செங்கோட்டை முழக்கங்கள் 41 - ‘ஆயிரம் ஆண்டு அமைப்பு முறை!’ | 1987 

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

'மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும் எனில் நாம் முதலில் மகத்தான மனிதர்களாக இருக்க வேண்டும்'. 'ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்த வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயக அரசு தான் செயல்படவே முடியும்'. 1987 ஆகஸ்ட் 15 - இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி மூன்றாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரை - இதோ: “ஒவ்வொரு சுதந்திர தினமும் நாட்டுக்குப் புனிதமானது. ஒவ்வோர் ஆண்டும் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கொள்கிறோம். இந்த தினத்தில் நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நினைவுபடுத்திக் கொள்கிறோம். இன்று, செங்கோட்டையின் புனித மண்ணில் நின்று கொண்டு, 1857இல் முதன் முதல் விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த செங்கோட்டைக்கு வந்ததை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

1945-இல் இந்திய தேசியப் படையின் வீரர்களுக்கு இங்கே மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அவர்கள் செய்த ஒரே குற்றம் - தாய் நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டது மட்டுமே. 1947 இல் இதே இடத்தில் பண்டிதர் நேரு, சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றி வைத்தார். இன்று இங்கே நாம் கூடியிருக்கும் போது, நமது நாடு சுதந்திரம் பெற நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த கொள்கைகளை கோட்பாடுகளை விழுமியங்களை கனவுகளை எண்ணிப் பார்க்கிறோம். இன்று இங்கே கூடியிருக்கும் எல்லோரும் இந்த நோக்கத்துக்காக மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஜவஹர்லால் நேரு கூறினார் - 'நாம் மகத்தான காரியங்களை நிறைவேற்ற வேண்டும் எனில், நாம் கனவு காணும் மகத்தான இந்தியாவை உருவாக்க வேண்டும் எனில், நாம் முதலில் மகத்தானவர் ஆக வேண்டும்; இந்தியத் தாயின் குழந்தைகள் என்கிற மதிப்புக்கு உரியவர் ஆக வேண்டும்'.

இந்த 40 ஆவது ஆண்டில் கடந்த ஆண்டின் சம்பவங்கள் மட்டுமல்ல; 40 ஆண்டுகளையும் சிந்திக்கிறோம். அதே சமயம் வருங்காலத்தையும் எதிர்நோக்குகிறோம். பெரியவர்கள் நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள்; இந்த விடுதலையைக் கட்டிக் காக்கிற பொறுப்பையும் நம்மிடம் விட்டுச் சென்றார்கள். இதனைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. இந்த 40 ஆண்டுகளில் நாம் பல சூழ்நிலைகளை, அச்சுறுத்தல்களை, அழுத்தங்களை, சதிகளை, ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டோம். நாம் வளைந்து கொடுக்கவில்லை; நமது துணிச்சல், நமது ரத்தம், நமது தியாகங்களால் இந்தியாவின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தோம். இந்தியா வலிமையானது, இந்தியா ஒன்றானது, இந்தியா பிரிக்கப்பட முடியாதது என்று உலகுக்குக் காண்பித்தோம். நம்மை மீண்டும் யாரும் அடிமைப்படுத்த முடியாது என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டினோம்.

இந்தியாவின் ஒற்றுமையை யாரும் பலவீனப்படுத்த முடியாது என்பதைத் தெளிவுபடுத்தினோம். நமது நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம், ஒற்றுமையின் முன்பு, எந்தத் தியாகமும் பெரிதல்ல. இந்த நோக்கத்துக்கான எந்த அளவு உழைப்பும் எந்த அளவு தியாகமும் விலை உயர்ந்தது அல்ல. நமது வீரர்களும் அலுவலர்களும், நம்மைப் பாதுகாக்க நமது எல்லைகளைப் பாதுகாக்க, தமது வாழ்நாளின் மிகச்சிறந்த நாட்களை நமக்காக வழங்குகிறார்கள். பதிலுக்கு நாம் அவர்களை நன்கு கவனித்துக் கொள்கிறோம் ; மிகச்சிறந்த ஆயுதங்களை வெடி பொருட்களை வழங்குகிறோம். தேவையான ஆகச்சிறந்த கருவிகளை அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம். இதைச் செய்ய உறுதி பூண்டுள்ளோம்.

இந்திய விடுதலை என்பது இந்திய மக்களின் விடுதலை. இந்திய விடுதலையின் பொருள் - ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடிமகனும் பங்கு கொள்ளும் பாரபட்சமற்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை கவனித்துக் கொள்கிற, கட்டமைக்கிற நாடாளுமன்றத்தை, இந்திய மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் விதத்தில் நடத்தி வருகிறோம். சுதந்திர இந்தியா என்றால், சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி என்று பொருள். சுதந்திர இந்தியா என்றால் சுதந்திரமான, விலங்கிடப்படாத பத்திரிகைத்துறை என்று பொருள். ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், அத்தனை எளிதான காரியம் அல்ல. அலட்சியம் ஒழுங்கீனம், சாசனம் மற்றும் சாசன அமைப்புகளுக்கு அவமரியாதை காட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் சிலர் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்றனர். இருந்த போதிலும், நமது நாட்டில் ஜனநாயக வேர்கள் ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளோம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு மட்டுமே செயல்பட முடியும்.

நமது மகத்தான பொருளாதார சாதனைகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதில் இருந்துதான் நமது வளர்ச்சி, தேசக் கட்டுமானப் பணிகள் தொடங்க வேண்டும் என்று காந்திஜி நமக்கு போதித்தார். நமது தேசிய வாழ்க்கையில் அறம் சார்ந்த கடமைகள் முன்னுரிமை பெற வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார். இந்த குறிக்கோளை நோக்கி நமது தேசத்தை முன் நகர்த்தி உள்ளோம். வறுமை ஒழிப்புக்கு, மிகுந்த முன்னுரிமை தரப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புக்கு இந்திராஜி அழைப்பு விடுத்தார். நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் விளைவாக, வறுமை குறைந்தது. அவர்களின் 20 அம்ச திட்டம் மற்றும் NREP / IRDP போன்ற கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் காரணமாக நாட்டின் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட்டு இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் காட்சிகள் மாறி இருப்பதைக் காண்கிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தனர். இன்று 3 இல் 2 பங்கு மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளனர்.

வறுமை ஒழிப்பு திட்டங்களால் இந்த சாதனை சாத்தியமாயிற்று. பசுமைப் புரட்சியின் மூலமும் வறுமை ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டது. மிகச்சில ஆண்டுகளில் நமது உணவுப் பொருள் உற்பத்தி மூன்று மடங்கானது. எனக்கு நினைவு இருக்கிறது - 21 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி ஏற்பட்டபோது, உணவுப் பொருட்களுக்கு இந்திராஜி அயல்நாடுகளை நாடினார். உணவுப் பொருள் கேட்டு பிறரிடம் வளைந்து நின்றபோது இந்திராஜி எவ்வளவு சிறுமையை உணர்ந்தார்! அப்போது அவர் முடிவு செய்தார் - இனியொரு முறை உணவுப் பொருளுக்காகப் பிற நாடுகளை அண்டுவதில்லை. நிபுணர்கள், ஆலோசகர்கள் கூறியவற்றைத் தள்ளிவிட்டு, நாட்டின் வடக்கு மேற்கு பகுதிகளில் பசுமைப் புரட்சி கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். இந்திராஜியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மனவுறுதி.. இந்திய விவசாயிகளின் வியர்வை கடின உழைப்பு.. விரும்பிய விளைவுகள் கிடைத்தன. இன்று நாம் பெருமையுடன் கூறலாம் - உணவுக்காக யார் முன்பும் இந்தியா கைநீட்டாது. (இதேபோன்று) கால்நடைத் தீவன பற்றாக்குறை பிரச்சினையிலும் சிறப்பு கவனம் செலுத்துவோம். நமது கால்நடைகள் விலங்குகள் ஆகியனவும் இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வரும்.

வறட்சி நிலைமையை சமாளிக்க நாம் பெரிய அளவில் கூட்டு முயற்சிகள் எடுக்க வேண்டும். மத்தியிலும் மாநிலங்களிலும் இதற்கான அத்தனை உதவிகளும் வழங்கப்படுவதைதை உறுதி செய்வோம். மாநிலங்கள் மிக விரைவாக உறுதியாகப் பணியாற்ற வேண்டும். அவர்கள்தாம் கிராமங்களைச் சென்று அடைபவர்கள். நாம் எல்லா உதவிகளும் வழங்குகிறோம். ஆனால் மாநில அரசுகள், இன்னும் விரைவாகச் செயல்பட வேண்டும். வறட்சி நிலையை எதிர்கொள்ளும் மாநில அரசுகளின் முதல்வர்களுக்கு நான் (கடிதம்) எழுதியிருக்கிறேன். மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க இருக்கிறேன். இன்னல்களில் இருந்து ஏழை மக்களைப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகளை அடையாளம் காட்டுதல் மற்றும் வறட்சி நிலைமையை எவ்வாறு இணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாகப் பேசி முடிவு செய்வோம். இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாடு வலுவாக உள்ளதால், இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நமது பணியைச் செய்து முடிப்போம். (வறட்சி) பிரச்சினையை தீர்ப்பதில் நம்முடைய முழு கவனத்தை, முழு சக்தியைத் திருப்ப வேண்டியது அவசியம்.

நமது கிடங்குகள் நிரம்பி உள்ளன. இன்று நமக்கு திறனும் அனுபவமும் உள்ளது. அந்நிய உதவி இல்லாமலே நம்மால் பட்டினி பிரச்சினையைத் தீர்க்க முடியும். வறட்சி நிலைமையை சமாளிக்க வேண்டி இருப்பதாலே, வளர்ச்சிப் பணிகளின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வளர்ச்சியை நிறுத்தினால், வளர்ச்சிப் பணிகளை முடக்கினால், வரும் நாட்களில் இன்னும் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். வளர்ச்சி வேகத்தை குறைக்காமல் தற்போதைய சவாலை எதிர்கொள்ளும் வளமைகளை நாம் கண்டாக வேண்டும்.

பொருளாதார சிக்கனம் தேவைப்படுகிறது. அவசியமற்ற செலவுகளை குறைப்பதும் நீக்குவதும் அவசியமாகிறது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். தன்னால் இயன்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யும். ஆனால் வறட்சி நிலைமையை அதனால் மட்டுமே சமாளிக்க முடியாது. இந்தச் சவாலை எதிர்கொள்ள அரசுடனும் பிறருடனும் கைகோர்த்து செயல்பட (குறிப்பாக) இளைஞர்கள் முன்வர வேண்டும். இப்படி ஒரு இயக்கத்தை நாட்டின் எல்லா பாகங்களையும் சென்று அடையுமாறு நாம் உருவாக்க வேண்டும்.

வசதி படைத்த மக்கள் வசதி குறைவான மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். இந்தச் சூழலை பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் வறிய மக்களைச் சுரண்டி ஆதாயம் பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சக்திகளை நாம் உறுதியுடன் சமாளிக்க வேண்டும். பதுக்கல் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். கொள்ளை லாபம் - முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். சமூக விரோத சக்திகளை எதிர்ப்பதில் தீர்மானமாக இருந்தால், பிரச்சினையை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். (இதற்கு) நாம் எந்த நடவடிக்கையும் விட்டு வைக்க மாட்டோம். அரசாங்கத்தின் எல்லா வலிமைகளையும் பயன்படுத்தி சமூக விரோதிகளைக் கட்டுக்குள் வைத்திருப்போம். இந்த சக்திகளை எதிர்கொள்வதில் சட்டக் குறைபாடுகள் இருந்தால் அவை நீக்கப்படும். இதற்குத் தேவையான அதிகாரங்களை அரசு ஏற்படுத்திக் கொள்ளும். இந்த தேசிய சவாலை துணிச்சலுடன் எதிர்கொள்ள நமது வளமைகளைப் பெருக்கிக் கொள்ள எல்லாரும் ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நாடாளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், பத்திரிகைகள் உள்ளிட்ட எல்லா தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். இந்தச் சவால் தொடர்பாக, நிலைமையை திறம்பட சமாளிக்க ஒரு தேசிய முயற்சி உருவாதல் அவசியம் ஆகும்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது, காந்திஜியின் குரல் நமது காதுகளில் ஒலிக்க வேண்டும்; துணிச்சலுடன் இந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். பழிக்குப் பழி என்ற விதத்தில் பயங்கரவாதிகளை நாம் எதிர்கொள்ள மாட்டோம். அவ்வாறு பழி வாங்கும் நடவடிக்கை எல்லாம் ஈடுபட்டால் அது பயங்கரவாதிகளின் செயலுக்கு துணை புரிவதாக அவர்களுக்கு வெற்றி தருவதாக அமைந்து விடும். ஆனால் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், பயங்கரவாதம் தானாக பலவீனமாகிவிடும்; தோற்கடிக்கப்படும். பயங்கரவாதிகளின் பொறியில் நாம் சிக்கி விடக்கூடாது. காந்திஜி சொன்னார் - ஒருபோதும் வன்முறைக்கு வன்முறை பதிலாகாது. அஹிம்சை தான் வன்முறைக்கு சரியான பதிலாக இருக்க முடியும்.

இன்று உலகத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் குரலை உலகம் மரியாதையுடன் கேட்கிறது. ஏன்? 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிமைப்பட்டு வறுமையில் கிடந்த நாடு, இதனால் தனித்து நிற்க முடியாது, தங்கள் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று உலக மக்கள் கருதிய நாடு.. இன்று வலுவான குரலில் பேசுகிறது. இது சாத்தியம் ஆயிற்று. ஏனென்றால் நாம், காந்திஜியின் கொள்கைகள், பண்டிட்ஜியின் கோட்பாடுகள், இந்திராஜியின் வழிகளைத் தாங்கிச் செல்கிறோம்.

அச்சமின்றிப் பேச, அழுத்தத்துக்கு அடிபணியாது நடக்க, துணிச்சலுடன் அஹிம்சை வழியில் பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக் கொண்டுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளில், அணு ஆயுதங்களுக்கு எதிராக இயக்கம் தொடங்கியுள்ளோம். பல வலிமையான நாடுகளும் இப்போது இதனை நோக்கி வருகின்றன. சுதந்திரத்துக்கு முன்பு காந்திஜி, பண்டிட்ஜி ஏற்படுத்திய அதே உணர்வு, 40 அல்லது 50 ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் இன்று பரவி வருகிறது. தற்போதுள்ள ஆயுதங்களே உலகம் முழுவதையும் அழித்துவிட வல்லமை கொண்டவை; இதற்கு மேலும் ஆயுதங்களைத் தயாரிப்பது பைத்தியக்காரத்தனம். உலகில் ஆயுதப் போட்டியில் ஒவ்வொரு நிமிடமும் 15 மில்லியன் முதல் 20 மில்லியன் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. உண்மையில் இது பைத்தியக்காரத்தனம். இதில் ஒரு சிறு பகுதியும், ஏழ்மையை நோய்களை வேலையின்மையை நீக்க பெரிதும் உதவும். இன்று இந்தியா இவற்றில்தான் கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகளில் மனித கண்ணியத்தில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

காந்திஜி முதன்முதலில் சத்தியாகிரகம் தொடங்கிய தென்னாப்பிரிக்கா இன்றும் அடிமைத்தனத்தின் கீழ் கிடக்கிறது. அங்கே இன்னமும் சுதந்திரக்கொடி எழவில்லை. நூற்றாண்டுகள் கடந்து விட்டன; நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமது வாழ்வையே தியாகம் செய்துள்ளனர்; ஆனாலும், சுதந்திரச் சுடர் எங்கே எழுந்ததோ அந்த இடம் இன்னமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. உலகம் முழுதும் உள்ள ஏழை மக்களுக்காக நாம் கேள்வி எழுப்புகிறோம். உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்காக நாம் குரல் எழுப்புகிறோம். நமது குரல் - சமநிலை சகிப்புத்தன்மை இரக்கம் சத்தியம் அஹிம்சைக்கானது என்பதை எடுத்துக் காட்டி வருகிறோம்.

இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்றும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் நமது கொள்கையின் நேர்மையை எடுத்துக் காட்டிய ஓர் உடன்படிக்கையில் கடந்த மாதம் இலங்கையில் நாம் கையெழுத்திட்டோம். (Last month we signed an agreement that proved the righteousness of our policy, which demonstrated that the impact of our foreign policy is good and that India was moving on the right path.) கடந்த 40 ஆண்டுகளில் இது முக்கிய சாதனை. சமீபத்தில் நாம் எட்டிய கையெழுத்து இட்ட இந்த உடன்படிக்கை இலங்கையில் அமைதியை, ஒத்துழைப்பை கொண்டு வந்துள்ளது. மண்டலம் முழுதிலும் அமைதியை ஒத்துழைப்பை இது வலுப்படுத்தி இருக்கிறது. (This is an important achievement in these 40 years. The latest agreement that we reached and signed has brought peace and cooperation in Sri Lanka. This has strengthened the cause of peace and cooperation in the entire region.)

மண்டலம் முழுதிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சிலரின் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளோம்; இல்லையேல், இந்தியாவுக்கு அண்மையில் உள்ள இந்த மண்டலத்தில் வல்லரசுகளின் போட்டி வந்து சேர்ந்து இருக்கும். (We have stalled the activities of those people who were endangering the security of the entire region, otherwise the race of power blocks could have reached this region, the neighbourhood of India.) இது, அணிசேராமை (என்கிற) கருத்துருவை வலுப்படுத்தி இருக்கிறது. வல்லரசுகள் அல்லது மற்றவர்களை உள்ளே நுழைய விடாமல் தமக்குள்ளே பேசித் தீர்வு காண நாடுகளால் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. வெளிசக்திகள் உள்ளே நுழையும்போது பிரச்சினை இன்னும் தீவிரமாக இன்னமும் கடினமானதாக மாறுகிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நாற்பதாவது சுதந்திர நாள் தருணத்தில் நாம் மீண்டும் அணிசேராமைக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

நமது மிகப் பெரிய சாதனை - நமது முன்னோர்கள் நமக்கு தந்திருக்கிற அமைப்பு முறை. (Our greatest achievement is the system given to us by our forefathers) தொய்வின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பண்டைய மரபுகள், கலாச்சாரத்துக்கு ஒட்டியதாக நமது அமைப்பு முறை இருப்பதைக் காண்கிறோம். இந்த உணர்வை சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தினோம்; இதையே நமது புதிய இந்தியாவை கட்டமைப்பதிலும் பயன்படுத்த வேண்டும். இன்று நமது மிகப்பெரிய சாதனை - நமது ஜனநாயகம். இதை பாதுகாக்க வேண்டும்; உறுதியாய் ஒன்று சேர்க்க வேண்டும். எந்த பலவீனமும் உள்ளே நுழைந்து விட அனுமதிக்கக் கூடாது. இப்போதும் சில சக்திகள் இதனை பலவீனமாக்க அழிக்க முயற்சிப்பதைப் பார்க்கிறோம்.

கடந்த 40 ஆண்டுகளில் நமது அமைப்பு முறையின் கீழ் இந்தியா மேலும் வலிமை பெற்றுள்ளது, ஒன்றாக இருந்துள்ளது, வளர்ந்து உள்ளது, இந்த உலகை எதிர்கொள்ள திறன் பெற்றுள்ளது. (This system is on for the last 40 years. Under it India has become stronger, it has remained one, it has progressed and has been able to face the world) தம்முடைய சுயலாபம், சுயவளர்ச்சிக்காக சிலர் மக்களின் நம்பிக்கையை சிதைக்க ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்க முயற்சித்தால் அவர்களை நாம் எதிர்கொள்வோம். அவர்கள் மேலே வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நாட்டின் கவனத்தை திசை திருப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நமது நாட்டை பலவீனப்படுத்த முடியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நமது சமுதாயத்தில் நமது அமைப்பு முறையில் சில அம்சங்கள் சரியாக இல்லை என்பது உண்மை. தவறான செயல்கள் ஈடுபடுவோர் வேறு உறுதியான நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆனாலும் நமது கவனம் எல்லாம், வதந்திகளின் மீது அல்ல, நாட்டின் மறுகட்டமைப்பில் இருக்க வேண்டும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் மறுகட்டமைப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அமைப்பு முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். நமது சமுதாயத்தையும் அழிப்பு முறையும் வலுப்படுத்தும் கொள்கைகளை நியாயமாக செயல்படுத்த வேண்டும். ஊழலுக்கு பிரிவினைவாதத்துக்கு மெத்தனத்துக்கு எதிராக, எல்லா மக்களையும் குறிப்பாக இளைஞர்களைக் கொண்ட, தேசிய இயக்கம் (பிரசாரம்) தொடங்க வேண்டும்.

காந்திஜி நம் முன் வைத்த கோட்பாடுகளை நாம் மதித்து நடக்க வேண்டும். நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நமது சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும். சமூக, சமய ஒற்றுமையுடன் நமது சமுதாயத்தின் எல்லாப்பிரிவு மக்களும் ஏழைகளின் பலவீனமானவர்களின் நலனுக்காக உழைப்பதை உறுதி செய்ய வேண்டும். தலித்துகள் ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் எல்லா அம்சங்களிலும் வளர்ச்சி பெறுவதை, வலுப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். காந்திஜியின் வாய்மை அஹிம்சை மற்றும் மனித ஒற்றுமைக் கோட்பாடுகளால் நாம் வழிநடத்தப் பட வேண்டும்.

நாம் சுயசார்புடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சரியான பாதையே நம்மை சரியான இலக்கு நோக்கி இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காந்திஜி விடுத்த செய்தி அந்த தலைமுறைக்கு மட்டுமே அல்ல. அது எதிர்காலத் தலைமுறைக்கும் ஆனது. நமது விடுதலைக்கு அது எத்தனை முக்கியமானதாக இருந்ததோ அதே அளவு நமது நாட்டின் ஒருங்கிணைப்பு, மறு கட்டமைப்புக்கும் அது முக்கியமானது. இந்த உலகை மேலும் வலுவாக்கவும் அது முக்கியமானது.

இந்த அமைதியான தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 78 கோடி சகோதர சகோதரிகளையும் பாராட்டுகிறேன். இது - நம் இந்தியா. ஏழைகள் முதியவர்கள் இளைஞர்கள்... எல்லா சமூகத்து, எல்லா சமயத்து, எல்லா மொழி, எல்லா கலாச்சார மக்களுக்கும் - நம் இந்தியா. நமது ஒற்றுமை வலுவானது. நமது ஒருமைப்பாடு என்றைக்கும் நிலைத்து நிற்பது. நமது கடந்த காலம் நமக்கு உத்வேகம் தருகிறது. எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேற உதவுகிறது. நமது விடுதலையை ஜனநாயகத்தை மதசார்பின்மையை அணிசேராக் கொள்கையை ப் பாதுகாக்க, உண்மையில் மகத்தான நாடாக இந்தியாவை உருவாக்க, நாம் அனைவரும் ஒற்றுமையாய் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதி பூணுவோம். நன்றி. ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 40 - ‘அணிசேராமை தந்த துணிச்சல்’ | 1986

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்