செங்கோட்டை முழக்கங்கள் 43 - ‘உலக அரங்கில் முக்கிய சக்தி’ | 1989

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஐந்தாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் இளம் பிரதமர் ராஜீவ் காந்தி. இதுவே அவரது இறுதி சுதந்திரதின உரையாக இருக்கும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்கால இந்தியாவைப் பற்றிய ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் மூலம் வறுமையை, வேலையின்மையை நீக்க முடியும் என்று நம்பினார். வழக்கமான அறிமுக வரிகளோடு தொடங்கினார். எப்போதும் போல காந்திய தத்துவத்திற்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்தார்.

1989 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய உரை - இதோ: நமது சரித்திரம், கலாசாரத்தில் இருந்து பல நன்மைகளை மீட்டெடுத்தோம். அவற்றில் தலையாயது - அஹிம்சை. காந்திஜி அகிம்சை பற்றி பேசும்போது அகன்ற பொருள் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அகிம்சை என்பது வன்முறை இல்லை என்பது மட்டுமல்ல; நம்முடைய இதயத்தில் வன்முறை உணர்வு இருத்தல் கூடாது. (அதாவது வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது மட்டுமல்ல; வன்முறை உணர்வு கூடத் தவறுதான்) அவர் நம்மை வாய்மை, அஹிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் கழிவிரக்கப் பாதையில் அழைத்துச் சென்றார். சாதி, மதம், இனம், நிறம், மொழி, மண்டலம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித குலம் முழுதும் ஒன்றுதான் என்பதையே நமது வரலாறும் பண்பாடும் பிரதிபலிக்கின்றன என்று காந்திஜி நமக்குப் புகட்டினார். இந்த கொள்கைகளைக் கொண்டு காந்திஜி நம்மை வலிமை கொண்டவர்களாய்ச் செய்தார். இந்தக் கொள்கைகள் நமக்கு வலிமை தந்தன; விடுதலை தந்தது; அதனைப் பாதுகாக்கும் திறனைத் தந்தது.

இந்தியா வளர வேண்டுமெனில், இந்திய மக்கள் உண்மையில் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனில், இந்த சுதந்திரமும் வளர்ச்சியும் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று காந்தி நமக்கு போதித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் காந்தியின் மீது மிகுந்த பற்று இருந்தது. மக்களுக்கும் காந்திஜிக்கும் இடையே நிலவிய ஆழமான வலுவான பிணைப்பு சொற்களால் விவரிக்க இயலாது. ஆனால் காந்திஜியை கொன்ற சிலர் நமக்குள்தான் இருந்தனர்.

மதவாத சக்திகளால் காந்திஜி கொல்லப்பட்டார். அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல; சுதந்திரமான நாடு, தனது பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே பிளவுபட வேண்டும் என்பதற்காகவும் தான் காந்திஜி கொல்லப்பட்டார். ஆனால் இத்தனை முயற்சிகள் வெற்றி பெறாது. யாராலும் வீழ்த்தவோ உடைக்கவோ முடியாத அளவுக்கு மாபெரும் வலிமையை இந்தியாவுக்கு ஏற்கெனவே காந்திஜி தந்து விட்டார்.

காந்திஜியின் மறைவுக்குப் பிறகு, பண்டித நேரு இந்தியாவை வளர்ச்சிக்கான தேசக்கட்டுமானப் பாதையில் வழி நடத்தினார். உலகில் தனக்கென ஒரு தனி இடம் நோக்கி, இந்தியாவை இட்டுச் சென்றார். பல தருணங்களில் இதே செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு, விதியுடன் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்ட சந்திப்பு குறித்து நினைவுபடுத்தி இருக்கிறார். தற்போது, சுதந்திரம் பெற்று 42 ஆண்டுகள் கழித்து, இந்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொள்கிறோம். இன்று நேரு இருந்திருந்தால், தான் இட்ட அடித்தளத்தின் மீது எவ்வாறு இந்தியா உயர்ந்து வலிமையாக நிற்கிறது என்பதைக் கண்டிருப்பார். இன்றைய இந்தியா மிக நிச்சயமாக நேருவின் இதயத்தில் பெருமையை நிரப்பி இருக்கும். இது - பண்டித நேருவின் நூற்றாண்டு.

கடந்த 42 ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சியைப் பார்த்தால், நமது விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, தொழிற்சாலைத் தொழிலாளர்களை, பெண்களை, குழந்தைகளை, விஞ்ஞானிகளை, படை வீரர்களை, தொழில் வளத்தை நேரு பார்த்தால் நிச்சயம் மனம் மகிழ்ந்து பெருமை கொள்வார். சில சோதனைகளையும் கவனித்து இருப்பார். சாதனைகளுக்கு இடையே சில குறைகளும் பார்த்திருப்பார். இன்றும் கூட, ஒவ்வொருவர் கண்களில் இருக்கும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைக்க முடியவில்லை. நம் முன், மகத்தான தியாகங்களைக் கோரும் மிகக்கடினமான பணி, மிக நீண்ட போராட்டம் இருக்கிறது.

காந்திஜியின் கனவான கிராம சுராஜ்யம் (கிராம தன்னாட்சி) நிறைவேற வேண்டும் என்று பண்டித நேரு மிகவும் விரும்பினார். இதனை நிறைவேற்ற, பஞ்சாயத்து ராஜ் தொடங்கினார். ஆனால் அப்பணியை நம்மால் (இன்னமும்) நிறைவு செய்ய முடியவில்லை. இது வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அதிகார இடைத்தரகர்கள் சிலர் உள்ளே நுழைந்ததால், இதனை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. பாரதத்தின் கைகளில் அதன் மக்களின் கைகளில் உண்மையான அதிகாரம் சென்று சேராமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். பஞ்சாயத்து ராஜ் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த அதிகாரத் தரகர்களை எதிர்த்து நிற்க, ஆங்கிலேயரிடம் இருந்து இந்திய மக்களுக்கு மகாத்மா காந்தி பெற்று தந்த அதிகாரம் முழுமையாக அவர்களை சென்று சேர, பண்டித நேரு நீண்ட நாள் உயிருடன் இல்லை.

இந்தியாவின் ஏழை மக்கள், நலிந்த பிரிவினருக்காக தனது வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தார் இந்திரா காந்தி. அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக தன்னால் இயன்றது அனைத்தையும் செய்தார். வங்கிகள் தேசிய மயமாக்கத்துடன் தொடங்கினார். மக்களுக்கு மூலதன நிதி கிடைக்க வழி செய்தார். இன்று நம்மிடையே இந்தப் பிரச்சினை இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டபோது கிராமப்புற இந்தியாவில் வங்கிக்கிளைகள் இல்லை. வங்கிகளில் இருந்த நிதி (மூலதனம்) ஏழை மக்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை; பயன்தரவில்லை.

சுதந்திர இந்தியாவில் கூட, வசதி படைத்தவர்கள் மத்தியில் மட்டுமே நிதி சுழன்று வந்தது. வங்கி தேசியமயமாக்கல் மூலம் இந்த நிலையை இந்திராஜி மாற்றி அமைத்தார். வங்கிகளில் இருந்த நிதியை, வறுமையைப் போக்க ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.

இந்திராஜியின் 20 அம்ச திட்டம், முதன்முறையாக, இந்தியாவில் வறுமையைக் குறைத்தது. முதன்முறையாக இந்தியாவில் மாபெரும் திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை நலிந்த பிரிவினரையும் சென்று சேர்ந்தது. மூலதன சக்திகளை எதிர்த்து அழிக்க, தனது வாழ்நாள் முழுதையும் இந்திராஜி அர்ப்பணித்தார். அவர் மனதில் எப்போதும் இருந்ததெல்லாம் - வறுமை ஒழிப்பு, நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. இந்தியா வலுவான நாடாக வேண்டும் என்பதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்தார். நாட்டை பலவீனமாக்கும் சக்திகளை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அவர் ஆதரவளித்ததில்லை. சில தேசவிரோத சக்திகள் காரணமாக இந்திராஜி உயிர் துறந்தார். இந்தியாவைத் துண்டாக்கும் ஒரு முயற்சியாக மகாத்மா காந்தி கொல்லப்பட்டது போல, இந்தியாவைப் பிளவுபடுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இது (இந்திராஜி மீதான தாக்குதல்)

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திராஜி கொலையைத் தொடர்ந்த நெருக்கடியான காலம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. நாடு முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. நாட்டைத் துண்டாட, பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. காந்திஜியின் மரணத்துக்கு பிறகு அநேகமாக முதன்முறையாக இப்போது தான் இது போன்ற நெருக்கடியை நாடு சந்தித்தது. நாட்டைப் பிரிக்க பஞ்சாபில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. திரிபுரா, மிசோரம், அசாம், டார்லிங் மலைப்பகுதிகளிலும் சில சம்பவங்கள் நடந்தன. தெற்கே இலங்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக நமது நாட்டிலும் சில பலவீனங்கள் வெளிப்பட்டன. டெல்லி இதுபோன்ற தீவிரவாதங்களை இதற்கு முன் சந்தித்தது இல்லை. அன்றைய நிலையை உன்னிப்பாக கவனித்தவர்கள் யாரும், இந்த நெருக்கடியில் இருந்து நாடு மீளும் என்று நம்பியிருக்க மாட்டார்கள். இவையெல்லாம் இப்போது கடந்த காலம் ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில், நவம்பர் மாதத்தில், எனக்கு இருந்த குறிக்கோள் ஒன்றுதான் - இந்திய மக்களின் கனவுகளை நினைவாக்க, காந்திஜி, நேருஜி, இந்திராஜி காட்டிய பாதைக்கு இந்தியாவைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.

இந்திராஜியின் கொலையாளிகள் இந்தியாவை உடைக்கப் பார்த்தனர். இதற்கான திட்டம் இந்தியாவில் உருவாகவில்லை; வெளிநாட்டில் தோன்றியது; நம் மீது திணிக்கப் பட்டது. நமது நாட்டை உடைப்பது, அழிப்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம். இந்திராஜியின் கொலை, இந்தத் திசையில் முதல் நடவடிக்கை. துரோகிகள் இந்திய மக்களிடம் இருந்து இந்திராஜியைப் பறித்து விட்டனர். இந்த துரோகிகள் எனது தாயாரை என்னிடம் இருந்து பறித்து விட்டனர். இவர்கள் தமது தீய நோக்கத்தில் வெற்றி பெற விட மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். எந்த தியாகமும் செய்யத் தயார்; எந்த விலையும் தரத் தயார் - இந்த நாட்டில் யாரும் பிரிவினை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாட்டுக்கான எந்தத் தியாகமும் பெரிதில்லை என்று எனது தாயார் இந்திராஜி கற்றுத் தந்தார். காந்திஜி, நேருஜி, இந்திராஜி தொடங்கி வைத்த போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல எந்த இன்னல், தியாகத்துக்கும் தயாராக இருக்கிறோம்.

காந்திஜியின் இயக்கம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் புதிய யுகத்தை தொடங்கி வைப்பதும் தான். உலக நாகரிகத்தை இந்த வழியில் மட்டுமே பேணிக் காக்க முடியும் என்று காந்திஜி காண்பித்தார். காந்திஜி, நேருஜி காட்டிய புதிய கொள்கைகளின் வழியேதான் மனித குலத்தை காக்க முடியும் என்கிற புரிதல் உலகம் எங்கும் தோன்றியிருக்கிறது. (வல்லரசுகளின்) அதிகார மையங்களின் மூலம் உலகம் முன்னேறாது; மனிதகுலம் காப்பாற்றப்படாது என்பது முதன் முறையாக வல்லரசுகளுக்கும் புரிய வைக்கப் பட்டுள்ளது. ஒரு புதிய உலகப் பார்வை தேவைப்படுவதை உலக நாடுகள் உறுதியாய் சொல்கின்றன. இந்தப் புதிய பார்வை - அகிம்சை, வாய்மை, இரக்கம், சகிப்புத்தன்மை கொண்டது. மனிதகுலம் முழுதையும் ஒரே அலகாகப் பார்ப்பது. இதுதான் நமது வலிமை. இப்படித்தான் இந்தியா வலுவான நாடாக உயர்ந்தது. ஆனால் இந்த கொள்கையை நிறைவேற்றும் போது சக்திகளை பல்வேறு சவால்களை நாம் எதிர் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பழமைவாத சக்திகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; இந்த சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காரணம் பழமைவாத சக்திகள் இன்னும் முடிந்து விடவில்லை.

இன்றும் கூட பெண்களின் உரிமைகளில் எந்த அளவுக்கு பழமைவாத சக்திகள் ஊடுருவி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இந்தப் பழமைவாத சக்திகள், நாட்டின் வளர்ச்சித் திட்டத்தில் பங்கு பெறாமல், நாட்டை வலுவாக்குவதில், மக்களுக்கு சேவையாற்றுவதில் பங்கு கொள்ளாமல், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை வளர்க்காமல், ஆடல் பாடல்களில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த வழியில் இந்தியாவை கட்டமைக்க முடியாது; வலுவாக்க முடியாது. இதேபோன்று நாட்டை பலவீனமாக்குவதில் உடைப்பதில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

துரோகிகள் சுதந்திரமாக உலவி வருகின்றனர். இவர்கள் நாடாளுமன்றத்திலும் இருக்கிறார்கள். நமது நாட்டை பலவீனப்படுத்த, நாட்டில் பிரிவினை ஏற்படுத்த வழிகோலும் தீர்மானத்துக்கும் சில மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதே வேதனையாக இருக்கிறது. மதவாத சக்திகள் எந்த அளவுக்கு தீவிரமாக செயல்படுகிறார்கள், அரசியல் எந்த அளவுக்கு மதவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டால் காந்திஜி, நேருஜி, இந்திராஜி மிகவும் வேதனைப் படுவார்கள். காந்திஜி காட்டிய பாதையில் இருந்து முற்றிலும் விலகி வேறு வகையான அரசியலில் சிலர் ஈடுபடுவதை காணும் போது அவர்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். நமது அரசியல் வாழ்க்கையில், கொள்கைகளுக்கு விடை கொடுத்து விட்ட சிலரும் இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது காரணம், இந்தியா முன்னர் தனது கொள்கையை விட்டு நழுவியது; நாம் அடிமைகள் ஆனோம். நாம் மீண்டும் வலிமை பெற்றோம் காரணம் நமது கொள்கைகளில் நாம் உறுதியாக இருந்தோம். ஆனால் இன்று துரதிருஷ்ட வசமாக, இந்திய அரசியலில் சந்தர்ப்பவாதமும் மகிழ்ச்சிப் படுத்துதலும் மிகுந்து கிடக்கின்றன . (Unfortunately today, opportunism and appeasement are rampant in indian politics)

கொள்கைகளைப் பற்றி பேச பலருக்கு விருப்பம் இல்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - தேச விரோத பிரிவினைவாத மதவாத சக்திகள், கொள்கையற்ற முறையில் கைகோர்த்துக் கொண்ட போது இந்தியா பிரிந்து கிடந்தது. இதெல்லாம் எப்படி நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும். இன்று, மதவாத விரிவினைவாத தேச விரோத நிலப்பிரபுத்துவ (feudal) பழமைவாத சக்திகளின் திட்டங்களை முறியடிப்பதில் நம்முடைய சக்தி எல்லாம் ஒன்றுதிரள வேண்டும். ஏனென்றால், இவர்கள் ஒன்று சேர்ந்தால் இந்தியாவின் பிரிவு என்று பொருள். இந்த சக்திகள் ஒன்று சேர வலுப்பட அனுமதித்தால் இந்தியா துண்டாகும்; சுதந்திரம் பறிபோகும்; இந்தியா மீண்டும் அடிமை நாடாகும் என்பதை இந்திய மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக அல்ல பல நூற்றாண்டுகளாக உயர்த்திச் செல்லப்பட்ட போராட்டத்தை, சந்தர்ப்பவாதம் செல்லாததாக்கி விடும். இந்த சக்திகள் ஒன்று சேராமல் பார்த்துக் கொள்வோம்; இவற்றை அழிக்க போராடுவோம். இந்தியாவிலிருந்து இவை முற்றிலுமாக அழிக்கப் படும் வரை நமது போராட்டம் நிற்காது. எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும் எத்தனை கடினமான போராட்டமாக இருந்தாலும் என்ன தியாகம் தேவைப்பட்டாலும் நாம் நிற்க மாட்டோம். இத்தகைய சக்தி இடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கு எந்த தியாகமும் பெரிதில்லை.

கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் நாம் சாதித்த வளர்ச்சியை பார்க்கிற போது, இந்தியா கணிசமாக உயர்ந்து இருப்பதைக் காண முடியும். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டு கோணத்திலும் கூட, 1984 அக்டோபர் நவம்பரில் நாட்டை சூழ்ந்து இருந்த இருள் அகன்று விட்டது. இன்று நாம் ஒளி வீசும் வளர்ச்சி பார்க்கிறோம். இந்தியா வேகமாக முன்னேறுகிறது.

இடைப்பட்ட காலத்தில் கடுமையான வறட்சியை சந்தித்தோம். இருந்தபோதிலும் இந்திய விவசாயிகள் துணிச்சல் விடாமுயற்சியுடன் வறட்சியை எதிர் கொண்டனர். வேளாண் உற்பத்தியில் வளர்ச்சி வேகம் குறையவில்லை. தொழில் வளர்ச்சியிலும் தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து உத்வேகம் தந்தனர். 20 அம்சத் திட்டம் மூலம், இந்தியாவில் ஏழை மக்களின் நலிந்த பிரிவினரின் விரைந்த முன்னேற்றத்திற்கு வழி கண்டோம்.

இன்று நான் இந்திய மக்களுக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களின் கடின உழைப்பால் அன்றி இது சாத்தியப்பட்டு இருக்காது. உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டச்செய்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவசாய தொழிற்சாலை தோழர்களின் வியர்வை கடும் உழைப்பின் காரணமாகவே இந்தியா தொழில்மயம் ஆயிற்று. இவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

உலகின் புதிய சக்தியாக இந்தியா தோன்றியிருக்கிறது. இந்த மண்டலத்தில் அமைதி நிலவ, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தியாகம் செய்யும் வீரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லையில், பனி சூழ்ந்த மலைகளின் உச்சிகளில் இருக்கும் வீரர்கள், கடலில் இருக்கும் நமது கடற்படை வீரர்கள், அண்டை நாட்டுக்கு உதவ மாலத்தீவில் இருக்கும் வீரர்கள், தமிழர்களை பாதுகாக்க இலங்கையில் இருப்போர்... இந்தியப் படைகளில் இருக்கும் அலுவலர்கள் வீரர்கள், இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார்கள். இந்தியாவை வலுப்படுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய எல்லைகளை எட்டுவதன் மூலம் நாட்டின் விஞ்ஞானிகள் இந்தியாவை ஒரு புதிய சக்தியாக உருமாற்றி இருக்கிறார்கள்.

'அக்னி' ஏவியது, பிரித்வி ஏவுகணை சோதனை, விவசாயிகள் நலனுக்கான உயிரி தொழில்நுட்பம், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு... வெவ்வேறு துறைகளில் நமது விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்கள், வறுமையை ஒழிக்க வேலையின்மையை நீக்க இந்தியாவை மேலும் வலுவாக்க புதிய பாதைகளை வகுத்துள்ளார்கள்.

நம்முடைய நிர்வாகத்துக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் திறமையான நிர்வாகம் இல்லாமல் நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு இத்தனை வலிமையாக இருக்க முடியாது; அமைதியை நிலைத்தன்மையை பராமரிக்க முடியாது; உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை இந்தியா வடித்திருக்க முடியாது. நமது நிர்வாகத்தில் சில குறைபாடுகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் சில வலுவான அம்சங்களும் உள்ளன. இவை இல்லாமல் இந்தியா வலுவான நாடாகி இருக்க முடியாது; வளர்ச்சி பாதையில் முன்னேறுகிற திறன் பெற்று இருக்க முடியாது.

இந்தியாவின் தொழில்மயமாக்க வேகத்தை மேலும் விரைவுபடுத்திய நமது வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு முழு இதயபூர்வ பங்களிப்பை தந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து இந்தியாவின் வலிமைக்கு வழிகோலிய இந்திய பெண்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பழமைவாதத்தை நீக்கி புதிய பாதையில் பயணிக்கும் இந்திய இளைஞர்களைப் பாராட்டுகிறேன். முதன் முறையாக, இந்திய அரசியலில் தீவிரப் பங்காற்றும் வாய்ப்பை இளைஞர்கள் பெற இருக்கிறார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்திலும் எல்லை பாதுகாப்பிலும் இளைஞர்கள் நல்ல பங்காற்றி உள்ளார்கள். இந்திய மண்ணில் இருந்து பழமைவாதம், நிலப்பிரபுத்துவம், சாதியவாதம், மதவாதம் ஆகியவற்றை இளைஞர்கள் வேரறுப்பார்கள் என்று முழு நம்பிக்கை இருக்கிறது.

இதுதான் நாட்டின் உண்மையான விடுதலை. நாட்டை வலிமையாக்க முன்னேற்ற கணிசமாக பங்களித்த இந்திய சிறுபான்மையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலித்துகளுக்கு, பட்டியல்இன மக்களுக்கு எனது சிறப்பு நன்றி. இவர்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேற முடியாது. நாட்டை வலுவாக்க இவர்கள் அனைவரும் ஒன்று சேராமல் இருந்திருந்தால், விடுதலை பெற்றிருக்க முடியாது, இருண்ட சூழலில் இருந்து வெளிவந்திருக்க முடியாது.

உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க உங்களின் பங்களிப்பே உதவியது. இந்தியாவை பின்தங்கி நிலையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்பதை உலகுக்குக் காண்பிப்போம். இப்போது புதிய இந்தியா முன்னேற்றம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இந்தியா நிறைய சாதித்து இருக்கிறது; இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. நிறைய குறைபாடுகளும் உள்ளன. கிராம சுயாட்சி பற்றி காந்திஜி பேசினார். பஞ்சாயத்து ராஜ் தொடங்க பண்டித நேரு முயற்சித்தார்.

மக்களவையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் முதன்முறையாக மக்களுக்கு அதிகாரங்களை மாற்றி இருக்கிறோம். முதன்முறையாக உண்மையான சுயாட்சியை நிறுவியிருக்கிறோம். இது உங்களுடைய சொந்த ஆட்சி. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இந்திய மக்களின் கரங்களை வலுப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. துரோகிகளும் மதவாதசக்திகளும் அவர்களுடன் இணைந்து விட்டார்கள் என்பது வருத்தம் தருகிறது. இவர்கள் அனைவரையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தச் சவாலை எதிர்கொள்வதன் மூலமே இந்திய மக்களின் கரங்களை நம்மால் வலுப்படுத்த முடியும்; அவர்களுக்கு சமூக நீதி வழங்க முடியும்; நலிந்த பிரிவினருக்கு வலிமை வழங்க முடியும்; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். முதன்முறையாக நலிந்த பிரிவினர் பெண்கள் பட்டியல் இன மக்களுக்கு நமது அரசியலில் ஜனநாயகத்தில் அதிகாரம் தந்துள்ளோம்; நமது ஜனநாயகத்தில் குற்றவாளிகளும் சமூக விரோத சக்திகளும் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். முதன் முறையாக, இவர்கள் அரசியலில் ஜனநாயக நடைமுறைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். எத்தனை சவால்கள் எதிர் கொண்டாலும் இந்தப் பணியை நாம் செய்து முடிப்போம். இதன் பிறகு வரும் ஆண்டுகளில் நாம் இரண்டு பெரும் பணிகள் செய்ய வேண்டி உள்ளது.

முதலாவது - நீதி. நிறைய செய்துள்ளோம் ஆனாலும் கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைத்ததாய் யாரும் சொல்வதற்கில்லை. நீதிக்காக, நிறைய பணமும் நேரமும் செலவழிக்க வேண்டி உள்ளது. உண்மையில் நீதி வழங்கப்பட்டதாகக் கூறவே முடியாது. வரும் ஆண்டுகளில், நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை பலப்படுத்துவது போல, நகர் பாலிகா அமைப்புகளை வலுப்படுத்தி இந்தியாவின் நகரப் பகுதிகளில் வளமை சேர்க்க முயற்சிப்பது போல, நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுப்போம். இதற்காக, கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால் அதைச் செய்யவும் தயாராக இருக்கிறோம்; மக்களுக்கு நீதி மறுக்கப் படுவதை ஏற்றுக் கொள்ள மட்டும் தயாராக இல்லை.

உலகில் இந்தியாவுக்கு என்று தனி ஆளுமை கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அடிமைப்படுவதற்கு முன்பு இருந்த மகத்தான இந்தியாவை உருவாக்குகிற வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இந்தியா தனது சுதந்திரத்தை இழப்பதற்கு முன்பாக, உலகின் பல மூலைகளில் இருந்தும் மக்கள், செல்வங்களை கண்டறிய, தமது அறிவைப் பெருக்கிக் கொள்ள இந்தியாவுக்கு வந்தார்கள். நூற்றாண்டுகளாக அடிமைத்தனம் இந்தியாவை ஏழையாக பலவீனமாக மாற்றியிருக்கிறது. முதன்முறையாக இப்போது, இந்தியாவின் பழைய மகத்தான நிலைமையை மீட்பதற்கான வாய்ப்புகிட்டி இருக்கிறது. வறுமையை அநீதியை இந்தியாவில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா, தற்சார்பு உடையதாக வேண்டும். உலகில் பெரும் சக்தியாக இந்தியா ஆக வேண்டும். ஆனால் பிறரை நசுக்கி அதன் மூலம் வலிமையாக மாறுவதில் இந்தியாவுக்கு விருப்பம் இல்லை. காந்திஜி நேருஜி இந்திராஜி காட்டிய கொள்கைப்படி, இந்தியா யாரையும் அடக்கப் பார்க்காது; ஆனால் உலகில் உள்ள ஏழை மக்களின் குரலாக ஒலிக்கும்.

இந்தியா ஒரு புதிய உத்வேகத்தை எழுப்பும். கும்பல் சேரும் மனப்பான்மையை ஒழிக்கும். மனித குலத்தின் மேன்மையை நிறுவும். நாகரிகத்தைக் காப்பாற்றும்; மேலும் வளமாக்கும்.இன்று இந்தியாவை வலுவான நாடாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். நாம் ஓர் உறுதி ஏற்போம். இந்தியாவை மகத்தானதாக வலிமையானதாக முன்னேற்றிக் கொண்டு செல்வோம். உங்களுக்கு எனது நன்றிகள். இன்று இந்த சுதந்திரதின நன்னாளில், ஒவ்வொரு இந்தியரும் தனது நெஞ்சில் கை வைத்து, இந்தியாவை பெருமைப் படுத்த, புகழின் புதிய உயரத்தை எட்டித்தொட உறுதி ஏற்போம். நன்றி. ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 42 - ‘இன்றைய தேவை... விரைந்த தொழில் மயமாக்கம்’ | 1988

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்