கடந்த வார இறுதியில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதை தொடர்ந்து பிக்பாஸ் வீடு இரண்டு பிரிவுகளாக பிரிந்து அல்லோல கல்லோலப்படுகிறது. ஒரு பக்கம் இந்த வார கேப்டன் மாயா தலைமையிலான குரூப்பும், இன்னொரு பக்கம் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா, விசித்ரா ஆகியோருக்கும் இடையே சதா சண்டையும் சச்சரவும் அரங்கேறி வருகின்றன.
இந்த வார நாமினேஷனின் போது பிரதீப் வெளியேற்றப்பட்டது நியாயமான காரணம் அல்ல என கூறி தனது நாமினேஷன் காரணத்தை விசித்ரா முன்வைத்தது பிக்பாஸ் வீட்டில் பெரும் சலசலப்பை உண்டாக்கிவிட்டது. பிரதீப் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிர்வாகத்துக்கு அல்வா கிடைத்தது போல, டாஸ்க் எதுவும் வைக்காமலே இரண்டு வீட்டாரும் நான்கு ப்ரோமோக்கள் போடும் அளவுக்கான கன்டென்ட்டுகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
சும்மாவே சலங்கை கட்டிவிட்டது போல ஆடுவார் மாயா. இப்போது கேப்டன் பதவி என்றால் கேட்கவா வேண்டும். முதல்நாளிலேயே இதுதான் சாக்கு என்று தனக்கு யாரெல்லாம் ஒத்துவரமாட்டார்களோ அவர்கள் அனைவரையும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பினார். இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான கேப்டனாக, மிக வெளிப்படையாகவே ஒருதரப்புக்கு சாதகமாக நடந்து கொண்டார். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் என்ற கூற்றுக்கு ஏற்ப வாரம் முழுக்க அழுகாச்சியாக திரிந்து கொண்டிருந்த அர்ச்சனா மாயா குரூப் அனைவரையும் ஒற்றை ஆளாக எகிறி அடிக்கத் தொடங்கியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
37ஆம் நாள் விஷ்ணு - பூர்ணிமா சண்டையுடன் தொடங்கியது. அத்தனை வாரங்கள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த இருவரும் திடீரென எலியும் புலியுமாக மாறி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். வார இறுதியில் கமல் முன்பு விஷ்ணுவுக்கு அர்ச்சனா லட்டு கொடுத்து பாராட்டியதை பொறுக்கமுடியாமல் மாயாவும் பூர்ணிமாவும் பொரிந்து தள்ளியதை விஷ்ணு ரசிக்கவில்லை போலும். அதிலிருந்து இருவரிடமுமே அவர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருவது தெளிவாக தெரிகிறது.
வீட்டில் டிஜே ப்ராவோ, அக்ஷயா, கானா பாலா போன்ற ஓரிரு வாயில்லா பூச்சிகளைத் தவிர்த்து, சண்டையில் ஈடுபடாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு நேற்று அனைவருமே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட இரவு முழுவதும் அர்ச்சனா vs மாயா, அர்ச்சனா vs பூர்ணிமா, அர்ச்சனா vs ஜோவிகா, அர்ச்சனா vs ஐஷு என்று நீண்டுகொண்டே சென்றது சண்டை. இதில் அர்ச்சனா பக்கம் நின்று அவருக்காக தொடர்ந்து வாய்ஸ் கொடுத்தவர் விசித்ரா மட்டுமே. ஏற்கெனவே தன்னை தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் போடுகிறார்களே என்று உளைச்சலில் இருந்த அர்ச்சனாவுக்கு, இந்த வாரம் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக வம்பிழுத்து குடைச்சல் கொடுப்பது கடும் மன அழுத்தத்தை தருவதை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அனைவரையும் சமாளித்து தன் பக்க நியாயத்தை யாரையும் தரக்குறைவாக பேசாமல் அவர் எடுத்து வைக்கும் விதம் பாராட்டுக்குரியது.
ஐஷுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த கடுமையான வாக்குவாதத்தில் மாயா நடந்து கொண்டது முறையற்ற செயல். ஒரு கேப்டனாக இருவருக்கும் பொதுவானவராக நடந்திருக்க வேண்டிய அவர், அர்ச்சனாவை பேசவிடாமல் செய்து, ஐஷுவை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தது நியாயமற்றது. எப்போது யார் சமாதானம் பேச முயற்சி செய்தாலும், அங்கு மாயா இருந்தால் அது வீணாகி விடுகிறது.
