பிரதமர் நேரு ஆற்றிய சுருக்கமான உரைகளில் இதுவும் ஒன்று. உலகத்துக்கு ஏற்ப இந்தியா மாற வேண்டியதன் அவசியத்தை இந்த உரையில் நேரு விளக்குகிறார். நவீனம் – காந்தியம் இரண்டும் இணைந்து செல்ல வேண்டும் என்பதை இந்த உரையில் பிரதமர் நேரு ஆழமாக வலியுறுத்துகிறார். காந்தியக் கோட்பாடுகள் பழமையானவை; நேரு விரும்பிய நவீன இந்தியாவுக்கு ஒத்து வராதவை. அதனால் நேருவே கூட காந்தியத்தை அதிகம் விரும்பவில்லை என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற பொய் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது இந்த உரை. 1962 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நேரு ஆற்றிய இந்தி உரையின் தமிழாக்கம் இதோ:
சகோதர சகோதரிகளே.. குழந்தைகளே…இந்தியா சுதந்திரம் இன்றி இருந்த நாட்களை இங்கு அமர்ந்து இருக்கும் குழந்தைகள் அறிய மாட்டார்கள். இங்குள்ள இளைஞர்கள் கூட அப்போது குழந்தைகளாக இருந்து இருப்பார்கள் என்பதால் அந்த நாட்களை நினைவில் கொண்டுவர முடியாமல் போகலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாடு புதிய திருப்பத்தை சந்தித்தது; புதிய யுகம் தோன்றியது. சுதந்திரம் கிடைத்ததன் அடையாளமாக தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாட இங்கே கூடி இருக்கிறோம். இந்த 15 ஆண்டு காலம் உங்களுக்கு நன்மைகளைக் கொண்டு சேர்த்து இருக்கட்டும். இத்தனை ஆண்டுகளில் நாம் என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என்று பார்ப்போம்.
நமது நாடு எண்ணற்ற சங்கடங்களை சந்தித்தது; இன்னும் சந்தித்துக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். நிறைய சாதித்துள்ளோம்; கடின உழைப்பால் (இன்னும்) நிறைய சாதிக்க இருக்கிறோம். இந்த சுதந்திரம் வெளித் தோற்றம் மட்டுமல்ல; நமது நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்தின் பயன் இது. இந்த இயக்கம் தருகிற நிறைவுக்கு பொருள் – மொத்த நாடும் வளம் பெறும்; சாதி, இனத்தால் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்கிற பேதம் இல்லாத சோசலிச சமுதாயம் மலரும் என்பதே ஆகும்.
இந்த சமுதாயத்தை நிர்மாணிப்பதில் பல சங்கடங்களைச் சந்தித்தோம்; இனியும் சந்திப்போம். கடந்த காலத்தைப் போலவே, இவற்றை நாம் முறியடிப்போம். சுதந்திரம் கிடைத்த உடனேயே இந்த தில்லி மாநகரில் நாம் கடுமையான சங்கடங்களை சந்தித்து முறியடித்தோம். நமது வைராக்கியத்தைக் குலைக்கிற சங்கடங்கள் எதுவும் இருக்க இயலாது.
இன்றும் கூட நம் முன் நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. நமது எல்லையில் சங்கடங்களை சந்திக்கிறோம். நம் மீது தீய பார்வை செலுத்தி ஆக்கிரமிப்பு நடத்த சிலர் இருக்கின்றனர். ஆனால் உயிர் துடிப்புள்ள எந்த நாடும் எந்த சந்தர்ப்பையும் எதிர்கொள்ள எப்போதும் எச்சரிக்கையுடனே இருக்கும்.
நமது நாட்டுக்கு உள்ளேயும் மற்ற நாடுகளிலும் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே நமது மரபுவழிக் கொள்கை. எல்லா நாடுகளோடும் நட்புறவு ஏற்படுத்த பெரிதும் முயல்கிறோம்; பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நண்பர்களான அண்டை வீட்டார், தீய நோக்கத்துடன் போர் பற்றிப் பேசி வருகின்றனர்.
நாம் நம்பிக்கை இழக்க வேண்டாம்; பதற்றப்பட வேண்டாம். நாம் விழிப்புடன் எச்சரிக்கையுடன் வலிமையுடன் இருத்தல் வேண்டும்; அதுவே சங்கடங்களை எதிர்கொள்ள சரியான வழி. நம்மைப் பாதுகாக்க நம்மிடம் ராணுவம் இருக்கிறது. ஆனால் வயல்களில் தொழிற்சாலைகளில் கடைகளில் நேர்மையாய் கடுமையாக உழைக்கக்கூடிய மக்கள், அவர்களிடையே நிலவும் ஒற்றுமை… நம்முடைய உண்மையான வலிமை. இத்தகைய நாட்டின் மீது யாருமே ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
நமது உள்நாட்டு முரண்களைப் பயன்படுத்தி நம்மை சுரண்டினார்கள் என்பதே நமது முந்தைய கதை. இந்தக் கதை மீண்டும் நேரக் கூடாது. நமக்குள் வேற்றுமைகள், சச்சரவுகள் இருக்கலாம்; ஆனால் நமக்குள் பிரிவு ஏற்படுத்த முயல்வது, நாம் கடினமாக உழைத்துப் பெற்ற சுதந்திரத்தை வலுவிழக்கச் செய்யும்; ஆபத்து விளைவிக்கும்; தேசத்துக்கு இழைக்கும் துரோகம் ஆகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
இந்த நாளில், சுதந்திரத்துக்காகப் போராடிய போது ஒவ்வொரு கணமும் நம்மை வழி நடத்திய மகாத்மா காந்தியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சில சமயம் நாம் தவறு இழைத்தோம், சரிந்து விட்டோம், அப்போதெல்லாம் அவரை நினைவு கூர்ந்து துணிச்சல் வரவழைத்துக் கொண்டோம்; எழுந்து நின்றோம்; தொடர்ந்து முன்னேறினோம். ஒற்றுமையான வலிமையான தேசத்தை அவர் உருவாக்கி அமைதி வழியில் சுதந்திரம் கிடைக்கச் செய்தார். அந்த நாட்களை நினைவு கூர்வதால் தற்போதைய சங்கடங்களை நாம் உறுதியுடன் சந்திக்க முடியும்.
இன்று நாம் சிறிய சங்கடங்களில் கூட மன அமைதி இழக்கிறோம். இந்த சங்கடங்கள் கூடாதுதான். இவற்றை நாம் அகற்றியாக வேண்டும். ஆனால் இதை விடவும் அதிக சுமைகளை நாம் பொறுத்துக் கொண்டால் அன்றி இந்தியாவை நிர்மாணிக்க முடியாது. (எனவே) இது குறித்து நாம் குறை கூற வேண்டாம். இவை உண்மையில் சிறியவை ஆனால் பெரிதென்று நாம் கருதிக் கொள்கிறோம்.
எல்லையிலோ வேறு எங்குமோ அபாயம் ஏதும் இல்லை என்றாலும் நாம் முன்னேற்பாடுகளுடன் இருத்தல் வேண்டும். மெத்தனம் கூடாது; நமது பலவீனத்தைப் பிறர் அறியக் கூடாது. அற்ப விவகாரங்களை மறந்து பெரியனவற்றில் கவனம் செலுத்துவோம். வலுவான ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வேண்டும். ஹிந்து, முஸ்லிம், கிருத்துவர், சீக்கியர், பவுத்தர், பார்சிஸ்.. என்று பல மதத்தினர் இந்தியாவில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமமானவர்கள். இதற்கு எதிராக செயல்படுவோர், இந்தியாவுக்கு துரோகம் இழைப்பவர்கள்.
நாம் ஒரே தேசம்; இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் இந்தத் தாய்நாட்டின் நேசத்துக்குரிய புதல்வன், புதல்வி. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். நாம் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதுதான் நம்முடைய கண்ணோட்டமாக இருத்தல் வேண்டும். மதவாதம், சாதியப் பாகுபாடுகள், நமது பலவீனம் ஆகும்.
இனி.. நவீன யுகத்தைப் பார்ப்போம். இரண்டு செயற்கைக் கோள்கள், இரண்டு விண்வெளி வீரர்கள், இந்த பூமியை சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள். சோவியத் யூனியன் இவற்றை அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவும் இதேபோன்று செயற்கைக் கோள்களை அனுப்ப இருக்கிறது. உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. புதிய சக்திகள் தோன்றிக் கொண்டுள்ளன. இவற்றை நாம் அங்கீகரிக்காவிட்டால், இவற்றை நமது முன்னேற்றத்துக்காக நாம் கைகொள்ள முயலாவிட்டால், வளர்ச்சிக்கான போட்டியில் நாம் பின் தங்கி விடுவோம்.
நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவியலை வளர்க்க வேண்டும். நம்முடைய சொந்த முயற்சியில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். விவசாயத்தைப் பெருக்க வேண்டும்; அதுதான் நமது நாட்டின் முதுகெலும்பு. இதையெல்லாம் நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டால்தான் செய்ய முடியும். புதிய சாதனங்கள், புதிய கருவிகளுக்கு நாம் மாற வேண்டும். ஆயிரம் ஆண்டு பழமையான கருவிகளைக் கொண்டு நாம் வேலை செய்ய முடியாது. உலகம் மாறி இருக்கிறது; நாமும் மாற வேண்டும் இல்லையேல் பின் தங்கி விடுவோம்.
நாமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். கிராமப் பகுதிகளில் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட பலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். கிராமங்களில் வாழும் பல லட்சக் கணக்கானோருக்கு மாற்றம் வந்து கொண்டு இருக்கிறது. மெதுவாக வந்து கொண்டு இருக்கிறது. பெரிய கட்டுமானங்களைக் கொண்டு (மட்டுமே) இந்த மாற்றத்தைக் கணக்கிடக் கூடாது. கிராமங்களில் மெல்ல நிகழும் மாற்றங்களைக் கொண்டு கணக்கிட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்தியாவில், பள்ளிக்குச் செல்லாத குழந்தையே இல்லை என்கிற நிலை விரைவில் ஏற்படும்.
நமது சுகாதார நிலைமையும் முன்னேறி இருக்கிறது. மக்கள் தொகை கூடிக் கொண்டே போனாலும், சுதந்திரத்தின் போது 39 ஆக இருந்த நம்முடைய சராசரி ஆயுட்காலம், இப்போது அது 50ஆக உயர்ந்து இருக்கிறது. இதற்கு என்ன பொருள்? சுகாதார நிலைமை மேம்பட்டு இருக்கிறது; முன்னர் இருந்ததை விட மேலான உணவு கிடைக்கிறது. இப்போது, பட்டினி இல்லை.
உணவை அடிப்படையாய்க் கொண்டுதான் ஒரு நாட்டின் சுகாதார நிலை அமைகிறது. மக்களுக்கு உணவு, உடை, வாழ ஓர் இடம் கிடைக்க வேண்டும். சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புக்கு வசதி செய்து தரப்பட வேண்டும். இதுதான் நமது இலக்கு.
அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறிய சச்சரவுகள் நம்மை தடம் புரளச் செய்ய அனுமதிக்கக் கூடாது. மகாத்மா காந்தியின் தலைமையில் நாம் சென்ற பாதையை விட்டு விலகி விடக் கூடாது. அதில் இருந்து பாடம் கற்று அதே பாதையில் தொடர வேண்டும். பலவீனமான மக்கள் சமுதாயமாக இருந்த நமக்கு வலிமை ஊட்டி வீரர்களாக, போராளிகளாக மகாத்மா காந்தி மாற்றிக் காட்டினார்.
சீருடை மட்டுமே ஒருவரை வீரராக மாற்றி விடாது. துணிச்சலுடன் செயல்படும் ஒவ்வொருவரும் வீரர்தான். இவ்வாறு நாம் எல்லாரும் (ஒரு வீரராக இருந்து) இந்த நாட்டை உயர்த்த வேண்டும். நமது ராணுவத்தைப் பாருங்கள். அங்கே சாதி, இனம் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் இல்லை. ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவராய் உள்ளார். இந்த வழியில்தான் நாமும் நமது நாட்டைக் கட்டமைக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 15 - ‘பணம் அல்ல... மனிதமே உயர்த்தும்!’ | 1961
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago