Bigg Boss 7 Analysis: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் - கமலின் நடவடிக்கை நியாயமானதுதானா? 

By டெக்ஸ்டர்

இந்த சீசனின் மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான பிரதீப் சக போட்டியாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யாரும் எதிர்பாராத வகையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

வார இறுதி எபிசோட் தொடங்கியதுமே, கமல் வந்ததும் வராததுமாக மாயா, விஷ்ணு, பூர்ணிமா உள்ளிட்ட பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் கைகளில் கட்டியிருந்த செங்கொடியை உயர்த்தி ‘உரிமைக் குரல்’ எழுப்பினார்கள். அனைவரின் புகாரும் பிரதீப் மீதுதான். தகாத வார்த்தை பேசுகிறார், டபுள் மீனிங்கில் பேசுகிறார், எல்லை மீறுகிறார், இரவில் தூங்க பயமாக இருக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்னும் ஒரு படி மேலாக, தன்னுடைய அரைஞான் கயிறு குறித்து கமெண்ட் அடிக்கிறார் என்று ரவீனா தெரிவித்தார். அவர் கூறிய மற்றொரு குற்றச்சாட்டு மியூட் செய்யப்பட்டிருந்தது. கதவை திறந்து வைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார் என்று மணி புகார் கூறினார். உடனடியாக இடைமறித்த பிரதீப், ‘வேண்டுமென்றேதான் அப்படி செய்தேன்’ என்றார்.

அதுவரை பிரதீப் தரப்பு விளக்கத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கமல், மணியின் அந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு பிரதீப்பிடம் ‘உங்கள் பதில் வேண்டாம். உட்காருங்கள்’ என்று அவரை ஆஃப் செய்து அமரச் செய்தார். பின்னர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது தொடரச் செய்யலாமா என்று ஒவ்வொரு போட்டியாளராக கன்ஃபெஷன் ரூமில் அழைத்து தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார் கமல். இதில் விசித்ரா, கூல் சுரேஷ், அர்ச்சனா, தினேஷ் தவிர்த்து மற்ற அனைவரும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிடலாம் என்றே கூறியிருந்தனர். இறுதியாக பிரதீப்பை அழைத்த கமல், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனிலிருந்து தமிழ் பிக்பாஸ் வரலாற்றில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட முதல் போட்டியாளர் பிரதீப். இந்த எபிசோடில் கமல் மிக முக்கியமான ஒரு தகவலையும் கூறியிருந்தார். அதாவது ‘இதற்கு முந்தைய போட்டிகளில் தரக்குறைவாக நடந்துகொண்ட போட்டியாளர்களை பார்த்து அவர்களுடைய அதே உத்தியை நானும் ஃபாலோ செய்கிறேன் என்று யாரும் செய்ய நினைத்தால், இனி அப்படி செய்ய முடியாது’ என்பதே அது. இதைவிட அதிக வசைச் சொற்களையும், அவமதிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்த ஒருவரை கடந்த சீசனில் வெற்றியாளராக்கி அழகுபார்த்தது பிக்பாஸ் நிர்வாகம். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததன் மூலம் அதற்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாகத்தான் பார்க்க முடிகிறது.

பிக்பாஸ் என்ற போட்டியின் அடிநாதமே, போட்டியாளர்கள் அவரவர் போக்கில் இருந்து, அவர்களின் இயல்பான நடவடிக்கை பார்வையாளர்களை ஈர்க்கிறதா அல்லது வெறுக்க வைக்கிறதா என்பதுதான். ஆனால் சீசன் 7 தொடங்கிய முதல் நாளிலிலிருந்தே தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் ஸ்ட்ராட்டஜி என்ற பெயரில் திட்டமிட்டு நகர்த்தி வந்தார் பிரதீப். போட்டியில் திட்டமிடல் இருக்க வேண்டியதுதான். ஆனால் சக போட்டியாளர்களிடம் பேசுவது, பழகுவதை எல்லாமே கூட கேம் என்ற நினைப்பில் பிரதீப் செயல்பட்டதே அவரது ஆட்டத்துக்கு வினையாக முடிந்துவிட்டதாக தோன்றுகிறது. வார இறுதியில் தனக்கு கிடைக்கும் பலத்த கைதட்டல்களால் தான் என்ன செய்தாலும் அதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமான வேரூன்றியிருக்க வேண்டும்.

உண்மையில், பெண் போட்டியாளர்கள் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகள் மிகப்பெரியது. அவ்வளவு எளிதில் மீளமுடியாதது. தூங்காமல் இருப்பது, தகாத வார்த்தை பேசுவது உள்ளிட்ட அவர்கள் சொன்ன ஒரு சில சம்பவங்கள் தவிர்த்து மற்ற சம்பவங்கள் எதுவும் தினசரி எபிசோடிலோ அல்லது 24 மணி நேர எபிசோடிலோ காட்டப்படவில்லை. சென்சார் பிரச்சினை ஏற்படலாம் என்ற காரணமாக கூட இருக்கலாம். சமூக ஊடகங்களில் பிரதீப் அநியாயமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக பலரும் கண்டனம் எழுப்புவதை பார்க்கமுடிகிறது. அப்படியே பிரதீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று வைத்துக் கொண்டாலும், இத்தனை கேமராக்கள் இருக்கும்போது கிராஸ் செக் செய்யாமல் அப்படியே ஒரு போட்டியாளரை தன்னிச்சையாக கமலால் வெளியேற்றிவிட முடியுமா?

இத்தனைக்கும் பிரதீப் நிகழ்ச்சிக்கு அதிக கன்டென்ட்டுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு போட்டியாளர். இன்னும் சொல்லப் போனால் பிரதீப், மாயா, விஷ்ணு போன்ற ஒரு சில போட்டியாளர்களால்தான் (அவர்கள் செய்வது நியாயமற்ற விஷயங்களாக இருந்தாலும் கூட) நிகழ்ச்சிக்கு தினமும் கன்டென்ட் கிடைக்கிறது. சக போட்டியாளர்கள் சொல்கிறார்கள் என்ற காரணத்துக்காக முக்கியமான போட்டியாளர்களை எல்லாம் இஷ்டத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தால் நிகழ்ச்சி காற்று வாங்கிக் கொண்டிருக்கும் என்பது சேனல் நிர்வாகத்துக்கு தெரியாதா?

அப்படி இருந்தும் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்திருக்கிறது பிக்பாஸ் நிர்வாகம். இத்தனை பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் டபுள் மீனிங்கில் பேசுகிறார், தகாத சொற்களை பயன்படுத்துகிறார், பாத்ரூம் கதவை திறந்துகொண்டே சிறுநீர் கழிக்கிறார் (இதற்கு பிரதீப் கொடுத்த விளக்கம் படு அபத்தம்) என்று ஒருவர் மேல் போகிறபோக்கில் சொல்லிவிடமுடியாது. இனி போட்டி முன்பு போல சுவாரஸ்யமாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனாலும் அதை கருத்தில் கொள்ளாமல் கடந்த சீசன்களில் கற்ற பாடத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பிக்பாஸ் நிர்வாகம்.

மூன்றாவது சீசனில், ஒரு போட்டியாளர் பலவருடங்களுக்கு முன்பு பெண்களை உரசுவதற்காகவே தான் பேருந்தில் ஏறியதாக கூறினார் என்ற காரணத்துக்காகவே அவர் அடுத்தநாளே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இப்போது நேரடியாகவே பெண் போட்டியாளர்கள் இத்தனை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகும் கூட பிரதீப்பை வெளியேற்றியது நியாயமற்றது என்று கூறுவதே அபத்தம். பிரதீப்பின் வெளியேற்றம் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறதா அல்லது போட்டியாளர்களை சுணக்கம் அடைச் செய்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்