அஞ்சலி: இந்த புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்க்க முடியவில்லையே ஞாநி!

By பால்நிலவன்

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் காட்சியின்போதும் அவரது அலாதியான புன்சிரிப்பும் கைகுலுக்கல்களும் நிச்சயம் பலருக்கும் பரிச்சயமான ஒன்று.

சென்னையில் ஞாநியில்லாத புத்தகக் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானது அவரது மகன் திரைப்படக் கல்விக்காக இரண்டு ஆண்டுகள் மும்பையில் குடியேறியது.

இந்தப் புத்தகக் காட்சிக்குக் கூட அவர் வந்திருக்கிறார். ஆனால் நான் சென்ற நேரங்களில் அவர் காணக்கிடைக்கவில்லை.

சென்ற இரண்டு ஆண்டுகளில் சற்றே தளர்ச்சியுற்ற நிலையில்கூட (ஆம்ஆத்மி சார்பாக அவர் எதிர்கொண்ட ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி தந்த தேர்தல் தோல்வியின் தளர்ச்சியல்ல) புத்தகக் கண்காட்சிக்கு வந்து எல்லோரிடமும் அளவலாவியது நினைவின் சாளரங்களில் மெல்லிய காற்றாக வீசிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்தப் புத்தகக் காட்சியை எதிர்கொள்ளும் எனது எதிர்பார்ப்பில் அவரது புன்னகையும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது இந்த முறை மிஸ்ஸிங்!

முதல்முதலில் காயிதே மில்லத் புத்தகக் காட்சியில் அவரைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் பிரமாண்டமான வளாகத்தில் புத்தகக் காட்சிக்கு வெளியே பரந்துவிரிந்த புல்வெளியில் அமர்ந்திருந்தார். அதற்குமுன் என்னை அவருக்குத் தெரியாது. நானாக சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் எதிரே அமர்ந்து அவரது பல்வேறு பங்களிப்புகள் குறித்து பேசத் தொடங்கினேன். அச்சமயம் அவர் பிரபல வாரஇதழ் குடும்பத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய சிறுவர் இதழ் ஒன்றுக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார்.

''தாங்கள் பொறுப்பேற்றிருக்கும் சிறுவர் இதழ் நன்றாக உள்ளது. அதே சமயம் அதன் தலையங்கத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுதிஉள்ளீர்களே... குழந்தைகள் உலகத்தோடு அதை சம்பந்தப்படுத்துவது சரிதானா?'' என்று கேட்டேன்.

''இன்றுள்ள குழந்தைகளை என்ன நினைத்துவிட்டீர்கள்? அவர்களுக்குத் தெரிந்த உலகங்கள்கூட உங்களுக்குத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். ஒருகணம் செய்வதறியாது விழித்தேன். அவர் கூறியதுதான் எவ்வளவுபெரிய உண்மை. குழந்தைகள் சார்ந்த புரிதலின் வேறு பக்கங்களும் கிளைவிடத் தொடங்கியது அந்தநிமிடத்திலிருந்துதான்.

எல்லா பத்திரிகையாளர்களும் இப்படியெல்லாம் யாரிடம் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள ஞாநி அளவுக்கு இடம்தருவார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஒரு திறந்த புத்தகமாக அவர் இருந்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஞாநி நிறைய தரமான தொடர்களைத் தயாரித்தார். அதில் குறிப்பிடத்தகுந்தது நான்கைந்து வாரங்களே வந்த அவரே இயக்கி நடித்த பெரியார் குறித்த தொடர். பின்னர் அது பிலிம்சேம்பரிலும் திரையிடப்பட்டு சமூக ஆர்வலர்கள் சிந்தனையாளர்கள் பலரது பாராட்டையும் பெற்றது.

நீங்கள் சிறுகதைகள்தானே எழுதறீங்க... நான் தொடர்கதை எழுத ஆரம்பிச்சிட்டேன் பாத்தீங்களா என்று விளையாட்டாக அந்தநேரத்தின் தருணத்தின் மகிழ்ச்சியைக்கூட்ட அவர் ஒருமுறை கேட்டார். அவர் எழுதிய தவிப்பு தொடர்கதை குறித்து எனக்கு பெரிய அபிப்பிராயங்கள் இல்லை என்று சட்டென்று கூறிவிட்டேன். ஹாஹாஹா.... என்று விழுந்துவிழுந்து சிரித்தார். அது உங்களுடைய அபிப்பிராயம் என்றார்.

அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது... விமர்சனத்தையும் பாராட்டையும் சமபுள்ளியில் அணுகும் பெருந்தன்மை.

இது எப்படி எனக்குத் தெரிந்தது என்றால் அடுத்த மாதமே அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த ‘தீம்தரிகிட’ இதழில் நான் எழுதிய எனது முக்கியமான கதைகளில் ஒன்றான 'இன்னுமொரு கணக்கு' எனும் சிறுதை வெளிவந்திருந்தது.

மேற்கத்திய படைப்பாளிகளின் நாடகங்களை இன்று கல்லூரி வளாகமாகத் திகழும் சத்யா ஸ்டூடியோ தளங்களில் அரங்கேற்றினார். ஒவ்வொரு நாடகத்திற்கும் பார்வையாளனாக சென்று நாடக முடிவின்போது அவரை சந்தித்து அவரது நடிப்பு, இயக்கம் குறித்து பாராட்டிப் பேசினேன்.

அவர் வரைந்த இலகுவான ஓவியங்களும் எளிதான சொற்களும் நேரடியான சொல்முறைகளும் அவரது பத்திரிகை பயணத்தின் பாதையை சாதனையாக மாற்றித்தந்தன.

ஒரு நல்ல நேர்மையான பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் அனைத்தும் ஞாநியிடம் இடம்பெற்றிருந்ததுதான் அவரது பத்திரிகைப் பயண வெற்றியின் அடிநாதம் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஒருமுறை கடற்கரையிலிருந்து கண்ணகி சிலையை ஜெயலலிதா அரசு அகற்றியது குறித்து ஞாநி அதை அகற்றியது தவறில்லை என்று பத்திரிகையில் எழுதியிருந்தார்.

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் அவரிடம் அதுகுறித்து நான் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பெரிய விவாதமாக மாறிய தருணங்களும் என்றென்றும் மறக்கமுடியாது. ஆனால் அதை அவர் மனதில் வைத்துக்கொண்டதாகவே தெரியவில்லை.

அடுத்த புத்தகக் கண்காட்சியிலேயே சற்று பார்க்காமல் நகர்ந்து போன என்னை பெயர்சொல்லி அழைத்தார். ஏனெனில் எப்போது சந்தித்தாலும் நான் அவரிடம் அரசியல் நிகழ்வுகளையும் திறந்த பார்வையோடு அலசும் அவரது நட்பைக் கோருபவன். அப்படியிருக்க நான் நகர்ந்துபோனது அவருக்கு குழப்பதை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

அவரிடம் சென்ற நான் முதல்வேலையாக மன்னிப்புக் கோரினேன். ''போனவாரம் உங்ககிட்ட நிறைய முரண்பாடா பேசிட்டேன் சாரி சார்'' என்றேன்...

''நீங்க வேற அதுஎன்ன நம்ம ரெண்டுபேருக்குள்ள வாய்க்கா வரப்பு தகராறா என்ன? ரெண்டு பேருமே ஒரு பொதுவிஷயத்தைத்தான் பேசினோம். இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு?'' என்றார். அதுதான் ஞாநி!

யார் எதிரே வந்தாலும் என்னை கையைப்பிடித்து வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசினார். அன்று மீண்டும் எங்கள் காரசாரமான அரசியல் சூடுபிடிக்கும் நேரம் தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டன.,..

ஞாநி சார்!... இந்த புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்க்கமுடியவில்லையே! நீங்கள் வந்திருக்கக்கூடும். ஆனால் என் கண்ணில் தென்படவில்லை.

புத்தகக் காட்சியில் உங்களைக் காணாததும் முரண்பாடுகள் நிறைந்த உலகிலிருந்து தாங்கள் இன்று காலை விடைபெற்றுக்கொண்ட செய்தியும் அறிந்தபோது, வாழ்வின் ஏதோ ஒரு வாசல் அறைந்து மூடப்பட்டது போன்ற வலியைத் தருகிறது ஐ யெம் வெரி ஸாரி... சார்....

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்