புத்தருடன் ஒரு காலை நடை - புதிய தொடர்

By மானா பாஸ்கரன்

எனக்கு புத்தரை நிரம்பப் பிடிக்கும். எந்த அளவு பிடிக்குமெனில், என் உள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கும் அளவு.

அவர் ஒரு கலைடாஸ்கோப். ஒரு மென் தூண்டில். ஒரு சல்லடை. ஒரு ஹேங்கர்.

உங்களுக்குப் புரியவில்லைதானே?

இப்படி அப்படி திருப்பித் திருப்பிப் பார்க்கும்போதெல்லாம் அவர் பல வண்ணச் சிரிப்புக் காட்டும் கலைடாஸ்கோப்.

மனக்குளத்தில் தக்கை மிதக்க தூண்டிலாவார். அதில் மீனும் சிக்கலாம்; பாம்பும் மாட்டலாம்.

தேவையுள்ளதை வடிகட்டுவது, சலிப்பது சல்லடையின் தன்மை. மனுஷ அயர்ச்சியை, மென்சோகத்தை, சிறுகோபத்தை, பசியைத் தொங்கவிடும் ஹேங்கர். நாமும் கூட தொங்கலாம்.

புத்தம் மீது எப்போதும் எனக்குப் பித்தம்!

****

ஒரு மண்டே மார்னிங்.

ஹெர்குலிஸ் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார் மீசை வைத்த புத்தர்.

கை காட்டினேன்.

பிரேக் பிடித்து காலூன்றி நின்றார்.

''மிஸ்டர் கெளதமன்.... உங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதப் போகிறேன்'' என்றேன்.

எதில் எழுதப் போகிறாய்? என்ன எழுதப் போகிறாய்... என எதுவுமே கேட்கவில்லை புத்தர்.

சட்டென்று சைக்கிள் பெல்லை, 'டினிங் டினிங்...' என்று அடித்தபடியே பெடல் போட ஆரம்பித்துவிட்டார்.

புத்தர் போய்க்கொண்டிருந்தார்...

அவருக்கு முன்னால் அந்தச் சாலை போய்க்கொண்டிருந்தது!

****

ஒரு ஊரில் ஒரு புத்தர் இருந்தார் என்கிற ஒரு புள்ளியில் இருந்து இந்தத் தொடரை மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம்தான்.

எந்த புத்தர் வந்து 'ஓபனிங் சரியில்லை' என்று கோபித்துக்கொள்ளப் போகிறார்?

அப்படியே அவருக்கு கோபம் வந்தால், அவர் என்ன புத்தர்?

***

ஒரு மூங்கில் தோட்டம். பக்கத்தில் சிறு வாய்க்கால். ஏதோவொரு மூங்கிலில் இருந்து மூங்கில் இலையொன்று உதிர்ந்து... கீழே ஊர்ந்து நழுவும் வாய்க்கால் நீரில் விழுகிறது. கம்பீரமான சொல்லொன்று படுத்துக் கிடப்பதைப் போலத் தோற்றம். தனது பச்சயத்தை இழக்காத அந்த மூங்கில் இலை.... வாய்க்கால் நீரில் மிதந்து பயணிக்கிறது.

அந்த மூங்கில் இலையின் பயணம் எது வரை?

புத்தருக்குத்தான் தெரியும்.

***

தேவதையொன்று ஒரு ஏழையிடம் ஒரு கல்லை கொடுத்துவிட்டுச் சொன்னது:

''வறிய நிலையில் இருந்து உன்னை மீட்க வந்திருக்கிறேன். இதோ இந்தக் கல்லை பெயரே இல்லாத ஒருவனை கண்டடைந்து, அவனிடம் கொடு. அவன் இந்தக் கல்லை தொட்டு வாங்கிய அடுத்த நிமிடமே, உனது வறுமை உன்னைவிட்டு காணாமல் போய்விடும்!''

அந்தக் கல்லை வாங்கிக்கொண்ட அந்த வறியவன்... பெயரே இல்லாத ஒருவனைத் தேடி அலைந்தான், திரிந்தான். நாட்கள் நகர்ந்தன. பெயரே இல்லாத ஒருவனை அவனது ஆயுளின் அந்தி வரையில் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

வறுமை அவனை முழுதாகக் குடிக்க, அவன் ஒரு மதியவேளையில் இறந்துபோனான்.

