இந்திய பிரதமர்களில் இளையவரான ராஜீவ் காந்தி நான்காவது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, அயலுறவு, மக்கள் தொகைப் பெருக்கம், காந்திய நெறிமுறைகள் உள்ளிட்ட பலவற்றைக் குறித்து சற்றே விரிவாகப் பேசினார். 1988 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய சுதந்திர தின உரையின் முழு விவரம் இதோ: “இன்று சுதந்திர தினம் - உங்களுக்கு என் வாழ்த்துகள். இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல பருவ மழை கிடைத்தது. நமது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள்.
இந்த நாளில் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்; எதிர்காலத்தையும் யோசிக்க வேண்டும். ஒருபுறம் - நமது நாட்டை எங்கு இட்டுச் செல்வது, மக்களை எவ்வாறு முன்னேற்றுவது என்று பார்க்க வேண்டும். மறுபுறம் நாம் கடந்து வந்த இன்னல்களை சிந்தித்துப் பார்த்து எதிர்காலத்தில் எவ்வாறு மேம்படலாம் என்று சிந்திக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நமது கவனத்துக்கு வருவது - நாட்டின் பொருளாதார மேம்பாடு. 1984 மற்றும் 1985 இல் பருவ மழை மோசமாக (பொய்த்து) போனது; 1986 இல் வறட்சி. தொடர்ந்து, கடந்த ஆண்டின் வறட்சி, நமது நினைவுக்குத் தெரிந்து மிக மோசமானது. இருந்தபோதிலும் நமது நாடு நிலையாக முன்னேறியது.
கடந்த ஆண்டு முழு வலிமையுடன் வறட்சியை எதிர்கொண்டோம். டெல்லியில் இருந்து, மத்தியில் இருந்து (தொடக்கத்திலேயே) இதன்மீது கவனம் செலுத்தினோம்; வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வறட்சி பிரச்சினைக்குள் அரசியலைக் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட, உடனடி நிவாரணம் தேவைப்பட்ட மக்கள் மீதே நமது கவனம் இருத்தல் வேண்டும். கடந்த ஆண்டு இதற்கு நம்மை அர்ப்பணித்தோம்; பாதிக்கப்பட்ட மக்கள் மீதே நமது முழு கவனமும் இருந்தது. இந்தியா, வறட்சியில் இருந்து வெளிவந்தது. சிறிதளவு தொய்வு இருந்தாலும், (பொதுவாக) நமது வளர்ச்சியின் வேகம் நின்று விடவில்லை. வலிமையுடன் தொடர்ந்து முன்னேறினோம்.
வளர்ச்சியை இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது என்பதற்கு உலகம் சாட்சியாக இருந்தது. பேரிடர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட வலுவான நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது என்பதை உலகம் உணர்ந்தது. இந்தியாவை அடக்கவோ அதன் வளர்ச்சி வேகத்தைத் தடுக்கவோ எதனாலும் முடியாது என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.
» செங்கோட்டை முழக்கங்கள் 25 - ‘துப்பாக்கிக் குண்டு வலிமையில் ஒரு நாடு வளர்வதில்லை’ | 1971
வறட்சி என்கிற சவாலை எதிர்கொண்ட பணியில் நம்மோடு தோள் கொடுத்த, அரசியலில் நிர்வாகத்தில் தன்னார்வ அமைப்புகளில்.. உள்ள எல்லாரையும் பாராட்டுகிறேன். எல்லாரையும் விட, விடாமுயற்சியுடன் வறட்சியை எதிர்கொண்ட விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் மிகவும் பாராட்டுகிறேன். நான் (முன்னரே) சொன்னது போல, நாடு வறட்சியை எதிர்கொண்ட போதிலும், அதன் வளர்ச்சி வேகம் தடைப்படவில்லை. அந்த நிலையிலும் நாடு முன்னேறியது. நமது கட்டுமானங்களின் செயல்திறன் மிக நன்றாக இருந்தது. அதேபோன்று, தொழில்மயமாக்கல், அதே வேகத்தில் தொடர்ந்தது; தொய்வு விழ விடவில்லை.
முதன்முறையாக, இதுபோன்று இன்னலான கட்டத்தில் இருந்து நாடு வெளிவந்தது; வளர்ச்சி வேகம் தடைப்படவில்லை. முதன்முறையாக நாம், பிறரிடம் கையேந்திச் செல்லவில்லை. இதை நம்மால் சாதிக்க முடிந்தது என்பதே பெருமைக்குரிய விஷயம். கடந்த 40 ஆண்டுகளில் பண்டித நேருவும் இந்திராஜியும் ஆற்றிய பணிகளால் இது சாத்தியம் ஆயிற்று; அவர்கள் ஆற்றிய பணிகளின் பயன்களை இப்போது நாம் பெற்று வருகிறோம். இன்னலான நேரங்களில் கூட ஏழைகள் மீது நாம் செலுத்திய கவனத்தில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டோம். வறுமை ஒழிப்பு, மகளிர் திட்டங்கள், குழந்தைகள் நலன், பட்டியல் இன மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் ஊக்கத்துடன் செயல்பட்டோம். இந்தத் திட்டங்களை விரைவாக, மிகத் திறனுடன் அமல்படுத்த உழைத்தோம். வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு, வறுமை ஒழிப்புக்காக ஏராளமானை வளங்கள் 'முதலீடு' செய்யப் பட்டன. (Never before have so much of resources been invested in poverty alleviation) இருந்த போதிலும் சில சமயங்களில் வேதனை தரும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு ஜஹனாபாத் சம்பவம் நிகழ்ந்தது. மொத்த நாட்டின் மாண்பையும் குறைத்தது. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதே நமது லட்சியம். நமது சட்டங்களில் ஓட்டைகள் உள்ளன என்பதை அறிவேன். (இதனால்) நாம் விரும்புகிற வகையில் நம்மால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, குற்றவாளிகள் குறைவாக தக்க முறையில் தண்டிக்கப்பட, தேவைப்பட்டால், சட்டங்களை மாற்றி அமைப்போம். இதேபோன்று, சிறுபான்மையினர், தேசத்தின் கட்டமைப்பில் பங்களிப்பதை, தமது வளர்ச்சிக்கான முழு வாய்ப்புகளையும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பினர் வலுப்பெறுவதை, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நமது பொருளாதார நிலைமை வலுவானதாக (உருப்பெற்று) இருக்கிறது. இந்த ஆண்டுகளில் நாம் அரசியல் ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தி உள்ளோம். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 1984 நவம்பரில் நமது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கலாம். கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மக்களின் மனங்களிலும் சிந்தனையிலும் ஒரு கேள்விதான் பதட்டத்துடன் எழுந்தபடி இருந்தது: நாட்டுக்கு என்ன ஆகும்? இந்தியா ஒன்றாக இருக்குமா? துண்டாகி விடுமா? இந்திராஜி கொல்லப் பட்டார். தில்லியில் கலவரங்கள்; பஞ்சாபில் நிலைமை மோசம்; அசாமில், மிசோரமில் போராட்டங்கள்; திரிபுராவில் தலை தூக்கிய தீவிரவாதம்; மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் புதிய போராட்டம் தொடக்கம், தெற்கே.. இலங்கையின் தமிழர் பிரச்சினை குறித்து மக்களின் கவலை. இன்று நாம் சுற்றிலும் பார்க்கும்போது, நிலைமை பெருமளவில் மேம்பட்டு இருப்பதைக் காண முடிகிறது.
இலங்கையுடன் ஓர் உடன்படிக்கை.. முழுமையாக நடைமுறைப் படுத்தப்படும் என்று நம்புகிறோம். தென்னிந்தியாவில் மக்களுக்கு இருந்த கவலை நீங்கி உள்ளது. ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டார்ஜிலிங்கில் அமைதி திரும்பி உள்ளது. திரிபுராவில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அசாமிலும் மிசோரமிலும் அமைதி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. விரும்புகிற அளவுக்கு இல்லை என்றாலும், பஞ்சாப் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1984 கால பஞ்சாபுடன் 1988 கால பஞ்சாபை ஒப்பிட்டு பார்த்தால் வேறுபாடு தெரியும். முன்பு இருந்த உணர்ச்சிபூர்வ நிலை இப்போது இல்லை. இன்று அரசு நிர்வாகம் உறுதியாக முன்னேறி வருகிறது. பஞ்சாப் மக்கள், நாட்டுக்காக உறுதியாக நின்றார்கள். பஞ்சாபில் உள்ள ஒவ்வொருவரும் பயங்கரவாத தீவிரவாத சவாலை மன உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
தேவைப்பட்டால் இரும்புக்கரத்துடன் வலிமையாக செயல்பட முடியும் என்பதைக் காட்டி இருக்கிறோம். 'பிளாக் தண்டர் ஆபரேஷன்' - இந்திய பாதுகாப்புப் படைகள் மிக உறுதியுடனும் சிறந்த கட்டுப்பாட்டோடு செயல்படுகிறது என்பதை உலகுக்குக் காட்டியது. பயங்கரவாதிகள் என்போர் பயங்கரவாதிகள் தான்; அவர்களின் இதயங்களில் மதத்துக்கு இடமில்லை என்பதையும் அது நிரூபித்தது. அந்தப் புனித தலத்தில் நடந்த சில விஷயங்கள் நாட்டின் எந்தப் புனிதத் தலத்திலும் இவ்வாறு இதற்கு முன் நடந்தது இல்லை. (இவ்வாறு) ஒரு புனித தலம் சேதப்படுத்தப்படுவதை இதற்கு முன் நாம் கண்டது இல்லை. எதிர்காலத்திலும் இது போன்ற ஒரு காரியம் எப்போதும் நடைபெறாது என்று நம்புவோம்.
ஊடுருவலைத் தடுக்க, தீவிரவாதிகளை அடக்க, எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இப்போதும் பயங்கரவாதிகள், எல்லைக்கு அப்பால் இருந்து உதவி பெறுகிறார்கள் என்பது வருத்தம் தருகிறது. பயங்கரவாதிகளுக்கு உதவுவது எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள் என்று நம்புகிறேன். பின்னாளில் அவர்கள் வருந்துவது போல எந்த நடவடிக்கையிலும் ஈடுபட நமக்கு விருப்பமில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உற்சாக மனப்பான்மையை நாம் முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளோம். கவலையில் ஆழ்த்திய 1984 இன் கருமை மேகங்கள் இப்போது இல்லை. இன்று பெருமையுடன் முன்னேறிச் செல்லும் நாட்டை மக்கள் காண்கிறார்கள். இன்று, பிரிவினைவாதக் குரல் எங்கும் எழவில்லை. ஏனென்றால் யாராலும் பலவீனம் ஆக்க முடியாத பெரும் சக்தியாக இந்தியா இருப்பதை உலகுக்கு நிரூபித்து இருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது; அதை முற்றிலுமாக அகற்ற வேண்டும். மதவாத சக்திகளை அழிக்க வேண்டும். சமய சார்பின்மையை வலுப்படுத்தப்பட வேண்டும்; அரசியலில் யாரும் மதத்தைக் கலவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காகப் புதிதாய் சட்டம் தேவைப்பட்டால், அல்லது ஏதும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தால், அதை நாம் செய்வோம். முழு வலிமையுடன் மதவாத சக்திகளை எதிர்த்து நிற்போம். இந்தியாவில் வெவ்வேறு மதங்களுக்கு இடையே நிலவும் இணக்கத்தைப் பராமரித்தல், வலுப்படுத்துதலே நமது லட்சியம்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு நாம் மிகப்பெரும் முக்கியத்துவம் தந்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்பு படை முன்பு எப்போதும் விட மிகவும் வலுவாக இருக்கிறது. பல பக்கங்களில் இருந்து ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் எதிர்கொள்ளும் திறன் பெற்றிருக்கிறோம். முன்பு அப்படி இல்லை. பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாடு, அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகுந்த உத்வேகம் தந்துள்ளோம். முதன்முறையாக, நமது பாதுகாப்புத் தொழில்நுட்பம், வளர்ந்த (வல்லரசு) நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு முன்னேறி உள்ளது. பல துறைகளில் அவர்களுக்கு இணையாக உள்ளோம். வரும் ஆண்டுகளில் இந்தத் திசையில் இன்னும் வலுவாக முன்னேறுவோம். இந்தியா சுயமாக தன் காலில் உறுதியாக நிற்கும்; எந்தச் சவாலையும் தனித்தே எதிர்த்து நின்று வெற்றி கொள்ளும் என்பதை உலகுக்கு நிரூபிப்போம். இந்தப் பாதையில் இருந்து நம்மை யாரும் திசை மாற்ற முடியாது.
இந்த நாளில் நான், பாதுகாப்புப் படையில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் தளராத மன உறுதி, விடாமுயற்சி, ஒழுங்கு கட்டுப்பாட்டுக்காக மனமாரப் பாராட்டுகிறேன். இவர்களின் வலிமையால் தான் நம்மால் ஒவ்வோர் இரவும் அமைதியாக உறங்க முடிகிறது. இதே வழியில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பெரிதும் உயர்த்தி இருக்கிறோம். உலகம் முழுதும் ஒற்றுமையில் மனித நேயத்தில் தீவிரம் கொள்ளும்; அதனால் வறுமை ஒழிப்பில் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்தில் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.
மகாத்மா காந்தியின் கொள்கைகள்.. அஹிம்சை, சகிப்புத்தன்மைக் கோட்பாடுகள் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்று விரும்புகிறோம். உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இந்த செய்தியை கொண்டு செல்வதே நமது லட்சியம். அணிசேரா இயக்கத்தின் மூலம் உலகின் 101 நாடுகளுக்கு இந்த எழுச்சிமிக்க கொள்கையைக் கொண்டு சென்றுள்ளோம். இந்தக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கும் கூட இதனைக் கொண்டு சென்றுள்ளோம். வல்லரசு நாடுகளுக்கும் இதனைக் கொண்டு சென்றோம். அங்கே இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பாதையில் இன்னும் மன உறுதியுடன் முன்னேறிச் செல்ல முடியும்; உலகில் அமைதிக்கான புதிய சூழல், சகிப்புத்தன்மை, மனித இனத்தின் ஒற்றுமை, வளர்ச்சியை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். இந்தப் பாதையைத்தான் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும் இந்திராஜியும் நமக்குக் காண்பித்தனர்.
நமது அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் நட்புறவை விரும்புகிறோம். நமது மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்க எல்லாரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த ஒத்துழைப்பைத் தான் 'சார்க்' மூலம் தொடங்கி வைத்தோம். இன்னமும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன; பாதை அத்தனை எளிதானது அல்ல. ஆனால். இந்த இன்னல்கள் நாம் உருவாக்கியவை அல்ல. நம் இதயத்தில் நட்புறவு இருக்கிறது. நம்மிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது. நமது மண்டலம் வலிமையாக இருக்க வேண்டும்; இந்த நோக்கத்துக்காக நாம் கடுமையாக உழைப்போம்.
நமக்கு அருகே, ஆப்கானிஸ்தானில் ஒரு சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விரைவில் அமைதி திரும்பும் என்பதில் மகிழ்ச்சி. ஜெனிவாவில் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கை, எந்த திசை மாற்றமும் இன்றி பின்பற்றப்படுதல் மிக அவசியம் ஆகும். இந்த உடன்படிக்கை தோல்வி அடைந்தால், நமது மண்டலம் முழுவதும் பலவீனமடையும். சம்பந்தப்பட்ட அனைவரும் ஜெனிவா உடன்படிக்கையை கடைப்பிடிப்பார்கள் என்று நம்புவோம்.
உலகில் ஒரே ஒரு பகுதியில் தான் இன்னமும் நிறவெறி இருந்து வருகிறது - தென் ஆப்பிரிக்கா. நமது சுதந்திரத்துக்கு முன்பே, காந்திஜி தலைமையில், பின்னர் நேருஜியின் தலைமையில் நாம் நிறவெறிக்கு எதிராக நின்றோம். இன்றைக்கும் நாம் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வர முழு வலிமையுடன் குரல் கொடுத்து வருகிறோம். நிறவெறி முடிவுக்கு வரும் வரை, உலகில் அடிமைத் தளை முற்றிலுமாக அகற்றப்படும் வரை நாம் ஓய மாட்டோம்.
இதேபோன்று பாலஸ்தீன இயக்கத்தையும் நாம் உறுதியாக ஆதரித்து வருகிறோம். ஓர் உடன்படிக்கை எட்டப்பட வேண்டும்; பாலஸ்தீனியர்கள் அவர்களின் தாய்நிலத்துக்குத் திரும்ப வர வேண்டும்; அவர்களுக்கு என்று வீடுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உலகின் இந்தப் பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். (India is firmly supporting the Palestenian movement. We would like an agreement to be reached so that Paletenians return to their motherland and find a home. We want peace to return to that part of the world)
வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால், நலிந்த பிரிவினர் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், அணு ஆயுதக் குறைப்பு மிக அவசியம். அணு ஆயுத குறைப்புக்கு ஆதரவாக இந்தியா போன்று வேறு எந்த நாடும் வலுவாகக் குரல் கொடுத்ததில்லை. முதன்முறையாக, உலகம் முழுவதும் ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு வழிகாட்டும் செயல் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் வைக்கப் பட்டுள்ளது. முதன்முறையாக ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கான திட்டத்தையும் நாம் முன் வைத்துள்ளோம். விரைவில் உலக நாடுகள் நமது திட்டத்தை ஏற்றுக் கொண்டு நம்மைச் சுற்றி வருவார்கள் என்று நம்புகிறோம். இதனை விரைந்து நிறைவேற்ற முடியாது என்பதை நாம் அறிவோம். இது அத்தனை எளிதான பாதை அல்ல.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, காந்திஜி பின்பற்றிய கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அயலுறவுக் கொள்கையை ஜவஹர்லால் நேரு வடிவமைத்தார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அணிசேரா இயக்கத்தின் கொடியை பண்டிதர் நேரு ஏற்றி வைத்தார். இப்போது, முதன்முறையாக, ஆயுதக் குறைப்பு மற்றும் அணி சேராமை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஆயுதக் குறைப்புக்காக பண்டிதர் நேரு குரல் எழுப்பி சுமார் 30 - 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அணு ஆயுதங்களை அழிப்பது தொடர்பாக ஓர் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இது அத்தனை எளிதான பாதை அல்ல என்பது நமக்குத் தெரியும். இதனை விரைந்து செயல்படுத்த முடியாது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் உணர்கிறோம் - உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால், இந்தியா போன்ற நாடுகள் வளர்ந்து வலிமை பெற வேண்டும் என்றால், உலகில் வறியநிலையில் உள்ள மக்களை மேம்படுத்த வேண்டும் என்றால், ஆயுதங்களுக்காகப் பெரும் தொகை செலவழிப்பதை நிறுத்த வேண்டும்; இந்த வளங்களை வறுமையை நீக்க மனித இனத்தை உயர்த்த மடை மாற்ற வேண்டும். இந்தத் திசையில் நாம் உறுதியாக முன்னேறுகிறோம்; எந்தத் தடங்கலும் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
உலகில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்தியா நல்ல அங்கீகாரம் ஈட்டி உள்ளது; உலக நாடுகளின் மிக முக்கிய, மிகப் பெரிய முடிவுகளில் நாம் பங்கேற்று உள்ளோம். வரும் ஆண்டுகளிலும் உலக நடப்புகளில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவோம். இந்தியாவின் பாரம்பரிய எழுச்சியை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம். ஏனென்றால் அப்போதுதான் நாம் சரியான பாதையை வகுக்க முடியும்; அப்போதுதான், காந்திஜியின் கொள்கைகளை கோட்பாடுகளை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும்.
இன்று ஆகஸ்ட் 15 நன்னாளில் எதிர்காலத்தையும் நோக்குவோம். நாட்டின் முன்னால் உள்ள சவால்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். பல சவால்கள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், வறுமையும் வேலையின்மையும் பிரதான சவால்கள். அடிமைப்படுவதற்கு முன்பு இருந்த பெருமைமிகு நிலைக்கு நமது நாட்டை மீண்டும் உயர்த்திச் செல்வது மற்றொரு சவால். வறுமையை ஒழிக்க, பல காரியங்கள் செய்து வருகிறோம். பல திட்டங்களை முன்னெடுக்கிறோம். இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது.
வறுமையை ஒழிக்க, வேலையின்மையை நீக்க.. நாம் முதலில் கிராமங்களை கவனிக்க வேண்டும். கிராமப்புற இந்தியாவை கவனிப்பது என்றால், ஏராளமான இன்னல்களை அனுபவித்து வரும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை கவனிக்க வேண்டும். வேறு எதற்கும் முன்பாக, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு வழி கோல வேண்டும். நிலச் சீர்திருத்தம் செய்ய மிகுந்த முக்கியத்துவம் தர முயற்சிக்கிறோம். நிலச் சீர்திருத்தம் செய்யவில்லை எனில், பசுமைப் புரட்சியின் பயன்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் குறிப்பாக கிழக்குப் பகுதிகளை சென்று சேர்க்க இயலாது. இந்தப் பிரச்சினையை தீவிரத்துடன் அணுகுவோம்; நல்ல தீர்வு காண முயற்சிப்போம்.
கடந்த ஆண்டுகளில் நாம், சமவெளி, மலைப்பகுதிகள், பாலைவனம் மற்றும் தெற்கே வாழும் எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான வேளாண் திட்டம் கொண்டிருந்தோம். இதையெல்லாம் மாற்றி விட்டோம். நாட்டை (நிலப்பரப்பை) 15-16 வேளாண் வெப்பநிலை மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். (We have divided the country into15-16 agro climatic zones) விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, அவர்களிடம் உள்ள மண் (வளம்) மாதிரியை, அவர்களுக்கு தேவைப்படுகிற விதைகளை, பாசனத் தேவைகளை, உரப் பயன்பாட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறோம். முதன்முறையாக இவை எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்கிறோம். இந்த ஆண்டு நமது வேளாண்துறை விரைந்த வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது உற்பத்தித் திறனைப் பெருக்க பெரு முயற்சி எடுத்து வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் நிர்ணயித்த இலக்கை எட்டி விடுவோம். அப்போதுதான் நமது விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் நம்மால் உதவ முடியும்.
மற்றொரு மாபெரும் பிரச்சினையும் இருக்கிறது. கடந்த 40 - 50 ஆண்டுகளில் நமது மக்கள் தொகை அபாரமாக வளர்ந்து விட்டது. நாம் பல வளர்ச்சிகளைக் கண்டு இருந்தாலும், ஒரு குறும் நிலத்தைக் கொண்டு 3-4 நபர்கள் வாழ்ந்து வந்த நிலை மாறி, அதே அளவு நிலத்தைக் கொண்டு 30-40 பேர் வாழ வேண்டி இருக்கிறது. சாலைகள் மருத்துவமனைகள் பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களைக் கட்டுவதற்கு விவசாய நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. பல துறைகளில் வளர்ச்சி கண்டிருக்கிறோம். அதேசமயம் (விவசாய) நிலம், பற்றாக்குறை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எத்தனை பேர் (விவசாய) நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ முடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு எவ்வாறு புதிய வேலை வாய்ப்புகள் வழங்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்புகள், மிகக் குறிப்பாக கிராமங்களிலேயே வழங்கப்பட வேண்டும். வேலையின்மை (பிரசினை) தீர்க்கப்பட வேண்டும்.
இதற்கான முயற்சி கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும். வேளாண் பொருள்களுக்கு எவ்வாறு மதிப்பு கூட்டுவது, இந்தப் பொருள்களை எவ்வாறு சீர்படுத்துவது (processed), இன்னும் அதிக விலைக்கு விற்று அதனால் விவசாயிகள் எவ்வாறு பயன்பட முடியும் என்று பார்க்க வேண்டும். தொலைதூர இடங்களிலும் விவசாய பொருட்களை சீர்படுத்த (process) சிறிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இந்திய விவசாயிகளின் விளைபொருட்களை முழு உலகத்துக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்; நமது பழங்கள் காய்கறிகள் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்கு என்னுடைய அரசாங்கத்தில் முக்கிய கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தி இருக்கிறேன். கிராமப்புற பின்தங்கிய பகுதிகளில் விரைந்த வளர்ச்சியை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அதேசமயம், விரைந்த தொழில் மயமாக்கலையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இது இல்லாமல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது, வேலையின்மை பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வேலை வாய்ப்புக்கான துறைகளை நாம் கண்டறிய வேண்டும். உலகம் மாறிக் கொண்டு வருகிறது. தொழிற்துறையிலும் (அன்றாட) வாழ்க்கை முறையிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இணையாக நாம் ஓட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இந்தத் திசையிலும் நாம் வெகுவாக வளர்ந்து இருக்கிறோம். வரும் மாதங்களில், வரும் ஆண்டுகளில் நமது நாட்டில் கடலளவு மாற்றவும் நிகழும்; இதனால் நமது நாடு மேலும் வலுப்பெறும். (in the coming months and years we will find sea-change in the country so that the country gets stronger.) நமது இளைஞர்களும், நமது ஏழைகளும் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்; நாம் வெகு வேகமாக முன்னேறுவோம்.
ஒரு மிகப்பெரிய தடையை நம்மால் தாண்டி வர முடியவில்லை. நம்முடைய பல திட்டங்கள் கிராமப் பகுதிகளில் அடிமட்டத்தில் சென்று சேரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது ஏன் நடைபெறுகிறது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல கூட்டங்கள் நடத்தி பல மணி நேரம் பேசி இருக்கிறேன். அப்போதுதான் எனக்குத் தெளிவானது - நமது பஞ்சாயத்து அமைப்புகளை வலுவாக்கி கீழே உள்ள மக்களிடம் பொறுப்புகளை நாம் ஒப்படைத்தால் அன்றி நம்மால் எதுவும் சாதிக்க இயலாது. (It became clear that unless we made Panchayat Raj institutions stronger and handed over responsibilities to people down below the line, nothing could be achieved.) இதனை காந்திஜி மிகத் தெளிவாகவே எடுத்துச் சொன்னார். காந்திஜி கூறினார் - 'சுயராஜ்யம் என்பது, ஒரு சிலரின் கைகளில் அதிகாரம் குவிந்து கிடப்பதல்ல; உண்மையில் மக்களுக்கு அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பை (வல்லமை) தருவது.' இதைத்தான் நாம் செய்ய முனைகிறோம். இதற்கு சட்ட திருத்தம் தேவைப்பட்டாலோ, அல்லது சாசன திருத்தம் தேவைப்பட்டாலோ, அதை நிச்சயம் செய்வோம்; இந்தக் குறைபாடு நீடிக்க அனுமதிக்க மாட்டோம். மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பதை உறுதி செய்வோம். ஏனென்றால், நமது திட்டங்கள் வெற்றி அடைவதை சாமானியர்களை சென்று சேர்வதை அப்போதுதான் நம்மால் உறுதி செய்ய முடியும்.
எதிர்காலத்தை நோக்குகிற போது தேசத்தைப் பற்றிய நமது சிந்தனை நீள்கிறது. எது மாதிரியான இந்தியாவை உருவாக்க இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமை ஒழிப்போம்; வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்... சரி... நமது தேசத்துக்கு எது மாதிரியான தோற்றத்தைத் தரப் போகிறோம்? நமது நாடு, 250 - 300 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவைக் கண்டறிய உலகின் பல பகுதிகளில் இருந்து பலர் இங்கு வருவதற்கு முன்பு இருந்த மாபெரும் உயரத்தை எட்ட வேண்டும் என்பதே நமது லட்சியம். இந்தியாவின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, இந்த நாட்டை பலவீனம் ஆக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராகப் போராடி (வென்றால்) மட்டுமே நம்மால் இதனைச் செய்ய முடியும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் வலுவாக இருந்தால் தான் இந்தியா வலுவாக இருக்க முடியும். மத்திய அரசாங்கம் வலுவாக இருந்தால் தான் இந்தியா வலுவாக நீடிக்க முடியும். (India will get to be strong only when every part of the nation is strong. India will remain strong only when the Centre remains strong.) மத்திய அரசை யாரும் பலவீனம் ஆக்க யாராலும் முடியாது என்பதை உறுதி செய்வோம்; மத்திய அரசு வலுவாகவே இருக்கும். நாட்டின் பாரம்பரியத்தை நாம் அனைவருமாக நமது தோள்களில் சுமக்கிறோம். காந்திஜி நேருஜி இந்திராஜியின் மரபுகளைக் கொண்டு முன்னேறுகிறோம். அவர்களின் கொள்கைகளை எண்ணங்களை நாம் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் இன்றைய பிரச்சினைகளுக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கான தீர்வுகளை நமமது சரித்திரத்தில் கண்டுபிடிக்க முடியாது. (We will not be able to find answers in history) நமக்கான பாதையை நாம் தான் துணிச்சலுடன் மன உறுதியுடன் வகுத்துக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்திஜி தியாகம் செய்தது போல, தேவைப்பட்டால் நாமும் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். நேருஜி தியாகம் செய்தார்; இந்திராஜி தன்னையே தியாகம் செய்தார். என்ன தியாகம் தேவைப்படுகிறதோ அதை செய்ய நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். நமது நாடு வலுப்பெற முன்னேறிச் செல்ல, உச்சத்தைத் தொட, உலகத்தில் தனக்கென்று சிறந்த இடத்தைப் பெற நான் என்னைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
வறுமையை ஒழிப்போம், வேலையின்மையை நீக்குவோம், இந்தியாவை மகத்தான நாடாக ஆக்குவதில் தேவையான எல்லா தியாகங்களும் செய்வோம் என்று நாம் எல்லோரும் இன்று உறுதி ஏற்றுக் கொள்வோம். இன்று ஆகஸ்ட் 15 நன்னாளில் செங்கோட்டை வளாகத்தில் இருந்து நான் உறுதி ஏற்கிறேன் - நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் மகத்தான பழம் பெருமையை மீட்டெடுப்போம். ஜெய்ஹிந்த்!”
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 41 - ‘ஆயிரம் ஆண்டு அமைப்பு முறை!’ | 1987
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago