21-வது சுதந்திர தினம். பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரையில் ராணுவ வீரர்களைப் பாராட்டினார்; உணவுப் பற்றாக்குறை பற்றிப் பேசினார்; மத்திய மாநில உறவுகள் குறித்து தனது கருத்துகளை வெளியிட்டார். 15 ஆகஸ்ட் 1967 - செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து திருமதி இந்திரா காந்தி ஆற்றிய உரை - இதோ:
“தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியுள்ளேன். கடந்த ஆண்டு இந்த சமயத்தில் மழை பெய்து நம்மை நனைத்தது; நிலநடுக்கம் ஏற்பட்டதும் நினைவிருக்கலாம். வரவிருக்கும் பிரச்சினைகளை நிலநடுக்கம் நமக்கு உணர்த்துகிறது. நாம் இங்கே மழையில் நனைந்த போது இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாயினர். இன்று மழை இல்லை. ஆனால் இந்தியாவில் பருவமழை நன்கு பெய்து வருகிறது. தேவையான அளவு மழை பெய்யும், நாட்டில் புதிய திருப்பம் ஏற்படும் என்று நம்புவோம். வளர்ச்சியும் உணவுத் தட்டுப்பாடும் இருக்காது என்று நம்புவோம். நமக்கு புதிய வாழ்வு கிடைக்கும் என்று நம்புவோம்.
வறட்சிப் பகுதிகளில் மக்கள் மிகுந்த துணிவுடன் உறுதியுடன் பிரச்சினையை எதிர்கொண்டனர். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. எப்போதுமே நம் மக்கள், பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்கிறார்கள். வறிய நிலையில் உள்ள நம் மக்கள் கடந்த காலத்திலும் இது போன்ற பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளனர். தீவிரமான பல சூழல்களை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்துக்கு செங்கோட்டையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? ஏனெனில் ஒரு விதத்தில் இந்தியாவுக்கு அதுதான் வாசற்படி. பல சந்தர்ப்பங்களில் இங்குதான் விடுதலைப் பதாகை ஏற்றப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போதும் தேசப் பிரிவினையால் ஏற்பட்ட கலவரத்தின் போதும், சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கான செய்தி செங்கோட்டையில் இருந்தே விடுக்கப்பட்டது.
» செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965
» செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964
இந்திய மக்கள் பல நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இன்று நாட்டில் ஒருவித மெத்தன உணர்வு தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடினோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருள் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் உலகம் சிக்கி இருந்தது. அந்த சமயத்தில் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற, 'செய் அல்லது செத்து மடி' என்று காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். அப்போது விடுதலைக்கான நம்பிக்கைக் கீற்று இல்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக நாம் விடுதலை பெற்றோம். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் - இருள் என்றும் நிரந்தரம் இல்லை. இருள் விரைவில் விலகி விடும். விரைவில் விடியும். பிரச்சினைகளில் இருந்து நாம் விரைவில் வெளி வருவோம்.
கடந்த 20 ஆண்டுகளில் நிறைய நடந்து விட்டது. நாம் நிறைய சாதித்து இருக்கிறோம். இந்தியாவில் ஒரு புதிய தலைமுறை பிறந்து வளர்ந்து இருக்கிறது. இவர்களுக்கு இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது தெரியாது. சுதந்திரப் போராட்டம் பற்றித் தெரியாது. இந்தியா வலிமையான சுதந்திரப் போராட்டத்தில் பசித்த வயிறுடன் இந்திய ஏழைகள் போராடி வென்றார்கள் என்பது தெரியாது.
இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சில குரல்கள் எழுகின்றன. இந்தக் குரலுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரம் தரப்படுகிறது. ஆனால் சற்று நம்மை சுற்றிலும் பார்த்தால் உண்மை புரியவரும். முன்பெல்லாம் மக்களின் வளர்ச்சிக்கு வழிகள் இல்லாமல் இருந்தன. குழந்தைகளின் படிப்புக்கு வசதிகள் இல்லை. விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை திருப்திகரமாக இல்லை. அவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர்களிடம் சைக்கிள் கூட இல்லை. உழைத்து முன்னேற வேண்டும் என்கிற உணர்வும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மிக நிச்சயமாக நாம் வளர்ந்து இருக்கிறோம். வளர்ச்சியின் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்.
பருவமழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளைக் கடந்து செல்வதில் உள்ள இன்னல்களை கிராமவாசிகள் உணர்ந்து இருக்கிறார்கள். வேகமாகச் செல்லும் ஆற்று வெள்ளம் அபாயகரமானது. இந்தியாவே ஏறத்தாழ இந்த நிலையில் தான் உள்ளது. துணிச்சல் மற்றும் மன உறுதியுடன் இந்திய மக்கள் இந்த வெள்ளத்தைக் கடந்து விடுவார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. திரும்பிப் பார்க்க நமக்கு நேரமில்லை. ஒரு நொடியும் காத்திருக்கவும் நமக்கு நேரமில்லை. வளர்ச்சி நோக்கிய நமது நடையை நாம் தொடர வேண்டும். இன்னல்கள் என்னும் வெள்ளம் சூழ்ந்த ஆற்றை நாம் கடந்தாக வேண்டும். இந்த ஆற்றை நாம் கடந்து விட்டால் நமது வளர்ச்சி இன்னமும் எளிதாகும்.
இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை. இன்னும் வேகமான வளர்ச்சி வேண்டுமெனில் மதவாதம், மொழிவாதம் மற்றும் சாதியவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ("Violence has no place in India. We must fight communalism, linguism and casteism if we have to make speedier progress") மண்டல வாதமும் அபாயமானது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எந்தத் தனிநபரும் அல்லது எந்த மாநிலமும் தனிமையில், தானே வளர்ச்சி அடைய முடியாது. ("One can understand the desire of every State to make progress but no individual or State can make progress in isolation.") எப்போதும் நம் முன்னால் ஒன்றுபட்ட இந்தியா இருந்தாக வேண்டும். கடந்த காலத்தில் பல பிரச்சினைகளை, பல இன்னல்களை சந்தித்துள்ளோம். அவை எல்லாவற்றையும் நாம் தாண்டி வந்துள்ளோம்.
இன்று நாம் உணவுப் பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம். ஒரு மாநிலத்தில் அல்ல; இந்தியாவின் பல பாகங்களில் உணவுப் பற்றாக்குறை ஒரு புதிய பிரச்சினையாக பல புதிய சந்தேகங்களுக்கு இடம் அளித்துள்ளது. இந்தியா விடுதலை அடைந்தபோது, நம்மால் அரசை நடத்த முடியுமா... நாட்டை ஒற்றுமையாக காக்க முடியுமா என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு, காஷ்மீரில் தாக்குதல் நடந்தது. பிறகு.. காந்திஜி கொலை செய்யப்பட்டார். நமது மாபெரும் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்து போனார்கள். இருப்பினும் நமது மக்கள் மேன்மேலும் வலிமை பெற்று விளங்கினார்கள். இந்தியாவில் வாழும் மாபெரும் மக்கள் கூட்டம் நம்முடைய மிகப்பெரிய வலிமை.
பொருளாதாரத் துறையில் ஐயமின்றி நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். புதிய தொழிற்சாலைகள் நிர்மாணித்து உள்ளோம். வேளாண் உற்பத்தியைப் பெருக்கியுள்ளோம். வேளாண் துறையில் தொழில் துறையில் நமது வளர்ச்சியை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும். மேற்குவங்கம், கேரளா, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.
அரசுத் துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் ஓரளவுக்கு மக்களின் தேவையை நிறைவு செய்து வருகிறோம். வரவிருக்கும் இரண்டு, மூன்று மாதங்கள் மிகவும் இன்னல் தருவதாய் இருக்கும். துணிச்சலுடன் இன்னல்களை எதிர்கொண்ட அந்த மாநில மக்களைப் பாராட்டுகிறேன். இந்தியாவின் பெருமையை இவர்கள் காத்துள்ளனர். சுதந்திர இந்தியா இன்னல்களை சந்தித்து வெற்றி பெறும் என்பதை இவர்கள் காட்டியுள்ளனர்.
வேறு சில பிரச்சினைகளையும் இந்திய மக்கள் சந்திக்கிறார்கள். விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினை. கூலி உயர்வு கோரிக்கை இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. விலைவாசி உயர்வு, ஊதிய உயர்வு - உலகம் எங்கும் உள்ளன. விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் வாடகை, கூடுதல் ஊதியம், மீண்டும் விலைவாசி உயர்வு. இது ஒரு விஷச் சுழல். இந்த வட்டத்தை உடைக்க முயல்கிறோம். விலைவாசியில் நிலைத்தன்மைக்கு முயல்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். நுகர்வுப் பொருட்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இது எளிதான பிரச்சினை அல்ல. சமூகத்தின் வறிய பிரிவினர் மிக மோசமாக பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்காக நான் மனம் வருந்துகிறேன். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் வழி காண வேண்டும்.
ஒவ்வொருவரும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள். ஊதிய உயர்வு கிடைத்தாலும் கூட கொஞ்சமாகவே வாங்க முடியும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். மக்களின் தேவைகளுக்கு நாம் ஒரு தீர்வு கண்டாக வேண்டும். நம்மிடம் வளங்கள் அளவுடன் இருக்கின்றன. வளங்களைப் பெருக்குவதற்கான வழிகளைக் கண்டாக வேண்டும். கடுமையாக உழைத்து தான் வளங்களை அதிகரிக்க முடியும் என்றால் அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நம்முடைய வளங்களைப் பெருக்கினால் அன்றி, நம்முடைய இன்னல்கள் தொடர்வது நிற்காது.
நம்முடைய அரசமைப்பு சட்டம், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி புரிய வழி கோலுகிறது. இன்று நம்மிடையே பலதரப்பட்ட அரசுகள் உள்ளன. தங்களுடைய வழியை அவர்கள் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று விரும்புகிறோம். சில சமயங்களில், கோபம் அல்லது பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத ஏமாற்றம் காரணமாக, நாம் பாகுபாடாக நடந்து கொள்வதாய் மாநிலங்கள் குற்றம் சாட்டுகின்றன. வேறுபாடு காட்டப்படுவதாக சொல்கின்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை அற்றது. இந்தியா என்பது ஒரே தேசம்.
நாம் எல்லா குடிமக்களையும் சமமாகவே பாவிக்கிறோம். நம்முடைய பார்வையில் எல்லா மாநிலங்களும் சமம். ("Sometimes, perhaps in anger, or perhaps because of their helplessness in the face of difficulties, the States accuse us of discriminatory treatment. The charge of discrimination is absolutely baseless. India is one nation. We treat all citizens equally. All States are equal in our eyes.") உணவு மற்றும் பிற வளங்கள் எல்லாருக்கும் சமமாக பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று முயல்கிறோம். எல்லாருடைய இன்னல்களையும் தீர்க்க விரும்புகிறோம். ஆனால் நம்மிடம் குறைந்த வளங்களே இருப்பதால், இவற்றை நாம் பங்கிட வேண்டி உள்ளது. நம்முடைய பிரச்சினையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
நாட்டு முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். கல்வியை விரிவாக்கி வருகிறோம். மகளிர் நலன், தொலைத்தொடர்பு வசதி வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய துறைகளில் நாம் கண்டுள்ள வளர்ச்சி, பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வளர்ச்சிக்கான பல புதிய வழிகளைத் திறந்துள்ளோம். புதிய துறைகளில் முன்னேறுகிற போது புதிய பிரச்சினைகளும் இருக்கும். எல்லாப் பிரிவினருக்கும் இன்னல்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் பிற பிரிவினர் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. பல நாடுகளில் இனம் மொழி சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த இன்னல்களை நாம் பெரிது படுத்தக் கூடாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் இருக்க வேண்டும்; இதனால் கல்வியின் பயன் எல்லாரையும் சென்று சேரும்; ஒருவரின் திறமை இயல்பாக வெளிவரும் என்று ஒரு ஆலோசனை முன் வைக்கப் பட்டது. இதை நம்மால் நிறைவேற்ற முடியுமா? சில சமயங்களில் சில நல்ல ஆலோசனைகளிலும் ஆபத்து இருக்கலாம். ("Even a good proposal sometimes contains the seeds of danger.") இந்த ஆலோசனை, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. (It is feared that this proposal might encourage separatism) மக்களை இணைக்கிற தொடர்பு மொழி ஒன்று இருந்து ஒற்றுமை பாதுகாக்கப் படுமானால் இந்த யோசனை நன்மை பயப்பதாய் செயல்படலாம். ("This propsal could prove beneficial if there is a link language which can bind the people together and thus help maintain national unity.")
இதேபோன்று உலகத்தோடு தொடர்பு கொள்கிற இணைப்பும் தேவை. இன்றைய உலகில் நாம் தனித்து வாழ முடியாது. அது நமது நலன்களுக்கு ஊறு விளைவிக்கும். ("Similarly, there is need to maintain link with the world. In the present - day world, we cannot afford to live in isolation. It will prove harmful to our interests.") எனவே மூன்று மொழிகள் வேண்டும் - மண்டல மொழி, தேசிய மொழி மற்றும் சர்வதேச மொழி. ("Therefore, there should be three languages - regional language, national language and international language.")
இது விஷயத்தில் மக்களின் சிரமங்களையும் நாம் பார்க்க வேண்டும். மக்களின் சங்கடங்களை எவ்வாறு குறைக்கலாம், இயன்ற வகையில் எவ்வாறெல்லாம் உதவலாம் என்று பரிசீலிக்க வேண்டும். தன் மீது ஏதோ ஒன்று திணிக்கப்படுகிறது; தனது வழியில் தடைகள் வைக்கப்படுகின்றன என்கிற உணர்வு யாருக்கும் வந்து விடக்கூடாது.
சில சமயங்களில் குறிப்பிட்ட கருத்து எல்லாருக்கும் பயன் தருவதாக இருக்கும் என்று கருதுகிறோம். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்து கொண்ட சிலரும் இருக்கிறார்கள். நாம் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பிறரின் கருத்துகளை நாம் உதாசீனப்படுத்த முடியாது. நமது தேசிய ஒற்றுமையை, ஜனநாயக கட்டமைப்பை பலவீனம் ஆக்காத, எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும். மொழிப்பிரச்சினை, கோபத்தை உணர்ச்சியைத் தூண்டுகிறது. சரியான தீர்வு கண்டால், தேச ஒற்றுமைக்கு தேச வளர்ச்சிக்கு, மொழியே ஒரு விசையாக இருக்கும்.
மண்டலப் போக்குகள் அதிகரித்து வருகின்றன. தமது மாநிலத்தில் திட்டங்கள் கொண்டு வந்தால் இந்தியா விரைந்து வளரும் என்று ஒவ்வொரு மாநில மக்களும் நினைக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நம்மிடம் வளங்கள் குறைவாகவே இருக்கின்றன. வெவ்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் முன்னுரிமைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். எல்லா மாநிலங்களையும் நமது சொந்த மாநிலமாகவே பார்க்க வேண்டும். ஒரு வளர்ச்சி திட்டம் வேறொரு மாநிலத்துக்குச் சென்றால் நாம் கவலை கொள்ளக் கூடாது. பொறுமையுடன் இருக்க வேண்டும். படிப்படியாக எல்லா வளர்ச்சி திட்டங்களும் எல்லா இடங்களுக்கும் வரும்.
நாம் வளர்ச்சி பெற, அமைதி தேவை. நாம் உலக அமைதியை விரும்புகிறோம். சில இடங்களில் பதட்டம் நிலவுகிறது. விதவிதமாய் கேள்விகள் எழுகின்றன. ஒரு குடும்பத்தில் சகோதர சகோதரிக்கு இடையே கூட பதட்டம் நிலவுகிறது. எல்லா வினாக்களுக்கும் அமைதியான விடையைத் தேடுகிறோம். எல்லா பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண தொடர்ந்து முயன்று வருகிறோம். நமது எல்லையில் தாக்குதல் நடக்குமானால் முழு வலிமையுடன் அதனை சந்திப்போம். சில நாட்களுக்கு முன்பு களத்துக்குச் சென்று பார்த்தேன். நமது வீரர்கள் எல்லையில் துணிச்சலுடன் காவல் காக்கிறார்கள். கடுமையான தட்பவெப்ப சூழல் அவர்களின் மன உறுதியைக் குலைத்து விடவில்லை. பனி சூழ்ந்த மலையில் அவர்கள் நம்மைக் காவல் காக்கிறார்கள். இந்த நாடு முழுவதும் உங்கள் பின்னால் இருக்கிறது என்று அவர்களுக்கு நான் உறுதி கூறினேன்.
இந்திய அரசின் இந்திய மக்களின் வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்தேன். நம்முடைய படை வீரர்களின் கைகளில் இந்தியாவின் பெருமை பாதுகாப்பாக இருக்கிறது என்று முழுமையாக நம்புகிறேன். நமக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். இந்திய எல்லையைக் காப்பதற்காக தமது உயிரையும் தர வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். நாமும், இன்னல்களை ஏற்றுக் கொண்டு நாட்டுக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். நமது இலக்குகளை, கொள்கைகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
சோசலிசம் என்பது என்ன? வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன. எளிய விளக்கம் இது - வறுமை ஒழிக்கப்பட வேண்டும்; உள்ளவர் - இல்லாதோர் இடைவெளி குறைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் ஆதிவாசிகள் உட்பட சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோருக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இதுவே நமது சோசலிசம். இதுவே நமது இலக்கு. விரைவில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்தியாவின் பிள்ளைகளே.. நீங்கள், தொழிலாளி விவசாயி வணிகர் ஆசிரியர் மாணவர்... என்று யாராக இருந்தாலும், நீங்கள் எல்லாரும் இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்கள். இதை ஒரு கணமும் மறந்து விட வேண்டாம். மாபெரும் மனிதர்களின் மாபெரும் தலைவர்களின் ரத்தம் உங்கள் நாளங்களில் பாய்கிறது. எதிர்ப்புணர்வு மறைந்து நம்பிக்கை பிறக்கட்டும். கவலை மறைந்து நம்பிக்கை துளிர்க்கட்டும். நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியும். ஓர் அழகான பாரதம் என்கிற கட்டமைப்பை நம்மால் எழுப்ப முடியும். இதைச் செய்யும் திறன் நமக்கு இருக்கிறது. உற்சாகமூட்டும் மாபெரும் பணியில் நாம் இறங்கியுள்ளோம். போர், வறட்சி உள்ளிட்ட எந்த இன்னலையும் துணிச்சலுடன் மன உறுதியுடன் எதிர் கொள்வோம். நமது தேசம் தாழ்வடைய விடமாட்டோம்.
எனது தேச மக்களே.. என்னுடன் சேர்ந்து, தேசிய முழக்கமான ஜெய்ஹிந்த் என்பதை எல்லோரும் எழுப்புங்கள். இது எங்கெங்கும் எதிரொலிக்கட்டும். இது நமது மன உறுதியின் அடையாளம். இது நமது உற்சாகத்தின் அடையாளம். நமது நம்பிக்கையின், நமது தேச வலிமையின் அடையாளம். இந்த முழக்கம் நமது வளர்ச்சிக்கு நம்மை வழி நடத்தட்டும். ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 20 - முழங்குவோம்... முன்னேறுவோம் | 1966
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago