செங்கோட்டை முழக்கங்கள் 36 - “அமைதி எப்போது சாத்தியம்?” | 1982

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், தொழிற்துறை வளர்ச்சியின் பயன்களில் அனைவருக்கும் சம பங்கு என்று மூன்று அம்சங்களைத் தனது உரையில் வலியுறுத்திக் கூறுகிறார். உற்பத்திப் பெருக்கம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என்று தனது முன்னுரிமைகளைப் பட்டியலிடுகிறார் இந்திரா காந்தி.

1982 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “சகோதர சகோதரிகளே, இந்த மகிழ்ச்சியான தருணத்தில், டெல்லியில், இங்கே என் எதிரே உள்ளவர்கள் மட்டுமல்லாது INSAT மூலம் நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். நம் நாட்டுக்கு வெளியே வசிக்கும் சகோதர சகோதரிகளையும் எனது குரல் சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். வானொலி மூலம் 'இன்சாட்' மூலம் சென்றடைய முடியாதவர்களை இதயங்களின் வழியே அடைய விரும்புகிறேன்.

இன்று நமது 36-ஆவது சுதந்திர தினம். வரலாற்றில் நமது சுதந்திர வேட்கையின் அடையாளமாகத் திகழும் செங்கோட்டையில் நிற்கிறோம். 1985இல் இருந்து, மகாத்மா காந்தி அகிம்சா இயக்கத்தைத் தொடங்கிய காலம் வழியே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு படையை உருவாக்கியது வரை எல்லா இந்தியருக்கும் ஒரே ஆசை தான் - செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் கொடி பறக்க வேண்டும். 36 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு இங்கே முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதற்கு முன்பும் செங்கோட்டையுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு நிறுவப்பட்டு இருந்தது. செங்கோட்டையில் சிறைவைக்கப் பட்டிருந்த துணிச்சல் மிக்க போராட்ட தியாகிகளைக் காக்க, அவர்களுக்காக வாதாட இங்கே வந்தார்.

ஒரு வகையில் இது கண்ணீருக்கான நாள். நமது விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த லட்சக்கணக்கான தியாகிகளுக்காகக் கண்ணீர் விடும் நாள். ஆனால் இந்த பூமி கண்ணீருக்கான பூமி அல்ல. கண்ணீரில் நமது தொலைநோக்குப் பார்வை மங்கிப் போக விடவில்லை. காயங்களால் விடுத்த கண்ணீரில் நாம் மடிந்து விடவில்லை. அந்நிய ஆட்சிக்கு எதிராக, நமது எல்லைகளைப் பாதுகாக்க, இன்று நாம் எதிர்கொள்ளும் வறுமை அநீதி பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு எதிராகவும், பல இன்னல்கள் பல அபாயங்களை வெற்றி கொண்டு வளர்ச்சி காண்கிறோம். வேதனைகளை முறியடித்து வைராக்கியத்துடன் தொடர்ந்து முன்னேறுகிற நீண்ட மரபு இந்தியாவுக்கு இருக்கிறது.

விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர், வேலை வாய்ப்பு இல்லாப் பெண்கள், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள், சுதந்திரக் கனியை ருசிக்கும் உரிமை மறுக்கப் பட்டோர், நவீனத்தின் தொழில்மயமாக்கலின் பயன்களைப் பெறாதோர்... இன்று நமது போராட்டத்தில் நம்முடன் ஒன்றிணைந்து உள்ளனர். இன்னமும் நாம் முழு வெற்றி பெறவில்லை எனில் அதற்கு விருப்பமில்லை, உழைப்பு இல்லை என்பதல்ல; இந்த மகத்தான காரியம் ஒரு நாளில் நிறைவேறுகிற 'மேஜிக்' அல்ல. நாம் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், நமக்கான உயரிய இலக்கை எட்டுவதற்கு, அதற்கே உரித்தான காலம் பிடிக்கத்தான் செய்யும். சுதந்திரப் போராட்டத்தின் போது, அயல்நாடு நம்மை ஆக்கிரமிக்க முயற்சித்த அந்த வேளையில், காண்பித்த அதே உறுதி, ஒற்றுமையை (நிரந்தரமாய்) தக்க வைத்துக் கொண்டால், வறுமைக்கு எதிரான நமது போரில் விரைந்த வளர்ச்சி காண முடியும்.

ஆனால் இந்த மனவுறுதி எல்லா நேரத்திலும் வெளிப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். நாம் அந்நிய ஆட்சியின் கீழ் இருந்தபோது அவர்கள் நமது பலவீனத்தை (அவர்களுடைய நலனுக்கு) பயன்படுத்திக் கொண்டார்கள். மதம் உள்ளிட்ட காரணிகளால் பிரிவை உருவாக்கி, ஒற்றுமையின்மையை விதைத்து, காந்திஜி தலைமையில் அமைதியாய் நடந்த சுதந்திரப் போராட்டத்தை பலவீனமாக்க முயன்றார்கள். இதற்கு நாம் பலியாகவில்லை. எப்போதேனும் சிறு சிறு சண்டைகள் இருக்கலாம்; பொதுவாக நாம் தேர்ந்தெடுத்த பாதையில் முன்னேறினோம்.

நமது பயணத்தில் பல சாலைகள், பாதைகளைக் கடந்து வந்தோம். சில அகன்று இருந்தன; சில குறுகலாக இருந்தன. இவைகளில் நாம் செல்ல வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுத்தோம். வறுமையில் உழன்ற, ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடான நமக்கு ஒரே ஒரு பாதை தான் தெரிந்தது: ஒற்றுமைப் பாதை. அடக்குமுறைக்கு அஞ்சாத, துன்பத்தில் மடியாத சமூகத்தை உருவாக்க முயன்றோம்.

சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த, முன்னர் நாம் சந்தித்த அவமானங்களை, கோரமான வறுமையை அறிந்திடாத ஏராளமானமானோர் என் முன்னால் அமர்ந்து இருக்கிறீர்கள். இன்றும் நாட்டில் வறுமை இருக்கிறது. இதனோடு கூடவே இன்று நடுத்தர வர்க்கமும் எண்ணிக்கையில் பெருகி வருகிறது. வேலையின்மை இருக்கிறது; ஆனால் மேலான வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. நாம் மென்மேலும் வளர வளர இது போன்ற வாய்ப்புகளும் நன்கு கூடும்.

முன்னர் நாம் யாசகம் கேட்டு கைகளை நீட்டினோம். ஆனால் இன்று நம் நாட்டில் உணவை நாமே தயாரித்துக் கொள்கிறோம். இது போதாது. மக்கள் தொகை பெருகுவதால், நமக்கு இன்னும் அதிக விளைச்சல், அதிக உணவுப் பொருள், அதிக கல்வி, அதிக சுகாதார வசதிகள் தேவை. இதற்கு முன்னால் நாம் கற்பனையிலும் எண்ணியிராத பல பொருட்கள் இன்று முக்கிய தேவையாகி விட்டன. நம்மிடம் உள்ளவற்றை இயன்றவரை எல்லாருக்கும் பகிர்ந்து வழங்க முயல்கிறோம். (கிடைக்காமல்) யாரும் துன்பமுறக் கூடாது. சிலருக்குக் குறைவாகக் கிடைக்கலாம். ஆனால் யாருக்கும் அநீதி நேரக் கூடாது.

இன்று நமது எதிரிகள் யார்? வெளியே எதிரிகள் இருக்கலாம். எதிர்காலத்திலும் இருக்கக் கூடும். நமது பழைய எதிரி இருக்கிறார் - வறுமை. பல நாடுகளைப் போல நாமும் வறுமை, பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப் பட்டுள்ளோம். நம்மை பலவீனப்படுத்தியது எது? எதனால் நாம் சுதந்திரம் இழந்தோம்? அது இன்னமும் இருக்கிறது; நாட்டை பலவீனப் படுத்துகிறது.

மதம் மொழி மண்டலவாதம் சாதியம் என்கிற பெயரில் பிரிவினைவாதப் போக்குகள் நிலவுகின்றன. சகோதர சகோதரிகளே, ஒற்றுமை கடின உழைப்பு இல்லாமல் எந்த நாடு வளர்ச்சி பெற முடிந்தது? நமது பாதுகாப்புப் படைகள் வலுவாக இருக்க வேண்டும். ஏன்? பிறர் மீது தாக்குதல் நடத்த அல்ல; நமது எல்லைகளைக் காக்க; நமது நாட்டைப் பாதுகாப்பாக வைக்க. தொழில்துறை வளம் பெற வேண்டும்; நமது வேளாண் உற்பத்தி பெருக வேண்டும்; வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்க வேண்டும். நமக்கு வசதிகளைத் தரும், நமது மகிழ்ச்சியைப் பெருக்கும், வாழ்க்கைத் தரத்த உயர்த்தும் பொருட்களின் தயாரிப்பு அதிகமாக வேண்டும்.

நாம் அமைதியை விரும்பும் நாடு. நமது நாட்டில் மட்டுமல்ல; உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். இது எப்போது சாத்தியம் ஆகும்? பொய் பிரசாரங்களும் அநீதிகளும் தடுக்கப்படும் போது. இன்று, அநீதி அடக்குமுறை நிலவுகிற சூழலில் இவற்றை எவ்வாறு முறியடிப்பது? இந்த சக்திகளுக்கு எதிராக ஒரு பலவீனமான அரசால் நடவடிக்கை எடுக்க முடியுமா? எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகிற அரசு ஏழைகளை, சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக வைத்திருக்க இயலுமா? ஒரு பலவீனமான அரசால், உலக அரங்கில் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் நாட்டைக் கட்டமைக்க முடியுமா? வலுவான அரசு; வலுவான தேசம் - இதற்கான நேரம் இன்று வந்துள்ளது. இதற்கான தேவை இன்று அதிகம் உணரப்படுகிறது. ஏனெனில் உலகம் முழுதிலும் அபாயங்கள் அதிகரித்துள்ளன.

ஏழைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் எதிர்கொண்டு முறியடிக்க நினைக்கும் அபாயங்களும் இன்னல்களும் உலகமெங்கும் உள்ளன. செல்வம் பொருந்திய வலிமையான நாடுகளும் வேலையின்மை மற்றும் பணவீக்கப் பிரசினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளன. இந்த நாடுகளிலும் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இல்லை. பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நானோ எனது அமைச்சரவை சகாக்களோ செல்லாத நாடுகளில் இருந்து நமக்கு அறிக்கைகள் வருகின்றன.

இன்று எல்லா நாடுகளுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கிறது. எல்லா நாடுகளுக்கும் இருக்கிற மிகப் பெரும் கவலை - தனது அறிவு மற்றும் திறமைகளின் எல்லைகளை விரிவு படுத்திய மனித சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? நமது அழகான பூமியை நஇகழ்ச்சிக்கும் தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறோமா? இந்தக் கேள்வியைத்தான் இன்று மேன்மேலும் அதிக மக்கள் எதிர்கொள்கிறார்கள். உலகத் தலைநகரங்களில், முக்கிய நகரங்களில் இதுகுறித்து இயக்கங்கள் நடைபெறுகின்றன. மக்கள் இதுகுறித்து சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

மூன்று பெரிய அபாயங்கள் இருக்கின்றன. ஒன்று - எல்லா நிலம் கட்டிடம் நகரங்களையும் அழிக்க வல்ல தளவாடங்களை, ஆயுதங்களைக் குவித்தல்; இரண்டாவது - செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் உள்ள இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருதல். இந்த இடைவெளி நமது நாட்டில் உள்ளது, பிற நாடுகளிலும் உள்ளது. இந்த உண்மையை நாம் மறைக்க வேண்டியது இல்லை. நாமாவது சோசலிச சமுதாய முறையை உருவாக்க முயற்சிக்கிறோம். இதற்குப் பொருள் - பணக்காரர் - ஏழை இடைவெளி குறைய வேண்டும்; சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டும்; சுதந்திரத்தின் பயன் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு தனிநபரையும் சென்று சேர வேண்டும். மூன்றாவது அபாயம் - பேராசை காரணமாகத் தொடர்ந்து இயற்கை வளத்தைச் சுரண்டுகிறோம். நிலக்கரி சுரங்கம், எண்ணெய் தோண்டி எடுத்தல் ஆகியன வரும் தலைமுறைகளுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிந்திப்பதே இல்லை.

நாம் இந்தியர் என்பதில் பெருமைப்படுகிறோம். இது அழகான நாடு, பிற நாடுகளை விட வசதியான நாடு என்பதற்காக அல்ல. இதன் பெருமை எதில் அடங்கியிருக்கிறது? காலம் காலமாக நூற்றாண்டுகளாக செழித்து நிற்கும் அதன் உள்ளார்ந்த பண்பு என்ன? நமது ஏழை மக்களை திறமையுடன் வலிமையுடன் வைத்திருப்பது எது? உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட நமது தொன்மையான மரபு. நாம் தவறு இழைத்திருக்கலாம். ஆனாலும், எப்போதுமே உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். இந்திய ஒற்றுமை பற்றி மட்டுமே நாம் சிந்திப்பதில்லை; எல்லாவற்றையும் மனித குலம் முழுமைக்குமான கோணத்திலேயே பார்க்கிறோம்.

அமைதி, சகிப்புத்தன்மை நிறைந்த மரபு இந்தியாவுக்கு இருக்கிறது. சக மனிதர்கள் மீது மட்டுமல்ல; விலங்குகள், தாவரங்களின் மீதும் சகிப்புத்தன்மை கொண்ட நாடு இது. புத்தரின் போதனைகள்... சீக்கிய குருமார்களின் அறிவுரைகள்... இதுவே நமது மரபு. பேரரசர் அசோகர் நாடெங்கும் அமைதியை போதித்தார். பல்வேறு சமய மக்களை அக்பர் ஒன்றிணைத்து மக்கள் பயன்படுத்தச் செய்தார். இவையெல்லாம் தான் நமது நாட்டுக்கு உள்ளார்ந்த வலிமை சேர்க்கிறது.

நமது சுதந்திர தினம், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளுடன் சேர்ந்து வருகிறது. வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஒரு புரட்சியாளர், வன்முறைப் பாதையை விட்டு விலகி ஆன்மீகப் பாதைக்குத் திரும்பி, தேசத்தின் மீது பற்று வைத்து அதன் உள்ளார்ந்த வலிமை மற்றும் எழுச்சியை அதிகரிக்கும் வழியைக் கண்டதாய் வேறு ஒரு உதாரணத்தை உலகில் வேறு எந்த நாட்டிலாவது காட்ட முடியுமா? இதேபோன்று காந்திஜி, எல்லா சமயங்களின் நல்ல கருத்துகளையும் ஒன்றிணைத்து நட்பான சகோதரத்துவம் கொண்ட அமைதி என்னும் ஆயுதம் மூலம் குண்டுகள் இன்றி ஆயுதம் இன்றி சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொண்டார்.

ஒற்றுமை, தேசப்பற்று, மனவுறுதி அர்ப்பணிப்பு உணர்வு - இவையே நமது ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை நாம் இழந்து விட்டோமா? அன்றைய தேசபக்தி இன்று இல்லாமல் போய்விட்டதா? இனியும் தியாகம் செய்ய நாம் தயாராக இல்லையா? இங்கே என் எதிரே ஏராளமான குழந்தைகள் இளைஞர்கள், எனது உரையைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அனைவரும் வாருங்கள் இந்த நாட்டை வலிமையாக்க ஒன்றாய்க் கரம் சேருங்கள். இன்று மண்டலவாதம் அதிகரித்து வருகிறது. மதம், சாதி, மொழி ஆகியவற்றை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறவர்கள் தங்கள் இதயத்தில் தேசிய நலனை வைத்திருக்கவில்லை. வன்முறை மூலம் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் என்று கற்பனையில் உள்ளவர்கள் இவர்கள். இவர்களது பெயர் செய்தித்தாள்களில் வருகிறது.

சிறிது கலகத்தை உண்டாக்குகிறது. நமது பெயர் பத்திரிகையில் வர வேண்டுமா அல்லது தேசத்தை வலிமையாக்க அதன் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டுமா என்கிற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். உங்களது பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. விடுதலைப் போரில் பங்கு பெற்ற மூத்தவர்கள், அயல்நாட்டு ஆக்கிரமிப்பின் போது போரிட்டவர்கள் மற்றும் நமது குழந்தைகள், முன்னர் இருந்த ஒற்றுமை உணர்ச்சி மற்றும் வலிமைக்கு சாட்சியங்களாய் இருப்பார்கள்.

இன்று நாம், இந்தியாவின் தொன்மையான விழுமியங்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும். நாம் எல்லோரும் இந்திய மக்கள். நம்முடைய எந்த சிந்தனையும் சொல்லும் செயலும் இந்தியாவைத் தலைகுனியும் படி செய்யக் கூடாது. நமக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது - நம்மை நோக்கி மட்டுமல்ல இனிவரும் தலைமுறை நோக்கியும் கூட. இந்தியா ஒன்றும் 10 அல்லது 100 ஆண்டுக் கால தேசம் அல்ல. இதன் சரித்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்கிறது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இது நிலைத்து நிற்கும். அதனால்தான் நான் தியாகம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தால், அது மேலும் சிறப்பான எதிர்காலத்துக்கான அழைப்பாகும்.

நாம் எந்த வழியையும் பின்பற்றலாம். நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம்; இந்தியாவுக்கான வீரர்கள் என்று வருகிற போது அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம். நாம் சீருடை அணியவில்லை. யார் சீருடை அணிந்து உள்ளார்களோ அவர்களை நாம் மதிக்கிறோம். அவர்களைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் இந்தியாவை வளமையாக்குவதில் வளர்ச்சிக்கான போராட்டத்தில் நாம் வீரர்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்லர். இந்தக் கருத்துடன், மீண்டும் ஒருமுறை, அனைவரும் ஒன்றாய் வலிமையாய் புன்னகையுடன் மகிழ்ச்சியாய் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள அழைக்கிறேன்.

நமது நாடு அழகாய் இருக்க விரும்புகிறோம். தெருக்களில் வீடுகளில் நமது இதயங்களில் எங்கே அழுக்கு படிந்து இருந்தாலும் அதை அகற்றி விடுவோம். ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறுகளுக்குப் பிறரைக் குற்றம் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இதற்கு ஒரே தீர்வு - நாம் செய்வது முறையாக இருக்கிறதா? தவறு செய்பவர்களை நம்மால் தடுக்க முடிகிறதா? என்று கேட்டுக் கொள்வதுதான்.

மிகச் சாமானிய குடிமக்களும் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் பிரசினைகளைப் பற்றி சிந்தித்து பொறுப்புகளை உணர்ந்து அதற்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டால், மொத்த சமூகமும் மாறிடாதா? மொத்த தேசமும் மாறிடாதா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தமது இதயத்தில் எழுப்பி விடை காண வேண்டும். இந்த நல்ல நாளில் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். ஒவ்வொரு துன்பத்தையும் ஒவ்வொரு அபாயத்தையும் ஒவ்வொரு தடையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க அழைக்கிறேன். (உலக) நாடுகளுக்கு இடையே தலை நிமிர்ந்து நிற்கும் ஒன்றுபட்ட இந்தியாவை நம்மால் கொண்டுவர முடியும். ஜெய்ஹிந்த்!”

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 35 - ‘மக்களாட்சியில் மக்களின் கடமை!’ | 1981

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்