செங்கோட்டை முழக்கங்கள் 45 - ‘துணிச்சலான முடிவு... அபாரமான விளைவு!’ | 1991

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

சுதந்திர இந்தியாவில், நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் பிரதமர், ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார் என்கிற பெருமையை முதலில் பெற்றவர் பி.வி. நரசிம்மராவ். 1991 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுண்டார். இதனைத் தொடர்ந்து முன்னர் ஆந்திராவின் முதல்வராகவும் பின்னர் பல ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ், தனது 70-வது வயதில் இந்திய பிரதமராகப் பதவி ஏற்றார். இவரது காலத்தில் தான் பல புதிய பொருளாதார கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. அநேகமாக எல்லாத் துறைகளிலும் இந்தியா அபார வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முகம் நவீனத்துக்கு மாறியது; இந்தியர்களின் வாழ்க்கை முறை அடியோடு மாற்றம் கண்டது.

இதுகுறித்து விரிவாக 1991 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரசிம்மராவ் ஆற்றிய சுதந்திர தின உரை - இதோ: “நமது நாட்டின் 44-வது சுதந்திர தின தருணத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற ஒரு சாதாரண ஊழியன் பல்லாண்டு சிறப்புமிக்க செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து உங்களுடன் உரையாடுகிறேன். நமது ஜனநாயகத்தின் சிறப்பு இது. உங்கள் ஆசிகளால், எனது நல் அதிர்ஷ்டத்தால் விளைந்தது. எண்ணற்றோர் தமது தியாகங்களால் ரத்தத்தால் சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் பேணிக்காத்தார்கள். ஜனநாயகம் என்னும் மகத்தான தேர், முன்நோக்கி நிலையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து முன்னேறியபடி நகர்ந்து கொண்டு இருக்கும்.

கடந்த 44 ஆண்டுகளில் பத்து முறை நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சமீபத்தில் தான் பத்தாவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல்களில் உங்களது கோபமும் உங்களது பாராட்டுகளும் வெளிப்பட்டுள்ளன. நீங்கள் வழங்கிய வாக்கை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள். நாங்கள் உங்களிடமிருந்து வந்தவர்கள். நாங்கள் உங்களில் ஓர் அங்கம். இதுதான் எங்களின் அடையாளம். இதைத் தவிர்த்து வேறு அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை.

துயரத்தின் நிழலில் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ராஜீவ் காந்தியின் கொடூரக் கொலை நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. நமது நாட்டுக்கு, அடுத்த 20-25 ஆண்டுகளுக்கான தலைமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற கருதப்பட்ட ஓர் இளைஞனின் திடீர் மறைவு நம் எல்லாரையும் இருளில் மூழ்கடித்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? பிறந்தவர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஒரு முழு வாழ்க்கையின் நிறைவில் மரணம் சம்பவித்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் காலம் தவறிய மரணம் சோகத்தை ஏற்படுத்துகிறது. நமது நாட்டின் எதிர்காலத்துக்காக ராஜீவ் ஜி கொண்டிருந்த திட்டங்களை நாம் நிறைவேற்றுவோம். அவர் காட்டிய பாதையை பின்பற்றுவேன் என்கிற உறுதியுடன் இன்று உங்கள் முன் நிற்கிறேன்.

இன்று நமது நாடு சந்தித்து வரும் நெருக்கடியான கட்டத்தை உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இந்த அரசு பதவி ஏற்று 55 நாட்கள் ஆகின்றன. இந்த நாட்களில் சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். சில சங்கடங்களை தவிர்த்து இருக்கிறோம். நாங்கள் அரசு அமைக்க மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் போதுமான பெரும்பான்மை (மெஜாரிட்டி) வழங்கவில்லை. மக்களின் வாக்கை ஏற்றுக்கொண்டோம். அரசு அமைத்தோம். நமது நாடு வளர்ச்சி நோக்கி நகர்வதை உறுதி செய்வதில் எந்த முயற்சியையும் விட்டு வைக்க மாட்டோம். எங்களுக்கு பிற அரசியல் கட்சிகள் அளிக்கும் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. அரசின் நிலைத்தன்மையை குறித்து சந்தேகம் எழ எந்தக் காரணமும் இல்லை என்று நான் வலுவாக நம்புகிறேன்.

இந்த அரசாங்கத்தின் முன்னுள்ள இன்றைய நிலைமையை சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நமது பொருளாதாரம் கடுமையான நெருக்கடியின் பிடியில் இருந்தது. நமது நிதி மீதான (பிறரின்) நம்பிக்கை அதல பாதாளத்தில் இருந்தது. அடுத்த ஓரிரு வாரங்களில் நமது கடனை திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்படுவதாய் இருந்தது. இந்த நிலைமையில் தான் நான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். பல பிரச்சினைகள் நீண்ட நாட்களாக இருந்து வந்தவை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் சிக்கல் இன்னும் அதிகரித்தது. இது நமது 'மரபின் ஓர் அங்கம்'. (This was part of our legacy) நிலைமை கைமீறி செல்வதாய் இருந்தது. இனியும் தாமதிக்க முடியாது; தாமதம் தற்கொலைக்குச் சமம் ஆகிவிடும். எனவே நாம் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டி இருந்தது. துணிச்சலான முடிவுகள் எடுத்தோம். அழிவுப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தினோம். இன்னும் நிறைய செய்ய வேண்டி இருந்தது. ஆனால் நிச்சயமாக அப்போதைக்கு நிலைமை மேலும் மோசம் ஆகாமல் தடுத்து நிறுத்தினோம்.

நமது தேவைகளுக்காக நாட்டில் பலவற்றை நாம் உற்பத்தி செய்கிறோம் என்பதை அறிவீர்கள். ஆனாலும் சில பொருட்களை நாம் இன்னமும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சில பொருட்களை நாம் உற்பத்தி செய்கிறோம். ஆனால் அதன் அது நமது தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஆகையால் நாம் மண்ணெண்ணெய், டீசல், சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள் ஆகிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றை இறக்குமதி செய்ய நமக்கு அந்நிய செலாவணி தேவை. நமது ரூபாயில் வெளிநாட்டில் பொருட்களைப் பெற முடியாது. நமது அந்நிய செலாவணிக் கையிருப்பு அநியாயத்துக்கு தேய்ந்து போயிருந்தது. இன்றும் கூட நாம் வசதியான சூழலில் இல்லை. ஆகவே ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டி இருந்தது. நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் பதிலுக்கு அந்நிய செலாவணி கிடைக்கும். இதற்கு ஏதுவாக முதலில் நாம் 'லைசென்ஸ்' 'பர்மிட்' முறையை நீக்கினோம். இந்த குழப்பமான முறை மக்களுக்குப் பல தடைகளை உருவாக்கி இருந்தது. இந்த விஷ சுற்றை நாம் உடைத்தோம். அதில் இருந்து விடுதலை அளித்தோம்.

அந்நிய செலாவணி விகிதத்தில் சிறிய மாற்றம் மூலம் ஏற்றுமதி அதிகரிக்க வழி செய்தோம். வரும் நாட்களில் ஏற்றுமதி மேம்படும்; கூடுதலாக அந்நிய செலாவணி கிடைக்கும் என்று நம்புகிறோம். புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்துள்ளோம். கிராம மக்களின் தேவையை மனதில் கொண்டு நிறைய பொதுநலத் திட்டங்களை வடிவமைத்துள்ளோம்.

இந்த திட்டங்களில் சிலவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். நிறைய செய்து இருக்கிறோம். விரிவாகச் சொல்ல நேரம் போதாது என்பதால் சிலவற்றைப் பற்றி மட்டும் விளக்குகிறேன். ராஜீவ்ஜியின் நினைவாக, நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் குடிதண்ணீர் வழங்கும் விரிவான திட்டம் தயாரித்து உள்ளோம். கடந்த 40 ஆண்டுகளில் எண்ணற்ற கிராமங்களில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல கிராமங்களில் இன்னமும் குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை இருக்கிறது. இத்தகைய 80,000 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ராஜீவ் பெயரால் ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும். இவர்களுக்கு உதவ ஒரு நிறுவனம் (கார்ப்பரேஷன்) தொடங்குகிறோம். நாட்டில் எப்போதேனும் மதக்கலவரம் நடைபெறுவதை நாம் அறிவோம். இந்தக் கலவரத்தில் பலர் கொல்லப் படுகிறார்கள்; பலரின் வாழ்க்கை நாசமாகிறது; கவனிப்பார் இன்றி குழந்தைகள் அனாதைகள் ஆகின்றனர். இந்த குழந்தைகளுக்காக ஒரு தேசிய நிதியம் (National Fund) உருவாக்கி உள்ளோம். இந்தக் குழந்தைகளும் பிறரைப் போல நாட்டின் பொறுப்பான குடிமக்களாக வளர்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்க அவர்களுக்குக் கல்வியறிவு நல்க இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

நமது நாட்டில் சில சமயங்களில் தொழிலாளர்கள் தமது பணியை இழந்து விடுகின்றனர். அவர்கள் வேலை இன்றிப் போகும்போது அவர்களுக்காக அக்கறை கொள்வோர் யாரும் இல்லை. அவர்களுக்கு பயிற்சி தந்து வேறொரு பணியில் அமர உதவி செய்ய ஒரு திட்டம் உருவாக்கியுள்ளோம். இதனால் வேலை இன்றி அவர்கள் இனியும் துன்பமுற மாட்டார்கள்.

நமது கிராமங்களில் திறமை மிக்க கைவினைஞர்கள் இருக்கிறார்கள். திறமையில் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். ஆனால் அவர்களிடம் இருக்கும் கருவிகள் மிகப் பழையவை. இந்த நாட்டில் சுமார் 5.5 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. பழைய கருவிகளைக் கொண்டு உழைக்கும் கைவினைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடியும். இவர்கள் அத்தனை பேருக்கும் நவீன கருவிகளை வழங்குவதற்கான திட்டம் தயாரித்து இருக்கிறோம். இதனால் இவர்கள் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர வேண்டிய அவசியம் இல்லை. மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் கிராமங்களிலேயே அதிக வருவாய் காண முடியும். இத்தகைய இடம்பெயர்தலால், மாநகரங்களில் பிரச்சினைகளை உருவாகின்றன. ஆகையால் மேம்பட்ட கருவிகளைக் கைவினைஞர்களுக்கு வழங்குவதன் மூலம் இவர்கள் மாநகரங்களை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகிறது. கிராமங்களிலேயே இவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

அடுத்தது மிக முக்கியமானது - பொது விநியோகத் திட்டம். இப்போதைக்கு இது மாநகரங்களில் தான் அதிகம் குவிந்து இருக்கிறது. பொது நுகர்வு திட்டம் இன்னமும் கிராமங்களைச் சென்று அடையவில்லை. நெடுந்தொலைவில் இருக்கிற பழங்குடி, மிகப் பிற்படுத்தப்பட்ட இடங்களுக்கு பாலைவனத்துக்கு 1,500 அலுவலகங்களைக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளோம். இதனால் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு நியாய விலைக் கடை கிடைக்கும். இந்தக் கடைகளில் நியாயமான விலையில் அன்றாட நுகர்வுக்கான பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கும். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகப் பெரிய அளவில் பயன் தரும்.

கிராமங்களில் அடிக்கடி நிலத்தகராறுகள் நடைபெறுகின்றன. சில சமயம் வன்முறையில் முடிகின்றன. இதனால் சில உண்மையான பிரச்சினைகள் பின்னுக்குப் போய் விடுகின்றன. பல ஆண்டுகளாக நடக்கும் வழக்குகளால் பல மக்களின் வாழ்க்கை அழிந்து போகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் - முறையாகப் பராமரிக்கப்படாத (நில) கோப்புகள். இதனைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி - கிராமங்களில் நிலக்கோப்புகள் முறையாகப் பராமரிக்கப்படுதல். இதன் மூலம் மக்களுக்கு தன்னுடைய உடைமைகள், உரிமைகள் பற்றித் தெரிய வரும். இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்க இருக்கிறோம். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் முறையான நிலக்கோப்புகள் கிடைக்கும்.

ராஜீவ் ஜி நமக்கு இந்திரா மகளிர் திட்டம் வழங்கினார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டம் அமலாகவில்லை. இதற்கு உயிர் தருவோம். அமல்படுத்துவோம். பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறைவேற அனுமதிக்கப்படவில்லை. இதனை இனி நிறைவேற்றுவோம். நடைமுறைப்படுத்துவோம்.

வெளிநாடு வாழ் இந்திய சகோதரர்களை இங்கு வருமாறு அழைக்கிறேன். இங்கே அவர்களுக்கு பல வசதிகள் வழங்க இருக்கிறோம். தொழில் தொடங்க முதலீடு செய்ய அவர்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்துதரத் தயாராக இருக்கிறோம். பழைய உறவுகளை வலுவாக்க முயற்சிக்கிறோம். இவர்களை எண்ணி நாம் பெருமைப் படுகிறோம். பல லட்சம் இந்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள். இன்றும் அவர்கள் நாட்டுக்காக சேவை செய்ய வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நல்வரவு கூறுகிறேன்.

நமது நாட்டின் முன் உள்ள சில தீவிரமான பிரச்சினைகள் குறித்துப் பேச விரும்புகிறேன். முன்னர் குறிப்பிட்டது போல, வெறுப்புணர்வு மிகுந்து காணப்படுகிறது. வன்முறை மிகுந்துள்ளது. அகிம்சையின் புகலிடமான நமது நாட்டில் இந்த நிலை மாற வேண்டும். இங்கே வன்முறைக்கு இடமில்லை. உலக அமைதியை விரும்பும் இந்தியாவில், உள்நாட்டில் அமைதி நிலவினால் அன்றி, அமைதி குறித்துப் பேச நமக்கு உரிமை இல்லாமல் போய்விடும். பஞ்சாபிலும் காஷ்மீரிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் நிலவுகின்றன. பயங்கரவாதத்தால் ஒருவரும் பயன்பெறப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். வன்முறையால், ரத்தம் சிந்துதலும் உயிர் இழப்பும் மட்டுமே விளையும். வன்முறை செயல்களில் ஈடுபடுபவரால் என்றைக்கும் தனது லட்சியத்தை அடைய முடியாது. இவர்கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும். பஞ்சாப், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நம்முடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து தீர்வு காண முடியும். நம்மால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை.

பஞ்சாபில் நாம் நிச்சயம் தேர்தலை விரும்புகிறோம். ஆனால் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க தேர்தல் பயன்படுத்தப்படுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சாசனத்தின் விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வோம். காஷ்மீரைப் பொருத்தமட்டில், அங்கே நிலைமையை எதிர்கொள்வதில் நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிம்லா உடன்படிக்கை இருக்கிறது. இதன்படி பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்போம். இதுதான் நமது பணி. எதிர்காலத்திலும் இதுவே இருக்கும். நமக்கு இடையே சமரசம் செய்ய யாரும் தேவையில்லை. நாம் அண்டை நாடுகள். நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம். மறுபக்கத்தில் புரிதல் இருந்தால், வன்முறைக்கு ஆதரவளிக்கிற வன்முறையைத் தூண்டி விடுகிற நடவடிக்கைகள் நிறுத்தப்படுமானால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும்.

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் கோயில் மசூதி தொடர்பாக விநோதமான சச்சரவு முளைத்திருக்கிறது. நமது நாட்டின் அடித்தளம் - சபை சார்பின்மை. அது சமயத்துக்கு எதிரானது அல்ல; மதத்தின் பெயரால் மதவாதத்தைப் பரப்புவதும் அல்ல. நாம் சமய சார்பற்று இருக்க விரும்புகிறோம். மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். அரசாங்கம்.. அதன் கொள்கைகள்.. திட்டங்கள்.. எதுவுமே, ஒருவர் கோவிலுக்கு செல்கிறாரா அல்லது மசூதிக்கு செல்கிறாரா என்பதைப் பொருட்படுத்துவதே இல்லை. சமய சார்பின்மையை நாம் துறந்து விட்டால் அன்றைக்கு இந்த நாடு ஒருமைப்பாட்டை இழந்து விடும். ஆகையால் இதை நாம் தொடர்ந்து பிடித்துக் கொள்ள வேண்டும். மதம், மக்களைப் பிணைக்கிறது. அது ஆன்மீக சிந்தனையை எழுப்புகிறது; நமது உலகாயத, ஆன்மீக நலனை மேம்படுத்துகிறது. வாக்கு பெறுவதற்காக அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவது நிச்சயம் விரும்பத்தக்கது அல்ல. மக்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய முயற்சிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சமயசார்பின்மை என்றால்.. சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆகையால் சிறுபான்மையினர் ஆணையத்துக்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்க இருக்கிறோம். இங்கே எந்த மதத்துக்கும் ஆபத்து இல்லை. இந்த மதத்துக்கோ அல்லது அந்த மதத்துக்கோ ஆபத்து என்கிற முழக்கங்கள், முழுக்கவும் பொய்யானவை. (the slogans about this or that religion being in danger are absolutely bogus) இந்த நாட்டில் எப்போதும் எந்த மதத்துக்கும் அச்சுறுத்தல் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. (In this country there has never been any threat to any religion nor will there ever be.) எந்த மதத்துக்கும் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அப்படி ஏதும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றை நாங்கள் நீக்குவோம். (மதத்துக்கு ஆபத்து என்கிற) இத்தகைய முழக்கங்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.

அடுத்ததாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கான மண்டல் கமிஷன் பிரச்சினை. நமக்கு சமூக நீதி நிச்சயம் தேவை. இதனை நிறைவேற்ற பல திட்டங்களை நாம் முன்னெடுக்கிறோம். பல மாநிலங்களில் இந்த திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக நீதியை பற்றுவதில், சமூக ஒருமைப்பாடுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. (we do not want social disintegration to attain social justice.) வன்முறை, அல்லது, பரஸ்பர சச்சரவு மூலமாக சமூக நீதியை நிறைவேற்றவில்லை. இப்படி நிகழ முடியாது. அது பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அமைதியாக ஒத்த கருத்து மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். பலருடன் இதுகுறித்து நான் உரையாடி இருக்கிறேன். பெரிய அளவில் ஒத்த கருத்து இருப்பதாக உணர்கிறேன். இன்னமும் இப்பணி நிறைவு பெறவில்லை என்றாலும், அகன்ற ஒத்த கருத்தை ஏற்றுவது சாத்தியமே. தேசிய அளவில் ஒத்த கருத்து அடிப்படையில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த திசையில் நமது முயற்சிகள் தொடரும்.

விவசாயிகள் நமக்கு உணவு அளிக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்யேக திட்டம் நம் முன்னால் இருக்கிறது. விவசாயிகள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் பல பொருட்களை உற்பத்தியை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்ட முடியும். ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்து நமது நாட்டை வளமையாக்கும்படி நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை அழைக்கிறேன்.

நமது பாதுகாப்பு படை வீரர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் - உங்களின் நலன் மற்றும் நல்வாழ்வை இந்த அரசு உயிர்ப்புடன் கவனித்து வருகிறது. உங்களுக்காக பல திட்டங்கள் நம் முன் உள்ளன. தற்போது நேரம் இல்லை என்பதால் விளக்கவில்லை. உங்களுக்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன; உங்களின் நலன்களை பாதுகாக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

நண்பர்களே இன்று நம்முன் உள்ள மிக முக்கிய பிரச்சினை - பொருளாதாரம். உற்பத்தியை, நாட்டின் சொத்துகளை அதிகரிக்க வேண்டும். சொத்துகளை அதிகரிக்காவிட்டால் விநியோகிப்பதற்கு எதுவும் இருக்காது; வறுமையை விநியோகிப்பது அறிவுடைமை ஆகாது. (If wealth does not increase there will be nothing to distribute and it is not prudent to distribute poverty) ஆகவே இப்போதைய தேவை - நமது சொத்துகளை அதிகரிக்க வேண்டும்; நியாயமாக விநியோகிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். (the need of the hour is that we should add to our wealth and ensure its just distribution.) இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு திட்டத்தை வடிவமைத்து இருக்கிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு, தொழில் மயமாக்கல் தேவைப்படுகிறது. தொழில்துறை காலத்துக்கு ஒவ்வாததாக இருக்க முடியாது. ஒரு புதிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் நாம் முனைப்புடன் உள்ளோம். தொழில்துறையின் திறன் மேம்படாவிட்டால் அது பின்தங்கி விடும்; உலக அரங்கில் நம்மால் போட்டி போட முடியாது. ஆகவே தொழில்துறையின் திறன் வளர்ச்சி பெற வேண்டும்.

பொருளாதாரக் கொள்கைகளுக்கு அப்பால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் அமைதியின்மை இருக்கக் கூடாது. தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதில் மக்கள், தங்களின் நேரம் சக்தியை வீணாக்கக் கூடாது. எந்ந விலை கொடுத்தேனும் இதனைத் தடுக்க வேண்டும். சமூக ஒற்றுமையும் தேச ஒற்றுமையும் வேறுவேறல்ல. இவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமையை சமூக ஒற்றுமையைப் பராமரித்தல் நமது மிக முக்கிய கடமை. சமூக சமன்பாட்டை பராமரிக்க வேண்டும். (அப்போதுதான்) சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளையாமல் இருக்கும். இதற்காக நாம் எல்லாம் முயற்சிகளையும் எடுப்போம். நான் சொன்னது போல, இது நம் அனைவரின் கடமை; இதனை உண்மையாகச் செய்வோம்.

உங்களோடு உரையாடுவதற்கு நிறைய இருக்கின்றன. போதுமான நேரம்தான் இல்லை. நாங்கள் எடுத்து வரும் பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு நாடு நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது, உள்நாட்டு வெளிநாட்டு அபாயங்கள் மேலே சுற்றி வருகின்றன என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். இவற்றை எதிர் கொள்ள நமக்குள் ஒற்றுமை தேவை.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான சுதந்திர ஆண்டு அமைய வாழ்த்துகிறேன். வரும் ஆண்டில் நமது நாடு வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டட்டும்! இதுவரை நான் பேசியதைப் பொறுமையாகக் கேட்டதற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் உங்கள் கடமையை ஆற்றுவீர்கள், அரசு தனது கடமையைச் செய்ய உதவுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களும் நானும் தனித்தனி அல்ல. நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். (ஒருவருக்கொருவர்) கைகோர்த்து முன்னேறி நடப்போம். ஜெய்ஹிந்த்!”

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 44 - ‘ஏழைகளுக்கு நீதி கிடைக்கட்டும்!’ | 1990

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்