செங்கோட்டை முழக்கங்கள் 30 -  “பூரண சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவோம்” | 1976

By செய்திப்பிரிவு

இந்திய சுதந்திரத்தின் 30-வது ஆண்டு தொடக்கம். 1976 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை - இதோ: இன்று, கடந்த ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் வகுத்துக் கொண்ட பாதையில் நாம் நீண்ட தூரம் முன்னேறி இருப்பதைக் காண முடிகிறது. எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம் முன்னால் உள்ள பாதை நீண்டு செல்கிறது என்பதைக் காண முடிகிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் சிரமங்கள் அதிகமாகின்றன; குறையவில்லை. சில தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிதாக சில தேவைகள் முளைத்துள்ளன. இது நிகழக்கூடியது தான். வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். நமக்கும் நமது நாட்டுக்கும் நம்முடைய உன்னத தலைவர்கள் வகுத்துச் சென்ற உயரிய கோட்பாடுகள் கொண்ட பாதையில் தொடர்ந்து முன்னேறுவதே நமது நோக்கம், முயற்சி.

சுதந்திரத்தில் பல வகைகள் உண்டு. நாம் நன்கு தெரிந்தே முழு சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) வேண்டிப் போராடினோம். வெற்றி பெற்றோம். முழு சுதந்திரம் என்பதுதான் சரி. ஏனெனில் வேறு எந்த வகை சுதந்திரத்தையும் உண்மையில் சுதந்திரம் என்றே அழைக்க முடியாது. பூர்ண ஸ்வராஜ் என்றால், உங்கள் பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல. செய்தித்தாள்களில் எழுதுவோர், உங்கள் குரலை எதிர்ப்பதாக இருந்தாலும், அதற்கு அனுமதிக்கப்படுவது மட்டுமே சுதந்திரம் அல்ல. பூர்ண ஸ்வராஜ் என்றால், சுதந்திரத்தின் பயன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர வேண்டும் என்று பொருள். 'குரல் இல்லாதவர்களை', தமக்கு என்ன வேண்டும் என்று சொல்லக் கூடத் தெரியாதவர்களை, சுதந்திரத்தின் பயன்கள் மறுக்கப்பட்டவர்களைச் சென்று சேர வேண்டும். இந்த சுதந்திரத்தை நோக்கி நமது நாட்டை முன்னேற்றவே முயற்சிக்கிறோம்.

ஆனால் இந்தப் பாதையில் பல தடைகள் உள்ளன. இதில், சில குழுக்களின், சில தனி நபர்களின் நலன்கள் சிறிதளவு பாதிக்கப்படுகின்றன. சிறியவரோ பெரியவரோ அனைவரின் வாழ்வும் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டும் மேலும் மேலும் பெற்றுக் கொண்டே இருந்தால் எதுவுமே இல்லாதவருக்கு எப்படிக் கிடைக்கும் என்பதை சிந்தித்து உணர வேண்டும். இதனால்தான் என்னுடைய திட்டங்கள் எல்லா இந்தியர்களுக்குமாக இருக்கின்றன. நலிந்த பிரிவினருக்கு கூடுதல் கவனம் தரப்படுகிறது. அவர்கள், சாதி பொருளாதாரம் வாழ்விடப் பின்னடைவு என்று எந்த காரணத்துக்காகவும் நலிவுற்றிருக்கலாம்.

ஒவ்வொரு நிலையிலும் யாரேனும் ஒருவருடன் நாம் மோத வேண்டி இருக்கிறது. இத்தகைய மோதல்களை நாம் சந்தித்துள்ளோம். ஆனால் ஒரு முறையும் நமது கால்கள் தடுமாறியதில்லை. கடந்த ஆண்டில் நமது நாடு எந்த அளவு வளர்ச்சி அடைந்தது என்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

மக்களுக்கு நாம் ஒரு திட்டம் அறிவித்தோம். அவற்றில் சில அரசியல் கடமைகள்; சில மக்களின் கடமைகள். ஒழுங்கு வந்தது; புதிய நம்பிக்கை பிறந்தது; அனைவரும் இந்தப் பணியில் ஒத்துழைத்தார்கள். நமது பணி முற்றுப்பெற்றது என்று நான் கூற மாட்டேன். எந்த அளவு உழைத்தோமோ அந்த அளவுக்கு பணி நிறைவடைந்து இருக்கிறது. திடமான தீர்க்கமான முடிவுகள் எடுத்து இருக்கிறோம். பணிகள் தொடர்கின்றன. எல்லா இடங்களிலும் இது சமமாக இல்லை. எங்கெல்லாம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களோ, எங்கே தொழிலாளர்கள் வலிமையாய் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பணி விரைவாக நடைபெறுகிறது. உற்பத்தி எந்த அளவுக்குப் பெருகி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நமது நாடு 7% வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் படி 70 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்தன. நீர்ப்பாசன திட்டம் நன்கு பரவி இருக்கிறது. மேலும் பரவும் என்று நம்புகிறோம். நிலச்சீர்திருத்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். எங்கெல்லாம் நிலம் பகிர்ந்து வழங்கப்பட்டதோ அங்கெல்லாம் புதிதாய்க் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த இடங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் நம்மால் சரியாக சென்று சேர இயலவில்லை. அங்குள்ள மக்களுக்கு சரியாக குறித்த நேரத்தில் தகவல் தரப்படுகிறது.

ஆனாலும் தவறுகள் நிகழ்கின்றன. இவையெல்லாம் இலவசம்; அதனால்தான் இந்தத் திட்டம் எங்கே தொடங்கினாலும், விவசாயிகள் ஏழைகள் மற்ற குடிமக்கள், அநீதி நிகழ்வதாய் கவனத்துக்கு வரும்போது அவர்களாகவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வெறும் புகார் தருவது மட்டுமல்ல; நீங்களும் நானும், தவறுகளை நிச்சயம் சரி செய்ய முடியும். இந்த உணர்வு நன்கு பெருகி இருக்கிறது.

கடந்த ஆண்டு மக்களிடம் நல்ல ஆதரவும் விழிப்புணர்வும் காண முடிந்தது. நல்ல அடித்தளம் அமைத்து இருக்காவிட்டால் விவசாயத்திலும் தொழில்துறையிலும் இந்த அளவு வளர்ச்சி கண்டிருக்க முடியாது. அதேசமயம், எத்தனை வலுவான அடித்தளம் இருந்தாலும், மக்களிடம் ஒழுங்கு உற்சாகம் இல்லாமல், வளமான இந்தியாவை உருவாக்க முடியாது. இதற்கு முன்னர், கல்லூரிகளில் தொழிற்சாலைகளில் நமது நகரத் தெருக்களில் எந்த அளவுக்கு ஒழுங்கீனம் இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இதனால் பணிகள் தடைப்பட்டன. பொருளாதார நெருக்கடியில், ஏற்கனவே பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவிய சூழலில், வேலை நிறுத்த முழக்கங்கள், போராட்டங்கள் காரணமாக உற்பத்தி நின்று போனது. பற்றாக்குறை அதிகரித்தது.

நாம் புரட்சியை நம்புகிறோம். வன்முறையில் அல்ல; அமைதிப் பாதையில், நட்புப் பாதையில் பயணித்த இந்த நாட்டின் கடுமையான புரட்சியாளர் என்று நான் நம்பும் மகாத்மா காந்தியைப் பின்பற்றுகிறோம். அவர் காட்டிய வழியில் செல்லாது இருந்தால், பிறரது வழியில் சென்றிருந்தால் இன்றும் கூட நாம் சுதந்திரம் பெற்றிருக்க மாட்டோம். காந்தியின் வழியில் சென்று சுதந்திர நாடு ஆனோம்; ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டோம். தொடர்ந்து முன்னேறுகிறோம். தொழிற்துறையின் விரைவான வளர்ச்சிக்குத் தேவையானதை மேம்படுத்தினோம். அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை எல்லா வகைகளிலும் உயர்த்தினோம்.

எவ்வாறெல்லாம் இந்தியாவுக்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்தாலும், முன் எப்போதும் விட இந்தியா மிகவும் வலிமையாக இருக்கிறது என்பதை உலகத்தில் எல்லாரும் கூறுகிறார்கள். நமக்கு இந்த அளவு வலிமை இல்லை எனில் நம்மால் முன்னேறி இருக்க முடியாது. வலிமை பெறாமல் தொழில்துறையைப் பெருக்குவதோ மக்களுக்கு மகிழ்ச்சியை நல்குவதோ இயலாது.

சுதந்திரத்துக்காக உழைத்தோம். நிரந்தரமான சுதந்திரம் பெற்றோம். நம் மீது எப்போதேனும் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், கண்ணுக்கு புலப்படாத மறைமுக தாக்குதல்தான் மேலும் ஆபத்தானது. இதற்கு முன்னரும் இந்த குரல்களை நாம் கேட்டோம். கடந்த ஆண்டில் தான் இவை அதிகமாக வெளியில் வந்தன. இந்தியாவை இவர்கள் ஆதரிக்கவில்லை. எங்கெல்லாம் ராணுவ ஆட்சி இருக்கிறதோ, எங்கெல்லாம் மக்கள் தம்முடைய குரலை எழுப்ப முடியாதோ, யாரும் அங்கே குரல் எழுப்பவில்லை. ஒன்று இரண்டு அல்ல, சில இடங்களில் நூறு, ஆயிரம், லட்சம் பேர் கொல்லப்பட்டனர். யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டோர் இன்று இந்தியாவை எதிர் நோக்குகின்றனர். இது முதன்முறை அல்ல.

காந்திஜி உயிருடன் இருந்த போது அவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தினர். அதன் பிறகு ஜவஹர்லால் நேருவைக் குற்றம் சொன்னார்கள். நான் சிறுவயதில் இருந்த போதே, இந்தியாவுக்கு எதிராகவும் சொன்னார்கள். இந்தியா ஏன் அணுகுண்டு சோதனை செய்ய வேண்டும்? உலகம் மொத்தமும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது. சில நாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து குண்டுகளை அடுக்கடுக்காய் தயாரித்து வைத்தாலும் யாரும் கண்டனம் தெரிவிப்பதில்லை. மாறாக அவர்களின் ஆயுதங்களை விற்பதற்கு மும்முரமாக ஈடுபடுகின்றனர். இதுவே நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்காக நாம் ஏதாவது செய்தால் அது தவறு என்கிறார்கள்.

நாம் மருத்துவமனை தொடங்கினால், கிராமங்கள் நிறைந்த ஏழை நாட்டில், இப்போது எதற்கு மருத்துவமனை என்று கேட்கிறார்கள். நவீன நாட்டின் அடித்தளம் மருத்துவமனை. விவசாயிகளின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. தொழிற்சாலைகளின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மேல் வர்க்க மக்களின் தேவைகள் நிறைவேறி விடுகின்றன.

அரசர்கள் தொழிற்சாலை நடத்தக் கூடாது. அதனால் இழப்புதான் ஏற்படும் என்று பத்திரிகைகள் கூட எழுதின. ஆனால் இன்று இவற்றை உற்பத்தி கூடி உள்ளது; வருவாய் பெருகி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. சில தொழிற்சாலைகளில் மனநிறைவு தரும்படியான உற்பத்தி இல்லை. விரைவில் இதுவும் மாறும். நாம் எப்போதும் எல்லா இடத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த அளவு மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழிகோலிய தொழிலாளர். சகோதர சகோதரிகளை வாழ்த்துகிறேன்.

சில மணி நேரம் கழித்து இன்று மாலை நான் இலங்கை செல்கிறேன். அணிசேரா நாடுகளின் பெரிய கூட்டம் அங்கே நடைபெறுகிறது. சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதே நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. சுதந்திரம் என்பது எல்லைகளை வைத்து அல்ல; கொள்கையில் சுதந்திரம், பயணிக்கும் திசையில் சுதந்திரம், ஒருவரின் நம்பிக்கையில் சுதந்திரம், ஒருவர் தனது நாட்டை முன்னேற்றுவதில், வளர்ப்பதில் சுதந்திரம். இது குறித்த கேள்வி எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்கிறது.
நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டால் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டால் மாபெரும் சக்தியாக வளர முடியும். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கூறினார் - 'எத்தனை பலவீனமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் கூடி ஒன்றாக உழைத்தால் பெரும் சக்தியாக மாற முடியும்'. நம்முடைய அனுபவமும் இதைத்தான் கூறுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களிடம் என்ன சக்தி இருந்தது? இருந்ததெல்லாம்.. வறுமை, அச்சம், அடிமைத்தனம் மட்டுமே. ஆனால் நாம் அனைவரும் ஒன்றாய் இருந்தோம். நமது பாதையை விட்டு சற்றும் விலகவில்லை. நமது ஏழை விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆகியோரின் சக்தி, உலகின் ஆகப்பெரிய சக்தியை விட பெரியதாக இருந்தது. எந்த ராணுவத்தை விட நாம் வலுவானவராக இருந்தோம். இன்றுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த வலிமை வந்து சேர வேண்டும். சில சிறிய நாடுகள் உள்ளன. யார் உதவி செய்தாலும் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த உதவியை நாளை அவர்களை சுதந்திரத்துக்கு எதிராக இருக்கக் கூடாது. இத்தகைய உதவி அவர்களை வலிமை ஆகாது.

எதிர்காலத்தில் இன்னும் பலவீனம் உடையவர்களாகவே மாற்றும். நாமும் எல்லா நாடுகளில் இருந்தும் எல்லா அரசிடம் இருந்தும் உதவி பெற்றுள்ளோம். ஆனால் ஓர் அம்சத்தில் நாம் தீர்க்கமாக இருந்தோம். நமது நாட்டை வளமையாக்க வேண்டும். வலிமையாக்க வேண்டும். இதற்கு உதவினால் அந்த உதவியை ஏற்றுக் கொள்வோம். தொடக்கத்திலிருந்தே இதை நாம் சொல்லி வருகிறோம். இனியும் இதையே சொல்வோம்.

இன்றும் கூட நம் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டால் அது, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சிலர் கைது செய்யப்பட்டார்கள், செய்தித்தாள்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதற்காக அல்ல. பிறரிடம் அன்பு காட்டுகிற அதே நேரத்தில் எந்த அளவுக்கு துணிச்சலோடு இந்த நாடு முன்னேறுகிறது என்பதைக் காட்டியிருக்கிறோம். இப்படித்தான் நாம் முன்னேறுகிறோம். நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படுகிற கண்டனம் நம்மை மேலும் வலுவாக்கவே செய்யும். நமது பாதையில் பயணத்தை இன்னும் விரைவு படுத்துவோம். தொடர்ந்து முன்னேறுவோம்.

கடந்த காலங்களில் நாம் தாக்கப்பட்ட போதெல்லாம் நாம் ஒன்று அடங்கிப் போய்விடவில்லை. எதிர்கொண்டோம். தொடர்ந்து முன்னேறினோம். இந்தியாவின் வரலாறு - போராட்டங்களின் வரலாறு. இந்தியா, சகிப்புத்தன்மை நிறைந்த நாடு. அமைதியான நாடு. அதே சமயம், துணிச்சல் மிக்க, வைராக்கியம் கொண்ட, கொள்கைப் பிடிப்புள்ள நாடு. இதுதான் நமது சரித்திரம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். நாம் புதிய இந்தியாவின் அடையாளங்கள், குறியீடுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் வளர்பவர்கள். இதற்கான பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது.

நம்மை சிலர் இகழ்வதும் புகழ்வதும் மிகச் சாதாரணம். நம் முன் உள்ளது ஒரே ஒரு கேள்விதான் - எந்த வழியில் சென்றால் நாம் முன்னேறலாம்? சிலர் நல்லது எனலாம்; சிலர் தவறு எனலாம். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். நம்முடைய குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவில்லை எனில், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டவில்லை எனில் நாம் உடலிலும் மனதிலும் வலிமையானவர்களாக வளர முடியாது. இளைய தலைமுறை வலிமையாக இல்லை எனில், ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடவில்லை எனில், இந்த நாட்டின் மீது பற்று இல்லை எனில், அதுவே இந்த நாட்டின் மிகப்பெரிய பலவீனம்; மிகப் பெரிய இழப்பு.

