செங்கோட்டை முழக்கங்கள் 35 - ‘மக்களாட்சியில் மக்களின் கடமை!’ | 1981

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய பிரதமர் இந்திரா காந்தி, வன்முறைக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்தார். ஆனால், வன்முறைக்கு அவரே பலியாக நேர்ந்தது ஒரு வரலாற்றுச் சோகம். 'நமது சரித்திரம், பண்பாட்டில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது சமுதாயத்துக்கு ஒரு புதிய திசையைக் காட்ட வேண்டும்' என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

1981 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரை: சுதந்திர இந்தியாவின் மற்றும் ஒரு பிறந்த நாள் இன்று. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வோர் ஆண்டும் தேசியக்கொடி ஏற்றி வைக்க இங்கே வருகிறோம். இது ஒரு சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. இது நமது கடமை. மதங்கள், சாதிகள், மொழிகள், மாநிலங்கள், ஏழைகள், செல்வந்தர்கள், ஆண், பெண் முதியோர் இளைஞர்கள்.... எல்லோரும் ஒன்றுபட்டு இருந்த நாட்களை நினைவு கூரும் நாள். அப்போது நமது முழக்கம் என்ன? 'தலையே போனாலும் விடுதலை பெற்றே தீருவோம்'! நமது வறுமையிலிருந்து இன்னல்களில் இருந்து வெளிவந்து இந்த முழக்கத்தை எழுப்பினோம். அவமானங்களுக்கும் இகழ்ச்சிகளுக்கும் கவலைப்படவில்லை. நம்முடைய அறம் சார்ந்த பொருள் சார்ந்த உடல் சார்ந்த வளங்களை எல்லாம் போராட்டத்தில் கொடுத்தோம். எத்தனை குடும்பங்கள் நிலை குலைந்து போயின? எத்தனை பேர் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள்? இருப்பதற்கு இடம் இல்லாது எத்தனை சிறைகள் நிரம்பி வழிந்தன? இதே செங்கோட்டையில் சிறையில் இருந்து மரணத்தை எதிர் கொண்டவர்கள் எத்தனை பேர்? இது போன்ற துணிச்சலான மக்கள் இல்லாத ஒரு கிராமமும் இந்தியாவில் இல்லை.

இதையெல்லாம் இன்று நாம் நினைவு கூர்கிறோம். அஹிம்சை வழியிலோ, பிற வழிகளிலோ சுதந்திரம் வேண்டிப் போராடிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இன்று இளைய சமுதாயத்துக்கு நாம் சுதந்திரப் போராட்டம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த விதையில் இருந்துதான் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னமும் வறண்ட நிலையில் இருந்து நாம் மீளவில்லை. நமது கடின உழைப்பில் சிந்தும் வியர்வை நீரைப் பாசனம் ஆக்க வேண்டும். மிகுந்த அக்கறையுடன் மரங்களை வளர்த்து நாட்டைப் பசுமையாக்க வேண்டும்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் இங்கிருந்து பேசினேன். கடந்த ஆண்டுகள் போலவே இந்த ஆண்டிலும் நிறைய இன்னல்களை அனுபவித்தீர்கள். உங்கள் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். ஒரு பிரதமராக மட்டுமே அல்ல ; ஒரு பெண்ணாக, ஒரு தாயாக இந்தப் பிரச்சினைகளை நான் பார்க்கிறேன். முன்பும் பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும் பல வெற்றிகளை சாதனைகளை செய்துள்ளோம். நேற்று தொடங்கப்பட்ட- APPLE - அத்தகைய ஒரு சாதனை. முதல்முறையாக இந்த APPLE செயற்கைக்கோள் மூலம் இன்றைய கொண்டாட்டங்களை நாட்டின் பல பாகங்களில் உள்ள பல லட்சம் பேரும் பங்கு கொள்ள முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலனி ஆதிக்கத்தில் இருந்த ஒரு நாட்டுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதற்காக நமது விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறோம். இந்த சாதனையில் மகிழ்ச்சி அடைகிறோம். பெருமிதம் கொள்கிறோம். (இந்த அளவு சாதனை புரிகிறோமே..) பிறகு ஏன் நம்மால் சில சிறு செயல்களை செய்ய முடியாமல் போகிறது? பதில் இல்லாத கேள்வி இது.

விலைகள் இன்னமும் உயரத்தில்தான் இருக்கிறது. இது மக்களுக்கு குறிப்பாக குடும்பத்தை நிர்வகிக்கும் என் சகோதரிகளுக்கு எந்த அளவுக்கு இன்னல் விளைவிக்கும் என்பதை நான் அறிவேன். விலைவாசி குறைந்து வருகிறது. விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது. விலைவாசி உயர்வுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று - உற்பத்தி குறைவு. இதனை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். மற்றொரு காரணம் - சூழலை தனக்கு ஆதாயம் ஆக்கிக் கொள்ளும் சுயநல மனிதர்கள். தனது நலனுக்காக நாட்டு நலனை மறந்து விட்டார்கள். பதுக்கல் கள்ளச்சந்தை கொள்ளை லாபம்.. இன்றும் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு ஆதரவு கிடைத்தது. இவர்கள் இன்னமும் முழுதாக நமது விலைக்குள் வரவில்லை. சில இடங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முழுமை அடையவில்லை. இவர்கள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இவர்கள் மீது சிறிய அளவில் நடவடிக்கை எடுத்தாலும் வழியில் பல தடைகள் வருகின்றன. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக விரோத சக்திகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சில பற்றாக்குறைகள் இயற்கையினால் ஏற்பட்டவை. சில, நமது தவறுகளால் விளைந்தவை. எதுவாக இருந்தாலும் உற்பத்தியைப் பெருக்கவே நாம் முயன்று வருகிறோம். உண்மையில் விவசாய உற்பத்தி பெருகி இருக்கிறது. நீங்கள் அறிவீர்கள் - இந்த ஆண்டு வேளாண்மை மிக நன்றாக இருக்கிறது. நீங்கள் கேட்கலாம் - கோதுமை உற்பத்தி நன்றாக இருக்கிறது என்றால் நாம் ஏன் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டும்? ஏனென்றால் நமது நாட்டில் சிலர் வாங்கி, பதுக்கி வைத்து, பிறகு அதிக விலைக்கு விற்கிறார்கள். இது பலருக்கும் குறிப்பாக எங்கோ தொலைவில் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த இன்னலை ஏற்படுத்தும். இதனால்தான், இப்போது உடனடியாகத் தேவையில்லை என்றாலும், வெளிநாடுகளில் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கிறது என்பதால், எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதால், மக்களை இன்னலில் இருந்து காப்பாற்றும் பொருட்டு இந்த முடிவை எடுத்தோம்.

தொழில் உற்பத்தியும் பெருகி உள்ளது. கல்வி சுகாதாரம் உள்ளிட்ட சமூக சேவைகளின் கட்டுமானத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறோம். இது போதாது. மக்களை இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை. ஏன்? நமது சேவைகள் விரிவடைகிற அதே சமயம் நமது மக்கள் தொகையும் விரைந்த விகிதத்தில் பெருகி வருகிறது. எத்தனை புதிய பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனைகள் மருந்தகங்கள் திறந்தாலும், இதற்கான தேவை உள்ள மனிதர்களின் எண்ணிக்கை மிகுந்தே உள்ளது.

பணவீக்கம் மக்கள் தொகை அல்லது வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்களுடைய முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எந்தப் பணியும் நிறைவு பெறாது. அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் அந்தப் பொறுப்பை கொடுத்து உள்ளீர்கள். ஒரு ஜனநாயகத்தில் குடிமக்களுக்கும் அதே அளவு பொறுப்பு இருக்கிறது. மக்கள் செலவாளியாக இருந்து, வேண்டுமோ வேண்டாமோ விலை என்னவாக இருந்தாலும், எல்லாவற்றையும் வாங்குவது என்று மக்கள் இருந்தால், (பொருளாதார) சூழல் கெட்டுப் போகிறது. இந்த கடினமான சூழ்நிலையில், சமூக நலனுக்கு எதிராக எந்தச் செயல் செய்தாலும் அது தேச நலனுக்கு எதிரானது.

இந்த சக்திகளை எவ்வாறு தடுப்பது? சட்டங்கள், விதிமுறைகள் இயற்றலாம். ஆனால் இவற்றை அரசாங்கம் மட்டுமே முழுதாகக அமல்படுத்த முடியாது. பல நிலைகளில் மக்களின் பங்களிப்பால் மட்டுமே இது நிறைவேறும். எங்கேயும் சிறிய கவனக் குறைவு இருந்தாலும் மொத்த திட்டமும் வீணாகி விடும். உங்களது ஒத்துழைப்பு வேண்டும். குறைந்தபட்சம் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் இருங்கள். தவறு செய்யும் நபர்கள் வளமுடன் வாழ்கிற சூழலை ஏற்படுத்தாதீர்கள். இவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இவர்கள் அவமானப்பட வேண்டும். இத்தகைய சூழலை நீங்கள் உருவாக்கி விட்டால், வெகு விரைவில் நிலைமை சீராகிவிடும்.

வெளியில் இருந்து கோதுமை வாங்குகிறோம். இதுபோன்று நாம் எதைச் செய்தாலும் இதற்கு எதிராகச் சிலர் குரல் எழுப்புகிறார்கள். இவர்கள் யார்? இவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? குரல் எழுப்பும்படி இவர்கள் பிறரால் தூண்டப்படுகிறார்கள். இவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள் யாவை? இவர்கள், சந்தையில் உணவுப் பொருட்களின் விலை கூட வேண்டும் என்று விரும்புகிறார்கள். விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதற்காக இவர்கள் இதை செய்யவில்லை. இந்தப்பணியில் நாம்தான் ஈடுபட்டுள்ளோம்.

மேலும் சில பணிகள் - நீதிமன்றங்களில் முடங்கியுள்ளன; அல்லது வழியில், வேறு தடைகள் உள்ளன. இவை தீர்க்கப்படாமல் தாமதத்திற்கு வழி கோலுகின்றன. ஒவ்வொரு தனி நபரும் தனக்கான கடமையை உணர்ந்து கொள்கிற புதிய சூழலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிச் சொன்னேன். இந்த சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கச் செய்வதில், நீங்கள் அனைவருமே வீரர்கள்தான். நீங்கள் எல்லாரும் தியாகம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் இதில் ஈடுபட வேண்டும். இது ஏதோ.. அரசாங்கத்தின், அரசியல் கட்சியின், அல்லது யாரோ ஒருவருக்கு மட்டுமேயான வேலை அல்ல. இது இந்த நாட்டின் பணி; இந்தியாவின் சாமான்யக் குடிமகனின் பணி; ஏழைகளின் பிற்படுத்தப்பட்ட மக்களின், நடுத்தர வர்க்கத்தின்.. ஏன்.. எல்லா மக்களின் வேலையும் ஆகும். இன்றைய சூழ்நிலையில் சிலர் (பெருத்த) லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் இந்த நாடு வலுப்பெறாறாவிட்டால் இந்த லாபத்தை அவர்கள் நீண்ட காலம் அனுபவிக்க முடியாது. நீண்ட காலம் அவர்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. இதையெல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் கூட வன்முறை குற்றங்கள் சட்டத்தை மதிக்காத ஒழுங்கீனம்.. எங்கும் நிறைந்துள்ளன. நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். பல நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். இந்த நிலைமை எங்கும் இருக்கிறது. நமது நிலைமையை ஓரளவு பாதித்தாலும், பிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதில் நமக்கு (அதிக) கவலை இல்லை. நம்முடைய போக்கு மேம்பட வேண்டும். நமது மனிதநேயம் பரவ வேண்டும்; நமது அடிப்படை விழுமியங்களைக் கொண்டு வர வேண்டும். இதுதான் எல்லா மதங்களின் அடிப்படை. இந்தியாவில் மட்டுமல்ல மனிதகுலம் முழுதுமே தவறான திசைக்குத் திரும்பி தவறான பாதையில் செல்கிறது. இத்தனை ஞானம், சாமர்த்தியம், திறமை இருந்தும், நல்ல நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படாமல், இந்த வலிமை வேறு எங்கோ பயன்படுத்தப் படுகிறது.

வல்லரசுகள் தங்களது வளங்களை வளர்ச்சிப் பணிகளில், ஏழைகளுக்கு உதவுவதில் செலவிடவில்லை. மாறாக, மென்மேலும் நவீன பெரிய ஆயுதங்களில் செலவிடுகின்றன. எதற்காக? மனிதர்களை அழிக்க.. வீடுகளை பண்ணைகளை நிலங்களை தேசங்களை சிதைக்க! நன்கு தெரிந்தே மனித இனம் இதனைச் செய்கிறது. இதுதான் இந்தியாவின் பாதையா? ஒவ்வோர் இந்தியரும் இதனை ஆழமாக சிந்தித்து தனது பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறருக்கு (அறிவுரை) சொல்வதற்கு முன்பாக நமது வீட்டை நாம் ஒழுங்காய் வைத்திருக்க வேண்டும். நமது நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் ஒருவரோடு ஒருவர் இணக்கமாய் வாழ்ந்தார்கள். சில சமயங்களில் சிறுசண்டைகள் எழலாம். ஆனால் மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் ஏன் அற்ப சண்டைகள் எழ வேண்டும்? இவை நமது வளர்ச்சிக்கு பொருளாதர முன்னேற்றத்துக்குத் தடையாய் உள்ளன. இவற்றை நமது பாதையில் இருந்து அகற்ற வேண்டும். இதற்கான காரணம் என்னவென்று பார்த்து வேரோடு களைய வேண்டும். நமது வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு தடை ஏதும் வராத சூழலை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டும் ஒவ்வோர் ஆண்டும் நான் விடுக்கும் சுதந்திர தின செய்தி இதுதான்.

வளர்ச்சி நாம் ஒரு நிலையை எட்டி உள்ளோம். நமது பயணம் மிக நீண்டது. நம்மைச் சுற்றிலும் ஆயுதக் குவியல் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த மண்டலத்துக்கே ஆபத்தை அதிகரிக்கிறது. அபாய காலங்களில் எல்லாருக்குமே துன்பம் விளைகிறது. அதிலும் ஏழைகளுக்கு, பொருட்களின் பற்றாக்குறை தொடங்கி எல்லாச் சுமைகளும் கூடும். எல்லா நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியராகிய நாம் மேலும் கூடுதல் விழிப்பு, எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

நமது சமூகத்துக்கு நாம் புதிய திசையைக் காண்பிக்க வேண்டும். நமது வரலாறு, பழமையிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளோ மற்ற தீமைகளோ இருந்தால் அவற்றை நீக்க தயக்கம் காட்டக்கூடாது. நமது வலிமையைக் கூட்ட வேண்டும். நாடாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் இன்னல்கள் இருக்கின்றன. ஒரு தாயாக நான் எவ்வளவு இன்னல்களை சந்தித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இதைவிட மிகப்பெரியது- என் குழந்தைகளான உங்களை நோக்கிய எனது கடமை. இதனால்தான் உங்களையும் என்னையும் யாராலும் பிரித்து வைக்க முடியவில்லை. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள் உதவினாலும் இல்லையென்றாலும் நமது குழந்தைகள் வளர்கின்றனர். நமது மக்களின் கோரிக்கைகள் பெருகுகின்றன. சிலருக்கு சில வசதிகள் கிடைக்கும் என்றால் அது மற்றவர்களுக்கு, ஏழைகளுக்கும் பின்தங்கிய நிலையில் உள்ளவருக்கும் ஏன் கிடைக்கக் கூடாது?

இந்த தருணத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையை வலிமையை பெருக்க வேண்டும். எப்போதும் நமது அண்டை நாடுகளோடும் மற்றவர்களோடும் நட்பு உறவை வளர்க்க நாம் முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மை தாக்குகிற போது துணிச்சலுடன் எதிர்கொள்கிறோம். நமது வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நமது பாராட்டுகள், நன்றிகள். அவர்கள் நமது எல்லையை பாதுகாப்பாக வைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். போர் கூடாது என்பதற்கே முயற்சிக்கிறோம். அண்டை நாடுகளோடும் தொலைநாடுகளோடும் நட்புறவை வேண்டுகிறோம். இதை நமது பலவீனமாக யாரும் கருதக்கூடாது. இதை ஒரு பலவீனமாக அல்ல; நமது கொள்கையாகக் கொண்டுள்ளோம்.

நமது நாட்டில் உள்ள எல்லா மண்டலங்களும், மலைப்பகுதிகள், பாலைவனப் பகுதிகள் வனப்பகுதிகள்... அனைத்து முன்னேற வேண்டும் என்பதே நமது கொள்கை. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர்... இன்று எல்லாருக்காகவும் ஐந்தாண்டு திட்டங்கள் வைத்திருக்கிறோம். லட்சக்கணக்கான மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் திறக்கும். இவற்றை நமது இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். சுய வேலை வாய்ப்புக்கும் புதிய பாதைகளை கண்டறிவார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகள், தொழிலாளர்கள் நலம் பெறும் திட்டங்களை முன்னெடுக்க தொடர்ந்து முயன்று வருகிறோம்.

சமீபத்தில் அத்தியாவசிய சேவைகளில் வேலை நிறுத்தம் செய்யத் தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து தவறான புரிதல் இருக்கிறது. இது தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் அல்ல என்று உறுதி கூறுகிறேன். அது நமது நோக்கம் அல்ல. எந்த வகையிலும் அவர்களுக்கு இன்னல் ஏற்படுத்த அல்லது அவர்களை ஒடுக்க எப்போதும் எதையும் செய்ய மாட்டோம். நாட்டு நலனுக்கு, பொதுச் சேவைகள் தடையின்றி இயங்க வேண்டியது அவசியம். நாட்டின் பாதுகாப்புக்கு நாட்டின் வலிமைக்கு, சாமானியனுக்கு இந்த சேவைகள் தேவை. தொழிலாளர்கள் எப்போதுமே பொறுப்புடன் செயல்பட்டு இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நமது அறிவு ஜீவிகள், மற்ற பிரிவினரும் பொறுப்புடன் பணிபுரிகின்றனர்.

இன்று ஒரு சிறந்த தினம் இன்று 'ரக்க்ஷா பந்தன்'. (சகோதரர்களுக்காக சகோதரிகள் கொண்டாடும் விழா) இது, சமயத் திருவிழா அல்ல. இது, நட்புறவு, நல்லிணக்கத்துக்கான சமூகத் திருவிழா. மக்கள் ஒருவருக்கொருவர் நட்புக்கரம் நீட்டுகிற நாள் இது. எதற்காக..? ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக. இந்த நாளில், அமைதியைப் பராமரிக்க மனித குலத்தைப் பாதுகாக்க எல்லா நாடுகளின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். சகோதர சகோதரி உறவுகள் மட்டுமின்றி, இந்தியத் தாய்நாட்டைப் பாதுகாப்பது, இந்த நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது, இந்த தேசத்தில் பாதுகாவலனாக ஒவ்வொரு குடிமகனும் செயல்படுவதற்காகவும் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்.

ஒரு முழக்கம் பற்றி முன்னர் சொன்னேன். இப்போது நிறைவாக, கொடியைப் பற்றி கூறுகிறேன். இது ஒரு துண்டுத் துணி அல்ல. சுதந்திரப் போராட்டத் தியாகங்களின், எல்லையில் நமது வீரர்கள் செய்த தியாகங்களின், இந்தியாவின் கடுமையாக உழைப்பவர்களின், நம்பிக்கை தரும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக அடையாளம். நமது கொடியும் நமது தேசிய கீதமும் சாதாரணமானவை அல்ல. நம்மை ஒற்றுமைப்படுத்தி, நம்மைப் பிணைத்து வைக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் - நம் உயிரைக் கொடுத்தேனும் நம் தேசியக் கொடியின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 34 - “ஒன்றுபடுவோம், நாளை சிறப்பாய் அமையும்” | 1980

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்