'ஒவ்வொரு குடிமகனும் ஒளிமயமான நாட்டை நிர்மாணிப்பதில் தனது பங்கை செலுத்த வேண்டும். வறுமை ஒழிப்பு திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். சாதியம் முற்றிலுமாக அகற்றப்படும் வரை நமது சுதந்திரம் முழுமை பெற்றதாக ஆகாது'.
1972 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை இதோ: “சகோதர சகோதரிகளே, இதே இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. அன்று நீங்களும் நானும் இந்த நாடும் ஒரு புதிய வாழ்க்கையில் விழித்தோம். நமது விடுதலைக்கு வழிவகுத்த ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு நேற்று நாம் அஞ்சலி செலுத்தினோம். பலதரப்பட்ட மக்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். அவர்களில் சிலருக்கு வன்முறையில் நம்பிக்கை இருந்தது. ஆனால் பெரும்பான்மையோர் அகிம்சையில் ஒத்துழையாமை இயக்கத்தில் நம்பிக்கை வைத்தனர். அவர்கள் அனைவரின் தியாகத்தால் சுதந்திர ஜோதி ஏற்றப்பட்டது. அவர்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள் - ஊர்வலம் போயினர், கூட்டங்கள் நடத்தினர், சிறைக்குச் சென்றனர்; அடி வாங்கினர்; தம் உயிரைத் தந்தனர்.
இந்த தியாகிகளில் பெரும்பாலோர் இப்போது உயிருடன் இல்லை. ஒரு சிலர் மட்டும் இன்னும் நம்முடன் வாழ்கின்றனர். மறைந்தவர்களுக்கு அஞ்சலி; இன்று நம்முடன் இருப்பவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி. வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் இவர்கள். எத்தனையோ பேர்... இவர்கள் அனைவரின் பெயரையும் என்னால் எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் விடுதலைப் போராட்டத்தில் உயிர் ஈந்தவர்களில் பலர் இதே செங்கோட்டையில் தான் சிறையில் இருந்தனர்.இந்திய தேசிய போராட்டத்தில் பங்கு பெற்ற அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நமது நன்றி. அவர்கள் செய்த தியாகத்தால் தான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
கால் நூற்றாண்டுக்கு முன்பு இங்கு ஏற்றப்பட்ட கொடி, ஒரு போராட்டத்தின் முடிவு அல்ல; நீங்களும் நானும் வீரர்களாக இருக்கும் ஒரு புதிய போராட்டத்தின் தொடக்கம். விடுதலை என்கிற சொல்லுக்கு புதிய பொருள் தந்து ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரும் ஒரு புதிய வாழ்க்கையை உணரச் செய்ய வேண்டும். நம் முன்னே ஏழை மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் நல்வாழ்வுக்காக நாம் போராட வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். நம் முன்னே, மிளிரும் கண்கள் அழகான முகங்களோடு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல புதிய வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தர வேண்டும். இதன் மூலம், பிறரைப் போலவே இவர்களும் நாட்டுக்கு சேவை செய்வார்கள், புதிய கதைக்கு, புதிய திருப்பங்களைத் தருவார்கள். கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட தூரம் பயணித்து உள்ளோம். வழிநெடுக வசதிகள், தடைகள், இன்னல்கள், அபாயங்கள். முன் எப்போதும் விட இன்றைய இந்தியா வலிமை வாய்ந்தது. நமது ஜனநாயகம், நமது மன உறுதி, நமது ஒற்றுமை - முன்பை விட வலிமையானது.
» செங்கோட்டை முழக்கங்கள் 21 - ‘மூன்று மொழிகள் கற்க வேண்டும்’ | 1967
» செங்கோட்டை முழக்கங்கள் 22 - ‘எந்த அழுத்தமும் எங்களை அண்டாது!’ | 1968
பின்னோக்கிப் பார்க்கும் போதே நாம் முன்னோக்கியும் காண வேண்டும். நமது வேகத்தை எப்படி அதிகரிப்பது என்று பார்க்க வேண்டும். நமது நாம் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது? பல உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் நம்முடைய சாதனைகளை சிலர் கேள்வி கேட்கின்றனர் என்பது வருத்தமாக இருக்கிறது. நமது சுதந்திரத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை கூட இவர்கள் கேள்வி கேட்டனர். இது ஒரு வினோதமான போக்கு. புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை இவர்கள் பார்க்கவில்லையா? அவர்களும் இதை விரும்புகிறார்கள். இந்தியா இன்று மிக வலிமையாக இருக்கிறது. இதை நாம் அனைவரும் மேலும் வலிமையாக்க வேண்டும். இங்குள்ள நீங்கள் அனைவரும், வானொலியில் என் உரையை கேட்கும், அல்லது கேட்காத பல கோடி பேரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நமது நேசத்துக்குரிய இந்தியாவை எவ்வாறு கட்டமைப்பது என்று நமது மூளையில் இதயத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகளில் வலுவான அடித்தளம் இட்டுள்ளோம். இந்த காலத்தில் நாம் எவ்வளவு வளர்ச்சி பெற்றோம் என்பதை நீங்கள் முழுதாய் அறிவீர்கள். சில இன்னல்கள் இருந்தாலோ, சில இடங்களில் உணவுப் பொருளுக்கு பற்றாக்குறை இருந்தாலோ, நாம் வளர்ச்சி பெறவில்லை என்று பொருளல்ல. கடந்த காலத்தில் பல தவறுகள் செய்திருக்கிறோம். இன்றும் செய்து வருகிறோம். ஆனால் இந்த தவறுகள் எல்லாம் நமது வெற்றிகளை சாதனைகளை மறைத்து விடாது. பல துறைகளில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
சில பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு பகுதியில் வறட்சி நிலவத்தான் செய்கிறது. சில இடங்களில் வெள்ளம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு இருந்து இந்த ஆண்டு நிகழ்ந்தது மாறுபட்டு உள்ளது. முன்பெல்லாம் கிராமங்களில் வறட்சி ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணம் சென்றது இல்லை. ஆனால் இப்போது நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் வறட்சி ஏற்பட்டாலும், அரசும் மக்களும் இணைந்து உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து நிலைமையை சரி செய்ய முனைகிறார்கள். நாட்டின் எந்த பகுதியில் பேரிடர் இருந்தாலும், உடனடியாக மக்கள் எல்லோரும் இணைந்து பேரிடர் பாதிப்புகளைக் களைய முழு முயற்சி எடுக்கிறோம். இயற்கை பேரிடர்களை நம்மால் நிறுத்த முடியாது. அதன் பாதிப்புகளையும் தடுத்து விட முடியாது. ஆனால் இவற்றை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள முடியும். இதில் நமது திறமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளி உதவிகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனிநபரும் தனக்குத்தானே உதவிக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எங்கேயும் இயற்கை பேரிடர் நிகழ்ந்தால், தமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை, தாம் செய்வதற்கு ஏதும் இல்லை என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போது உதவி கேட்டு எழும் குரல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. மக்களின் தன்னம்பிக்கை வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு தனி நபரும் தன்னால் ஏதும் செய்ய முடியும் என்று நம்புகிறார். நெருக்கடியைத் தீர்க்க, தனது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர தன்னால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்புகிறார். உண்மையில் இதுதான் ஒரு நாட்டின் ஆகப்பெரிய வலிமை.
வேளாண்துறையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளோம். இதேபோன்று தொழில் புரட்சியிலும் நாம் பல படிகள் முன்னேறியுள்ளோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சுதந்திரம் பெற்ற போது நம்முடைய நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. பல பெரிய பிரச்சினைகள், தீர்வுகள் இன்றி நமக்கு சவாலாக இருந்தன. விடுதலை கிடைத்தாலும் இந்தியா தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று பலர் கூறினார்கள். நாம் ஒரு மிகப்பெரிய நாடு. ஏராளமான பிரச்சினைகள் இருந்தன. கடினமான சிக்கலான பல பிரச்சினைகளை, ஒவ்வொன்றாக படிப்படியாக சரி செய்து வருகிறோம். இந்த வகையில் தொழில் துறையிலும் நாம் பெருமலர்ச்சி கண்டுள்ளோம். தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது. மின் உற்பத்தி கூடி உள்ளது. இரும்பு, இயந்திரங்கள் முன்பு இறக்குமதி செய்தோம். இப்போது நாமே உற்பத்தி செய்கிறோம். இயந்திரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களையும் நாமே தயாரிக்கிறோம். அதேசமயம் இந்த உற்பத்தி போதுமானது அல்ல என்பதும் உண்மை. பொருட்களை மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்கிறோம்.
நமது தேவையும் கூடிக் கொண்டே போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் அபரிமிதமாக இருக்கிறது. எனவே அதிகரித்து வரும் தேவையை எவ்வாறு சமாளிப்பது என்பதை எப்போதும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நம்முடைய பல தேவைகளை இன்னமும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அதற்காக, நாம் வளர்ச்சியே பெறவில்லை என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது. இது உண்மை அல்ல. வளர்ச்சியை நாம் இந்தக் கோணத்தில் பார்க்கக் கூடாது. இந்தப் பார்வை நமக்கு உற்சாகம் தராது, கவலையே தரும். இது நம்பிக்கைக்கான துணிச்சலுக்கான பாதை அல்ல. நான் வளர்ச்சி பெறவில்லை என்று கூறுவோர், நமது மக்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மக்களின் சக்தியை பயன்படுத்திக் கொள்ள இவர்கள் தயாராக இல்லை. மக்களுடைய உழைப்பின் பயனை பெறவும் இவர்கள் தயாராக இல்லை. நாம், பெரும் பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
நமது நாடு ஐந்து ஊடுருவல்களைக் கண்டது. இந்தத் தருணத்தில், துணிவு மிக்க நமது ராணுவம் கடற்படை விமானப்படை மற்றும் நமது மக்களை, அவர்களின் தீரமிக்க செயலுக்காகப் பாராட்டுகிறேன். இந்திய புதல்வர்களான இந்த வீரர்களின் கையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. இந்திய ராணுவம், இந்திய காவல்துறை இணைந்து ஒற்றுமையாக பணியாற்றி இந்த நாட்டை உயர்த்திட வேண்டும். ஒரு நாட்டின் வலிமை அந்த நாட்டு ராணுவத்தின் வலிமை மட்டுமே அல்ல. ஒரு நாட்டின் வலிமை அதன் வளர்ச்சி, அதன் கொள்கை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமை, தியாகங்களை எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் ஆகியவற்றில் அடங்கியுள்ளது.
இன்றைய உலகில், நாம் வளர்ச்சி பெறுகிறோமோ இல்லையோ, நாம் கடுமையாக உழைக்கிறோமோ இல்லையோ, என்பதல்ல, எப்போதும் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. எதாவது ஒரு சச்சரவில் நாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறோமா என்பது தான் முக்கியம். தனிப்பட்ட சிறுசிறு விவகாரங்களில் மாட்டிக் கொள்ளப் போகிறோமா, சற்றும் பயனற்ற போராட்டங்களில் அற்ப சண்டைகளில் மக்களின் வலிமையை வீணாக்கப் போகிறோமா? அல்லது, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப் போகிறோமா? நாம் எதுமாதிரி மக்களை உருவாக்க இருக்கிறோம், என்ன வாய்ப்புகளை நமது பிள்ளைகளுக்கு வழங்க இருக்கிறோம் என்பதே முக்கியம்.
நேற்றைப் போல் இன்று இல்லை. அதனால் இளைஞர்கள் மனதில் பதட்டம் உருவாகிறது. இது இந்தியாவில் மட்டும் நிகழவில்லை. பிற நாடுகளிலும் இது நிலவுகிறது. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒருவேளை, வறுமை வேலையின்மை காரணமாக இருக்கலாம். ஆனால் வறுமையோ வேலையின்மையோ இல்லாத நாடுகளிலும் இளைஞர்கள் ஏன் பதட்டத்தில் இருக்கிறார்கள்? எனது சிந்தனைக்கு இப்படித் தோன்றுகிறது - இவர்கள் ஒரு யுகத்தில் இருந்து அடுத்த யுகத்துக்கு நகர்கிறார்கள். இந்த மாற்றத்தின் போது பதற்றம் துயரம் துன்பம் இருக்கத்தான் செய்யும். பழைய உலகத்திலேயே ஒட்டிக் கொண்டு மாற்றம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இந்த மாற்றத்தில் நமது பங்களிப்பைத் தந்தாக வேண்டும். இந்த மாற்றம் பலவகைப்பட்டது.
இந்தியாவில் வறுமை நிலவுகிறது. இதனை மாற்றுவதற்கு வறுமை ஒழிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கான சுமுக சூழலை ஏற்படுத்தியாக வேண்டும். வறட்சியோ வெள்ளமோ.. அவை இயற்கைப் பேரிடர்கள். அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவை தன் போக்கில் நிகழும். இவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டும். நிறைய செய்துள்ளோம். இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. வேலையின்மை இருந்தால், அவற்றை நீக்க திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் குறித்து விரிவாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இப்போது அதற்கு, போதுமான நேரம் இல்லை.
நாடாளுமன்றத்திலும் வேறு பல இடங்களிலும் இந்த திட்டங்களை விரிவாக மக்களுக்கு சமர்ப்பித்து உள்ளேன். இவற்றில் ஏற்கனவே மேற்கொள்ளப் படுகின்றன மற்றும் பிற இனி மேற்கொள்ளப்படும். இப்போதுள்ள நிலையைச் சரி செய்ய சில; எதிர்காலத்தை சரி செய்ய சில. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் நமது நீண்ட பயணத்தில் படிப்படியாக முன்னேறுகிறோம். பிரச்சினைகளை மட்டுமே நாம் கவனத்தில் கொண்டால் நம்மால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாது. எது வருமோ அது வந்தே தீரும். நாம் அதனை எதிர் கொள்வோம். அடங்கிப் போய் எதிர்காலத்தை எதிர்கொள்கிற நாடு அல்ல இந்தியா என்பதே நமது மகத்தான வரலாறு கூறும். நம்முடைய எதிர்காலத்தை நாம்தான் வடிவமைக்க வேண்டும். இதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்கு இருக்க வேண்டும்.
25 ஆண்டுகளாக நாம் சுதந்திரமாக இருக்கிறோம். ஆனாலும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு நம்முடைய இலக்கை நாம் எட்டவில்லை. ஒவ்வொரு தனிநபரின் ஒவ்வொரு ஆணின் ஒவ்வொரு பெண்ணின் மனதும் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரத்தை உணர்கிற போதுதான், ஒவ்வொருவரும் பொருளாதார, சமூக சுதந்திரத்தை அனுபவிக்கிற போதுதான் நமக்கு உண்மையான சுதந்திரம். இந்தியாவில் இதுபோன்ற சமுதாயத்தை உருவாக்க முயல்கிறோம். உண்மையில், இதுபோன்ற உலக சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம். உலகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை, அதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்று நாம் சொல்ல முடியாது.
உலகின் எந்தப் பகுதியையும் நாம் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. எந்த நாட்டு உள்வகாரத்திலும் நாம் தலையிட விரும்பவில்லை. தனக்கு எது மாதிரியான அரசாங்கம் வேண்டும் என்பது அவ்வந்த நாடுகளின் கவலை. அவர்களுக்கு வேண்டிய பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். எது சரியான வழி என்பதை மட்டுமே நாம் அவர்களுக்குக் காட்ட முடியும். கடந்த சில வாரங்களில் சில மாதங்களில் நாம் காண்பித்தும் இருக்கிறோம். இந்தியாவில் ஐந்து ஊடுருவரல்கள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டு ஓர் ஊடுருவல் நிகழ்ந்தது. இந்திய ராணுவமும் மக்களும் துணிச்சல், ஒற்றுமை, சாமர்த்தியத்தால் இவற்றை வெற்றி கொண்டனர்.
பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை இந்தியாவுக்கு வலிமையே சேர்த்திருக்கிறது. ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்கிறது. புதிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது. எந்த சிக்கலையும் எந்த அபாயத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாம் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை; யாருக்கும் எந்த அழுத்தமும் தரவில்லை. பிறர் தான் நமக்கு அழுத்தம் தர முயற்சித்தார்கள். நம் மீது அழுத்தம் தருகிற நாட்கள் முடிந்து போய்விட்டன. நாம் உலகத்துக்கு புதிய பாதை காட்டி விட்டோம். நம்முடைய வெற்றியால் பல நாடுகள் நமது பாதையை விரும்பத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்திலும் நாம் எந்தக் காற்றும் அடித்துக் கொண்டு போகாது. கண்களை அகல திறந்து அறிவுடைமையுடன் நமது பாதையை வகுத்துக் கொள்வோம். இது ஒன்றும் 'ரெடிமேட்' பாதை அல்ல. ஒவ்வொரு அடியாக உருவாக்கியது. தவறுகள் இருக்கலாம். மெத்தனம் இருக்கலாம். அதனால் துன்பம் நேர்ந்து இருக்கலாம்.
தனி நபர்களைப் போன்றே, ஒரு நாட்டுக்கு என்று தனித்த குணம் இருக்கிறது. கடுமையான முயற்சிகள் மூலம் இது உருவாகிறது. சொகுசு வாழ்க்கை வாழ்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பெரிய பங்களாக்கள் இருக்கலாம். நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அவர்களிடம் நற்பண்புகள் இருப்பதில்லை. நற்பண்புதான் ஒருவனின் வலிமை. யார் கடுமையாக உழைக்கிறாரோ அவரே நற்பண்புள்ள மனிதர். சொகுசுகளை விரும்புகிற நாடு நமக்கு வேண்டாம். பொருளாதாரப் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். இதற்கு, ஒருவர் உழைக்காமல் சோம்பேறித்தனமாக பொருள் ஈட்ட வேண்டும் என்று பொருள் அல்ல. ஒற்றுமையாய் கடுமையாக உழைத்து நமது பிள்ளைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம். நமது மக்களுக்கு தெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் தான் நாம் சுதந்திரம் பெற்றதாகப் பொருளாகும்.
நமது சமுதாயத்தில் இருந்து சாதியத்தை முழுமையாய் நீக்கினால் அன்றி, இந்திய சுதந்திரம் முழுமை அடையாது. நாம் அனைவரும் மனிதர்கள். நாம் அனைவரும் இந்தியர்கள். உலகத்துக்கு உயர்ந்த கலாச்சாரம், அறநெறிகளைத் தந்த தொன்மையான நாடான இந்தியாவின் குடிமக்கள் நாம். இந்தப் பண்பாடு ஏதோ புத்தகங்களிலோ பாடல்களிலோ மட்டும் பிரதிபலிப்பதில்லை; ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையிலும் இதயத்திலும் பிரதிபலிக்கிறது. எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்தப் பண்பாட்டு விழுமியங்களளை நாம் நிறைவேற்றுகிறோம் என்பதை உலகத்துக்கு காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் தனது சமயத்தை நேர்மையாக உண்மையாக பின்பற்றினாலே இந்தியா வலுவடைந்து விடும். எந்த சமயமும் மற்றவர் மோசமானவர் அவர் என்ன சண்டையிட வேண்டும் என்று கூறவில்லை. இந்திய மரபு இதுதான். இந்தப் பண்பாட்டை மனித குலத்துக்கு எவ்வாறு பரப்புவது என்று பார்க்க வேண்டும். பழைய மரபை புதுப்பித்து புது கண்ணியத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று செய்ய வேண்டியதை, நாளைக்கு அல்ல, இன்றே செய்தல் வேண்டும். இன்னும் நூறாண்டுகள் கழித்து இந்தியாவும் உலகமும் எப்படி இருக்க வேண்டுமோ அதை நாம் வடிவமைக்க வேண்டும்.
நம்முடைய புரட்சிகர விடுதலைப் போராட்ட வீரர்களை நான் ஏற்கனவே வரவேற்று இருக்கிறேன். இவர்கள் வழி நடத்துதல் நமக்கு வேண்டும். இந்த மகத்தான நாட்டுக்கு அவர்களின் ஆசிகள் வேண்டும். புதிய இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துகள். தூய்மையான ஒளி மிகுந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் தம்மால் இயன்ற அனைத்தையும் தருகிற போர்வீரர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவின் இறையாண்மை வலிமை ஒற்றுமை உங்கள் கைகளில் இருக்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் ஒரு குறியீடு. ஓர் அடையாளம். அணுசக்தியை பயன்படுத்துவதில் நமது பொறியாளர்கள் கண்டுள்ள வளர்ச்சியில், மக்கள் நல்வாழ்வுக்கு அதைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி என்றாலும், இதனை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும். வெளி அபாயங்கள் மட்டுமல்ல சமுதாயத் தீமைகளுக்கு எதிராகவும் தான் ஒரு பாதுகாவலர் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்.
இன்னமும் அதிவிரைவாய் முன்னேறுகிற வழி எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கான உந்துதல் மனிதகுலம் முழுவதும் இருக்கிறது. இந்த உந்துதல் மனித குலத்தின் சக்தியாகும். இது சண்டைக்கான பகைமைக்கான பாதை அல்ல. மனித குலத்தை ஒற்றுமைப் படுத்துகிற பரஸ்பரம் ஒத்துழைக்கிற அழகான புதிய பாதை இது. நமது இலக்கை அடைய நாம் இன்று உறுதி ஏற்க வேண்டும்.
வறுமை ஒழிக்கப்பட வேண்டும் - பொருளாதார வறுமை மட்டுமல்ல; கொள்கை வறுமையும் ஒழிக்கப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள் தவறு இழைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் திசை தவறிப் போகலாம். ஆனாலும் இளைஞர்கள் தாம் நமது வலிமை. நமது அறிவும் வலிமையும் இந்திய ஒற்றுமைக்கு, வலிமைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மொத்த மனித குலத்துக்கும் புதிய பாதையைக் காண்பிக்க இளைஞர் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
நம்முடன் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிய விரும்பலாம். இந்தியாவுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லா உலக நாடுகளோடும் உறவை வலுப்படுத்துகிற கொள்கையை நாம் பின்பற்றுகிறோம். சமீபத்தில் நமது அண்டை நாட்டுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள நாம் முயன்றுள்ளோம். அந்த நாட்டை நான் விரும்புகிறேனா என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான் - நான் ஒரே ஒரு நாட்டை தான் அதிகம் நேசிக்கிறேன். அது - இந்தியா. நம்முடைய மக்களை நம்முடைய வலிமையை நாம் நம்ப வேண்டும். பிறரை நம்புவதால் மட்டுமே ஒரு நாடு வளர்ந்து விடாது. இந்தத் துணைக் கண்டத்தில் நட்புறவும் அமைதியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். (அப்போது) நாம் விரைவாக முன்னேற முடியும். நம்மோடு யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிய விரும்பினால், சகோதர சகோதரிகளே குழந்தைகளே, நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - துணிச்சல், மனவுறுதி, ஒற்றுமையே நமது தோழர்கள் என்றால், நமது பாதையில் யாராலும் தடை ஏற்படுத்த முடியாது.
இந்தத் தருணத்தில், ஓய்வெடுக்க அல்ல; கடுமையாக உழைக்க வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்தால், அடுத்த ஆண்டில் இன்னும் நிறைய சாதித்து இருப்போம். ஒவ்வோர் ஆண்டும் நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்போம்.
இங்கே நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். சிலர் தில்லியை சேர்ந்தவர்கள். சிலர் பிறநகரங்களைச் சேர்ந்தவர்கள். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். புதிய உலகம் உங்களுக்கானது. உங்கள் புதிய உலகை உருவாக்குவீர்கள். இந்த உலகை மேலும் மேன்மை உள்ளதாய் மாற்றுவீர்கள். இவர்களின் இனிமையான குரலைக் கேட்க நான் விரும்புகிறேன். நான் மூன்று முறை ஜெய் ஹிந்த் என்று கூறுவேன். குழந்தைகள் அதனைத் திரும்ப முழங்கட்டும். குழந்தைகள் மட்டுமல்ல நீங்கள் எல்லாரும் முழங்குங்கள். சில சமயங்களில் நாம் எல்லோரும் குழந்தைகளைப் போல உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளைப் போல, எல்லா பிரிவுகள் எல்லா சமூகத்தவரோடும் சேர்ந்து விளையாட கற்றுக் கொண்டால் ஒரு மகத்தான பாடத்தை நாம் கற்றுக் கொள்வோம்.
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!”
(தொடர்வோம்)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago