செங்கோட்டை முழக்கங்கள் 38 - ‘ஏழைகளின் வளமை - தேசத்தின் வலிமை!’ | 1984 

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திரா காந்தி - உலகின் மிக வலிமையான பெண் தலைவர்களில் ஒருவர். இன்று வரை இவரே இந்தியாவின் ஒரே பெண் பிரதமர். 1984 ஆகஸ்ட் 15 அன்று அவர் ஆற்றிய உரைதான் அவரது இறுதி செங்கோட்டை முழக்கம். இதில் இருந்து 77வது நாள் வன்முறை அவரை பலி கொண்டது. இதை உணர்ந்தோ என்னவோ 1984-இல் இந்திரா காந்தி, மிக நீண்ட உரை நிகழ்த்துகிறார். முழு விவரம் இதோ:

“சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே, அன்பான குழந்தைகளே... ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று இங்கே கூடுகிறோம். இது வெறுமனே சடங்கு போன்ற நிகழ்ச்சி அல்ல. சுதந்திரத்துக்கான நீண்ட போராட்டத்தில் இன்னல்களை அனுபவித்த, தமது இன்னுயிரை ஈந்த துணிச்சல் மிக்க மாந்தர்களின் நினைவாக இங்கே கூடியிருக்கிறோம். இந்த இயக்கம் மிக நீண்ட வரலாறு கொண்டது. இதனை, வேண்டிய அளவுக்கு மக்கள் இன்று அறிந்து இருக்கவில்லை. இளைய தலைமுறைக்கு இது பற்றி மிகக் கொஞ்சமே தெரியும். நான் இங்கே விளக்கமாகக் கூற முடியாது. இருந்தாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு சில பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன் - திலகர், தாதாபாய் நௌரோஜி, டாக்டர் அன்சாரி, தயாப்ஜி சாகிப்.. இவர்கள் எல்லாம் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு... மகாத்மா காந்தி இந்தியாவுக்குத் திரும்பினார். விடுதலை இயக்கம் புதிய பாதைக்குத் திரும்பியது. முக்கியஸ்தர்கள், அறிவுஜீவிகள் மட்டுமல்ல விவசாயிகள் தொழிலாளர்கள் இளைஞர்கள் சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினர் பங்கு பெற்றனர்.

நாம் ஏன் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறோம்? இந்த இடம் சுதந்திரத்தின் அடையாளமாக இருந்தது இல்லை. உண்மையில் இது பண்டைய நாட்களின் அடையாளம். நாம் சுதந்திரம் பெற்றதும், செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரகடனம் செய்தார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 15 அன்று இங்கே தேசியக்கொடி ஏற்றினார். அப்போது இருந்து ஒவ்வொரு பிரதமரும் இந்தக் கடமையை செய்து வருகிறார்கள். அதற்கு முன்னதாக நமது நாட்டின் மூன்று துணிச்சல் மிக்க குடிமகன்கள் செங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நமது (காந்திய) பாதையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். அவர்களின் பாதை வேறாக இருந்தாலும், அவர்களும் தேசத்தின் மீது இருந்து பற்றால், தேசிய விடுதலைக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருந்தவர்கள். தில்லி மக்களுக்கு இவரைத் தெரியும் - ஷா நவாஸ் கான். இவர் ஒரு முஸ்லிம். இதே போன்று பிறர் - பிரேம் சேகல் மற்றும் தில்லான். இவர்களை நாம் தேர்வு செய்யவில்லை. அந்நிய ஆட்சியும் தேர்வு செய்யவில்லை. இருந்தாலும் தற்செயலாக இவர்கள் மூவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக அமைந்து போனார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் நாடு எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லா மதங்களின் எல்லா மண்டலங்களின் எல்லா சமூகங்களின் மக்களும் ஒன்றுபட்டு இருந்ததால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நம் முன்னே ஒரே ஒரு லட்சியம் தான் இருந்தது - நாட்டின் விடுதலை. சுதந்திரம் நமது பிறப்புரிமை. இன்றோ நம்முன் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த நாட்களில் நமக்கு ஒரே ஒரு லட்சியம் தான் இருந்தது. அதற்காகப் போராடினோம். இவ்வாறு நாம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இதற்கான நமது முயற்சிகள் அத்தனை எளிதானவை அல்ல. தடைகள், தடுப்புகள், அபாயங்கள், அச்சுறுத்தல்கள் அன்று நாம் சந்தித்த எல்லாமே இன்றும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கத்தான் செய்கின்றன. உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே நான் வெளிநாட்டு அபாயங்கள் பற்றிப் பேசுவதாகச் சிலர் குறை கூறுகின்றனர். இதைவிடப் பெரிய தவறான புரிதல் இருக்க முடியாது. ஏனென்றால், அனைத்து தரப்பு மக்களும் சந்திக்கும் இன்னல்கள், நமது நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து முழுதாய் அறியாமல் நாட்டின் ஒற்றுமையைப் பராமரிக்க முடியாது; பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

நம் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் நமது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி இருக்கவில்லை. நமக்குக் கவலைகளும் பதட்டங்களும் இருக்கின்றன. நாம் வருத்தத்தில் இருக்கிறோம் ஏனெனில் நமது வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. விஷத்தைப் பரப்பி நாட்டின் ஒற்றுமைக்கு அபாயத்தை ஏற்படுத்தும் சக்திகள் மீண்டும் தலை தூக்குகின்றன என்பதே நமக்கு வருத்தம். மதத்தின் பெயரால் நடைபெறும் சமூகக் கலவரங்கள் (பொது) சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றன; பல அப்பாவி உயிர்களை பலி கொள்கின்றன. மேலோட்டமாக அப்படித் தோன்றினாலும், இவை வெறும் சமூகக்கலவரம் மட்டுமே அல்ல. இவற்றுக்குப் பின்னால் குறுகிய புத்தி, அரசியல் பொருளாதார ஆதாயங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் சமூகக் கலவரங்கள் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன. பிற மாநிலங்களிலும் சில (சம்பவங்கள்) நிகழ்ந்துள்ளன. தனிநபர்கள் குடும்பங்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தின் மீது இது ஒரு கரும்புள்ளி. நமது மண்ணில் இருந்து இத்தகைய சக்திகளை வேரறுப்பது நமது கடமை.

ஜனநாயக அமைப்பு முறையில், வெவ்வேறு துறைகளில் (கருத்து) வேறுபாடுகள் இருக்கலாம். இவற்றைத் தாண்டி நாம் எழ வேண்டும். நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் குறிக்கோளைப் பாதுகாக்க, ஒருவருக்கு ஒருவர் மனக் கசப்பை உண்டாக்கும் கட்சி சார்ந்த அரசியல் வேதங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், நமது நாடு வலிமையாக இல்லாவிட்டால், உடன் வாழ யாருமே இல்லையென்றால், யாரிடம் வேற்றுமை காண்பது? யாரோடு சண்டையிடுவது? யாருடன் நட்பு கொள்வது? சகோதர சகோதரிகளே.. நாடு தோற்றுப் போனால், நாம் யாருமே மிஞ்ச மாட்டோம். நமது நாட்டு விடுதலைக்காகப் போராடினோம். அது வெறுமனே அரசியல் விடுதலைக்காக மட்டுமே அல்ல. சமூக நீதி, சமத்துவம் மற்றும் பொருளாதார நீதியையும் குறித்தது அது. (பயணத்தின்) ஒரு பாகம் (மட்டுமே) முடிந்தது. அடுத்தது இப்போது நடந்து வருகிறது. அந்த நாட்களில் எதிரிகள் வெளியே கண்ணுக்குத் தெரிந்தார்கள். இன்று அவர்கள் (மாறுவேடத்தில்) மறைந்து உள்ளார்கள். அவர்களில் சிலர் வெளிப்படையாக எதிரிகள்; ஆனால் பலரும் தங்களை அறியாமலே அவர்களின் கைகளில் பகடைக்காய் ஆனவர்கள்.

இப்போது ஒவ்வொருவர் மனதிலும் பஞ்சாப் நினைவில் இருக்கும். இங்கே நான் பஞ்சாப் பற்றிய முழுக் கதைக்கும் செல்ல விரும்பவில்லை. இது குறித்து நான் பலமுறை பேசி இருக்கிறேன். இருந்தாலும் சில தவறான பிரசாரம் நடைபெறுவதால் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்த வைபவத்தில் மிகுந்த எண்ணிக்கையில் நீங்கள் கலந்து கொண்டுள்ளீர்கள். சிலர் என் முன் தெரிகிறீர்கள்; பலர் தெரியவில்லை. கடந்த ஆண்டு நான் உங்களுடன் பேசிய பிறகு, மிகுந்த எண்ணிக்கையில் தொலைதூர கிராமங்களையும் வானொலி, தொலைக்காட்சி சென்று சேர்ந்துள்ளது. மின்வரத்து அதிகரித்து இருக்கிறது. குடிநீர் பல பகுதிகளை சென்றடைந்து உள்ளது. கல்வியிலும் மருத்துவ வசதியிலும் ஏழைகளுக்கு உதவ எல்லா முயற்சிகளும் எடுக்கப் பட்டுள்ளன. இது குறித்து நான் பிறகு பேசுகிறேன்.

சில மாநிலங்களில் மறைமுக நோக்கத்துடன் சில இயக்கங்கள் நடத்தப்படுகின்றன; காலப் போக்கில், அந்த இயக்கங்களை மாற்றி விடுகிற, வேற்று சிந்தனை கொண்ட மனிதர்களின் கைகளுக்குப் போய் விடுகின்றன. அவர்கள் இந்த இயக்கங்களுக்குள் வன்முறை, கொலை, அச்சுறுத்தல் ஆகியவற்றைப் புகுத்தி விடுகின்றனர். இந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள், (சூழ்நிலையின் மீது) தமது கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். பஞ்சாபில் இதுதான் நடந்தது. நாம் ஏதோ அவர்களின் கோரிக்கைகளை விவாதிக்க கூட முன்வராதது போல் வெளிநாட்டு செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றன. எவ்வளவு நீண்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன என்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒரு சில அம்சங்கள் (மட்டுமே) என்கிற அளவுக்கு (இரு தரப்புக்கும் இடையிலான) வித்தியாசங்கள் குறைக்கப்பட்டன.

காந்திஜி, நேரு, மவுலானா ஆசாத் நமக்குக் கற்றுத் தந்தபடி, உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும், இயன்றவரை எந்தப் பக்கமும் பாதிப்பு இன்றி நட்புறவை வளர்க்கிற, அதிகபட்ச புரிதலை எட்டுவதே நமது கொள்கையாகும். எனக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ, யார் என்ன சொன்னாலும், நான் எப்போதுமே செவி மடுத்துக் கேட்கிறேன். இயன்றவரை நிறைவேற்றவும் முயற்சிக்கிறேன். ஆனால் எனக்கும் சிலவரையறைகள் உள்ளன. நம்மிடம் இருக்கும் வளங்கள் மிகக் குறைவு; நிதி வசதியும் வரையறைக்கு உட்பட்டே உள்ளது. எனவே நாம் குறிப்பிட்ட வரையறை தாண்டி செல்ல முடியாது. சில கோரிக்கைகள் ஒரு பிரிவு மக்களை திருப்திப் படுத்தும்; மற்றவருக்கு எரிச்சல் ஊட்டும்; பிற மாநிலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும். ஆகையால் இது தொடர்பான எல்லாவற்றையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

மாநிலம், மண்டலம், மொழி, அல்லது வேறு பிறவற்றின் மீது கோரிக்கைகளை எழுப்பும் நபர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன் - உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதால் வேறு யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தங்களது கோரிக்கை நாட்டின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி நாட்டை பலவீனமாக்கி கீழே அழுத்தி விடுமோ என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரச் சுமை அவர்கள் மீதும் தான் விழும். நாம் நமது திட்டங்களில் எல்லாருடைய நலன்கள் மீதும் அக்கறை செலுத்துகிறோம். எல்லா மாநிலங்களின் எல்லா மக்களும் வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறோம்.

சமீப நாட்களாய், மத்திய மாநில உறவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று நானும் கூறி வருகிறேன். இந்தப் பிரச்சினையை நேர்மையாக அணுகினால், எளிதில் சமரசத்தை எட்ட முடியும். 1960-61 இல் மத்தியில் இருந்து மாநிலங்கள் ரூ.500 கோடி பெற்றுக் கொண்டு இருந்தன. இன்று அவர்கள் ரூ.12,000 கோடி பெறுகிறார்கள். அபாரமான ஏற்றம். இருந்தாலும், மாநிலங்களும் மகிழ்ச்சியாக இல்லை; மத்திய அமைச்சகங்களும் திருப்தி கொள்வதில்லை. எல்லாருமே போதுமான அளவு தமக்கு கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஒப்புக் கொள்கிறேன் - இவர்கள் பெறும் நிதி இவர்களின் தேவைக்குப் போதாதுதான். ஆனால் வளர்ந்த செல்வந்த நாடுகளில் கூட எல்லாருடைய தேவைகளும் முழுமையாக நிறைவேற்றமுடிவதில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பற்றாக்குறை இருக்கும் என்பது மட்டுமல்ல; இன்னும் அதிகரிக்கவே செய்யும். நாம் பார்க்க வேண்டியது எல்லாம் - ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிற போது, பலவீனமாய் கவனிக்கப்படாதவர்களாய் இருக்கும் மக்களை நாம் புறக்கணித்து விடக் கூடாது; அவர்களுக்கு பாதகம் செய்து விடக் கூடாது. வசதி உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் விளைவாக ஏழைகள் மேலும் ஏழை ஆகிவிடக் கூடாது. வறியவர்கள் வலிமையானவர்களாக மாறினால் மட்டுமே இந்த நாடு வலிமை பெறும். இவர்களின் வலிமையில்தான் வசதியானவர்களின் நலனும் கூட. சுய தேவைகளை முன்னிறுத்துகிற எண்ணம் இன்றி, நாட்டு நலனை உறுதி செய்கிற, நலிந்த பிரிவினருக்கு உதவி செய்கிற, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கோலுகிற கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று நம்புகிறேன்.

இயன்றவரை நலிந்த பிரிவினருக்கு உதவி செய்வதை வலியுறுத்துகிறோம். 20 அம்ச திட்டத்தின் குறிக்கோள் இதுதான். (இதன் மூலம் இதுவரை) ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவி செய்யப்பட்டு இருக்கிறது. பல நாடுகளில் மொத்த மக்கள் தொகையே ஒன்றரை கோடி இல்லை! ஆனால் 70 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றரை கோடி என்பது வியப்பு தரும் எண்ணிக்கை இல்லை. உடனடியாக 70 கோடி மக்களுக்கும் உதவுகிற மேஜிக் எதுவும் இல்லை. சமீபத்தில்தான் 20 அம்சத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் மூலம், நகரங்களிலும் கிராமங்களிலும், கணிசமான எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. கடன் வழங்குவதிலும் பிற வகைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளோம். சில குறைபாடுகள் உள்ளன. சிலர் தவறு இழைத்தார்கள் என்பதை அறிவேன். இது குறித்து என்னிடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.

டெல்லியில் வசிக்காதவர்கள் அல்லது முதன்முறையாக என்னுடைய உரையைக் கேட்கிறவர்கள் வியப்பு அடையலாம் - நான் டெல்லியில் இருக்கிற போதெல்லாம், விடுமுறை அல்லாத நாட்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் சில ஆயிரம் மக்களை எனது இல்லத்தில் சந்திக்கிறேன். நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் அனைத்துத் தரப்பு மக்களும் வருகிறார்கள். சிலர் வெறுமனே என்னைப் பார்ப்பதற்காக வந்ததாய்க் கூறுவார்கள்; சிலர் தமது இன்னல்களை விவரிப்பார்கள்; சிலர் புகார் கூறுவார்கள்; இன்னும் சிலர் வளர்ச்சியைப் புகழ்வார்கள். உலகின் பிற நாடுகளில் பல தலைவர்கள் இதைச் செய்வதில்லை. இதன் மூலம் நேரம் விரயம் ஆவதாகச் சிலர் கூறலாம். அப்படி அல்ல. மக்களின் உணர்வுகளை நாட்டின் உண்மை நிலையை அறிந்து கொள்ள இது உதவுவதாய் நான் உணர்கிறேன்.

நீர்ப்பாசனம் பெறும் பகுதி கணிசமாக உயர்ந்துள்ளது. சில விவசாய நண்பர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக நாம் செய்தவை (வரலாற்றில்) இணையில்லாதவை. சுதந்திரப் போராட்டத்தின் போதும் அதன் பிறகும் விவசாயிகளுக்கு எப்போதுமே உரிய முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. உண்மையில் இவர்கள்தாம் நமது இயக்கத்தின் ஆணிவேர்கள். நமக்கு உணவு அளிப்பவர்கள் இவர்கள். அவர்கள் நுகரும் சில பொருட்கள் விலை அதிகரித்து இருப்பதை அறிவேன். இவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்; உண்மையில் உதவி வருகிறோம். ரூ.800 கோடி மானியத்தில், குறைந்த விலையில் ரசாயன உரம் வழங்கப்படுகிறது. ஒரு ஏழை நாட்டுக்கு இது அத்தனை எளிதான காரியம் அல்ல. விவசாய விளை பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கும் பிற நாடுகளிலும் இவர்களுக்கு தேவையான பொருட்களின் விலை கூடி இருக்கிறது என்பது உண்மை. வளர்ச்சியோடு கூடவே தேவைகளும் அதிகரிக்கின்றன. ரசாயன உரங்களும் பூச்சி மருந்துகளும் அறியாத மக்கள், 'டிராக்டர்', இயந்திரங்கள் அறியாத மக்கள், இன்று இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. உற்பத்தியை, தேவை - மிஞ்சி இருக்கிறது. இதனால் விலைகள் கூடுகின்றன. இவை எல்லாவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் விவசாயிகளை சார்ந்து இருக்கிறோம்; அவர்கள் தொழில் உற்பத்தியை சார்ந்து இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய, தொழிற்சாலைப் பணியாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் நம்மீது தவறு இருக்கிறது. சில சமயங்களில் தொழிற்சாலை உரிமையாளர்கள் தவறு செய்கிறார்கள். சில சமயங்களில் தொழிலாளர்களுமே கூட தவறிழைக்கிறார்கள். ஒரு தொழிற்சாலையில் பல சங்கங்கள் இருப்பதால் அவர்களுக்குள் பகைமை ஏற்படுகிறது; இதனால் காலம், விரயம் ஆகிறது; உற்பத்தி பாதிக்கப் படுகிறது. இது போன்ற விடயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பிரிவினரும் இந்திய தேசம் என்ற அகன்ற பார்வையில் தமது பிரச்சினைகளை அணுக வேண்டும். விவசாயிகள் தொழிலாளர்கள் இல்லத்தரசிகள் உள்ளிட்ட மற்றவரின் இன்னல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விலைவாசி அதிகரித்து வரும் இந்த நாட்களில் தமது குடும்பத்தை சிக்கனமாக நடத்த இல்லத்தரசிகள் முயற்சிக்கின்றனர். இந்திய மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருமே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம். தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல பொது விநியோகத் திட்டத்துக்கு ரூ.850 கோடி செலவு செய்யப்படுகிறது. இந்த நிதியை இன்னும் அதிகரிக்க முயல்கிறோம்.

யாரேனும் நேர்மையற்ற வழிமுறையில், ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எங்கே யார் இவ்வாறு செய்கிறார்கள் என்பது உடனடியாக எங்களுக்குத் தெரிய வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லாரும் செய்கிறார்கள் என்று சொன்னால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம். இது தொடர்பாக உள்ளூர் மக்கள் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். உள்ளூர் மக்கள் கண்காணிப்புடன் இருந்தால், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நிகழாது. எச்சரிக்கை உணர்வே பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். சட்டங்களை மேலும் கடுமையாக்க முயற்சி செய்து வருகிறோம். ஒரு பிரச்சினை தோன்றுவதற்கு முன்பே அதற்கான தீர்வைக் காண முயற்சிக்கிறோம்.

இது - சுயசார்புக்கான காலம். நமது செயல்கள் சுயசார்பு உடையதாக இருக்க வேண்டும் என்பதே நமது முழக்கம். தேசம் என்பதற்கு என்ன பொருள்? அது நிலம் (மட்டுமே) அல்ல; நீங்கள் எங்கு வசித்தாலும், நீங்கள் ஒவ்வொருவருமே தேசமாகும். நீங்கள் எல்லாரும் சுயசார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள் இருப்பதற்கு, உங்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது - உங்கள் கடமையைச் சரியாக நிறைவேற்றுகிற பொறுப்பு. வன்முறைக்கு இடம் தராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமயம் சார்ந்த (வழிபாட்டு) இடங்கள் - ஆயுதங்களைக் குவித்து வைக்கும், குற்றங்களுக்கும் வன்முறைக்கும் உதவும் மையப் புள்ளிகளாக மாற்றப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மதவாதம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வது உங்களின் கடமை. இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக அங்கே செல்லுங்கள். விடுதலை இயக்கத்தின் போது நமது சேவகர்கள் இதைச் செய்தார்கள். அங்கு இருந்தவர்களின் கோபத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டினார்கள். இது சாத்தியம். இதை நாம் ஏற்கனவே செய்து காட்டி உள்ளோம். கடந்த காலத்தில் பல அரிய காரியங்களை நாம் செய்து முடித்துள்ளோம். இதுபோன்று எதிர்காலத்திலும் முடியும் என்று நான் நம்புகிறேன்.

நாட்டில் அபாயங்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. பல்வேறு மதங்கள் மொழிகள் மரபுகள் நம்பிக்கைகள் உள்ள நாட்டில், குழப்பங்கள் ஓரளவுக்கு இயல்புதான். ஆனால் இந்த வேற்றுமைகளை நமது பலவீனத்தின் அடையாளமாக நாம் கருதியதே இல்லை. மாறாக, அவை செறிவு சேர்க்கின்றன; வண்ணம் கூட்டுகின்றன. எந்த மரபையும் எந்த மதத்தையும் நாம் கட்டுப்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தனக்கான பாதையைப் பின்பற்ற உரிமை இருக்க வேண்டும். ஆனால் எல்லாப் பாதைகளும், கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போல, இந்தியா என்கிற கடலில் கலந்திட வேண்டும். பல நம்பிக்கைகளின் பல மரபுகளின் கூட்டுதான் இந்தியாவின் தன்மை. நம்முடைய நம்பிக்கையை நாம் நேர்மையாகப் பின்பற்ற வேண்டும். நமது நம்பிக்கையில் உடன்பாடு இல்லாத மக்கள் மீது நம்முடைய நம்பிக்கையைத் திணிக்கக் கூடாது. மக்கள், தத்தம் மதத்தை முறையாகப் பின்பற்றினாலே, மேலான குடிமக்களாக ஆகிவிடுவர். எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை. ஒவ்வொரு மதமும் அன்பு இரக்கம் சகோதரத்துவத்தையே போதிக்கிறது. இந்தப் பாதையை நாடு பின்பற்றினால், ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் நிர்மாணிக்க முடியும்.

போதும் ஒரு புதிய சமுதாயம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பழைய மரபுகளில் இருந்து நவீனம் வெளிப்பட்டு வருகிறது. இதனால்தான் நமது நாட்டில் சில பிரச்சினைகள் முளைத்து இருக்கின்றன.நமது நாட்டில் சில பிரச்சினைகள் உருவாக இது காரணமாக இருந்தது. வெளியில் இருந்தும் சில பிரச்சினைகள், அழுத்தங்கள் வரத்தான் செய்தன. வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது. இதனை நீங்கள் எல்லாரும் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருப்பீர்கள். துன்பங்களில் அமிழ்ந்து போவதோ அவற்றை மீறி மேலே எழுவதோ நமது கைகளில்தான் இருக்கிறது. இது விஷயத்தில் அரசோ அரசியல் கட்சியோ உதவி நல்க முடியாது. நமக்கு உள்ளே இருக்கிற சக்தியும் தன்னம்பிக்கையுமே வெற்றி பெற உதவும். இன்று இந்த சுதந்திர நாளில் நாம் இதை மனதில் கொள்ள வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் பார்த்து இருக்கலாம்; கேட்டு இருக்கலாம்; படித்து இருக்கலாம் - நமது மனங்களிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் நமது நாட்டின் பெருமையை உயர்த்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் மற்ற நாடுகளைப் போல நாம் இதில் ஆதாயம் தேட முயற்சிக்கவில்லை. பிறரைப் போல, இவற்றின் மூலம் நாட்டின் பெருமையை ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஆதாயம் தேடவில்லை. இது நம்மிடம் உள்ள குறைபாடுதான். இங்கே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது டெல்லி மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்னிடம் வந்து மகிழ்ச்சி, நன்றி தெரிவித்தார்கள். வேறு பல விடயங்களில் உடன்பாடு இல்லை என்றாலும் இதனைப் பாராட்டினார்கள். ஆனாலும் எந்த மறுபயனும் இல்லாமல் ஏராளமாக பணம் வீணடிக்கப்படுகிறது இன்று பிரச்சாரம் செய்யப்பட்டது. சமீபத்தில் இதே பணியை வேறொரு நாடு எவ்வாறு எடுத்துச் செயல்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரபட்சமான கோணத்தில் அணுகாது, இதுபோன்ற தருணங்களை நாட்டின் ஒற்றுமை வலிமை ஊக்கம் மற்றும் சுயமரியாதையை வலுப்படுத்தும் விதத்தில் ஊக்கத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். இதுதான் இன்று மிகப் பெரிய தேவை.

இப்போது மேலும் ஒரு பொறுப்பு நமக்குக் கூடியிருக்கிறது. வேறு சில நாடுகளுக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது. மக்கள் இதனை தலைமைத்துவம் என்கிறார்கள். தலைவராக வரவேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இல்லை. நூறு நாடுகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் நல்ல பொறுப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது. நமக்குள்ளே வேற்றுமைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில நாடுகளில் சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதை நிறுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியில் இதுவரை நாம் வெற்றி பெறவில்லை. உதாரணத்துக்கு, ஈரான் - ஈராக் இடையிலான போர். தொடர்ந்து இவ்விரு நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளோம். சாத்தியமாகிற தீர்வுக்காகப் பிற தலைவர்களோடும் பேசி வருகிறோம். பலர் இங்கே வந்து இருக்கிறார்கள். நமது அமைச்சர்களும் அதிகாரிகளும் இரு நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர். நமது முயற்சிகள் தொடர்கின்றன. வேறு சில நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. நட்புறவே நமது கொள்கை. பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாள் ஸ்ரீலங்கா.. யாரோடும் நல்லுறவை மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் புறக்கணிப்பதே இல்லை. இவர்கள் நமக்கு நெருங்கிய அண்டை நாடுகள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்தியா - பாகிஸ்தான் 'போர் இல்லா உடன்படிக்கை' எட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதையே மீண்டும் பல்வேறு தருணங்களில் மறைந்த மரியாதைக்குரிய சாஸ்திரிஜியும் நானும் வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் பாகிஸ்தான் பதில் அளிக்கவில்லை. நான் மீண்டும் பிரதமர் ஆன பிறகு, அவர்கள் நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்த பிறகு, அதனை உடன்படிக்கை யோசனையை இணைத்தனர். இதற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். நாமும் இதை விரும்புகிறோம். ஆனால் நாம் கூறினோம் - இத்தனை நாட்களும் நீங்கள் எங்களது யோசனையைப் புறக்கணித்தீர்கள்; இதனை இப்போது நீங்கள் எழுப்புவதால், மேம்பட்ட சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த நட்புறவு ஒத்துழைப்பு மற்றும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்துவது முறையானதாக இருக்காதா? இப்படி ஒரு உடன்படிக்கையை நாம் எட்டினால், இயல்பாகவே இனி போர் இருக்காது. இல்லை என்றாலும், இவையெல்லாம் ஏற்கனவே சிம்லா உடன்படிக்கையில் இருப்பவை தாம். இவை ஏற்கனவே முறையாக பதிவு செய்யப்பட்டவை. இரு நாடுகளால் கையெழுத்து இடப் பட்டவை. என்றாலும், நீங்கள் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை என்றால், இதேபோன்று ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்கலாம்.

ஆனால், நட்புறவு ஒத்துழைப்பு அமைதிக்கான உடன்படிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டு, 'போர் இல்லா உடன்படிக்கை' கேட்டால், அது எப்படி சாத்தியம் ஆகும்? நாம் இதை எப்படி தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியும்? இப்போதும் நாம் ஏதேனும் செய்ய முயற்சிக்கிறோம். நமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிற, உண்மைக்குப் புறம்பான செய்திகளை அவர்களின் தொலைக்காட்சியும் செய்தித்தாள்களும் வெளியிடுவதைக் கண்டு வருந்துகிறேன். இருப்பினும் எல்லா விவகாரங்களையும் நட்பு ரீதியாக மிகவும் நயமாக எடுத்துச் செல்கிறோம். ஆனால் எந்த அரசுமே நாட்டின் நலன்களை, சுயமரியாதையை விட்டுத் தர முடியாது.

இலங்கையில் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்கள் தாக்கப்படுவதில் எனது இதயத்தில் சோகம் நிரம்பி இருக்கிறது. அங்கேயும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அரசு, எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டி உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் கடந்து சில ஆண்டுகளாக தொடர்ந்து தாக்கப்படுகிற விதம், அமைதி திரும்பத் தடையாக இருக்கிறது. நிலைமை படிப்படியாக மோசமாகி வருகிறது. நாம் இதில் தலையிட விரும்பவில்லை. வேறொரு நாட்டில் ஒற்றுமையில் நாம் தடை ஏற்படுத்த விரும்பவில்லை. அது நமது நலனுக்கும் நல்லதல்ல. நமது அண்டை நாடுகள் நிலையானதாக நம்முடன் நட்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் எல்லாருக்கும் நட்புக் கரம் நீட்டுகிறோம். பேச்சுவார்த்தை நடத்தவும், எல்லாரும் ஏற்றுக் கொள்கிற முடிவை எட்டுவதற்கும் உதவுகிறோம்.

மொத்த நாடுமே வருத்தத்தில் இருக்கிறது. அங்குள்ள நம்முடைய தமிழ் சகோதரர்கள் மிக அதிகமாக பாதிக்கப் பட்டு உள்ளார்கள். ஏற்கனவே 40 ஆயிரம் அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர். பாதிப்புக்கு உள்ளாகாத சிலரும் வந்திருக்கலாம். அவர்களில் சிலர் ஒற்றர்களாகவும் இருக்கலாம். உண்மையான நிலைமை என்ன என்று சொல்ல இயலவில்லை. நம்முடைய எல்லா முயற்சிகளையும் மீறி நமது எல்லைகளில் ஊடுருவலை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை. முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. எப்படியேனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அதிபரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் இந்த ஆலோசனையை முன்வைத்தார். அவரது தலைமையின் கீழ் முன்னேற்றம் ஏற்படும்; உடன்படிக்கை எட்டப்படும் என்று நம்பினோம். ஆனால் இதுவரை விரும்பத் தகாத சம்பவங்கள் பற்றிய செய்திகளை மட்டுமே காண்கிறேன். இந்த பிரச்சினை குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்முடைய எல்லா அனுதாபங்களும் உண்டு.

நமது கடல் எல்லைகள் அபாயத்துக்கு உள்ளானவை. ஆனால் இவற்றைப் பற்றி நான் பேசுவது, உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக அல்ல. உள்நாட்டு பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் ஒற்றுமையாய் வலிமையுடன் எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள முடியும். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதன் மூலம், ராணுவம் அல்லது காவல் துறையின் மாண்பைக் குறைப்பதன் மூலம் நமது நாட்டை வலுவாக்க முடியாது. எப்போது ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும் நமது வீரர்கள் தமது உயிரையும் தியாகம் செய்து துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள். வெள்ளம் அல்லது வேறு ஏதோ வடிவத்தில் இயற்கைப் பேரிடர் நிகழும் போதும் நமது வீரர்கள் போராடி மக்களுக்கு உதவுகிறார்கள். இவர்களை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்?

பொது ஊழியரோ அரசியல்வாதியோ ராணுவ வீரரோ... சில நேரங்களில் தவறு இழைப்பது மனித இயல்பு. ஒருவர் செய்த பிழைக்காக நாட்டின் ஒட்டுமொத்த மாண்பைக் குறைத்து விடக் கூடாது. இது நாட்டு நலனுக்கு, குடிமக்களின் நலனுக்கு, அரசியல் கட்சிகளின் நலனுக்கும் கூட நல்லதல்ல. சிலர் தமக்கு நல்லது நேரும், விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக எந்த பிரச்சினையையும் கிளப்பத் தயங்குவதில்லை. இது அவர்களுக்குமே கூட பயன் தரும் இன்று நான் கருதவில்லை. ஆனால் இது நமது நாட்டுக்கு, நமது எழுச்சிக்குத் தீங்கு விளைவிக்கும்.

சுதந்திரம் பெற்றால் மட்டும் போதாது என்பதை இந்த சுதந்திர நாளில் நாம் நினைவு கொள்ள வேண்டும். இதைப் பாதுகாக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். சுதந்திரச் சுடர், சூறைக் காற்றில் அணைந்து விடாது இருக்க, நமது உழைப்பால், தேவைப்பட்டால் நமது உயிரைத் தந்தேனும் காப்பாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இன்று இந்த உறுதிமொழிஏற்க வேண்டும்.

முன்னர் நான் இருபது அம்ச திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஏழைகள் நலிந்த பிரிவினர் மற்றும் சிறு விவசாயிகளை மேம்படுத்துவதே நமது நோக்கம் என்று சொன்னேன். இந்த திட்டங்களுக்காக ரூ.1,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நாட்டில் எந்தப் பகுதியிலேனும் எதையாவது பிரச்சினை இருந்தால் அதை நாம் உடனடியாக கவனிக்கிறோம். விரைவில் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்க இருக்கிறது. இதன் குறிக்கோள்கள்.. ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை - உணவு, உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உற்பத்தி பெருகாவிட்டால் வேலை வாய்ப்பு இல்லை; உணவும் இல்லை. இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இது நமது நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்தை மேலும் வலுவாக்கும். இத்துடன் நாமும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.

நாட்டின் விடுதலைப் போராட்டம், நமது இயக்கத்துக்கு முன்னரே தொடங்கியது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. காரணம், அது (எல்லாரையும்) ஒருங்கிணைத்த முயற்சியாக இல்லை. 1857 இல் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இன்று மாலை இது குறித்து மேலும் சில விவரங்களை நீங்கள் கேட்கலாம். அந்தப் புரட்சி ஏன் வெற்றி பெறவில்லை? ஏனெனில், மக்கள் அதற்கு ஆதரவு அளித்தாலும் கூட, ஒரு பொது நோக்கத்துக்காக வீரர்களாக அவர்கள் ஒன்று கூடவில்லை.

விடுதலை இயக்கத்தின் நிறைவுப் பகுதி காந்திஜியால் வழிநடத்தப்பட்டு 1942 ஆகஸ்டு 9 அன்று தொடங்கியது. இந்த நாளை நாம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடுகிறோம். நாம் எப்படி வெற்றி பெற்றோம்? வன்முறையால் அல்லது யார் மீதும் கொண்ட பகைமையால் அல்ல. இங்கிலாந்து மீதோ ஆங்கிலேயர் மீதோ நமக்குப் பகைமை இல்லை. ஏகாதிபத்யம்தான் நமக்குப் பகை. நாம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத்தான் போராடினோம். இன்றும் கூட தென்னாப்பிரிக்காவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடும் மக்களுடன் நிற்கிறோம். உள்ளூர் மக்களோடு அங்கே இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை இல்லை. ஒரு குடிமகனுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைக் கூட அவர்களுக்கு இல்லை. ஆகையால், அவர்களுக்கு ஆதரவாக எப்படி குரல் எழுப்பாமல் இருக்க முடியும்?

இது குறித்து முழுமையாக நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒரு மகத்தான தலைவர் சொன்னார் - 'ஒரு மனிதனுக்கு விடுதலை மறுக்கப்பட்டாலும், நாம் எல்லாருமே விடுதலையை இழக்கிறோம்'. ('if one person is deprived of freedom, all of us lose freedom') ஒரு நாடு அடிமையுண்டால், அடிமை நிழல் எல்லார் மீதும் படிகிறது. விடுதலையும் அமைதியும் உலகம் முழுதிலும் நிலவ வேண்டும். இதன் ஆசிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் அமைதி நிலவ இந்தியா முயற்சிக்கிறது. சமீபத்தில் ஐந்து நாடுகளின் ஜனாதிபதிகள்/ பிரதமர்களோடு சேர்ந்து இந்தியா, அணு ஆயுதங்களுக்கு எதிராக வேண்டுகோள் வெளியிட்டது. இப்போதுள்ள அணு ஆயுதங்களில் நூற்றில் ஒரு பங்கு இருந்தாலும் போதும், ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து விடலாம். இன்னமும் இவை ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; குவித்து வைக்கப் படுகின்றன. ஆனால், இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார்கள். இந்தியாவுக்கு சிறிது அணுத்திறன் இருக்கிறது. இது நம்மால் முடியும் என்று நமது விஞ்ஞானிகள் நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திறனைக் கொண்டு நாம் அணுகுண்டு தயாரிக்கப் போவதில்லை. மின்சாரம் தயாரிக்க, நலிந்தோர்க்கு உதவ, மருத்துவ விஞ்ஞானத்தில் மேம்பட.. அணுசக்தி தேவை.

எந்தத் திட்டமாக இருந்தாலும், விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும், இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வராவிட்டால் அது வெற்றி பெறாது. அவர்களிடம் திறமை இல்லாது இருந்தால் நம்மால் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது. இதையெல்லாம் நாம் ஏன் செய்கிறோம்? ஏழை மக்களின் துன்பங்களை நீக்க, நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படவே இவற்றை செய்கிறோம். சில துறைகளில் நாம் பின்தங்கி உள்ளோம். இது இயல்புதான். 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் வளர்ந்த நாடுகளிலேயே கூட தொழிற்புரட்சி ஏற்பட்டது. நமது இளைஞர்கள் ஆக்கபூர்வ பணிகளில் ஈடுபடாது அழிவு வேலைகளில் இறங்கினால், நாம் எவ்வாறு மற்ற (வளர்ந்த) நாடுகளுக்கு இணையாக வளர முடியும்? நான் இதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். ஏனெனில் புதிய தலைமுறையின் திறன் குறித்து நான் நன்கு அறிவேன்.

பள்ளியில் கல்லூரியில் பிற நிறுவனங்களில் இருக்கும் இளைஞர்கள், ஆக்கபூர்வ திறன்பெற்றவர்கள். இவற்றை நாம் வெளிக்கொணர வேண்டும். நமது பண்டைய நெறிகளை மறந்து விட்டோம். மதங்கள், மரபுகள் பற்றிப் பேசுகிறோம். அவற்றின் அடிப்படைத் தத்துவங்களில் கவனம் செலுத்துவது இல்லை. பிறருக்கு உதவுதல், பிறருக்கு நன்மை பயத்தல், அமைதியான சூழலை உருவாக்குதல் இவற்றையே அது வலியுறுத்துகிறது. நமது நெறிகளை மறந்து விட்டால் நம்மால் முன்னேற முடியாது. பொருளாதார நிலைமையை மேம்படுத்துகிற சமூக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதேசமயம் ஆன்மீக வலிமையும் மேம்பட வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு மகத்தான நாடாக உருவாக முடியும். இந்தியாவில் அற நெறிகள் ஏராளமாக உள்ளன. இவற்றை நாம் வளர்க்க வேண்டும். இழக்கக் கூடாது.

இந்தக் கொடி - ஒரு துண்டுத் துணி அல்ல; ஓர் அடையாளம். இந்திய சுதந்திரத்தின், இந்தியர் செய்த தியாகத்தின், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தின் அடையாளம் - இந்தக் கொடி. வறட்சி, வெள்ளம், சமூக கலவரம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் துன்பப்படும் மக்களுக்கு அனுதாபங்கள். அவர்களுடைய நன்மைக்காகப் பிரார்த்திக்கிறோம். நல்ல மழை வேண்டியும் பிரார்த்திக்கிறேன். இதனால் உணவு உற்பத்தி பெருகும்; (உணவுப் பொருட்கள்) எல்லாரையும் சென்று சேரும். இது நமது நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்; அமைதி, நட்புக்கான புதிய பாதையை உலகத்துக்குக் காட்டும்.

இந்திய அரசின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி என்னோடு அந்த தேசிய முழக்கத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். சாதாரணமாக குழந்தைகள் தான் இதைச் செய்வார்கள். ஆனால் இங்கே உள்ள அனைவரும் என்னுடன் இணைவீர்கள் என்று நம்புகிறேன்.
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 37 - ‘நமது சாதனைகள் மிகப் பெரியவை!’ | 1983

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்