செங்கோட்டை முழக்கங்கள் 31 - ‘அச்சம் விலகட்டும்... தீண்டாமை ஒழியட்டும்’ | 1977

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1977 - சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான ஆண்டு. தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டு முதன் முதலாக ஒரு காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது.

அப்பழுக்கற்ற காந்தியவாதி மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராக பொறுப்பு ஏற்றார். தனி வாழ்விலும் பொது வாழ்விலும் கலப்படமற்ற காந்தியம் கடைப்பிடிக்கப்படுவதில் உறுதியாக இருந்த நேர்மையாளர். காந்திய வழியில், தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டினார். இதற்கு அடுத்த ஆண்டு சுதந்திர தின உரையிலும் தீண்டாமை எதிர்ப்புக் குரல் வெளிப்பட்டது. அநேகமாக வேறு எந்தப் பிரதமரும் சுதந்திர தின உரையில் தீண்டாமை ஒழிப்புக்கு இந்த அளவு முக்கியத்துவம் தந்ததாய் தெரியவில்லை.

1977 ஆகஸ்ட் 15 - டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆற்றிய உரை இதோ: “30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறினர்; இந்தியா சுதந்திர நாடு ஆனது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் ஜவஹர்லால் ஜி, நமது தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதே நாளில் காந்திஜி, கல்கத்தாவில் அமைதி திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தார்.

இந்த 30 ஆண்டுகளில் நாம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டோம்; பல நெருக்கடிகளைக் கடந்தோம்; பொதுவான இன்பங்களை, துயரங்களைப் பகிர்ந்து கொண்டோம். பல துறைகளில், குறிப்பாக தொழிற்துறையில் (ஓரளவு) வளர்ச்சி கண்டோம். கல்வித்துறையில் நல்ல முன்னேற்றம் கண்டோம். விவசாயத்திலும் நன்கு சாதித்து உள்ளோம். ஆனால் இந்த 30 ஆண்டுகளில் நாம் மூன்று தாக்குதல்களை எதிர்கொண்டோம். மூன்றுக்குப் பிறகும் இன்னும் வலிமையாக எழுந்து தேசத்தின் பெருமையைத் தக்க வைத்தோம். வளர்ச்சி பெற்றோம். ஆனால் வளர்ச்சியின் பயன்கள் எல்லாரையும் சென்று சேரவில்லை.

நமது ஜனத்தொகையில் 60 - 70 சதவீதம் பேர், மிகக் குறைந்த அளவிலேயே பயன்பெற்றனர். நான் யாரிடமும் குற்றம் காண விரும்பவில்லை. நம் எல்லார் மீதும் குற்றம் இருக்கிறது. இதுவரை என்ன நடந்ததோ அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சிந்தித்து அந்த தவறுகள் மீண்டும் நிகழா வண்ணம் செய்தால் ஒழிய, நமது நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்; இந்திய பண்பாட்டுக்குந் புதிய கண்ணியத்தைக் கொண்டுவர வேண்டும்; உலக அரங்கில் நாம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிற நமது விடுதலை நோக்கம், நிறைவேறாமலே போய்விடும்.

கடந்த 30 ஆண்டுகளில் இதனை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. நம்மிடம் இருந்த மிகப்பெரிய குறை - மேலை நாடுகளைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லி காந்திஜி காட்டிய பாதையில் இருந்து நழுவி விட்டோம். நமது நாட்டினுடைய வலிமையில் பெருமை கொள்வதை விட்டு நமது பாதையை விட்டு விலகினோம். கடந்த ஆறேழு ஆண்டுகளில் நாட்டு நிலைமை மிக மோசமானது. ஜனநாயகம் அபாயத்துக்கு உள்ளானது. உலக அரங்கில் நமது கவுரவம் குறைந்து போனது. இந்தியர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை; இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாது என்று மக்கள் கருதத் தொடங்கினார்கள். இது நமக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. அவசரநிலை பிரகடனம் சற்றும் அவசியமற்றது. இதுகுறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். சிலர் தவறு இழைக்கிறார்கள். இந்த தவறை விடவும், செய்த தவறு நியாயப் படுத்துவதும், தொடர்ந்து அந்த தவறை செய்வதும் கண்டனத்துக்கு உரியதே. அவசர நிலையின் போது மக்கள் அதிக துன்பத்துக்கு உள்ளானார்கள். கலவரமும் மெத்தனமும் கலந்த சூழல் எங்கும் நிலவியது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே மாற்றத்துக்கான புதிய காற்று தோன்றியது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மெல்ல வெளியே வந்தார்கள். கைதாதானவர்களின் எண்ணிக்கை - ஆயிரக்கணக்கில். நிச்சயம் ஒரு லட்சத்துக்கு மேல். திக்கற்ற நிலைமை, அச்சம் நிறைந்த சூழல் மாறத் தொடங்கியது. இந்த அச்சம் முற்றிலுமாக நீங்கி விட்டது என்று சொல்ல மாட்டேன். மிகக் கணிசமாகக் குறைந்து விட்டது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனதா கட்சி உண்டான பிறகு, முதன்முறையாக ஒரு புதிய யுகம் (அத்தியாயம்) தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் இருந்து நமக்கு நாமே சண்டையிட்டுக் கொள்கிறோம். இதுதான் நம்மை பலவீனம் ஆக்கியது. நமக்கு ஒன்று இரண்டாகவும் இரண்டை நான்காகவும் உடைக்கத் தெரியும். ஆனால் இரண்டை ஒன்றாக எப்படி இணைப்பது என்பது தெரியாது. ("We know only to split one into two and two into four but we do not know how to unite two into one") இதனால்தான் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளானோம்.

சுதந்திரத்துக்குப் பிறகும் தேசியக் கட்சிகளிலும் பிற கட்சிகளிலும் இந்த நிலைமை நீடித்தது. ஒவ்வொன்றும் மேலும் மேலும் உடைந்து சென்றது. முதன்முறையாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்தன. இதில் மிக முக்கியமானது - அவை அனைத்தும் தம்முடைய முந்தைய பாதையில் இருந்து விலகி காந்திய வழியை ஏற்றுக் கொண்டன. இந்தப் பாதையில் தான் பயணிப்பது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான தேவையை நாம் உணர்ந்து வந்தோம். குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஏற்பட்ட இந்த ஒற்றுமை, மிகுந்த ஆர்வம், எதிர்பார்ப்புகளுடன் மக்கள் நமக்கு தந்திருக்கிற அதிகாரம் - நமது பொறுப்புகளை அதிகரித்து இருக்கிறது.

மக்களுக்கான நமது கடமை வேறு எந்த கடமையை விடவும் மிகப் பெரியது. அவர்கள் (மக்கள் பிரதிநிதிகள்) தேச சேவைக்கு ஏற்ற வகையில் தமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களை வளர்ச்சிக்கு வழி நடத்துகிற, அச்சமின்றி செயல்படுகிற, நாட்டை புது உயரங்களுக்கு இட்டுச் செல்கிற வகையில் இருத்தல் வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடாக இந்தியாவை உயர்த்த வேண்டும். இது நாம் அனைவரும் சேர்ந்து ஆற்ற வேண்டிய காரியம். வழியில் பல இன்னல்கள் உள்ளன. பல தொல்லைகளுக்கும் இன்னல்களுக்கும் கடந்த ஆறேழு ஆண்டுகளில் நிகழ்ந்தவையே காரணம்.

கடந்த காலத் தவறுகள் நிகழா வண்ணம், ஒரு பணியைத் தொடங்குவதற்குச் சிறிது காலம் பிடிக்கும். நாம் இந்தப் பணியை மேற்கொண்டு உள்ளோம். பழைய தவறுகளை நீக்க வேண்டும்; விரைவாக செயல்பட வேண்டும்; மிகக் குறுகிய காலத்தில் மிக விரைவாக செயல்பட முனைய வேண்டும். இந்தப் பணியில் எல்லோரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த நாட்டை நிர்வகிக்க எங்களுக்கு அனுமதி தந்த மக்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதோ ஆணைகள் இடுவது என்ற அளவுக்கு அது அத்தனை எளிதானது அல்ல. வழியில் பல சவால்கள் உள்ளன.

பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினர், சிறிய எண்ணிக்கையில் அல்ல மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ள இவர்கள், இனியும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் புதிய துணிச்சல் பெற வேண்டும்; அச்சத்தில் இருந்து வெளியே வரவேண்டும்; பிறருடன் சமநிலை எய்த வேண்டும். உண்மையில், மற்றவர்களை விட இவர்கள் இன்னும் உயர்நிலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ("We have to see to it that the backward classes, who are not small but very large in numbers, do not reamain backward. They should breathe new courage, become fearless and should attain equality with the rest. I would rather wish that they forge ahead of others")

இன்றும் கூட, தலித் சகோதரருக்கு எதிராகக் கொடுமைகள் நிகழ்த்தப் படுகின்றன. கடந்த ஏழு மாதங்களாக சிலர் நம்மை இழிவுபடுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் தம்மைச் சரி செய்து கொள்ள வேண்டும்; நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். நாம் எல்லாருமே இந்தக் கொடுமைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் இதற்காக நாம் உழைத்து இருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த களங்கம் முற்றிலுமாகக் களையப்பட வேண்டும்.

நமது மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் இருக்கிறார்கள். இது நமக்கு மிகுந்த துயரம் தருகிறது. நம்முடைய பாவங்களுக்கு நாம் விலை கொடுத்தாக வேண்டும். இது சிறிய பாவம் அல்ல; நெடுங்காலமாக இந்த நாட்டில் நிகழ்ந்த மாபெரும் பாவம். இன்னமும் இதிலிருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை. இதை நாம் செய்யாவிட்டால் நமது நாட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற வலிமையை நாம் என்றுமே பெற மாட்டோம். இதனால்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். இது மட்டுமல்ல; எல்லாருடைய இதயங்களிலும் சமத்துவ மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இந்த சமத்துவ உணர்வு எல்லாருக்கும் ஏற்படும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

அரசு அதிகாரிகள் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்தாக வேண்டும். அவர்களை விடவும் அவர்களுக்கு ஆணையிட்டவர்களையே குற்றம் சொல்வேன். அரசு நிர்வாகம், முற்றிலும் மக்கள் சேவைக்கானது என்பதாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையில் இந்த அரசு மக்களுக்கானது என்று பொருள்படும். அரசு அதிகாரிகளும் தங்களுக்கென்று கடமை இருக்கிறது என்பதை உணர வேண்டும். (இதுவரை) தவறு செய்த அதிகாரிகள், தாம் மக்கள் சேவகர்கள், மக்களுக்கு சேவை செய்யவே தமக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தம்மால் இயன்ற அனைத்தையும் மக்களுக்காகச் செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் தமது கடமையை உணர்ந்து செயல்பட்டால், அடக்குமுறை என்பதே இருக்காது. அப்படி ஒரு சூழல் இனி என்றுமே எழக் கூடாது. அதனால்தான் மக்களுக்கு சேவை செய்கிற விதத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறோம். இதில் இருந்து தவறினால், சந்தேகமே வேண்டாம், அவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும்.

நமது நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே நமது செயல்கள் நிறைவேறும். மக்கள் விழிப்புடன் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையேல் அதிகாரிகளிடம் மெத்தனம் அதிகரித்து விடும். மக்கள் எச்சரிக்கையுடன், அச்சமற்று இருந்தால் அதிகாரிகள் தவறு செய்யத் துணிய மாட்டார்கள். இந்த அதிகாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். இதற்கு, கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களில் நாம் கவனம் செலுத்த விரும்புகிறோம். கிராமங்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டு விட்டன என்று சொல்ல மாட்டேன்; ஆனால் மிக நிச்சயமாக அவர்களுக்கு தேவையான கவனம் செலுத்தப்படவில்லை. 80 சதவீத மக்கள் கிராமங்களில், வேலையின்றி அல்லது தகுந்த வேலை இன்றி வாழ்கிறார்கள்.

இவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இதனால் நகரங்களில் வசதிகள் அற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. இதனால் நமது பொறுப்புகளும் அதிகமாகின்றன. இந்தக் குறிப்புகளில் யாரும் வசதியாக வாழவில்லை. என்னாலும் இங்கே வசிக்க முடியாது. இந்த குடியுருப்புகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதைவிடவும் இது மாதிரி குடியிருப்புகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும். கிராமங்களை மேம்படுத்த வேண்டும். அதனால் நகரங்கள் நோக்கி மக்கள் வருவது குறைந்து போகும். இதற்கு மாறாக, கிராமங்களை நோக்கி நகரவாசிகள் செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் மகத்தான பணி. மிகவும் கடினமான பணி. ஆனாலும் மதிப்பு மிக்கது.

இதற்காக நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே இதனை நிறைவேற்ற முடியும். ஆதரவற்ற நிலை இருக்கக்கூடாது. ஆதரவற்ற நிலை மனிதனை மாய்க்கிறது. இந்தச் சூழலில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். மக்களை, துணிச்சல் மிக்கவராக அச்சமற்றவராக மாற்ற வேண்டும். இதுதான் அரசின் முன் உள்ள மிக அவசரப் பணி. இதைச் செய்யாத வரை நாம் திறன் உள்ளவர்களாக மாற முடியாது. இதை முழுமையாக உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதை உணர்கிறேன்.

ஜனதா கட்சி - ஒரு புதிய கட்சி. இதில் சில பழமையான விஷயங்கள் தென்பட்டால் அது, கட்சியின் வலிமையைக் குறைத்து விடும் என்று கருதக்கூடாது. அது மேலும் வலிமை பெறும். இந்தக் கட்சியை மக்களிடம் இருந்தே தனது வலிமையைப் பெறும். இந்தக் கட்சியை யாராலும் உடைக்க முடியாது என்று நம்புகிறேன். யாரும் உங்களைத் தவறாக வழி நடத்த அனுமதிக்காதீர்கள் என்று வேண்டுகிறேன். உங்களுக்கு ஏதும் ஐயம் இருப்பின் என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு நிச்சயம் விளக்குவேன். எதுவெல்லாம் சரி செய்யப்பட வேண்டி உள்ளதோ அதையெல்லாம் நானும் எனது சக அமைச்சர்களும் செய்வோம். அச்சமின்றி விழிப்புடன் நல்லதின் பக்கம் நில்லுங்கள். எங்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட உங்களுக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் சொல்வதை நாங்கள் கூர்ந்து கேட்போம். உண்மை நிலவரம் என்ன என்பதை உங்களுக்கு சொல்லுவோம். தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டியது எங்களது கடமை. இதில் மக்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

இந்தியா முழுவதும் ஒரே குடும்பமாகத் திகழ வேண்டும் என்கிற எனது கனவு நிறைவேறும் என்று நம்புகிறேன். இந்த இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறோம். அப்போதுதான் உலகத்துடன் உழைக்கவோ உலகத்துக்கு உதவவோ முடியும். பிறர் நமக்கு உதவுவதை விட, நாம்தான் பிறருக்கு உதவ வேண்டும். நாம்தான் உலகத்துக்கு சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் காந்திஜியின் கனவு நினைவாகும். ராமராஜ்யம் என்றால், எல்லா இன்னல்களையும் அரசே ஏற்க வேண்டும்; மக்கள் துயரப்பட அனுமதிக்கலாகாது.

ஆட்சியாளர்கள் தமது எளிமையால் மக்களுக்கு உதாரணமாய் இருக்க வேண்டும். நாம் எல்லா நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்யைவே இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் மக்களின் சேவகர்கள். மக்களும் அப்படித்தான் நம்மை நடத்த வேண்டும். மக்களிடம் இந்த அதிகாரத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அதனால் தான் எங்களிடம் உள்ள குறைகளை தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று மக்களை வேண்டுகிறோம். தயக்கம் இன்றி எங்களது குறைகளை அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நான் ஏற்கெனவே ஒரு முறை சொன்னேன் - தவறான பாதையில் சென்றால் என்னையோ எனது சகாக்களையோ, காதைத் திருகி விளக்கம் கேளுங்கள். நாங்கள், சகாக்கள் அனைவரும் ஒன்றே. யாரும் தனித்தனியான ஆள் இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக இருக்கிறோம். எங்களில் யாரும் மேலுமில்லை கீழுமில்லை. இதனை உணர்ந்து கொள்ள மக்களைத் தயார்படுத்த வேண்டும். இதுவே நமது பிரதான கடமை. சந்தேகம் இல்லை. வேலை என்ன பிரச்சினையைத் தீர்த்தால் அன்றி பல முயற்சிகளை நிறைவேற்ற முடியாது. கிராமவாசிகள் அனைவருக்கும் முழுதாக வேலை தர வேண்டும். அப்போதுதான் உற்பத்தித் திறன் கூடும்; உற்பத்தி செலவு குறையும். விலைவாசி குறைந்தால் நாட்டின் கவுரவம் உயரும்.

விலைவாசிகளைக் குறைப்பது அத்தியாவசியமாகும். நாம் இன்னமும் இதை செய்யவில்லை என்பதில் சிலருக்கு ஏமாற்றம்தான். ஆனால் சில கடந்த கால சங்கடங்களை சரி செய்ய வேண்டிய சூழலில் இருந்தோம். அதனால், எதிர்பார்த்த நல்ல விளைவுகளை உடனடியாகக் கொண்டு வர முடியவில்லை. சில முடிவுகள் எடுத்து இருக்கிறோம். அதன் நல்ல விளைவுகள் விரைவில் தெரியும். இந்த விளைவுகள் இன்னும் மக்களை சென்றுச் சேரவில்லை. விரைவில் இது மக்களை அடையும் மக்கள் நன்மை பெறுவார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

நாம் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இது அரசும் மக்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி. ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும். இதையே ஒவ்வொரு இந்தியனும் தனது வாழ்விலும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் காந்திஜி விரும்பிய இந்தியா உருவாகும். அப்போதுதான் இன்னல்கள் இல்லாத, துயரங்கள் இல்லாத, ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவிக் கொள்கிற ராமராஜ்யம் உருவாகும். எந்த மனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுவே நமது பண்பாட்டின் அடிப்படை. பிறரைப் பற்றிய அக்கறை வேண்டும். பிறரின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது பண்பாட்டின் இந்த அடிப்படைக் கூறு, பலவீனம் அடைந்து இருக்கிறது. இந்த பண்பாட்டை மேலும் நல்ல தரத்துடன் மீட்டெடுக்க வேண்டும். இப்பணியில் மக்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.

நாம் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். நமது முன்னேற்றத்தில் எனக்கு சந்தேகம் இல்லை. யாராலும் இந்தியாவை அழிக்க முடியாது. பூமியில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி மறைந்துள்ளன. நமது தேசம் மட்டும் என்றும் வாழ்கிறது. கவிஞர் இக்பால் சொன்னது போல 'ஏதோ ஒன்று இருக்கிறது; நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.' இதுதான் நமது பண்பாட்டின் அழகு. நாம் என்றும் மனம் தளர விடக் கூடாது. தொடர்ந்து முன்னேற இன்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். யாராலும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது. முன்னேறுவோம். உலகம் முழுமைக்கும் சேவை செய்வோம்.

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 30 - “பூரண சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவோம்” | 1976

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்