இந்த சச்சரவின்போது போது அர்ச்சனா, விசித்ரா இருவரும் ஒரு தவறான வாதத்தை எடுத்து வைத்தனர். அதாவது, ஐஷு ஸ்பேஸ் கொடுத்ததால்தான், பிரதீப் அவரிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்பதாக அவர்கள் இருவரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தனர். அதே போல, தான் 30 நாட்கள் வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்ததில், பிரதீப் தவறாக எதுவும் நடந்து கொண்டதாக தனக்கு தெரியவில்லை என்று அர்ச்சனா கூறுகிறார். இது எத்தனை அபத்தமான வாதம்? வெளியில் உட்கார்ந்து கொண்டு டிவியில் பார்ப்பதும், உள்ளே இருந்து பிரச்சினையை எதிர்கொள்வதும் ஒன்றா? அதே போல விசித்ரா, பிரதீப் அப்படி நடந்துகொண்டதை தன்னிடம் ஏன் டிஸ்கஸ் செய்யவில்லை என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இவரிடம் டிஸ்கஸ் செய்துவிட்டு அவரை பற்றி புகார் கூறியிருந்தால், அப்போது பிரதீப்புக்கு ஆதரவான தனது நிலையை மாற்றிக் கொண்டிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. அப்போதே சொல்லாமல் இப்போது வந்து ஏன் சொல்கிறீர்கள் என்று மிகவும் நாகரீகமற்ற கேள்வியையும் முன்வைத்தார்.
மறுநாள் காலையில், மாயா திரும்பவும் தனது சித்து விளையாட்டை தொடங்கியிருந்தார். ஸ்மால்ஹவுஸ் வீட்டார் எழுவதற்கு முன்பே அவர்களது டூத்பிரஷ்களை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். ஸ்மால்ஹவுஸ் வீட்டில் இருப்பவர்கள் பிரஷ் வேண்டும் என்று கேட்டதற்கு கையால் துலக்குங்கள் என்று கூறிச் சென்றார். தான் சொல்லியதை கேட்கவில்லை என்பதற்காக மாயா மேற்கொள்ளும் உத்திகள் அகங்காரத்தின் உச்சம். டீ போட்டால் பிரஷ்ஷை கொடுத்துவிடுகிறேன் என்று முதலில் சொன்னவர், பின்னர் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால்தான் தருவேன் என்று மாற்றிப் பேசினார். தான் சொல்வதற்கு ஜால்ரா தட்டினால் நன்றாக பேசும் மாயா, தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ‘உங்களிடம் பேசவே நான் விரும்பல, கிளம்புங்க” என்று ஆஃப் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த வாரம் ஒரு ரூல் பிரேக் செய்ததற்கே அதிகார துஷ்பிரயோகம் என்று ஆக்ரோஷம் காட்டிய கமல், இந்த கேப்டன்சி குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவல்.
பிரஷ்ஷுக்காக காத்திருந்து ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத அர்ச்சனாவும், விசித்ராவும் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரூல் பிரேக் செய்தனர். முன்தினம் நடந்ததை போல இன்று நடக்காது என்று மாயாவின் உத்தரவாதம் + மன்னிப்புக்கு பிறகே இருவரும் மீண்டும் உள்ளே வந்தனர். (இதுக்கு பேருதான் அவன் பொருளையே எடுத்து அவனையே போடுறதா?)
கேப்டனாக பொறுப்பேற்று இரண்டே நாளில் மாயாவின் பொறுப்பின்மை மற்றும் பிறரை மதிக்காத போக்கு காரணமாக இருவீட்டாரும் இருதுருவங்களாக பிரிந்து அடித்துக் கொண்டு வருகின்றனர். மாயா நினைத்திருந்தால் இந்த சண்டை வளராமல் முதல்நாளிலேயே கட்டுப்படுத்தி இருக்கமுடியும். ஒரு நல்ல கேப்டனாக அதைத்தான் அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் சின்னச் சின்ன சண்டைகளை தூபம் போட்டு வளர்த்து, சமாதானம் ஆக வருபவர்களையும் தடுத்து தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார் மாயா. தற்போது மாயா குரூப்பின் மெயின் டார்கெட் ஆக மாறி இருக்கும் அர்ச்சனாவும் சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். டாஸ்க்குகள் எதுவும் கொடுக்காமலேயே இந்த நிலை என்றால், வரும் நாட்களில் டாஸ்க்கின் எதிரொலியாக இன்னும் பல களேபரங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது.
முந்தைய அத்தியாயம்: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் - கமலின் நடவடிக்கை நியாயமானதுதானா?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago