சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகளில் முக்கியமானது - வங்கிகள் தேசிய மயம். 1969-இல் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, இது அறிவியல் யுகம் அதற்கேற்ப பணியாற்ற வாருங்கள் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
1969 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை இதோ: மீண்டும் ஒருமுறை இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கூடியிருக்கிறோம். இந்த நாள் நமது சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல்கல்; நமது சாதனைகள் மற்றும் தோல்விகளை திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பு. அதேசமயம், என்ன செய்ய வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை முன்னோக்கி பார்க்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த நாளில் நாட்டுக்காகத் தமது இன்பங்களை உயிரைத் தியாகம் செய்த மகத்தான தலைவர்களை தியாகிகளை நினைவு கூர்கிறோம். மகாத்மா காந்தியை நாம் தேசத்தந்தை என்று அழைக்கிறோம். செங்கோட்டை என்று சொன்னாலே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவுக்கு வருகிறார். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஜவஹர்லால் நேருவின் கால் தடம் பதிந்து இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. பெரும் எண்ணிக்கையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.. குண்டுகளுக்கு இரையாகினர். நமது நாட்டு சுதந்திர போராட்டத்தில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சோக நாளின் ஐம்பதாவது ஆண்டை நாம் இந்த ஆண்டு அனுசரித்தோம். இதனைத் தொடர்ந்து ரவி ஆற்றின் கரையில், கராச்சியில், லக்னோவில், ஆவடியில், புவனேஸ்வரில் முழு விடுதலை வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். வைராக்கியத்துடன் தொடர்ந்து முன்னேற தீர்மானித்தோம். சரியான திசையில் நடந்தோம்.
» செங்கோட்டை முழக்கங்கள் 21 - ‘மூன்று மொழிகள் கற்க வேண்டும்’ | 1967
» செங்கோட்டை முழக்கங்கள் 20 - முழங்குவோம்... முன்னேறுவோம் | 1966
இந்த ஆண்டுகளில் நமது நாட்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கடந்த சில ஆண்டுகளில், வேளாண்மையில் நமது நாட்டுப்புறங்களில் பொதுவாக வளர்ச்சி பெற்றுள்ளோம். உணவுப் பொருள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஜமீன்தாரி முறை ஒழிப்பு மூலம் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட குடியானவர்களின் துன்பத்தை நீக்க முயன்றுள்ளோம். சில தோல்விகளும் இருந்தன. நாம் அறிவோம். ஆனால், தொழில்துறையில் பெரிய வளர்ச்சி கண்டது மட்டுமல்ல; எல்லா முக்கிய தொழிற்சாலைகளும் விடுதலைக்குப் பின்னர் தான் வந்தன.
தொழில்துறை யாருடைய சுய அதிகாரத்துக்கும் கட்டுப்படாத வகையில், பொதுத்துறையில் பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தோம். ஓரளவு வெற்றியே பெற்றுள்ளோம்; நம்முடைய எல்லாக் கனவுகளும் நிறைவேறிடவில்லை. இந்த தொழிற்சாலைகளால் தாம் பெற்ற பயன்களை விவசாயிகள் அறிவார்கள். அவர்களுக்குத் தேவையான தண்ணீர் மின்சாரம் மற்றும் பிறவசதிகள் வழங்கப்படுகின்றன.
சில தொழிற்சாலைகள் முழு மனநிறைவு தரும் வகையில் செயல்படவில்லை. இவற்றின் செயல்பாடுகளில் திறனை அதிகரிக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறோம். இவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல; இந்த நாட்டு மக்களின் சொத்து. எத்தனை விரைவில் இவை மிக விரைவாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுகிறதோ அத்தனைக்கும் மக்களுக்கு பயன்களாய்ப் போய்ச் சேரும்.
ஒவ்வொரு துறையிலும் நமது நாடு முன்னேறி வருகிறது. போர், வறட்சி, சமூகக்கலவரங்கள் ஆகியவற்றால் நமது வாழ்வில் நெருக்கடி ஏற்பட்டது. இவையெல்லாம் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. ஆனாலும் இந்தப் பேரிடர்களால் நமக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. இவற்றின் மூலம் பல பாடங்களைக் கற்றோம்; மேலும் உறுதியுடன் முன்னோக்கி நடந்தோம். இன்று, இருளில் இருந்து இந்தியா வெளிவந்து விட்டது என்று நம்புகிறேன். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் புதிய ஒளி தோன்றியுள்ளது. பல பகுதிகள் பல குடியிருப்புகள் பல நகரங்கள் இந்த வெளிச்சத்தைப் பெற்றுள்ளன. நீர்ப்பாசன வசதி இல்லா விவசாயிகளை எப்படி மறக்க முடியும்? காடுகளிலும் மலைகளிலும், பிற்படுத்தப்பட்ட நமது சகோதரர்கள் இருளில் வாழ்ந்ததை எப்படி மறக்க முடியும்? இவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் வெளிச்சம் மறுக்கப்பட்டது. இவர்களுக்கு வெளிச்சம் தருவோம் என்று உறுதி அளித்தோம். வெளிச்சம் அளித்துள்ளோம்.
நாம் சரியான திசையில் முன்னேறி வருகிறோம். நாம் சோசலிச பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இதற்கு ஜனநாயக முறையில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்த திசையில் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளோம். அது என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் - வங்கிகள் தேசிய மயமாக்கம்.
இந்த நடவடிக்கைக்கு மக்கள் தாமாக முன்வந்து தரும் அமோக வரவேற்பை நான் அறிவேன். ஏராளமான மக்கள், பெரியவர்கள் சிறியவர்கள், என்னை சந்திக்கிறபோது அல்லது எழுதியோ, தகவல் மூலமோ தெரிவிப்பது - இது, சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. புதிய இந்தியாவின் காட்சி என் முன் தெரிகிறது. இன்னும் மிகப் பலருக்கு நிறைய செய்ய வேண்டி உள்ளது. ரிக்க்ஷாக்காரர்கள், டோங்காக்காரர்கள், காலணி செய்வோர் என்று பலரும் என்னிடம் வருகிறார்கள். இவர்கள்தான் சுதந்திர இந்திய நகரங்களில் பெரிதும் இன்னல் படுபவர்கள். இவர்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் பாய வேண்டும். புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய பாதையைக் காட்டுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பழைய நடைமுறைகள் மாறிக் கொண்டு வருகின்றன. உலகம் மாறிவருகிறது என்பதை உணர்ந்து இவர்களும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். இதுபோன்று நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நமது சமூகம் நமது அரசு நமது மக்கள் - இணைந்து பணியாற்றி அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். நாம் முன்னேறுகிறோம். ஆனால் அவ்வப்போது வன்முறை தலை தூக்கி விடுகிறது. அவ்வப்போது சிறுபான்மையினருக்கு எதிராக ஏதேனும் நடந்து விடுகிறது. இதனால் ஐயங்களும் அச்சங்களும் எழுகின்றன. இது நமது ஒற்றுமையைக் குலைக்கிறது; நாட்டின் அமைதியைக் குலைக்கிறது. அமைதி குலைந்தால் உற்பத்தி பெருகாது. ஒவ்வொரு பிரிவிலும் பிரச்சினைகள் இன்னல்கள் இருக்கின்றன. இவற்றைத் தீர்த்து வைத்தால் புதிதாக வேறு பிரச்சினைகள் இன்னல்கள் முளைக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள வலிமை வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு தீர்வு கண்டால் நமது வலிமை பெருகும்.
வங்கிகள் தேசிய மையம் ஆக்கப்பட்டபோது, ஒரு சிலருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று புரளி கிளம்பியது. இப்போது நான் தெளிவாகச் சொல்கிறேன் - யாருக்கு எதிராகவும் எதுவும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும் என்றே விரும்புகிறோம். செல்வந்தர்கள் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவு படுத்துகிறேன். இது மக்களின் நலன் சார்ந்தது மட்டுமே. பொதுமக்களின் நலன் என்றால், இவர்களின் நலனும்தான். இந்த நோக்கில் இந்த நடவடிக்கையை அவர்கள் பார்க்க வேண்டும்.
மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தைத் தொடங்கினார். நாட்டில் மகத்தான புரட்சி ஏற்பட்டது. மிகுந்த பணிவுடனும் அனைவரின் ஒத்துழைப்புடனும் மகாத்மா காந்தி இந்த புரட்சியைக் கொண்டு வந்தார். இந்தப் புரட்சி நம் தேசத்தின் முகத்தையே மாற்றும் என்று அப்போது யாரும் உணர்ந்து இருக்கவில்லை. அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டு இந்த நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தார். அவர் தொடங்கி வைத்த புரட்சி இன்னமும் முற்றுப் பெறவில்லை. ஏனெனில் வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப நமது நாடும் நமது சமூகமும் விரைந்து மாற வேண்டும்.
சில அந்நிய சக்திகள் சொல்லித்தான் வங்கிகள் தேசிய மைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாய் சில குரல்கள் எழுவதை அறியும் போது நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன். மிக உறுதியாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - நாம் எந்த முடிவு எடுத்தாலும், அது மக்களின் உத்தரவுப்படி மக்களின் ஜனநாயகத்தின் நலனுக்காக மட்டுமே இருக்கும். இந்திய மக்களின் இதயங்களில் ஜனநாயக உணர்வு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறிவேன். நமது சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ளவோ நமது தேசத்துக்கு ஊறு விளைவிக்கவோ எதையும் எப்போதும் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கோடையிலும் பனியிலும் நமது எல்லையில், மலைகளில், காடுகளில் காவல் புரிந்து வரும் நமது ராணுவ வீரர்கள் நமது உண்மையான பாதுகாவலர்கள். இந்தப் படை நமது நாட்டை நாட்டு மக்களைக் காக்கிறது என்பது மட்டுமல்ல, நமது நாட்டின் அரசியல் சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை கலாச்சார சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது.
நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளோம். இந்தப் பாதை நமது சரித்திரத்தில் நமது கலாசாரத்தில் தோய்ந்தது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு புது நகர்வாக இருக்கும். நாம் இத்தனை வளர்ச்சி அடைந்தும் சிலர் ஏன் இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள்? எங்கேயோ நாம் தோல்வி கண்டுள்ளோம். வளர்ச்சி, முன்னேற்றத்தைத் தாண்டி வேறு ஏதோ ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அவனது இதயத்தில் ஏதோ ஒரு புரட்சி எண்ணம் தோன்றுகிறது. தன்னுடைய சுற்றுப்புறத்தை தன்னுடைய ஆத்மாவை ஆழமாக உள்ளே சென்று பார்க்கிறான். இத்தகைய தருணம் இந்திய நாட்டின் வாழ்க்கையிலும் தோன்றி இருக்கிறது. ஒரு புது யுகத்துக்குள் இந்த நாடு நுழைகிறது. சுற்றிலும் மூடப்பட்ட சுற்றுச்சூழலில் அடைபட்ட சிலரை, குளிர்ச்சியான புதிய தென்றல் காற்று வருத்தப்பட வைக்கிறது. சிலர் பழைய நடைமுறையில் வெறுத்துப் போய் புதிய வலிமை, புதிய காற்று, புதிய வாழ்க்கை கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் நடு இரவின் இருளில் இந்தியா சுதந்திரத்தில் விழித்தது. விதியுடன் நமது சந்திப்பு என்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு அறிவித்தார். இது போன்ற ஒரு திருப்புமுனையை இப்போது நாம் அடைந்துள்ளோம். எல்லைகள் அற்ற எதிர்காலம் நம் முன்னே இருக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய எதிர்காலம். நம் முன்னால் உள்ள பாதை அகன்று திறந்து இருக்கிறது. புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிற போது நமது நாடு வெகு வேகமாக வளர்ச்சி அடையும்.
இது மகாத்மா காந்தியின் நூற்றாண்டு. அவரது திட்டங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்; அவரது அடிப்படை நெறிகளை, கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும். நம்முடைய புதிய தலைமுறையினரை இந்த நெறிகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். புதிய இந்தியாவுக்கு அடித்தளமிட்ட, இத்தகைய மாமனிதர் இந்த நாட்டில் பிறந்தார் என்பதை அவர்கள் அறிய வேண்டும். உணர வேண்டும்.
விரைவில் நமது நாட்டில் மற்றொரு மகத்தான தலைவர் விஜயம் செய்ய இருக்கிறார். இந்த பெயரை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள் - கான் அப்துல் கஃபார் கான். மகாத்மாவின் மிகச் சிறந்த சீடர். அவரை நாம் மிகுந்த அன்புடன் மரியாதையுடன் 'எல்லை காந்தி' என்று அழைக்கிறோம். அவர் இந்தியாவுக்கு வருகை தருகிற போது திறந்த மனதுடன் நல்வரவு கூறுவோம்.
இது அறிவியலுக்கான காலம். இளைஞர்களுக்கான காலம். இவர்கள் புதிய பாதையைப் பின்பற்ற வேண்டும். இதற்காக யாருடைய வழிகாட்டுதலையும் அவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் பிறரால் வழிகாட்டப் படுவோர் இன்றைய உலகில் பின்தங்கி விடுவார்கள். நம்முடைய இளைஞர்களுக்கு நாம் புதிய பாதை காட்ட வேண்டும். நம்முடைய இளைய தலைமுறையிடம் துணிச்சல் வைராக்கியம் நிரம்பி இருக்கிறது. பழைய அனுபவங்கள் மட்டுமே போதாது. துணிவு நம்பிக்கை தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை மூலமே நாம் வளர்ச்சி பெற முடியும்; நாட்டு மக்களை முன்னேற்ற முடியும்.
நாம் மூவண்ணக் கொடியை வணங்குகிறோம். இது நமது ஜனநாயகத்தின் அடையாளம். நமது ஒற்றுமை அமைதி முன்னேற்றம் வளர்ச்சியின் அடையாளம். இந்த எல்லா குணங்களும் நம் எல்லோரிடத்திலும் நிரம்பி இருக்க வேண்டும். மாமன்னர் அசோகர் நமக்குத் தந்த அமைதிச் சக்கரத்தின் பெருமையைக் கட்டிக் காப்பது நமது கடமை.
இந்தத் தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் - நான் எப்போதும் உங்களுடைய நலனுக்காக, மக்களின் நலனுக்காக மட்டுமே உழைப்பேன். காந்திஜி சொன்ன தாரக மந்திரம் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு முடிவு எடுக்கிற போது ஏதும் ஐயம் வந்தால், கடைக்கோடி மக்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றால் அந்த நடவடிக்கை சரியானது, முறையானது. தொடர்ந்து செல்லுங்கள். உங்களின் எல்லா ஐயங்களும் தானாக மறைந்து போகும். இந்த உணர்வுடனே நான் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்.
நாம் எல்லோருமே நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறோம். சாமானியனுக்கு உதவும் மாபெரும் திட்டங்களில், நிலையான வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளோம். இன்று நாம் எங்கு சென்றாலும் பல முழக்கங்களைக் கேட்கிறோம். இதுவே போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இவை எந்த அளவுக்கு அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் என்பதையும் பார்க்க வேண்டும்.
இன்று ஒரு புதிய விடியல் முளைத்து இருக்கிறது. நம்முடைய இளைஞர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து உழைத்தால் புதிய உற்சாகம் பிறக்கும். இன்று நாம் வறிய நிலையில் உள்ள மக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இவர்களை முன்னேற்றினால் நாம் அனைவரும் முன்னேறுவோம். வலிமை மட்டுமல்ல, நம் மனதில் சற்று இரக்கம் இருந்தால் அடித்தட்டு மக்களின் இன்னல்களை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
இன்று உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து உள்ளோம். புதிய தென்றல் வீசுகிறது. இந்த புதிய தென்றல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். துணிச்சலுடன் மனஉறுதியுடன் உழைத்தால் நம் சக்திக்கு அப்பாற்பட்டதையும் நம்மால் அடைய முடியும். இந்த புதிய பாதையை நமக்கு ஆதாயமாகவோ அல்லது சேதமாகவோ மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.
நாம் எப்போதும் அமைதி (விரும்பும்) நாடாக இருக்கிறோம். அமைதி என்பது பலவீனம் அல்ல. அது, நாம் வலுவாக நமது காலில் நின்று தற்சார்பு அடைவதில் நமக்குள்ள வைராக்கியத்தைக் குறிக்கிறது. அமைதி பலவீனத்தால் கிட்டுவது அல்ல. வலிமை தற்சார்பு தன்னம்பிக்கையால் அடைவது. ஒவ்வொரு இந்தியரும் இந்த நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தம்மையே பாதுகாத்துக் கொள்ள முடியாத, வறிய நிலையில் இருந்த மக்களைக் கொண்டுதான் மகாத்மா காந்தி சுதந்திரப் போருக்கான உறுதியான படையை உருவாக்கினார். இந்த உணர்வே நாம் இன்னும் வலிமையாக்க முடியும். காரணம், அன்று இருந்ததைவிட இன்று, நாம் மேலும் அறிவானவர்கள்; மேலும் திறமைசாலிகள்; தொடர்ந்து முன்னேற மேலும் வைராக்கியம் கொண்டவர்கள்.
இப்போது நான் தேச ஒற்றுமைக்கான முழக்கத்தை எழுப்புவோம். என் எதிரே நிறைய குழந்தைகள் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நாளைய குடிமக்கள். இவர்கள் மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். இவர்கள், சமமான வாய்ப்புகள் பெற வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் இடையே, செல்வந்தர் ஏழைகள் இடையே, சமூகத்தின் உறுப்பினர் ஒரு பிரிவு - மற்றொரு பிரிவு இடையே உள்ள வேறுபாடுகள் நீங்க வேண்டும். நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக உயர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் - இரண்டுக்குமான இடைவெளி குறைய வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து தேசிய முழக்கத்தை எழுப்புவோம் - ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம் )
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 22 - ‘எந்த அழுத்தமும் எங்களை அண்டாது!’ | 1968
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago