இந்தியாவின் இளம் பிரதமர் ராஜீவ் காந்தி இரண்டாவது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரம் குறித்த தனது பார்வை, வன்முறைக்கு எதிரான வலுவான வாதம், அயலுறவுக் கொள்கையில் இந்தியாவின் தீர்மானமான முடிவு... ஏறத்தாழ ஒரு முழுமையான உரை என்று சொல்லலாம்.
கடந்த 1986 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ: “இன்று நாம் செங்கோட்டையில் 40-வது முறை கூடி இருக்கிறோம். இந்த செங்கோட்டை இந்தியாவின் பெருமையின் அடையாளம்; இந்தியாவின் வலிமையின் அடையாளம். இங்கிருந்து தான் 1857 இல் சுதந்திரத்துக்கான முதல் அறைகூவல் விடுக்கப்பட்டது. இங்கேதான் சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்கள் ஷாநவாஸ், தில்லான், சாகல் மூவரும் (தமக்கு எதிரான) வழக்கை எதிர்கொண்டனர். தேசத்துக்காக இவர்கள் செய்ததை விடவும் மகத்தான தியாகம் இருக்க முடியாது. இங்கேதான் ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு முதன்முறையாக நமது தேசியக்கொடி பண்டிட்ஜியால் ஏற்றி வைக்கப்பட்டது. நமது இதயங்களுக்கு நெருக்கமான இந்தக் கொடி, ஆழமான மரியாதைக்கு உரியது. இந்தக் கொடியின் கீழ் நாம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகப் போராடுகிறோம். நாம் அனைவரும் இந்தியத் தாயின் குழந்தைகள். நாம் இந்தியாவை அமைதியான வளமான நாடாக உருவாக்குவோம்.
நாம் சுதந்திர நாளைக் கொண்டாடுகிறோம். 'சுதந்திரம்' என்றால் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? இந்த நாளில் நாம் பெற்ற சுதந்திரத்துக்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? சுதந்திரம் என்பது மனிதர்களுக்கான விடுதலையா? அல்லது, நமது நிலம், காடுகள், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஆனது என்று கருதுகிறோமா? நமது நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி குறித்தும் எண்ணுகிறோமா? ஆமாம் இவையெல்லாம் சேர்ந்ததுதான் விடுதலை. விடுதலை என்பது இன்னமும் ஆழமான இன்னமும் அடிப்படையான அர்த்தம் கொண்டது. நமது பண்டைய கலாசாரம், விழுமியங்களைநாம் மறந்து விட முடியாது. நம்முடைய (அடிப்படை) கோட்பாடுகளில் இருந்து விலகி விடக் கூடாது. நமது மரபுகளைப் பின்பற்றுகிறோம், நமது பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறோம் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
என்ன இந்த விழுமியங்கள்? முதன்மையானது - தேசியம். தேசம் என்கிற கருத்துரு இந்தியாவுக்குப் புதிது அல்ல. மிகத் தொன்மையான காலத்தில் இருந்தே அது இருந்து வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் இதயத்திலும் சிந்தனையிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. யாராலும் இதனை அப்புறப்படுத்த முடியவில்லை. நம்முடைய அரசியல் ஒற்றுமை இருந்ததா அல்லது நாம் அந்நிய ஆட்சியில் இருந்தோமா... (எதுவாக இருந்தாலும்) நமது இதயங்களில் ஆழமாய் இருந்த இந்தியத் தன்மையை யாராலும் அழிக்க முடியவில்லை. ஒற்றுமை ஒருமைப்பாட்டைக் கொண்ட மகத்தான சுயசார்பு நாடாக உள்ள இன்றைய இந்தியா - இந்த தேசிய உணர்வின் வெளிப்பாடுதான்.
» செங்கோட்டை முழக்கங்கள் 39 - ‘ஏழைகளுக்கு பயன்கள் முழுமையாக கிடைக்கட்டும்’ | 1985
» செங்கோட்டை முழக்கங்கள் 38 - ‘ஏழைகளின் வளமை - தேசத்தின் வலிமை!’ | 1984
இந்தியா வலிமையாக இருந்தால் ஒவ்வொரு இந்தியரும் வலிமை பொருந்தியவர் ஆவார்; இந்தியா பலவீனமாக இருந்தால் ஒவ்வோர் இந்தியரும் பலவீனமாக இருப்பார். இந்திய மக்களை வலிமை கொண்டவர்களாக, நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பானதாகச் செய்வதே நமது நோக்கம். நமது வலிமையில் இருக்கிறது - நமது பெருமை நமது வளர்ச்சி. இந்தியர் என்றால் இந்த நாட்டில் வசிப்பவர் என்று மட்டும் பொருள் அல்ல. 5,000 ஆண்டுகளுக்கும் மேலான மகத்தான நாகரிகத்தின் வழித்தோன்றல் நாம் என்று பொருள். நாம் பல்வகைக் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளோம். இந்து, முஸ்லிம், சீக்கியம், கிறித்துவர், ஜெயின், பார்சி... என்று பல மதங்களைச் சேர்ந்தவர்கள் நாம். நம் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். நம்முடைய சகிப்புத்தன்மை இவை எல்லாம் ஒன்றாய் வளர்வதற்கு உதவுகின்றது. எல்லா மதங்களையும் எல்லா நம்பிக்கைகளையும் சமமாக மதிப்பவர்கள். இந்த உண்மையில் இருந்து தான் நமது ஒற்றுமையும் வலிமையும் தோன்றுகிறது. இது ஒன்றுதான் நாம் பின்பற்ற வேண்டிய பாதை. பன்முகத் தன்மையில் தான் நமது வலிமை அடங்கி இருக்கிறது.
சுதந்திரம் என்பது நமது விருப்பப்படி நாட்டை நிர்வகிக்க ஒரு வாய்ப்பு என்று பொருள்படும். நம்மைப் போன்றே பல நாடுகளும் விடுதலை பெற்றன. ஆனால் வெகு சில நாடுகளில் மட்டுமே இந்தியாவைப் போன்று பொதுமக்கள் உண்மையான எஜமானர்களாக உள்ளனர். இந்தியாவில் குடிமக்களுக்கு அனைத்து மனித உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாம் இந்தியாவைப் பார்க்கும் போது பிற நாடுகளையும் (சேர்த்து) பார்க்க வேண்டும். இந்தியாவின் பாதையை எத்தனை நாடுகளால் பின்பற்ற முடிகிறது? நம்மைப் போன்று, ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கு விடுதலையும் உரிமைகளும் எத்தனை நாடுகளால் தர முடிந்தது? இந்தியாவில் அரசாங்கம் மக்களின் கைகளில் இருக்கிறது. தாம் விரும்பும்போது மக்களால் ஒரு அரசாங்கத்தை மாற்றி அமைக்க முடியும். அரசின் தலைவிதியை அவர்கள் (மக்கள்) நிர்ணயிக்கிறார்கள்.
ஜனநாயக அமைப்பு முறையில் இந்தியா சுதந்திரமான தேர்தல் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது. எல்லா குடிமக்களையும் சமமாக பாவிக்கிற சட்டங்கள் இருக்கின்றன. நாம் ஜனநாயக வளர்ச்சி கண்டிருக்கிறோம். சுயசார்பு நமது இலக்கு. அயலுறவில் நாம் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். இவை அனைத்தையும் உள்ளடக்கியது நமது பாதை.
இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை உணர்ந்து கொள்ள நாம், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இருந்த நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின் போது பசி பஞ்சத்தால் இறந்து போவது சாதாரணமாக இருந்தது. சுதந்திரத்துக்கு சற்று முன்னர் வங்காள பஞ்சத்தில் 30 லட்சம் பேர் மடிந்து போயினர். 1900 முதல் 1950 வரை நமது வேளாண் உற்பத்தி தேக்கத்தில் இருந்தது. ஆனால் 1950 முதல் 1985 வரையான காலத்தில் நமது வேளாண் உற்பத்தி மூன்று மடங்கு உயர்ந்தது. கோதுமை உற்பத்தி ஏழு மடங்கு, நெல் உற்பத்தி ஐந்து மடங்கு உயர்ந்தது. இந்தத் தருணத்தில் இந்திய விவசாயிகளுக்கு எனது பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் கடின உழைப்பால் இன்று நாம் சுதந்திரமாய் (சுயசார்பு உடையவர்களாய்) திகழ்கிறோம்.
பொது சுகாதாரத்தில், சுதந்திரத்துக்கு முன்பு குழந்தை இறப்பு விகிதம் வெகு அதிகமாக இருந்தது. உத்வேகமான சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன் கீழ், ஆயிரக்கணக்கில் ஆரம்ப சுகாதார மையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பெரியம்மை ஒழிக்கப்பட்டது; மலேரியா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நமது மக்களின் ஆயுட்காலம் இரட்டிப்பாகியது. இன்று அது 56 வயக்கு மேல்! இதை சாத்தியம் ஆக்கிய மருத்துவர், செவிலியரைப் பாராட்டுகிறேன்.
இதேபோன்று கல்வித்துறையில் இன்று அநேகமாக ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடம் இருக்கிறது. நமக்கு மனநிறைவு தராத காலத்தால் பழையதான கல்விக் கொள்கை மாற்றப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளோம். இது இந்தியாவுக்கு, வலிமை ஒற்றுமை சுயசார்புக்கான புதிய பாதை நல்கும்.
மிகப் பெரிய கட்டுமானப் பணியாக, கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புற, பழங்குடிப் பகுதிகளில் இப்போது குடிநீர் கிடைக்கிறது. ஏழாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் நாட்டில் குடிநீர் வசதி இல்லாத கிராமமே இல்லை என்பதை உறுதி செய்வதே நமது லட்சியம். தொழில்மயமாக்கம் பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறது. பின் தங்கிய நிலையில் இருந்து வெளியே வந்து ஆக்கபூர்வமான வளர்ச்சி நோக்கிய நாடாக உருவாவதை நம்மால் உறுதி செய்ய முடியும். தொழில் உற்பத்தி பெரிய அளவில் வளர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறது; நாட்டை வளர்ச்சி மற்றும் வளமைக்கான பாதையில் செலுத்தி இருக்கிறது.
நமது விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பல்வேறு துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவைக் கொண்டு வந்துள்ளனர். பெயரளவுக்கு அல்ல, ஏழைகளை சாமானியரை பின்தங்கியோருக்காக அறிவியல் தொழில்நுட்பத்தை நாடுகிறோம். கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்வதே நமது குறிக்கோள். எதிர்காலத்தை 21-ம் நூற்றாண்டு இந்தியாவை நாம் முன்னோக்கிப் பார்க்கிற போது, ஒரு வலுவான, சுயசார்பு கொண்ட, தன்னம்பிக்கை மிக்க, சிறந்த பொருளாதார நாடாக நம்முன் தெரிகிறது. இதை நாம் சாதிப்போம் - சுயசார்பை வலியுறுத்துவதன் மூலம், நமது கண்ணியம் பெருமையைப் பாதுகாப்பதன் மூலம், நமது கொடியை உயர பறக்க செய்வதன் மூலம்.. உலகில் நாம் தலைநிமிர்ந்து நடப்போம்.
கடந்த காலத்தில் இந்த பாதையில் தான் பயணித்தோம். எதிர்காலத்திலும் இதே பாதையில் தொடர்வோம். கடன் என்கிற பொறியில் இந்தியா சிக்கி விடாமல் கவனமாக உள்ளோம். வளர்ச்சிக்கான தேடுதலில் பிற நாடுகள் கடுமையான கடன் சுமையால் அமிழ்ந்து போய் உள்ளன. பன்னாட்டு அழுத்தத்துக்கு இந்தியா பணிந்து போகாது என்பதை உறுதி செய்துள்ளோம். இது ஒன்றுதான் வளர்ச்சிக்கான வலிமைக்கான பாதை. இந்த வளர்ச்சிப் பாதையில் இருந்து நாம் விலகிச் செல்ல மாட்டோம்.
ஏழைகளின் மறுக்கப்பட்டவர்களின் பின்தங்கியவர்களின் நலனே மிகுந்த முக்கியத்துவம் உடையது. நம்முடன் உள்ள எல்லா வலிமையும் பயன்படுத்தி இவருடைய வாழ்க்கை உயர்த்த முயற்சிக்கிறோம். வறுமை ஒழிப்பு திட்டம், 20 அம்சத் திட்டம், விவசாய மேம்பாட்டு திட்டம் மூலம் வறுமையை முற்றிலுமாய் ஒழிக்க முயற்சிக்கிறோம். நமது பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வேளாண் வளர்ச்சியின் மூலம் வறுமை ஒழிப்புக்கு முயற்சிக்கிறோம். இதுபோன்ற திட்டங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளோம். ஏழாவது ஐந்தாண்டு திட்ட நிறைவில் நாட்டின் இரண்டில் மூன்று பங்கு மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தி விட முடியும் என்று நம்புகிறோம். நாட்டிலிருந்து வறுமையை முற்றிலுமாக அகற்றவே பாடுபடுகிறோம்.
திருத்தப்பட்ட 20 அம்ச திட்டத்தை விரைவில் நாட்டு மக்கள் முன் சமர்ப்பிக்க இருக்கிறேன். தற்போதுள்ள 20 அம்ச திட்டத்தை திருத்தியுள்ளோம்; மேம்படுத்தி உள்ளோம். முழுதாக இலக்கை எட்டிவிட்ட திட்டங்களைத் துறந்து விட்டு புதிய திட்டங்களை அறிமுகப் படுத்துகிறோம். திருத்தப்பட்ட 20 அம்ச திட்டத்தின் கீழ் மேலும் சிறப்பான வேலை வாய்ப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வோம்.
கடந்த ஓர் ஆண்டில் நாட்டில் விரிவாக சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள, வறுமை பரவி இருக்கிற, பழங்குடி பகுதிகள் உட்படப் பல பகுதிகளைப் பார்வையிடுவதை முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளேன். கிராமங்களில் தமது குடிசைகளில் தமது வயல்களில்.. சென்று வருவதை முக்கியமாகக் கொண்டுள்ளேன். ஏழையிலும் ஏழையாக இருப்பவர்களை சந்தித்துள்ளேன். கிராமவாசிகள் விவசாயிகள் ஆகியோரிடம் அவர்களின் குடிசைகள் அவர்களின் நிலங்கள் பற்றிப் பேசி இருக்கிறேன். நிவாரணப் பணிகள் நடைபெறும் இடங்களில் இவர்களை சந்தித்துள்ளேன்.
அவர்களின் இன்னல்களை துன்பங்களைப் பகிர்ந்து உள்ளேன். அதே சமயம் அவர்களின் வெற்றியை அவர்களின் நம்பிக்கையை அவர்களின் சகிப்புத்தன்மையை அவர்களின் உள்ளார்ந்த வலிமையை அவர்களின் விடாமுயற்சியை அவர்களின் கடின உழைப்பை அவர்கள் படும்பாட்டை பார்த்திருக்கிறேன். அவர்கள் எந்த அளவுக்கு துணிச்சலுடன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்; சுயநல சக்திகளை நிலச்சுவான்தார்களை ஜமீன்தாரர்களை அரசு நிர்வாகத்தை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். நாட்டின் ஏழைகள் ஒடுக்கப்பட்டோர் சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோரோடு நான் உள்ளேன். இவர்களின் மேம்பாட்டுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தலித்துகள் ஆதிவாசிகள் பெரும் எண்ணிக்கையில் பெண்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஒழிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தலித்துகள், ஆதிவாசிகள், பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்; நமது திட்டங்களை சீர்திருத்த வேண்டும்; சட்டங்களை வலிமையாக்க வேண்டும். நமது பெண்கள் இன்னும் அதிக மதிப்பு, சம அளவில் உரிமைகள் மற்றும் பொருளாதார சுதந்திரம் பெறுவதை உறுதி செய்வதே நமது லட்சியமாய் இருக்கும்.
நமது பண்டைய தத்துவ பாரம்பரியத்தை மறந்துவிட முடியாது; சொத்துகளை குறைப்பதால் மட்டுமே வளர்ச்சி வந்து விடாது என்று அது நமக்கு போதிக்கிறது. சொத்துக் குவிப்பு, தன்னலத்தை, பொறாமையை உண்டாக்குகிறது; மென்மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி துன்பத்துக்கு வழி கோலுகிறது. ஆகையால் வளர்ச்சியை நாடுகிற அதே வேளையில் அறநெறிகளுக்கு விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். நமது கலாச்சார பாரம்பரியம், பல்லாண்டுகளாக நம்மை ஒற்றுமைப்படுத்தி வைத்திருந்த தொன்மையான விழுமியங்கள் காப்பாற்றப் படுவதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரத்தில் இருந்து நாம் அபார வளர்ச்சி கண்டிருக்கிறோம். எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியின் அடையாளம் தெரிகிறது. நாம் எதிர்காலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது இவை இன்னும் பிரகாசிக்க வேண்டும்.
வகுப்புவாதத்தை விட பெரிய அபாயம் ஏதுமில்லை. இது நமக்கு இகழ்ச்சி; மக்கள் கொல்லப்படுவதும் வீடுகள் எரிக்கப்படுவதும் கடைகள் சூறையாடப்படுவதும் நாட்டுக்குச் செய்யும் துரோகம். இது நிகழ நாம் அனுமதிக்கக் கூடாது. இது நடக்க விடமாட்டோம். வறுமை எந்த வடிவில் இருந்தாலும் தவறுதான். அதிலும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை மிக மோசமானது. உண்மையில் மதத்தின் மீதான மோசடி. மதம் என்பது உண்மையில் அன்பு சகிப்புத்தன்மை சக மனிதருக்கு அன்பு காட்டுதல் எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் மதித்து நடத்தல். வெவ்வேறு மதங்களும் ஒரே இடத்துக்குச் செல்லும் வெவ்வேறு பாதைகள். வெவ்வேறு பாதைகள் மூலம் கடவுளை அடைய முடியும்.
நமது நாட்டில் அடிப்படை வாதம் என்கிற அழுக்குப் பாம்பு தலை தூக்குவதைப் பார்க்கிறோம். அடிப்படை வாதம் - வெறுப்புக்கும் வன்முறைக்கும் இட்டுச் செல்கிறது. இதை அகற்றுவதற்கு அரசு முயற்சி எடுக்கும். கடுமையான திணிப்பின் மூலம் தான் இதனை அகற்ற முடியும் என்றால் அதற்கும் தயங்க மாட்டோம். மதவாதமும் வன்முறையும் பரவுவதற்கு அனுமதிக்க மாட்டோம். நமது சமுதாயத்தில் இருந்து இவற்றை அடியோடு நீக்குவோம்.
கடந்த ஆண்டு நான் இங்கிருந்து பேசியபோது, பஞ்சாப் உடன்படிக்கையில் கையெழுத்து இட்டிருந்தோம். பிறகு பேச்சுவார்த்தை தொடர்ந்தது. நல்ல முன்னேற்றம் கண்டோம். பஞ்சாபில் தேர்தல் நடந்தது. மீண்டும் மக்களின் அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. ஜனநாயகம் திரும்பியது. உடன்படிக்கையின் காரணமாக பஞ்சாபில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்க்க முடிந்தது. கூடவே, காவல்துறை பயிற்சியை மேம்படுத்தினோம்; அவர்களுக்கு வேண்டிய அடிப்படைக் கருவிகள் கிடைப்பதை உறுதி செய்தோம். இது விஷயத்தில் குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்தோம். இன்றைய நிலையில், தீவிரவாதிகள் ஓடுகிறார்கள்; பெரும் எண்ணிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்; அல்லது கொல்லப் பட்டனர். கடந்த சில வாரங்களில் ஏராளமான தீவிரவாதிகள் பிடிக்கப் பட்டனர். இந்தக் குறிக்கோள் மேலும் தீவிரமாக செயல் படுத்தப் படும். அடுத்த சில மாதங்களில் பயங்கரவாதத்தை முறியடிப்போம், பயங்கரவாதிகள் முழுவதுமாக அழிக்கப் படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இது மிக விரைவில் நிகழ்ந்தாக வேண்டும். இது இன்னும் நீண்ட நாட்கள் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. இப்போது என்ன நடைபெறுகிறது என்றால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் நாம் சிறிது வெற்றி கண்டாலும் அவர்கள் விரக்தி அடைகிறார்கள்; தீவிரமாக ஏதேனும் செய்து தமது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
உதாரணத்துக்கு கடந்த ஆண்டு, சந்த் லோங்கோவால் கொலை செய்யப் பட்டார். இந்த ஆண்டு ஜெனரல் வைத்யாவைக் கொன்றுள்ளனர். தாம் கைது செய்யப்படுகிறோம், வேரறுக்கப்படுகிறோம், அடியோடு ஒழிக்கப்படுகிறோம்; பொதுமக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள் என்பதை உணரும் போதெல்லாம் பயங்கரவாதிகள் இவ்வாறு கொலைகளில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு எதிரான அழுத்தம் அதிகரிப்பதால், பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும் அவர்களை எதிர்வினை ஆற்றத்தூண்டவும், மேலும் பல கொலைகளில் தீவிரவாதிகள் ஈடுபடலாம். ஆனால் இத்தகைய தூண்டுதல்களில் அமைதியாக இருப்போம். எந்த ஒரு அப்பாவியும் துன்பத்துக்கு ஆளாக மாட்டார் என்பதை உறுதி செய்வோம். தீவிரவாதிகளின் வலையில் நாம் சிக்க மாட்டோம். பயங்கரவாதிகளின் சதி வலையில் சிக்க மாட்டோம் என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; தீர்மானிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நாம் செயல்திட்டம் வைத்திருக்கிறோம்; தீவிரவாதிகளை முடித்துக் கட்டுவோம். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். படைகளை, காவல்துறையைப் பயன்படுத்துவதில்.. அரசியல் உறுதியில்.. அர்ப்பணிப்பில்.. குறை காண முடியாது. இதற்கு மிகுந்த அளவில் அறத்துணிச்சல் வேண்டும்; தவறான புரிதல்களைக் களைய வேண்டும். மதத்தின் பெயரால் வன்முறை கலவரம் நிகழ்வது ஒரு விந்தை. சாதுக்களின், குருமார்களின் பெயரால் வன்முறை, தீவிரவாதம் நிகழ்வதும் விந்தை. தீவிரவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம் தனது முழு வலிமையை பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், மக்களும் இந்தத் தீமைக்கு எதிராக வலுவான நிலைப்பாடு எடுத்து அரசுக்கு தெளிவான ஆதரவு தருவதும் அவசியம். 75 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நின்றால் நம்மால் தீவிரவாதத்தை எதிர்க்க முடியும். அகிம்சை வழிமுறைகளில் நாம் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.
காந்திஜி சொன்னார் - அகிம்சை என்பது சாதுக்களுக்கும் ரிஷிகளுக்கும் மட்டுமானது அல்ல; அது, சாமான்யன் பின்பற்ற வேண்டிய நம்பிக்கையும் கூட. அஹிம்சை - மக்களுக்கு வலிமை சேர்க்கிறது. வன்முறையும் சகிப்புத்தன்மை இன்மையும் நமது பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று மகாத்மா காந்தி போதித்தார். வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமையை அதேபோன்று வெறுப்பு சகிப்புத்தன்மையின் வழியில் எதிர்கொள்ளக் கூடாது என்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவர் நமக்கு அமைதி மற்றும் அகிம்சைப் பாதையைக் காட்டினார். அமைதி மற்றும் அகிம்சை மூலமே தீவிரவாதத்தை எதிர்க்க முடியும். சகிப்புத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கம் என்கிற பாதை வழியே பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் வெற்றி காண்போம். சுதந்திரப் போராட்டத்தைப் போலவே (இப்போதும்) சாதி மதம் மொழி ஆகியவற்றுக்கு அப்பால் மக்கள் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து போராடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமெனில், நாட்டுக்கு உள்ளே மட்டுமல்ல; வெளியே எல்லைகளுக்கு அப்பால் வெளி உலகையும் பார்க்க வேண்டும். இன்று உலகம் மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது - (பூமி) கிரகத்தையே அழிக்க அச்சுறுத்துகிற அபாயம்; இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை போடுகிற அபாயம். இந்தியா வலுப்பெறுவது எனில், உலகின் இந்தப் பகுதியில் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வது எனில், ஒரே ஒரு வழியில் தான் இதனை நிறைவேற்ற முடியும். இன்று, போர்களுக்கு எல்லைக்கோடுகள் இல்லை; போரிடும் நாடுகளின் எல்லைகளுக்குள் அவை நின்று விடுவதில்லை. போர்- மொத்த உலகையும் அழித்து விடக் கூடியது; மொத்த மனித இனத்தையும் ஒழித்து விடக் கூடியது. இத்தகைய போர் நிகழக் கூடாது என்பதே நமது லட்சியம். அணு ஆயுதத்துக்கான வெறித்தனமான போட்டி நிறுத்தப்பட வேண்டும் என்று முயற்சிக்கிறோம். ஆயுதக் குறைப்பு (disarmament) மட்டுமே இதற்கான ஒரே வழி. அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கும் இந்திய மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ஆயுத குறைப்பு மீதான நமது நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையாக சொல்லப்பட்டது. ஆயுதக் குறைப்பு - அமைதிக்கானது; உலகத்தின் எதிர்காலத்துக்கானது; மனித குலத்தின் எதிர்காலத்துக்கானது.
நமது வெளியுறவுக் கொள்கை நமக்கு வலிமை சேர்க்கிறது. நாம் சுதந்திரமாக இருக்கிறோம்; உலக அமைதிக்குப் பங்களிக்கிறோம். வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் எனில் உலக அமைதி மிகவும் அவசியம். சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் குரல் தெளிவாக ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவின் குரல் - அதன் 75 கோடி மக்களின் குரல். இதில் உள்ளது நமது வலிமை.
உலக நாடுகள் மத்தியில் இன்று நமக்கு மரியாதை இருக்கிறது. ஏனென்றால் நாம் அணி சேரா, சுயசார்புப் பாதையைப் பின்பற்றுகிறோம். துணிச்சலுடன் மன உறுதியுடன் தன்னம்பிக்கையுடன் பேசுகிறோம். ஒரு விதத்தில், அணி சேராமை என்பது - சர்வதேச ஜனநாயகம். அதனால் சுதந்திரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அணிசேராமை என்கிற கருத்துரு உலகத்துக்கு பண்டிதர் நேருவால் வழங்கப்பட்டது. இந்திரா காந்தி இந்த ஒளிப்பந்தத்தை, முன் கொண்டு சென்றார். மிகச்சிறிய அளவில் தொடங்கிய அணிசேரா இயக்கம் இன்று 101 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது. இன்று உலகில் மூன்று இரண்டு நாடுகள் அணிசேராக் குரலைப் பேசுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அணிசேரா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருந்தது. நாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டோம் - கிரனேடா (Greneda), லிபியா, நிறவெறி, சர்வதேச விதிகளை உதாசீனப்படுத்தும் பெரிய நாடுகள்... உலகம், இன்னல் மிகுந்த காலத்தில் இருந்தது. ஆனால் இந்தியாவின் தலைமையின் கீழ் அணிசேரா இயக்கம் வலிமை பெற்றது; உலக அமைதிக்குப் பங்காற்றியது.
இன்று சுதந்திர தின தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நமது படை வீரர்கள், குறிப்பாக பாலைவனங்களில் உயர்ந்த மலை முடிச்சுகளில் அடர்ந்த காடுகளில் நம்மைப் பாதுகாத்து வரும் வீரர்களின் தியாகத்தால் பலமுறை இந்தியா தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க முடிந்திருக்கிறது. இந்த வீரர்களுக்கு எனது சிறப்பு நல்வாழ்த்துகள்.
என் முன்னால் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்களைப் பார்க்கிறேன். இதுதான் இந்தியாவின் உண்மையான சொத்து. இதில்தான் நமது உண்மையான வலிமை அடங்கி இருக்கிறது. காந்திஜி, நேருஜியிடம் எனது நினைவு செல்கிறது. மவுலானா ஆசாத், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், சாஸ்திரி ஜி, இந்திராஜி ஆகியோரையும் நினைத்துப் பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையில் இதே இடத்தில் இந்திராகாந்தி நின்று கொண்டிருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுதும் இந்தியாவின் ஏழைகளுக்காக பிற்படுத்தப் பட்டோருக்காகப் போராடினார். இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒருமைப் பாட்டுக்காகப் போராடினார், அதற்காக உயிர் நீத்தார். அவரது பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு இன்று நம் தோள் மீது இருக்கிறது. எல்லா வழிகளிலும் அவரது கனவுகளை நிறைவேற்றுவோம். நமது சுதந்திரத்தை ஜனநாயகத்தை மதசார்பின்மையை சோசலிசத்தை நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாக்க நம்மை நாம் அர்ப்பணிப்போம். தயவு செய்து என்னுடன் இணைந்து மூன்று முறை முழக்கம் இடுங்கள்: ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!”
(தொடர்வோம்)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago