செங்கோட்டை முழக்கங்கள் 44 - ‘ஏழைகளுக்கு நீதி கிடைக்கட்டும்!’ | 1990

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

சுதந்திர இந்தியாவின் வெற்றிப் பயணத்தின் முதல் பாகம் 1990 இல் நிறைவு பெறுகிறது. 1991 இல் பி.வி. நரசிம்மராவ் பிரதமர் பொறுப்பேற்று உலகமயமாக்கல் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் கதவுகளை அகலத் திறந்து விட்டதில் இந்தியா முற்றிலுமாக நவீனத்துக்கு மாறிவிட்டது. பொருளாதாரத்தில் நாலு கால் பாய்ச்சல், அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், அரசியலில் - ராஜீவ் மறைந்து 30 ஆண்டுகள் ஆகியும், இடையில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதும், நேரு குடும்பத்து வாரிசுகள் பிரதமர் பதவியை நெருங்க முடியாமை, வலதுசாரி அரசியல் வலுப்பெற்றமை... 1990-க்குப் பிறக சுதந்திர இந்தியாவில் எல்லாமே மாறிப் போனது. அதாவது, 1991 இல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் கட்சிக்கு இருந்து வெளியே ஒருவர் பிரதமராக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தார் - விஸ்வநாத் பிரதாப் சிங். தமிழக மக்கள் நன்கு அறிந்த - வி.பி.சிங். விலைவாசி உயர்வு, அன்னிய செலாவணி இருப்பு, வேளாண் முறையில் உள்ள சிக்கல்கள், அரசு நிர்வாகம், சிம்லா ஒப்பந்தம்... உள்ளிட்ட பலவற்றைப் பற்றி பிரதமர் விரிவாக பேசுகிறார். 1990 ஆகஸ்ட் 15 அன்று இந்திய பிரதமர் வி பி சிங், நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையின் முழு விவரம் இதோ:

அன்பான நாட்டு மக்களே, இன்று, சுதந்திர தினத் தருணத்தில் உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். 43 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு, திருப்பம் கண்டது. இதே இடத்தில் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை அலைகளை அதிகரிக்கும், சுதந்திர இந்தியாவின் அழகான மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். நமது இந்தக் கொடி, நமது போராட்டத்தை, நமது மன உறுதியை, நமது வலிமையை அடையாளப் படுத்துகிறது. கொடியின் சிவப்பு நிறம், நமது தியாகிகள் சிந்திய ரத்தத்தை பிரதிபலிக்கிறது (பிரதிநிதித்துவப்படுத்துகிறது.) அவர்களது சாம்பல் வெண்மை நிறத்தை, பச்சை நிறம் அவர்கள் கண்ட கனவுகளை (பசுமையை) பிரதிபலிக்கிறது. அவர்களின் தியாகம், நமக்கு தேசியக் கொடியை பெற்று தந்துள்ளது. இந்தத் தருணத்தில் நாம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்; தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இவர்களின் நினைவாக இந்த நாடு மொத்தமும் தலைவணங்குகிறது. உண்மையில் தியாகிகளின் நினைவிடங்கள் மோசமான நிலையில் இருந்தால் அந்த நாடும் அழியும் நிலையில்தான் இருக்கும். ஆகையால் நாம் நமது நாட்டை வலுவாக்கிய தியாகிகளை சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்கிறோம்.

இன்று நாம் பாபு (காந்திஜி) பண்டித ஜவஹர்லால் நேரு, ஜெயபிரகாஷ் நாராயண், சர்தார் படேல், மவுலானா ஆசாத், சர்தார் பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை நினைவு கூர்கிறோம். ஏராளமான தியாகிகளின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள்... எல்லாரையும் நினைவு கூர்தல் சாத்தியம் இல்லை. நாட்டு சுதந்திரத்துக்காக தங்களையே தியாகம் செய்த, ஆனால் இந்தச் செய்தியிலும் பெயர் வராத யாரும் அறிந்திராத அந்தத் தியாகிகளையும் நினைவு கூர்கிறேன். சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷார் குண்டு மழை பொழிந்த நாட்களை நினைவு கூர்கிறேன். பிரிட்டிஷாருக்கு குண்டுகளுக்கு பற்றாக்குறை வந்துவிட்டது. ஆனால் குண்டுகளை எதிர்க்க விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இத்தனை தியாகத்துக்குப் பிறகு நாம் சுதந்திரம் பெற்றோம்.

இந்த நாள் மட்டுமல்ல இந்த இடமும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சரித்திரத்தின் அணிவகுப்பில் டெல்லி ஒரு முக்கிய சாட்சி. மகாபாரதத்தில் கீதை செய்தி வழங்கி எழுச்சி அழைப்பு விடுத்த பகவான் கிருஷ்ணரின் குருஷேத்திரம் அருகில்தான் உள்ளது. வாள் சத்தம் இன்னமும் ரீங்காரம் விடும் பானிபட் இருக்கிறது. செங்கோட்டை சுவர்களின் கற்களைக் கீறினால் அக்காலப் பெருமையை அப்படியே காணலாம்.

சாந்தினி சவுக் - பல பேரரசுகளின் தோற்றம், வீழ்ச்சிக்கு சாட்சியாய் இருக்கிறது. நமது நாடு பல இக்கட்டான தருணங்களைக் கடந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகும் இன்னல்கள் குறையவில்லை. ஆனால் ஒவ்வொரு இன்னலுக்குப் பிறகும் நம் மக்கள் மேலும் வலிமையுடன் எழுந்துள்ளனர். போர்கள்.. இயற்கை பேரிடர்கள்.. கடந்து வந்துள்ளோம். ஜனநாயக முறையில் அதிகார மாற்றத்தையும் பார்த்துள்ளோம். எல்லா சோதனைகள் இன்னல்களில் இருந்தும் ஓர் அம்சம் மட்டும் பிரதானமாக வெளிப்பட்டது - இங்கே ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது; அதனை யாரும் அசைக்க முடியாது. இதுதான் நமது நாட்டின் மரியாதையை பெருமையை உயர்த்தி வைத்துள்ளது. இதில் தான் நமது மாபெரும் சக்தி அடங்கியுள்ளது.

இன்று நாடு இரண்டு சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம் பிரிவினைவாதம், மறுபுறம் வன்முறை. நமது விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு பிரிவினைவாதிகள் சவால் விடுகின்றனர். நமது அமைப்பு முறையின் அரசியல் சமூக விழுமியங்களுக்கு அவர்கள் சவாலாக இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ வர்க்கத்துக்கோ மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த அமைப்பு முறைக்கும் இது சவாலாகும். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம்.. வெவ்வேறு இடங்களின் பெயர்கள். பிரச்சினைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பிரிவினைவாதம், வன்முறை ஆகிய சவால்களைப் பொருத்த மட்டில் எல்லா இடத்திலும் ஒன்றேதான். ஆகையால் அவர்களை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். நாம் பிரிந்து கிடந்தால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. அவர்களை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொள்வதே நமது லட்சியம். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் என் இதயம் செல்கிறது. அவர்கள் நமது விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். இதேபோன்று, நாம் விடுதலை பெற ரத்தம் சிந்திய பஞ்சாப் மக்களுக்காக நான் இதய பூர்வமாக உணர்கிறேன். ஜாலியன் வாலாபாக்கில் இந்துக்கள் சீக்கியர்கள்.. இருவரின் ரத்தக்கறையும் படிந்து இருப்பதைக் காண்கிறோம்.

அசாம் மிகவும் அமைதியான மாநிலம். ஒரு நல்ல தீர்வை அங்குள்ள மக்களே காண்பார்கள். காஷ்மீர் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் - சமய சார்பின்மை நமது விடுதலையின் அடையாளம். காஷ்மீர் பள்ளத்தாக்கோ அல்லது அசாமோ மட்டுமே அல்ல; இந்த நாடு முழுதும் உங்களுக்கானது. தாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் அவர்கள் நமது மக்கள். பிறிதொரு நாட்டின் பொய் பிரச்சாரத்தால் தவறாக வழிநடத்தப் பட்டதால் இவர்கள் பிரிவினையை யோசிக்கிறார்கள். இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் - சுதந்திரத்தை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாட்டிலிருந்து இங்கே குடியேறினார்கள். காரணம் அங்கே அவர்கள் முஜாஹிர் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் மீது குண்டுகள் பாய்ந்தன. ஆகையால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் வசிப்பவர்கள் நாம் தனித்து விடப்பட்டோம் என்ற கருத வேண்டாம். இவர்களுக்காக முழு வலிமையுடன் மொத்த இந்தியாவும் போராடத் தயாராக இருக்கிறது. இந்த நாட்டின் வளமையில் இவர்கள் பங்குதாரர்கள். இவர்கள் சம உரிமை பெறுவார்கள்.

இந்த அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டவுடன் நமது மரியாதையை செலுத்த ஹர்மந்தர் சாகிப் சென்றோம். துர்க்லானா கோயிலுக்கு விஜயம் செய்தோம். ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று பஞ்சாபில் அமைதிக்கு பிரார்த்தனை செய்தோம். ஆனால் பஞ்சாபில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. ஆனாலும் இந்த விஜயங்களுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒவ்வொரு சீக்கியரையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிற ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு மரியாதை செலுத்த இவர்களிடம் நமக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த, இந்த நாட்டுக்காக நாட்டு விடுதலைக்காக பசுமைப் புரட்சியில் தொழில் முன்னேற்றத்தில் அவர்கள் செய்த தியாகங்களை நன்றியுடன் அங்கீகரிப்பதை தெரியப்படுத்தவே இதனை செய்தோம். இப்போது சந்தேக சூழல் இல்லை, நம்பிக்கை உணர்வு தோன்றியிருக்கிறது.

ஆனாலும் வன்முறை அதிகரித்துள்ளது. இது நமக்குக் கவலை தருகிறது. சீக்கிய சகோதரர்களின் புண்பட்ட உணர்வுகளை ஆற்றுவதற்கு நாம் நிறைய செய்துள்ளோம். பஞ்சாபில் கொண்டுவரப்பட்ட 59-வது திருத்தம் நீக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த பல அப்பாவிகளை விடுதலை செய்துள்ளோம். ஏதேனும் காரணத்துக்காக ராணுவத்தில் இருந்து விலகியவர்களை சிறையில் இருந்து விடுவித்துள்ளோம். 1984 சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்கள் அமைத்துள்ளோம். பேரம் பேசுகிற நோக்கத்துடன் இதனைச் செய்யவில்லை. நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இவை. நான் நம்புகிறேன் - பஞ்சாப் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்கள், பஞ்சாப் மக்களைப் பிரிவினைவாதிகளுடன் இணைத்துப் பார்ப்பது அநீதி. நாம் எப்போதும் இதனைச் செய்ய மாட்டோம். பஞ்சாப் மக்கள் மீது என்றும் குறையாத நம்பிக்கை இருக்கிறது.

ஆனாலும் இந்த தருணத்தில் யார் இந்தியாவுடன் இருக்கிறார்கள், யார் இந்தியாவுடன் இல்லை என்பதைக் காண வேண்டி உள்ளது. இந்தியாவுடன் இல்லாத எந்த சக்தியோடும் நாம் சமரம் செய்து கொள்ள முடியாது. நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டாலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள முடியாது. நமது கொள்கை தெளிவானது. பஞ்சாப் மக்களை அன்பால் வெல்வோம். ஆனால், தேசவிரோத சக்திகளை நமது படைகளால் வெல்வோம். அன்பையும் ஆயுதங்களையும் இரண்டையும் நாம் பயன்படுத்துவோம். (Our policy is clear. We will win the people of Punjab with love but will win anti-national elements through force. We will use both love and arms.)

அன்பான நாட்டு மக்களே, இளைய நண்பர்களே, விடுதலைப் போராட்ட தியாகிகளே... இந்த சுதந்திர தின தருணத்தில் மற்றொரு விடுதலை போராட்டத்தில் ஈடுபட நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் நம் முன்னே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் இணைந்து கொள்ள வேண்டும். ஒரு தலைமுறை நமக்கு இந்தக் கொடியைத் தந்தது. இந்த கொடியை உயரப் பறக்க செய்வது நமது பொறுப்பு. நமது ராணுவப் படைகளும் காவல்படைகளும் சவால்களை துணிச்சலுடன் எதிர் கொள்கின்றனர். நாட்டுக்காக உயிரை ஈதல், இவர்களின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் கூட. சந்தர்ப்பம் நேரும்போது நாட்டுக்காக வீறு கொண்டு எழுந்து நிற்கும் குடிமக்களைக் கொண்ட நாடுதான் நின்றிருக்கிறது. வியட்நாமாக இருந்தாலும் லெனின் கிராடாக இருந்தாலும் மக்கள் தாமாக எழுந்திருக்கும் போது தான் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டுள்ளது. இதே எழுச்சி இப்போது தேவைப்படுகிறது.

இந்த நாட்டின் எண்பது கோடி மக்களும் இளைஞர்களும் ஒன்றுபட்டு நின்றால், நமது எல்லையில் மனித சுவர்களை நம்மால் எழுப்ப முடியும். பிறகு, எல்லையைக் கடக்க யாருக்குத் துணிச்சல் வரும்? நாம் விரும்புகிற அளவுக்கு ராணுவத்தாரின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்கு ஊதியம் வழங்க நம்மிடம் போதிய வளம் இல்லை. நமது ராணு படைகளின் தியாகங்களை எண்ணி நாம் பெருமைப் படுகிறோம். ஆனால், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஊதியம் கொடுத்தா மகாத்மா காந்தி போராடினார் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாட்டுக்காக தியாகம் செய்யுமாறு மக்களை கேட்டுக் கொண்டார். நாடு மொத்தமும் அவருக்கு நேர்மறையாய் பதில் தந்தது.

நம்மிடம் சிறிதளவே வளம் இருந்தாலும், நமது வீரர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். நமது வளங்கள் அல்ல; நமது உறுதிகளும் நமது தியாகங்களுமே நாட்டைக் காக்கின்றன. (It is not the riches that have saved the country but pledges and sacrifices that saved it.)இங்கு கொத்தளத்தில்.. எதிரே மைதானத்தில் அமர்ந்திருப்போர்.. எல்லோரும் இணைந்து எல்லை அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆயுதங்களுடன் எல்லையைக் கடக்கும் போது, ஒருவர் மனதளவில் தயாராக இருத்தல் வேண்டும். சுதந்திரதின தருணத்தில், மக்கள் கண்காணிப்புக்கான தேவை குறித்து நம்மை நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டும். மக்கள் முன் வர வேண்டும். நான் அவர்களுடன் செல்லத் தயாராக இருக்கிறேன். டெல்லியில் அமர்ந்து கொண்டு எல்லையில் நடக்கும் ஊடுருவல்களை வேடிக்கை பார்ப்பதை விட, எல்லைக்குச் சென்று (நாட்டுக்காக) உயிர் துறப்பது மேல்.

நாடு தியாகத்தை எதிர்பார்க்கிறது. நமது தியாகிகளை நாம் நினைவில் கொண்டவாறு நாமும் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நடத்துகிற சண்டை அல்ல இது. பண்டகசாலைகளின் களங்களுக்குச் செல்ல வேண்டும். வீதிகளில் மக்கள் எழுவார்கள். எண்பது கோடி மக்கள்.. 120 கோடி கரங்கள்... யாராலும் வீழ்த்திட முடியாது. யாரும் நம்மை அச்சுறுத்த முடியாது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மக்களோடு எண்பது கோடி இதயங்கள் உள்ளன. இந்த நாட்டு மக்களிடம் இருந்து அவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல. (இவர்களை) பாதுகாக்க தியாகம் செய்யத் தயாராக உள்ளோம். இவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. அமைதியான நீதிக்கான சூழலை நிறுவ விரும்புகிறோம்.

மற்ற பிரச்சினைகளோடு ஒரு மிக முக்கிய சவால் இருக்கிறது. முதல் நாளிலேயே இதைப் பற்றி குறிப்பிட்டேன் - ராமஜென்ம பூமி, பாபர் மசூதி சச்சரவு. பரஸ்பர புரிதலில் இணக்கமாய் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே நமது லட்சியம். அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் கையாளும் வழிமுறை. மக்களின் மனம் தான் மகத்தான கோயில் அல்லது மசூதி. மனம் உடைந்து போனால் (அங்கே) கோயிலும் இருக்காது, மசூதியும் இருக்காது. (நம்மிடையே) பல மதங்கள் பல நம்பிக்கைகள் பல மொழிகள் பல மண்டலங்கள் உள்ளன. நமக்கென்று சொந்தமாய் நம்பிக்கை இருந்தாலும், யார் மனதையும் நாம் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். ஆனால் இவைகளுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தால், மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். ஏனெனில், நீதித்துறை அரசுக்கும் மேலே இருக்கிறது. இருந்த போதிலும் (எல்லாரும் ஏற்றுக் கொள்கிற) ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிப்போம் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

அதிகரிக்கும் விலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உழைப்பாளிகள், ரிக்க்ஷா இழுப்போர், சுமைக்கூலிகள் உள்ளிட்ட ஏழை மக்களை விலைவாசி உயர்வு மிக மோசமாக பாதிக்கிறது. பணவீக்கம், பட்ஜெட் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நிலைமைகளை சமாளிக்க முயல்கிறோம். இளமையை கட்டுக்குள் கொண்டுவர சிறிது காலம் பிடிக்கும். லாப நோக்கத்துக்காக மக்களை சுரண்ட நினைப்பவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். இது விஷயத்தில் தொய்வு இருக்காது. கரும்பு, கோதுமை, நெல்லுக்கு விவசாயிகளுக்கு நாம் தந்த கூடுதல் கொள்முதல் விலை ஓரளவுக்கு சில பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. வயல்வெளிகளில் வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு, நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் தமது பங்கைப் பெற்றுள்ளனர்.

உணவு எண்ணெயின் நிலைதான் மிகவும் இன்னலில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உற்பத்தி பத்து லட்சம் டன் குறைந்துவிட்டது. அதனால் இந்த ஆண்டு பிரச்சினையாக இருக்கிறது. எல்லா இடத்திலும் மழைப் பொழிவு நன்றாக இருக்கிறது. இதனால் விலைவாசியில் நேர்மையான விளைவுகள் எதிர்பார்க்கலாம். இது இறைவன் தந்த கொடை. ஆனால் நிலக்கடலை உற்பத்திக்கு பெயர் பெற்ற சவுராஷ்ட்ரா பகுதியில் இந்த ஆண்டும் நல்ல மழைப்பொழிவு இல்லை. மழை மேகங்கள் சவுராஷ்ட்ரா பகுதிக்கு செல்ல வேண்டும் அங்கே நல்ல மழை பொழிய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். இதனால் அவர்கள் மூலம் நமக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை பொறுத்தவரை, மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினை காரணமாக இது ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலர் அதிகரித்தாலும் இதன் உற்பத்தி செலவில் 400 கோடி அதிகமாகி விடுகிறது. அன்னியச் செலாவணியில் 400 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இதனால்தான் சமீப சில வாரங்களில் அன்னிய செலாவணி சுமை ரூ.1,600 கோடியில் இருந்து ரூ.2,000 கோடியாக உயர்ந்துள்ளது. நம் நாட்டு மக்களிடம் நான் இந்தக் கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன் - ஓர் எளிய வழி இருக்கிறது - எண்ணெய் இறக்குமதி செய்ய வெளியில் கடன் வாங்கலாம். என்ன இருந்தாலும் ஓரளவுக்கேனும் இறக்குமதி செய்துதான் ஆக வேண்டும்.

எண்ணெய் இறக்குமதிக்குத் தேவையான மொத்த பணத்தையும் கடனாகப் பெறுவதன் மூலம் விலையைக் குறைக்க முடியும். (By taking a loan to cover the entire import of oil, the prices could certainly be brought down.) இது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். அரசின் செல்வாக்கு உயரும்; அதிகாரத்தில் என்னுடைய இருப்பு இன்னமும் உறுதியாகலாம். ஆனால் எனது நிலைமையை வலுவாக்கிக் கொள்வதற்காக நாட்டின் நீண்ட கால நலன்களில் சமரசம் செய்து கொள்ள முடியுமா? இது நிச்சயம் மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். ஆனால் பொது நலனுக்கு இது நல்லதல்ல. தன்னை மறுத்து கட்டணம் தராமல் போய்விடுவாரோ என்கிற அச்சத்தில் ஒரு மருத்துவரே சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரை உண்ணத் தருவது போன்றது இது. இதனால் அந்த நோயாளி மகிழ்ச்சி அடையலாம். அதே சமயம் அந்த நோயாளியை மரணத்துக்குத் தள்ளியது ஆகிவிடும்.

ஒவ்வொரு அரசியல் தலைவரும் பொது நலனைக் கருத்தில் கொண்டு துணிச்சலுடன் தியாக உணர்வுடன் மக்களுக்கு முழு உண்மையை எடுத்துச் சொல்லி வழி நடத்த வேண்டும். உண்மையான இன்னல்களைப் புரிந்து கொண்டால் தியாகம் செய்ய மக்கள் முன்வருவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஓரிராண்டுகளுக்கு நமது விவசாயிகள் லாபகரமான விலையைப் பெற்றால் எண்ணெய் வித்துகளின் விளைச்சல் அமோகமாக அதிகரிக்கும். இதனால் உள்நாட்டுத் தேவையை சமாளிப்பது மட்டுமல்ல; ஏற்றுமதியும் செய்ய முடியும். தயவுசெய்து பொறுமை கடைப்பிடிக்குமாறு வேண்டுகிறேன். மக்களின் இன்னல்களை சாதகமாக்கி சுரண்டலாம் என்று யாரும் கருதினால் அவர்கள் கடுமையாக தண்க்கப்படுவார்கள். இதில் எந்த தளர்வும் இருக்காது.

முதன் முதலில் இந்த நாட்டுக்கு நான் ஆற்றிய உரையில் கூறியதையே இப்போது மீண்டும் சொல்கிறேன். அப்போது நான் சொன்னேன் - கிராம மக்களின் நம்பிக்கையை பெற்று அதிகாரத்துக்கு வந்துள்ளோம். இந்த மண்ணின் மாண்பை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் இதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். நமது வளங்களில் 50 சதவீதம் கிராமங்களில் முதலீடு செய்யப்படும். இந்த அடிப்படையில் தான் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கைத்தொழில் செய்வோரின் 3 இல் 2 பங்கு கடனில் நிவாரணம் வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய கொள்கைகளை வடிவமைக்க இந்த அரசு பதவி ஏற்ற உடனேயே ஆணையிட்டேன்.

கோதுமைக்கும் அரிசிக்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்குப் பயன் தர நாம் முயற்சித்தாலும், கடைசி வரை சென்று சேராத கால்வாய்த் தண்ணீர் போல, இது ஏழைகளை சென்று சேர்வதில்லை. கூடுதல் விலை நிர்ணயித்ததன் மூலம், கூடுதலாகப் பல கோடி ரூபாய்கள் எந்தத் தடங்கலும் இன்றி விவசாயிகளைச் சென்று சேர்ந்தது.

இன்று வேளாண் முறையில் ஐந்து குறைபாடுகள் உள்ளன. இவற்றை நீக்க வேண்டும். ஒன்று - கிராமப் பகுதிகளில் தனிநபர் தேசிய உற்பத்தி (per capita national production) குறைந்துள்ளது. உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தனிநபர் உற்பத்தி குறைந்துள்ளது. கிராம மக்கள் தொகை அப்படியே தொடர்கிறது. மொத்த தேசிய உற்பத்தியில் சதவீதம் குறைந்துள்ளது. தனது விளைபொருளுக்கு விவசாயி பெறும் விலைக்கும் தான் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு அவர் தரும் விலைக்கும் இடையே ஒரு சமமின்மை நிலவுகிறது. மூன்றாவது குறைபாடு - நமது பசுமைப் புரட்சி ஒரு சில உணவுப் பொருட்களில்,பிரதானமாக கோதுமையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் பசுமைப் புரட்சிக்குள் வரவில்லை. இந்த சமமின்மை சரி செய்யப்பட வேண்டும். பசுமைப் புரட்சி எல்லா பகுதிகளையும் உள்ளடக்கவில்லை. ஒரு சில மண்டலங்கள் மட்டுமே பயன் அடைந்தன. மிகுந்த கவலை தரும் அம்சம் - விவசாயத்தின் மூலதன முதலீடு (capital investment) தேக்க நிலையை எட்டி உள்ளது. விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு தேசிய வேளாண் கொள்கை அறிவிக்கப்பட இருக்கிறது.

1956 இல் தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ள நாட்டில் வேளாண் கொள்கை அறிவிக்கப்படவில்லை. எனவே நாம் வேளாண் கொள்கையை அறிவிக்க இருக்கிறோம். இனிவரும் அரசுகளும் அதற்குக் கட்டுப்படும். எனவே கிராமங்கள் தொடர்ந்து வளம் பெறும். இது தொடர்பாக லால்பகதூர் சாஸ்திரி முன்வைத்த ஜெய் ஜவான் ஜெய் கிஸான் முழக்கம் நினைவுக்கு வருகிறது. இந்த முழக்கத்தை நமது லட்சியமாகக் கொண்டு முன்னேறுவோம். 90-களின் அடுத்த 10 ஆண்டுகள் விவசாயிகளின் பத்தாண்டாக அனுசரிக்கப்படும். கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்த பத்து ஆண்டுகளில் சரி செய்வோம். விவசாயம் இந்த நாட்டின் முதல் தொழில். விவசாயம் தொழிற்துறையில் வருமா வராதா என்று சந்தேகம் எழுப்பப் பட்டது.

நாட்டின் தொழிற்துறையில் மிக முக்கியமானது விவசாயம் என்று நான் நம்புகிறேன். இந்தத் தொழில் இல்லாது பிற தொழில்கள் இருக்க முடியாது. பல சங்கடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் இந்தப் பத்தாண்டில் அகற்றப்படும். உடனடியாக நிறைவேற்றி விட முடியாது. நமது முழு வலிமையும் பயன்படுத்தி இதனை சாதிக்கப் பாடுபடுவோம். விவசாய வணிகத்தில் பல தடைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அகற்றுவோம். தனது விளைபொருளை ஒரு விவசாயி இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதற்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. அப்படியே ஏதும் கட்டுப்பாடுகள் இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும். ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது ஆனால் இயன்றவரை நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கு தரப்பட்ட கடன்களை ஒரு முறை தள்ளுபடி செய்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வது சாத்தியமில்லை. அவர்களுக்கு தேவையான வளங்களைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் கடனில் சிக்கிக் கொள்ளக் கூடாது. பாசனம் மின்சாரம் இரண்டும் முக்கிய உள்ளீடுகள். இந்த இரண்டு துறைகளிலும் அதிகபட்ச உதவிகள் நல்க விவசாயப் பத்தாண்டு காலத்தில் முயற்சிப்போம். வேளாண்மை சார்ந்த தொழில்களைப் பெருக்க முனைவோம். இது நிகழ்ந்தால், கிராமங்களில் இருந்து மக்கள் மாநகரங்களை நோக்கி நகர மாட்டார்கள். எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்குதலை முக்கிய இலக்காக வைத்திருக்கிறோம்.

கிராமங்களில் இளைஞர்களுக்கு வேளாண்மைக்கு அப்பாற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஒரு நாடு வலுப்பெற வேண்டுமெனில் அங்கே தொழில்கள் வலுப்பெற வேண்டும் என்பதை அறிவோம். வலுவான அடித்தளம் இல்லாது தொழில்துறை வலுவாக இருக்க முடியாது. இந்த அடித்தளத்தை வலுவாக்குவதே நமது லட்சியம். ஏற்றுமதி மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துவோம். சிறு தொழில்களுக்கும் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அரசுத் துறையில் முறைகேடுகள் தொழில் துறையின் திறமையை பாதித்துள்ளது. இவை களையப்பட வேண்டும். உற்பத்தித்திறன் மேம்பட வேண்டும். ஏழைகளுக்கு முக்கியத்துவம் தரும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.மிக்க மகிழ்ச்சி.

நாட்டு மக்களுக்கான ஆற்றிய முதல் உரையில் கூறினேன் - நமது அரசாங்கம் ஒரு வாள் எனில் அதனை நான் ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்காகவே வீசுவேன். இந்த நல்ல தருணத்தில் இதில் நான் மீண்டும் உறுதி கூறுகிறேன். இந்த அமைப்பு முறையில் மூலதனத்துக்கும் அதிகார மையத்துக்கும் இடையிலான உறவில் ஏழைகளுக்கான இடம் புதியது அல்ல. இந்தப் போராட்டம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. (The place of poor in the present system where there is nexus between capital and power centres is not new; this struggle has been continuing for centuries.) செங்கோட்டையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பேரரசர்கள் யார் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த அழகான மாளிகையைக் கட்டியவர் யார் என்பதை நாம் அறிய மாட்டோம். கோயிலின் சிலை சிற்பியால் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் அது கோயிலில் நிறுவப்பட்ட பிறகு அது யாருடைய ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது என்பது தான் தெரியும். அந்தச் சிற்பியின் பெயர் கூடத் தெரியாது; அவர் கோயிலுக்குள்ளே கூட அனுமதிக்கப்படுவதில்லை.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாரத ரத்னா பாபா சாகித் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் திருவுருவப்படம் இல்லை. இந்தச் சமுதாயத்தின் வெளிப்பாடுதான் இது. தேர்தல் மூலம் அரசமைப்பதில் ஏழைகளின் கரம் உண்டு. ஆனால் அந்த அரசை நடத்துவதில் ஏழைகளுக்குப் பங்கு இல்லை. (The poor have a hand in forming the government through elections but the poor have no hand in running the government) அரசாங்கத்தை நடத்துவதில் ஏழைகளுக்கு ஒரு பங்கு அளிக்க நமக்குத் துணிவு இருக்கிறதா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்போர் அரசியல் போர் நடத்தி இருக்கின்றனர். இன்று வரை இந்த அரசியல் போரின் முடிவுகள் திருத்தப் படவில்லை. இது கருவூலம் தொடர்பானதல்ல; சிம்மாசனம் தொடர்பானது. (Those who are called depressed classes had cast a political battle thousands of years ago. Till today the result of that political battle has not been reversed. It is not the question of treasury but it is the question of throne.)

யார் சிம்மாசனத்தில் இருக்கிறாரோ அவரே கருவூலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். வறியவர், சலுகைகளுக்காகப் போராடவில்லை. கருவூலத்தில் இருந்து ஏழைகளுக்கு சலுகைகள் அள்ளி வழங்கும் காலம் முடிந்து விட்டது. வறியவர்கள் சலுகைகளுக்காக போராடவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். மேலும் சில ஆண்டுகளுக்கு அப்படியே இருக்க இவர்கள் தயார். தம்முடைய கண்ணியத்துக்காக ஒரு சக மனிதனாக வாழ்வதற்காக தனது கடைசி போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நாம் எப்போதும் தானம் செய்பவராகவும் ஏழை மக்கள் அதைப் பெறுபவராகவும் இருக்கும் அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும். தானம் தருவோர் பெறுவோர் என்கிற உறவுமுறை மாறி சகோதர உணர்வு நிரம்ப வேண்டும். வறுமையின் பெயரால் ஏழைகள் சுரண்டப் படுகிறார்கள். புதிய அமைப்பு முறையில் இது மாறும்.

வறுமை அகற்றுவதாக சொன்னவர்கள் வறுமையை அகற்றிய வண்ணமே இருந்தார்கள்; ஆனால் ஏழைகள் எப்போதும் பின்னணியில் வருந்தியபடியே இருந்தார்கள். வறுமை ஒழிப்பில் ஈடுபடுவோர் தம்முடைய இடத்தை முதலில் காலி செய்யட்டும். அந்த இடத்தை ஏழைகளுக்கு விட்டுத் தரட்டும். ஏழ்மையை ஏழைகளே விரட்டுவார்கள். ஏழைகளுக்காக சிறிய சட்டங்களை உருவாக்கி நமது நேரத்தை நாம் வீணாக்குகிறோம் என்று நான் மாநிலங்களவையில் சொன்னேன். மக்களவையில் மாநிலங்களவையில் மாநில சட்டமன்றங்களில் ஒரு சட்டம் இயற்ற நமக்குத் துணிச்சல் வேண்டும் - நமது மக்கள் தொகை 40 சதவீதம் ஏழைகள் என்றால் மக்களவை, மாநிலங்களவையில் 40 சதவீத இடங்கள் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

நாடு முழுதும் இந்த விவாதம் நடக்க வேண்டும். இந்த சுதந்திர தின தருணத்தில் நாடு முழுவதும் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். விவாதிப்பது மட்டுமல்ல, ஒரு முடிவு எடுக்க வேண்டும், அதை அமல்படுத்த வேண்டும். ஏனெனில், ஏழைகளுக்குப் பணம் அல்ல; அதிகாரம் கொடுங்கள். அவர்கள் தாமே மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். பணத்தால் மட்டுமே எந்தப் பிரிவும் முன்னேறி விடும் என்று நான் நம்பவில்லை. அதிகாரத்தில் அவர்களுக்குப் பங்கு இருந்தால் அவர்கள் முன்னேறுவார்கள். இந்தப் பங்கை நாம் வழங்க வேண்டும்.

நீதிக்கான இந்த ஆண்டில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவாக, அரசுப் பணிகளில், பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனால் எவ்வாறு பொருளாதாரப் பலன் கிடைக்கும் என்று விவாதிக்கப்படுகிறது. இந்த நாட்டு மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், அரசுப் பணி 1 சதவீதம் தான் ஆகிறது. இதில் 1/4 வழங்கப்படுவதால், ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி பெரிய அளவில் வளர்ச்சிக்கு உதவிடாது. அதிகாரக் கட்டமைப்பில் அரசு நிர்வாகம் ஒரு முக்கிய அங்கம். முடிவு எடுப்பதில் அது முக்கிய பங்காற்றுகிறது. அதிகார கட்டமைப்பில் நாட்டை நடத்துவதில் நலிந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு திறமான பங்களிக்க விரும்புகிறோம்.

அமைப்பு முறையைப் பார்ப்போம். மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52 சதவீதம். ஆனால் அரசுப் பணிகளில் இவர்களின் பிரதிநிதித்துவம் 14.5 சதவீதம் மட்டுமே. முதல்நிலை அலுவலர்களில் 4.5 சதவீதம் மட்டுமே. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அநீதி நீடிக்கும்? நாம் நீதி வழங்கத் தொடங்கினால், அமைப்பு முறையில் அதிர்ச்சி உண்டாகிறது; குழப்பம் விளைகிறது. ஆனால் எனது இளைய நண்பர்களே.. நமது மனசாட்சியைக் கேட்போம். நமது நாட்டிடம் இருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தள்ளுவோம்; இல்லாதவர்களுக்கு நாம் என்ன தர முடியும் என்று சிந்திப்போம். இந்த சிந்தனை நமது வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும்.

இத்தகைய அணுகுமுறையே உழைக்கும் மக்களின், குடிசைவாழ் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். இதுவே சரியான மாற்றமாக இருக்கும். அமைச்சர்கள் மாறலாம். பிரதமர்கள் கூட மாறலாம். கூரையின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை எப்போது மாறும்? இந்த மாற்றம் தான் சரியான மாற்றமாக இருக்கும். இந்த மாற்றத்தை கொண்டு வர சமூக சக்திகளை எழுப்ப வேண்டும். இந்த விழிப்புணர்வுக்கு உழைக்குமாறு இளைஞர்களை அழைக்கிறேன். நீதியான சமுதாயத்தை கட்டமைப்பதில் ஒத்துழைக்க வருமாறு அவர்களை அழைக்கிறேன்.

ஏழையின் கண்ணில் இருக்கும் கண்ணீர் சிறிது நேரமாக அப்படியே இருக்கிறது. ஆனால் அதுவே நாளடைவில் அமிலம் ஆகிறது. பூமியில் தனக்கென்று சொந்தமாக சொர்க்கத்தைக் கட்டுவதற்கு வரலாற்றின் பக்கத்தைக் கிழிக்கிறது. ஏழை மக்களின் கண்கள் கண்ணீரில் நனைந்தபடி இருக்கும் வரை, பரவாயில்லை. ஆனால் இந்தக் கண்கள் நெருப்பாய் மாறுகிற போது, தங்க அரண்மனைகள் உருகுகின்றன; வடிகாலில் ஓடுகின்றன. சிந்தித்தால் மட்டும் போதாது. செயல்பட வேண்டும். ஆகையால் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு, பட்டியலின மக்களின் ஆணையத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கொடுத்தோம். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, நிர்வாகத்தில் அவர்களின் பங்கை உறுதி செய்ய, நாட்டு நிர்வாகத்தில் தொழிலாளருக்குப் பங்கு தர, சட்டம் கொண்டு வந்தோம்.

இதேபோன்று டெல்லியில் கிராமங்களில் இருந்து வரும் ஏழை மக்கள் வடிகால் குழாய்களில் வசிக்கிறார்கள். அவர்களின் தலைக்கு மேலே கூரை எதுவும் இல்லை. இவர்கள் தெருவோரம் வசிக்கிறார்கள். இவர்களின் குடியிருப்புக்காக ஒரு சட்டம் இயற்ற விரும்புகிறோம். கிராமங்களில் இருந்து டெல்லிக்கு ஏராளமான உழைப்பாளர்கள் வருகிறார்கள். இங்கே அரண்மனை போன்ற மாளிகைகள் கட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று ஒரு குடிசை கூட இல்லை. குருநாக் கூறியது நினைவுக்கு வருகிறது. நாம் ஒவ்வொருவரையும் பெரிதாய்க் கருத வேண்டும்; யாரையும் கீழாய் நடத்தக் கூடாது. இதுவே நீதியின் குரலாக இருக்கும்.

நாட்டு வளர்ச்சிக்கு பயன்படாத சொத்துக்கள் ஆக்கப்பூர்வ நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நமது நாட்டில் வைர நெக்லஸை விடவும் இரும்புக் கலப்பை அதிக பயன்தரக் கூடியது. வைர நெக்லஸ் உற்பத்திக்குப் பயன்படாது. அதேசமயம் விவசாயி கையில் இருக்கும் இரும்புக் கலப்பை உற்பத்திக்குப் பயன்படுகிறது. நகர சொத்துகளைப் பொருத்தமட்டில் தற்போது சட்டங்களில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. இவற்றை நாம் நீக்கியாக வேண்டும். ஒரு தனிநபர் வாழ்வதற்கு ஒரு மிகப்பெரிய பங்களா தேவையா என்று நாம் சிந்திக்க வேண்டும். குடிசைகள் கூட இல்லாத நாட்டில், பல ஏக்கருக்கு விரிந்து கிடக்கும் பங்களாக்கள்.. நியாயம் இல்லை. இதுவும் விவாதிக்கப்பட வேண்டும். இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். நாட்டின் மையப் புள்ளி இளைஞர்கள் .. புதுயுகத்தின் குரல் இவர்கள். இன்று இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மை.

எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. எல்லாக் கட்சிகளின் ஆதரவு, ஒத்துழைப்புடன் வேலை செய்வதற்கான உரிமைக்கு சாசன அங்கீகாரம் தருவதை உறுதியுடன் நிறைவேற்ற வைராக்கியம் கொண்டுள்ளோம். வளர்ச்சிக்குத் தேவையான வளங்கள் மற்றும் பிற துறைகளில் நமது கடப்பாடுகளுக்கு உட்பட்டு நிச்சயம் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துவோம். எந்த அரசாலும் எல்லாருக்கும் அரசுப் பணி தர முடியாது. ஆனால் ஒருவர் பணி செய்யத் தயாராக இருந்தால் (ஏதேனும்) பணி வாய்ப்புகள் இருக்க வேண்டும். பிரச்சினை என்னவெனில், உண்மையான செயலை விட, எப்படியோ சரி கட்டவே பார்க்கிறோம். நாம் மேலாளராக வர விரும்புகிறோம்; பணியாளராக அல்ல. நம்மைப் பொருத்தவரையில் நாம் பணியாளர்களில் ஒருவராய் இல்லை. பணிக்கான உரிமை பற்றி பேசும் போது சமூக அளவுகோல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் ஒரு தொழிலாளி மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பணிக்கான உரிமை உண்மையில் பயன் உள்ளதாய் இருக்கும். இளைஞர் நலனுக்காக பட்ஜெட் ஒதுக்கீடு 20 கோடியில் இருந்து 265 கோடியாக இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. நடப்பாண்டில் இந்தத் தொகை செலவிடப்படும்.

இந்த விதியின் கீழ், வெவ்வேறு பணியில் இருக்கும் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் ரூபாய் 120 கோடி வரை வேலைக்காக உதவி வழங்கப்படும். இதேபோன்று, உயர்கல்வி படிக்க இயலாத ஏழை மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் மொத்தம் ரூபாய் 50 கோடி வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கிராமத்து இளைஞர்களுக்காக வேறு வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூபாய் 70 கோடி வரை வழங்கப்படும். இளைஞர்களைப் பொருத்தவரை நாட்டின் எல்லா வளங்களும் அவர்களுடையது. தேசிய வளங்கள் எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் வாரிசுரிமை பெற்றவர்கள். ஆனால் இளைஞர்களே தான் இந்த நாட்டின் மிகப்பெரிய வளம். எந்த அரசின் எந்த நாட்டின் பட்ஜெட்டை விடவும் இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள். எனவே எனது இளைய நண்பர்களே... ஏதேனும் கடமையாற்ற அழைக்கப்பட்டால் அது சாதாரண பணிக்காக இருக்காது. ஒரு முழு மாற்றத்துக்கான அழைப்பாக அது இருக்கும். அறியாமையை நீக்க இளைஞர்களை அழைக்கிறேன். கற்றறிந்த ஓர் இளைஞன் ஐந்து பேருக்கேனும் அறிவு ஒளியைப் பரப்பினால், மொத்த நாடும் அறிவு ஒளியால் பிரகாசிக்கும். அறியாமை இருள் விலகி விடும். ஒவ்வோர் இளைஞரும் இந்த உறுதிமொழி எடுத்துக் கொண்டால், அதுவே இந்த நாட்டுக்கு ஆற்றும் மகத்தான சேவையாக இருக்கும். இதே போன்று மக்கள் தொகை பிரசினை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். குடும்பத்தின் அளவைக் குறைக்குமாறு இளைஞர்கள் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அரசாங்கமும் எல்லா வசதிகளும் செய்து தரும். இவ்வாறு ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண முடியும்.

இந்தியாவில் பெண்கள் எப்போதுமே சமூகத்தில் நல்ல மதிப்புடன் வாழ்கிறார்கள். ஆனால் தற்போதைய சமூக பொருளாதார அமைப்பு முறை அவர்களைப் பின்னுக்கு தள்ளுகிறது. அவர்களுக்கு திறமை இல்லை என்பது அல்ல; துணிவிலும் குறைவில்லை. பெண்களின் மடியில் தான் ஒரு நாடு வளர்கிறது. (A nation grows in the lap of women) அவர்கள் தான் நமது பண்பாட்டை வளர்க்கிறார்கள். நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறார்கள். மிகப்பெரிய பங்காற்றினாலும் அவர்களுக்கு இந்த நாட்டை நடத்துவதில் பங்கு இல்லை. தாயார் விலங்குகளால் கட்டப்பட்டு இருந்தால் நாட்டில் வலிமை இருக்க முடியாது. பெண்கள் மூச்சுத் திணற நேரிட்டால், வாழ்க்கை எப்படி உயிர்த் துடிப்புடன் இருக்கும்? எனவே அவர்களுக்கு அதிகாரத்தில் ஒரு பங்களித்து ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிகோலலாம் என்று முடிவு செய்தோம். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் மகளிருக்கு முப்பது சதவிகிதம் வழங்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதோடு கூடவே சட்ட அதிகாரம் படைத்த நீதிக்கான தேசிய ஆணையம் ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் எல்லாம் நம்மிடம் இருக்கும் கணக்கற்ற பிரசினைகளைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறேன்.

இந்த நாளில் நாம் தீரமிக்க நமது பாதுகாப்புப் படைகளை மறந்துவிட இயலாது. அவர்களை நினைக்கும் போதெல்லாம் நாம் பெருமைப்படுகிறோம். தமது தியாகத்தால் இவர்கள் நமது நாட்டின் கண்ணியத்தை உயர்த்திப் பிடித்துள்ளனர். சியாச்சல் பகுதியில், இமயமலையில் உள்ள நமது வீரர்களை நோக்கி நினைவு செல்கிறது. சியாச்சின் பகுதி வீரர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். நாம் வடிவமைத்த ஆகாஷ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நமக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் இது மகத்தான பெருமை சேர்க்கிறது. அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில் நாம் நமது முன்னாள் படை வீரர்களை மறந்துவிட முடியாது. இவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக அரசாங்கம் சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினரை நான் வெறுமனே ஓய்வூதியதாரர்களாகப் பார்க்கவில்லை. நமது ஒற்றுமையின் அடையாளம் அவர்கள். அவர்கள் சீருடையில் இருந்தபோது, தியாகம் செய்ய உறுதி எடுத்துக் கொண்டவர்கள். இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், தமிழர், பஞ்சாபி, ராஜஸ்தானி, வங்காளி... அனைத்தையும் கடந்து ஒற்றுமையாய் இருந்தவர்கள். அன்பான முன்னாள் ராணுவத்தினரே.. நீங்கள் ஓய்வூதியதாரர் மட்டும் அல்ல; சீருடையில் இருந்த போது நீங்கள் வழி நடத்தினீர்கள். இன்று நீங்கள் சீருடையில் இல்லாத போது சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்; அங்கிருந்த அதே ஒற்றுமை உணர்வை இங்கே வளர்க்க வேண்டும். அங்கே எல்லாரும் ஒன்றாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் எங்கே இருந்தாலும் இந்து முஸ்லிம் சீக்கிய கிறிஸ்துவர் அல்லது எந்த மொழி பேசுவதாக இருந்தாலும் பேதங்களை அகற்றி சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்.

உணர்ச்சிபூர்வ ஒற்றுமை நமது மிகப் பெரிய வலிமை. இது ஒரே நாளில் சாதிக்கப்பட்டது அல்ல. வெவ்வேறு மதங்கள் நம்பிக்கைகளைத் தழுவிய பன்முக கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக உருவானது. இந்த மரபை நாம் துறந்து விட முடியாது. இதன் மீது படியும் எந்தக் கறையும் இந்த நாட்டையும் பாதிக்கும். ஒரு நாட்டின் வரைபடம் அந்த நாட்டு மக்களின் இதயங்களில் உள்ளது. இதயங்களில் பகுப்புக் கோடுகள் இருந்தால் அது நிலத்திலும் பிரதிபலிக்கும். இந்த பகுப்புக் கோடுகள் வெளிப்பட அனுமதிக்க மாட்டோம். ஜன் நிசன் அக்தர் கூடிய ஒரு வாசகத்தை நினைவு கூர்கிறேன் - ' இந்த நாடு இந்து முஸ்லிம் கலாசாரங்களின் தொகுப்பு'. இந்த வாசகம் நூற்றாண்டுக்கு முந்தியது. இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது. இதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு முன்னால் ஒரு சவால் இருக்கிறது. அது - வறுமை அல்ல. ஆனால் அன்னியப்படுத்துதல். (The question is not of poverty but is that of alienation) மனிதனால் வறுமையை சகித்துக் கொள்ள முடியும். ஆனால் ஓர் அந்நியனாக அவன் நடத்தப்படுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியாது. இது வசதி சம்பந்தப்பட்டது அல்ல; பங்களிப்பு சம்பந்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சியில் கல்வியில் சிறுபான்மையினரை நாம் ஈடுபடுத்த வேண்டும். நமது வளர்ச்சி என்னவாக இருந்தாலும், வங்கியாக வேலைவாய்ப்பாக.. எதுவாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாம் நீதியை நோக்கி முன்னேற வேண்டும்.

ஒவ்வொரு மதத்தின் குருமாரின் பிறந்த நாளுக்கும் விடுமுறை விட வேண்டும் என்கிற கோரிக்கை இந்த நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இறைத்தூதர் முகமது பிறந்தநாளுக்கு விடுமுறை இல்லை. இன்று நான் அறிவிக்கிறேன் - இறை தூதர் முகமதுவின் பிறந்தநாள் விடுமுறை நாள் என்று அரசாங்கம் முடிவு செய்து இருக்கிறது. மற்ற மதத்தவருக்கு கிடைத்த இந்த வசதி தமக்கு கிடைக்கவில்லையே என்று இந்த நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை சமூகத்திற்கு இருந்தது. (இனி இந்தக் குறை இருக்காது)

ஈராக்- குவைத் நிலைமை நமக்குக் கவலை அளிக்கிறது. உலகில் எந்தப் பகுதியிலும் நாம் வன்முறையை ஆதரிப்பதில்லை. ராணுவ நடவடிக்கையையும் ஆதரிப்பதில்லை. ஒருதலைபட்ச நடவடிக்கை எங்கும் இருக்கக் கூடாது. அங்குள்ள இந்திய மக்களின் உயிர் மற்றும் சொத்துகள் பற்றிக் கவலை அடைந்துள்ளோம். நமது அமைச்சரவை சகா ஆரிஃப் முகமது கான் அங்கு சென்றுள்ளார். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து இந்தியர்களின் பிரச்சினைகளை கவனித்து இங்கு வர விரும்புவோருக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வார். ராணுவம் அல்லது ஆயுதங்கள் இல்லாமல் ஒரு நல்ல தீர்வு எட்டுவதற்கு பிற நாடுகளுடன் நாம் தொடர்பில் இருந்து வருகிறோம்.

பொதுவாக பிற நாடுகளுடன் நமது உறவு மேம்பட்டு உள்ளது. நான் ரஷ்யாவுக்கு சென்றிருந்தேன். அதிபர் கோர்பசேவ் ஒரு புரட்சிகர திட்டத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். இது உலகத்தில் அந்த நாட்டில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரும். அவரைக் காண அவருடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையால் இந்தியா - ரஷ்யா உடனான பாரம்பரிய உறவு வலுப்பட்டது மட்டுமல்ல, இனி வரும் காலத்துக்கான உலக உறவை நிர்ணயிக்கவும் உதவியது.

அமெரிக்காவுடன் நமது உறவு மேம்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர், சிம்லா உடன்படிக்கை போன்ற பிரச்சினைகளில் நமது நிலைப்பாட்டுக்கு அவர்கள் நெருங்கி வருகிறார்கள். இதனை நாம் வரவேற்கிறோம். சீனாவுடன் கருத்துப் பரிமாற்றம் நேர்மறையாக சென்று கொண்டிருக்கிறது. நேபாளத்துடன் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். பூட்டான் மாலத்தீவு மொரிஷியஸ் நாடுகளுடன் நமது உறவு தொடர்ந்து நன்கு இருந்து வருகிறது. 'தீன்பிகா' (Teenbigha)ஒரு நெருடலாக இருந்தது; தீர்க்கப்பட்டது. நல்ல புரிதலுடன் தண்ணீர் பகிர்வு குறித்த பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வு சொத்துகள் குறித்து கவலை கொண்டுள்ளோம். இலங்கை நாட்டுக்குள்ளேயே இவர்களுக்கென்று தனி முகாம் வேண்டும். அங்கே அவர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதற்கு முயற்சி எடுத்துள்ளோம். (We have taken initiative that within Sri Lanka there should be a camp where they could live securely) பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் மற்ற நாடுகளும் உதவும் என்று நம்புகிறோம். ஆனால் இந்திய மண்ணை ஒரு மையமாகப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அல்லது தீவிரவாதிகளை நான் அனுமதிக்க மாட்டேன். (I will not allow the extremists or militants to use Indian soil as their centre) நாம் அமைதியை விரும்புகிறோம்.

இலங்கையில் இந்தியாவில் அமைதி விரும்புகிறோம். இந்தக் கொள்கையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம். பிறருடன் நமது உறவு மேம்பட்டு இருந்த போதிலும், துரதிஷ்டவசமாக நல்லறவுக்கான நமது விருப்பத்தை ஒட்டி, பாகிஸ்தான் உடன் நமது உறவு மேம்பாடு காணவில்லை. எல்லா சம்பவங்களும் நீங்கள் அறிவீர்கள். இது பற்றி நிறைய பேசி ஆகிவிட்டது. இந்தத் தருணத்தில் இவற்றை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இரண்டு விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.

நாம் நட்புறவை விரும்புகிறோம். அவர்கள் நம்மை நோக்கி ஓரடி நகர்ந்தால் நாம் அவர்களை நோக்கி ஈரடிகள் நகர்வோம். ஆனால் நாட்டு இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். (அவர்களுக்கு) ஏதேனும் தீய நோக்கம் இருந்தால், மொத்த நாடும் எழுந்து எதிர்கொள்ளும். ஜனநாயக விழுமியங்களை நிறுவ முயற்சிக்கிறோம். தனிநபர் அரசியலை நீக்கி பிரச்சினை அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கிறோம்.

இன்று பாரதிய ஜனதாவிடம் இருந்து இடதுசாரிகளிடம் இருந்து ஆதரவைப் பெறுகிறோம் என்றால் அது தனிநபருக்காக அல்ல; நம்முடைய திட்டங்களுக்காக. பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவைப் பெறுகிறோம். இந்த நாட்டின் அமைப்புகளில் சில குறைகள் உள்ளன. இவற்றை நாம் மாற்ற வேண்டி உள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டம், லோக்பால் மசோதா, ரேடியோ தொலைக்காட்சிக்கு சுய அதிகாரம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் நிறுவுதல் (Inter State Council) போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம். இவையெல்லாம் நிறுவன மாற்றம் தொடர்பானவை.

இன்று நமது சிந்தனை இந்தியாவின் கடந்த காலப் பெருமையை நோக்கிச் செல்கிறது. நமது தேசியக் கொடியின் மாண்பு குறைய அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூணுகிறேன். விவசாயிகள் தொழிலாளர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலதிபர்கள் எழுத்தாளர்கள் குழந்தைகள்... எல்லோரும் இந்தியாவின் மாண்பைக் காக்க வாருங்கள் என்று அழைக்கிறேன். இது எளிதான பாதை அல்ல. பல இன்னல்கள் உள்ளன. ஆனால் நாம் துணிச்சல் மிக்க இந்தியாவின் துணிச்சல் மிக்க பிள்ளைகள். துணிச்சல் நமது ரத்தத்தில் கலந்தது. புயல் அடித்தாலும் நமது இதயம் சோர்வடையாது. இந்தக் கொடியில் இருந்து ஒரு நூலிழை கூட யாராலும் பிரித்து எடுக்க முடியாது. மின்னலுக்கும் இடிகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தேசத்தின் எதிர்காலத்துக்கான வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சத்தில் நாம் நமது பாதையைக் கண்டுபிடிப்போம். இந்த தருணத்தில் நீங்கள் என்னோடு சுபாஷ் சந்திரபோஸ் தந்த முழக்கத்தில் உரத்த குரலில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் முழக்கம் இமயம் முதல் குமரி வரை ஓங்கி ஒலிக்கட்டும். இதோ அந்த முழக்கம்.. ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 43 - ‘உலக அரங்கில் முக்கிய சக்தி’ | 1989

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்