இறந்துபோனவனின் சடலத்தை எடுத்து அடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதில் ஒருவன், இறந்துபோனவனின் ஒரு கை மட்டும் இறுக மூடியிருப்பதைப் பார்த்து... அதை கஷ்டப்பட்டு பிரித்து திறந்து பார்த்தான்.

அந்தக் கையில் இருந்தது விலைமதிப்பற்ற ஒரு வைரக்கல்!

- மேலே நீங்கள் வாசித்த... இந்தக் கதையை தனது சீடருக்கு சொன்னவரைத்தான் இந்த உலகம் புத்தர் என்றழைத்தது.

*** *** ***

புத்தர் கதை:

பரதக் கண்டம், பாரதம் என்கிற பெயர்களுக்கு முன்பே இந்தியாவுக்கு நாவலந்தீவு என்கிற ஒரு பெயரும் இருந்தது. நாவலந்தீவு என்று அழைக்கப்பட்ட அன்றைய இந்தியாவின் - வடகிழக்குப் பகுதியில், இமயமலையில் அதன் அடிவாரத்தில் பாதங்களில் சலங்கை கட்டிவிட்டது போன்று கபில வஸ்து என்கிற தேசம் இருந்தது.

இந்த தேசம் முழுவதும் சாக்கியர் என்கிற இனப் பிரிவினர் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பாலி மொழி பேசினர்.

அறம் வழி நின்று கபிலவஸ்துவை ஜெயசேனன் என்கிற மன்னர் ஆட்சி நடத்தி வந்தார். மக்கள் நலம் சார்ந்த அரசாக தனது ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அன்றைய நாட்களில் - மண்ணையும் மக்களையும் ஆண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது - அந்த நினைவே எவ்வளவு இனிமை தருகிறது!

சாக்கிய மன்னர் ஜெயசேனனுக்கு - சிம்மஹணு என்கிற மகன் இருந்தார். அவர், கச்சனா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

இல்லறக் கரை முழுதும் சந்தோஷ அலை புரண்ட... சிம்மஹணு - கச்சனா தம்பதியில் இல்லறதுக்கு கிடைத்த அழகிய கைத்தட்டலாய்... ஏழு குழந்தைகள் பிறந்தன.

அந்த ஏழு குழந்தைகளில் -

சுத்தோதனர்

தொத்தோனர்

சுல்லோதனர்

ஆதிதோதனர்

மித்தோதனர்

- என்கிற ஐந்து ஆண் குழந்தைகளும்...

அமுதா என்றழைக்கபட்ட அமுதை

பிரமிதா என்றழைக்கப்பட்ட பிரமிதை

- என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர்.

ஜெயசேனன் தன்னுடைய இறுதிக் காலத்தில் - தனது அரசாட்சியை தன்னுடைய மூத்த மைந்தன் சுத்தோதனரிடம் ஒப்படைத்தார்.

தனது தந்தை ஜெயசேனனின் அறிவுரைப்படி நல்லாட்சியை தனது அறமாட்சியாக செய்து, கபிலவஸ்துவை ஆட்சி புரிந்தார் சுத்தோதனர்

சுத்தோதனர் - தனது வாலிப பருவத்தில் மகா மாயா என்றழைக்கப்பட்ட மாயா தேவியை திருமணம் செய்துகொண்டார்.

மண்ணும் மனிதர்களும் வாழ்த்த... நாட்கள் நன்றாகவே நகர்ந்துகொண்டிருந்தன.

ஆனாலும் -

நாட்டுக்கே தலைவர்தான்...

உழவுத் தொழில் செய்து மக்கள் வளமுடன் வாழ்ந்தனர்தான்...

ஆனாலும் - சுத்தோதனருக்கும் மகா மாயாவையும் கவலைகள் மண்டின. இல்லத்தில் மழலை மொழி கேட்கவில்லையே என்பதுதான் அவர்களுக்குரிய மாபெரும் கவலையாக இருந்தது.

பொழுதுதோறும் தர்மங்களும் அன்னதானமும் செய்து பிரார்த்தித்திக்கொண்டே இருந்தனர்.

சுத்தோதனருக்கும் - மகா மாயாதேவிக்கும் மனதில் இருந்த நம்பிக்கை கழன்று விழுந்தது. இனிமேல், தங்களுக்கு குழந்தை பிறக்க எந்த வாய்ப்பும் இல்லை என்றே அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

- இன்னும் நடப்போம்...

-மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 min ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்