நமது படைகள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. நமது படைகளைப் பற்றி நாம் பெருமை கொள்ளலாம். ஆனால் ஒரு படை வலிமையாக போரிட வேண்டுமெனில் அவர்களது நாடு வலிமையாக இருக்க வேண்டும். நமது வரலாற்றைப் பார்ப்போம். நமது எதிர்காலத்தையும் பார்ப்போம். நமது நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதைத் தீர்மானிப்போம். பிறரது வலிமையில் பிறரது அறிவுத்திறனில் பிறரது பொறுப்பில் நமது வளர்ச்சி இல்லை. மொத்தமும் நமது பொறுப்பு. இந்த உணர்வு எல்லாருக்கும் இருக்குமானால் இந்தியாவை யாராலும் பின்நோக்கிச் செலுத்த முடியாது. நாம் சிறிதளவு ஒழுங்கு கடைப்பிடித்தாலும் அது நமது வலிமையைக் கூட்டும்.

அவசர நிலைப் பிரகடனம் எப்போது திரும்பப்படும் என்று விவாதம் நடைபெறுகிறது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே அது தளர்த்தப்பட்டு விட்டது என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். இந்தத் தளர்வினால் ஏற்பட்ட விளைவு என்ன? வேலை நிறுத்தத்தால் வன்முறையால் தீங்கு ஏற்பட்டது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்வார்களா? இன்றும் கூட அதே பாதையில் செல்லத்தான் உறுதியாய் இருக்கிறார்களா? இந்தக் கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். நமது கைகளில் இல்லாமல், நாட்டைத் துண்டாட நினைக்கும் இவர்களின் கைகளில், நாட்டில் ஒழுங்கீனத்தைப் பரப்ப முயலும் இவர்களின் கைகளில், பேராசை கொண்ட மனிதர்களின் கைகளில், ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் கைகளில் இருந்தால் என்னவாகி இருக்கும்?

முதன் முறையாக, ஏழைகளுக்காகத் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. எத்தனை பெரிய நாட்டில் 70 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் என்பது மிகச் சிறிய அளவு. ஆனால் இதற்கு முன்னர் இது நடைபெறவில்லை. எனைவே 70 லட்சம் என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. ஆனால் இந்த 70 லட்சமும் கூடாது என்று சொன்னால்.. மற்றவர்களுக்கு எப்படித் தருவது?

இதைப் பற்றி எல்லாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசிடம் இருந்தோ வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தோ யாருக்கும் எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரும் இதயபூர்வமாக இந்த நாட்டுக்காக ஒழுங்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காந்தி எப்போதும் சொல்வார் - கடமை இல்லாது உரிமை இல்லை. நமது கடமையை நிறைவேற்றுகிற போது உரிமை தானாக வருகிறது. அப்போதுதான் கூடவே உண்மையான ஜனநாயகம் வரும். ஏழைகளின் குரல் கேட்கும். யாரும் யார் மீதும் சமூகப்பொருளாதார அடக்குமுறை செய்ய முடியாது. எல்லாருக்கும் சம உரிமை. பிற்படுத்தப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கும் அதே உரிமை. இந்த உணர்வு வந்தால் எல்லாருக்கும் சம உரிமை கிட்டும். சிலருக்கு மட்டும் உரிமைகள் வேண்டும்; சிலரின் குரல் மட்டுமே கேட்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. இதனால் தான் நாம் முன்னர் நமது சுதந்திரத்தை இழந்தோம். இந்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது.

இந்தியா - ஒரு தியாக பூமி. இன்று அந்த அளவு தியாகம் தேவைப்படவில்லை. நமது தேசத்துக்கான வாழ்வை நாமே உருவாக்கிக் கொள்கிற துணிச்சல் பெற வேண்டும். இதற்கான முயற்சிகளை நாம் தந்தால் நமது நாட்டை பல புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல முடியும். நாடு என்பது நிலமும் மரங்களும் மலைகளும் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்வோம். நாம் இந்த நாட்டை நேசிக்கிறோம். நாடு என்றால் அதில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்கள். இவர்களின் வாழ்வை மேம்படுத்துவதில், தேசத்தை அழகு படுத்துவதில் மேம்படுத்துவதில் நாம் முனைந்துள்ளோம். எல்லாக் குடும்பங்களிலும் வசதிகளை மகிழ்ச்சியைகக் கொண்டு வருவோம். குழந்தைகளுக்கு எல்லா இன்பங்களையும் தருவோம். இந்த மகத்தான பயணத்தில், ஒவ்வொரு அடியிலும் எங்களோடு சேர்ந்து நடந்து வாருங்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 29 - ‘ஜனநாயகம் காப்போம்’|1975

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்