செங்கோட்டை முழக்கங்கள் 37 - ‘நமது சாதனைகள் மிகப் பெரியவை!’ | 1983 

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியா சுதந்திரம் பெற்று 36 ஆண்டுகள் நிறைவுற்றது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் இந்திரா காந்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். முழு விவரம் - இதோ: சகோதரர்களே சகோதரிகளே குழந்தைகளே.. தனி நபராக இருந்தாலும் ஒரு நாடாக இருந்தாலும், பிறந்தநாள் என்பதே மங்கலமான தருணம்; மகிழ்ச்சிக்கான நாள். எல்லாரும், இங்கே இருப்பவர்கள்.. வீட்டில் இருப்பவர்கள்.. எல்லாரும் இதைக் கொண்டாடுகிறோம். முந்தைய ஆண்டுகளில் இங்கிருந்து (எனது) குரலை நாட்டின் பிற பகுதிகளுக்கு வானொலி எடுத்துச் சென்றது. கடந்த ஆண்டு பல பெரிய நகரங்களுக்கு இந்த பிம்பங்களை தொலைக்காட்சி சுமந்து சென்றது. இன்று பல சிறிய நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியின் படங்கள் சென்று சேரும். நமது நாட்டின் 70 சதவீத இடத்தை அடையும் திட்டத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது. இப்படித்தான் எல்லா திட்டங்களும் படிப்படியாக நிறைவேறுகிறது.

நமது சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்கிற நாள் இது. மகாத்மா காந்தி, அவரது சகாக்கள், சீடர்கள் மற்றும் நாம் புத்தகங்களில் வாசித்து அறிந்த பலரை நினைவுபடுத்திக் கொள்கிறோம். இன்னமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான துணிச்சலான விடுதலை வீரர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்கள். நல்ல வேளையாக இவர்களில் ஒரு சிலர் இன்னமும் நம்முடன் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நினைவு கூறும் வேளையில், அவர்கள் செய்த தியாகத்தில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் செங்கோட்டையில் இருந்து பிரதமர்கள் என்ன பேசினரோ அதையேதான் இந்த ஆண்டும் பிரதமர் மீண்டும் பேசப் போகிறார் என்று சிலர் கூறலாம். என்ன வினோதமான கூற்று இது! நம்முடைய சிந்தனைக்கு வயதாகி விடுமா? நம்முடைய கடமைகளை ஒவ்வோர் ஆண்டும், உண்மையில் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டாமா? நமக்கென்று நாம் நிர்ணயித்துக் கொள்ளும் உயரிய கொள்கைகள், நமது மக்களின் உற்சாகத்தைக் கூட்ட நாம் கட்டமைத்துக் கொள்ளும் ஒழுக்க நெறிகள், காட்டின் பாதுகாப்பு வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள்... இது தொடர்பான கடமைகள் முடிவின்றி நம்முள் தொடரும் இல்லையா? இது நமது நாட்டுக்கும் எல்லா நாட்டுக்கும் பொருந்தி வருகிற உண்மை.

நமது சாதனைகளைப் பற்றி, சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கு இது தருணம் அல்ல. சாதனை பட்டியலை எல்லாருமே பார்க்கலாம். நமது மக்கள், வெளி நாட்டினர் - இது குறித்து அறிவார்கள். பல பெரிய நாடுகளின் தலைவர்கள் இது குறித்து எவ்வாறு (பாராட்டி) பேசுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதற்கு, நமது பணி நிறைவடைந்து விட்டது என்று பொருள் அல்ல. நமது எல்லாக் ஆசைகளும் நிஜமாகி விட்டன என்றும் பொருள் அல்ல. ஆனால் நமது மகத்தான தலைவர்கள் காட்டிய பாதையில் நான் முன்னேறு வருகிறோம் என்று மிக நிச்சயமாகப் பொருள்படும். நாம் சில சமயங்களில் தவறி இருந்தாலும், அத்தனை இன்னல்கள் அபாயங்களுக்கு இடையிலும் நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம்.

ஒரு காலத்தில் ஏழையாய் அடிமையாய் கோழையாய் அடக்கப்பட்டு கிடந்த இந்த நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. நமது சாதனைகளைப் பாருங்கள். சில சாதனைகள் உண்மையில் மிகப்பெரியவை. மின்சார உற்பத்தியை பெருக்கி இருக்கிறோம். முன்னர், 3,000 நகரங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது. இன்று எல்லா நகரங்களிலும், மூன்று லட்சம் கிராமங்களிலும் மின்வசதி இருக்கிறது. என்ன நடந்தது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இது. தொலைக்காட்சி பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தருமாறு விண்வெளியில் நமது சொந்த செயற்கைக் கோள் அனுப்பியுள்ளோம். இவையெல்லாம் பெரிய படிகள் - உழைக்கும் வர்க்கத்தின் மாணவர்களின் இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. கடந்த ஆண்டு நாம் இங்கு சந்தித்த பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி இந்த மாநகரில் (டெல்லியில்) நடந்தது. அது இளைஞர்கள் நடத்திய காட்சி. இதைத் தொடர்ந்து அணிசேரா இயக்க மாநாடு நடைபெற்றது. இவையெல்லாம் உலகமே பார்த்து வியந்த நமது நாட்டின் செயல் திறனுக்கான அடையாளம்.

நமது நாட்டைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்த விளையாட்டு வீரர்களை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். குறிப்பாக, சமீபத்தில் உலக கோப்பையை வென்றதற்காக கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் அபார துணிச்சலைக் காட்டிய இளம் வீரர்களை இவர்கள் நினைவு படுத்துகிறார்கள்.

நாட்டிலுள்ள மற்ற இளைஞர்கள் குழந்தைகள் விவசாயிகள் தொழிலாளர்கள் பாராட்டுக்குத் தகுதியற்றவர்கள் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். தம்முடைய களத்தில் இவர்கள் வியர்வை சிந்தி கடினமாக உழைக்கிறார்கள்; படிப்படியாக நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது; அவர்களைப் பார்த்ததில்லை; அவர்களை அடையாளம் காட்டக் கூடத் தெரியாது. அவர்கள்தான் - பட்டியலின மக்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப் பட்டோர் - இந்தியாவின் அடித்தளம். சாதிய முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது நமது நாட்டிலிருந்து முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்று; நாம் ஒரு மகத்தான தேசத்தின் சம உரிமை கொண்ட குடிமக்கள்.

சாதனைகளைப் போலவே சறுக்கல்கள் மீதும் ஒரு பார்வை வேண்டும். நம்மை பின்னடைய வைப்பவை, விரைவாக முன்னேற விடாமல் நமக்குத் தடைகளாக இருப்பவை யாவை? விடுதலைப் போராட்டத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்ட ஒரு பாடம் - ஒற்றுமையும் ஒழுங்கும் மட்டுமே நம்மை வெற்றிக்கு இட்டுச் சென்றன. இன்று நாம் காண்கிறோம் - தெரிந்தோ தெரியாமலோ மக்களில் சிலர், சமூத்தின் சில பிரிவினர், அதே சமூகத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மண்டலத்தின் பெயரால் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கின்றனர். இதுதான் நமது பலவீனம். இந்த சக்திகள் தான் இந்தியாவைப் பின்னுக்கு இழுத்து நமது உற்சாகத்தை குறைத்து நமது தன்னம்பிக்கையை குலைத்தார்கள்.

நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன; மக்கள் பல கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். ஜனநாயகத்தில் இது இயல்பானது தான். பேச்சு நடத்தவும் இயன்றவரை கோரிக்கைகளை நிறைவேற்றவும் நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதே சமயம் ஒரு குழுவின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற போது வேறு யாருடைய நலன்களையும் அது பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். ஆகையால், கோரிக்கைகளைப் பரிசீலிக்கிற போது எல்லோரோடும் கலந்தாலோசித்து எல்லாருடைய நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நம்மால் எல்லாரையும் திருப்திப் படுத்த முடியாது. ஆனால் அதிருப்தி குறைந்த அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். நமது அனுபவத்தில், போராட்டத் தலைவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, வன்முறை எப்படியேனும் நுழைந்து விடுகிறது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை நம்மால் எல்லா சமயங்களிலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. அப்படி கண்டுபிடிக்க முடிந்தால் வன்முறையில் ஈடுபட்ட மனிதர்களைத் தண்டிக்கிறோம். சில சமயங்களில் போராட்டக்காரர்களுக்கே கூட வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்று தெரிவதில்லை. ஆனாலும் இது வளர்ச்சியை பாதிக்கிறது; நாட்டுக்கு சேதம் விளைவிக்கிறது. எனவே அலட்சியம் காட்டப்படுவதாய்ச் சொல்லிப் போராட்டத்தைத் தொடங்குவோர் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து விடுகின்றனர்.

(தீர்வு இன்றி) நழுவிச் செல்லும் சில பிரச்சினைகளைப் பார்ப்போம். அசாம் பிரச்சினை - இதுபற்றி, ஒரு விநோதமான பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் சில உண்மைகள் இருக்கின்றன. வெளிநாட்டினர் நுழைந்துள்ளனர். இவர்களை அடையாளம் காண, மேலும் சட்டவிரோதமாக நுழையாமல் இருக்க வேறு ஏற்பாடுகளைச் செய்ய முயற்சித்து வருகிறோம். இது ஒன்றும் புதிதல்ல. முதன்முறையாக இதுபற்றி விவாதித்த போது, அசாம் போராட்டக்காரர்களுக்கு நான் சில யோசனைகளை முன் வைத்தேன். ஆனால் அவர்கள் சொன்னார்கள் - 'ஒன்று.., நாங்கள் சொல்கிற எல்லாவற்றையும் அப்படியே முழுதாய் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் செய்கிற எதையும் நாங்கள் நடக்க விடமாட்டோம்'. இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்று இருக்க வேண்டிய , ஊடுருவல்காரர்களை அடையாளம் காணும் பணி நின்று போனது. இப்போது அவர்கள் இந்தப் பணியைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முன்னரே நாம் ஒப்புக் கொண்ட இந்தப் பணி இப்போது தொடங்கி இருக்கிறது.

இன்னொரு வினோதமான குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அங்கு நடைபெற்ற தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அதில் பலர் முஸ்லிம்கள். அவர்களது கிராமங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. கூடவே, பீகார் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள் ஆதிவாசிகள் பட்டியல் இனத்தோர் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தீங்கு விளைவித்த எல்லாரையும் கண்டித்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்தேன். ஆனாலும் இந்த கொலைகள் எங்களுக்கும் பங்கு இருப்பது போல பிரசாரம் நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டால், உண்மையில் அவர்களை பாதுகாத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுவோர் யார் என்பது தெரியும். இது நமது பொறுப்பு. ஆனால் நாம் தான் கொலை செய்யத் தூண்டினோம் என்று பிரசாரம் செய்யப் படுகிறது. இத்தகைய பிரசாரத்தில் ஈடுபடுவோர் யார்? இவர்கள்தான், தீமூட்டும் உரைகள் நிகழ்த்தினர்; மக்களைத் தூண்டி விட்டனர்; அச்சுறுத்தல் மற்றும் வன்முறைச் சூழலை உருவாக்கினர்.

பஞ்சாபிலும் பிரச்சினை இருக்கிறது. விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. பலமுறை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு விட்டது. நாட்டின் மொத்த செல்வத்தில், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மண்டலமும் தனக்கு நியாயமான பங்கைப் பெற வேண்டும் என்றே நாம் முயற்சிக்கிறோம். என் பக்கம் இருந்து என்னென்ன கோரிக்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமோ இவற்றுக்கு எல்லாம் நான் தொடக்கத்திலேயே ஒப்புக் கொண்டேன். ஆனால் பிறமண்டலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற, உடன்பட சாத்தியமில்லாத ஒன்றின் மீது நான் முடிவெடுத்தல் நியாயமாக இருக்குமா? வேண்டுமென்றே முடிவு எடுக்காமல் தடுப்பதாக நான் குற்றம் சாட்டப்படுகிறேன். ஏதேனும் ஒரு சமூகம் அல்லது மண்டலம் பலவீனமாக இருப்பதால் மத்திய அரசு ஆதாயம் பெற முடியுமா? அது மத்திய அரசையும் அல்லவா பலவீனமாக்கும்? மண்டலங்களின் வலிமையில் தானே நமது (மத்திய அரசின்) வலிமை இருக்கிறது?

மத்திய அரசு என்பது என்ன? டெல்லி மாநகரம், மத்திய செயலகம், பிரதமரின் அலுவலகம்.. மட்டும்தானா? மத்திய அரசு என்பது எல்லாரையும் ஒருங்கிணைத்து வைத்து நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருப்பது. எல்லாருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதும் அதன் பொறுப்பு. தனிநபரோ மாநிலமோ ஒப்பீட்டு அளவில் கூடுதல் ஆதாயம் உள்ளவர்கள் தமக்கு உயிர்த்தானதை விட அதிகமாகக் கோரக்கூடாது. என்ன இருந்தாலும், உண்மையான அதிகாரம் மாநிலங்களில் தான் இருக்கிறது. எப்போல்லாம் வளைமைக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. மாநிலங்களைப் போலவே மத்திய அமைச்சகங்களுக்கும் வெட்டு விழுகிறது. இதில் நமக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் வேறு வழி இல்லை. மழை பெய்தால் உடனடியாக நமது வளமை கூடுகிறது. வறட்சி, வெள்ளத்தின் போது பாதிப்புக்கு உள்ளாகிறோம். அதிக பணம் செலவிடுகிற போராட்டங்கள் இல்லையெனில் சற்று விரைந்து முன்னேறலாம்.

நான் பஞ்சாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சினை என் முன் வந்தது. எனது அரசு 1980-ல் அதிகாரத்துக்கு வந்தது. கோரிக்கைகளுக்காக இன்று போராடுவோர் முன்னர் மூன்று ஆண்டுகளாக பஞ்சாபில் ஆட்சியில் இருந்தனர். அந்த மூன்று ஆண்டுகளில் அவருடைய சொந்த நபர்களே மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தனர். அண்டை மாநிலங்களிலும் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளே ஆட்சியில் இருந்தன. ஆகையால் இந்த மூன்று ஆண்டுகளில் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் அப்போது அவர்கள் குரல் எழுப்பவில்லை. அவர்களிடமும் உங்களிடமும் இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன் - இந்தப் பிரச்சினைகளை ஏன் அப்போதே தீர்க்கவில்லை? வாய்ப்பு இருந்த போது செயல்படத் தவறிய குற்றம் அவர்கள் மீது இல்லையா? ஏன் அவர்கள் செயல்படவில்லை? ஏனென்றால் அப்போது அவர்கள் நினைத்து இருந்தாலும் தமக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் அவர்களால் பெற்றிருக்க முடியாது. எனவே நாம் அதிகாரத்துக்கு வந்ததும் மொத்த பொறுப்பும் நம் மீது திணிக்கப் பட்டது. பிரச்சினையைத் தீர்க்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் போராட்டக்காரர்கள், இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய மற்றவர்களோடு அமர்ந்து உடன்படிக்கையை எட்ட விருப்பம் கொள்ள வேண்டும்.

நாட்டின் வலிமை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்துவதாய் நாம் கருதும் வேறு பல குரல்களும் எழுகின்றன. நல்லவேளையாக நாட்டில் ஒற்றுமை உணர்வு மிக வலுவாக இருக்கிறது. அசாம் தொடர்பாக இந்தியா முழுதிலும் மற்றொரு தவறான பிரசாரம் நடைபெற்று வருகிறது. சிறுபான்மையினர் பற்றி நான் பேசும்போது, முஸ்லிம்கள் சீக்கியர் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது நான் அதிக அக்கறை காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறேன். இந்து பெரும்பான்மையை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

நமது நாட்டில் ஒரு பகுதியில் ஒரு சமூகம் சிறுபான்மையாக இருக்கலாம்; வேறொரு பகுதியில் பெரும்பான்மையாக இருக்கலாம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இதேபோன்று குறிப்பிட்ட மதத்தினர் ஓரிடத்தில் சிறுபான்மையாகவும் வேறோர் இடத்தில் பெரும்பான்மையாகவும் இருக்கலாம். சிறுபான்மையினர் குறித்து எனக்கு அக்கறை இல்லை, பெரும்பான்மையினருக்கு என்ன தேவையோ அந்தப் பக்கமே நான் செல்கிறேன் என்றும் எனக்கு எதிராக ஒரு புதிய நிலைப்பாடு எடுக்கப்படுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தலில் வாக்குகள் தேவைப்படுகின்றன. இன்று செங்கோட்டைக் கொத்தளத்தில் நின்று கொண்டு விடுதலைப் போராட்டத்தை நினைவு கூர்கையில், நான் பிறந்த அந்தக் காலம்.. நாம் கடந்து வந்த வாழ்க்கை.. நாம் செய்த தியாகங்கள்... இவற்றை நினைவு கூர்கிறோம். வெற்றியில் திளைப்பதும் தோல்வியில் வருந்துவதும் இயல்புதான். நமது பண்டைய மரபு போதிக்கிறது - வெற்றி தோல்விக்கு அப்பால் ஒன்று இருக்கிறது. அதுதான் கடமை. நமது நாட்டின் நலனைப் பாதுகாப்பது நமது கடமை. நமது பணியை நாம் முடிக்க இயலாவிட்டாலும் நமது திறமைக்கு எட்டும் வரை வளர்ச்சிப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தின் போது பலர் இன்னுயிர் ஈந்தனர். சுதந்திரத்தைக் காண பலர் உயிருடன் இல்லை. நமது வாழ்நாளுக்குள் சுதந்திரத்தைக் காண்போம் என்று நாம் சிறுவராக இருந்தபோது கற்பனை கூட செய்ததில்லை. ஆனாலும் அந்த எண்ணம் நமது பாதையில் தவறு செய்யவிடவில்லை. நம்மால் முடிந்த புள்ளி வரை நாட்டை முன் கொண்டு செல்வோம்; பிறகு வேறு யாரேனும் அந்தக் கொடியை கொண்டு செல்வர் என்று அறிந்திருந்தோம். அதே மனஉணர்வுடன் இன்று வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நமது நாட்டை மேலும் வலிமையாக்குவதில் அதே உணர்வு தான் நம்மை மேலே நகர்த்துகிறது.

நாடு பல அபாயங்களை எதிர்நோக்கி உள்ளது. வெளிநாட்டு அபாயங்கள்.. உள்நாட்டு பலவீனங்கள்.. உங்களை நான் அச்சுறுத்த விரும்பவில்லை. நீங்கள் அச்சப்பட மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் இன்றைய சூழலைப் புரிந்து கொள்ளுதல் நமது பொறுப்பு ஆகும். நெருக்கடியை புரிந்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ள நாம் முற்றிலும் ஆயத்தமாய் இருப்போம். ஏகாதிபத்தியம், முன்பைப் போல இல்லை. இன்று அது படைகளுடன் எந்த நாட்டையும் ஊடுருவுவது இல்லை. அது பல வகையான அழுத்தங்களைத் தருகிறது - பொருளாதார, அரசியல், பிறவகை அழுத்தங்கள்.. ஆயுத ஊடுருவலை விட இது குறைந்த அபாயம் அல்ல. உண்மையில் அதை விடவும் ஆபத்தானது. ஏனெனில் சாமானிய மக்களால் இதை உணர முடிவதில்லை. பல்வேறு நாடுகளில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். அவர்கள் சுதந்திரமானவர்கள். ஆனாலும் அவர்கள் சுதந்திரத்தின் மேல் நிழல் படிந்து இருக்கிறது.

இந்தியா இதை அனுமதிப்பதில்லை. நமது பாதை தெளிவானது. ஜனநாயகம் சோசலிசம் அணிசேராமை மூலம் நாம் தற்சார்பு பெற விரும்புகிறோம். நாம் இப்பக்கமும் அப்பக்கமுமாக மாறிக் கொண்டே இருக்கிறோம் என்று சிலர் கூறலாம். உலக அமைதி மற்றும் இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டே நாம் முடிவு எடுக்கிறோம். பிறரை விட சிலரிடம் அதிக நட்பு காட்டலாம். ஆனால் நட்போ, உடன்பாடு இன்மையோ, முடிவு எடுக்கும் பாதையில் குறுக்கே வர நாம் அனுமதிப்பது இல்லை. நாம் சரியான முடிவுகளை எடுக்கிறோம். எல்லாத்துறைகளிலும் நாம் பெறும் வெற்றிகளுக்கு இதுவே காரணம். இது கொள்கை சார்ந்த நாடு என்பதை ஒவ்வொருவரும் அறிவார். நம் எல்லா லட்சியங்களையும் அடைந்து விட்டோம் என்றோ நமக்கு எங்கும் தோல்வியே இல்லை, நாம் தவறே இழைக்க மாட்டோம் என்றோ பொருள் அல்ல.

துரதிருஷ்டவசமாக, ஊழல் பிரச்சினை இருக்கிறது; வருந்துகிறோம். இது இன்னும் வலிமையாக வளரும் என்று கூறுவது தவறாக இருக்கும். நமது வாழ்வில் இருந்து, இந்தத் தீமையை எவ்வாறு ஒழிப்பது என்று பார்க்க வேண்டும். பிற நாடுகளிலும் ஊழல் இருக்கிறது. ஆனால் அது குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டியது இல்லை. நாம் நம்மைப் பற்றி அக்கறை கொள்வோம். அரசியலில் இருந்து, அதிகாரிகளிடம் இருந்து, வணிகர்களிடம் இருந்து, மற்ற பிறரிடம் இருந்து, எல்லாத் துறைகளிலும் இருந்து ஊழல் என்னும் இந்தத் தீமையை அடியோடு வேரறுக்கப் பாடுபட வேண்டும். நமது சொந்த ஆதாயங்களுக்கு அப்பால் பார்க்க வேண்டும். நம்முடைய சொந்த ஆதாயத்துக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பலவீனப்படுத்த போகிறோமா என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நமது எதிர்கால சந்ததியர் பாதிக்கப் படக்கூடிய சூழலைக் கொண்டு வரப்போகிறோமா என்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இதனை சிந்திக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்கின்றன. இது ஒன்றும் புதிதில்லை. இதற்கு மேலும் இதை சகித்துக் கொள்ள முடியாது என்கிற காலம் வந்து விட்டது. ஆண்களுக்கோ பெண்களுக்கு எதிராக கொடுமைகளை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று ஒட்டுமொத்த சமூகமும் கூறும் காலம் வந்துவிட்டது. நமது பெண்கள், நமது இளைஞர்கள், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், நமது கரங்களான தொழிலாளர்கள், நமக்கு எல்லா மக்களும் - எந்த மதம் மொழி மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் - வலிமை பெற வேண்டும். இவர்கள் அனைவருக்கும் நீதி பெறுவதற்கான உரிமை இருக்கிறது. இவர்கள் நீதியைப் பெறும் போது தான் இவர்கள் வலிமை உடையவர் ஆவார்கள். இந்தக் கடினமான பணி அரசால் அல்லது அதிகாரிகளால் மட்டுமே நிறைவேறக்கூடியது அல்ல. ஒரு குடிமகனாக தனக்கு சம பொறுப்பு உள்ளதை ஒவ்வொரு குடிமகனும் உணரும் போது மட்டுமே இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். எதிர்காலம் மங்கிப் போனால் தன்னை மட்டுமல்ல வரும் தலைமுறைகளையும் அது பாதிக்கும். இந்த உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் பதிய வேண்டும்.

நமது நாடு அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாய் சற்று முன்னர் சொன்னேன். இந்த முறை நமது எல்லையில் நேரடி அச்சுறுத்தல் இல்லாமல் போகலாம். ஆனால் உலகம் முழுதும் போருக்கான சூழல் நிலவுகிறது. இந்தியா எப்போதுமே அமைதியானது. அதனால்தான் அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நமக்கு பெரிய பங்கு இருந்துள்ளது. நமது அண்டை நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறோம். சமீபத்தில் சில நிகழ்வுகள்... எந்த நாட்டு உள்நாட்டு பிரச்சினைகளும் நாம் தலையிட விரும்பவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் கூறுகிறோம். தமது உள்நாட்டு பிரச்சினைகளையை உலக நாடுகள் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பரவலாக வன்முறை கொலைகள் கொள்ளைகள் நடந்தால் நாம் அதைக் கண்டிக்கத்தான் வேண்டும். இதை நாம் எப்போதும் செய்கிறோம்.

நமது அண்டை நாடான இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறோம். இங்கு நிகழ்ந்த சில சம்பவங்கள் அங்குள்ள இந்தியக் குடிமக்களை பாதித்து இருக்கிறது. இயல்பாகவே நாம் வருத்தம் கொள்கிறோம். இதில் தலையிடும் எண்ணம் நமக்கு இல்லை. நமது நட்பை, உறவை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம். யாரும் துன்பமுற வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. நமது மக்கள், நமது சொந்த குடிமக்கள், இங்கிருந்து குடியேறியவர்கள் தாக்கப்பட்டு இருப்பதால் நாம் குறிப்பாகக் கவலைப்படுகிறோம். வன்முறைக்கு ஆளானவர்களுக்காக நமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த எல்லாப் பிரச்சினைகளையும் நாம் அதிகபட்ச பொறுப்புடன் கையாள வேண்டும். அதீத ஆர்வத்தில் ஒரு அடி தவறாக எடுத்து வைத்தாலும் நீண்ட காலத் தீமைக்கு வழி வகுத்து விடலாம். மீண்டும் சமநிலையைக் கொண்டு வருதல் மிகக் கடினம். இறைவனின் அருளால் இந்த எல்லா சர்வதேச பிரச்சனைகளிலும் மிகுந்த பொறுமை காட்டி வருகிறோம்.

எப்போதுமே நாம், பிரச்சினையை முதலில் புரிந்து கொள்ள முயல்கிறோம். அதன் பிறகு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கிறோம். இந்த வழியில் நமது முயற்சிகளில் நாம் வெற்றி கண்டுள்ளோம். நாம் யாருக்கு உதவ விரும்புகிறோமோ அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கிற எதையும் நாம் செய்ய மாட்டோம். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், பல நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் சிலர் அந்த நாட்டு குடிமக்கள் ஆகிவிட்டார்கள். சிலர் இன்னும் இந்தியக் குடிமக்களாகவே வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரின் நலனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் யாருடைய உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட விரும்பவில்லை. மனித நேயம் பாதிக்கப்படும்போது நாம் உரக்கப் பேசியாக வேண்டும்.

நான் முன்னரே சொன்னது போல எந்த ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதம் பற்றியும் எனக்கு அக்கறை இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது வேறு மதத்தினர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்காகவும் நான் அக்கறை கொள்கிறேன். ஏதோ குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல; அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அக்கறை கொள்கிறேன். அவர்கள் எல்லாரும் மனிதர்கள். இன்றைய உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. எல்லா இடங்களிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வேலையின்மை நிலவுகிறது. இங்கே நமது நாட்டின் நிலவும் வேலையின்மை பற்றிக் கூற விரும்புகிறேன். இது ஒரு தீவிரமான பிரச்சினை. இதன் மீது தீவிர கவனம் செலுத்துகிறோம். இப்போதுதான் இரண்டு திட்டங்களை உருவாக்கியுள்ளோம். ஒன்று - கிராமப்புறங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள, வேலை இன்மை பிரச்சினையை சுமையை முழுதுமாக சுமக்கிற - நிலம் இல்லா மக்கள்.

ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்கேனும் வேலை கிடைக்க வேண்டும். விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும். இதற்காக பெரிய அளவில் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் இது மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப் பெரிய வெற்றி கண்டது. எனவே இதனை நாடு முழுவதும் விரிவு படுத்துகிறோம். ஆனாலும் எல்லாரையும் ஒரே சமயத்தில் இதனுள் அடக்கிக் கொண்டு வர முடியாது. தொடக்கத்தில் சுமார் 30 லட்சம் பேரை அடக்கியதாய் இருக்கலாம். இதுதான் வெற்றி பெறும் போது மற்றவர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்.

இதேபோன்று நகரப் பகுதிகளில் படித்த இளைஞர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார்கள். எனவே ஒவ்வோர் ஆண்டும் இரண்டரை லட்சம் படித்த இளைஞர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான வளங்களை வழங்க முயற்சிக்கிறோம். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் பல புதிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப் படுகின்றன.

நமது 20 அம்சத் திட்டத்தைப் பலர் கேலி செய்கின்றனர். ஆனால் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை. சில சரிவுகள் இருக்கலாம். ஆனாலும் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். கிராமங்களுக்குச் சென்றால் இதன் தாக்கத்தை நீங்கள் காண முடியும். கிராமங்கள் எப்படி இருந்தன, அங்கே எவ்வளவு வறுமை நிலவியது என்பதை கேலி செய்வோர் நினைத்துப் பார்ப்பதில்லை. பழைய நிலைமை மறைந்து விட்டது என்பது மிகுந்த மனநிறைவு தருகிறது. நாம் வளர்கிறோம். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்போம்.

நாம் யாரோடும் சண்டையிட விரும்பவில்லை. ஆனால் நாம் தாக்கப்பட்டோம். மறக்க முடியாத அனுபவம் அது. அதனால் நாம் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். நமது படைகளின் துணிச்சல் மிக்க அதிகாரிகள், வீரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூற வேண்டும். மிகுந்த துணிச்சலுடன் வீரத்துடன் இவர்கள் நமது எல்லையைக் காத்து வருகிறார்கள். அமைதிக் காலத்தில், வெள்ளம் மற்றும் பிற இயற்கைப் பேரிடர்களின் போது, இதே அளவு வைராக்கியத்துடன் நமது மக்களுக்கு உதவுகிறார்கள். இவர்கள் நமது பாராட்டுக்கு முழுதும் தொகுதி பெற்றவர்கள்.

நமது தகுதி நிலையை நமது பார்வைகளை நாம் எங்கே எவ்வாறு வசித்தோம் என்பதை மறந்து விடக் கூடும். ஆனால், இந்தியாவை வலிமையாக்கும் நமது லட்சியத்தை, நமக்கான பாதையில் எவ்வாறு வளர்ச்சி நோக்கி செல்வது என்கிற நமது சிந்தனைகளை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் எல்லாரையும் குறிப்பாக பெண்களை இளைஞர்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இவர்களின் கண்களில் புதிய நம்பிக்கை; தோள்களில் புதிய பொறுப்புகள்; இதயங்களில் புதிய துணிச்சல். நம் வயது என்னவாக இருந்தாலும் நமக்குள் புதிய உற்சாகம் நிரம்பி இருக்கிறது. இதில் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன். நீங்களும் நானும் இந்த நாட்டின் சேவகர்கள். நம்முடைய அந்தஸ்தின் அடிப்படையில் பற்றி யோசிக்க, செயல்பட கூடாது. பலவீனமாய் இருக்கிற, ஏதோ காரணங்களால் பிற்படுத்தப்பட்டு இருக்கிற பிரிவினருக்கு சேவை செய்வது குறித்தே எப்போதும் சிந்திக்க வேண்டும். நலிந்த நிலை மக்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து முன்னேறலாம். நாட்டை வலிமையானதாக மகத்தானதாகச் செய்யலாம். நமது நாட்டை பொருளாதார அரசியல் ரீதியாக மட்டுமின்றி அறிவார்ந்து அறநெறிகளின் படியும் வலுப்படுத்த வேண்டும். எந்த வகையிலும் நாட்டின் மாண்பைக் குலைக்கிற எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். சாமான்ய மனிதனின் உற்சாகத்தை உயர்த்திப் பிடிப்போம். அவரை தன்னம்பிக்கை உள்ள தற்சார்பு மனிதராய் செய்து காட்டுவோம். இந்த உறுதி மொழியை ஏற்று அதன்படி நடந்தால் அடுத்த ஆண்டுகளில் நாம் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும். உறுதியான வைராக்கியத்துடன் ஒரு முடிவு எடுத்து செயல்பட்டால் நம்மால் வெற்றி காண முடியும் என்பதை ஒரு முறை அல்ல பலமுறை நாம் (நிரூபித்து) காட்டியுள்ளோம். என் அன்பான சகோதர சகோதரிகளே... இதை மீண்டும் (நிரூபித்து) காண்பிப்போம். மீண்டும் ஒரு முறை வணக்கம், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 36 - “அமைதி எப்போது சாத்தியம்?” | 1982

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்