள் இதனைச் சொல்லவில்லை. பயங்கரவாதம் முடிவுக்கு வந்தால் இவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்; நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இதில் சந்தேகம் இல்லை. ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீளப்படுவதாக பாகிஸ்தான் தவறான பிரசாரம் செய்து வருகிற அதே சமயம் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் ஒரு பேருந்தை நிறுத்தி 16 - 17 பேரை வெளியே இழுத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களை குண்டுக்கு இரையான அவர்களுக்கு மட்டும் மனித உரிமைகள் இல்லையா?

இந்த பயங்கரவாதிகள் உயிர் வாழ உரிமை அற்றவர்கள். என்கவுண்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்படும் போது ஏன் இவர்கள் கவலைப்படுகிறார்கள்? பயங்கரவாதிகளுக்கு மட்டும்தான் மனித உரிமைகள் உள்ளனவா? அவர்களுக்கு மற்றவர்களை கொல்ல உரிமை இருக்கிறது அதே நேரம் மனித உரிமை இருக்கிறதா? இது ஒரு வினோதமான லாஜிக். இதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு, அவர்களைப் பிடித்து, அங்கே நிலைமையை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்களைப் பாராட்டுகிறேன். இது தொடரும். பாகிஸ்தான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; காஷ்மீர் - இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. என்ன சக்தியை யார் பயன்படுத்தினாலும் யாராலும் இந்தியாவில் இருந்து காஷ்மீரைப் பிரிக்க முடியாது. சமீபத்தில் பயங்கரவாத தேசமாக அறிவிக்கப்படும் விளிம்பு நிலைக்கு பாகிஸ்தான் தன்னைத் தானே தள்ளிக் கொண்டது. பயங்கரவாதிகள் இருப்பது வேறு; ஒட்டுமொத்த மக்களையும் சேர்ந்து பயங்கரவாத நாடு என்று அறிவிக்கப்பது வேறு. அவர்கள் சாதனங்கள் தந்து உதவுகிற போது, அது யாரைத் துன்புறுத்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் போக்கின் காரணமாக யாருக்கும் எந்த ஆதாயமும் இருக்காது என்று எச்சரிக்கிறோம். இந்தியா தனது நிலையைத் தக்க வைக்கும். காஷ்மீர் இந்தியாவில் தான் இருக்கும். காஷ்மீர் மக்களுக்கு நாம் எல்லா வகைகளிலும் உதவுவோம். அவர்களின் உள் பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்போம்.

அசாம் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. போடோலாண்ட் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எட்டும் போது, சிறியதும் பெரியதுமாய் சில பிரச்சினைகள் எழலாம்; இவற்றை சரி செய்ய சிறிது காலம் பிடிக்கும். இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைக்குமாறு மக்களை வேண்டுகிறேன்.

அயோத்தியை பொருத்தவரை, எதுவும் சொல்லலாமா வேண்டாமா என்பதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. ஆனால் அங்கே நடந்த அழிவு நமது நாட்டின் பெருமையை (இமேஜ்) மோசமாக சீரழித்து இருக்கிறது என்பதை சொல்வது அவசியம். நாம் அழிவு செய்பவர்களாக மற்றவர்களுக்குத் தெரிகிறோம். 5,000 ஆண்டுகளாக நாம் அமைதியான மக்களாக இருந்து வருகிறோம். இப்போது உலகம் முழுவதும் நம்மைப் பற்றிய அபிப்பிராயம் மாறி இருக்கிறது. இந்தியாவில் காட்டுமிராண்டித்தனம் முளைத்து விட்டதோ இன்று வியப்புடன் பார்க்க வைத்து விட்டது. நமது பெருமை கூடவில்லை. மாறாக நாம் அவப்பெயர் பெற்று விட்டோம். நமது பண்பாட்டு மரபுகள் மற்றும் அமைதியான இயல்பு குறித்து மக்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். இந்த கொடூர குற்ற செயல் குறித்து நாம் எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. ஆனால் இதிலே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று - இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக (சிலரால்) வர்ணிக்கப் படுகிறது. யாரேனும் வெளிநாட்டுக்குச் சென்று இடிப்புச் செயலை நற்செயல் என்று வர்ணித்தால் அது இந்தியாவுக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும்.

நடந்தது நல்லதல்ல என்பதை அப்போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இதற்கு யார் பொறுப்பு என்பது குறுகிய காலத்தில் உங்களுக்குத் தெரிந்து விடும். எப்படி நடந்தது, யார் செய்தார்கள், யார் இதன் பின்னால் இருந்தார்கள் என்பதும் தெரிந்து விடும். இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு நோக்கம் - அரசியல் பயன்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துதல். அரசியல் மிக நல்ல விஷயம். மதமும் அப்படித்தான். மதம் இல்லாமல் தெளிவு இல்லை. குழப்பத்துக்கு தள்ளி விடும். எந்த மதமாக இருந்தாலும் அது நம்முடைய வாழ்க்கையை சரியான பாதைக்கு இட்டுச் செல்லவே இருக்கிறது. அரசியல் அமைப்புகளை, அரசியல் சமூகத்தை, (இந்த) தேசத்தை நிர்வகிக்க அரசியல், வழிகாட்டுகிறது. இரண்டுக்குமே, தனித்தனியே, அதற்கான இடம் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக மதம் பயன்படுத்தப்படுகிறபோது அது வெறுமனே மதமாக நின்று விடுவதில்லை; மதவாதமாக மாறி விடுகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாய் மதவாதத்தை எதிர் கொள்ள வேண்டும். அரசும் மக்களும் ஒவ்வொரு சிறுவரும் இதனை எதிர்கொள்ள வேண்டும். நாம் என்ன தியாகம் செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக மதவாதம் பெருகி வருவதைப் பார்க்கும் போது, இந்த தேசத்துக்கு எதிர்காலம் இருக்காது; இந்த தேசம் சிதறுண்டு போகும். (என்று அஞ்சுகிறேன்) ஒரு மதம் உயர்ந்தது; இன்னொரு மதம் தாழ்ந்தது; ஒன்று நல்லது மற்றது தீயது என்று (யாரும்) கோரினால், பிறகு நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இருக்காது. நாடு சிதறுண்டு போகும்.

பிற மதங்களை வெறுக்க அல்லது தாழ்வாகப்பார்க்க எந்த மதமும் எங்கும் குறிப்பிடவில்லை என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நமது பார்வையில் நமது சாசனத்தில் நமது நாட்டில், பெரும்பான்மையாய் இருந்தாலும் சிறுபான்மையாய் இருந்தாலும், அனைவரும் சமமே. எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், மிகச் சிறிய மைனாரிடியாக இருந்தாலும் அவர்களும் பெரும்பான்மைக்கு உள்ள அதே உரிமைகளை அனுபவிக்கலாம். வேறுபாடுகள் இந்த நாட்டில் வேலை செய்யாது; ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை நீங்களும் உறுதி செய்ய வேண்டும். சாசனத்தை மீறுகிற யாரும் அதனைச் செய்ய முடியாது என்பதை நீங்களும் உறுதிப்படுத்த வேண்டும். ஓரிரு ஆண்டுகளுக்கு, ஓரிரு தேர்தல்களில் அவர்கள் இதைச் செய்யலாம்; ஆனால் மக்கள் புரிந்து கொள்வார்கள். சரியான பாடம் புகட்டுவார்கள். அரசியலில் மதம் கலவாமல் தனித்தே இருத்தல் வேண்டும். இரண்டுக்கும் நாம் சம முக்கியத்துவம் தர வேண்டும். உங்கள் மதத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் தாருங்கள். யாருக்கும் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் யாரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் ஓட்டு கேட்க உரிமை இல்லை. உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு ஆதாயம் பெற யாருக்கும் உரிமை இல்லை. இது நடைபெற அனுமதிக்காதீர்கள் என்று வேண்டுகிறேன்.

மிகவும் கவனத்துடன் இருக்குமாறு மக்களை வேண்டுகிறேன். சமய சார்பின்மை நமது மூச்சு. இதைத் தவறவிட்டால் நமது மூச்சு நின்று விடும்; நம் நாட்டின் மூச்சு நின்று விடும். சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்த அரசு (எல்லா) முயற்சி(யும்) எடுத்து வருகிறது. அரசியலுக்கு மதத்தை பயன்படுத்துதல், விதிமீறல் என்று ஆக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனாலும், சட்டம் மட்டுமே போதுமானது அல்ல. அரசியலில் மதத்தை கலப்பதால் உண்டாகும் ஆபத்து பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் (அரசு) என்ன செய்கிறோமோ அதற்கு நீங்கள் துணை இருக்க வேண்டும். இதன் வெற்றிக்கு நாம் ஒற்றுமையாய் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அழிவு பற்றிப் பேசினேன். அழிவுக்கு நமது பதில் என்ன? யாரேனும் எதையேனும் அழித்து விட்டால், பதிலுக்கு வேறு யாரேனும் வேறு எதையேனும் அழித்து விட்டால், பிரச்சினை தீர்ந்து விடாது. அழிவுக்கு சரியான ஒரே பதில் - ஆக்குதல். எது அழிக்கப் பட்டாலும் அதைக் கட்ட வேண்டும்; மீண்டும் கட்ட வேண்டும். ("The correct and the only response to the destruction is the construction. Whatever has been abolished, we will have to build it; rebuild it.")

போர்களால் உலகில் எத்தனை மாவட்டங்கள் அழிந்தன என்பது தெரியாது. லண்டனில், தீயில் அந்த மாநகரின் பாதி எரிந்து போனது. ஆனால் யாரும் தளர்ந்து விடவில்லை. அழிந்து போன ஒவ்வொரு கட்டிடமும் போருக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது. அழிக்கப்பட்ட மாவட்டங்கள், முன்னை விட மேலானதாய் மீண்டும் கட்டப்பட்டன. அழிவு சக்திகளுக்கு எதிராய், குறிப்பாக அயோத்தி அழிவுக்கு எதிராய், நாம் தளர்ந்து விட மாட்டோம். தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அழிவுக்கு, மறு கட்டுமானம் மூலம் பதில் அளிப்போம். நான் உங்களுக்கு உறுதி அளிப்பது மட்டுமில்லை; எங்கள் அனைவரும் முன் வாருங்கள் என்று அழைக்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாய் இணைந்து உழைத்தால், அயோத்தியின் சமீபத்திய கடந்த காலம் நமது நற்பெயருக்கு ஏற்படுத்திய களங்கம் மறைந்து போகும். அப்போதுதான் நமது நாட்டின் சமய சார்பின்மை வெற்றியடையும்.

அயலுறவுகளைப் பொருத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது என்பதை அறிவீர்கள். நம் நாட்டில் வளரும் நாடுகளின் G-15 கூட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம். முன்னேற்றத்தை நோக்கி வளரும் நாடுகள் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளது. வளரும் நாடுகளின் நோக்கங்களை முன் கொண்டு செல்லும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இன்றைய உலகில், சுற்றுச்சூழல் மற்றும் பிறதுறைகளில் பல்வேறு புதிய சச்சரவுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பேச்சுவார்த்தை, கருத்துப் பரிமாற்றம் மூலம் வேறுபாடுகளைக் களையலாம். இரண்டு பிரிவுகள் (blocks) இருந்த காலம் போய்விட்டது. அவை சில சமயம் நேரடியாக சண்டையிடும்; தமக்கு விசுவாசமாக உள்ள குழுக்களைத் தூண்டிவிட்டு சண்டையில் ஈடுபட வைக்கும். நிலைமை மாறிவிட்டது. வலிமையான வாதங்கள் மன உறுதியுடன் முன்னேற வேண்டிய சூழல் இது. மன உறுதி இருந்தால் வெற்றி பெறலாம்.

பாகிஸ்தான் தவிர்த்து பிற அண்டை நாடுகளுடன் நமது உறவு மிக நன்றாக இருக்கிறது. பாகிஸ்தானோடும் நாம் சுமுக உறவு வைத்துக் கொள்ள முடியும். அதன் பிரதமரை நான் ஆறு முறை சந்தித்து உள்ளேன். தனிப்பட்ட உறவுகள் நன்றாக உள்ளன. ஆனால் கொள்கை நிலைப்பாடு என்று வருகிறபோது எதுவும் சொல்வதற்கு இல்லை. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்று புதிய தலைமை பொறுப்பேற்க இருக்கிறது. புதிய தலைமை எதார்த்தத்தை உணர்ந்து எதார்த்தத்தை ஒப்புக்கொள்கிற துணிச்சல் கொண்டதாய் இருக்கும் என்று நம்புகிறேன். அப்போதுதான் மேற்கொண்டு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை இடம்பெற முடியும். இதில் எந்த குழப்பமும் இல்லை. உண்மை என்னவெனில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இருக்கும். இந்த உண்மையை அவர்கள் ஒப்புக் கொண்டால் இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்புறவு தொடரும். இந்த உறுதி மொழியை உங்களுக்குத் தருகிறேன். இதே உறுதி மொழியை பாகிஸ்தானுக்கும் தருகிறேன். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்க பலமுறை பாகிஸ்தான் முயன்று தோற்றுவிட்டது. இந்த என்னத்தால் பாகிஸ்தானும் துன்பப்பட்டு இருக்கிறது. எனவே இந்த எண்ணத்தை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும். இந்த அடிப்படையில் நாம் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். நமது நட்பு உலகத்துக்கே உதாரணமாக இருக்கும்.

நண்பர்களே.. நான் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். இன்று நாம் என்ன செய்தாலும் லட்சக்கணக்கான ஏழை சகோதர சகோதரிகளுக்காகவே செய்கிறோம். வெளியில் இருந்து நிதி முதலீடு வருகிறது. இது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நமது திட்டங்களுக்குத் தடை போடவே இது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். பணம் எங்கிருந்து வந்தாலும், தொழிற்சாலைகள் (என்னவோ) இந்தியாவில்தான் நிறுவப்பட உள்ளன. தொழிலதிபர்கள் தொழிற்சாலைகளையும் தங்களோடு கொண்டு போய் விட மாட்டார்கள். ஏற்கனவே சொல்லி விட்டேன் - கட்டுமானங்கள், ரயில்வே, சாலைகள்... அந்நிய பணத்தால் கட்டப்படும் அனைத்தும் இந்தியாவில் இங்கேயேதான் இருக்கும். பணம் தொழில்நுட்பத்துடன் இங்கு வந்து தொழில் தொடங்கும் யாரும் அவர் விரும்புகிற வரை இங்கே இருக்கலாம். அவர் திரும்பிச் செல்ல விரும்பினால் அவருக்கு பணம் திருப்பி செலுத்தி விடுவோம். ஆனால் யாரும் திரும்பிப் போக வேண்டும் என்பது நமது விருப்பமில்லை. அவர்கள் இங்கே வரலாம், தங்கி இருக்கலாம், எங்களோடு சேர்ந்து உழைக்கலாம், மற்ற நாடுகளில் போலவே இந்தியாவிலும் முன்னேற்றத்தில் உதவலாம். இவர்களை வரவேற்கிறோம். இவர்களால் நமது லட்சக் கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். கிராம வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் முதலீடு எனக்குத் திருப்தியாக இல்லை. இது 50 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் அவ்வளவு பணம் நம்மிடம் இல்லை. பல நாகரிகங்களின் தொடக்கமாக இந்தியா இருந்துள்ளது. இன்று நமது நாகரிகத்தின் மீதான, நமது அமைதியான பண்பாட்டின் மீதான தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய பெரும் தேவை (கடமை) இருக்கிறது. தவறினால், நமது பெருமை, நமது அடையாளம், நமது அடிப்படை கட்டுமானம் - மிக மோசமாக பாதிக்கப்படும் ; மீட்டெடுப்பது மிகவும் கடினமாகப் போய் விடும்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். எத்தனை இழப்பை நாம் சந்தித்து இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். பம்பாயில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக ஓரிரு மாதங்களில் சுமார் 10,000 கோடி ரூபாய் இருந்து விட்டோம். குண்டு வெடிப்பு சம்பவங்கள் யாருக்கும் தேவையில்லை. இது போன்ற சம்பவங்கள் எங்கே நடந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். ஆனால் எங்கேயோ எப்போதோ ஒரு முறை அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது, நமது நாட்டின் மொத்த கவனமும் ஏன் (அதை நோக்கி) திசை திருப்பப் பட வேண்டும்? நாம் ஒரே திசையில் தான் செல்ல வேண்டும் - பொருளாதார வளர்ச்சி என்ற திசை. நாம் பின்தங்கி உள்ளோம். நம்மை விட சிறிய நாடுகள் நமக்கு மேலே உள்ளன. நாம் இன்னமும் முஸ்லிம் கலவரம், சாதியக் கலவரம், அரசியல் மதம் என்று 2-3 ஆண்டுகளாகத் தொடர்ந்து இதிலேயே ஈடுபட்டுக் கொண்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்தாது இருந்தால், நமது வளர்ச்சி தடைப்படும்; நமக்கு எதிர்காலம் மங்கிப் போகும். உலகம் முழுதுமே இந்த எச்சரிக்கையை நமக்கு வழங்குகிறது. நமது பொதுஅறிவு இந்த எச்சரிக்கையை நமக்குத் தருகிறது. இதைக் கேட்டு நடக்கிறோமா இல்லையா என்பது நமது கையில்தான் இருக்கிறது. இதைக் காது கொடுத்து கவனமாய்க் கேட்க வேண்டும். உபநிஷத்துகள் சொல்வது போல - தலையில் பானை வைத்துக் கொண்டு ஒரு கலைஞன் ஆடுகிறார். ஒருபுறம் இசை... பாடல் ஒலிக்கிறது. அவர் ஆடுகிறார். ஆனால் தலை மீதுள்ள பானைக்கு ஏதும் நேராதபடி கவனத்துடன் ஆடுகிறார். ஆக்ரோஷமாக முழு உடலையும் நகர்த்தி ஆடுகிறார். ஆனாலும் தலைமேல் உள்ளது, கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்.

'மவுலிஷ்ட் கும்ப் பரிரக்க்ஷரன் ஆதிர் நாட்யா'! நமது மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும். எது வந்தாலும், நம் தலையின் மீது உள்ள வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு... கீழே விழுந்து விடாது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் மத்தியில் நாம் நமக்கு உரித்தான இடத்தைப் பெற்றுள்ளோம். இது இன்னும் மேம்பட வேண்டும். நம் முன்னே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலின் வலிமை கூட்டப் படும்; ஐக்கிய நாடுகள் சபைத் திட்டங்களில் நாம் அதிகபட்சமாக பங்கெடுக்க வேண்டும். இதை நாம் எப்போதும் செய்கிறோம். எங்கே ஏதேனும் சச்சரவு என்றாலும் உடனே எல்லாரும் இந்தியாவை தான் உதவிக்கு நாடுகிறார்கள். ஏனென்றால் எந்த சச்சரவும் நீடிப்பதை இந்தியா விரும்புவதில்லை. போருக்கு ஊக்கம் அளிப்பவர்களில் நாம் இல்லை. நாம் அமைதியை விரும்புகிறோம். அமைதியானவர்களாய் இருக்கிறோம். எனவே நமக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டில் நாம் இதனை தக்க வைத்துக் கொண்டால்தான் வெளியில் நமக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உள்நாட்டில் வலிமையாக இல்லாத நாடு வெளியிலும் வலிமையாக இருக்க முடியாது.

மிகுந்த மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன் - ஒருவர் எந்த மதத்தையும் நம்பலாம்; நாத்திகராவும் இருக்கலாம்; இது பிரச்சினையே இல்லை. இது ஒருவரின் நம்பிக்கையின்பாற்பட்டது. இதன் அடிப்படையில் பாகுபாடு இருக்காது. சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில், இவர்கள் எண்ணிக்கையில் மட்டுமே சிறுபான்மையினர். ஆனால் குடிமக்களாக இவர்கள் யாருக்கும் கீழே உள்ளதாய்க் கருதப்பட மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். சிலருக்குத் தம் உயிர் உடைமைகள் குறித்து அச்சம் இருக்கிறது. சமீபத்து கலவரங்களுக்குப் பிறகு இந்த அச்சம் அதிகரித்து உள்ளது. இது தொடர்பாகக் கூறுகிறேன் - சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக நமது காவல் துறையில் Rapid Action Force (விரைவு நடவடிக்கை படை) சேர்த்துள்ளோம். ஐந்து பட்டாலியன்கள் ஏற்கனவே உள்ளனர். மேலும் ஐந்து பட்டாலியன்கள் பயிற்சியில் உள்ளனர். இந்தப் படையை இன்னும் அதிகரிக்க உள்ளோம். இந்தப் படையால் கலவரங்களை உடனடியாக வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும். சாதாரண காவல் படையை விட இது சிறப்புப் பயிற்சி பெற்ற படை. இந்திராஜி காலத்திலேயே இந்த யோசனை தோன்றியது; ராஜீவ்ஜி நாட்களில் இது விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனை இப்போது செயல்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

சமீபத்தில் நாம் 500 கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டைக் கொண்டு தேசிய சிறுபான்மை நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தொடங்க யோசனையை முன் வைத்துள்ளோம். ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் இது பற்றி முடிவு எடுக்கப் பட்டது. இது சட்டப்படி சரியாக இருக்காது என்று தொடக்கத்தில் நினைத்தோம்; ஆனால் தொடர்ந்து ஆய்வு செய்து சாத்தியம் ஆகிற முடிவை எட்டியுள்ளோம்.

ஒருபுறம் உயிர், உடைமைகளின் பாதுகாப்புக்கு வேண்டிய அத்தனையும் செய்வோம். மறுபுறம், பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான நடவடிக்கைகளையும் எடுப்போம். சிறுபான்மை ஆணையத்துக்கு ஏற்கனவே சட்ட அங்கீகாரம் தரப்பட்டு விட்டது. அதன் பரிந்துரைகளை இயன்றவரை செயல்படுத்துவோம்.

மௌலானா ஆசாத் கல்வி நிறுவனம் மூலம் கல்விக்காக திட்டமிட்டவை அனைத்தும் மேலும் விரிவாக்கப்படும். இந்த நிறுவனத்துக்கு நாம், மேலும் நிதி உதவி வழங்குவோம். கல்வித்துறையில் உச்சபட்ச சேவை புரிகிற விதத்தில் இந்த நிறுவனத்தைத் திறன் உள்ளதாக்குவோம்.

வக்ஃப் சட்டத்தைப் பொருத்த வரை, புதிய சட்டம் அல்லது இருக்கும் சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும். இதனால், வக்ஃப் வாரிய சொத்துகள் பற்றிய சச்சரவுகள் உடனடியாகக் கையாளப் படும். இது போன்று பல திட்டங்கள் உள்ளன. இது குறித்து விரிவாகச் சொல்ல நேரமில்லை. நான் சொல்ல நினைக்கும், மீண்டும் மீண்டும் வலியுறுத்த நினைக்கும் முக்கிய கருத்து - எல்லாச் சூழ்நிலைகளிலும் இந்தியாவில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பெரும்பான்மை சிறுபான்மை என்று யாருமில்லை. நாம் எல்லோரும் இணைந்து இருப்போம்.

ஆகவே இன்று உலகத்துக்கு நாம் விடுக்கும் செய்தி - நமது ஒற்றுமையை, உலகில் நமக்கான இடத்தைப் பாதுகாக்க, இந்தியாவின் பெருமையை மேலும் கூட்ட.. உறுதியுடன் உள்ளோம்.

இந்தப் புதிய பொறுப்பை ஏற்று நடக்க, புதிய திசையில் பயணிக்க உங்களுக்கு இறைவன், வலிமையை அருளட்டும். நாம் முன்னேறி நடக்கிறோம். மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்கள் இந்த தேசத்தை, எதிர்காலம் நோக்கி வழி நடத்தி உள்ளார்கள். இந்தப் பாதையை நாம் பின்பற்றுவோம். இந்தப் பாதையைப் பின்பற்றுவதில் நாம் பிசக மாட்டோம் என்று உலகுக்கு உறுதி கூறுவோம். இதுதான் நமது மேம்பாட்டுக்கான, நம் தேசத்தின் மற்றும் மனித இனத்தின் மேம்பாட்டுக்கான வழி.

மீண்டும் ஒருமுறை இந்த ஆகஸ்ட் 15 மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். வரும் ஆண்டு முயற்சிகரமான அமைதியான ஆண்டாக அமையா வாழ்த்துகிறேன். உங்கள் பாசத்தை வேண்டுகிறேன். தயவு செய்து உரக்கச் சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 46 - ‘வளர்ச்சியே எங்கள் இலக்கு!’ | 1992

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்