பிக் பாஸ் 7-வது சீசன் மூன்றாவது நாள் எபிசோடில் நடந்த மூன்று பெரிய பஞ்சாயத்துகளில் இரண்டு பஞ்சாயத்து பவா செல்லதுரையை சுற்றியே நடந்தன. எபிசோட் தொடங்கியதே சண்டையுடன்தான். பவா செல்லதுரையிடம் டவல் குறித்து ஏதோ கேட்க வந்த மாயா கிருஷ்ணனை, கூல் சுரேஷ் குறுகுறுவென்று முறைக்கும் விதமாக பார்க்க, அதனை பற்றி மாயா கிருஷ்ணன், கூல் சுரேஷிடமே கேட்க, அதற்கு பதில் கூட சொல்லாமல் மிகவும் அலட்சியமாக கையாண்டார் கூல் சுரேஷ். அவரது உடல்மொழியும், கண்டுகொள்ளாத தோரணையும் பார்க்கும் நமக்கே எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், கூல் சுரேஷை ‘கூலாக’ டீல் செய்தார் மாயா.
தொடர்ந்து மாயா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கூல் சுரேஷ் நழுவிக் கொண்டிருந்த நிலையில், வான்ட்டட் ஆக வந்து வண்டியில் ஏறினார் அருகில் அமர்ந்திருந்த விஷ்ணு. “அவ்வளவு சீன் இல்லை” என்று மாயா சொன்ன ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு வம்பிழுத்தார். இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது ‘வரட்டா...’ என்றபடி அங்கிருந்து நழுவினார் கூல் சுரேஷ். பைசா பிரயோஜனமில்லாத ஒரு விஷயத்தை எப்படி ஊதி பெரிதாக்கலாம் என்பதற்கு விஷ்ணுவின் செய்கை ஓர் உதாரணம்.
டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்கும் நேரத்தில் தலையை சொறியக் கூடாது, திசை திருப்பக் கூடாது என்ற கண்டிஷனுடன் பேச ஆரம்பித்தார் பவா செல்லதுரை. பல ஆண்டுகளுக்கு முன் கமல் தன்னுடைய ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு தன்னை அழைத்து ஜெயகாந்தன் குறித்து தன்னிடம் சொன்ன கதையை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு மிகப் பெரிய இலக்கிய ஆளுமையான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தன் வீட்டுக்கு ஊறுகாய் விற்க வந்த ஒரு பெண்ணின் இடையை கிள்ளியது குறித்து துணிச்சலுடனும் நேர்மையுடனும் எழுதியதாக சிலாகித்துப் பேசினார்.
இந்தக் கதையை வைத்துதான் இன்றைய பஞ்சாயத்து தொடங்கியது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய அந்தக் கதை குறித்து பவா சொன்ன விதத்தை வைத்து, ‘ஒரு தவறை எப்டி நியாயப்படுத்தலாம்?’ என்கிற ரீதியில் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவருமே கூடி பேசிக் கொண்டிருந்தனர். நீங்கள் சொல்ல வரும் விஷயம், மக்களிடம் வேறு மாதிரி போய் சேர்ந்து விடும் என்று பவாவிடம் நேரடியாகவே சொன்னார் விசித்ரா. அவரைத் தொடர்ந்து ஜோவிகாவும் ‘அந்தக் கதையின் மூலம் எழுத்தாளர் சொல்ல வருவது என்ன?’ என்று கேட்கவும், இந்த விவகாரம் சூடு பிடித்தது.
» Bigg Boss 7 Analysis 1 - பவா சொன்ன ‘ஓட்டம்’ கதையும், கூல் சுரேஷின் எதிர்வினையும்!
» சென்சார் போர்டில் ஊழல் விவகாரம்: விஷால் புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு
இலக்கியத்துக்கு பரிச்சயமில்லாத ஒரு குழுவிடம் இலக்கியத்தை அறிமுகம் செய்யும்போது, அவர்களுக்கு புரியும்படி தெளிவாக விளக்கியிருக்கலாம். அல்லது, குறைந்தபட்சம் அவர்கள் திரும்ப வந்து விளக்கம் கேட்கும்போதாவது தெளிவுபடுத்தியிருக்கலாம். அதை விடுத்து போட்டியாளர்கள் சுற்றிவளைத்து கேள்வி கேட்கும்போது, அவர்களுக்கு தெளிவாக புரியும்படி பதில் சொல்லாமல் பவா விலகிச் சென்றது அவரது வயதுக்கும், அனுபவத்துக்கும் அழகல்ல என்றே சொல்லலாம். இதனை மேலோட்டமாக பார்க்கும் ஆடியன்ஸுக்கும் இது எதிர்மறை கண்ணோட்டத்தையே ஏற்படுத்தும்.
இதே கதை சொல்லல் பகுதியின் இடையே, பவாவின் மீது பிரதீப் ஆண்டனி மற்றொரு பிராதையும் முன்வைத்தார். “உங்களை என்னுடைய குரு மாதிரி பார்க்கிறேன். நீங்கள் ஆங்காங்கே எச்சில் துப்புவதை சுத்தம் செய்வது சிரமமாக உள்ளது. இதையே காரணமாக வைத்து உங்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டால் அது எனக்கு கஷ்டமாக இருக்கும்” என்று மிகவும் தன்மையுடன் சொன்னார் பிரதீப். ஆனால், அது தன்னுடைய இயல்பு என்றும், அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் பவா சொன்னது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
பொது இடத்தில் துப்புவதே தவறு எனும்போது, வீடு போன்ற அமைப்பு கொண்ட ஓர் இடத்தில் துப்புவது என் இயல்பு என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? பிரதீப்பிடம் பவா செல்லதுரை ஆற்றிய எதிர்வினை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. தன் ‘டார்க் சைடு’ பற்றிய புரிதலுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாகச் சொல்லும் பவா, அனிச்சை செயலாக எச்சில் துப்புவதை கவனித்து, அதைப் பக்குவமாக எடுத்துக் கூறும்போது, அந்தப் பழக்கம் பற்றி பரிசீலிக்க முன்வராததும் ‘ஈகோ’வோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், தன் இயல்பு என்பது பிறருக்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துவதை அறியும்போது, அந்த இயல்பு குறித்து சுயவிமர்சனம் செய்துகொள்வது தானே சரியாக இருக்கும்?
முதல் இரண்டு நாட்களில் போட்டியாளர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த ஆதரவை பவா தனது செய்கையின் மூலம் தானே குறைத்துக் கொள்வது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அற்புதமான கதைகளை உணர்வுபூர்வமாகச் சொல்லி தன் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை படைத்த கதை சொல்லியான பவா, இளம் தலைமுறையுடனான உரையாடலில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டுமோ அல்லது ஒரு மூத்த எழுத்தாளரை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்வது மிகக் கடினமான ஒன்றோ என்றெல்லாம் சிந்தனைகளைத் தூண்டிவிட வழிவகுத்தது இந்தச் சம்பவங்கள். இனியாவது புரிதல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago